நண்பர்களே !
பள்ளி நாட்களில் நாட்டு நலப்பணித் திட்டத்தில் நான் பங்கேற்பவன். அதன் ஒரு பகுதி “சமூக சேவை”. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் பத்ர தீப விழாவில், கோயிலின் உள்ளே பக்தர்களை வரிசைப்படுத்தும் பணியில் இருந்தேன். மாக்காளையின் முன்பு நெல்லையப்பரின் சன்னதி நுழைவு வாயிலில் 4 மணி நேர பணி . வேடிக்கை பார்க்க கண்முன் இருந்தது காவல் பறையன் மணிக்ரீவனின் சிற்பம் மட்டுமே. பார்த்துக் கொண்டே இருந்த ஒரு நொடியில் மணிக்ரீவன் சட்டென அந்த வித்தியாசத்தை உணர்த்தினான். ஏன் அவனது இரு கால் பாதங்களும் வெவ்வேறு திசைகளில் திரும்பி நிற்கின்றன ? ஒரு காலின் தசைத்திரட்சி ஏன் மறு காலில் அப்படி இல்லை? வெறுமே “சாமி கும்பிட” மட்டுமே அதுவரை கோவிலுக்கு போய் வந்த நான் அதன் பின் சிற்பங்களைப் பார்ப்பதற்காகவே போனேன். மணிக்ரீவன் நிற்பது போல நின்று பார்த்தால்தான் தெரிகிறது, அவன் பாதங்கள் அப்படி வடிக்கப்பட்டதன் ரகசியம்.
அதன்பின் சிற்பங்களைக் குறித்த, ஓவியங்களைக் குறித்த , வரலாறு குறித்த ஒவ்வொரு வாசிப்பும் மீள, மீள அக்கோயிலுக்கு என்னை செலுத்தின. ஒரே ஒரு சிலை கூட ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மர்மத்தை எனக்கு துலக்கியபடியே வந்தது. கூடவே, இன்னும் துலங்காத மற்றுமொரு வசீகர மர்மத்தை சேர்த்தபடியே. எனது வாசிப்பின் எல்லைகளையும் இப்படித்தான் உணர்கிறேன்.
வாசிப்பின் எல்லைகள் விரிய, விரிய அறியத்தக்கவற்றின் பிரும்மாண்டம் ஏறியபடியேதான் போகிறது. இன்னும் சொல்வதென்றால் வாசிப்பின் விஸ்தீரணம் , பிரும்மாண்டத்தின் எல்லைக் கோட்டை நீட்டிக்கும் பணியினை மட்டுமே செய்கிறது. இன்னும் வாசிக்க வேண்டியவற்றின் எதிரே என்னை களிறு முன் கட்டெறும்பாக உணர்கிறேன். இந்த உரை இதுவரை வாசித்தவற்றின் வழியே எனக்கு நானே சொல்லிக் கொள்வதாய் எண்ணி இந்த கவிதை வரிகளை நான் நின்று பேசும் தளமாகக் கொண்டு தொடக்குகிறேன்.
“உளி படு கல்லுக்கே
உரியனவாம் வணக்கங்கள்.
உளிக்கில்லை .
அகத்தில் மறைத்திருக்கும்
சிற்பத்தை உணர்ந்து,
உளியை நகைத்து நிற்கும்
இன்னும் உளி படா
ஓராயிரம் கற்கள்.”
இலக்கிய உத்திகளைப் பற்றிப் பேசுமுன் இலக்கியம் என்பதைக் குறித்த நமது வரையறையை இந்த அரங்குக்கும், இவ்வுரைக்கும் பொதுமைப்படுத்த முயல்கிறேன். இலக்கியம் என்றால் என்ன என்பதற்கான பொருள் விளக்கங்கள் பல காலங்களில் , பல மொழிகளில் எண்ணற்ற எழுத்தாளர்களால் தரப்பட்டு விட்டன. தமிழில் மட்டும் குறைந்தபட்சம் 50 விளக்கங்களாவது உண்டு. ஏன் இத்தனை விளக்கங்கள் ? சற்று உற்று நோக்கத்தான் வேண்டும்.
மனிதன் தனக்கே உரிய காரணம் கண்டுபிடிக்கும் குணத்தால் தன்னை சுற்றி நிகழும் அனைத்தையும் அவதானித்துக்கொண்டே இருக்கிறான். அவனது அவதானிப்பு அவனுக்கு ஒரு புரிதலைத் தருகிறது. அந்தப் புரிதலின் வரையறைக்கு உட்பட்டு, அந்த வரையறையின்படியே நிகழும் நிகழ்வுகளை அறிவியல் என்று வகைப்படுத்திக் கொண்டான். செய்முறைகளின்படி தனது வரையறைகளை நிரூபணம் செய்து கொள்ளும் அறிவியல் அதே அடிப்படையில் இன்றும் நீடிக்கிறது. இன்னும் எளிதாக சொல்வதனால் குறிப்பிட்ட சூழலும், குறிப்பிட்ட காரணிகளும் , குறிப்பிட்ட விளைவுகளையே ஏற்படுத்தும் எனில் அங்கே ஒரு அறிவியல் சமன்பாடு பிறக்கிறது. கணிதமும், வேதியியலும் தக்க உதாரணங்கள்.
ஆனால் சக மாந்தர்கள் வாழ்வை, சூழல்களை, மனித மனதின் உச்சங்களை, ஆழங்களை, ஓட்டங்களை, மாறுபாடுகளை அவதானிக்கும் மனிதன் திகைத்துத்தான் போகிறான். கணந்தோறும் மாறும் மேக வடிவங்கள் போல காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கும் மானுட வாழ்வை, அதன் சாராம்சத்தை அவனால் விளக்கவே முடியவில்லை.என்னதான் மொழிவாகனம் ஏறி கவிதை, கட்டுரை, நாவல், சிறுகதை என வெவ்வேறு வடிவங்களில் சொல்லிச் சென்றாலும் “அந்த ஒன்று” குவித்த கரங்களில் அள்ளிய நீர் போல அவனறியாமலேயே ஒழுகி மறைகிறது. “அந்த ஒன்றை” உள்ளங்கையில் அள்ளிக் காட்டத் துடிக்கும் ஆவேசமே இன்றுவரை எண்ணற்ற படைப்புகளை நமக்குத் தந்துள்ளது .
இலக்கியம் என்னதான் செய்ய முயல்கிறது? அறிவியலின் நிரூபண வழிமுறைகள் செல்லுபடியாகாத இடம் இது என்பதால் இலக்கியம் வேறொன்றை நமக்குத் தருகிறது. உண்மையை நமக்கு விளக்க முயல்வதில்லை இலக்கியம். மாறாக நாமே உணரும்படியான அனுபவத்தை நம்மில் நிகழ்த்த முயல்கிறது. அந்த உணர்வு அனுபவங்கள் நிகழும் கணங்களில் வாசிப்பவன் சட்டென தன்னில் ஒரு வெளிச்சம் படரக் காண்கிறான். அந்த வெளிச்சத்தை விவரிக்க முயலுமிடத்தே நான் தத்துவத்திற்கு சென்று சேர்கிறோம். ஆனால் வெளிச்சத்தை மட்டும் வீசி வாசகனுக்கு அகத்திறப்பினை உருவாக்கும் படைப்பு அவனுக்கு வாழ்நாள் முழுவதற்குமான அனுபவம் ஒன்றைத் தருகிறது. அந்த அனுபவ கணம் தரும் பரவசம்தான் வாசகனை, மீண்டும், மீண்டும் வாசிக்கத் தூண்டிக் கொண்டே இருக்கிறது.
தகவல்களை அறிந்து கொள்ள படிப்பவரிடமிருந்து , வாசகன் என்பவன் வேறுபடும் இடமே இதுதான். ஒரு இலக்கிய படைப்பு தன்னில் நிகழ்த்தும் மாயத்தை ருசிக்க முடிந்த வாசகன் “அந்த ஒன்றை” உணர்ந்து விடுகிறான். எத்தனை வார்த்தைகளாலும் விளக்க முடியாத நிலவின் ஒளியை, மின்சாரமற்ற முழு நிலவு நாள் இரவின் ஒரு நிமிடம் உணர்த்தி விடுவது போல. இந்த அனுபவ கணத்தை வாசகனில் நிகழ்த்தத்தான் இலக்கியம் எவ்வளவு பிரயாசை கொள்கிறது? இதுநாள்வரை எத்துணை வடிவங்களை,வகைகளை, கூறுமுறைகளை , மொழியின் சாத்தியங்களை எப்படியெல்லாம் முயன்றபடியே இருக்கிறது? மொழியும், காலமும், தூரமும் அதற்கு ஒரு பொருட்டே இல்லை. இவ்வாறாய் தன்னை வாசகனில் நிகழ்த்த வேண்டி படைப்புகள் செய்யும் முயற்சிகளையே இலக்கிய உத்திகள் என்று புரிந்து கொள்ளலாம். இலக்கியத்தின் நோக்கம் சொல்வதல்ல; காட்டுவதும் அல்ல; உணரச் செய்வதே என்று யோசித்தால் நமது புரிதல் எளிதாகும்.
மொழியின் முதல் சீரார்ந்த எழுத்து வடிவம் கவிதையே என்பது நாம் அறிந்ததே. அதனாலேயே வகுக்கப்பட்ட இலக்கணங்கள் பெருமளவு பா வகைகளை வரையறுக்கவும், விளக்கவும் செய்தன. மொழியின் அழகை மேம்படுத்துவது கவிதையே. மொழியின் புதிய சாத்தியங்களும், தாவல்களும் நிகழ்வது கவிதையில்தான். தமிழில் அணி இலக்கணம் மொழியின் இந்த அழகியலை வரையறுத்து விளக்கவே உருவானது. அணி என்பது அழகினை நவிற்சி செய்யும் பொன்னகை எனக் கொண்டால் கவிதையின் அணிகள் மொழிக்கு செய்வதென்ன என்பது புரியும். பல அணிவகைகள், அதன் உட்பிரிவுகள் பேசப்பட்டிருந்தாலும் படைப்பூக்கத்தின் விரிவினைக் காட்டும் சிலவற்றை மட்டும் நாம் இங்கு பேசுவோம்.
அணிகளின் தாய் என்றே உவமையைச் சொல்லலாம். இன்று நாம் அரை மணிக்கூறு பேசினாலும் உவமையன்றி பேசுதல் இயலாது. காலத்தால் பழமையானதாகக் கருதப்படும் உபநிஷத்தின் கவிதைகளிலேயே உவமை தனது செல்வாக்கைக் கொண்டிருக்கிறது.
“யதோர்ணாபி: ஸ்ருஜதே க்ருஹ்னதே ச
யதா ப்ருதிவ்யாம் ஓஷதய : ஸம்பவந்தி |
யதா ஸத: புருஷாத் கேச லோமானி
ததா க்ஷராத் சம்பவதீஹ விச்வம் || “
இறைவனிடமிருந்து படைப்பு தோன்றுவதே இயல்பானது என்பதைச் சொல்ல முண்டகோபநிஷத் மூன்று உவமைகளைச் சொல்கிறது. சிலந்தியிடமிருந்து வெளிப்படும் நூல் போல, மண்ணிலிருந்து வெளிப்படும் தாவரங்கள் போல, வாழும் மனிதரிடமிருந்து தோன்றி வளரும் மயிர் போல படைப்பு இறைவனிடமிருந்து வெளிப்படுகிறது . எவ்வளவு இயல்பான, செறிவான உவமைகள்.
ஓங்காரத்தை உச்சரிக்கும் விதத்தை பேச வரும் சாண்டில்ய உபநிஷத் அதற்கு சொல்லும் உவமை ,
“தைலதாராம் இவாச்சின்னம் தீர்க்க கண்டா நினாதவத்||” – எண்ணைய் ஒழுக்கு போல இடைவிடாமலும்,மணியோசை போல தீர்க்கமாகவும் என்கிறது.
இன்று வரை பல முறை பேசப்பட்ட ” நதிகள் பல ஒரே கடலில் சென்று சேரும் ” உவமையையும் முண்டகோபநிஷத்தே முதலில் பேசியிருக்கிறது.
“யதா நத்ய : ச்யந்தமானா: சமுத்ரே (அ )ஸ்தம் கச்சந்தி “
தமிழ் இலக்கியங்களில் காலத்தால் பழமை கொண்டது என்று சங்க காலத்திலிருந்து தொடக்கினால் புறமும், அகமும் உவமைகளின் குவியலாகத்தான் இருக்கின்றன. எழினியைப் பாடிய ஔவையார் சொல்லும் உவமை ஒன்று இன்று வரை பொருந்தி வருவது வியப்புக்குரியது.
“கீழ்மரத்துயாத்த சேம அச்சு அன்ன” –
பாரம் காரணமாய் பயணத்தின் இடையே வண்டியின் அச்சு உடைந்தால் உடனே பொருத்த மாற்று அச்சு (சேம அச்சு) எடுத்து செல்வது போல என்று எழினியை உவமிக்கிறார். இன்றைய “ஸ்டெப்னி” வரை பொருள் கொள்ளத்தக்க உவமை என்றாலும் , உருவகப்படுத்தப்பட்ட விதத்தில் “ஸ்டெப்னி” யின் அர்த்தம் வேறோன்றாகி நிற்கிறது. நன்றி நவில வேண்டியது நமது திரைப்பட வசனகர்த்தாக்களுக்கே.
சங்கப் புலவர்களில் பெண் புலவர்களின் உவமைதான் எவ்வளவு விரிவும், ஆழமும் உடையதாக இருக்கிறது? மகன் பெருமை பேசும் விதத்தில் தன் வயிற்றினை காட்டும் தாய் சொல்கிறாள். ” புலி சேர்ந்து போகிய கல் அளை போல” . (கல் அளை – குகை)
இன்னும் தரப்படா பரிசில் தவறாது வந்து சேரும் என்பதை சொல்ல அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடிய ஔவை சொல்கிறாள்.
“யானை தன கோட்டிடை வைத்த கவளம் போல” – (கோட்டிடை – தந்தங்களின் மேல் குறுக்குவாட்டில்)
தனக்கான பரிசு தப்பாமல் வரும் என்பதில் எவ்வளவு நம்பிக்கை ஔவைக்கு.
தன் வாழ்வை கணவனுடன் இணைத்துக் கொண்டுவிட்ட பெண் தனது நிலையை சொல்கிறாள் – “அச்சுடை சாகாட்டு ஆரம் பொருந்திய சிறுவெண் பல்லி போல “- சக்கரத்தின் ஆரங்கள் இணையும் பகுதியில் (குடம்) தங்கிய பல்லி போல.
அறியாமை கொண்ட அரசனிடம் உள்ள செல்வம் என்னவாகும் என்பதை பிசிராந்தையார் சொல்லும்போது ” யானை புக்க புலம் போல” என்கிறார் . இன்றைக்கும் பத்திரிகைகளில் வயலில் காட்டெருமை பயிர்களை மேய்கிறது. ஆனால் யானை வயல்களில் புகுந்து “பயிர்களை நாசம்” செய்கிறது.
சங்க இலக்கியங்களின் உவமை பெருமளவு விலங்குகள் குறித்து பேசுகிறது. வியப்பாக இன்று வரை நாம் காணத்தக்க பொருட்களையும், நிகழ்வுகளையுமே சங்கப் பாடல்கள் உவமைகளாகக் கொண்டன என்றால் திருக்குறளும், கம்பனின் ராம காதையும் உவமைகளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்கின்றன. ராமன் அம்பு எவ்வளவு அழிவினை உண்டாக்க வல்லது எனச் சொல்ல கம்பன் எடுத்தாளும் உவமை ” பொய்த்தன சான்றவன் குலமெனப் பொருகணை எரிய” – பொய் சான்று சொன்னவன் குலம் அடையும் நிலை என்கிறார் . திருக்குறளோ உவமைகளை ஆழங்களுக்கும், உயரங்களுக்கும் இட்டுச் செல்கிறது. “எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும் ” என்ற எளிய உவமை பேசும் அதே குறள்தான் “மரம் போலும் மக்கட்பண்பில்லாதவர் ” என்று விரித்துப் பொருள் கொள்ளத்தக்க உவமையையும் பேசுகிறது. சங்கப் பாடல்களில் இயற்கையை ஒட்டிய உவமைகள் நிறைந்திருப்பதை கவனித்தால் குறளிலும் , கம்பனிலும் உவமைகள் அறத்தை, சமூக விழுமியங்களை ஒட்டி மாறுவதையும் நாம் அவதானிக்க முடியும். குறிப்பாக குறள் தனது பெரும்பாலான உவமைகளை அற விழுமியங்களின் பால் வைத்தேதான் பேசுகிறது.
நான்கு வரிகளில் இரண்டு உவமைகள் பேசும் பாடல்களில் உவமையையும் மிஞ்சும் அணி என்பது உருவகம்தான். உருவகத்தை எப்படிப் புரிந்து கொள்வது? உவமையைக் கொண்டேதான். உவமை இரு விஷயங்களை ஒப்பு வைத்துக் கூறுவதன் மூலம் உவமிக்கப்படுவது நிகழ்வதன் அனுபவத்தை நமக்கு உணர்த்த முயல்வது. பெரும்பாலும், வாசகன் நன்கு அறிந்த , அவனுக்கு மனதில் பழகிய விஷயங்களையே உவமையாகவும், உவமேயமாகவும் அமைப்பது வழக்கம்.உவமை ரசிக்கப்படும் விதமே வாசகனுக்கு அந்த இரு பொருட்களும் முன்பே அறிமுகமானவை என்பதிலிருந்துதான். நாம் இதுவரை பேசிய உவமைகளை ஒரு முறை நினைவு கூர்ந்தால் இது புரியும்.
ஆனால் உருவகம் இன்னும் ஆழமான இடங்களையும், புதிய உயரங்களின் சாத்தியங்களையும் உணர்த்த முயல்வது. உருவகத்தை இன்னும் புரிந்துகொள்ள இப்படி சொல்லலாம். உருவமற்ற, அரூபமான ஒன்றை வாசகனுக்கு உணர்த்த ஒரு பொருளோ, ஒரு நிகழ்வோ சொல்லப்படுமென்றால் அதை உருவகம் எனலாம். குறிப்பாக, உணர்ச்சி நிலைகளை , அவற்றின் போக்கை, ஆழங்களை, உயர்வை வாசகனுக்கு உணர்த்த உருவமுள்ள, வரையறுக்கப்பட்ட ஒன்றை பயன்படுத்தலாம். இப்போது உருவகத்தின் வடிவத்தையும், குணத்தையும் கொண்டு அருவமான ஒன்றின் தன்மையை விளங்கிக் கொள்கிறோம். அதன் பின் அந்த உருவ வடிவத்தைப் பற்றி பேசுவது அனைத்துமே , அருவ உணர்ச்சி நிலையை, வடிவம் தர முடியாத விழுமியங்களைக் குறிப்பதாகவே அமைந்து போகிறது.
தங்களை சரியானவர்கள் என்றுகருதும் அறிவிலார் பிறர்க்கு வழிகாட்டுவதை முண்டகோபநிஷத் இப்படி சொல்கிறது –
“அந்தேனைவ நீயமானா யதாந்தா ” – குருடரால் வழிகாட்டப்படும் குருடர்
முண்டகோபநிஷத்தில் என்னை மிகவும் கவர்ந்த உருவகம் இப்படி சொல்கிறது-
“ஸு தீப்தாத் பாவகாத் விஸ் புலிங்கா : சஹச்ரச : ப்ரபவந்தே சரூபா” ” – கொழுந்து விட்டெரியும் நெருப்பிலிருந்து தோன்றும் ஆயிரக்கணக்கான தீப்பொறிகளும் நெருப்பின் அதே இயல்புடையன என்று சொல்லும் இந்தக் கவி வரிகள் எத்தனை ஆழமிக்கது .முண்டகோபநிஷத் பேசும் மற்றொரு பெயர்பெற்ற உருவகம் “ஒரு மரத்தில் இரு பறவைகள்”.
தத்துவ , தரிசன தளத்தில் உருவகங்களின் செல்வாக்கு அபரிமிதமானது . இற்று வரை நாம் விவாதிக்கும் கயிற்றரவு , குடாகாசம் முதலியன தத்துவத்தின் உருவகங்களே.
தமிழில் உருவகம் கையாளப்படும் விதம் சுவாரசியமானது. பல உருவகங்கள் சராசரி பயன்பாட்டுத் தளத்தில் புழங்கும் அன்றாடச் சொற்றொடர்களாகவே ஆகிவிட்டிருக்கின்றன. வாய்பந்தல், மனக்குகை, அகக் கோவில், இருள் நெஞ்சம் , ரத்த ஆறு, கண்ணீர் குளம், பிணமலை , பசிப்பேய் , குணக்குன்று – இப்படிப் பல. இப்பட்டியலில் உள்ளவை நாளிதழ் ஒன்றின் வார இணைப்பில் கண்டவை. கம்பனை மட்டும் துணைக்கழைத்தால் 100 பக்கங்களுக்கு குறையாத உருவகங்கள் கிடைக்கும்.
புறநானூற்றில் வடக்கிருந்து போகிய கோப்பெருஞ் சோழனது உறையூரை எண்ணி கையறு நிலையில் பொத்தியார் பாடுகிறார் –
“பெருங்களிறு இழந்த பைதற் பாகனாக ” . மறைந்த யானை இருந்த கொட்டடி, அது கட்டப்பட்டிருந்த கம்பத்தின் வெறுமை என ஒவ்வொன்றையும் கண்டு வேதனைப்படும் பாகனின் நிலையை சோழன் இல்லா உறையூரைக் காண அவர் அடைகிறார்.
மரபார்ந்த கவிதை உருவகங்கள் எதை உருவகப்படுத்தினவோ அதையும் குறித்துச் சொல்லியே கவிதையை முடிக்கின்றன. ” …………ஆயினும் தந்தையர்க்கு அருள் வந்தனவால் புதல்வர் தம் மொழி ….” என்று பிள்ளைகளின் பொருளற்ற மழலை பெற்றவர்க்கு தரும் இன்பத்தை பாடி, அதோடு முடிக்காமல் “என் வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார் ” என்று விளக்கம் சொல்லாது பாடலை முடிப்பதில்லை. ” நீர்த்துறை படியும் பெருங்களிறு ஊர் குறுமாக்கள் தன்னைக் கழுவுவதை அனுமதிக்கும் அதே வேளையில் களத்தில் பகைவர் நெருங்க அஞ்சுவதாகவும் விளங்குகிறது என்று மன்னனைப் பாடினாலும் அடுத்த வரியில் நீயும் எனக்கும், பகைவர்க்கும் அவ்வாறே என்று சொல்லித்தான் முடிக்க முடிகிறது.
குறளில் பயின்று வரும் உருவகங்கள் மிக விரிவும், ஆழமும் கொண்டவை . அறிவிலாத மக்களை “மக்கட்பதடி ” என்று உருவகப்படுத்துவது சிறப்பு என்றால் விரும்பப்படாதவனது செல்வத்தின் நிலையை “நடுவூருள் நச்சு மரம் பழுத்தற்று ” என்கிறார். குறளின் உருவகங்களில் எனக்கு உவப்பானது
“பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் ” சொற்களின் வழியே காட்டப்படும் காட்சியையா இக்குறள் பேசுகிறது? அதன் பொருள் நிகழும் இடம் எது?
நண்பர்களே! துல்லியமான இந்த இடத்தைதான் நவீனப் படைப்புகள் தம் கையில் எடுத்துக் கொண்டுள்ளன.
அணிகளில் உவமை தாய் என்றால் உருவகம் காதலி. இன்றுவரை உருவகம் என்ற ஒன்றைப் பயன்படுத்தாத அரைமணி நேரப் பேச்சினை எந்தத் துறையிலும் காட்ட இயலாது. உவமை போன்றே உருவகமும் பழங்காலந்தொட்டு இன்று வரை பயின்று வரும் அணி என்றாலும் உருவகத்தின் வீச்சு நவீன இலக்கியப் படைப்புகள் வரை நீளும் வலிமை உடையது.
நவீன படைப்புகளில் படைப்பின் தலைப்புகளிளிருந்தே உருவகப்படுத்தல் ஆரம்பித்து விடுகிறது. ஆகச் சிறந்த உதாரணம் “ஒரு புளியமரத்தின் கதை” – இதில் புளிய மரம் என்பது வெறும் மரம் என்று எந்த வாசகன் சொல்லுவான் ? அது குறிப்பது விழுமியங்களின் மாற்றத்தைக் குறிக்கும் நிகழ்வுகளை. நிலவுடைமை கால விழுமியங்களின் குறியீடாக நிற்கும் புளிய மரம் , மாறி வரும் சமூக, அரசியல் சூழல்களை சந்திக்கும் புள்ளிதான் கதை. ஆனால் அது அப்படியே நேரடியாக சொல்லப்பட்டிருக்கிறதா படைப்பில் ? இருந்தும் வாசகன் அதை உணராமல் போவதில்லை.
புயலிலே ஒரு தோணி, காடு, பின் தொடரும் நிழலின் குரல் , எட்டுத்திக்கும் மத யானை, சாயா வனம், மோக முள், பொய்த்தேவு, பொன்விலங்கு , கூந்தப்பனை – இப்படி தலைப்புக்கள் எதன் குறியீடுகள் என்பதை எழுத்தாளன் சொல்லாமலேயே வாசகன் உணர முடிகிறது. இந்த உத்தியை ஆகச் சிறப்பாக பயன்படுத்துபவை சிறுகதைகளே . முள் முடி, பசித்த மானுடம், தேவர் குதிரை , நீர் விளையாட்டு, படுகை, வேட்டை, அக்னிப் பிரவேசம் , தேவகி சித்தியின் டைரி – இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
சிறுகதைகளும், நாவல்களும் உருவகத்தைக் கையாண்ட விதத்தில் உருவகம் அதன் மற்றொரு பரிமாணத்தை அடைந்திருக்கிறது. உதாரணமாக தேவர் குதிரை சிறுகதையில் நிலப்பிரபுத்துவ விழுமியங்களின் கடைசி கால பிரதிநிதியாக வரும் தேவரின் மனப்போக்கு , மாறி வரும் சமூக விழுமியங்களைச் சந்திக்கும் விதத்தின் குறியீடாக குதிரை தி.ஜா.வால் முன்வைக்கப்படுகிறது. அப்படி உருவகப்படுத்தப்பட்ட பின் தேவரின் குதிரைக்கு நிகழ்வது அனைத்துமே நிலபிரபுத்துவ விழுமியங்களுக்கு நிகழ்வதே என்பதை உணர முடியும். அந்த உணர்ச்சி படைப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் வளர்ந்து, விரிவடைந்து, ஆழமாகிக் கொண்டே போகிறது. குறியீட்டிற்கு நிகழும் ஒவ்வொன்றுமே குறிக்கப்படும் பொருளுக்கு நிகழ்வது என்பது வாசக மனதின் செயல்பாடாகிவிடுகிறது. இன்னும் எளிமையாக்குவதென்றால் படைப்பு காகிதத்தில் இருந்தாலும் ,படைப்பின் நிகழ்வு வாசகனின் மனதில் நிகழ்கிறது. வாசகன் கதையைப் பார்ப்பதில்லை ; உணர்கிறான். அது அவன் மனதில் விரிந்தபடியே செல்லும். படைப்பாளி உருவாக்கிய உருவகத்தின் மொழிபெயர்ப்பு வாசகனின் மனதில் தானாகவே நிகழ்கிறது. அசோகமித்திரனின் தண்ணீர், ஜெயமோகனின் ஈராறு கால் கொண்டெழும் புரவி இவ்வகைக்கான சிறந்த மாதிரிகள்.
இந்த இலக்கிய உத்தி இன்றுவரை தனது செல்வாக்கை படைப்புலகில் செலுத்திக் கொண்டிருக்கிறது. பிற உத்திகளை விட இது ஏன் இவ்வளவு பதிப்பினை ஏற்படுத்துகிறது ? இதில்தான் படைப்பாளியும், வாசகனும் உரையாடிக் கொள்ளும் சந்தர்பம் மிக அதிகம். கதை சொல்லியின் முன் வெறுமே பார்வையாளனாக அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து வாசகனை ஒரு பங்கேற்பாளனாக உணரச் செய்வதில் உருவகத்தின் வெவ்வேறு வடிவங்கள் தரும் சாத்தியக் கூறுகளே முதன்மைக் காரணம் எனலாம்.
எப்போதும் மொழியினை அடுத்த கட்டத்துக்கு தூக்கிச் செல்லும் கவிதைதான் இங்கே உருவகத்தை அதன் அடுத்த பரிணாமத் தளமான படிமத்தை நோக்கி உயர்த்துகிறது. படிமம் என்பதை எளிமையாகச் சொல்வதானால் சொற்களின் வழியே வாசகன் மனதில் புலனாக்கப்படும் காட்சி எனலாம். ஒரு காட்சி வாசகன் மனதில் விரிகிறது. படிம உத்தியை ஆதாரமாகப் பயன்படுத்தும் கவிஞன் வாசகன் மனதில் தோன்ற வேண்டிய காட்சியை சொற்களால் உருவாக்குகிறான். அக்காட்சி சொல்ல விழையும் போரும் வாசகன் மனதில் உருவாகிறது. எது உருவகப்படுத்தப்படுகிறது என்பதை கவிஞன் பேசுவதில்லை. அதை தன்னில் உணரும் வாசகன் , அவன் உணர்ந்தவற்றை விரித்துப் பொருள் கொள்ளும் சுதந்திரம் உடையவன்.
வாசிப்பில் சற்றேனும் பயிற்சி உள்ள வாசகனே படிமத்தை உணர்ந்து ரசிக்க முடியும். படிம உத்தியை பயன்படுத்தும் ஒரு படைப்பாளி பாதிப் படைப்பினை எழுத்திலும், மீதி படைப்பினை வாசகன் மனதிலும் நிகழ்த்த வேண்டியிருக்கிறது. இதில் வாசகன் பங்கு என்பது படிமத்தினை எல்லைகளை விரித்துக் கொண்டே செல்வதுதான். விரிவடைந்து கொண்டே செல்லும் வாசிப்பினை சாத்தியமாக்கும் ஒரு படிமம் வாசகனை சந்தோஷமான சவாலுக்கு சீண்டியபடியே இருக்கிறது. தேவதேவனின் கவிதைகளில் ஒன்று இங்கு பேசத்தக்கது.
தென்னைகளும், பனைகளும்
எல்லாத் தாவரங்களும் நீர்விரும்பிகள்தாம்.
நீர் நிலைகளினருகே இடம் கிடைத்ததால்
நெடு நெடுவென வளர்ந்தாள் இவள்.
சற்றே வளைந்து ஒயில் காட்டி நின்றாள்.
எப்போதும் அப்போதுதான் குளித்துமுடித்தவள் போல் விரித்த
நீள நீளமான தலைமயிரை
காற்றால் கோதியபடியே வானில் பறந்தாள்.
முலை முலையாய் காய்த்து நின்று
தன் காதலனை நோக்கிக் கண்ணடித்தாள்,
மென்மையான தன் மேனி எழிலுடன்.
எல்லாத் தாவரங்களும் நீர்விரும்பிகள்தாம்.
நீர்நிலைகளினருகே வாழமுடியாது விரட்டப்பட்டதால்
பாலைகளில் வந்து நின்றாள் இவள்.
கரு, கருவென பிடிவாதமாய் வளர்ந்தாள் .
உடலெங்கும் சிராய்களுடன்
கருத்த கல்தூணாய்
சிலிர்த்த குத்தீட்டித் தலைமயிர்களுடன்
கடுமை கொண்டவளாய் நிமிர்ந்தாள் .
இவளிடமும் காதல் இருந்தது.
அந்தக் காதல் ……….
இதில் பேசப்படுவது வெறும் தென்னைகளும், பனைகளும் அல்ல என்பது தெளிவு.அதே நேரம் தென்னையின் தோற்றமும், பனையின் தோற்றமும் காட்சிப்படுத்தப்படுகின்றது. அவள் நீர்நிலைகளின் அருகிலிருந்து ஏன் விரட்டப்பட்டாள் , யாரந்த காதலன், ஏன் கடைசி வரியில் அந்தக் காதல் … முற்றுபெறாமல் நிற்கிறது போன்றவற்றை வாசகனின் வாசிப்பு விரித்தெடுத்துச் செல்கிறது. இதைப் போலவே தேவதேவன் எழுதிய “யானை ” எனும் கவிதை. யானை எனும் படிமம் நம் மனதில் பொருள் கொள்ளும் விரிவே இக்கவிதையில் நாம் ரசிக்கும் வாசிப்பு.
யானை
அப்பேர்ப்பட்ட கானகத்தை, காட்டுவிலங்கை
நான் கண்டதில்லை எனினும்
கண்டிருக்கிறேன் வேறு எங்கோ எவ்விதமோ.
முறியும் பெருங்கிளைகள்
சாயும் குற்றுமரங்கள்
சிக்கித் தவிக்கும் உயிரினங்கள்
சரிந்த புதர்கள்
நடுவே
திடமாக
எதையோ
பூமியில் ஊன்றி விதைப்பு செய்யும்
ஒரு விரல் போல்
யானை ஒன்று நடந்து செல்வதை.
உருவக உத்தியின் மற்றுமொரு வடிவமாக குறிப்புருவகத்தை பேசலாம். ஆனால் கவிதை எனும் வடிவத்தை விட குறிப்புருவகம் கருத்து, தத்துவம், , மதம் சார் விளக்கங்களில் , சில நேரம் அறிவியல் கருத்துகளில் செல்வாக்கு உடையதாக இருக்கிறது. குறிப்புருவகம் என்ன செய்கிறது? படிம உத்தி போன்றே காட்சிப்படுத்தலை இது முயன்றாலும் வாசிப்பின் முழு சுதந்திரத்தையும் வாசகனுக்கு வழங்குவதில்லை. காட்சிப்படுத்தலின் குறியீடுகளை குறிப்புருவகம் தெளிவாகவே வரையறை செய்து கொண்டுவிடுகிறது. பிளேட்டோவின் பிரபலமான குகை மனிதர்கள் எனும் குறிப்புருவகத்திலிருந்து “உலகமே நாடக மேடை ” என்ற ஷேக்ஸ்பியர் வரிகள் வரை குறிப்புருவகம் உரைநடைக்கு உற்ற தோழனாகவே முயற்சிக்கிறது. உணரவைப்பதைக் காட்டிலும் புரியவைப்பதே குறிப்புருவகம் செய்யும் முயற்சி. நில எல்லைகளை, அமைவிடத்தை, உள்ளிருக்கும் ஐதீகங்களை , சமூக, அரசியல், அதிகாரப் படிநிலைகளை, தத்துவ தரிசன நிலைப்பாடுகளை முழுமையாக வரையறை செய்து கொண்ட பின்பே அவற்றுக்கிடையே நடக்கும் முயங்கல்களை பேசிய விதத்தில் விஷ்ணுபுரம் நாவலைக் கூட குறிப்புருவகம் என்று சொல்லலாம்.
கவிதையில் குறிப்புருவகம் பெருமளவு பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும் (அதன் வரையறுக்கப்பட்ட எல்லைகள் காரணமாக) முழுவதுமாக ஒதுக்கப்படவில்லை.
ந.பிச்சமூர்த்தியின் கொக்கு கவிதை இங்கு பேசத்தக்கது.
கொக்கு
படிகக் குளத்தோரம்
கொக்கு.
செங்கால் நெடுக்கு
வெண்பட்டுடம்புக்
குறுக்கு
முடியில் நீரை நோக்கும்
மஞ்சள் கட்டாரி மூக்கு.
உண்டுண்டு
அழகுக் கண்காட்சிக்குக்
கட்டாயக் கட்டணம்.
சிலவேளை மீனும்
பலவேளை நிழலும்…
வாழ்வும் குளம்
செயலும் கலை
நாமும் கொக்கு.
சிலவேளை மீனழகு
பலவேளை நிழலழகா?
எதுவாயினென்ன?
தவறாது குளப்பரப்பில்
நம்மழகு-
தெரிவதே போதாதா?
தேவதேவனின் புல்வெளியில் ஒரு கல் தொகுப்பிலுள்ள “பூக்கும் மரங்களின் ரகசியம்” எனும் கவிதையும் இங்கு பேசப்பட வேண்டியது.
நண்பர்களே! இதுவரை பேசியது அனைத்தும் கையளவின் துமித் தெறிப்பே. படைப்பூக்கம் எப்போதும் எல்லைகளின் விளிம்பில் நின்றுதான் செயல்படுகிறது. அதனாலேயே படைப்புலகின் எல்லைகள் எப்போதும் மறுவரையறைக்கு உட்பட்டிருக்கின்றன . உத்திகள் படைப்பை புரிந்து கொள்ள, உணர்ந்து கொள்ள உதவுமே தவிர உத்திகளின் அறிவு மட்டுமே ஒரு படைப்பை உருவாக்க இயலாது.
நுட்பமும், அழகும், கலைத் திறனும் மிக்க நெல்லையப்பர் கோயிலின் சிற்பங்கள் அனைத்தும் தலை வணங்கி கரங்குவிக்கும் கருவறை அப்பன் மண்ணிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட வெறும் அரையடி கல்துண்டாகவேதான் நிற்கிறான்.
நன்றி! வணக்கம்!
[16-5-2014 முதல் 18-5-2014 வரை ஊட்டியில் நிகழந்த குரு நித்யா நினைவு இலக்கியச் சந்திப்பில் இலக்கிய அழகியல்- உத்திகள்- வரலாறு பற்றிய அமர்வில் பேசப்பட்டது]