ஊட்டி சந்திப்பு – 2014 [2]

ஊட்டியில் காலையில் எழுந்திருப்பது என்பது ஒரு கொடுமையான அனுபவம். ஐந்தரைக்கே ஒரு கும்பல் எழுந்து தடால்புடால் செய்துகொண்டிருந்தபோதும் கருப்பையின் வெம்மை நிறைந்திருந்த போர்வைக்குள் இருந்து வெளியே வர மனமில்லாமல் படுத்திருந்தேன். ஆனால் காலை வீணாகிறது என்ற எண்ணம் பாய்ந்தெழச்செய்தது. எழுந்தால் அடுத்த கணமே சுறுசுறுப்பு கைகூடிவிடும். அவ்வனுபவம் ஊட்டி தவிர பிற இடங்களில் நிகழ்வதில்லை. அந்தப்பசுமை, பனி, அவற்றை ஒளிரச்செய்யும் காலையிளவெயில்.

காலையில் நண்பர்களுடன் ஒரு நீண்ட நடை. அருகே உள்ள தேயிலைத்தோட்டத்தைச் சுற்றிக்கொண்டு உச்சிக்குச் சென்று மீண்டோம். பொதுவாக இச்சந்திப்புகளின் உற்சாகமான உரையாடல் நிகழ்வது இங்கேதான். அன்று பரிணாமத்தில் கருணை, அறம் போன்றவை எப்போது உருவாயின என்பதுபற்றி விவாதித்துக்கொண்டிருந்தோம். அவை மனிதன் உருவாக்கிக்கொண்டவையா, தன்னியல்பானவையா என. வியர்வை வழிய திரும்பிவந்து வெந்நீரில் குளித்தபின் காலையுணவு.

நிர்மால்யா

காலை அரங்கு கவிதை. க.மோகனரங்கன் தேர்ந்தெடுத்த 15 கவிதைகள் விவாதிக்கப்பட்டன. தமிழ்க்கவிதை, இந்தியமொழிக்கவிதை, உலகக் கவிதை ஆகிய தலைப்புகளில் கவிதைகளை பிரித்திருந்தார். தமிழ்க்கவிதைகளில் இசை, முகுந்த் நாகராஜன் கவிதைகள் பெரிதும் ரசிக்கப்பட்டன. அக்கவிதைகளில் இருந்த படிமங்கள் இல்லாத நுண்சித்தரிப்பு முறை நவீனக்கவிதையின் அழகியலாக ஆகியிருக்கும் விதத்தை பலரும் சுட்டிக்காட்டினர்.

ராஜமாணிக்கம், மலேசியா யுவராஜன்

இந்தியக்கவிதைகளில் கல்பற்றா நாராயணன் ,முனீர் நியாதீ ஆகியோரின் கவிதைகள் பொதுவாக பாராட்டப்பட்டன. உலகக் கவிதைகளில் பாப்லோ நெரூதா, எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் அனைவருக்கும் பிடித்திருந்தன. பொதுவாக அனைத்துக்கவிதைகளையும் பற்றி விரிவான விவாதம் நிகழ்ந்தது. கவிதைகளை அவ்வாறு பலகோணங்களில் வாசிக்கையில் அவை முழு அர்த்த விரிவையும் வெளிக்காட்டுவது கூட்டுவாசிப்பின் முக்கியமான நன்மை.

ஆனால் உலகக் கவிதை மொழியாக்கங்கள், பெரும்பாலும் கவிஞர்களாலேயே செய்யப்பட்டபோதிலும்கூட, செயற்கையான ஒரு மொழியில் அமைந்திருந்தன. ஆங்கிலமொழியின் சொற்றொடர் அமைப்பை தழுவி அமைந்த மொழி கவிதைமொழியாக அமையாமலேயே நின்றுவிட்டிருந்தது. டி.எஸ். எலியட், பாப்லோ நெரூதா ஆகியோரின் கவிதைகளின் மூலத்தை அங்கேயே செல்பேசியில் சோதனையிட்டபோது அவை சரியாக மொழியாக்கம் செய்யப்படவில்லை என்பதை உணரமுடிந்தது.

விஜயராகவன்

காலையிலேயே கண்மணி குணசேகரன் வந்தார். தேநீர் இடைவேளைக்குப்பின் அவருடனான ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. கண்மணி அவருக்கே உரிய கணீர் குரலில் தன் கதையுலகம், அதற்குப்பின்னணியாக உள்ள தன்னுடைய கிராமம், தன் எழுதுமுறை ஆகியவற்றைப்பற்றிப் பேசினார். நடுநாட்டுச் சொல்லகராதிக்குப்பின் இப்போது நாட்டார் பாடல்களை சேகரிப்பதாகவும் நான்கு நாவல்களுக்கான திட்டம் உள்ளது என்றும் சொன்னார். அரங்கை சிரிப்பிலும் வியப்பிலும் ஆழ்த்திய எழுத்தாளனின் ஆளுமை அங்கே வெளிப்பட்டது.

மதிய உணவுக்குப்பின் மீண்டும் கம்பராமாயண அரங்கு. நாஞ்சில்நாடன் கிட்கிந்தா காண்டத்தின் அடுத்த பகுதியை விரிவாக நடத்தினார். வாலியை ராமன் கொல்லும் தருணத்தின் உணர்ச்சிகரம், வாலியின் ஆளுமையும் ராமனின் அறச்சங்கடமும் வெளிப்படும் தருணங்கள் என கவிதை வாசிப்பு நீண்டது. பல கவிதைகள் நேரடியான உணர்வெழுச்சியுடனும் ஒலியமைதியுடனும் இருந்தமையால் விவாதம் கூட இல்லாமல் அக்கவிதைகளை அறியமுடிந்தது.

க.மோகனரங்கன்

நவீனக்கவிதைகளையும் மரபான கவிதைகளையும் ஒரே அமர்வில் வாசிப்பதென்பது ஒரு தனி அனுபவம். கவிதைரசனையின் இரு எல்லைகளையும் எளிதில் உணர்ந்துவிடலாம். நயம்பட உரைத்தல் என்னும் தன்மை பழைய கவிதைகளுக்கு இருக்கையில் புதியகவிதைகள் குறிப்புணர்த்தலையே அடிப்படை இயல்பாகக் கொண்டுள்ளன.

மாலைநடை மீண்டும். இம்முறை அருகே உள்ள குன்றுக்கு மேல் ஏறலாமென திட்டமிட்டோம். அங்கே ஒரு பார்வைக்கோபுரம் உண்டு. செல்லும் வழி யூகலிப்டஸ் மரங்கள் அடர்ந்த அழகிய காட்டுப்பாதை. அனுமதிபெற்றுச் செல்லவேண்டிய இடம். குளிரத்தொடங்கியிருந்தாலும் அந்த நடை உற்சாகமானதாக இருந்தது. இருட்டிவரும் மலைப்பாதை என்பது அழகிய காட்சியாக நெடுநாள் நினைவில் நீடிப்பது.

டீக்கடையில்

திரும்பி வரும்போது ஏழுமணிதான் ஆகியிருந்தது. ஆனாலும் நல்ல இருட்டு. செல்பேசி வெளிச்சத்தில்தான் தட்டுத்தடுமாறி வந்துசேர்ந்தோம். முதல் அமர்வு மொழியாக்கம். நிர்மால்யா என்னும் மணி அவரது மொழியாக்க அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். மலையாளத்தில் இருந்து ஒன்பது நூல்களை அவர் மொழியாக்கம் செய்திருக்கிறார். கடைசியாக சிவப்புசின்னங்கள் என்ற எம்.சுகுமாரனின் கதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது.

கண்மணி குணசேகரன்

நிர்மால்யா தன் மொழியாக்கங்களில் மாதவிக்குட்டி [கமலாதாஸ்] கதைகள், கோவிலனின் தட்டகம் என்னும் நாவல், தலித் போராளி அய்யன்காளியின் வாழ்க்கை ஆகியநூல்கள் தன்னைப்பெரிதும் கவர்ந்தவை என்று சொன்னார். குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகர்களை மொழியாக்கம்செய்வது தனக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகக் குறிப்பிட்டார்

தேவதேவன்

மொழியாக்கத்தின் சவால்கள் பெரும்பாலும் மூலத்தில் உள்ள பண்பாட்டுக்கூறுகளை அடையாளம் காண்பதிலும், மூலமொழியின் மொழிவிளையாட்டுகளை தமிழாக்கம்செய்வதிலும்தான் உள்ளன என்று சொன்ன மணி அவரது மொழியாக்கங்களுக்கு மூலமொழி எழுத்தாளர்களும் தமிழின் நண்பர்களும் பேருதவியாக இருப்பதைச் சொன்னார்.

அ.கா.பெருமாளுடன் ஒரு நடை

ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்வதைப்பற்றி விஜயராகவன் பேசினார். ஆங்கில மொழியாக்கங்களின் சிக்கல் என்பது அந்த மொழிபெயர்ப்பு மூலமொழியின் மொழியமைப்பை அப்படியே நகலெடுப்பதுதான் என்றார். டி.எஸ்.சொக்கலிங்கத்தின் போரும் அமைதியும் மொழியாக்கம் தனக்கு முக்கியமானதாகப் பட்டது என்று சொன்ன விஜயராகவன் அவரது மொழியாக்கத்தில் சமீபத்தில் வெளியான ரேமண்ட் கார்வர் சிறுகதைகளைப்பற்றியும் பேசினார்.

அருணா வெங்கடாசலம் பேசுகிறார்

அருணா வெங்கடாசலம் முந்தைய அமர்வில் முன்வைக்கவிருந்த கதை தாமதமாக அனைவருக்கும் கிடைத்ததனால் அதிகம்பேர் வாசித்திருக்கவில்லை. ஆகவே இந்த அமர்வில் அவற்றைப்பற்றிப்பேசினோம். என்.எஸ்.மாதவனின் அம்மா என்ற சிறுகதையைப்பற்றி அருணா பேசினார்.

அக்கதையில் மாபெரும் தியாகம் என்பது எப்படி சமகாலத்தில் ஒரு வெறும் கேளிக்கைச்செய்தியாக மாறுகிறது என்பது ஒரு கோணம். எந்த வரலாறாக இருந்தாலும் அதை அடுத்த தலைமுறை எப்படி எழுதிக்கொள்கிறது என்பதே வரலாற்றில் எஞ்சுகிறது என்பது இன்னொரு கோணம். மாதவனின் கதை மிக அழுத்தமான உணர்வுகளையும் சங்கடமான வினாக்களையும் எழுப்பக்கூடியதாக இருந்தது.

மொழியாக்கம் பற்றியும் கதை பற்றியும் தொடர்ந்து விவாதங்கள் நிகழ்ந்தன. பெரும்பாலான சமகால மொழியாக்கங்கள் மோசமான நடையில் படிக்கமுடியாதவையாக உள்ளன என்பதே பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருந்தது. புகழ்மிக்க மொழியாக்க நிபுணர்களின் காலம் எழுபதுகளிலேயே முடிந்துவிட இன்றைய மொழியாக்கங்கள் பெரும்பாலும் திறனற்ற சிக்கலான மொழியில் உள்ளன என்று சொல்லப்பட்டது.

அ.கா.பெருமாள், நாஞ்சில், செல்வேந்திரன்

ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்த க.நா.சு, டி.எஸ்.சொக்கலிங்கம், க.சந்தானம் இந்திய மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்த தி.ஜ.ர, த.நா.குமாரசாமி. த.நா.சேனாபதி, சு.கிருஷ்ணமூர்த்தி, துளசி ஜெயராமன் போன்றவர்கள் நினைவுகூரப்பட்டனர். சமகால மொழியாக்கங்களில் சி.மோகன் மொழியாக்கம் செய்த ஓநாய்குலச்சின்னம், சுகுமாரன் மொழிபெயர்த்த நூறுவருடத்தனிமை ஆகியவை முக்கியமான நூல்கள் என்று சொன்னார்கள்.

சமையலறையில் விஜயராகவன்

இவ்வரங்குகளில் பேசப்பட்ட பல நூல்கள் வம்சி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டவை என்பதை கவனித்தேன். ஈரோடு கிருஷ்ணன், அருணா வெங்கடாசலம், சிறில் அலெக்ஸ் போன்றவர்கள் பேசிய கதைகள் வம்சி வெளியிட்ட நூல்களில் உள்ளவை.

சுவாமி பிரம்மானந்தா, சேலம் பிரசாத்

இம்முறையும் மலேசியாவிலிருந்து நண்பர்கள் வந்திருந்தனர். கோ.புண்ணியவான், சு.யுவராஜன், சுவாமி பிரம்மானந்தா ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் வருவது கடைசி பத்துநாட்களுக்குள் உறுதிப்படுத்தப்பட்டமையால் அவர்கள் கட்டுரைகள் மூலம் பங்களிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் அவர்களின் வருகை மனநிறைவளித்தது.

இரவு அரட்டை

இரண்டாம்நாள் இரவு ஒருமணி வரை பேசிக்கொண்டிருந்தோம். பொதுவாக பேச்சை ஒரு புள்ளியில் நிறுத்திவிட்டு தூங்கப்போவதே கடினமானதாக உள்ளது. நீண்டு நீண்டு சென்று ஒரு புள்ளியில் சரி என முடித்துக்கொள்ளவேண்டியிருந்தது. என் வரையில் இலக்கிய உரையாடல் எந்நிலையிலும் உதவியாக இருக்கையில் சமூக அரசியல் விஷயங்கள் பற்றிய பேச்சுக்களுக்கு எந்த வகையான நிகரபயனும் இல்லை என்பதே அனுபவமாக உள்ளது.

மறுநாள் காலை இலக்கியக்கோட்பாடுகள் பற்றிய அரங்கு. மூன்று தனித்தனி விவாதங்களாக இந்த அரங்கை பகுத்துக்கொண்டிருந்தோம். இலக்கிய அழகியல் முறைகளான யதார்த்தவாதம், இயல்புவாதம், மிகைகற்பனை, மாயயதார்த்தவாதம் ஆகியவற்றைப்பற்றி ஓர் அரங்கு. இலக்கிய உத்திகளான உவமை, உருவகம், படிமம் போன்றவற்றைப் பற்றி இன்னொரு அரங்கு. இலக்கியக் காலகட்டங்களான செவ்வியல், கற்பானாவாதகாலகட்டம், நவீனத்துவம், பின் நவீனத்துவம் பற்றி இன்னொரு அரங்கு. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவுகோல்களின்படி வெவ்வேறு அளவில் செய்யப்படும் பிரிவினைகள். இவற்றை ஒன்றுடன் ஒன்று கலந்துகொள்ளக்கூடாது என முதன்மையாக வலியுறுத்தியபின் அரங்கு தொடங்கியது.

ராஜகோபாலன்

முதல்கட்டுரை ஜெயகாந்த் ராஜு. அவர் இக்கட்டுரைக்காகவே அபுதாபியில் இருந்து வந்திருந்தார். யதார்த்தவாதத்துக்கு உதாரணமாக மோகமுள்ளையும் மாய யதார்த்தவாதத்துக்கு இரா.முருகனின் பானை என்ற கதையையும் மிகைபுனைவுக்கு உதாரணமாக புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ நாஞ்சில்நாடனின் ‘சங்கிலி பூதத்தான்’, ஜெயமோகனின் ‘மாடன் மோட்சம்’ ஆகிய கதைகளை முன்வைத்து ஆழமான உரை ஒன்றை அளித்தார். அதன்பின் அக்கதைகள் பற்றிய விரிவான விவாதம் நிகழ்ந்தது. மாய யதார்த்தத்துக்கு மிகச்சிறந்த உதாரணம் கிருஷ்ணன்நம்பியின் ‘தங்க ஒரு’ என்னும் கதையே என சுட்டப்பட்டது.

கிருஷ்ணப்பிரபா

இரண்டாவது கட்டுரையாக ராஜகோபாலன் இலக்கிய உத்திகளைப்பற்றிப் பேசினார். உவமை, உருவகம், தற்குறிப்பேற்றம் ஆகியவற்றை பழைய இலக்கியத்தின் அணிகளாகவும் இன்றும் வெவ்வேறு வகையில் நீடிப்பவையாகவும் சொன்னார். படிமம் [image] கவியுருவம [metaphor], குறிப்புருவகம் [allegory] ஆகியவை நவீன இலக்கியத்தில் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன என்பதை உதாரணங்களுடன் விளக்கினார். விரிவான விவாதத்தில் வெவ்வேறு கதைகள் சுட்டிக்காட்டப்பட்டு விவாதிக்கப்பட்டன.

கடலூர் சீனு

மூன்றாவதாக கிருஷ்ணபிரபா இலக்கிய காலகட்டங்கள்பற்றிப் பேசினார். நவீனத்துவம் பின்நவீனத்துவம் போன்றவை ஐரோப்பியச் சூழலில் உருவாகிவந்த பரிணாமத்தை அவர் விளக்கினார். அதன்பின் உதாரணங்களுடன் இக்காலகட்டங்களின் பல்வேறு நிலைகளும் இயல்புகளும் விவாதிக்கப்பட்டன. தொடர்ந்து கடலூர் சீனு தமிழிலக்கிய மரபில் இக்காலகட்டப்பிரிவினைகளை எப்படிச் செய்யலாமென்று சுருக்கமாகவும் செறிவாகவும் பேசினார்.

ஜெயகாந்த் ராஜு

மதிய உணவுடன் அரங்கு முடிவடையும்போது மாலை மூன்றுமணி ஆகிவிட்டிருந்தது. நானும் குடும்பத்தினரும் மாலை ஐந்துமணிக்குக் கிளம்பினோம். கோவை வந்து நாகர்கோயில். காலையில் நான்கரை மணிக்கு உக்கிரமான முதுகுவலியுடன் திரும்பிவந்து சேர்ந்தேன். ஆனால் திரும்பி வரும்போது அரைத்தூக்கக் கனவில் அடுத்த வெண்முரசு வரிசை நாவலுக்கான ஒரு முன்வடிவம் மனதில் உருவாகிவந்தது.

[முழுப்படங்களும் ]

[படங்கள் அரவிந்த் காந்தி ]

முந்தைய கட்டுரைகனவுநிலம்
அடுத்த கட்டுரைதமிழ் இலக்கியக் காலகட்டங்கள்- கடலூர் சீனு