இலக்கிய அழகியல் முறைகள் – ஜெயகாந்த் ராஜு

‘பூவின் சுகம் ஒரு இனிய அனுபவம்; ஆனாலொரு பூவினை எடுத்து இதழில் மென்மையை ஸ்பரிசி; அமையும்வண்ணத்தையும் பார்; கந்தத்தை மண; என்றெல்லாம் கூறுதல் சுவைஞனை அவமதிப்பதாகும். இதனை எழுதுதல் எப்படி கதைஞனாகிய என் ஸ்வதர்மமாகின்றதோ, அப்படியே இதனை சுவைத்தல் சுவைஞனுடைய ஸ்வதர்மமாகும். என்சிந்தனையும், அவன்சிந்தனையும், ஒரேஇடத்தில் சங்கமித்தால் அஃது என்பேறு” என்று சொல்லும் எஸ்பொ ஒருபுறம்.

ஜீவகன், ஜீவாத்மா,, மனோன்மணி, இச்சாசக்தி என்று ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும்,இந்த தத்துவச்சாயை என்று ஆசிரியர் முன்னுரையிலேயே வாசகர்களுக்கு பாடம்எடுக்கும் சுந்தரம்பிள்ளை அவர்கள் மற்றொருபுறம்.
ரசனைசார்ந்தவிமர்சனம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனால், எல்லாநுண்கலைகளையும்போல, இலக்கியஅனுபவத்திற்கும், பயிற்சியும், ஓரளவிற்காவது முறைப்படுத்தப்பட்டவாசிப்பும்,அவசியம்என்கிறஒரு இடைவழியைக்கைக்கொண்டு சில அழகியல்கோட்பாடுகளை சந்திக்கலாம்.

ஜெயகாந்த் ராஜு

யதார்த்தவாதம்:

• ‘உள்ளதுஉள்ளபடி’ கூறல்,
• சமகாலவாழ்க்கை மற்றும் சமுதாயத்தின் மிகையில்லாதசித்தரிப்பு,
• புலன்வழி,அறிவனவற்றைமட்டுமே ஏற்கும் கதைசொல்லும்முறை.
• மிகையான கற்பனாவாதம் மற்றும்அனைத்தையும் stylized ஆக்கும் எழுத்துக்களுக்கு எதிரான எதிர்வினை,

ஆனால் நூறுசதவீதம் யதார்த்தவாதம் என்பது இருக்கவேமுடியாது. பி.தொ.நிகுரலில் “இதாகாலம்பற, நல்லகூத்து, நான் அம்பது குட்டைசாணிசுமந்தாச்சு” என்கிற ஆசிர்வாதத்துக்கு, அருணாசலம் சொல்லும் – “அது உனக்கு காலை, இது எனக்ககாலை”யைபோல, யதார்த்தம், நம் ஒருவருக்குஒருவர் வேறுபடுகிறது.

நம்மைச்சுற்றி நடக்கும்எவ்வளவோ விஷயங்களை, நம் அனுபவங்கள், மதிப்பீடுகள், விழுமியங்கள் போன்ற கண்ணாடிகளை அணிந்துகொண்டு, பார்த்துப் புரிந்துகொள்கிறோம். எதிர்வினை செய்கிறோம். இலக்கியத்தில் காட்டப்படுவது, நாம் தெரிந்துவைத்துள்ள, நம்யதார்த்தத்துடன் பொருந்திப்போகும்போது, நாம் அதை யதார்த்தமானகதை என்றுசொல்கிறோம். இணையாதபோது அது யதார்த்தக்கதை இல்லை என்கிறோம்.

இலக்கியத்தில் எல்லாமே கற்பனைதான். யதார்த்தம் என்றாலும், அதுவும் ஒரு புனைவுதான். எந்தச்சித்தரிப்பிலும் எழுத்தாளனுடைய புனைவு என்று ஒன்று இருக்கும். அது அவனுடை யprerogative.ஆக, யதார்த்தமும் என் /எழுத்தாளனின் உண்மைக்கு மிக அருகில் உள்ள ஒரு புனைவே. மேலும், மிக யதார்த்தமான ஒரு படைப்புகூட, அது நம்மில் என்ன தாக்கத்தை உருவாக்குகிறது என்பதைக்கொண்டே மேன்மையாகிறது. .

யதார்த்தம் என்று சொன்னாலே நினைவுக்குவரக்கூடிய அசோகமித்திரன், நாஞ்சில்நாடன் ஆகியோரைத் தவிர்த்து எல்லோரும் துவைத்துக் காயப்போட்ட ‘மோகமுள்’ளையே பேசுபொருளாக எடுத்துக்கொள்கிறேன். இசை, காதல், இலட்சியம், உன்னதம் ஆகியவற்றின் யதார்த்தப் போக்கை வைத்துப் படைக்கப்பட்ட புதினம் இது. கொஞ்ச நாட்களாகவே ‘மோகமுள்’ – ‘இதுக்குத்தானா’ –வுக்காக உதைவாங்கிக் கொண்டிருக்கிறது.

பி.தொ.நிகுரலைப் படித்துவிட்டு இடதுசாரிசித்தாந்திகளோ, எதிர்ப்பாளர்களோ யாருமே எதிர்வினையாற்றவில்லை என்று வைத்துக்கொள்வோம்; அது வீரபத்ரபிள்ளையின் குறிப்புகளைப் படித்து அதிர்ச்சியடைந்த அருணாசலத்தின் மனச்சோர்வு, அதன் விளைவான மனநோயைப் பற்றியநூலே என்று யாராவது சொன்னால் எப்படியோ அப்படித்தான் மோகமுள்ளை ஊமைக்காமம் பேசும்கதை என்று சொல்வது.

’அத்தன்தோள்’ மீதமர்ந்து திருஞானசம்பந்தர்தான் உலகத்தைப் பார்க்கவேண்டுமென்றில்லை. தத்துவ ஆன்மீகத் தளங்களை ஜெமோ மூலமாகவும், பரதவர் வாழ்க்கையை ஜோ டீ க்ரூஸ் மூலமாகவும், கடற்கரை முஸ்லீம்களை தோப்பில் மூலமாகவும் காண்கிறோம். இசையை முறையாகப் பயின்று ஆழங்கால்பட்ட திஜாவை ஏன் தீராக்காதல், விடலைக் காமத்தை எழுதியவர் என்கிறோம்.

நாஞ்சில் நாடன்

மோகமுள்ளில் இரண்டு விஷயங்கள் பிரதானமாகக் கூறப்பட்டுள்ளன. ஒன்று- கைக்கிளைக்காதல், மற்றொன்று இசைசார்ந்த திஜாவின் கருத்துக்கள். இந்த இரண்டாம் கருதுகோள் போதுமானஅளவு விவாதிக்கப்படவில்லை என்பதே என்வாதம். மோகமுள் கலையின் லட்சியங்களை முன்வைக்கிறது, யதார்த்தத்தையும் கவனத்தில்கொண்டு. இப்படித்தொகுத்துக்கொள்கிறேன்:

• இசை சார்ந்து அது வைத்த கருத்துகள், விழுமியங்கள், விவாதங்களுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதேயில்லை. தமிழனுக்கு இரும்புக்காது பண்ணிவைத்திருக்கிறது என்று பாரதியார் மட்டையடியாக அடித்ததற்கு, அது எதனால் என்று தன்பாணியில் பாஷ்யம் எழுதுகிறார் திஜா. ஆண்சங்கீதம் பெண்சங்கீதம், இரண்டில் எது உசத்தி, சுருதி ஏன் பெண்களுக்கு நன்றாகச் சேருகிறது, குரல் இனிமையின் முக்கியம், குரல்பயிற்சியின்மை, சங்கீதகுஸ்தி, டைப்ரைட்டர் சுரங்கள், வெறும் கணக்குவழக்குகள், பெரியமனிதர்கள் ஆதரவு, குரல் உயர்வானதா, ஞானம் முக்கியமா என்கிற விடயங்கள் இந்த புதினத்தை வைத்து விவாதிக்கப்படவில்லை.

• நினைத்தது எல்லாம் குரலில் காட்டவேண்டும் என்கிற ஆதங்கம், லட்சியம் உள்ள கதைநாயகன் பாபு-தாபம், கருணை, தீனம், சோகம், ஏக்கம் போன்ற ஒரே நிறத்தின் சாயைகளும், தெய்வபக்தியின் பரிமாணங்களும் மட்டுமே உள்ளடக்கிய நம் இசைமரபை வெவ்வேறு தளங்களுக்குக் கொண்டுசெல்லவே கனவுகாண்கிறான். அதற்குச் சரியான பதிலாகவே வருகிறது வடக்கத்திசங்கீதத்தின் சுருதிசுத்தமும், அதன் abstract ஆன பாடல் முறையும் அது நம்முள் ஏற்படுத்தும் மோனநிலையும். இந்த விஷயங்கள் எல்லாம் இன்னும் புதியதாகவே விவாதிக்கப்படாமலே உள்ளன.

• மோகமுள் மற்ற தி.ஜாவின் ஆக்கங்களைபோலல்லாமல் கொஞ்சம் சங்கீதப்ரக்ஞையைக் கோருகிறது. எப்படி விஷ்ணுபுரத்தில் தத்துவஞானசபையின் விவாதங்களோ, எப்படி பி.தொ. நி. குரலில் இடதுசாரிசித்தாந்தமோ, இசையும் மோகமுள்ளில் அப்படியே. ஆனால் திஜாவின் மென்மையும் நாசூக்கும் நிறைந்த எழுத்து அதை ஒரே மூச்சாகத் தராமல் அங்கங்கே விரவிச்செல்கிறது. இதில் திஜா தவறு செய்துவிட்டாரோ என்று கூடத் தோன்றுகிறது. முழுக்க இசை சம்பந்தப்பட்ட நூலாக எழுதாமல் தன் நிறைவேறாத காதலையும் எழுதிச்சேர்த்ததால் பெருவாரியானவர்களின் வாசிப்பில் மோகமுள் ஒரு ஆண் பெண் உறவு நூலாகவே எண்ணப்பட்டு வருகிறது.

• தமிழ் இலக்கியமரபில், வேறு ஒரு நுண்கலையைப்பற்றி, அதன் நுணுக்கங்கள், அழகியல், அறம், அரசியல் இவையனைத்தையும், அழகு கெடாமல், ஆராய்ச்சிக்கட்டுரையாக இல்லாமல் கதையின்போக்கிலேயே அளித்திருப்பது வேறு எந்த புதினத்திலாவது செய்யப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. ஒரு நுண்கலையைப்பற்றியப் பேச்சுக்கள் காணக் கிடைக்கும் ஜேஜே சில குறிப்புகளிலும், பின்தொடரும் நிழலின் குரலிலும்கூட எழுத்துக்கலையைப் பற்றிமட்டுமே உரையாடல் நடக்கிறது.

• ஒரு கலைஞர், அவரே தன் கலையின் தற்காலப்பிரதிநிதியாய் நின்று கதைநாயகனோடு உரையாடவும், வாதிக்கவும் செய்வது எனக்கு முக்கியமாகப்படுகிறது. பாபு என்கிற திஜாவும், பாலூர் ராமு என்கிற செம்மங்குடி சீனிவாசஐயரும் நிஜத்தில் சந்தித்ததாகத் தெரியவில்லை-நாவலில் சந்திக்கின்றனர். விவாதிக்கின்றனர். செம்மங்குடியிடம்-தான்ஒரு கதை மாந்தராகவருகிறார் என்கிற இந்த விஷயம் எடுத்துச்சொல்லப்பட்டதா என்றே தெரியவில்லை.

• திஜா, ரங்கண்ணா என்று நாவலில் கூறப்படும் உமையாள்புரம் சுவாமிநாதஐயரிடம் பயின்றவர். ஒரு ஞானியும், ஒழுக்கவாதியுமான அவரிடம்தான் சில காலம் சீனிவாசஐயரும் பயின்றார். செம்மங்குடிசீனிவாசஐயர் அந்தக் காலக்கட்டத்தில் இசையுலகின் தலைமைப்பதவியை அடைந்து விட்டிருந்தார். குரலினிமை என்பது அறவே இல்லாதிருந்தும் அவருடைய வெற்றி, அதே சமயம் அவரது ஞானவிசாலம், உழைப்பு, உருக்கத்தால் ரசிகர்களைக் கட்டிப்போடும் திறன், அவருடை யhomemade robust wisdom, அவரின் உள்மனப்பிரயாசைகள், போராட்டங்கள், மதிப்பீடுகள் ஆகியவற்றை பாலூர் ராமு வழியாக சொல்லும் நேர்த்தியில் வெற்றியடைந்தார் திஜா, ஆனால், நிஜ வாழ்க்கையில் அவர் மதுரைமணிஐயரின் பரமரசிகர். இதையெல்லாம் பற்றி எந்த விவாதமும், உரையாடலும் செய்யாத reticent readers and audience மட்டுமேகொண்டதா அந்தக்காலத்துத் தமிழ்ச்சமூகம் என்கிற கேள்வி எழாமலில்லை. திஜா. அளவுக்கு முறையாக இசைபயின்ற ஒரே எழுத்தாளர் கோவி. மணிசேகரன் மட்டும்தான். ஆனால் அவர் இயங்கி யதளமே வேறு.

• அதே போல பிரம்மசரியத்தைக் காப்பாற்றிக் கொண்டால் நல்ல குரல்வளம் கைகூடும் என்று ஒரு நம்பிக்கை இருந்திருக்கிறது. பாபு யமுனாவை வீட்டுக்காரியாக பாலூர் ராமுவுக்கு அறிமுகப்படுத்தும்போது ராமுவுக்கு உடனடி அதிர்ச்சி பாபுவின் பிரம்மசரியமின்மை. ஆனால் அவருக்கு அதைவிட பெரிய அதிர்ச்சி பாபுவால் அப்படியின்றியே குரலை நினைத்தபடி வளைக்கமுடிகிறதென்பது. காலம்காலமாக நம்பப்பட்டுவந்த (தன்குருநாதர் ஸ்வாமிநாதய்யர் பெரிதும் ஸ்லாகித்த) ஒரு விழுமியத்தை சர்வசாதாரணமாக திஜா போகிறபோக்கில் உடைக்கிறார்.

தி. ஜானகிராமன்

• கதையின் ஆரம்பத்திலேயே பாபு ’தன்ஸ்வதர்மம் இசைதான்’ என்கிற நிச்சயஉணர்ச்சியை அடைகிறான். அதனால்தான் வீணாகப் போகும் ஒவ்வொரு நிமிடமும், வீணான ஒவ்வொரு செயலும் அவனை வேதனையில் துவள வைக்கின்றன. பதின்மவயதில் ஸ்வதர்மத்தைக் கண்டுகொள்ளுமெவரும் நல்லூழ் உடையவர்களே. (ஜெயமோகனின்அஜிதன் ‘ஹய், சொதர்மம், அஜக்கு, ஆகுமுக்கு’ என்று குதித்துக் கொண்டாடுவது நினைவுக்கு வருகிறது). இதில் இரண்டு சவால்கள் உள்ளன. முதல்சவால், ஸ்வதர்மத்தை பின்பற்றுவது. இரண்டாவது அதை தீவிரம் குறையாமல், லட்சியம் நீர்க்காமல் பின்பற்றுவது. பாபுவின் தன்னறமான இசையை வைத்து artistic integrityக்கும், பொதுவெளியில் வெற்றிக்கும் உண்டான போராட்டம் கதைமுழுவதும் நிரவிவருகிறது; இது எந்த கலக்கும், காலத்துக்கும் பொதுவான பிரத்யட்சமான சவால்.

இவை என் வாசிப்பில் நான் அடையாளம் காணும் தளங்கள். விடுபட்டவை இன்னும் எவ்வளவோ. ஒவ்வொருமுறை வாசிப்பிலும் ஒரு புதுமுகம் காட்டும் classic மோகமுள். நண்பர்களே, நாக்கு நுனிவரை இசை, விரல்நுனி முழுவதும் எழுத்து எனும்போது, மோகமுள் had to happen through திஜா.

மாயயதார்த்தம்:

இதன் வரைமுறையை கீழ்கண்டவாறு பலவிதமாகச்சொல்லலாம்.

• புலன்களை மீறிய மாய அனுபவங்களை யதார்த்தத்தைச் சித்தரிப்பதுபோலவே துல்லியமான தகவல்களுடனும், காட்சித்தன்மையுடனும் சித்தரிக்கும் எழுத்துமுறை.
• மாயயதார்த்தம் மாயச்சம்பவங்களை யதார்த்தபாணியில் தகவல்களுடன் உணர்ச்சியில்லாமல் சொல்லமுயல்கிறது.
• மிக நுணுக்கமாக புனையப்பட்ட யதார்த்த உலகில் அநாயாசமாக வரும் மாயமே, மாயயதார்த்தம்
• மாயயதார்த்தம் மாயஉலகை அன்றாட வாழ்வின்தளத்தில் நிகழ்த்திக்காட்டும்.
• மாயயதார்த்தம் கதைக்கு அவசியமான அற்புத உணர்வை உருவாக்கும். உருவகங்கள் மூலம் கருத்துகளை முன் வைக்கும்.
• மாயயதார்த்தம் ஒரு நிலப்பகுதியின், மொழியின் பண்பாட்டுப்பின்புலம் கொண்டது.

இரா. முருகனின் பானை ( முதல் ஆட்டம் சிறுகதைத்தொகுதி- நர்மதாபதிப்பகம்).கதைமாந்தர் நால்வர்தான். மிகவும் எதிபார்ப்புக்களுடன் வாழ்க்கைப்பட்டு கணவன்வீட்டுக்கு வரும் ரங்கம்மா, பொதபொதவென்று ஊளைசதை மட்டுமே வளர்ந்த, சிந்திக்க, செயல்படலாயக்கில்லாத கணவன் சென்னகேசவன், வீட்டு முதல்மாடியில் வசிக்கின்ற ‘பெரியாத்தா’ என்கிற ஆவி/ பேய், கோர்ட்குமாஸ்தா.

ஒரு சாப்பாட்டு மெஸ்நடத்தலாமென்ற ஐடியாவில், மாடியில் சும்மா இருக்கும் அறையில் தன் சட்டிபானைகள் எல்லாம் வைத்துக்கொள்ளலாமா என்கிற ரங்கம்மாவின் யோசனையை பெரியாத்தா கடுமையாய் மறுக்கிறாள். சாமான்களைஎல்லாம் உருட்டுகிறாள். சென்னகேசவன் பெரியாத்தாவை சுவாதீனத்துடன் சமாதானம் செய்கிறான்.
நாட்கள் செல்லச்செல்ல ரங்கம்மா இந்த அசாதாரணமான சூழ்நிலைக்குத் தன்னைச் சமாதானம் செய்துகொள்கிறாள். பயம் அறவே விட்டுப் போகிறது. பெரியாத்தா கொட்டிக்கொள்ளும் வயிற்றெரிச்சலுக்கெல்லாம் சரிக்குச்சரி பேசி சண்டைபோடுகிறாள். கோர் ட்குமாஸ்தா மனத்தை பாதிக்கிறான். பெரியாத்தா எச்சரிக்கை செய்கிறாள்.

கடைசியில் அது நிகழ்ந்தே விடுகிறது. பெரியாத்தா கடுமையான தண்டனை வழங்குகிறாள். தலைமுடியைக்கூட வெட்டிவிடுகிறாள். ரங்கம்மா அழுது கதறுகிறாள்.இருபத்தைந்துவருஷம் கழிகிறது. சென்னகெசவன் புற்றுநோயால் மரிக்கிறான். வீட்டில் ரங்கம்மாவும், பெரியாத்தாவும்தான். பெரியாத்தாவின் அரைக்குள் நுழைந்து வெறிபிடித்ததுபோல் அவள் இருப்பதாகநம்பப்படும் பானைகளை கீழே கொண்டுவந்து உடைக்கிறாள். அதிலிருந்து அவள் பழைய ரவிக்கையும், முடியும் கீழே விழுகின்றன. ‘போயிடறேன், போயிடறேன்’ என்ற ரங்கம்மாவின் அழுகையோடு கதை முடிகிறது.

கதைசொல்லி இருபத்தைந்துவருஷங்களுக்கு மேற்பட்ட கதையை முன் பின்னாகநகர்த்தி non-linear ஆகவே சொல்லுகிறார். காலமயக்கத்துடன், பழையவீடும், புழுதிபடிந்த யாரும்புழங்காத இருளடைந்த அறைகளும், ஒரு மர்மமான களத்தை உண்டாக்குகின்றன.

மேலிருந்து வரும் சத்தமும், சென்னகேசவன் அதனோடு சாதாரணமாக உரையாடுவதும், உடனே கதையை மாயத்துக்கு இட்டுச்செல்கிறது. அதன் பின்னேயும் உருவம் முழுக்கச் சிதைந்து புகையாய் மிதந்தபடி வரும் பெரியாத்தா மாயத்தையே நமக்குக் காட்டுகிறாள்.

ஆனால் மறுவாசிப்பில் கொஞ்சம்கொஞ்சமாக ரங்கம்மவுக்கு மனச்சிதைவு (schizophrenia) நோய் இருக்குமோ என்கிற சந்தேகத்தை விதைக்கிறார். மாடிக்கே போயிராத, ஆனால் தொன்மத்தை முழுவதாக நம்பும் சென்னகேசவன்தான் ஏமாற்றத்தாலும், அதிர்ச்சியாலும் பாதிக்கப்பட்டிருக்கும் ரங்கம்மாவின் உளச்சிதைவுக்கு முதல்வினையூக்கி (catalyst). கோர்ட் கிளார்க்கிற்கு உடன்பட்ட குற்றஉணர்ச்சி அதை இன்னும் அதிகரிக்கிறது. பெரியாத்தாவும் ரங்கம்மாவும் போடும் சண்டைகளெல்லாமே அவளின் பிளவுற்றமன ஆளுமையில் ஒன்றை ஒன்று ஆதிக்கம் செலுத்த முயல்வதன் வெளிப்பாடே. தண்டிப்பது பெரியாத்தாவின் மேல் ஏற்றிச்சொல்லப்படுகிறது.

கடைசியில் , மாடி அறைக்குள் இருந்து எடுக்கும் பழம்பானையை உடைக்கும்போது விழுவது கிளார்க்குடன் உறவுகொண்ட அன்றைக்குப் போட்டிருந்த ரவிக்கையும், அதன்பின்னர் வெட்டப்பட்ட அவளது முடியும். இப்போது நமக்குஉறுதியாகிவிட்டது. ஆனால், இன்னுமொரு முடிச்சு பாக்கி இருக்கிறது. ‘போயிடறேன், போயிடறேன்’ என்ற ரங்கம்மாகிழவியின் அழுகையோடுஅல்லவா கதைமுடிகிறது. ரங்கம்மாவின் எந்த ஆளுமைப்பகுதி இப்போதுபோகும்? ஆசிரியர் பெரியாத்தா ‘போயிடறேன்’ என்று சொன்னாள் என்று சொல்லவேஇல்லை. ரங்கம்மாதான் போகிறேன் என்கிறாள். மாயம் நிலைத்து, யதார்த்தம் விலகுகிறதா? வாசகமுடிவுக்குக் கதை கட்டுப்படவேண்டுமா என்ன.ஒருவரிகூட அதிகமில்லாத, கச்சிதமானகதை.

இரா முருகன்

மிகுபுனைவு:

மிகுபுனைவு-வரையறை:

• யதார்த்தத்துக்கு கட்டுப்படாமல் கற்பனைமூலம் உருவாக்கப்பட்ட கனவுச்சாயல்கொண்ட புனைவுமுறை. மிகைப்புனைவு என்றும் சொல்வர்

• மிகுபுனைவுகள் உத்வேகமான மாயமொழியில் கதைசொல்கின்றன.
• ஆசிரியருக்கு கட்டற்ற சுதந்திரம் கிடைக்கிறது. எந்த பௌதீகவிதிகளுக்கும் கட்டுப்படவேண்டியதில்லை.
• மூன்று விதமான மிகுபுனைவுகள்-
• மாயஉலகம் மட்டுமே உள்ளவை-யதார்த்தஉலகமே இல்லை (உ. Lord of the rings)
• யதார்த்தஉலகை முதன்மை உலகாகவும், மாயஉலகை இரண்டாம்உலகமாகவும் ச்ருஷ்டித்து, முன்னதிலிருந்து பின்னதுக்குஒரு portal மூலமாக சென்று வருவதாக அமைப்பது. (Eg. Alice in wonderland, Chronicles of Narnia)
• யதார்த்தஉலகின் ஒரு பகுதியாக மாயஉலகை அமைத்திருப்பது. யதார்த்தஉலகின் மாந்தருக்கு அங்ஙனம் ஒரு மாயஉலகம் இருப்பதான போதமே இருக்காது. (Eg. Harry Potter series)

யதார்த்தத்துக்கு கட்டுப்படாத கற்பனைகள் என்பதால் கீழ்வரும் மூன்று கதைகளையும் மிகுபுனைவுகளாகக் கொள்கிறேன்.

கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்:

க. பிள்ளைவாள் பிறந்ததென்னவோ திருனவேலி சைவப்பிள்ளையாகத்தான்; கும்பிடுவதும் கைலாசபதியையே .ஆனால் வாழ்வில் பயில்வது என்னவோ நிஷ்காம்ய கர்மயோகத்தைத்தான். யாக, யக்ஞ ஹோமாதிகள் செய்யாத பூர்வமீமாம்சகர் என்றே அவரைச் சொல்லிவிடலாம். சந்தா கிடைக்கிறதோ இல்லையோ, சித்தவைத்தியதீபிகையை நடத்தியே தீருவார். கடவுள் வந்தாலும் சங்கநிதி, பதுமநிதியெல்லாம் கேட்கத் தோன்றுவதில்லை. அவர்கணக்கில் ஒரு காப்பி ; அப்புறம் அவர் பத்திரிக்கைக்கு ஆயுள்சந்தா. வேறெதுவும்வேண்டாம். தன்கர்மத்தில் அத்தனைபற்று. அன்றாட சம்சாரத்தில் கல்லாங்காய்ப் பட்டுப்போன மனது .வரம் கொடுக்கிற சாமியும் வேண்டாம்; தலையைக் கேட்கிற சாமியும் வேண்டாம்; படைச்சாச்சுல்ல, இனிஎங்கபாடு, உங்க உலகத்துல நீங்க; எங்க உலகத்துல நாங்க என்று சொல்லுகிற லௌகீகஞானம்; இதுதான் புதுமைப்பித்தனின் கர்வம்; ஆளுமை.

சங்கிலிப்பூதத்தான்:

சிறுகதையின் முதல்வரியிலேயே கதையை ஆரம்பித்துவிட வேண்டும்என்று அருளிச் செய்திருக்கிறார் வாத்தியார் சுஜாதா. அதைத் தவிர எல்லாம் பண்ணுவேன்; ஆனாலும் அருமையான கதையைத் தருவேன் என்று பிரதிக்ஞையோடே தொடங்குகிறார் நாஞ்சில்நாடன். இதன் மத்தியில் சதுக்கப்பூத விளக்கம், உழவுச்சாமன்கள் பட்டியல், கருப்பட்டிக்கணக்கு, இலக்கியவிசாரம், இத்தியாதிகள்.
சங்கிலிப்பூதத்தானின் பரிபவத்தை சகதாபத்தோடே சொல்லிச்செல்லும் ஆசிரியர், அவன் முயற்சிகளையும் முறியடிக்கிறார்; தங்கக்கருப்பட்டியை விக்க முடியுமாலே, உறக்கத்திலே செறைப்படுத்தாதேயும் என்கிறான் பண்டாரம், ’நூலா, தாலியா’ தொலைக்காட்சித் தொடர் பார்த்துக்கொண்டிருக்கும் வீட்டம்மாள் பொறவாட்டுவா’ என்கிறாள். வண்டிமலைச்சி மட்டும்தான் கைலாசத்திற்கே திரும்பிப்போகும்படி ஆலோசனை சொல்கிறாள்

.
மாடன்மோட்சம்:

இரண்டுதளத்தில் இயங்கும் மிகுபுனைவு. முதல்தளத்தில் நமக்கு வாசிக்கக்கிடைப்பது சிறுதெய்வங்கள் வழக்கொழிதல், வைதிகமதத்தின்ஆதிக்கம், மற்ற அவைதிகமதங்களின் அவசர மதமாற்றங்கள் ஆகியவை.
இரண்டாம்தளத்தில் பெறுவது ‘the inevitability of change, conflict and compromise’. எல்லா மையங்களிலும் நடந்துகொண்டேயிருக்கும் அதிகாரப்போர், ஏறிஇறங்கும் தராசின் தட்டுக்கள், அத்தனை மையங்களும், பாத்திரங்களும் ஏதோ ஒரு புள்ளியில் செய்துகொள்ளும் சமரசம், இத்தனைக்கும் நடுவே நம்முடைய ‘resigning to fate’ மனோபாவம், மதம் ஜனநாயகமாதல் இவற்றை துல்லியமாக, நுட்பத்தோடு அதேசமயம் அங்கதத்தோடு விளக்கிச்செல்கிறது ஆசிரியரதுகலை.

கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், சங்கிலிப்பூதத்தான், மாடன்மோட்சம் இம் மூன்று கதைகளுக்குமுள்ள ஒற்றுமைவேற்றுமைகளைப் பார்த்தீர்களா. கடவுள் அல்லது சிவகணம் தானாகவேவந்துதான் மனிதனை சந்திக்கும்படி நேர்கிறது. மனிதப்பயலுக்கு எந்தப் பயமும் இல்லை. ‘ஓய்கடவுளே, என்னுடன் பழகவேண்டுமானால் மனுஷஅத்துக்குக் கட்டுப்பட்டிருக்கவேண்டும்’ என்று கண்டிஷன் போடுகிறார் கந்தசாமிப்பிள்ளை. பண்டாரம் உறக்கம்கலைக்க மறுக்கிறான். அப்பி ‘ஏம்பிலே இன்னேரத்துக்கு’ என்று கொட்டாவி விடுகிறான். ‘கூறுகெட்டமாடா’ என்று செல்லத்திட்டுவேறு.

ஆனால் ஒற்றுமை இவ்வளவுதான். ஆசிரியரின் ஆளுமை கதைப்போக்கை எடுத்துச்செல்கிறது. சித்தம்போக்கில் சிவமும், சீவமும் போகின்றன.

இருக்கும்இடத்தையும், அரிசிப்பாயாசத்தையும் காப்பாற்றிக்கொண்டு இங்கேயே இருந்துவிடுவோமா என்று சங்கிலிப்பூதத்தானை எண்ணவைக்கும் மாயாவிலாசம்தான், பீடத்தை விட்டு எழுந்திருக்க முடியாமல் பாவிஐயன் மந்திரக்கட்டுப் போட்டுவிட்டானே என்று மாடனையும் பதறவைக்கிறது. ’உங்கள்வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு’ அன்று பதிலடிகொடுக்கும் பிள்ளைவாளிடம் அமைதிகாக்கிறது.

நண்பர்களே; மூன்று எழுத்தாளர்கள்; மூன்று சிறுகதைகள்; ஒருவரின் நிமிர்வு; கடவுளானாலும் உன் எல்லை இவ்வளவுதான் என்று சொல்லும் கர்வம்; அதே கடவுளை மாபெரும் பிரபஞ்சலீலையில் நீயும் ஒரு காய்தான் என்று சொல்லும் தத்துவஞானம்; கடவுளின் கஷ்டத்துக்கும் நான் இரங்குவேன் என்கிற தயை, கருணை; இவை மூன்றும்தான் நம்இலக்கியத்தின் தன்னறம், அடையாளம். இக்கதைகள் அவற்றின் மூன்று கொடுமுடிகள்.

ஹாரிபாட்டர் வரிசைக்கதைகளையும் எடுத்துக்கொள்வோம். என் அவதானிப்பில் தமிழில் இந்தக்கதைகளின் விமர்சனம் முழு அளவில் செய்யப்படவில்லை. உளப்பகுப்பாய்வு அடிப்படையில் திறனாய்வு அநேகமா கநடக்கவேயில்லை.

நண்பர்களே, இவற்றின் அமோக வணிகவெற்றி நம் எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால், என்னுடைய நோக்கில், அதற்குப் பின்னால் வலுவான காரணங்கள் உள்ளன. குழந்தைகள்இலக்கியம், பரப்பிலக்கியம் என்கிற அடையாளத்தைத் தாண்டி, இந்த க்கதைகள் எல்லா வயதினருக்கும், தரத்துக்கும், ரசனையாளருக்கும் ஈர்ப்பை ஏன் அளிக்கின்றன என்று கொஞ்சம் பார்ப்போம்.

முதல்தளத்தில் இவை மிகுபுனைவுக்கான அத்தனை ஆச்சரியங்களையும் கொண்டவை. மந்திரச்சொற்கள், காலத்தில்பயணித்தல், சாகசங்கள், வினோதஉயிரினங்கள், இத்தியாதி.

ரோலிங்கின் மொழிநடை மிகவும் புதியதாகவும், வசீகரமாகவும் திகழ்கிறது. உ-ம்: விட்ச் என்கிற பொதுவா கஎதிர்மறை பொருள்தரும் ஒரு சொல்லை அவர் பயன்படுத்தியவிதத்தில், அது ஒரு பெருமைகொள்ளத்தக்கதாக மறுபிரவேசம்செய்தது. மந்திரவாதிகளின் உலகிலேயே கதைக்களம் அமைத்திருப்பதால் எண்ணற்ற சாத்தியங்கள். ஆனாலும், மீறமுடியாத சில விதிகளை வகுத்துக்கொள்கிறார். உ.ம்: இறந்தவர்களை மீண்டும் உயிரோடு எழுப்பமுடியாது, ஒன்றுமே இல்லாமல் ஒன்றைப் படைக்கமுடியாது. மந்திரத்தின் மூலம் அன்பைத் தூண்டமுடியாது.

எல்லா குழந்தைகள் இலக்கியத்தையும்போல, எண்ணற்ற சோதனைகளைதாண்டி, தீமையை நன்மை வெல்கிறது. ப.சிங்காரம் சொல்வதுபோல், கதாநாயகனும், கதாநாயகியும் ஈருயிரும், ஓருடலுமாய் ஆண்டுக்கொரு பிள்ளை பெற்றுக்கொண்டு நெடுநாள் வாழ்ந்திருப்பர், சுபம், சுபம், சுபம்.
அதைத்தாண்டி மறுவாசிப்பில், ஹாரிபாட்டர் இரண்டாம்தளத்துக்கு வெகுசுலபமாய் நகர்கிறது. ரோலிங்கின் அரசியல் நம் முன்வைக்கப்படுகிறது அவருடைய பாத்திரப்படைப்புகளின் மூலமாகவே. வாசகர் நீதியுணர்வையே நம்பி; ஆசிரியர்குரலென்பதே இல்லை.


எதிர்நாயகனின் (லார்ட் வோல்டமோர்ட்) மிகப்பெரிய அரசியல் நிலைப்பாடு அவனின் இனமேட்டிமைவாதம்தான். ஹிட்லரின் நாஜிவாதம், குக்லக்ஸ்க்லானின் வெள்ளையர் ஆதிக்கவாதம் ஆகியவற்றை நேரடியாகவே நினைவுறுத்தும் பேச்சுக்கள், இன சுத்திகரிப்புவாதங்கள், பொய்ப்பிரசாரங்களையெல்லாம் திறமையாகக் கையாள்கிறான். எல்லா அதிகாரங்களையும் தன்னிடம் குவித்துவைத்திருக்கும் ஒரு தன்முனைப்புவாதி. வடகொரிய ஆட்சி போன்ற ஒரு சர்வாதிகார ஆட்சியை நினைவுபடுத்தக்கூடிய நடவடிக்கைகள். அன்பு, நட்பு, காதல் போன்ற நம் எந்த அறமதிப்பீடுகளையும் நிராகரிப்பவனாகவே காட்சி அளிக்கிறான்.

இணையற்ற பலத்தையும், பொறுப்பற்ற அதிகாரத்தையும், மரணமில்லாத வாழ்க்கையையும் மட்டுமே விழைகிறான். யாரும் அவனுக்குத் தன்லட்சியத்தை அடையப்பயன்படும் ஒரு கருவி மட்டுமே. தன்பேரில் காதல்கொண்டு அடிமை செய்யக்காத்திருக்கும் பெண்ணையும் அப்படியே காண்கிறான். அன்பு தன் வலிமையைக் குறைத்துவிடும் என்று பயப்படுகிறான். தன் கூட்டத்திலேயே எல்லோரும் தன்னை விரும்பவில்லை, பயமே அவர்களை விசுவாசிகளாக வைத்திருக்கிறது என்பதை அவன் அறிவான். ஆண்டான்அடிமை உறவில் பயம், பரஸ்பர வெறுப்பு, அவநம்பிக்கை ஆகியவற்றை அவன் உள்ளூர ரசிப்பதாகவே தெரிகிறது. மன்னிக்கமுடியாத தீச்சொற்களாக அவன்பயன்படுத்துவதில் முதல்தீச்சொல், அடுத்தவரை தன்வசமிழுத்து, தான் நினைப்பதையெல்லாம் செய்யவைப்பதுதான். இரண்டாம்தீச்சொல், உடலை வலிமூலம் துடிக்கச் செய்தல், மூன்றாம் தீச்சொல் கொல்வது, இது பல சர்வாதிகார ஆட்சிகளை நேரடியாக நினைவுக்குக் கொண்டுவருவது.

இவனளவுக்கு மந்திரத்திறமையும், தலைமைப்பண்புகளும் உடையவர் அவர்கள் பள்ளியின் தலைமையாசிரியர் டம்பில்டோர் மட்டும் தான். அவர்தான் லார்ட்வோல்டமோர்ட், ஹாரியின் பெற்றோர், ஹாரி அனைவருக்கும் ஆசிரியர். அவர்கள் உலகத்திற்குத் தலைமையேற்க எல்லாத் தகுதிகளும் இருந்தாலும் அதைத்தொடர்ந்து மறுத்துக்கொண்டே வருகிறார். அளவற்ற அதிகாரம் தன்னிடம் குவியும்போது அதைத் தன்னால் நியாயமாக கையாள முடியாது என்றே அஞ்சுகிறார். அதிகாரத்திலிருந்து விலகிநிற்றலும், எப்போதும் உரையாடலின் மூலமாக முன்னேற முயல்தலும், தன்னை எப்போதும் சுயபரிசோதனைக்கு ஆட்படுத்திக்கொள்ளுதலுமாக அவர் காந்தியின் ஒரு சிறிய பிம்பம்தான்.

மாறாக, ஹாரியினிடத்து எந்தத னித்திறமையும் கிடையாது. நண்பர்களால் ஆதரிக்கப்படும் அனாதைச்சிறுவன். ஃக்விட்டிட்ச் என்னும் விளையாட்டு மட்டும் தந்தையைப் போன்றே நன்றாக விளையாடுகிறான். ஆனால் அவனும் எந்த உயிராபத்திலும் ’மன்னிக்கமுடியாத’ தீச்சொற்களைப் பயன்படுத்துவதில்லை. லார்ட்வோல்டமோர்ட்டுடன் கடைசியாக போரிடும்போதுகூட, ஹாரி பயன்படுத்தும் மந்திரம், எதிரியின் ஆயுதத்தைத் தூரஎறியும் சொல்தான்.

ஒரு கதாசிரியராக ரோலிங்கின் வெற்றி, கதைமாந்தர்கள் படைப்புத்தான். யாருமே ஒற்றைப்பரிமாணத்துடன் தட்டையாகப் படைக்கப்படவில்லை. அவரின் படைப்புச்சம்என்றால் ஹாரியின் ஆசிரியர்களுள் ஒருவரும், சிறுவயதில் அவனது தாயை ஒருதலையாகக்காதலித்தவருமான ஸ்னேப்தான். ஹாரியால் தொடர்ந்து அஞ்சப்படுபவர். அபாரமான திறமையுடையவர். ஹாரியின் தந்தையால் தொடர்ந்து ஏளனப்படுத்தப்பட்டவர்; டம்பிள்டோரால் எதிரிமுகாமில் விதைக்கப்பட்டு எப்போதும் இருசாராரின் அவநம்பிக்கைக்குள்ளானவர். ஹாரிக்காக உயிர்த்தியாகம் செய்து இறக்கும் தருவாயில், அவன் தாயின்மேல் தனக்கிருந்த காதலைத் தெரிவித்துவிட்டு உயிர்துறந்தவர். ஆகையால் ஹாரியின் தீராக்கடனுக்கு ஆளானவர். இந்தநேரத்தில் ‘ஒருதரத்தில் எண்ட மகனல்லேநீ’ என்று வடக்கன் வீரகதா’வின் சந்து தன் முன்னாள் காதலி மகனிடம் கூறிவிட்டு உயிர்த்தியாகம் செய்தது நினைவுக்குவருகிறது.

ஒரு சிறிய கதாபாத்திரம் ரேமஸ்லூபின் என்கிற வேர்வுல்ஃப். சிறு வயதில் இதேபோல் ஒரு ஓநாய் மனிதனால் கடிக்கப்பட்டு அதே பாதிப்புக்கு உள்ளானவர். அவருக்கு விடிவேகிடையாது என்பது மட்டுமல்ல; அவர் யாரையாவது கடித்தால்அதேகதிதான். இதே வாய்ப்பும் பிரச்சினையும் உள்ள மற்ற ஓநாய்மனிதர்கள் மனிதசமூகத்தைப் பழிவாங்க கண்டவர்களெல்லாரையும் கடிக்க முயலும்போது, இந்த கதாபாத்திரம்மட்டும் தன் பிரச்சினையோடு தனியே போராடுகிறது. இந்த கதாபாத்திரம் ஒரு எய்ட்ஸ் நோயாளியையே சுட்டுகிறது என ரோலிங்கும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இப்போது அடுத்த தத்துவதளத்துக்கு எப்படி ரோலிங் நகர்கிறார் என்று சிந்திப்போம். பொருளாதாரவெற்றி எங்கும் விதந்தோதப்படவேயில்லை. மதங்கள், கடவுள் போன்றவை குறிப்பிடப்படுவதே இல்லை. அவரவர்கள் உபாசிக்கும்ம ந்திரச்சொற்களே (அவற்றின் பின்னிருக்கும் மனஉறுதியே) அவர்களின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றன.

அதேசமயம், வேறு எந்தகுழந்தைகள் இலக்கியத்திலும் இல்லாத அளவுக்கு தத்துவவிசாரணைகள் விரவிக்கிடக்கின்றன. ஆன்மா உறிஞ்சப்பட்டபின் வாழ்க்கையின் சூனியம்; ஹாரியின் ஒரு பகுதிமரணத் தருவாயில் இருக்கும்போது டம்பில்டோரின் ஆன்மாவும், ஹாரியின்ஆன்மாவும் மரணத்தைப்பற்றி நடத்தும் உரையாடல்கள்; கொல்லப்படுபவனிற்கும், கொல்பவனிற்கும்உள்ளஉறவு; ஹிம்சையால் நம் ஆன்மா அடையும் சேதம்; போன்ற பல.

என்றும் மாறாத விழுமியங்களான அன்பு, காதல், நட்பு, இசை, சிரிப்பு, ஆகியவற்றில் ஒரு நம்பிக்கையை விதைத்து முடிக்கிறார். கடைசியாக டம்பில்டோர் சொல்வதுபோல்; நம்முன்னால், இரண்டு வழிகள் உள்ளன, சரியானது, எளிதானது. சரியான பாதையைத் தேர்வுசெய்வோம்.

புராணஎழுத்து:

• பௌராணிகம் ( Myth) தொன்றுதொட்டு வழங்கிவரும் கதை அல்லது நம்பிக்கை. தொன்மம் என்றசொல்லும் உண்டு. அது மதம் சார்ந்ததாக இருக்கையில் இச்சொல்லை பயன்படுத்துவது நல்லது
• தொன்மம் என்பது கடவுளர்களையோ கடவுளையொத்த மனிதர்களையோ பாத்திரங்களாகக் கொண்ட கதையென்றும்
• அது வரலாற்றுக் காலத்திற்கு அப்பாற்பட்ட தென்றும்
• தொன்மங்கள் அதிகசிரத்தையோடு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை; உண்மையிலேயே நிகழ்ந்ததாக நம்பப்படுபவைஎன்றும்
• எல்லா இலக்கிய வகைகளும் தொன்மத்திலிருந்தே தோற்றமுற்றன என்றும் கூறப்படுகிறது.

”தொன்மங்கள் இறுகிய பாறைகள் அல்ல. உயிர்த்துடிப்புள்ளவை, சமூகம், காலத்துத் தேவைகளுக்கேற்ப தொன்மங்களைப் பயன்படுத்திக்கொள்கிறது. சமூகம்மட்டுமல்ல சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும் அவரவர்களின் கருத்துலகிற்கு ஏற்பத் தொன்மங்களைப் பயன்படுத்திக்கொள்கின்றன”-நன்றி: முனைவர்மு.இளங்கோவன்.

எழுத்தாளர்கள் புராணத்தை, இதிகாசத்தை ஒட்டிய கதைகளை எழுதவரும்போது அவற்றிலுள்ள மௌன இடைவெளிகளை நிரப்பவே முயல்கிறார்கள். ஆனால் அந் தஇடைவெளிகளை நிரப்பும் வர்ணங்களால், தங்களையே அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். தங்களின் மன அவசத்தையே வெளிப்படுத்திக்கொண்டும் இருக்கிறார்கள்.

புதுமைப்பித்தனின் ‘அகல்யா’ வும் ‘சாபவிமோசனமு’ம் அகல்யையின் கதையை அவர் பார்வையிலிருந்து சொல்லிச்செல்கின்றன. சீதை அயோத்தியை விடுத்து கானகம்ஏக படகில் ஏறிய தருணத்தை படகோட்டியின் நீர்ததும்பிய கண்களிலிருந்து கண்டு கவிமொழியாகவே ஜெயமோகன் தந்திருக்கிறார். நாம் இப்போது சிந்திக்க இருப்பது குபராவின் ‘சபரியின்பிரேமை’ என்னும் சிறுகதையைப் பற்றி.

சபரியின் பிரேமை: மதங்கரிஷியின் ஆசிரமத்தில் பணிவிடை புரிந்துவந்தாள் சபரி. மதங்கரின் மரணத்தருவாயில் அவர் சொன்னதற்கு ஏற்ப, ராம லட்சுமணர்களின் வரவை எதிர்நோக்கியிருந்தாள் என்கிறது ராமாயணம். மதங்கரிஷி மறையும் தறுவாயில் சபரியிடம் பேசியிருக்கக்கூடிய தருணத்தை, அந்த வாய்ப்பை குபரா பயன்படுத்திக் கொள்ளுகிறார்.

ந. பிச்சமூர்த்தி சொல்வதுபோல் ‘ கருவாக நின்றுவிட்ட வேட்கைகளை வெகு நுட்பமாகவும், அனாயாசமாகவும் படம் பிடிப்பதில் நிகரற்ற’ குபரா, அதே தன்மைகளை சபரியின் மீதும், மதங்கரின் மீதும் ஏற்றிச் சொல்கிறார்.
வலுவில் ஏற்ற கடுமையான நியமநிஷ்டைகளின் மூலம் நைஷ்டிகபிரம்மசரியத்தை அனுஷ்டித்தவர் மதங்கர். இறக்கும்தறுவாயில் அன்பின்மையின் வறட்சியை உணர்கிறார். ஆசிரமக் குடிசையின் உள்ளேகூட வரத்தயங்கும் சபரியிடம் தன் பிரேமையை வெளிப்படுத்துகிறார். அதே போல் சபரியும் தன் காதலைத் தெரிவிக்கிறாள்.

இளமையிலேயே இருவரும் பரஸ்பரம் அந்தமின்சாரத்தை உணர்ந்துஇருந்தும் வெளிப்படுத்தாமலே கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். அந்திமகாலத்தில் தான் மனத்தடைகளை விலக்க மதங்கரால் முடிந்தது. துளசிஜலத்தை படுக்கையிலிருக்கும் மதங்கரின் உடல்மேல் தெளித்தும், வாயில் சிறிது ஊற்றியும் சபரிதன் கரைகடந்த அன்பில் கண்ணீர்பெருக்கி அவருக்கு பூரணத்துவம் அளிக்கிறாள். சேவைசெய்பவளாய் மதங்கரைக் காணவந்தவள், ரிஷிபத்னியாய் திரும்புகிறாள். மென்சோகம் நம் மனத்தைக் கவ்வுகிறது.

‘மதமேறிய செவ்வரி படர்ந்த கண்களுடனும், பூமிரசம் பரிபூரணமாக நிறைந்து இளம் மரக்கொம்புகள் போன்ற அங்கங்களுடனும்’ வந்த சபரியும், ’துவளாத்தன்மையும், மிருதுவான கடினமும் மணமும் கொண்டசந்தனமரம்’ போன்றமதங்கரின் ‘யௌவன அக்கினிஜ்வாலை’யும் மருதத்திணைக்கேற்பவே அமைந்திருக்கின்றன.

படிமம் செறிந்த இச் சிறுகதையின்கடைசி வரியும் கால அமைதியும், சொல்லமைதியும் நிறைந்து விளங்குகிறது. சூரியன் மறைந்து சந்திரன் வரும் காலம் என்ற படிமம். மதங்கர் மறைந்து ராமன் வரும்காலம்- அதற்கே காத்திருப்பாள் சபரி. கவித்துவம் சிறைப்பிடித்த ஒரு காலச்சித்திரம். வேறென்னவேண்டும் நமக்கு.

[16-5-2014 முதல் மூன்றுநாட்கள் ஊட்டி நாராயணகுருகுலம் ஃபெர்ன்ஹில்லில் நடந்த குரு நித்யா இலக்கியச்சந்திப்பில் விவாதிக்கப்பட்ட கட்டுரை]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 88
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 89