வேலை

ஜெ.,
வேலை குறித்த தங்களது கட்டுரையையும், தற்கால வேலை வாய்ப்பு குறித்த வா.மணிகண்டனுடைய பதிவையும் வாசித்தேன். அவை குறித்து என்னுடைய அனுபவங்கள் மற்றும் கருத்துகள்….

ஒருபக்கம் வேலையில்லாத பட்டதாரிகள் நிறைய என்றால் இன்னொருபக்கம் வேலைக்கு சரியான ஆட்கள் கிடைப்பதில்லை என்பதே யதார்த்தம்.
நாம் நிறைய பட்டதாரிகளையும் பொறியாளர்களையும் உருவாக்குகிறோம். ஆனால் அவர்கள் நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்யாதவர்களாக, unemployable ஆக இருக்கிறார்கள் என்பதுதான் இன்று இந்தியாவில் மனிதவளத்துறை காணும் மிகப்பெரிய சவால்.

தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பு, அதற்கான தகுதிகள் என்னென்னவென்று தேடிக்கண்டுபிடித்தல், அவற்றை முழு ஈடுபாட்டுடன் பயிலுதல் இவற்றில் நம் மாணவர்கள் பின் தங்கி இருக்கிறார்கள். உதாரணமாக, மெக்கானிகல் இஞ்சியனியரிங்கள் 30 வருட அனுபவம் உள்ள எனது சித்தப்பா, அவருடைய முந்தைய நிறுவனத்திலும் தற்போதைய நிறுவனத்திலும் டிப்ளமோ மெக்கானிக்கல் முடித்தவர்களையே அதிகம் வேலைக்கு எடுக்கிறார்கள், B.E. மெக்கானிக்கல் முடித்தவர்களை விட. இதற்கு காரணம் அவர்களுக்கு பிராக்டிகல் அறிவு அதிகம் என்பதுதான். அவர்கள் வேலைக்கு உகந்த தன்மையில் முன்னே இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் இன்றைய இளைஞர்கள் தாங்கள் குறைவாகக் கொடுத்து அதற்கு பலனாக நிறைய எதிர்பார்க்கிறார்கள். கல்லூரிக்காலம் முடியும் வரையிலும் ஆசிரியர்களும் சரி, மாணவர்களும் சரி, தேர்ச்சி பெறுதல், அதிக மதிப்பெண்கள் வாங்குதல் என்ற சுழற்சியிலேயே நின்றுவிடுகின்றனர். உண்மையான அறிவைத் தேடுபவர்கள் 10% தான்.
இது எப்படி என்றால், ஒருவர் மர ஆசாரி என்று சொல்லி பட்டம்/பட்டயத்துடன் வருகிறார். ஆனால் அவரால் எந்த மரச்சாமானையும் சொந்தமாக செய்யத் தெரியாது. ஏற்கனவே இருக்கும் சாமான்களின் சிறு பிரச்சனைகளை சரிசெய்யக் கூட அவருக்கு நிறைய பயிற்சி அளிக்க வேண்டும். இந்த பயிற்சி என்பது நிறுவனங்களுக்கு நேர மற்றும் பண விரயம். மார்க்கெட்டில் அனுபவசாலிகள் கிடைக்காமல் போனால் மட்டுமே இதைச் செய்ய நிறுவனங்கள் முன்வருவது இயல்பானதுதானே?

பெங்களூரில் ஒரு இருசக்கர வாகன மெக்கானிக்குடன் பேசிக்கொண்டிருந்தேன். அவரால் புதுசாக வேலைக்கு வருபவர்களுக்கு 3000 மாதச்சம்பளம் தர முடியும். நன்றாக உழைக்க வேண்டியிருக்கும். தொழில் கற்றுக்கொள்ளலாம். ஆனால் அதே சம்பளத்திற்கு பளபளக்கும் சூப்பர் மார்க்கெட்களில் விற்பனை உதவியாளராக குளிரூட்டப்பட்ட அறையில் வேலை கிடைக்கிறது. அங்கே எல்லோரும் போய்விடுகிறார்கள், தனக்கு ஆட்களே கிடைப்பதில்லை என்கிறார். மெக்கானிக் பயின்றால் தன் கையில் ஒரு தொழில் இருக்கும். எதிர்காலத்தில் முதலாளி ஆகக்கூட ஆகலாம். ஆனால் சூப்பர் மார்கெட்டில் எடுபிடி வேலைசெய்யப் போனால் என்னமாதிரி வளர்ச்சி இருக்கும், எதிர்காலத்திற்கு என்ன உத்தரவாதம் இருக்கும் என அவர்கள் சிந்திப்பதில்லை.

சரி இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்புக்கு வருவோம். காம்பஸிலேயே வேலை கிடைக்காதவர்களுக்கு வெளியில் வேலை கிடைப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இப்போது உள்ளது. ஆனால் முற்றிலும் இல்லை என்று சொல்வதற்கில்லை. பல பெரிய நிறுவனங்கள் off-campus இல் ஆயிரக்கணக்கானவர்களை வேலைக்கு எடுக்கிறது. சிறு நிறுவனங்கள் குறைத்துக்கொண்டுள்ளன. +2 வில் 800க்கு குறைவான மதிப்பெண்கள் பெற்ற என உறவினர் பெண், இன்ஜினியரிங்கில் கொஞ்சம் உற்சாகமாகப் படித்தார். பல்வேறு கல்லூரிகளில் அறிவியல் விழாக்களுக்கும் தனியார் பயிற்சிப் பட்டறைகளிலும் பங்கு கொண்டார். பெரு நிறுவன வேலையே வேண்டும் என்று இல்லாமல் மென்பொருள் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் வேலையில் சேர்ந்துகொண்டார். அங்கே அவர்களுக்கு மேலும் மென்பொருள் பயிற்சி அளிக்கப்பட்டு தமிழ் நாட்டில் வெவ்வேறு கல்லூரிகளுக்கும் மாலையில் சில மணி நேரங்கள் பயிற்சி அளிக்க அனுப்பப்பட்டார். 6 மாதத்தில் அவருடைய ஊரான கோயம்புத்தூரிலேயே CTS நிறுவனத்தில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்தபோது தனக்கு கிடைத்த பயிற்சி அனுவபத்தினால் தன் பாடப்பொருளில் கிடைத்த தெளிவினால் எளிதாக தேர்ச்சிபெற்று பணியில் சேர்ந்தார். இப்படி உறுமீன் வரும்வரை காத்திருப்பதும் அதற்காக தன்னை மேலும் தயார் செய்துகொள்வதும் முக்கியம். மாறாக, என்னுடைய இன்னொரு உறவினர் பெண் 3 வருடங்களாக முழு நேர வேலை தேடலை மற்றுமே செய்திருக்கிறார். எந்த புதுத்திறனையும் வளர்த்துக்கொள்ளவில்லை. பல நிறுவனங்களில் வாய்ப்புகிடைத்தும் நேர்முகத்தேர்வில் தேர்ச்சி அடையமுடியவில்லை. தன்னுடைய பலவீனம் என்ன என்று சிந்தித்தாரா, ஏன் தொழில் நுட்ப நேர்முகத்தேர்வினைக் கடந்து மனிதவள மேலாளரின் சுற்றில் தோல்வி அடைந்துவிடுகிறார், அதற்கான காரணத்தை யோசித்தாரா என்றால் இல்லை. இப்படி சுய பரிசோதனை இல்லாதவர்களுக்கு நாமும் அடுத்தகட்ட ஆலோசனை வழங்குவது என்பது இயலாதது.

தமிழ் நாட்டில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதும் அவற்றில் 50% மேல் தகுதியான உள்கட்டமைப்பும் ஆசிரியர்களும் இல்லை என்பதும் அனைவரும் அறிந்ததே. கூடவே தரமான மாணவர்களும் இல்லை. +2 வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். எத்தகைய அறிவியல் அறிவு இருக்கிறது என்று பார்க்கத் தேவையில்லை. ஆர்வம் இருக்கிறதா என்றும் பார்க்கத்தேவையில்லை. சும்மா சேர்ந்துகொள்ளலாம். நிறுவனங்களில் வேலை கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டவர்களே பெரும்பான்மை ஆசிரியர்கள். அவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்.

சரி, அதையும் தாண்டி சேர்ந்துவிடுகிறோம். நமக்கு முழுதாக 4 வருடங்கள் இருக்கின்றன். அந்த நான்கு வருடங்களில் ‘எம்புருசனும் கச்சேரிக்கு போறான்’ என்று கல்லூரிக்கு போகாமல் தம்மை வேலைக்கு தகுதியாக்கிக்கொள்வதற்காக மெனக்கெடுகிறார்களா? 4 வருடங்களை சுகவாழ்வில் கழித்துவிட்டு பிறகு வருத்தபடுவதிலும் சமூகத்தையும் கல்வி முறையயும் குற்றம் சொல்வதில் என்ன பயன். இன்ஜினியராக துவங்கி, மனிதவள மேலாளராகி, இன்று கோவையில் மாணவர்களின் வழிகாட்டியாக பயிற்றுனாராக சுய நிறுவனம் தொடங்கி உள்ள என் கல்லூரி நண்பன் சிவக்குமார் பழனியப்பன் (https://www.facebook.com/MasteringMindAcademy) சொல்கிறார், நேர்முகத்தேர்வில், “சார் நான் தமிழ் மீடியம் சார், ஆங்கிலத்தில் பேச வராது” என்கிறான் ஒரு மாணவன். 4 வருடங்களில் பேசிப்பழகுவதற்கான எந்த முயற்சியும் பயிற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை என்றால் அது எப்படிப்பட்ட பொறுப்பற்ற தன்மை? ‘சொந்தப் பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்’தான் என்பதோடு, ‘விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்’ என்பதும் இவ்விசயத்தில் உண்மையே என்கிறார்.

B.E. படித்தவர்களாவது பெற்றோரால் சேர்த்துவிடப்பட்டவர்கள் எனலாம். M.E. படித்தவர்கள், எதற்காக அதைப் படித்தார்கள், அப்படி படிப்பதினால் தங்களுக்கு என்ன தகுதி வளரும் என்று நினைத்தார்கள் என்று பார்ப்பது முக்கியம். பலரும் B.E. முடித்தவுடன் வேலை கிடைக்காவிட்டால் இன்னும் சிறிதுகாலம் கழிப்பதற்காக M.E. சேர்கின்றனர். M.E. படித்தபின் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன என ஆராய்ந்தபின் சேரிகிறார்களா என்பது முக்கியமான கேள்வி. தங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையேயான இடைவெளி என்ன என்று பார்த்துக்களையாமல் இப்படி மேலுமொரு பட்டம் பெறுவது எவ்விதத்திலும் உதவாது. ஆனால் இவர்களுக்கு விரிவுரையாளர் பணியில் முன்னுரிமையும் மேலதிக சம்பளமும் தரப்படுகிறது.

தான் நினைத்தமாதிரி வேலை கிடைக்கவில்லை என்பது வேறு. வேலையே கிடைக்கவில்லை என்பது வேறு. ஒரு வேலையை மிகத்திறம்பட, குறுகிய காலத்தில் மிகத்தரமாக செய்பவர்கள் என்றால் அவர்களுக்கு ஒருவித ஊதியத்தில் வேலை கிடைக்கும். அப்படி இல்லாமல் சுமாராக செய்யக்கூடியவர் என்றால், அதே சம்பளத்தை பிரித்து 3 பேர்களுக்கு வேலைகொடுத்து, வேலைப்பளுவை குறைத்து வேலைவாங்கும் நிறுவனங்களும் உள்ளன. TCS போன்ற நிறுவனங்கள் இரண்டாம் வகை என்பேன். அங்கேயும் கிடைக்கவில்லை என்றால், BPOக்கள் KPOக்கள் பல உள்ளன. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றில் சேர்ந்துகொண்டு, அதனால் பெரு நகரத்தில் தங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, ஓரளவிற்கு பொருளாதாரத்தையும் சரி செய்துகொண்டு தங்கள் துறையில் தொடர்ந்து முயற்சிப்பது அவசியம்.

எல்லாத்தகுதிகளும் இருந்தும், உலகளாவிய பொருளாதார மந்த நிலை என்பது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்போது வேலைவாய்ப்பு இத்துறைகளில் குதிரைக் கொம்பாக ஆகிவிடுது என்பது உண்மை நிலைதான். அந்நேரங்களில் கூட தயார் நிலையில் உள்ளவர்களுக்கு வேலை கிடைத்துவிடுகிறது. பிறர் வேறு வேலைகளில் சேர்ந்துகொண்டு தங்களைத் தொடர்ந்து தயார் செய்துகொண்டு, பின்னர் முயற்சித்தால் வெற்றிதான். 2002-ஆம் ஆண்டில் பொறியியல் முடித்து வெளிவந்த எங்கள் batch இல பலரும் இவ்வாறு விரிவுரையாளர் போன்ற பணிகளில் சேர்ந்து பின்னர் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குப் பின்னர் மென்பொருள் நிறுவனங்களில் நுழைந்தனர்.

வேலையில் ஒருவரை சேர்த்துவிடுவது குறித்துப் பார்க்கலாம். இப்போது புதியவர்களை employee referral மூலம் சேர்த்துக்கொள்வது என்பது பெரிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களில் நின்றுவிட்டது. பெரும்பாலும் கல்லூரிகளிலிருந்தும் mass recruitment driveகளிலும் தான் புதியவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இங்கு நாம் செய்யக்கூடிய உதவி என்பது எங்கு தேர்வு நடக்கிறது என்று தகவல் தருவதும் அதற்கு எப்படி தயார் செய்யலாம் என ஆலோசனை வழங்குவதும் சில சமயம் சொல்லித்தருவதும் மட்டும்தான். வேலைக்கு ஒருவரை தேர்வு செய்வது என்பது இங்கே கூட்டு முயற்சி. ஒருவர் எழுத்துத் தேர்வை திருத்தி மதிப்பெண்கள் போடுவார். இன்னொருவர் நேர்முகத்தேர்வு செய்வார். அதன்பிறகு மனிதவள அதிகாரி அல்லது உயரதிகாரி நேர்முகத்தேர்வு செய்வார். இதில் ஒரு சுற்றில் நாம் தூக்கிவிட்டாலும் அடுத்த சுற்றில் அது வெட்டவெளிச்சமாகிவிடும். நான் புதுமுகமாக வேலைக்குச் சேர்ந்த நிறுவனம் அப்போது நிறைய ஆட்களை தேர்வு செய்ய வேண்டியிருந்தது. அதனால் சிலமாதங்களே ஆகியிருந்த எனக்கும் ஆட்கள் தேர்வு செய்வதில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. என் நண்பர்களுக்கெல்லாம் சொல்லி பங்கேற்கச் செய்தேன். அதில் ஒருசிலரது எழுத்துத்தேர்வு விடைகளை நானே திருத்த வேண்டியிருந்தது. கல்லூரியில் என் பெஞ்சிலேயே அமர்ந்து விடுதியில் அறை நண்பனாக இருந்தும் 2/20 போன்ற மதிப்பெண்களை வழங்க வேண்டியிருந்தது. காரணம் நேர்முகத்தேர்வு செய்பவரிடம் இந்த விடைத்தாளும் கொடுக்கப்படும். போதுமான அளவு விடை தறாமல் அதிக மதிப்பெண்கள் வழங்கி இருந்தால் அது தெரிந்துவிடும். எனது திருத்தும் தகுதி கேள்விக்குள்ளாக்கப்படும். இதற்கு ஒரு சில நிறுவனங்களில் விதிவிலக்குகளும் உண்டுதான்.

அனுபமிக்கவர்களைத் தேர்ந்தெடுக்கக்கும் போதுகூட, ஒரு காலியிடத்துக்கு சுமார் 10லிருந்து 20 பேரை நேர்காணல் செய்தால்தான் தகுதியான ஒருவரை தேர்ந்தெடுக்க முடிகிறது. 20 பேரை நேர்காணலுக்கு அனுப்ப சுமார் 200 பேராவது எழுத்துத்தேர்வுக்கு HR ஆல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதற்கு அவர்கள் 500 முதல் 1000 பேருடைய CV/Resume வைப்பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். இது ஒரு மிகப்பெரிய சுமை… ஆனால் வேறுவழியில்லை. இப்படி செய்யப்பட்ட பின்னரும் பணியில் சேர்ந்தபின் அவருடைய திறமை சோடை போகலாம். இல்லை திறமை இருந்தும் வேலை சரியாக செய்யாமல் போகலாம். இவையணைத்தும் ஏற்கனவே பணிசெய்துகொண்டிருப்பவர்களுக்கு அதிக பணிச்சுமையை ஏற்படுத்தக் கூடியவை. வேலையை குறித்த நேரத்துக்கு எங்கள் வாடிக்கையாளர்களுக்கு முடித்துக்கொடுக்க முடியாமல் போகச்செய்பவை. நாங்கள் நேர்முகத்தேர்வு செய்யும் முதல் ஆளே எங்கள் தேவையை பூர்த்தி செய்பவராக இருந்தால் சந்தோசமாக அவரைத் தேர்ந்தெடுத்துக்கொள்வோம். மீதமுள்ள 9 பேருக்கு நேர்முகத்தேர்வு நடத்தவேண்டிய வேலை மிச்சம். அந்த நேரத்தை எங்கள் புராஜட்களில் செலவிடலாம். அதனால்தான் சொல்கிறேன் SKILLED employee கிடைக்காமல் நிறுவனங்கள் தடுமாறுகின்றன என்று. அதனால்தான் நிறுவனங்கள் வெவ்வேறு பெரு நகரங்களுக்கும் பறந்துசென்று அந்த ஊர்களிலாவது தங்களுக்குத் தேவையான ஆட்கள் தாங்கள் கொடுக்கக்கூடிய சம்பளத்தில் கிடைக்கிறார்களா என பார்க்கிறார்கள். இங்கே கொடுக்ககூடிய சம்பளம் என்பது வருடத்திற்க்கு 3 அல்லது 4 லட்சங்களில் இருந்து ஆரம்பிக்கின்றது.

கல்விக்கூடங்களுக்கும் வேலைதரும் நிறுவனங்களுக்குமான இடைவெளி என்பது உலகளாவிய ஒரு விசயம் என்பது அதை நிவர்த்தி செய்ய Finishing Schools என்றொரு கருத்தாக்கம் யுரோப்பாவில் உள்ளது என்றும் சில நாடுகளில் இவற்றில் பங்குபெறுவது கட்டாயம் என்றும் சமீபத்தில் நண்பன் ஒருவனின் மூலம் அறிந்தேன். விக்கி ’Finishing Schools’ என்பதற்கு வேறுவிதமான விளக்கம் அளித்தாலும் நான் கேள்விப்பட்ட பொருளிலேயே நம் நாட்டிலும் இவை சில கல்விக்கூடங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதை (IIT உட்பட) கூகுளின் மூலம் அறிய முடிகிறது. சில சுட்டிகள்.
1. http://electronicsforu.com/electronicsforu/circuitarchives/view_article.asp?sno=854&title%20=%20Engineers%2C+Are+You+Employable%3F&b_type=new&id=7645&group_type=
2. http://www.iitr.ac.in/news/uploads/File/continuing/fsb%281%29.pdf
நான் அறிந்த அத்தகைய பள்ளிகளில் ஒன்று CDAC (http://cdac.in/). எங்கள் நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் இப்பள்ளிக்குச் சென்று ஆட்களை தேர்வுசெய்கிறார்கள். இவர்கள் சில சமயங்களில் அனுபவம் பெற்ற இன்ஜினியர்களைக் காட்டிலும் சிறந்துவிளங்குகின்றனர். இத்தகைய பள்ளிகள் அதிகம் வேண்டும் என்பதும் இந்த கருத்தாக்கம் பரப்பப்பட வேண்டும் என்பதும் இன்றைய இன்றியமையாத் தேவைகள் எனலாம்.

இன்ஜினியரிங் விட்டு வெளியே வந்து பார்ப்போம். +2 முடித்திருப்பவர் எந்த வேலைக்குத் தகுதியானவர்? இவர்களால் கணக்கு எழுத முடியாது (B.Com முடித்தவர்களால் முடியுமா?). மொழித்திறனில் சிறந்துவிளங்குகிறார்களா என்றும் சொல்ல முடியாது. இன்று நன்றாக ஆங்கிலம் பேசத்தெரிந்தாலே கால்-செண்டர்களில் நல்ல சம்பளம் கிடைக்கும். கொஞ்சம் டெக்னிகலாக படித்திருந்து ஆங்கிலமும் தெரிந்திருந்தால் டெக்னிகல் கால் சப்போர்டில் வேலைகள் உள்ளன. மெடிகல் டிரான்ஸ்க்ரிப்சனில் பளிச்சிடும் வேலை வாய்ப்புகள் உள்ளன. கடந்த காலங்களில் தட்டெழுத்துப் பயிற்சியும், சுருக்கெழுத்துப் பயிற்சியும் இத்தகைய வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தந்தன அல்லவா? அதற்கும் முன்னதாகச் சென்றுபார்த்தால்தான் வெறும் பள்ளித்தேர்ச்சியே ஆசிரியர் வேலை உட்பட பல அரசாங்க வேலைகளுக்குப் போதுமானதாக இருந்திருக்கின்றன. அதன் பின்னர் எப்போதும் படிப்போ பட்டமோ மட்டும் வேலையைப் பெற்றுக்கொடுத்துவிடவில்லை அல்லவா? தட்டெழுத்தில் அதிக பிழைகளோ போதுமான வேகம் இல்லாமலோ இருந்தால் 80கள், 90களில் ஒருவர் கிடைத்த வேலையை தக்கவைத்திருக்க முடியுமா?

தேசிய அளவில், இவ்வாறாக பல்வேறு வேலைகளுக்கு ஆட்களை தயார் செய்வதில் டாடா சமூக அறிவியல் நிறுவனம் (http://sve.tiss.edu/front-page) செயல்படுவதை அறிய முடிகிறது.
பெங்களூருவில் இதே பணியை சேவையாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு செய்துவரும் உன்னதி தொண்டு நிறுவனத்தை அறிவேன் (http://www.unnatiblr.org/unnati-center.html). ஆனால் இவை போதாமையாக இருக்கலாம். அதே நேரத்தில் மாணவர்களும் தங்கள் கண்களைத் திறந்துவைத்திருக்க வேண்டும். மூன்று மாதங்களில் ஒரு MBA மாணவி 5 நிறுவனங்களில் பணிப்பயிற்சி எடுத்திருக்கிறார் என்று செய்தித்தாளில் படித்தலிருந்து வலைத்தளம் http://www.letsintern.com/ ஐ பலருக்கும் பரிந்துரை செய்துவருகிறேன். இத்தளத்தில் உதவித்தொகையுடன் பயிற்சியுடன் கூடிய தற்காலிக வேலைக்கும், நிரந்தர வேலைக்கும் நிறுவனங்கள் விளம்பரங்கள் அளிக்கின்றன. ஆனால் இச்செய்தியை அன்றைய செய்தித்தாளில் வேலை தேடும் எத்தனை பேர் படித்தார்கள் என்று ஆராய்ந்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

அன்புடன்,
சாணக்கியன்
பெங்களூரூ.

முந்தைய கட்டுரைகல்விக்களைகள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅழியா அழல்