பின்னூட்டப்பெட்டி

அன்புள்ள ஜெ,

பழைய கேள்விதான். மீண்டும். ஏன் நீங்கள் உங்கள் இணையதளத்தில் பின்னூட்டப்பெட்டி வைப்பதில்லை? எந்தத் தமிழ் எழுத்தாளருமே வைப்பதில்லையே? இது ஜனநாயகம் அல்ல என்று என் நண்பன் ஒருவன் கோபமாகச் சொன்னான். உங்கள் கருத்தை அறியவிரும்புகிறேன்.

கணேஷ்

அன்புள்ள கணேஷ்,

பின்னூட்டப்பெட்டிகள் எப்படிச் செயல்படுகின்றன என்று பொதுவாகச் சென்று பாருங்கள். உதாரணம் இந்து தமிழ் நாளிதழின் பின்னூட்டம். நான் அதைப்பார்ப்பதுண்டு, பொதுவான கருத்தோட்டத்தைப் புரிந்துகொள்வதற்காக. இத்தனை அபத்தமும் முட்டாள்தனமும் வெளிப்படும் ஒரு இடம் வேறெங்கும் இல்லை. இத்தனைக்கும் அக்கருத்துக்கள் அனைத்துமே மட்டுறுத்தப்படுபவை.

இந்துவில் மேலே எழுதப்பட்டுள்ள கட்டுரை மிக எளிமையானதாகவும், அதிகபட்சம் ஐநூறு வார்த்தைகளுக்குள்ளும் அமைந்திருக்கும். அக்கட்டுரையை சற்றும் சம்பந்தமில்லாத கோணத்தில் புரிந்துகொண்டு எதையாவது சிலர் எழுதுவார்கள். அதை முற்றிலும் தவறாகப் புரிந்துகொண்டு வேறுசிலர் எதிர்வினையாற்றுவார்கள். அபத்தம் மேலும் அபத்தம் என்று நீண்டு செல்லும். ஆனால் இந்துதான் இருப்பதிலேயே குறைவான அசட்டுத்தனம் கொண்ட பின்னூட்டப்பெட்டி என்றும் ஃபேஸ்புக்கை பார்த்தால் நமக்கே கிறுக்குபிடித்துவிடும் என்றும் நண்பர்கள் சொல்கிறார்கள். பின்னூட்ட வசதியை பொறுப்பாகவும், பயனுள்ளவகையிலும் பயன்படுத்திக்கொள்ள நமக்குத்தெரியவில்லை. வெறும் மனக்கசப்புகளை மட்டுமே அது இங்கே உருவாக்குகிறது.

நமக்கு கருத்துக்களைப் புரிந்துகொள்வதில் அடிப்படையான சிக்கல் உண்டு. நம் கல்விமுறையா, குடும்ப அமைப்பா எது காரணம் என்று தெரியவில்லை. எத்தனை தெளிவாக, துல்லியமாகச் சொன்னாலும் ஒரு கருத்தை நேர் தலைகீழாகப் புரிந்துகொள்பவர்களே நம்மில் பாதிப்பேர். மீதிப்பேர் அக்கருத்தின் ஏதேனும் ஒரு விளிம்பிலிருந்து ஆரம்பித்து சம்பந்தமில்லாத திசைக்குச் செல்வார்கள். சொல்லப்படும் கருத்தின் மையம் நோக்கி வருபவர்கள் ஆயிரத்தில் ஒருவர் மட்டுமே.

இக்குறைபாட்டை மறைத்துக்கொள்ளவே மிதமிஞ்சிய உணர்ச்சிவேகத்தை வெளிக்காட்டுகிறார்கள். கொந்தளிக்கிறார்கள். குமுறுகிறார்கள். கண்ணீர் மல்குகிறார்கள். புரட்சிகள், கலகங்கள், மொழிப்பற்றுகள், இனமானங்கள், அனைத்தையும் உள்ளடக்கிய மனிதாபிமானங்கள்.. இந்த உணர்ச்சிகளில் கால்வாசி உண்மையாக இருந்தாலே தமிழ்நாடு எங்கோ இருக்கும். ஒரு கருத்தை புரிந்துகொள்ள முயலாமல் எதிர்வினையாற்ற சிறந்த வழி அதைக் கேட்டதுமே உணர்ச்சிவசப்பட்டு விடுவதுதான் என்பது இங்கே அனைவருமே எளிதில் கற்றுக்கொள்ளக்கூடியவழியாக உள்ளது. கொஞ்சம் நிதானமாக பேச ஆரம்பித்தாலே இவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை என்பது வெளிப்பட்டுவிடும் என அவர்களுக்கே தெரியும்.

பின்னூட்டப்பெட்டி இல்லை என்றாலும் எனக்கு வரும் நேர்மையான கடிதங்களுக்கு பதிலளிக்கவே முயன்றிருக்கிறேன். பெரும்பாலும் ஒரு கட்டுரையில் ஓர் எளிய கருத்தைச் சொன்னால் அதைப்பற்றிய பிழைப்புரிதல்களை நீக்க திரும்பத்திரும்ப நாலைந்து கட்டுரைகளை எழுதவேண்டியிருக்கிறது. உதாரணம், 2011-இல் நான் ஒரு கட்டுரை எழுதினேன். [தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர்] சுருக்கமாக இதுதான் சாரம்.

ஏதேனும் ஒரு படைப்பாக்கத் திறனை பிறவியிலேயே அமையப்பெற்றவர்கள் பெரும் பொறுப்பு கொண்டவர்கள்.அவர்கள் அத்திறனை தங்கள் சோம்பலாலோ, உலக இன்பங்களுக்கான ஆசைகள் காரணமாகவோ, தாழ்வுணர்ச்சியாலோ தவறவிடுவது பெரும்பிழை. அவர்கள் தங்கள் திறனை வளர்த்து முழுமைபெறச்செய்யும்போதே உண்மையான இன்பத்தையும் நிறைவையும் அடையமுடியும். அது அவர்கள் சமூகத்திற்குச் செய்தாகவேண்டிய பங்களிப்பு.

இந்தக்கருத்துக்கு வந்த எதிர்வினைகள் திகைக்க வைப்பவை. ‘அப்படியென்றால் பணக்காரர்களும் உயர்குடிகளும் மட்டும் வாழ்ந்தால்போதும் என்கிறீர்களா?’ ‘சாதாரண மக்கள் எல்லாம் அடிமைகளா?’ என்றெல்லாம் நூற்றுக்கணக்கான கேள்விகள். நான் சொன்னதென்ன இவர்கள் வாங்கிக்கொண்டதென்ன என்று சற்று பிரமித்தபின் மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே பொறுமையாக விளக்கினேன். [விதிசமைப்பவர்கள்]

‘படைப்பாக்கத் திறன் என்பது ஒரு பொறுப்பே ஒழிய அதிகாரம் அல்ல. அது கண்டிப்பாக அனைவருக்கும் இருப்பதில்லை. இல்லாதவர்கள் உலகியல் வாழ்க்கையை இலக்காக்குகிறார்கள். இருப்பவர்கள் அப்படைப்புத்திறனை சமூகத்திற்கு பயனுள்ளதாக முழுமைப்படுத்தவே முயலவேண்டும். அந்தப்படைப்புத்திறனை சாமானியர் பெரும்பாலும் புரிந்துகொள்வதில்லை. அதற்காக அவர்களை அவன் பழிக்கமுடியாது. அவன் பணியாற்றுவதே அந்தச் சாமானியர்களை உள்ளிட்ட சமூகத்துக்காகத்தான்’

[சராசரி ]

உடனே மேலும் கடிதங்கள். ‘அப்படியென்றால் தாழ்ந்த சாதியினர் எல்லாம் வாழவே கூடாதா?’ ‘உயர்சாதியினர் மட்டும் இங்கே எல்லாவற்றையும் செய்தால் போதுமா?’ ஒரு பத்து நிமிடம் தலையில் கை வைத்து உட்கார்ந்தபின் பெருமூச்சுடன் மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே விளக்கினேன் [விதிசமைப்பவனின் தினங்கள்]

‘படைப்புத்திறன் என்பது ஒரு தனிமனித குணாதிசயம். அதற்கும் சாதி இன மத குழுக்களுக்கும் சம்பந்தம் இல்லை. எல்லா சாதியிலும் படைப்பூக்கம் உண்டு. உலக வரலாற்றில் அதிகபடைப்புத்திறன் அடித்தளச் சாதியில் இருந்தே வந்துள்ளது. படைப்புத்திறன் என்பது சாதாரண சராசரி சிந்தனையில் இருந்து சற்றேனும் முன்னால் செல்லக்கூடியது. அந்த முன்னால்செல்லும் திறனையே ஒரு சமூகம் மதிக்கவேண்டும். அந்தச் சராசரியை அது முன்னுதாரணமாக முன்வைக்கக் கூடாது

அதற்கு அடுத்த வினா ‘அப்படியென்றால் சாமானியன் விஜய் ரஜினி படமெல்லாம் பார்க்கக் கூடாது என்கிறீர்களா? அப்படிச்சொல்ல நீ யார்?. சாமானியன் சந்தோஷமாக இருக்கக்கூடாதா?’

இந்த மூன்றாம்கட்ட கேள்வி வரை வரக்கூடிய ஒரு ஆசாமியால் ஒருபோதும் எதையும் புரிந்துகொள்ள முடியாது என தெரியும். அங்கே நான் நிறுத்திக்கொண்டேன். அதுதான் எல்லை. ஒரு சிலருக்கு நான் சொல்லவருவது புரிந்தது என்பதே அக்கட்டுரையின் பயன்.

மீண்டும் 2014-இல் அவ்விவாதத்தை மறுபிரசுரம் செய்தேன். அச்சு அசலாக அதே கேள்விகள். அந்தக்கட்டுரைகளை அவ்வரிசையிலேயே மறுபிரசுரம் செய்ய நேர்ந்தது.

இதுதான் இங்கே விவாதம் நிகழும் வண்ணம். இதில் பின்னூட்டப்பெட்டி என்பது மிகப்பெரிய அபத்தம். ஒவ்வொரு ஐயத்துக்கும் மிகவிரிவான தெளிவான பதிலுக்குப்பின்னும் இந்த லட்சணத்தில் பதில்புரிதல் இருக்கிறது என்றால் பின்னூட்டத்துக்கு பதிலளித்து விவாதிக்கப்புகுந்தால் கந்தல்தான்.

ஜெ

முந்தைய கட்டுரைவண்ணக்கடல் ஓவியம்
அடுத்த கட்டுரைஉச்சவலிநீக்கு மருத்துவம் – ஒருநாள்