நான் வடிவேலின் நாட்டைச் சேர்ந்தவன். வடிவேலின் நடிப்பை சக நண்பர்கள் விதந்தோதும் பொழுது நான் அத்தனை பாதிக்கப்படவில்லை. காரணம், பல நூறு வடிவேலுகளுக்கு மத்தியில் வளர்ந்தவன் நான். நான் கண்ட நூற்றுக்கணக்கான குசும்புப் பிடித்த மதுரைக்கார ஆண் பெண்களின் கூட்டுக் கலவையே வடிவேல். அவருடைய பல்வேறு நகைச்சுவைகள் எனக்கு பல்வேறு மனிதர்களை பல்வேறு காலகட்டங்களை ஓர்மைபடுத்துகிறது.
மதுரை அல்லது தெற்கே உள்ள மாந்தர்களுக்கு குசும்பு அல்லது நகைச்சுவை ஒரு பிரத்தியேக சுபாவமாகவே கருதுகிறேன். வடதமிழகத்திற்கு நகைச்சுவையும் பகடியும் உண்டா என்பது என் நீண்ட நாள் கேள்வி. உதாரணத்திற்கு கண்மணி குணசேகரனின் எழுத்துகளில் நகைச்சுவை அறவே இருக்காது. அது அந்த நிலத்தின் பிரத்யேக இயல்பு என கருதுகிறேன்.
தமிழ்ச்செல்வனின் இந்த ’கருப்பசாமியின் அப்பா’ சிறுகதை 85க்கும் 90க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். தமிழின் இடதுசாரி படைப்பாளிகளின் எழுத்தில் கொண்டாட்டமும், குசும்பும் கொண்ட மாந்தர்கள் மிக மிகக் குறைவு. அல்லது அறவே இல்லையென்று சொல்ல வேண்டும்.
மேல் பரப்பில் ஒரு சாதாரண கதையைப் போல தோற்றமளிக்கக் கூடிய இச்சிறுகதை மிகுந்த ஆழமும் விரிவும் கொண்டது.
ஆதிமனிதனின் இயல்பு என்னவாக இருந்திருக்க முடியும்? வேட்டையும், களியாட்டமுமே அவன் வாழ்வு. பின்பு சமூக அமைப்புகளாக அவை இறுகும் பொழுது இக்களியாட்டப் பண்பு பொறுப்பற்றத்தனம் என்று சுட்டப்படுகிறது. ஆனாலும் அந்த ஆதிப் பண்பை காலகாலத்திற்கும் கடத்தி வருகின்ற, அல்லது சுமந்து வருகின்ற மாந்தர்கள் எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறார்கள்.
இவர்களின் இறுகிய கோட்டைச் சுவரையும், அதிகார பீடங்களையும், வழிபாடுகளையும், புனிதங்களையும், போற்றுதல்களையும் அநாயாசமாகத் தாண்டவும், பகடி செய்பவர்களுமாகவே எல்லாக் காலத்திலும் இவர்கள் இருக்கிறார்கள். சர்வாதிகாரம் இவர்கள் வழியே எப்பொழுதும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. சனநாயகம் இவர்கள் வழியாக சாத்தியப்படுகிறது.
அரசனுக்குக்கூட
தொப்பி எடுத்து வணங்குவதில்லை
வயற்காட்டு பொம்மை.
எத்தனை மகத்தான அதிகார எதிர்ப்புக் கவிதை இது. இதை எழுதியது ஒரு எளிய கவிஞனே.
’கருப்பசாமியின் அப்பா’ கதை முழுக்க கருப்பசாமியின் வழியாகவே நமக்குக் காட்டப்படுகிறார். ஒரு கணக்கில் கருப்பசாமியின் அப்பாவை மிகத் துல்லியமாகப் புரிந்துகொண்டது கருப்பசாமி மாத்திரமே. கருப்பசாமியின் அம்மா வேறொரு இறுகிய அமைப்பின் பிரதிநிதி. அவளின் உலகத்தில் சிரிப்பாணிகளுக்கு இடமேயில்லை. கருப்பசாமியின் அப்பா ஆதிச் சமுகத்தின் பிரதிநிதி. அவனால் கூத்தும், கும்மாளமும் இல்லாமல் இருக்க முடியாது.
காரல்மார்க்ஸ் அந்நியமாதல் என்ற கருத்தாக்கத்தை இப்படி முன்வைக்கிறார். “ உண்பது. உறங்குவது, புணர்வது, குட்டிகளுண்டாக்குவது இது மிருகங்களுக்கும், மனிதர்களுக்குமான பொதுப்பண்பு. மனிதக் குரங்கு மனிதனாக மாறுவது உழைப்பின் வழியே. ஆனால் இம்முதாலாளித்துவ சமூக அமைப்பில் எது மனிதனாக மாறுவதற்கான காரணியோ அவ்வுழைப்பு மிருகப்பண்பாக வெறுக்கப்படுகிறது. எது மனிதர்களுக்கும், மிருகங்களுக்குமான பொது அம்சமோ அதையே மனிதன் தன் பண்பாக, தன் அடையாளமாகக் காணத் தொடங்குகிறான். இந்தத் தலைகீழ் புரிதலே மனிதர்களை அந்நியமாதலை நோக்கி நகர்த்தி தன் உழைப்பை கடும் வெறுப்பாகப் பார்ப்பதில் போய் முடிகிறது”. என்கிறார் மார்க்ஸ்.
கருப்பசாமியின் அப்பா சுடும் வடைகள் அந்நியமாதலுக்கு எதிரானவை. அந்த வடைகள் படைப்பாக்கமும், பகடியும் நிரம்பியவை. அவைகள் அவரின் மனைவியால் முற்றிலும் நிராகரிக்கப்படுபவை. அதன்பிறகு அவை சுடப்படுவதுமில்லை. ஆதி எண்ணைச் சட்டியிலேயே வடைகள் வட்டமாகத்தான் சுடப்பட்டன என்று சொல்வதே நம்மூர் வழக்கம்.
நீங்களும் நானும் நிச்சயம் நம் வாழ்வில் கருப்பசாமியின் அப்பாக்களையும், அம்மாக்களையும் கடந்தே வந்திருக்கிறோம். இந்தச் சட்டக மனிதர்களுக்கு மத்தியில் அவர்கள் நமக்கு பசுமையாய் நினைவில் நிற்கிறார்கள். அவர்களை நினைக்கும்போது நமது அகத்தில் ஒளிபடர்கிறது. முகத்தில் கள்ளச் சிரிப்பொன்று வருகிறது. நமது வேலைத் தளத்தை, பொது இடங்களை, இரயில் பயணங்களை, திருமணங்களை, துக்க நிகழ்வுகளை, கொண்டாட்டங்களை அவர்களே ஜீவன் நிரம்பியதாகவும், வசீகரமிக்கதாகவும் மாற்றுகிறார்கள்.
நாம் மூழ்கும் தருணங்களில் அவர்களின் எளிய நகைச்சுவையைக் கைப்பிடித்தே நாம் கரையேறுகிறோம். நாம் அவர்களோடேயே இருக்க விரும்பியிருக்கிறோம். அவர்களை ரகசியமாகப் பின்தொடரவும். ஆனால், லெளகீக வாழ்க்கை நம்மை மாற்றுப்பாதையில் செல்லவும் என அம்புக் குறியிடுகிறது. நாம் கண்ணீரோடு முச்சந்தியில் நிற்கிறோம். நாம் மிக நிராதரவாக உணரும் தருணங்களில் அந்தரங்கமாக அவர்களை அணைத்துக் கொள்கிறோம்.
இவர்களை கோமாளி என்ற சொல்லின் வழி கேலி செய்யப்படுவதுமுண்டு. ‘ ஆனால் இந்தக் கோமாளிகள் இந்த உலகத்திற்கு மிகவும் தேவைப்படுகிறார்கள். ’காடு’ குட்டப்பனை நேசிக்காதவர் உண்டா. அவர் மலையாளக் கோமாளி. கொஞ்சம் தெளிவாகவும் இருப்பார். இவர்கள் அழைத்தால் அந்தப்புரத்திலிருந்து இளவரசிகள் இறங்கி வருவார்கள்.
நான் தொடக்கத்தில் சொன்ன பலநூறு வடிவேல்கள் இக்கூறுகள் கொண்டவர்களே. ஒரு மறவர் இளைஞருடன் ஓடிப்போக முயற்சித்து, வீட்டாரால் பிடிக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு செவிடாகிப்போன ஒரு தூரத்துச் சித்தி எனக்குண்டு. சித்தி அப்படி ஒரு பகடிக்காரி. என்னிடம் ஒருமுறை சத்தமாய்ச் சொன்னார்கள். ” ஒங்க சித்தப்பு எப்ப என்ன கல்யாணம் செய்யச் சம்மதிச்சாரு தெரியுமாப்பு…… நாலு தடவ அவளுக்கு சுத்தமா காது கேட்காதானு கேட்டாராம். எங்க அய்யா ஆமான்னு சத்தியம் பண்ணாறாம். அங்கனக்குள்ளய சம்மதம் சொல்லிட்டாரம்” சித்தியே கருப்பசாமியின் அப்பாவின் அம்மா அல்லது மகள்.
கருப்பசாமியின் அப்பாக்கள் மாலை நடையில் கடவுளுக்கு காதல் கடிதம் கொடுக்கப்பட்ட சமயங்களில் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் அணில் போல எதன் மீதும் ஏறி ஓடுவார்கள். தெய்வம்… தெரு… என்றோ அவர்களுக்கு வேறுபாடு இல்லை. கனவுகளைத் துரத்தக் கூடிய மனதின் குரலுக்கு செவிமெடுத்து வாழ்கின்ற அத்தனை பேரும் கருப்பசாமியின் அப்பாக்களே.
நான் அந்தரங்கமாய் அறிவேன். நானும் ஒரு கருப்பசாமியின் அப்பாதான். தொடர் தோல்வி நாயகனென்று குடும்பத்திலிருக்கும் வெற்றிகரமான மென்பொருளாளர்களால் வர்ணிக்கப்படுகையில் மறுமொழி சொல்வதற்கு என்னிடம் சொற்கள் எதுவுமில்லை.
“ ஆனால், அம்மா இல்லாத சமயத்தில் வடையைத் தூக்கிப் போட்டு விளையாடுவதும் டீக்கடைக்கு வருகின்றவர்களிடம் தாக சாந்தி செய்கிறீர்களா ஏதேனும் அருந்துகிறீர்களா எனக் கேட்கும் கருப்பசாமியின் அப்பாவை கடைசி வரை அவன் அம்மாவால் மாற்றவே முடியவில்லை.” என்று கதை முடிகிற இடத்தில் கருப்பசாமியின் அப்பாவின் கால்களில் தோற்று வீழ்கிறது இச்சமூகம். நானும் உன் முன் நெடுஞ்சாண் கிடையாகத் தெண்டனிடுகிறேன் இசக்கியே.
[ஊட்டி இலக்கியச்சந்திப்பு 2014-இல் பேசிய உரை]