குற்றமும் தண்டனையும்

‘குற்றம்’ என்ற ஒன்றைப்பற்றி மட்டும் விவாதிக்க ஆரம்பித்தால்போதும் மனிதகுலத்தின் பரிணாமத்தைப்பற்றி முழுமையாக விவாதித்து விடலாம் என்று தோன்றுகிறது. ராஜத்துரோக குற்றத்துக்காக காந்தி கூண்டிலேற்றப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கிறார். அவரது சத்தியாக்ரகச் சிறையேகல் மனித நாகரீகத்தின் ஒரு பெரும் காலடியாக இன்று கருதப்படுகிறது. பகத்சிங் செய்த கொலையை காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. அதை குற்றம் என்றே எண்ணினார். அதை புரட்சி என்று எண்ணுபவர்கள் இன்று உண்டு. கோணங்கள் மாறுபடுகின்றன. ஆனால் அன்று நிகழ்ந்த ஒரு கற்பழிப்பு இன்று எந்த தரப்பாலும் நியாயம் என்று கருதப்பட மாட்டாது.

அதேபோல தங்கள் அரசின் ஆணையை ஏற்று கடமையைச் செய்த ஜெர்மனிய வீரர்கள் நியூரம்பர்க் சர்வதேச விசாரணை மன்றத்தால் மனிதகுலத்துக்கு எதிரான குற்றவாளிகளாகக் கருதப்பட்டார்கள்.நீதியுணர்வைப்பொறுத்தவரை அந்த தீர்ப்பு ஒரு பெரும் முன்னேற்றம். இன்று மதக்கொலைகள் மதங்களால் நியாயப்படுத்தபப்டுகின்றன. பொதுமானுட நீதி அவற்றை குற்றம் என்கிறது. சென்ற காலங்களில் மன்னர்கள் செய்த எதுவுமே குற்றம் என்று கருதப்பட்டதில்லை. ஜனநாயகம் அவற்றை கூண்டிலேற்றியது. ஒரு பழங்குடி இனக்குழு தனக்குள் ஒரு நீதியும் பிறருக்கு ஒரு நீதியும் கொண்டிருப்பது இயல்பாக இருந்திருக்கிறது. இன்றைய உலகமோ மானுடநீதியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

குற்றங்களைப்பற்றிய தெளிவை மனிதகுலம் மேலும் மேலும் அடைவதையே மனிதநாகரீகத்தின் பரிணாமம் எனலாம். அதிலும் சென்ற நூற்றாண்டு என்பது மனிதவரலாற்றிலேயே நீதியுணர்வு மிக வேகமாக வளர்ச்சியடைந்த ஒரு காலகட்டம். ஓருலகம் என்ற மனச்சித்திரம் உருவானபோதே மானுடநீதி என்ற உருவகமும் உருவாகிவிட்டிருக்கிறது. மேலும் மேலும் நீதிக்காக ஏங்கும் ஒரு சிறுபான்மையினரில் இருந்து நீரில் விழுந்த கல் அலையெழுப்புவது போல நீதி பிறந்து விரிவடைகிறது. ஒரு தனிமனித மனசாட்சிப்பிரச்சினையாகத் தொடங்கும் இந்த தார்மீகத் தேடல் மெல்லமெல்ல சமூகத்தின் அறவுணர்வை மாற்றியமைப்பதை நமது சென்ற கால வரலாற்றை சற்றே திரும்பிப் பார்த்தால் உணரலாம்.

ஒருவருடம் முன்பு நானும் வழக்கறிஞர்களான நண்பர்கள் கிருஷ்ணன் மற்றும் செந்தில் ஆகியோரும் பீர்மேடு விடுதியில் இரவில் பேசிக்கொண்டிருந்தபோது இந்த விவாதம் எழுந்துவந்தது. சட்டத்துக்கும் நீதிக்கும் இடையேயான வேறுபாடு. சட்ட அமலாக்கத்தில் உள்ள சிக்கல்கலை விட்டுவிட்டு நோக்கினால்கூட சட்டத்துக்கும் நீதிக்கும் இடையே நுண்ணிய வேறுபாடு எப்போதும் உள்ளது. நீதி சட்டத்தை விட சற்று முன்னால்தான் செல்கிறது. சட்டத்தை அது இழுத்துச் செல்கிறது என்று சொல்லலாம் என்றேன்.

கிருஷ்ணன் சட்டம் என்பது ஒரு சமூகத்தில் மேலோங்கியிருக்கும் நீதியையே பிரதிநிதித்துவம்செய்யும் என்றார். அதாவது பெரும்பான்மையின் குரலே சட்டம் என்பது. ஒரு சமூகத்தில் பெரும்பாலானவர்கள் ஏறத்தாழ அங்கீகரித்திருக்கும் நெறிகளும் தடைகளுமே சட்டவடிவம் கொள்கின்றன. அந்த நீதி  அச்சமூகத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிரானதாக இருக்கலாம். தீண்டாமை தேவை என்று மனப்பூர்வமாக நம்பும் ஒரு குழுவுக்கு இந்திய அரசியல்சட்டம் அடக்குமுறையானதாகவே இருக்கும். இதை வேறு கோணத்திலும் பார்க்கலாம். நமது சட்டம் ஒரு சிறுபான்மையின் நியாயமான வாழ்க்கைக்கு எதிரானதாகவும் ஆகக்கூடும். சமூகத்தின் கூட்டுமனசாட்சி என்று நீதிமன்றங்கள் பொதுவாகச் சொல்வது பெரும்பான்மையின் உள்ளக்கிடக்கையையே.

செந்தில் அந்தக் கருத்தை எதிர்த்தார். உண்மையில் சட்டம் கல்விகற்ற, நீதியுணர்வு கொண்ட சிறுபான்மையினராலேயே உருவாக்கபப்டுகிறது. இந்திய அரசியல் சட்டம் முன்வைக்கும் பெரும்பாலான நீதிகள் இந்திய சமூகத்தில் இன்றும் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. பெண்ணுரிமை, சாதி சமத்துவம் போன்றவை சட்டம் மூலமே சமூகத்துக்குக் கொண்டுவரப்பட்டன. சமூகத்தில் உருவானபிறகு சட்டம் ஆக அவை மாறவில்லை என்றார்.

கிருஷ்ணன் அந்த சட்டங்களை சமூகம் உண்மையில் எதிர்த்தது என்றால் ஜனநாயக முறையில் ஒரு போதும் அவை சட்டமாக ஆக முடியாது என்றார்.சமூகத்தின் பெரும்பான்மையின் மனசாட்சி ஏதோ ஒருவகையில் ஏற்காத ஒன்று சட்டமாக ஆக முடியாது. சாதி, பெண்ணுரிமை போன்றவை ஏற்கனவே தலைவர்களாலும் எழுத்தாளர்களாலும் சமூகத்தின் முன் வைக்கபப்ட்டு விவாதிக்கபப்ட்டு சமூகமனம் அவற்றை நோக்கி திருப்பபட்ட பின்னரே அவை சட்டங்கள் ஆயின. நான் நீதியுணர்வு என்பது எப்போதும் சமூகத்தின் மனசாட்சியின் குரலாக இலங்கும் சிலரிலேயே வெளிப்பாடு கொள்கிறது என்றேன். அவர்களை அச்சமூகம் பின்னர் அடையாளம் கண்டு அங்கீகரிக்கிறது.

அந்த விவாதம் முடிவிலாது முடிந்தது. நான் தஸ்தயேவ்ஸ்கி பற்றி சொன்னேன். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நீதியைப்பற்றி சிந்தனைசெய்த அனைவரிலும் ஆழ்ந்த செல்வாக்கு செலுத்திய ஒரே படைப்பாளி அவர்தான். குறிப்பாக குற்றமும் தண்டனையும் என்ற அவரது மகத்தான நாவல். குற்றம் சார்புத்தன்மை கொண்டது, தண்டனை முழுமுற்றானது. இன்று செய்யப்பட்ட குற்றம் நாளை குற்றமிலாதாகலாம். அளிக்கப்பபட்ட தண்டனையை ஒன்றும் செய்யமுடியாது. ஆகவே குற்றம் வேறு தண்டனை வேறு. தண்டனை என்பது குற்றத்தை ஒருபோதும் சமன் செய்வதில்லை என்ற தரிசனத்தை அந்நாவல் உருவாக்கியது.

குற்றம் என்பது எதற்கு எதிரானது? நியாயப்படுத்தப்பட்ட குற்றம் என்ற ஒன்று உண்டா? மீண்டும் மீண்டும் வினாக்களை எழுப்பும் பெரும்படைப்பு தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும். உலகசிந்தனையில் அது உருவாக்கிய பாதிப்பு மிக அபூர்வமானது.  இப்படி அதைச் சொல்லலாம். அன்றுவரை நீதி என்பது தண்டிக்கும் சமூக அதிகாரத்தின் கோணத்திலேயே விவாதிக்கப்பட்டிருக்கிறது. தண்டனைக்குள்ளாகும் குற்றவாளியின் கோணத்தில் நீதியை அணுகச் செய்தது  அந்நாவல். துன்பப்பட்டவர்களின் ஒடுக்கபப்ட்டவர்களின் மனசாட்சியிலிருந்து நீதியை ஆராய அறைகூவியது.

இரு படைப்புகள் அவ்வகையில் உலகளாவிய பாதிப்பை செலுத்தியவை. தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் முதல் படைப்பு. விக்தர் யூகோவின் ‘துன்பபப்ட்டவர்கள்’ அடுத்த படைப்பு. இரண்டுமே உலகமொழிகளில் எங்கும் மொழியாக்கம் செய்யபப்ட்டுள்ளன. மலையாளம் போன்ற மொழிகளில் நவீன இலக்கியமே அந்நாவல்களின் மொழிபெயர்ப்புகள் மூலம்தான் தொடங்கியது. தமிழில் அந்நாவல்கள் மொழியாக்கம் செய்யப்படவில்லை. யூகோவின் நாவலில் அபத்தமான சுருக்கம் ஒன்று கிடைக்கிறது. கவியோகி சுத்தானந்தபாரதியால் செய்யப்பட்டது.

இப்போது தமிழில் ‘குற்றமும் தண்டனையும்’  மிக நேர்த்தியான மொழியாக்கத்தில் மிக அழகிய படைப்பாக  பாரதி புத்தக நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.  இது தமிழ் இலக்கியத்தின் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று.

மொழிபெயர்ப்பாலரான எம்.ஏ.சுசீலா எனக்கு வாசகியாக அறிமுகமானவர். மதுரை ·பாத்திமா பெண்கள் கல்லூரியில் தமிழாசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் பெண்ணிய நோக்கிலான இலக்கிய ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.  பருவங்கள் மாறும், புதிய பிரவேசங்கள், தடை ஓட்டங்கள் ஆகிய சிறுகதைதொகுதிகளும் விடுதலைக்கு முந்தைய தமிழ்நாவல்களில் பெண்கள், பெண் இலக்கியம் வாசிப்பு, இலக்கிய இலக்குகள்  போன்ற கட்டுரை நூல்களும் வெளிவந்துள்ளன..உமாமகேஸ்வரி போன்ற படைப்பாளிகளின் உருவாக்கத்திலும் அவருக்கு பெரும்பங்களிப்பு உண்டு.அவரது முதல் மொழிபெயர்ப்பு முயற்சி இந்நாவல்.

ரஸ்கால்நிகா·ப் என்ற இளைஞன் செய்யும் கொலைதான் இந்த புகழ்பெற்ற நாவலின் கரு. வாழ்வின் இக்கட்டுகளில் சிக்கி செயலற்று நிற்கும் நிலையில் ‘உதவாக்கரையான’ ஒரு கிழவியை பணத்துக்காகக் கொலைசெய்கிறான். அந்த குற்றத்திலிருந்து தப்பியும் விடுகிறான். ஆனால் அவனில் அந்தக் கொலை உருவாக்கும் ஆழமான உளப்போராட்டம் நாவல் முழுக்க நீள்கிறது. கடைசியில் அவன் தன் பாவங்களை அறிக்கையிடும் ஒரு சன்னிதியைக் கண்டடைகிறான். தன் குடும்பத்துக்காக பெரும் துயரத்தை தாங்கி நிற்கும் சோனியா என்ற விபச்சாரியில். அவள் முன் மண்டியிடுகிறான். ஏனென்றால் அவள் துயரம் சுமக்கும் மானுடக்குலத்தின் பிரதிநிதி. அவள் மனித இனத்தின் வலிமிக்க இதயம்போல

சோனியா ரஸ்கால்நிகா·பிடம் சொல்லும் சொற்கள்தான் இந்த நாவலின் உச்சம் ”நான்கு வீதிகளும் சந்திக்கும் அந்தச் சதுக்கத்துக்கு உடனே செல்லுங்கள். நாற்சந்தியிலே சதுக்கத்தின் மத்தியிலே சென்று நில்லுங்கள். மனிதர்களுக்கு முன்னால் மண்டியிடுங்கள். மண்ணைக் களங்கபப்டுத்திவிட்ட நீங்கள் அதை முத்தமிடுங்கள். இந்த உலகம் முழுக்க கேட்கும்வண்ணம் ‘நான் ஒரு கொலைகாரன்! நான் ஒரு கொலைகாரன்! ‘ என்று உரக்கச் சொல்லுங்கள்” சோனியாவின் கருத்தில் குற்றங்கள் என்பவை தனிமனிதர்களுக்கு எதிரானவை அல்ல. சமூகத்துக்கு எதிரானவையும் அல்ல. அவை மனிதகுலத்துக்கு எதிரானவை. ஆகவே அவற்றைச் செய்பவனுக்கு எதிரானவை. அவன் மண்டியிட வேண்டியது அதன் சன்னிதியில்தான்.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இன நீதிகளே அறமாக எண்ணப்பட்ட ஒரு காலகட்டத்தில்– ருட்யார்ட் கிப்ளிங் போன்ற எழுத்தாளர்கள் கூட அதற்குள் நின்ற காலகட்டத்தில் – அழிவிலாத மானுட நீதி ஒன்றை தன் தரிசனமாக முன்வைத்தது தஸ்தயேவ்ஸ்கியின் பெரும் நாவல். அந்த ஒளி எப்போதும் மானுடகுலத்துக்கு வழிகாட்டக்கூடுவது. இலக்கியம் என்ற இயக்கத்தின் சாரமென்ன என்று காட்டும் பெரும் படைப்பு  இது

உணர்ச்சிவேகம் நிறைந்த அக ஓட்டங்களும் சுழன்று சுழன்று செல்லும் சொற்றொடர்களும் கொண்ட இந்த நாவலை அற்புதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார் சுசீலா. தமிழின் இலக்கிய மொழிபெயர்ப்பில் இது ஒரு சாதனை.

+++++++++++++++++++++++++++++++

‘குற்றமும் தண்டனையும்’. பியோதர் தஸ்தயேவ்ஸ்கி  தமிழில் எம்.ஏ.சுசீலா. பிரசுரம் பாரதி புக் ஹவுஸ்,

Bharathi Book House
Corporation shopping complex
Periyar Bus stand
Madurai
625001

M.A.Susela
D II, 208
Kidvay Nagar West
New Delhi
Pin 110023

[email protected]

முந்தைய கட்டுரைபடைப்பாளிகள்பேரவை,ரமணர்,சைவசித்தாந்தம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைசிலகேள்விகள்