மேற்கும் கிழக்கும் சிந்தனைகளில்…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சில்வியா பிளாத் எழுதிய Soliloquy of the solipsist என்ற கவிதையை இப்போது தான் படித்து முடித்தேன். Solipsist என்ற ஆங்கில வார்த்தைக்கு இணையான பதம் ஏதாவது தமிழில் உண்டா? மாயாவாதிகள் தான் Solipsistகளா? போன்ற கேள்விகள் எனக்குள் எழுந்தன. இதைப் பற்றி விளக்குமாறு கேட்டுக்
கொள்கிறேன்.

ஷைன்சன்

அன்புள்ள ஷைன்சன்,

இவ்வகையான குழப்பங்கள் எனக்கு தொடக்க காலத்தில் இருந்தன. நாம் ஒரு புதிய மொழியை எப்படிப் புரிந்துகொள்கிறோம்? நாமறிந்த மொழியில் உள்ள சொற்களுக்கு நிகரான பிறமொழிச் சொற்களைப் புரிந்துகொள்கிறோம். dog என்றால் நாய். என்று. இம்மாதிரித்தான் சிந்தனைகளையும் புரிந்துகொள்கிறோம். இது இயல்பானது.

ஆனால் என்ன சிக்கலென்றால் இது பெரும்பாலும் தத்துவத்தில் பிழையான புரிதல்களை நோக்கி கொண்டுசெல்லும் என்பதுதான். Solipsism என்பதை கிட்டத்தட்ட மாயாவாதம் என்றே சொல்லலாம். நாமறிவதெல்லாம் நம் அகத்தால் நமக்கு அளிக்கப்படும் தோற்றங்களே என்றும் நம் அகத்துக்கு அப்பால் உள்ள எதையும் நாம் அறியவோ அவற்றின் உண்மையை உறுதிசெய்துகொள்ளவோ முடியாது என்று அச்சிந்தனை சொல்கிறது. ‘ஏறத்தாழ’ மாயாவாதமும் அதையே சொல்கிறது.

ஆனால் முக்கியமான வேறுபாடு உள்ளது. இப்படி அகத்திலமர்ந்து அறியும் தன்னிலையை ஆத்மன் என்று சொல்கிறது மாயாவாதம். அது வெளியே புறமாக நின்றிருக்கும் அதன் தோற்றமேதான். அல்லது தோற்றமயக்கம்தான். வெளியே இருப்பது மாயை என்றால் அகத்தில் அறியும் ஆன்மா என்னும் தன்னிலையும் மாயைதான் என்று வேதாந்தம் சொல்லும்.இருப்பது ஒன்றே. அதுவே பார்ப்பதும் பார்க்கப்படுவதுமாக பிரிந்து மாயையை உருவாக்குகிறது இச்சிந்தனைக்கும் Solipsism த்துக்கும் மிகப்பெரிய வேறுபாடுண்டு. Solipsism பிற மனங்களின் இருப்பையும்கூட மறுக்கிறது என்பதனால் அது இந்திய மாயாவாதமே அல்ல. அது முற்றிலும் வேறான ஒன்று.

ஆகவே என்னாகுமென்றால் ஆரம்பத்தில் புரிதலின்பொருட்டு நாம் அது ஒருவகை மாயாவாதம் என்று புரிந்துகொண்டோமென்றால் பின்னர் அதை அப்படியே நம்ப தொடங்கிவிடுவோம். சுவரில் தெரியும் கறையை யானை என நினைத்தால் பின்பு யானையே தெரிவதுபோல. அதிலிருந்து தப்பவே முடியாது

பெரும்பாலும் மேலைச்சிந்தனைப்பின்புலத்துடன் இந்திய சிந்தனையைக் கற்க வருபவர்கள் இந்தப்பிழையைச் செய்கிறார்கள். இந்தியசிந்தனை எதையும் உடனே ஒரு மேலைச்சிந்தனையுடன அடையாளப்படுத்திக்கொள்வார்கள். அந்த இந்தியச்சிந்தனையின் தொடக்கத்தில்தான் அந்த ஒற்றுமை இருக்கும். நுட்பமான விஷயங்களுக்குச் செல்லச்செல்ல அது விலகி விலகிச் செல்லும். அப்போதும் அவர்களால் அந்த முதல் மனப்பதிவை அழிக்கமுடியாமலாகும். நித்யாவின் பல மாணவர்களின் சிக்கல் அது என்பதைக் கண்டிருக்கிறேன்.

உதாரணமாக ஜைனர்களின் சியாத்வாதம் கிரேக்கசிந்தனையின் skepticism தான் என்று எளிதாகப்புரிந்துகொள்வதே ஒரு மேலைநாட்டு மாணவன் உடனடியாக செய்வது. அறிபவை அனைத்தையும் ஐயப்படுவதே சியாத்வாதம். அதுவே மேலைநாட்டு ஐயவாதம். ஆனால் மேலைநாட்டு ஐயவாதம் அறியும் தர்க்கத்தை நம்பி அதனடிப்படையில் ஐயப்படுகிறது. ஜைனர்கள் ஒவ்வொரு அறிதலும் முழுமையற்றதே என நினைப்பதனால் அனைத்தையும் ஐயப்படுகிறார்கள். இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை.

இரண்டையும் ஒன்றெனப்புரிந்துகொண்டால் அடுத்தகட்ட விரிவாக்கமே சாத்தியமில்லாமல் போகும். மீண்டும் மீண்டும் அந்த வேறுபாட்டை மனதில்கொள்ளாமல் பிழைசெய்துகொண்டே செல்வோம்.

ஆகவே தொடக்கத்திலேயே மேலைச்சிந்தனைகளுக்கு அவற்றுக்குரிய பெயரில் அவற்றுக்குரிய வரையறைகளுடன் எந்த இந்தியச்சிந்தனையுடனும் தொடர்பில்லாமல் வாசிப்பதே சிறந்த வழியாகும்.அந்தத் தெளிவுடன் வாசிப்பதே சிறந்த திறப்புகளை அளிக்கும். தேவை என்றால் பிரபலமான மொழியாக்கமான அகவாதம் அல்லது அகமையவாதம் ஆகியவற்றில் ஒன்றை பயன்படுத்தலாம்

– ஜெ

முந்தைய கட்டுரைமன எழுச்சியின் கணம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 83