சாரு, இளையராஜா, இசை

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

சாரு நிவேதிதா இசையைப்பற்றி எழுதுவதை நான் அவ்வப்போது வாசிப்பதுண்டு. எனக்கு இசைஞானம் மிகவும் குறைவு. இசையை இளைப்பாறலாக மட்டுமே கேட்பவன். சொல்லப்பொனால் பெரும்பாலும் எல்லா பாட்டுமே நன்றாகத்தானே இருக்கிறது என்ற எளிமையான நம்பிக்கை கொண்டவன்.

ஆனாலும் சாரு நிவேதிதாவுக்கு இசையைக்குறித்த பரபரப்புகள் மட்டுமே உள்ளன , குறிப்பிடத்தக்க ரசனை இல்லை என்ற எண்ணமே எனக்கிருக்கிறது. உண்மையில் இசை தெரிந்தவர்கள் அவரை கண்டுகொள்வதில்லை என்பதை கவனித்திருக்கிறேன்..

குறைந்தபட்சம் சினிமாவில் இசை எப்படி அமைக்கப்படுகிறது என்பதைப்பற்றிய அவரது புரிதல் எந்த அளவுக்கு குறைப்பட்டது என்பதை நான் அறிவேன். சினிமா இசையைப் பற்றிப்பேசுபவர்கள் ஓரளவு இதை அறிந்திருப்பார்கள். இசையமைப்பு ஒலிநிபுணர்களால் படத்துக்காக எப்படியெல்லாம் மாற்றியமைக்கப்படுகிறதென்பதைப் பற்றிய பிரக்ஞை சாருவிடம் இருக்கவில்லை.

உதாரணமாக ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் அவர் இசைக்காக பாராட்டிய விஷயங்களில் பல ஒலிக்கோப்பு நிபுணருக்குச் செல்ல வேண்டியவை. அதேபோல நான் கடவுள் இசையில் அவர் இளையராஜாவை பழையபாட்டுகளை அப்படியே போட்டிருப்பதற்காக வசைபாடியிருந்தார். அது இளையராஜா செய்யும் பணி அல்ல, அது வசனத்தின் ஒருபகுதியாகவே சினிமாவில் கொள்ளப்படும். அதை ஒலிப்பதிவாளரே செய்வார், இயக்குநர் வழிகாட்டுதலுடன்.

இசையைப்பற்றி மிக நன்றாக அறிந்த, இசையுலகில் வாழ்கிற , சாதனைகள் புரிந்தவர்களிடம் நான் அடிக்கடி பேசுவதுண்டு. இலக்கியம் போலவே இசையிலும் ரசனையின் முதல்படி என்பது ரகம்பிரிப்பதே. அழகியலமைப்பு பண்பாட்டுப்பின்புலம் ஆகியவற்றின் அடிப்படையில். அரைமணிநேரம் ஒரே ஆலாபனையை மீட்டும் அமீர்கானையும் துள்ளித்ததும்பும் மைக்கேல் ஜாக்ஸனையும் அவர்கள் ஒப்பிடுவதில்லை.

மலேசிய நண்பர் அகிலன் பதினைந்து வருடங்களாக இசைத்துறையில் இருக்கிறார்.  இளையராஜாவின் இசையையும் ரஹ்மானின் இசையையும் குறித்து அவர் எழுதிய இந்த கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. அதன் மொழிநடை இன்னும் தெளிவானதாக இருந்திருக்கலாம், பத்திகள் பிரிக்கப்பட்டிருக்கலாம் என்றாலும் .

ஜெ

http://meedpu.blogspot.com/2009/12/blog-post_08.html

முந்தைய கட்டுரை‘நலம்’ சிலவிவாதங்கள்
அடுத்த கட்டுரைகொற்கை: ஆர். என். ஜோ டி குரூஸ்