எனக்கு சிறுவயதிலேயே அறிமுகமான இரு இந்து தெய்வங்கள் மாடனும் மாரியம்மனும். முட்டத்தின் வடக்கு எல்லையில் ஒரு சுடலை மாடன் கோவில் இருந்தது. மண்ணை செவ்வகக் கூம்பவடிவ கோபுரமாகப் பிடித்து அதன் முகட்டில் முகம் போன்ற வட்ட வடிவ கூம்புடன் மூன்று பீடங்கள் இருந்தன என்று நினைவு. வேறெந்த உருவமும் அங்கில்லை. வேலாயுதங்களும். சூலாயிதங்களும் சிறிய மணிகள் மாட்டப்பட்ட பெரிய, முனை மழுங்கிய வெட்டரிவாளும் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தன. மாடன் கோயில் பூசாரி ஒரு கரிய கட்டுமஸ்தான ஆள். அவர் சாமியாடியும்கூட.. இரவுகளில் மாடன் பனைமர உயரத்துக்கு உலவுவதை கண்களால் கண்டவர்கள் சொல்லும் கதைகள் முட்டத்தில் உண்டு.
மாரியம்மன் எனக்கு அறிமுகமானது ஒரு கதையின் வழியே. அந்தக் கதையை சொன்ன பாட்டி ஒரு கிறீத்துவரானாலும் அவரின் குடும்பத்திற்கு மாந்த்ரீகப் பின்னணி உள்ளதாக ஊரில் சொல்வதுண்டு. அவர் சொன்ன மாரிகதையில் ஒரு ஊரில் அம்மை நோய் கண்டிருக்க அதைக் கண்டு பயந்த பெண் ஒருத்தி ஊரை விட்டு ஓடுகிறாள். அவள் செல்லும் வழியில் ஒரு நடு வயதுப் பெண்மணி உட்கார்ந்திருக்கிறாள். ’ஏ பொண்ணு இங்கா வா.. நீ எங்கயாக்கும் போற?’ என்றாள் அந்தப் பெண்மணி. ஊரிலிருந்து சென்றவள் ‘எங்க ஊர்ல அம்ம போட்டு ஊரே அல்லோலப்பட்டு கெடக்கு. அதான் நான் ஓடிப் போறேன்’ என்றாள். அந்தப் பெண்மணி.’ஓ! அப்டியா.. எனக்கு தல அரிக்குது.. என் தலையில கொஞ்சம் பேன் பாத்து தாறியா?” எனக் கேட்க, இவளும் அமர்ந்து பேன் பார்க்க ஆரம்பிக்கிறாள். அவள் தலையில் விரல்களை விட்டு முடியை விலக்கியதும் திடுக்கிட்டு எழுகிறாள். அந்தத் தலை முழுவதும் விழித்துருளும் கண்கள். அப்பெண்மணி அம்மனாக உருவெடுக்கிறார். அம்மன் வந்தவளிடம் தனக்கு ஆயிரம் கண்கள் என்றும் அவள் எங்கே சென்றாலும் தன் பார்வையிலிருந்து தப்பிக்க முடியாதென்றும் ஊருக்கே திரும்பிச்செல்லவேண்டும் என்றும் ஆணையிடுகிறார்.
மாடனும், மாரியும் என் மனதில் பயத்துக்குரிய, கண்டிப்பான, பலியை விரும்பும் தெய்வங்களாக ஆழப்பதிந்திருந்தனர். இலக்கியம் இந்த இரு தெய்வங்களையுமே முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எனக்கு வெளிக்காட்டியுள்ளது.
பவா செல்லத்துரையின் ‘சத்ரு’ சிறுகதை சட்டென நமக்குள் ஒரு அற்புதத்தை நிகழ்த்திச் செல்லும் அரிய இலக்கிய படைப்புக்களில் ஒன்று. நாட்டார் கதை வழக்குகளின் தர்கத்தை மீறிய மிகைத்தன்மையும், நாடகீயமும், எளிமையும் கதைகூறலில் இழைந்துள்ளன. இருப்பினும் நாட்டார் கதைகளோ அல்லது பிற ஆன்மிக அல்லது பக்திக்கதைகளோ மிக அரிதாகவே சென்று தொடும் ஒரு உச்சத்தை ’சத்ரு’ சென்றடைகிறது. என்னால் வார்த்தைகளில் முழுதாக விவரிக்க முடியாத ஒரு பேரனுபவத்தை என் மனதிற்குள் நிகழ்த்திச் சென்றது.
உயிரியல் பரிணாம மாற்றங்களைப் போலவே மானுட சிந்தனைப்போக்குகளிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. இறையியல் சிந்தனைகளிலும் படிப்படியான மாற்றங்களும் சில பாய்ச்சல்களும் நிகழ்ந்துள்ளன. கண்டிப்பான தேவனை ஒரு கனிவான தந்தையாகக் காண்பித்த இயேசுவும், தெய்வத்தைப் பேசாது ஆன்மிகத்தை பேசிய புத்தரும், அகம் பிரம்மாஸ்மியும் அப்படி நிகழ்ந்த பாய்ச்சல்கள் எனலாம். நாட்டார் கதை வழக்கில் சத்ருவும் ஒரு பாய்ச்சலை செய்கிறது. நாட்டார் வழக்கில் தெய்வங்களை குறித்த கடுமையான, கண்டிப்பான, சர்வ வல்லமைகளையும் பொருந்திய அச்சமுறுத்தும் அல்லது அதிர்ச்சியூட்டும் ரூபங்களை எடுக்கும் பிம்பங்களை உடைத்தெறிகிறது. இதோ தெய்வம் மனதுக்கு நெருக்கமாக வந்து நிற்கிறது. கையறு நிலையில் கருணை ஒன்றை மட்டுமே வேண்டி நிற்கிறது. ” என் புள்ளைங்களுக்கு, கூழுக்கு, மாவுகரைக்க மாவு தர்றீயா” என்று மன்றாடுகிறது.
நவீன இலக்கியம் கடவுளை மாயங்களற்ற மனிதத் தன்மையோடேயே காண்பிக்கிறது. “ஐயா, திருவல்லிக்கேணிக்கு எப்படிப் போகிறது?” என்று கந்தசாமிப் பிள்ளையிடம் வழி கேட்கிறார் “இந்தா பிடி வரத்தை” என்று வற்புறுத்தாத கடவுள். ’எலேய் பிள்ளே எளிவிலே மக்கா’ என்று அப்பி பூசாரியை நடுசாமத்தில் எழுப்புகிறார் மாடன்.
கிறிஸ்துமஸ் விருந்தாளி எனும் ஜெர்மானிய பழங்கதை ஒன்றுண்டு. ஒரு நாள் ஒரு செல்வந்தனின் கனவில் கடவுள் தோன்றி நாலை உன் வீட்டுக்கு வருகிறேன் என்கிறார். அவனும் அடுத்த நாளில் கடவுளை எதிர்பார்த்து காத்திருக்கிறான். மூன்று முறை அவன் வீட்டின் கதவுகள் தட்டப்படுகின்றன. மூன்று முறையும் அவன் கடவுளை எதிர்பார்த்து ஆவலுடன் சென்று பார்க்கிறான். முதன் முறை ஒரு பிச்சைக்காரனும், இரண்டாவது பனியில் நடுங்கியபடி வந்த வயதானகிழவியும் மூன்றாவதாக வழிதவறிய சிறுமியும் என மூன்று ஆதரவற்றவர்கள் வருகிறார்கள். மும்முறையும் ஏமாறமடைந்தாலும் அவன் மூவருக்குமே உதவுகிறான். இரவு வரை காத்திருந்துவிட்டு கடவுளிடம் ஏன் வரவில்லை எனக் கேட்கிறான் செல்வந்தன். கடவுளோ நான் உன்னைக் காண மூன்றுமுறை வந்தேன் என்கிறார். இந்தக் கதையின் நேரடித் தன்மை இதை ஒரு நல்லொழுக்கக் கதையாக, ஒரு போதனையாக மாற்றிவிடுகிறது. சத்ரு நாட்டார் மொழிவழக்கில் சொல்லப்பட்டாலும் அளிக்கும் வாசக இடைவெளி அதை இலக்கியமாக்குகிறது.
கடவுள்கள் உதவிகேட்டு வந்த பிற கதைகளுடனும் இந்தக் கதையை ஒப்பிடலாம். கர்ணனின் தர்மங்கள் முழுவதையும் பெற்றுக்கொண்ட வயோதிகர், மூன்றடி மண்கேட்டு பின் மகாபலியின் ’தலையை’ நொறுக்கிய குள்ள பிராமணர். பிள்ளைக்கறி கேட்ட சிவனடியார் என சில கதைகள் நானறிந்தவை. பாரம்பரியமாக நாமறிந்த பக்திகதைகள் ஆன்மிகக் கதைகள் அனைத்துமே இந்த வகையை சார்ந்தவையே. மாடன், மாரியம்மன் மீதும் கூட இவ்வகை கதைகளே புனையப்பட்டுள்ளன. பவாவின் கதை இந்தத் தளங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது வெளிப்படை.
செமினரியில் இருந்த நாட்களில் சட்டென்று இயேசு சொன்ன ஒரு வாக்கியம் என் மனதை நிறைத்தது சில காலங்கள் அதையே நினைத்துக்கொண்டிருந்தேன். அது “பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்” (மத் 9:13) எனபதுதான். பவாவின் சத்ரு கதை இந்த வரிகள் தரும் பேரனுபவத்தை மீட்டுத்தந்தது.
அள்ள அள்ளக் குறையாத கருணையை அந்தக் கருணையின் தருணம் துளித் துளியாக ஒரு பெரும் மீட்பின் தருணமாகவே மாறிவிடுவதையும் பவா மிக அழகாக பதிவு செய்திருக்கிறார்.
பாரம்பரியத்தில் ஒரு கண்டிப்பான, தண்டிக்கும் தெய்வத்தை கருணையின் தெய்வமாக, இரக்கத்தின் தெய்வமாகக் காட்டி பவாவும் ஒரு பாய்ச்சலை செய்கிறார். எத்தனையோ கதைகளில் எத்தனையோ விதங்களில் தெய்வங்கள் அற்புதங்களை நிகழ்த்தியிருக்கின்றன. ஆயினும் அவற்றையெல்லாவற்றையும் மிஞ்சும் ஒரு அற்புதம் இந்தக் கதையில் நிகழ்கிறது. இது நிகழ சாத்தியமான அற்புதம் ஆகவே இது நம் மனதுக்கு மிக நெருக்கமானதாகிறது.
எஞ்சி நிற்பது ஒரே கேள்விதான். மரபின்படி ஒரு கண்டிப்பான தெய்வத்தை பலியை அன்றி இரக்கத்தையே வேண்டும் தெய்வமாகக் காட்டும் பவா ‘சத்ரு’ என்று யாரை அழைக்கிறார்?