கடந்த சில நாட்களாக எனக்கு வந்த தனிப்பட்ட மின்னஞ்சல்களில் கேட்கபப்ட்ட வினாக்களுக்கான என் எளிமையான விளக்கங்கள் இவை.
1. எழுத்தாளர்கள் எல்லாம் வலைப்பூக்காரர்களாக மாறுகிறார்களே?
*
2. இணைய எழுத்திலேயே மூழ்கிவிட்டீர்களா? இப்போதெல்லாம் வேறு எதையும் எழுதுவதேயில்லையா என்ன?
*
3 இணைய வாசகர்கள் மட்டுமே இப்போது உங்களை படிக்க முடிகிறது.அச்சு ஊடகங்களில் எழுதுவதில்லை என்று எண்ணுகிறேன். ஓர் எழுத்தாளருக்கு இது சரியானதுதானா?
*
4. இணையதளம் சார்ந்த மிகையான கற்பனையில் இருக்கிறீர்கள். இது ஆர்வமில்லாத மேலோட்டமான வாசகர்கள் அடங்கியது. இதில் தீவிரமாக ஈடுபட்டீர்கள் என்றால் பிற்பாடு அதற்காக வருத்தப்படுவீர்கள். இலக்கியப்படைப்புகளில் மட்டும் ஈடுபடுங்கள்…
***********
முதல் விஷயம் இது வலைப்பூ அல்ல வலைத்தளம். மின்னிதழ் என்றும் சொல்லலாம். இணையத்தில் கிடைக்கும் என் எழுத்துக்களை ஒரு மையத்தில் சேர்க்கலாமே என்று நண்பர் சிறில் கருதியதனால் இது உருவாக்கப்பட்டது. அப்போது நான் அதில் எழுதமாட்டேன் என்றேன். நண்பர்களே அதை தொடங்கி அதில் என் பழைய இடுகைகளை உள்ளிட்டார்கள். அப்போது நான் அசோகவனம் நாவலுக்கான ஆராய்ச்சி மற்றும் குறிப்புகளில் இருந்தேன். நண்பர் பி.கெ.சிவகுமார் நடத்தும் ‘எழுத்தும் எண்ணமும்’ என்ற குழுமத்தில் ஒரு உற்சாகத்துக்காக சில நையாண்டிக் கட்டுரைகளை எழுதினேன். அவற்றை இந்த இணையதளத்திலும் பிரசுரித்தேன். இணையதளம் முறைப்படி அறிவிக்கப்படுவதற்குள்ளாகவே அதற்கு வருகையாளர் அதிகரித்தது. விகடன் ஒரு சிறு குறிப்பு வெளியிட்டதும் இதன் பார்வையாளர் எண்ணிக்கை தினம் எண்ணூறுபேர் என்ற அளவில் அதிகரித்தது.
அப்போதுதான் ‘தொப்பி’ ‘திலகம்’ விவாதம் வெடித்தது. விகடன் தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டி இந்த இணையதளத்தை பிரபலப்படுத்தியது. பல வார இதகளில் பிளாக் என்றால் என்ன என்றெல்லாம் குறிப்புகள் வந்தன. சொல்லப்போனால் ‘பிளாக்’ என்ற விஷயம் சாதாரண வாசகர்களுக்கு –சினிமாக்காரர்களுக்கும் – தெரிந்ததே அந்த விவாதம் மூலம்தான். அது ஒரு நல்ல விஷயம். என் இணையதளத்தை ஒருநாளைக்கு உச்சகட்டமாக பதினைந்தாயிரம்பேர் வரை படித்த நாட்கள் அவை
அந்த விவாதத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதே சரியான பதிலடியாக இருக்கும் என்று எண்ணினேன். என்னைப்பற்றி இந்த இதழ்கள் உருவாக்கும் எதிர்மறைச் சித்திரத்துக்கும் அதுவே விளக்கமாக இருக்கும். அனேகமாக தினமும் இணையத்தில் பதிவேற்றம் செய்தேன். ஆன்மீக, இலக்கிய, அரசியல் கட்டுரைகள். கடிதங்கள். என்னை அறியாத வாசகர்களிடம் அவை மூலம் விரிவாகவே சென்றுசேர்ந்தேன். என் வாசகர் வட்டம் பலமடங்கு அதிகரித்தது.
ஆனால் எனக்கு ‘வெகுஜன’ வாசகர்கள் இருக்க முடியாது. இருக்கவும் விரும்பவில்லை. நான் தன்னை தயாரித்துக்கொண்டு தீவிரமாக படிக்கமுனைபவர்களுக்கான எழுத்தாளன். கேளிக்கையாளன் அல்ல. ஆகவே விவாதம் ஓயும்போது என் வாசகர் எண்ணிக்கை மீண்டும் பழையபடி ஆகும் என்றே நினைத்தேன். ஆனால் ஆச்சரியமாக கிட்டத்தட்ட அது நீடித்தது. இப்போது இதை தினம் மூவாயிரம் முதல் ஐந்தாயிரம் பேர் வரை படிக்கிறார்கள். இது தமிழ் இணையப்பக்கங்களைப்பொறுத்தவரை மிக அதிகம். திண்ணை மட்டுமே இதில் இந்த தளத்துக்குப் போட்டி. ஆக, இணையதளம் நானறியாமலேயே இணைய இதழாக ஆகியது.
மேலோட்டமான பரபரப்புக்காகவோ வேடிக்கைக்காகவோ வருபவர்கள் தேவையில்லை என்று வாசகர்களை சற்றே சலித்து எடுக்கலாமென முடிவு செய்து நான் எழுதிவந்த நையாண்டிக் கட்டுரைகளை நிறுத்தினேன். என் வழக்கமான தீவிரமான கட்டுரைகளை மட்டும் பிரசுரம் செய்தேன். மிக நீண்ட, கடுமையான கட்டுரைகளை வெளியிட்டேன். ஆனாலும் அதேயளவுக்கு வாசகர்கள் நீடித்தார்கள். மாதம் ஒன்றரை லட்சம் பேர் என்பது இதுபோன்ற தீவிரமான இணையதளத்துக்கு இருப்பது பெரிய வெற்றிதான். சுமையும்கூட. ஏனெனில் இது பலர் எழுதும் இதழ் அல்ல. ஒருவனே எழுதும் இதழ். கடிதங்களை அதிகமாக வெளியிட்டால்கூட அதை வாசகர்கள் ஏற்பதில்லை. ஏமாற்றம் தெரிவிக்கிறார்கள். பயணம் சென்றமையால் மூன்றுநாள் எழுதாமலிருந்தபோது சிலநூறு கடிதங்கள் வந்தன.
இதன் வாசகர் வட்டமும் இதுவரை நான் அறியாதது. எந்தக்கட்டுரைக்கும் அதன் மிக உள்ளார்ந்த தளத்தில் இருந்து எதிர்வினைகள் வருகின்றன. மருத்துவக்கட்டுரைக்கு உயர்தள மருத்துவர்கள் எழுதுகிறார்கள் என்றால் மலேசியா பற்றிய கட்டுரைக்கு கட்டுமானத் தொழிலாளர்கள் எழுதுகிறார்கள். தனிப்பட்ட முறையில் முக்கியமான அதிகாரிகள், அரசியல்வாதிகள், நடிகர்கள் எழுதியிருக்கிறார்கள்.இந்த தளவிரிவை நான் என் வாசகர்களில் இதுவரை கண்டதில்லை.
பொதுவாகவே சுதந்திரத்தின் மீது மோகம் கொண்டவன் நான். என் எழுத்திற்கு தடையற்ற ஒரு வெளிப்பாடு கிடைத்திருப்பது மிக உற்சாகமூட்டுகிறது. கட்டுப்பாடற்ற ஓர் பெரும் ஊடகம் என்பது எந்த எழுத்தாளனுக்கும் பெரும் கனவெ. விகடன் உதவியால் அது சாத்தியமாகியிருக்கிறது. இன்று இந்த இணையதளம் விகடன்,குமுதம்,திண்ணை போல ஒரு வெகுஜன ஊடகம். முழுக்க எனக்கேயானது. மேலும் நான் அச்சு ஊடகத்தில் எழுத முடியாதவற்றை இதழில் எழுதுகிறேன். உதாரணமாக கீதை,பதஞ்சலி யோகம் போன்ற கட்டுரைகளுக்கு இன்றைய தமிழ் சிற்றிதழ்ச் சூழலில் சாதாரணமாக இடமில்லை. இவை பிற்பாடு நூலாக வரக்கூடும்.
ஆனால் இதன் சுமையும் மிக மிக அதிகம். மின்னஞ்சல்களுக்கு பதில்போடுவதில் தொடங்கி எபப்டியோ ஒவ்வொருநாளும் இதற்கு தீனிபோடுவதுவரை கடும் உழைப்பு தேவையாகிறது. நான் என் பெரியநாவல் திட்டத்தை முடிக்கவேண்டும். திரைப்படங்களுக்கு எழுத வேண்டும். தவிர்க்க முடியாத பயணங்கள் செய்யவேண்டும். ஆனால் எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் ஒரு மந்திரம் உண்டு, ‘நான் குன்றாத ஊக்கம் கொண்டவன்’ என்பதுதான் அது. என் தியானமந்திரத்தின் பொருளும் அதுவே.அ து என்னை எப்போதும் அப்படி வைத்திருக்கிறது.
நீங்கள் சொல்வது ஒருவகையில் உண்மையே. நான் இப்போது தீராநதி இதழில் மட்டுமே எழுதுகிறேன், நகைச்சுவை தொடர். மலையாளத்தில் பாஷாபோஷிணிக்காக ஒரு கட்டுரை எழுதினேன்.சமீபத்தில் அச்சில் வேறு எதுவுமே வரவில்லை. என் இணையகக்ட்டுரைகள் தமிழினி இதழில் வெளிவருகின்றன. சிறுகதைகள் எழுதி நெடுநாள் ஆகிறது. இப்போதுதான் ஒரு நீள்கதை எழுதி உயிர்மைக்குக் கொடுத்திருக்கிறேன். அச்சு ஊடகம் வழியாகவே அதிக தீவிரமான வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். இலக்கியத்தை அச்சில்படிக்கும் இன்பமே வேறு. இணையதளம் எப்போதுமே இரண்டாம்பட்சமே. நூல்களே முதலிடம்.
அச்சில் இவ்வருடம் மூன்றுநூல்களும், அசோகவனம் நாவலும் வந்துவிடும் என்று திட்டமிட்டு அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். இதில் முக்கியமான நிபந்தனையாக இருப்பது என் அரசுவேலையே. நாளில் பெரும்பகுதியை அதற்காக நான் அர்த்தமின்றி செலவிடவேண்டியிருக்கிறது. அலுப்பூட்டும் இயந்திரத்தனம் வேறு. அதிலிருந்து சினிமாதான் என்னை விடுவித்தது. கொற்றவை எழுதவும் அசோகவனம் எழுதவும் சினிமாவே நேரம் ஈட்டித் தந்தது. அதற்காக தமிழ்சினிமாவுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். சினிமாக்காரர்களே என் சடையப்பர்கள், சீதக்காதிகள். இப்போது நெடுநாள் விடுப்பில் வீட்டில் இருப்பதனால் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். இவ்வேலையை முழுமையாக விட்டுவிட்டு எழ சினிமா உதவும் என்ற கனவு இருக்கிறது. அப்படி நிகழ்ந்தால் இது ஒருசுமை அல்ல. சாதாரணமாக செய்யும் அன்றாட வேலைதான்.
இல்லையேல் ஒரு தேர்வை நிகழ்த்தவேண்டியிருக்கும். படைப்புகளா இணையதளமா என்று. அப்போது நான் படைப்புகளையே தேர்வுசெய்வேன்.
***********
5 . உங்கள் இணைய எழுத்துக்கள் நீளமானவையாக இருக்கின்றன. இருபது பக்கக் கட்டுரைகள் கூட இருக்கின்றன.வலைப்பூ எழுத்து என்பது அதிகபட்சம் இரண்டு பக்கங்களுக்குள் இருந்தால் மட்டுமே படிக்கப்படும் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளலாம். அப்போது இன்னும் அதிக வாசகர்களை ஈர்க்கமுடியும்.
*
இது என் எதிர்வினைகள், குறிப்புகள் ஆகியவற்றுக்கும் இடமுள்ள இதழ்தான். ஆனால் கண்டிப்பாக அன்றாட குறிப்புகள் மட்டும் அடங்கிய வலைப்பூ அல்ல. இது என் எழுத்துக்களின் தொகுப்பு. வலைப்பூ எழுத்தின் வகைமாதிரிகளை நம்பி எவரும் இதை வாசிக்க வேண்டியதில்லை. எளிய பொழுதுபோக்கு எழுத்துக்களை இதில் தேடவும் வேண்டியதில்லை. தீவிரமாக நேரம் ஒதுக்கி வாசிக்க முனைபவர்கள் மட்டும் வாசித்தால் போதுமானது. எளிதில் வாசிப்பு சலித்துவிடும் வாசகர்களுக்குரிய வலைத்தளங்கள் பல்லாயிரம் உள்ளன. இது அதில் ஒன்று அல்ல.
இந்த வலைத்தளத்துக்கு நான் எவரையும் அழைக்கவோ கட்டணம் அல்லது நிதி வசூலிக்கவோ இல்லை. இதன் வாசக எண்ணிக்கையை தக்கவைத்துக்கொள்ளவும் நான் எதுவும் செய்யப்போவதில்லை. எப்போது இதை விட்டுவிடத்தோன்றுகிறதோ அப்போதே விட்டுவிடுவேன். இதைச் சுமந்துசெல்லப்போவதில்லை.
எழுத்தாளர்களில் இருவகை உண்டு. வாசகர்களுக்காக எழுதுபவர்கள், தன் சுயமான தேடலின்பொருட்டு மட்டுமே எழுதுபவர்கள். நான் இரண்டாவது வகை. எனக்கு சகப்பயணிகள் மட்டும்போதும், ரசிகர்கள் தேவையில்லை. நான் என்ன எழுதுவது, எப்படி எழுதுவது என்பதை எனது தேடல் மட்டுமே தீர்மானிக்கும். ஒருபோதும் வாசகர்களின் தேவைக்காக, விருப்பத்துக்காக நான் எழுதமாட்டேன். ஏராளமானவர்கள் படிக்க வேண்டுமென்பதில்லை. ஆகவே எந்த நிலையிலும் பெரும்பாலார் விரும்பும் எழுத்துக்களையும் கருத்துக்களையும் எழுத முயலமாட்டேன். அதற்கான எதிர்ப்புகளும் வசைகளும் எனக்கு ஒரு பொருட்டே அல்ல.
புகழை இழக்கவும், வெறுப்புக்குள்ளாகவும் தயங்காதவனே நல்ல எழுத்தாளனாக முடியும் என்பதே என் உறுதியான எண்ணமாகும். நான் எப்போதும் அந்த இடத்திலேயே என்னை வைத்துக் கொள்கிறேன். இது அப்படிபப்ட்ட ஒருவனின் வலைத்தளம்.
***************