ஊட்டி சந்திப்பு – 2014

மேமாதம் ஊட்டியில் நாங்கள் சந்திப்புகளை வைப்பதில்லை. முதன்மையான காரணம் ஊட்டியில் எல்லாமே அப்போது விலை உயர்வு என்பது ஒன்று. ஊட்டிக்குச்சென்றுவரும் பயணம் நெரிசல்மிக்கதாக ஆகிவிடும் என்பது இன்னொன்று. மேலும் அப்போது ஊட்டி குருகுலத்தில் வழக்கமான நடராஜகுரு, நித்யசைதன்ய யதி ஆகியோரின் குருபூஜை நிகழ்ச்சிகள் நடக்கும். ஆனால் இம்முறை வேறுவழியே இல்லாமல் மேமாதமே நடத்தும்படி ஆகிவிட்டது. நல்லவேளையாக சிலமழைகள் பெய்து அங்கே வழக்கமாக எழும் குடிநீர்ப்பிரச்சினை எழவில்லை.

நித்யா சமாதி மண்டபம்

ஆனால் தேர்தல் முடிவுகள் அன்றுதான் வெளியாகுமென்பது ஒரு முக்கியமான இக்கட்டாக இருந்தது. வருவதாகச் சொல்லியிருந்த பலர் தேதிகளை மாற்றமுடியுமா என்று கேட்டனர். மாற்றுவதில் மேலும் சிக்கல்கள். இந்தத்தேதிகள்தான் குருகுல நிகழ்ச்சிகள் இல்லாமலிருந்தன. மேலும் தேர்தல் என்பது எழுத்தாளனுக்கோ இலக்கியவாசகனுக்கோ ஒரு பெரியவிஷயமாக இருக்கத்தேவையில்லை என்பதே என் எண்ணமாகவும் இருந்தது. ஆகவே தேர்தலரசியலில் ஈடுபாடில்லாதவர்கள் வந்தால் போதுமென்று முடிவுசெய்தோம்.

நாராயணகுரு

நான் முன்பதிவு செய்திருந்த பேருந்து மிகத்தாமதமாகவே கோவை செல்லும் எனத் தெரிந்தது. பத்துமணிக்குள் ஊட்டிசென்று சேரமுடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. எனவே வேறு பேருந்து முன்பதிவுக்காக முயன்றேன். அது கிடைக்கவில்லை. ஆகவே என் காரிலேயே அ.கா.பெருமாள் அவர்களையும் அருண்மொழியையும், சைதன்யாவையும் அழைத்துக்கொண்டு கோவை வரை சென்றேன். கோவையில் அரங்கசாமி வீட்டுக்கு பின்னிரவு ஒருமணிக்கு சென்று சேர்ந்தோம். ஆறுமணிக்கு அங்கிருந்து காரிலேயே கிளம்பி ஊட்டிக்கு ஒன்பது மணிக்கு சென்று சேர்ந்தோம்.

முனி நாராயண பிரசாத் தொடக்கவுரை

காரில் நீண்டபயணம், மீண்டும் மீண்டும் தவிர்க்கமுடியாதபடி ஆகிறது. நல்ல சாலை நல்ல கார் என்றாலும் முதுகுவலி. நடுவே சிலமணிநேரம் படுத்ததனால் குறைந்து ஊட்டியில் மீண்டும் அதிகரித்தது. ஊட்டிமுழுக்க முதுகுவலி நீடித்தது. அத்துடன் மழைப்பாடலை முடித்துவிட்டு அடுத்ததை இன்னும் தொடங்காத ஒரு தத்தளிப்பு. மொத்தத்தில் நான் வழக்கமான தீவிரத்துடன் இம்முறை நிகழ்ச்சிகளில் ஈடுபடவில்லை.

சாம்ராஜ்

ஆனால் நண்பர்கள் மிக உற்சாகமாக இருந்தமையால் அவர்கள் பொறுப்பில் மிகச்சிறப்பாகவே நிகழ்ச்சி நடந்தது. ராமச்சந்திர ஷர்மா, நிர்மால்யா [மணி], விஜயராகவன், சென்னை சீனிவாசன் ஆகியோர் முதல்முயற்சி எடுத்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தனர். உணவு, தங்குமிடம், தொடர்பு என அனைத்துமே மிகச்சிறப்பாக இருந்தன. இத்தனை குறைவான செலவில் இத்தனை குறைவான ஆள்பலத்துடன் இப்படி ஒரு மூன்றுநாள் நிகழ்ச்சியை இன்று தமிழகத்தில் எவருமே நடத்துவதில்லை என நினைக்கிறேன்.

ராம்

சிறிய அளவில் இது நிகழ்ந்த ஆரம்பநாட்களில் 2006 வரை நிகழ்ச்சிக்கான மொத்தச்செலவையும் அருண்மொழிதான் ஏற்றுக்கொண்டிருந்தாள். அவளுடைய வருடாந்தர போனஸ் பணம்தான் செலவிடப்பட்டு வந்தது. அந்நாட்களில் 30 பேர் அதிகம் பங்கெடுப்பார்கள். இப்போது அது இருமடங்கை தாண்டிவிட்டிருக்கிறது. இம்முறை 63 பேர். ஆனால் செலவு பதினைந்துமடங்காக ஆகிவிட்டிருக்கிறது. அதிகம்பேர் வர வர செலவின் மடங்குகள் பெருகுகின்றன.

இம்முறை நிகழ்ச்சிகளில் வழக்கமான நிபந்தனைகளுடன் அரங்குக்கு வெளியிலும் அரசியல் விவாதிக்கப்படக்கூடாது என்பதும் ஒன்றாக இருந்தது. ஏனென்றால் பல்வேறு அரசியல்கொண்டவர்கள் வரக்கூடிய இடம். ரசாபாசமாக ஏதும் ஆகிவிடக்கூடாது என்ற கவலை. ஆனால் ஒருநாள் தாண்டிய பின் அப்படி ஒன்றும் ஆகாது எனத் தெரிந்தது. பலர் தனித்தனிக்குழுக்களாக அரசியல் பேசிக்கொண்டிருந்தனர்

கிருஷ்ணப்பிரபா

ஈரோட்டிலிருந்து விஜயராகவன், கிருஷ்ணன், சேலம் பிரசாத், கடலூர் சீனு, சென்னை சீனிவாசன் போன்ற நண்பர்கள் முந்தையநாளே சென்று ஊட்டி குருகுலத்தில் தங்கி அங்கே ஏற்பாடுகளை செய்திருந்தனர். நான் செல்லும்போதே பாதிப்பேருக்கு மேல் வந்திருந்தார்கள். காலையுணவு பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தது. நண்பர்களை தொடர்ந்து சந்தித்துக்கொண்டே இருக்கிறேன் என்றாலும் பலரை இம்மாதிரி வருடாந்தரக் கூட்டங்களில் மட்டுமே சந்திப்பது என்றாகிவிட்டிருக்கிறது.

நாஞ்சில்நாடன்

முதல் அமர்வை காலை பதினொரு மணிக்குத் தொடங்கினோம். வேறு நிகழ்ச்சிக்காக வந்து தங்கியிருந்த நாராயணகுருகுலங்களின் தலைவரான முனி நாராயண பிரசாத் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். அடிப்படையில் பொறியியலாளரான நாராயணபிரசாத் நடராஜகுருவின் மாணவர். ஜான் ஸ்பியர்ஸ், மங்களானந்த சுவாமி, சிதம்பர தீர்த்த சுவாமி, நித்யசைதன்ய யதி, குரு ஃப்ரெடி, முனி நாராயண பிரசாத், வினய சைதன்யா, சுவாமி வியாசபிரசாத் என நடராஜகுருவின் நேரடிச்சீடர்களில் முக்கியமானவர்களின் வரிசையைச் சொல்ல முடியும்.

சீனிவாசன்

முனி நாராயண பிரசாத் அவைதிக இந்து சிந்தனைகளில் சிறப்பு ஆராய்ச்சி செய்த அறிஞர். ஆறுதரிசனங்கள், பௌத்தம், சமணம், வேதாந்தம் பற்றி நூறுக்குமேல் நூல்களை எழுதியிருக்கிறார். சுருக்கமாக இருபதுநிமிடம் ஆங்கிலத்தில் பேசி நிகழ்ச்சியை ஆரம்பித்துவைத்தார். கலை என்றால் என்ன என்று பிளேட்டோவும் அரிஸ்டாடிலும் செய்த வரையறையில் இருந்து தொடங்கி அவ்வரையறை ஐரோப்பியசிந்தனையில் எப்படியெல்லாம் மாறுதலடைந்தது என்று விவரித்தார்.

எங்கள் நிகழ்ச்சிகளை முன்பு வினய சைதன்யா, சுவாமி வியாச பிரசாத் ஆகியோர் தொடங்கிவைத்திருக்கிறார்கள். நாராயணகுருகுலத்தின் முக்கியமான அனைத்துத் துறவிகளும் நவீன இலக்கியத்திலும் ஆர்வம்கொண்ட நல்ல வாசகர்கள். முனி நாராயண பிரசாத் இலங்கை பேராதனை பல்கலையில் அவைதிக தத்துவ மரபுகளை கற்பிப்பவராகவும் இலக்கிய ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். நவீன இலக்கிய அழகியல் குறித்து நிறைய எழுதியவர்.

அரங்கசாமி

கலை இயற்கையின் நகல் என முதலில் சொல்லப்பட்டது. இல்லை அது நகலின் நகல் என அவ்வரையறை விரிவாக்கம் செய்யப்பட்டது. இயற்கையில் உள்ள அழகுகளை மனிதன் தானும் செய்து பார்ப்பதே கலை என்னும் வரையறையை மறுத்து, இயற்கையில் உள்ள அந்த அழகுகளைக் கொண்டு இயற்கையின் சாராம்சத்தை அறியமுயல்வதாக கலை உருவாகி வந்தது என்று விளக்கப்பட்டது.

சிறில் அலெக்ஸ்

இந்தியமரபு, குறிப்பாக வேதாந்த மரபு மனிதனின் படைப்பூக்கம் என்பது வெளியே இருந்து பெற்றுக்கொள்வதல்ல என்று சொல்கிறது. பிரகிருதி என்னும் சொல்லிலேயே கிருதி என்னும் வேர்ச்சொல் உள்ளது. செயல்படுவது, படைப்பது என்று பொருள். பிரபஞ்சம் படைப்பூக்கம் கொண்டதாக உள்ளது. ஆகவே இயற்கையும் படைப்பூக்கம் கொண்டதாக உள்ளது. படைப்பே அதன் இயல்பு. அதன் ஒரு பகுதியான மனிதமனமும் படைப்புச்செயலை ஓயாதுசெய்துகொண்டிருக்கிறது. படைப்பிலேயே அது தன் இருப்பையும் தன் முழுமையையும் அறிகிறது. ஆகவே அதன் இன்பம் என்பது படைப்புதான். ஆகவே தன்னிச்சையாகவே மனிதன் படைக்கக்கூடியவனாக இருக்கிறான்.

மாலைநடை

கலை என்பது மனிதனுடைய பிரக்ஞை என்று பரிணாமத்தில் உருவாகி வந்ததோ அப்போதே இயல்பாக உருவாகிவந்தது. அவனிலிருந்து பிரிக்கமுடியாதது. பின்னர் மெதுவாக அவன் அந்தப்படைப்பூக்கத்தை முறைப்படுத்த, பயில, பகிர்ந்துகொள்ளத் தொடங்கினான். அதன் விளைவாகவே இன்றைய கலைவடிவங்கள் உருவாகி வந்தன. அவற்றில் முதன்மையானவை இசையும் கவிதையும். ‘நான் கவிதை எழுதுபவனல்ல. ஆனால் நல்ல கவிதை வாசகன். வாசிப்பதே படைப்புச்செயல்தான். ஆகவே எனக்கும் கவிதை உள்ளது என்றுதான் சொல்வேன்’ என்றார் முனி நாராயண பிரசாத்.

முதல் அமர்வு நாஞ்சில்நாடனின் கம்பராமாயணம். நான்கு வருடங்களாக தொடர்ந்து வரும் கம்பராமாயண வாசிப்பில் இம்முறை கிட்கிந்தா காண்டம். ராமனும் இலக்குவனும் கிட்கிந்தைக்குச் சென்று அனுமனையும் சுக்ரீவனையும் சந்திக்கும் இடத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் வழியாக விரித்துரைத்தார். கவிதைத்தருணங்களை விளக்கங்கள் மூலம், வேறு கவிதைக்கான சுட்டிகள் மூலம் தொட்டு விரிவாக்கியபடியே சென்ற வாசிப்பு.

ராம் ,சாம், ராஜகோபாலன்

ஒருமணிநேர மதிய உணவு இடைவேளைக்குப்பின் சிறுகதை அமர்வு. சாம்ராஜ் ச.தமிழ்ச்செல்வனின் கருப்பசாமியின் அப்பா என்ற சிறுகதையை முன்வைத்துப்பேசினார். தமிழ்ச்செல்வனின் அக்கதை உலகியலின் இறுக்கமான வறண்ட விதிகளுக்குள் சிக்காமல் தன்னை விலக்கிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனை காட்டுகிறது. அவன் தன்னை கோமாளியாகவும் பொறுப்பற்றவனாகவும் வைத்துக்கொள்வதன் வழியாக அந்த விடுதலையை அடைகிறான். அத்தகையவர்களால்தான் இன்னும் இங்கே வாழ்க்கை உயிர்ப்புடன் இருக்கிறது என்றார் சாம்ராஜ்.

கடலூர் சீனு, க மோகனரங்கன், ராம், அ.காபெருமாள்

சிறில் அலெக்ஸ் பவா செல்லதுரையின் ‘சத்ரு’ சிறுகதையைப்பற்றிய தன் கருத்தைப் பகிர்ந்துகொண்டார். அக்கதையின் நாட்டார் தெய்வம் தன் குழந்தைகளுக்காக உணவு யாசிப்பவளாகவும் கனிந்து கண்ணீர் உகுப்பவளாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். நாட்டார் தெய்வங்களில் இருக்கும் உக்கிரமும் தண்டிக்கும் தன்மையும் சமகால அணுகுமுறைகளால் மெல்ல களையப்படுகின்றனவா என்று அவர் கேள்வி எழுப்பினார். நாட்டார்கதைகளைக்கொண்டே பின்னப்பட்டிருக்கும் அக்கதை தனக்கு கனவுநிகர்த்த ஒரு அனுபவத்தை அளித்தது என்றார்.

செல்வபாரதி

சேலம் பிரசாத் ஜெயமோகன் எழுதிய வெறும்முள் என்னும் கதையைப்பற்றி பேசினார். அக்கதை அறிவின், அகங்காரத்தின் மூட்டையை விட்டுவிட்டு கிறிஸ்துவை நோக்கி ஓடமுடிந்த ஐசக்குக்கும் அப்படி ஓடமுடியாத பிறருக்குமான இடைவெளியைப்பற்றியது என்றார். அறிவு, அழகு, செல்வம் என வெவ்வேறு அகங்காரங்களால் அவர்கள் கட்டுண்டிருக்கிறார்கள். இன்னொரு கோணத்தில் பழமையின் மூட்டையைச் சுமந்துகொண்டு கிறிஸ்துவிடம் ஓடிச்சென்று சேரமுடியாதுபோன யூத சமூகத்தையும் அக்கதை சுட்டிக்காட்டுகிறது என்றார்.

கிருஷ்ணன்

ஈரோடு கிருஷ்ணன் பார் லாகர்கிவிஸ்ட் [ Pär Lagerkvist] எழுதிய அடித்தளம் என்னும் கதையைப்பற்றி பேசினார். அக்கதை நம் ‘கால்களுக்கு’ கீழே வாழும் கால்களில்லாத ஒருவரைப்பற்றிய சித்தரிப்பு. அவர் அடித்தளமொன்றில் வாழ்கிறார். மிகமிகச்சுத்தமான நேர்த்தியான குடியிருப்பு ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அவரது வாழ்க்கை நிறைவுடையதாகவே இருக்கிறது. அவரிடம் ‘நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா’ என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அந்தக்கேள்வியையே இக்கதையின் மையமாக நினைக்கிறேன் என்றார். நாம் பிறரை நம்முடன் ஒப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம். அதைக்கொண்டே நம் மகிழ்ச்சியை மதிப்பிடுகிறோம். அந்த மனநிலையை ஊடுருவும் ஒரு நிகழ்ச்சியே இந்த அடித்தளதரிசனம்.

இக்கருத்துக்கள் மீதான விவாதத்தில் பல கோணங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. பவா செல்லதுரை, ச.தமிழ்ச்செல்வன் கதைகள் பற்றி விரிவான விவாதம் நிகழ்ந்தது. அதன்பின் மாலை இடைவேளை. நானும் நண்பர்களும் அருகே இருக்கும் லவ்டேல் பள்ளி தோட்டத்துக்குச் செல்லும் பாதையில் இறங்கி பள்ளத்தாக்கு வழியாகச் சுற்றிவந்தோம். உற்சாகமான விவாதங்களுடன் ஒரு நடை.

செல்வேந்திரன்

மாலை ஏழரை மணிக்கு அடுத்த அமர்வு. அ.கா.பெருமாள் நாட்டாரியல் பற்றிப் பேசினார். நாட்டாரியல் என்றால் என்ன அது செவ்வியலில் இருந்து எப்படி வேறுபடுகிறது என விவரித்தார். 1987-இல் ஆலன் டன்டிஸ் ஊட்டிக்கு வந்து நடத்திய பயிற்சி முகாம் தமிழகத்தில் நாட்டாரியல் ஒரு முக்கியமான ஆய்வுத்துறையாக எழுந்துவர எப்படி காரணமாக ஆகியது, அதை ஒட்டி பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி எப்படி நாட்டாரியலில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கியது, அதில் அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜெயபதி அடிகளின் பங்களிப்பு ஆகியவற்றை விளக்கினார்.

அதன்பின் காணொளி ஒன்று காட்டப்பட்டது. அதில் தமிழகத்தின் 18 முக்கியமான நாட்டார் கலைகளை 2 நிமிடம் வீதம் காட்டி ஒவ்வொன்றையும் விரிவாக விளக்கினார். சுவாரசியமாகவும் தகவல்செறிவுடனும் அமைந்த அ.கா.பெருமாளின் அரங்கு குரு நித்யா நினைவரங்குகளின் நிகழ்ச்சிகளிலேயே முக்கியமான ஒன்றாக அமைந்தது. இரவு பத்து மணிவரை நிகழ்ச்சி நடந்தது.

‘கவர்னர்’ சீனிவாசன் வெந்நீர் போடுகிறார்

இரவில் வழக்கம்போல ராம் பாடினார். திருமூலநாதன் சேர்ந்துகொண்டார். ஒருமணி வரை பாடியபின் களைப்பினால் தூங்கிவிட்டோம். ஊட்டியில் மேமாதம் இருக்கும் குளிர் குறைவு. ஆனால் அதுவே கொஞ்சம் கஷ்டப்படுத்துவதாகவே இருந்தது. ஆனால் அந்தக்குளிர்தான் சந்திப்பை உற்சாகமாக ஆக்குகிறது என்று தோன்றுகிறது.

சேலம் பிரசாத்

ஊட்டி சந்திப்பு படுக்கைவசதி குறைவானது. பொதுவான நூலகக் கட்டிடத்தில்தான் நாற்பதுபேர் வரை படுத்துக்கொள்ளவேண்டும். 200 கம்பிளிகளை வாடகைக்கு எடுத்திருந்தோம். நாஞ்சில்நாடன் போன்ற எழுத்தாளர்களுக்காக தனி பங்களா ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டது. அறைகள் பெரும்பாலும் பெண்களுக்கு அளிக்கப்பட்டது.

பிரபு

இந்த வகையான தங்குதல் ஒரு பழைய கல்யாணவீட்டை நினைவூட்டியது. இதை பலர் விரும்புவதும் தெரிந்தது. ஏனென்றால் இவ்வாறு கூடத்தில் தங்குவதில் உள்ள உற்சாகமான அரட்டை வேறிடத்தில் இல்லை. ஆனால் வசதிக்குறைவு வசதிக்குறைவே. அதற்காக மன்னிப்புகோரவேண்டியதுதான்.இப்போதைக்கு வேறுவழியும் இல்லை.

[மேலும் ]

[படங்கள் அரவிந்த் காந்தி ]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 86
அடுத்த கட்டுரைஉளி படு கல் – ராஜகோபாலன்