«

»


Print this Post

இந்தியச்சுற்றுப்பயணத் திட்டம்


சென்ற நவம்பரில் நான் என் ஈரோடு நண்பர்களுடன் மணிமுத்தாறு, முண்டந்துறை காட்டுப்பகுதிக்கு ஒரு வன உலாசென்றிருந்தேன். மணிமுத்தாறு அணையருகே இருந்த ஒரு சிறு குன்றின்மேல் ஏறி அமர்ந்து,காற்று உடைகளை பறக்கச்செய்ய, அணையின் தவிட்டுநிறமான சேற்று விளிம்பு கரையிட்ட நீல அலைகள் பரவில நீர்வெளியையும் சூழ்ந்து மௌனம் கொண்டிருந்த நீலப்ப்பச்சைநிறமான தேக்குக்காட்டையும் பார்த்து அமர்ந்திருந்தோம். நான், கிருஷ்ணன் ,சிவா, விஜயராகவன். பயணம் அன்றோடு முடிவுக்கு வந்தது. ”இந்தமாதிரி மூணுநாள் நாலுநாள் திட்டமா இல்லாம பெரிசா ஒண்ணு போடணும் சார்”என்றார் சிவா.

நான் இருபதுவருடங்களுக்கு முன் சென்ற இந்தியச்சுற்றுப்பயணம் ஒன்றைப்பற்றிச் சொன்னேன். என் இருபது வயதில் தனியாக இருமுறை நான் இந்தியப்பெருநிலப்பகுதியில் அலைந்திருக்கிறேன். ஒவ்வொரு பயணமும் பல மாதங்கள் நீண்டு சென்ற திசையில்லா அலைமோதல்கள் அவை.கையில் பணமில்லாமல் கையேந்தியும் கள்ளரயிலில் பயணித்தும் நடத்தியவை. என் நெஞ்சில் உள்ள இந்திய பண்பாட்டுச் சித்திரம் அக்காலத்தில் உருவானதேயாகும். அதன்பின் இரண்டுவருடங்களுக்கு முன்னர் மதுரை நண்பர் சண்முகசுந்தரம் கார் வாங்கியபோது அவருடன் பல நெடும்பயணங்களை மேற்கொண்டேன். நானும் சண்முகசுந்தரமும் வசந்தகுமாரும் எப்போதும் உள்ளவர்கள். கேரளப்பயணத்தில் அ.கா.பெருமாள் வந்தார். கர்நாடக ஆந்திரா பயணங்களில் யுவன் சந்திரசேகர் வந்தான். மகாராஷ்டிர பயணத்தில் நாஞ்சில்நாடன்.

அவை ஒவ்வொன்றும் பத்து பதினைந்து நாட்கள் நீளும் நெடும்பயணங்களாக இருந்தன. ஒருபகுதியைப்பற்றி விரிவாக படித்தபின் அப்பகுதியை நேரில் சென்று பார்ப்பது எங்கள் வழக்கம். சின்னச் சின்ன ஊடுவழிகள் வழியாக இடங்களைத்தேடிச் செல்வோம். சுற்றுலா மையங்களை தவிர்த்துவிட்டு வரலாற்று முக்கியத்துவமோ வேறுவகை தனித்தன்மையோ கொண்ட இடங்களை மட்டுமே பார்ப்போம். கர்நாடகப்பயணத்தில் கர்நாடக சமணமையங்களையும் ஆந்திர பயணத்தில் பௌத்த தலங்களையும் மகாராஷ்டிர பயணத்தில் சிவாஜியின் கடற்கோட்டைகளையும் சிறப்புக் கவனம் எடுத்து பார்த்தோம்.

எங்கள் பயணம் பெரும்பாலும் சிறிய சாலைகள் வழியாக நிலப்பகுதிகளையும் மக்களையும் பார்த்தபடி செல்லக்கூடியது. ஆகவே அவை தர்க்கபூர்வமான புரிதலை மீறியே நுண்ணிய மனச்சித்திரங்களை அளிப்பதாக இருந்தன. அவையே நமது சிந்தனைகளை வடிவமைக்கின்றன. எழுத்தாளனின் சிந்தனை இந்த நுண்சித்திரங்களினால் ஆனதாக இருக்க வேண்டும், இதழ்களில் வாசிக்கும் கட்டுரைகள் அளிக்கும் தகவல்களினால் ஆனதாக இருக்கலாகாது.

உண்மையில் நாம் எதை உள்வாங்குகிறோம் என்பதை அப்போது நாம் உணர்வதில்லை. உதாரணமாக கர்நாடகத்தில் குக்கிராமமான ஐஹோல்-ல் ஆரம்பகால சாளுக்கியர்களின் தலைநகரின் எச்சங்கள் உள்ளன. ஐந்தாம் நூற்றாண்டுக் கட்டுமானங்கள். மழுங்கிய கோயில்கள். அந்த இடிபாடுகளில் கான்வெண்ட் சீருடை அணிந்த உள்ளூர் குழந்தைகள் பள்ளிவிட்டு வந்து விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஒரு அழகிய பெண்குழந்தை தன்னை மறந்து வாய்ப்பாடுகளைச் சொல்லியபடி துள்ளித்துள்ளி படிகளில் ஆடிக் கொண்டிருந்ததை வசந்தகுமார் புகைப்படம் எடுத்தார். நெடுநாள் கழித்து கர்நாடகம் பற்றி சிந்தனைசெய்தபோது கர்நாடகத்தின் அடித்தட்டுவரை சென்றிருக்கும் ஆங்கிலக் கல்வியின் தாக்கத்தை அந்த மனச்சித்திரம் எனக்கு அளித்தது. இன்றைய கர்நாடகத்தின் மாறுதலின் வரைவாகவே அக்காட்சி உருக்கொண்டது.

ஆனால் என் பயணங்களில் 1987ல் நான் நான்குநண்பர்களுடன் ஒரு பழைய மாருதி வேனில் காஸர்கோடு, ஹசன் வழியாக நாக்பூர் சென்று அங்கிருந்து டெல்லி சென்று மீண்ட பயணம் மிக வித்தியாசமானதாக இருந்தது. பெரும்பாலான நாட்களில் சாலையோரம்தான் தங்கினோம். சாலையோரம் உணவுண்டோம். கிட்டத்தட்ட ஜிப்ஸிகள் போல சென்றோம். அது கோடையானதனால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் இல்லை. மத்தியபிரதேசத்தில் சென்ற நாட்களில் பத்துநாட்களுக்கும் மேலாக குளிக்கவில்லை. இருபதுநாள் பயணம் முடிந்து வந்தபோது என் பங்குக்கு ஆயிரத்து முந்நூறு ரூபாய்மட்டுமே ஆகியது. அப்போது சந்தித்த மனிதர்களும் எதிர்கொண்ட இன்னல்களும் மனதில் பதிந்த காட்சி ஓவியங்களும் மிக அபூர்வமானவை.

”அப்படி ஒரு பயணத்தை நாமும் செய்வோம் சார்!” என்று கிருஷ்ணன் உற்சாகமாகச் சொன்னார். நண்பர்களின் மனநிலையை நன்கு அறிவேன் என்றாலும் அத்தகைய பயணத்தின் இடர்பாடுகளைப்பற்றிச் சொன்னேன். இந்தியாவின் பெரும்பகுதி வரண்ட பின்தங்கிய கைவிடபப்ட்ட நிலம். அதனூடாகப் பயனம்செய்வது என்பது ஒரு துயரம் நிறைந்த பயணமே. அதில் சுற்றுலாவின் இன்பத்துக்கு இடமே இல்லை. வசதிக்குறைவுகள் இன்னல்கள்தான் அதிகம் இருக்கும். திட்டமிட்டு அதை நிகழ்த்தவே முடியாது. பயணம்செல்லும்போதுதான் தெரியும், நமது சாலைவரைபடங்கள் இருபது வருடம் பழையவை என்று. பல இடங்களில் சாலைகள் மாறுபட்டிருக்கும். வரைபடத்தில் உள்ள பெரிய சாலை குண்டும்குழியுமாக இருக்கும். வரைபடத்தைப்பார்த்து ஒருமணிநேரத்தில் கடக்கலாமென எண்ணும் தூரத்தை நான்குமணிநேரமானாலும் கடக்க முடியாமல் இருக்கும். மீண்டும் மீண்டும் ஒரே உணவுதான் கிடைக்கும். மிக எளிய சுவையற்ற கிராமிய உணவு. சுகாதார உணர்வு மிகக் குறைவு. தண்ணீர் பல இடங்களில் ஒரு அரும்பொருள். சாகஸ உணவுடன் செய்யக்கூடிய பயணம் அது.

நண்பர்கள் ‘போவோம் சார்…பார்ப்போம். அதுதான் எங்களுக்கு வேண்டும்’ என்றார்கள். கோடைமுடிந்து பருவமழை தொடங்கும்போது செல்லலாம் என்றேன். வட இந்தியப் பயணத்துக்கு உகந்த காலகட்டம் செப்டம்பர் அக்டோபர்தான். ஆகஸ்ட் பதினைந்து என்று தேதியை முடிவுசெய்தோம். நண்பர்களுக்கு திருமண நிகழ்ச்சிகள்ச் இல இருந்தமையால் அதை செப்டம்பர் நான்காம் தேதி என்று மாற்றினோம்.

இப்போதைய திட்டம் ஆந்திராவில் அனந்தபூர், அகோபிலம் வழியாக வாரங்கல் ஹைதராபாத் சென்று, மத்தியப்பிரதேசத்தில் நுழைந்து போபால் [சாஞ்சி] குவாலியர் கஜுராஹோ வழியாக நுழைந்து, உத்தரபிரதேசத்தில் ஜான்சி   ஆக்ரா மதுரா சென்று திரும்பி சாரநாத் வழியாக அலகாபாத் வாரணாசி போய் கங்கை வழியாக  புத்தகயா வந்து, ஜபல்பூர் வந்து ஒரிஸாவில் நுழைந்து, புவனேஸ்வர் கோனார்க் சென்று, மீண்டும் ஆந்திரா நுழைந்து சென்னை திரும்புவது. இது தோராயமான திட்டம். இப்பகுதியின் முக்கியமான வரலாற்று இடங்களை குறித்துக் கொண்டு அவற்றை சென்று பார்த்தபடியே செல்வதே திட்டம். கூடுமானவரை காலையில் ஒரு ஊரில் சென்று பார்ப்பது என்று எண்ணியிருக்கிறோம்.

நாலைந்துமாதம் கழித்து விஜயராகவன் அவரால் வரமுடியாது என்று சொன்னார். அவரது மாருதி ஆம்னி வண்டியில்தான் செல்வதாக இருந்தோம். அவரால் வியாபாரத்தை பத்து நாட்களுக்குமேல் விட்டு நிற்க முடியாது என்றார் .  ஒரு டவேரா வண்டியை முடிவு செய்திருக்கிறோம். இப்போது பயணிகள் ஏழ்ழுபேர். ஓட்டுநர் ஒருவர். [ஓட்டுநர் இல்லாமல் வண்டியை மட்டும்  யாரிடமிருந்தாவது கடனாகவோ வாடகைக்கோ பெற முயன்றோம். முடியவில்லை.] நான் வசந்தகுமார் ஈரோட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணன் ஈரோட்டு நண்பர் சிவா சென்னை வழக்கறிஞர் செந்தில் மலையாளக்கவிஞர் கல்பற்றா நாராயணன் ஆகியோர் இப்போது வருகிறார்கள்.

தயக்கங்கள் ஐயங்கள். சிவா திடீரென்று அவ்வளவுதூரம் ஒரே முட்டாகச் சென்றால் நாம் எதையுமே பார்க்காமல் வண்டிக்குள்ளேயே இருப்போமே, அது ரொம்ப திகட்டிவிடுமே என்றார். செந்திலும் அதைச் சொன்னார். சில சிறு பகுதிகளாக பிரித்துக் கொண்டு பயணத்தைச் செய்யலாமே என்றார்கள். நான் நாம் செல்வது சுற்றுலா அல்ல என்றேன். ஆந்திராவை மட்டும் மேலோட்டமாகப் பார்க்கவே இருபதுநாள் போதாது. அத்தகைய பயணங்களில் இல்லாத ஒன்று இதில் உள்ளது. நாம் ஒரேமூச்சில் இந்தியாவின் மையநிலத்தைப் பார்க்கிறோம். ஒரு குறுக்குவெட்டுத்தோற்றம் சிலநாட்களில் நமக்குக் கிடைக்கிறது.அந்த அனுபவம் பிறவகையான பயணங்களில் கிடைப்பதில்லை.

இத்தகைய பயணத்தில் நாம் அறியும் முக்கிய அனுபவமே மாற்றம்தான். நிலம் மாறிக்கொண்டே இருக்கிறது. வரண்ட பாறை நிலங்கள். சட்டென்று பசுமை. அங்கே வாழ்க்கை செறிந்திருக்கிறது. உணவு,வீடுகள், கடைகள் அனைத்துமே வேறாக இருக்கின்றன. மொழி உச்சரிப்பு எல்லாமே மாறுகின்றன. மனித வாழ்க்கையின் விதவிதமான களங்கள் கண்முன் படுகின்றன. குறிப்பாக மத்திய பச்தர் பகுதியிலிருந்து கங்கைச்சமவெளிக்கு ஏறும் போது ஏற்படும் மாற்றம் பெருவியப்பூட்டுவது. அதுவே நம்முடைய பயணத்தின் இலக்கு என்றேன்.

இன்னும் .  அதுவே இப்போது உற்சாகமான பதற்றமான நினைவாக இருக்கிறது. பயணத்தின் இனிய அனுபவங்களில் பயணத்துக்கு முந்திய எதிர்பார்ப்பு தலையானது.

 

பருவமழைப்பயணம்-மழையில்லாமல்

அவலாஞ்சி

பயணம்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/560/

4 pings

 1. jeyamohan.in » Blog Archive » அக்காமலையின் அட்டைகள்.

  […] இந்தியச்சுற்றுப்பயணத் திட்டம் […]

 2. jeyamohan.in » Blog Archive » இந்திய சுற்றுப்பயணம்:கடிதங்கள்

  […] நண்பர்களுடன் ஒரு இந்தியப்பயணம் [ இந்தியச்சுற்றுப்பயணத் திட்டம் ]செய்யவிருப்பதை அறிந்து மிகுந்த […]

 3. jeyamohan.in » Blog Archive » இந்தியப்பயணம்:கடிதங்கள்

  […] இந்தியச்சுற்றுப்பயணத் திட்டம் […]

 4. jeyamohan.in » Blog Archive » இந்தியப் பயணம் சில சுயவிதிகள்

  […] இந்தியச்சுற்றுப்பயணத் திட்டம் […]

Comments have been disabled.