கர்நாடக இசை – சுருக்கமான வரலாறு

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களது தீவிர வாசகன் நான். ஆங்கிலப் பதமான ‘லேட்ரல் திங்கிங்’ என்பதற்கு உங்களது கட்டுரைகள் உதாரணம். எனது சிறிய சந்தேகத்திற்கு, உங்களது வேலைப்பளு குறைவாக இருந்தால், விளக்கவும். கர்நாடக சங்கீதத்திற்கான பூர்வீகம் எது? அது எதனால் கர்நாடக சங்கீதம் என அழைக்கப்படுகிறது? எவ்வாறு தெலுங்கு மொழியில் கீர்த்தனைகள் இயற்றப்பட்டது? எவ்வாறு தமிழ்நாட்டில் பெரிய அளவில் வளர்ந்தது?

நன்றி.

அன்புடன்,
இளங்கோவன்.

சாரங்கதேவர்

அன்புள்ள இளங்கோவன்,

முதலில் இவ்விஷயத்தில் நிலவும் ஒரு குழப்பத்தைச் சொல்லிவிடுகிறேன். மிகநுட்பமாக கர்நாடக இசையின் அழகியலை அறிந்தவர்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு அதன் வரலாறு பற்றி ஆரம்ப அறிமுகம் கூட இருப்பதில்லை என்பதை நாம் பரவலாகக் காணமுடியும்.

காரணம், ஒட்டுமொத்தமாக தென்னக வரலாறு பற்றிய, பண்பாட்டுப்பரிணாமம் பற்றிய அறிதல் அவர்களிடமிருப்பதில்லை. இரண்டு, கர்நாடக சங்கீதம் இன்று சாதியடையாளமாகவே பேணப்படுவதனால் தங்கள் சாதிவரலாற்றின் ஒரு பகுதியாக அதன் வரலாற்றைச் சொல்லவே பெரும்பாலும் இசையறிஞர்கள் முற்படுகிறார்கள்.

purandara
புரந்தரதாசர்

ஆகவேதான் கர்ண அடகம் – காதுக்கு இனியது – என்றபொருளில் அப்பெயர் வந்தது என்றும், அதன் மூலம் சாமவேதம் என்றும், அதைக்கேட்டு தப்புதப்பாக பாடியதன் விளைவுகளே நாட்டாரிசை மற்றும் பண்ணிசை மரபுகள் என்றும் எல்லாம் நம்பமுடியாத அளவுக்கு அசட்டுத்தனமாக அறிஞர்களே பேசி வைத்திருப்பதை நாம் காண்கிறோம்.

நான் இசையறிந்தவன் அல்ல. ஆனால் தென்னக வரலாற்றை இருபதாண்டுகாலமாக ஆர்வத்துடன் பயில்பவன். ஒரு நாவலுக்காக [அசோகவனம்] தென்னகத்தின் நடுக்காலகட்ட வரலாற்றை பத்தாண்டுகாலம் ஆராய்ந்தவன். ஆகவே நான் வாசித்தறிந்த பொதுவான வரலாற்றுச் சித்திரத்தை சுருக்கமாக அளிக்கிறேன்.

swati
சுவாதி திருநாள்

முதலில் நாம் தெளிவுகொள்ளவேண்டிய சில புள்ளிகள் உள்ளன.

1. பண்பாட்டாய்வுசார்ந்த எதையும் வரலாற்றின் பின்புலமில்லாமல் பேசமுடியாது. எந்த ஒரு பண்பாட்டுக்கூறுக்கும் அது உருவான அரசியல் சூழல், பொருளியல் சூழல், சமூகச்சூழல் முக்கியமானது.

2. வரலாற்றின் பின்புலத்தில் வைத்து நோக்கினால் எந்த ஒரு பண்பாட்டுக்கூறும் ஒற்றை ஊற்றுமுகம் கொண்டதாக இருப்பதில்லை என்பதையே காணமுடிகிறது. வெவ்வேறு மக்களின் பல்வேறு பண்பாட்டுச்சரடுகள் வாழ்க்கையின் போக்கில் முயங்கி கொண்டும் கொடுத்தும்தான் அனைத்து பண்பாட்டுக்கூறுகளும் உருவாகியிருக்கும். ஆகவே பண்பாட்டுத் ‘தூய்மை’ யை நோக்கமாகக் கொண்டு எழுதப்படுபவை வரலாறுகள் அல்ல.

3. பெரும்பாலான பண்பாட்டு மாற்றங்கள் வலுவான வெளி பாதிப்பினாலோ அல்லது மிகப்பெரிய பொருளியல் மாற்றத்தினாலோ அல்லது அடிப்படையான அரசியல் மாற்றத்தினாலோதான் நிகழ்ந்திருக்கும்.

*

கர்நாடக சங்கீதம் என இன்று அழைக்கப்படுவது தென்னக சங்கீதம் என்னும் பொருளில்தான். அவ்விசை தனித்தன்மையுடன் உருவான காலகட்டத்தில், அதாவது தோராயமாக பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிந்தைய முந்நூறு வருடங்களில், இந்தியாவில் முகலாயர் ஆட்சி நிலவியது. அவர்களின் ஆவணங்களில் தென்னகம் கர்நாடகம் என்றே பொதுவாக அழைக்கப்பட்டது. தென்னக இஸ்லாமிய ஆட்சியாளர்கள் கர்நாடக நவாப்கள் என அழைக்கப்பட்டனர்.

பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதி முதல் பதினேழாம் நூற்றாண்டின் இறுதிவரை ஐநூறாண்டுக்காலம் கர்நாடக சங்கீதத்தின் உருவாக்கக் காலகட்டம் எனலாம். அதாவது சாரங்கதேவர் என்ற இசையிலக்கண அறிஞர் [1210–1247] தென்னகத்தில் நிலவிய இசைமரபுகளை எல்லாம் தொகுத்து சங்கீத ரத்னாகரம் என்னும் நூலை உருவாக்கியதை அதன் தொடக்கப்புள்ளியாகக் கொள்ளலாம்.

அதன்பின் ஐநூறாண்டுக்காலத்தில் தென்னகத்தில் பல இடங்களிலாக ஒரு வட்டாரத் தனித்தன்மையுடன் உருவாகி பல்வேறு குருமரபுகள் வழியாக நீடித்து இக்காலகட்டத்தை வந்தடைந்துள்து கர்நாடக இசை.  அதன் முன்னோடி வடிவங்கள் பல உண்டு. பொதுவான ஆய்வாளர்களின் முடிவு என்னவென்றால் அவற்றில் மையமானது சங்ககாலம் முதல் தமிழகத்தில் இருந்துவந்த பண்ணிசை மரபு என்பதுதான்.

அதைப்பாடியவர்கள் பாணர்கள். இவர்கள் நாடோடி இசைக்கலைஞர்களாக சங்ககாலத்தில் பெருமதிப்புடன் இருந்தனர். சங்கம் மருவியகாலகட்டத்தில், அதாவது கிபி இரண்டாம் நூற்றாண்டுமுதல் பௌத்த சமண மதங்களின் ஆதிக்கம் மேலோங்கியபோது மெல்லமெல்ல அவர்கள் சமூக முக்கியத்துவமிழந்தனர். காலப்போக்கில் தாழ்த்தப்பட்ட – தீண்டத்தகாத – மக்களாகவும் ஆக்கப்பட்டனர். அவர்கள் சோழர்காலத்தில் பறையர்களின் ஒருபகுதியாகக் கருதப்பட்டிருக்கின்றனர்.

shatkala
ஷட்கால கோவிந்த மாரார்

பௌத்தமும் சமணமும் வலுவிழந்து பக்தி இயக்கம் மேலெழுந்த ஏழாம் நூற்றாண்டில் மீண்டும் பண்ணிசை புத்துயிர்பெற்றது. சைவநாயன்மார்களும் ஆழ்வார்களும் அதை பக்தியின் முதன்மை ஊடகமாகக் கொண்டனர். சோழ,சேர பாண்டியர்களால் பெரும் ஆலயங்கள் உருவாக்கப்பட்டபோது அங்கே பண்ணிசையைப்பாட ஓதுவார் மரபு உருவாக்கப்பட்டது. பண்ணிசை இலக்கணங்கள் மீண்டும் வகுக்கப்பட்டன.

இவ்வாறு வாழ்ந்த பண்ணிசைமரபுக்கு மீண்டும் மிகப்பெரிய வீழ்ச்சி 12-ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியப் படையெடுப்புகளால் நிகழ்ந்தது. சேரசோழபாண்டிய அரசுகள் அழிந்தன. ஏராளமான ஆலயங்கள் இடிக்கப்பட்டன. இருந்த ஆலயங்களும் புரவலரின்றி கைவிடப்பட்டன. அது பண்ணிசை மரபை பேணுவாரின்றி அழியச்செய்தது.

அதன்பின்னர் உருவான நாயக்கர் ஆட்சிக்காலத்தில் இடிக்கப்பட்ட ஆலயங்கள் மீண்டும் கட்டி எழுப்பபட்டன. ஆலயவழிபாடும் பக்தி இயக்கமும் மீண்டும் எழுந்தது. இக்காலகட்டத்தில் வட இந்தியாவில் இருந்து வந்த இசைமரபுகள் தெற்கே பெரிதும் பரவின. இங்கிருந்த பண்ணிசைமரபும் அந்த வடஇந்திய இசைமரபுகளும் கலந்தன. அந்தக் கலவை இசையின் அடுத்த மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது.

அன்னமாச்சாரியா

அவ்வாறு உருவான புதிய இசைமரபைத்தான் கர்நாடக இசை என்கிறார்கள். சாரங்கதேவரின் நூலை ஒரு இசைக்கணக்கெடுப்பு என்று சொல்லலாம். அன்றிருந்த எல்லா மரபுகளையும் அவர் தொகுக்கிறார். அதன்பின் தென்னக இசை மரபு மெதுவாக மேலெழுந்தது. சாரங்கதேவர் யாதவமன்னர்களின் அரசவையில் இருந்தவர். காஷ்மீரத்தைச் சேர்ந்தவர்.

இந்தியா முழுக்க உருவாகி வந்திருந்த பொதுவான இசைமரபில் இருந்து வேறுபடுத்தும்பொருட்டு கர்நாடக சங்கீதம் என்னும் பெயர் உருவானது. அந்தப்பொதுவான இசைமரபு இந்திய இசை என்னும் பொருளில் ஹிந்துஸ்தானி இசை என்று அழைக்கப்பட்டது.

ஆந்திரத்தில் அன்னமாச்சார்யா [1408-1503] கர்நாடகத்தில் புரந்தரதாசர் [1484–1564] போன்றவர்கள் இந்த புதிய கர்நாடக இசை மரபின் முன்னோடிகள். நாயக்கர் ஆட்சிக்கால பண்பாட்டு மறுமலர்ச்சியின் விளைவுகள் இவர்கள்.

கர்நாடக இசையின் தமிழ்நாட்டு மூவர்

நாயக்கர் ஆட்சியும் மராட்டிய ஆட்சியும் தமிழகத்தில் வேரூன்றியபின் அவர்களின் அரசவைகள் வழியாகவே கர்நாடகசங்கீதம் என்னும் இந்த புதிய இசை மரபு தமிழகத்திலும் கேரளத்திலும் பரவியது. கேரளத்தில் ஷட்கால கோவிந்த மாரார் [1798–1843] சுவாதித்திருநாள் [1813-1846] போன்ற இசைநிபுணர்கள் உருவாகி வந்தனர்.

தமிழகத்தில் தியாகராஜர் [1767–1847] சியாமா சாஸ்திரி [1762-1827] முத்துசாமி தீட்சிதர் [1775-1835] ஆகியோர் கிட்டத்தட்ட அம்மரபின் கடைசி நட்சத்திரங்கள். அவர்களின் நேரடி சீடமரபு இன்றும் தொடர்வதனால் அவர்கள் இன்று மையமான இடத்தைப்பெறுபவர்களாக இருக்கிறார்கள்.

தமிழிசை மூவர்

நாயக்கர் ஆட்சிக்காலத்தில் ஆலயங்கள் மறுஎழுச்சி பெற்றபோது ஆலயத்தை ஒட்டி வாழ்ந்து வந்த தமிழ்ப்பண்ணிசையானது அன்றிருந்த நாட்டார் அம்சங்களை கலந்துகொண்டு புதிய எழுச்சி பெற்றது. அந்த புதுப்பண்ணிசை மரபு தமிழக கர்நாடக இசை உருவாவதற்கான ஒரு முன்னோடி வடிவமாக அமைந்தது. அதில் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்தா பிள்ளை (1717-1787), முத்துத் தாண்டவர் (1525-1625) ஆகிய மூவரும் முன்னோடிகள் எனப்படுகிறார்கள்.

நாயக்கர் ஆட்சிக்காலம் என்பது இந்திய பக்தி இயக்கத்தின் மறுமலர்ச்சிக்காலம். அதை இரண்டாவது பக்திகாலகட்டம் என்றும் சொல்லலாம். அவர்கள் வளர்த்தெடுத்த மிக முக்கியமான கலைசார்ந்த அமைப்பு என்பது ‘பஜனை மரபு’ ஆகும். பலர் கூடிஅமர்ந்து இறைவனைத் துதித்துப்பாடுவது பஜனை. இது பக்தியை ஒரு சமூக இயக்கமாக ஆக்கியது.

நாயக்க மன்னர்கள் எல்லா ஊர்களிலும் பஜனைமடங்களை கட்டினர். சிறுகிராமங்களில்கூட இவ்வாறு அமைந்த பஜனைமடங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை செயலூக்கத்துடன் இருந்தன. இன்றும்கூட தெலுங்குச்சாதியினர் பஜனையில் பேரார்வம் கொண்டவர்களே. சென்னையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் முந்நூறுக்கும் மேற்பட்ட பஜனைமடங்கள் இருந்தன. அவையெல்லாம் இன்று சிறு பெருமாள்கோயில்களாக மாறிவிட்டன.

கர்நாடக சங்கீதம் என்ற மரபு மக்களிடம் சென்றுசேரவும், நிலைபெறவும் பஜனைமரபு பெரிதும் உதவியது. பஜனைமரபு வழியாக கர்நாடக சங்கீதத்தில் நாட்டார் அம்சங்கள் வந்து கலந்தன. கர்நாடக சங்கீதத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு மேடைமுறைமை உருவாவது வரை அது பஜனைபோலவே இருந்தது. பழைய கர்நாடகசங்கீத கச்சேரிகளைக் கேட்டால் பஜனை போல பலர் கூடி பாடுவதை கவனிக்கமுடியும். இன்றுகூட கர்நாடக சங்கீதத்தில் இருந்து பஜனை அம்சத்தை நீக்கமுடியவில்லை.

ஆக, கர்நாடக இசை என்பது பழந்தமிழ் பண்ணிசையின் கூறுகளும், இங்கிருந்த நாட்டாரிசைக்கூறுகளும், வடஇந்திய ஹிந்துஸ்தானி இசையின் கூறுகளும் ஆக்கபூர்வமாக கலந்து உருவான ஒரு தனித்த கலைவடிவம் என்று சொல்லலாம். இதுதான் விரிந்த சித்திரம்.

இச்சித்திரத்தை மேலும் விரிவாக்கிக்கொள்ளவேண்டும் என்றால் நாயக்கர் காலகட்டத்தில் சிற்பம், ஓவியம் ஆகியவற்றில் நிகழ்ந்த புத்தெழுச்சியுடன் இணைத்துப்பார்க்கவேண்டும். அவர்களின் கோயில்கட்டும் கலை ஏற்கனவே சோழர்காலம் முதல் இங்கிருந்த தட்சிண பாணி கட்டிடக்கலையுடன் நாகர வேசர பாணி அழகியலையும் இணைத்துக்கொண்டு வளர்ந்தது.

அதேபோல் அக்கால ஓவியக்கலை ராஜபுதனச் சிற்றோவிய மரபு, முகலாய சிற்றோவிய மரபு ஆகியவற்றின் அழகியலை உள்வாங்கிக்கொண்டும் சோழர்கால ஓவியமரபை மாற்றியமைத்தும் புதியதோர் ஓவியக்கலையை உருவாக்கியது. தஞ்சாவூர் ஓவியங்கள் அதற்கு பிரபலமான உதாரணங்கள். இந்த ஓவியக்கலை நாயக்கர் கால ஓவியக்கலை என்றே அழைக்கப்படுகிறது.

அன்று தென்னகம் முழுக்க, ஆந்திரம் கர்நாடகம் தமிழகம் கேரளம் ஆகியவற்றில், நேரடியாகவோ மறைமுகமாகவோ நாயக்கர் ஆட்சியே நிலவியது. அவர்கள் கலைகளில் உருவாக்கிய மறுமலர்ச்சி ஒரு பண்பாட்டுச்சாதனை. கர்நாடகசங்கீதம் அதில் ஒன்று. ஆனால் அதில் அன்றுவரை முகலாய தர்பாரில் உருவாகி வளர்ந்து வந்த இசைமரபுகளின் வலுவான செல்வாக்கு உண்டு. இதுதான் பொதுவான வரலாற்றுப்பின்னணி. விரிவாக வாசிக்க ஏராளமான நூல்கள் உள்ளன.

பண்ணிசை வரலாறு

தமிழிசை ஒரு கடிதம்

தமிழிசை இரு பார்வைகள்

தமிழிசை மேலுமொரு கடிதம்

தமிழிசை காழ்ப்பே வரலாறாக

தமிழிசை கடிதங்கள்

இசை கடிதங்கள்

தமிழிசையும் ராமும்

தமிழிசையா?

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

முந்தைய கட்டுரைஅகமைய வாதம்
அடுத்த கட்டுரைவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்