சென்னை உருவாகி வந்த கதை

நகரங்கள் உருவாகும் கதையை கூர்ந்து வாசிக்கையில் வரலாற்றின் விதிகள் பல தென்படுகின்றன. மிகச்சிலநகரங்களே திட்டமிட்டு அமைக்கப்படுகின்றன. சுதந்திர இந்தியாவில் சண்டிகர் அப்படி உருவாக்கப்பட்ட நகரம். பழைய மன்னர்கள் நகரங்களை உருவாக்கியிருக்கிறார்கள். திருவனந்தபுரம் மார்த்தாண்டவர்மா மகாராஜாவால் உருவாக்கப்பட்ட நகரம். இவ்வாறு உருவாக்கப்பட்ட நகரங்களில் மிகச்சிலவே முளைத்துக்கிளைவிட்டு மரமாகி நூற்றாண்டுகளைத் தாண்டி வாழ்கின்றன. கணிசமானவை அந்த அரசரின் காலகட்டம் முடிந்ததுமே மறைந்துபோகின்றன. மிகச்சிறந்த உதாரணம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம். இன்னொரு உதாரணம் அக்பர் உருவாக்கிய பதேபூர் சிக்ரி.

1 cepak palace [சேப்பாக்கம் பாலஸ்]

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமான குடியேற்றங்களாகத் தொடங்கி வரலாற்றின் போக்கில் பெருநகரங்களாக உருவானவைதான் பெரும்பாலான நகரங்கள். இந்தியாவின் பெருநகரங்களான மும்பை, கல்கத்தா, சென்னை ஆகிய மூன்றுமே பெருநகரங்களாக ஆகுமென அவற்றை உருவாக்கியவர்கள் எண்ணியிருக்கமாட்டார்கள். அவை வணிகத்துக்கான பண்டகசாலைகளாகவே திட்டமிடப்பட்டவை.

2 clive house [கிளைவ் ஹவுஸ்]

இன்னொரு பக்கம் முற்காலத்தில் முக்கியமான நகரங்களாக இருந்து காலப்போக்கில் கைவிடப்பட்டு மறைந்துபோன நகரங்கள் பல உண்டு. மறைந்த நகரங்களை நாம் மொகஞ்சதாரோ காலம் முதல் கண்டுபிடித்தபடியே இருக்கிறோம். தமிழகத்தில் சோழநாட்டில் உள்ள உறையூர். பழையாறை போன்றவை தானாகவே உருவாகி செழித்து நூற்றாண்டுகள் நீடித்து பின் முக்கியத்துவமிழந்து மறைந்த நகரங்கள். அதேபோல முக்கியத்துவமிழந்த பல பழந்தமிழ் நகரங்களைச் சுட்டிக்காட்டலாம்.

3 black town wall [கறுப்பர்நகர சுவர்]

தன்னிச்சையாக நகரங்கள் உருவாகி வருவதற்கு பெரும்பாலும் வணிகமே காரணமாக இருக்கிறதென்பதைக் காணலாம். சென்ற ஆயிரமாண்டுகாலத்தில் பெருவணிகமென்பது பெரும்பாலும் துறைமுகங்களைச் சார்ந்தது என்பதனாலேயே துறைமுகநகரங்களே வணிகமையங்களாக மாறி பெருநகரங்களாக ஆயின. சென்னை, கல்கத்தா, மும்பை, விசாகப்பட்டினம், கொச்சி போன்றவை உதாரணம். அபூர்வமாக ஏற்கனவே வரலாற்றுமுக்கியத்துவம் கொண்டிருந்த பழையநகரங்கள் வணிகமையங்களாக தன்னை மாற்றிக்கொண்டு நீடிப்பதும் உண்டு. வாரணாசி, மதுரை போன்றவை.

கறுப்பர் நகர வாயில்
கறுப்பர் நகர வாயில்

இந்தக்கோணத்தில் நோக்கினால் கைவிடப்பட்ட நகரங்களில் பெரும்பாலானவை பழையவகைத் துறைமுகங்கள் என்பதும் தெரிகிறது. பழைய துறைமுகங்கள் பெரிய நதிகளின் அழிமுகங்களில் அமைந்திருந்தன. கடல் ஓதத்தால் கடல் நீர் நதியில் ஏறும்போது அதைப்பயன்படுத்தி பாய்மரக்கப்பல்களை கரைக்குள் கொண்டுவருவது அன்றைய வழக்கம். கப்பல்களின் எடை அதிகரித்தபோது அம்முறை பயனற்றுப்போயிற்று. நதிகள் அணைகட்டப்பட்டும் கிளைவெட்டப்பட்டும் பாசனத்துக்கு திருப்பப்பட்டபோது அவற்றில் நீர்ப்பெருக்கும் குறைந்தது. ஆகவே அழிமுகங்கள் சேறுமூடி அங்கிருந்த நகரங்கள் புதைந்து மறைந்தன. கேரளத்தின் போப்பூர், கொடுங்கல்லூர் [வஞ்சி], ஆலப்புழா, அஞ்சுதெங்கு போன்ற தொன்மையான அனைத்துத் துறைமுகங்களும் இன்றில்லை. தமிழகத்தில் கொற்கை, புகார், தொண்டி, முசிறி, கடல்மல்லை போன்ற துறைமுகங்களும் புதைந்து மறைந்தன.

7 egmore fort [எக்மோர் கோட்டை]

பதிலுக்கு கரையோரம் வரை ஆழமான கடலிருக்கும் புதிய இடங்கள் கண்டடையப்பட்டு புதிய துறைமுகங்கள் உருவாகி வந்தன. தமிழகத்தில் தூத்துக்குடியும் சென்னையும் அவ்வாறு கண்டடையப்பட்ட துறைமுகங்கள். கண்டடைந்து அவற்றை நகரங்களாக்கியவர்கள் ஐரோப்பியர். அவற்றில் சென்னை உருவாகி வந்த விதம் ஓர் அற்புதம் என்றே சொல்லவேண்டும். சென்னை உருவாகி வந்த வரலாற்றை மட்டும் பார்த்தால் சென்ற முந்நூறாண்டுகால தமிழகப்பொருளியல் வரலாற்றின் வரைபடத்தை உருவாக்கிவிடமுடியும்.

மூர் கோட்டை இடிபாடுகள்
எக்மூர் கோட்டை இடிபாடுகள்

சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே உள்ள முக்கியமான ஒற்றுமை ஒன்று உள்ளது. சென்னைக்கு மிக அருகே பழையதுறைநகரமான மாமல்லபுரம் உள்ளது. கிபி ஏழாம் நூற்றாண்டுமுதலே புகழ்பெற்ற துறைமுகம் அது. தூத்துக்குடிக்கு மிக அருகே பழைய துறைமுகமான கொற்கை உள்ளது. பின்னர் அது சற்று இடம்மாறி காயல்பட்டினமாக ஆகி மேலும் பலநூற்றாண்டுக்காலம் நீடித்தது.

செயின்ட் தோம் கதீட்ரல்
செயின்ட் தோம் கதீட்ரல்

இப்புதிய துறைமுகங்கள் மிகவேகமாக வெற்றிபெற்றமைக்கு முதல் காரணம் அந்தப் பழைய துறைமுகங்களின் வரலாற்றின் நீட்சியாக அவை இருந்தன என்பதே. பழைய துறைமுகங்களை ஒட்டி கடல்வணிகத்தில் நீண்ட மரபுள்ள மக்கள் வாழ்ந்தனர். அத்துறைமுகங்களை நோக்கி உள்நாட்டு சாலைவழிகளும் நீர் வழிகளும் இருந்தன. அவை உருவாகிவந்த புதிய துறைமுகத்தை விரைவாக எழுச்சிபெறச்செய்தன.

9 st marries [செயிண்ட் மேரீஸ் கதீட்ரல்]

அப்படியென்றால் நாகைப்பட்டினம் துறைமுகம் ஏன் வெற்றிபெறவில்லை என்ற வினா உள்ளது. அதனருகேதான் தொன்மையான துறைமுகமாகிய புகார் இருந்தது. பிற்காலத் துறைமுகமாகிய காரைக்கால் இருந்தது. அதற்கான வினாக்களை அரசியலிலும் சமூகவியலிலும்தான் தேடவேண்டும். காட்டில் ஒரு நீரோடை ஏன் உருவாகிறது, ஏன் அதன் திசையை அடைந்தது என பல்வேறு காரணிகளைக் கொண்டு கணிக்கலாம். நீரோடையை திட்டமிட்டு உருவாக்கிவிடமுடியாது.

கவர்ன்மெண்ட் ஹவுஸ்
கவர்ன்மெண்ட் ஹவுஸ்

சென்னை என இன்று அழைக்கப்படும் மெட்ராஸ் என்னும் சென்னப்பட்டினம் சர்.பிரான்ஸிஸ் டே என்னும் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரியால் எப்படி மிகச்சிறிய ஆங்கிலேய வணிகர் குடியிருப்பாக உருவாக்கப்பட்டது என்பதை சுருக்கமாகவும் நம்பகமான தகவல்கள் வழியாகவும் விவரிக்கும் நூல் கிளின் பார்லோ எழுதிய சென்னையின் கதை.

11 boat

கிளின் பார்லோ தென்னிந்தியாவில் நில அளவையாளராகப் பணியாற்றிய ஆங்கில அதிகாரி. 1921-இல் அவர் எழுதி ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி பிரஸ் வெளியீடாக வந்த STORY OF MADRAS [GLYN BARLOW, M.A.] தமிழில் பிரியா ராஜ் மொழியாக்கத்தில் சந்தியா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. வரலாற்றை அறிய ஆர்வமுடையவர்களுக்கு மட்டுமல்ல பொதுவாசகர்களுக்கும் சிறந்த வாசிப்பனுபவத்தை அளிக்கும் நூல் இது.

கோட்டையில் இருந்து கடல் - பின்வாங்குவதற்கு முன்
கோட்டையில் இருந்து கடல் – பின்வாங்குவதற்கு முன்

ஆந்திரத்தில் நெல்லூர் அருகே இருந்த ஆர்மகாம் என்ற சிற்றூரில் தங்கள் வணிகமுகாமை அமைத்திருந்த ஆங்கிலேயர் அங்கிருந்த ஆட்சியாளர்களின் கெடுபிடிகளுக்கு அஞ்சி மேலும் தெற்கே நகர திட்டமிட்டனர். ஆர்மகாமின் பிரதிநிதியாகவும் அப்போது மசூலிப்பட்டினத்தின் கௌன்சில் உறுப்பினராகவும் இருந்த சர் பிரான்ஸிஸ் டே அதன்பொருட்டு இடம்தேடி வந்தபோது சென்னை கடற்கரையின் மணல்மேட்டுப்பகுதியை கண்டுபிடித்தார்கள்.

செய்ண்ட் ஜார்ஜ் கதீட்ரல்
செய்ண்ட் ஜார்ஜ் கதீட்ரல்

அந்தப்பகுதி அன்று மூன்று வெவ்வேறு அதிகாரசக்திகளின் மோதல்புள்ளியாக இருந்தது. புலிக்காடு ஏரிப்பகுதியில் டச்சுக்காரர்களும், மயிலாப்பூர், செயிண்ட் தாமஸ் மவுண்ட் பகுதியில் போர்ச்சுகீசியர்களும், உள்நிலப்பகுதியான பூந்தமல்லி, திருவல்லிக்கேணி போன்றவற்றில் விஜயநகர நாயக்கர்களுக்குக் கீழே கப்பம் கட்டிவந்த சந்திரகிரி சிற்றரசர்களும் ஆட்சி செய்துவந்தனர். டே போர்ச்சுக்கல்காரர்களுடன் சமாதானம்செய்து நட்புறவுகொண்டார். சந்திரகிரி சிற்றரசருக்கு பணம் கொடுத்து அந்நிலத்தை முறைப்படி வாங்கிக்கொண்டார். அங்கே ஆங்கிலேயர் சிறு கோட்டை ஒன்றைக் கட்டி தங்கள் வணிகமுகாமை நிறுவினர்.

டவுட்டன் புரட்டஸ்டாண்ட் காலேஜ்
டவுட்டன் புரட்டஸ்டாண்ட் காலேஜ்

சென்னையை அவர் தேர்ந்தெடுக்க பல காரணங்கள் இருந்தன. முதல்காரணம், அருகே இருந்த புலிக்காடு ஏரியும் அடையாறு, கூவம் நதிகளும்தான். இந்த உள்நாட்டு நீர்வழிகளினூடாக கடலைநோக்கி ஏராளமான படகுகள் வந்தன. அவற்றைப் பயன்படுத்தி வணிகம்செய்யும் கோமுட்டிச்செட்டியார்களின் ஒரு வணிகவலை முன்னரே உருவாகியிருந்தது. அது சரக்குக் கொள்முதலுக்கு மிக உதவியான ஒன்று என அவர் புரிந்துகொண்டார். அத்துடன் அங்கே கடல் ஆழமானதாக இருந்தது. கனத்த சரக்குக் கப்பல்கள் நெருங்கி வந்து நிற்கமுடிந்தது.

16 pachaiyappaa [பச்சையப்பாகல்லூரி]

இவ்வாறு உருவானது சென்னை. சென்னையின் வளர்ச்சி இரு பெரும் கட்டுமானங்களுடன் தொடர்புடையது. ஒன்று சென்னைத் துறைமுகம். தொடர்ந்து அது வளர்ந்து கொண்டே வருவதை வரலாற்றில் காணலாம். துறைமுகத்தின் வளர்ச்சி சென்னையை முதன்மையான வணிகமையமாக ஆக்கியது. ஏராளமான வணிகர்குடியிருப்புகளும் தொழிலாளர்குடியிருப்புகளும் உருவாகி கடற்கரையை ஒட்டியிருந்த மயிலாப்பூர், திருவல்லிக்கேணி போன்ற பல ஊர்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து சென்னை என்ற நகரம் எழுந்தது.

சாந்தோம்
சாந்தோம்

இன்னொரு கட்டுமானம் பிரிட்டிஷார் உருவாக்கிய செயிண்ட் ஜார்ஜ் கோட்டை. சென்னையை மையமாகக் கொண்டு ஆங்கிலேயர் ஏற்படுத்திய அதிகார மையம் அது. மிக விரைவிலேயே அது ஆங்கிலேயர் இந்தியாவில் உருவாக்கிய அரசின் தென்னகத் தலைமையிடமாக மாறியது. சென்னைமாகாணம் கடலோர ஆந்திரத்தையும் தமிழகத்தையும் கேரளத்தையும் உள்ளடக்கி உருவானபோது அதன் தலைநகரமாக ஆகியது. இன்றும் சென்னையின் முகம் என்பது இவ்விரண்டும்தான். துறைமுகத்தை மையமாகக் கொண்ட வணிகம். கோட்டையை மையமாகக் கொண்ட அதிகாரம்.

st andrews செயிண்ட் ஆண்ட்ரூஸ் கதீட்ரல்

இவ்விரு கட்டுமானங்களும் எப்படி படிப்படியாக உருவாகி வலுப்பெற்றன என்று சுருக்கமாக சொல்கிறார் கிளின் பார்லோ. கருப்பர் நகரம் வெள்ளையர் நகரம் என அது பிரிந்து வளர்ந்த விதம், போர்ச்சுக்கல், டச்சு படைகளுடன் நிகழ்ந்த பூசல்கள், அது சந்தித்த பஞ்சங்கள், அதில் உருவான கட்டுமானங்கள் என விரியும் இந்த விவரணை சென்னை ஒரு ஈரிலைச் செடியாக முளைத்து மரமாக மாறுவதன் சித்திரத்தை நமக்கு அளிக்கின்றன.

சென்னையைப்பற்றி தமிழில் பல முக்கியமான நூல்கள் கிடைக்கின்றன. எஸ். முத்தையா எழுதிய சென்னை மறுகண்டுபிடிப்பு [கிழக்குபதிப்பகம்], அசோகமித்திரனின் ஒருபார்வையில் சென்னை நகரம் போன்ற பலநூல்களைச் சொல்லமுடியும். ஆனால் ஒரு நல்ல தொடக்கமாக அமையும் தகுதி கொண்ட நூல் இது. பிரியா ராஜின் மொழியாக்கமும் சரளமான வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. ஆனால் மூலநூலைப்பற்றிய ஒரு எளிய அறிமுகம் கூட இல்லாமல், மூலநூலின் ஆங்கிலப்பெயர் கூட இல்லாமல் இந்நூலை சந்தியாபதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சந்தியா பதிப்பகத்தில் இருந்து அதையெல்லாம் எதிர்பார்ப்பதும் சற்று அதிகம்தான்.

[ நூலை ஆங்கிலத்தில் வாசிக்க ]

முந்தைய கட்டுரைஅழியா அழல்
அடுத்த கட்டுரைமரபிலக்கியம் – இரு ஐயங்கள்