அறம் – சிக்கந்தர்

அறம் விக்கி

அன்புள்ள ஜெ.

வணக்கம். சமீபத்தில் தங்களின் அறம் தொகுப்பை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். கிட்டதட்ட எல்லா கதைகளையும் கண்களில் தேங்கிய நீருடன்தான் வாசிக்க முடிந்தது. ஒரு கதை முடிந்து அடுத்த கதையை உடனடியாக வாசிக்க முடியாது வாசித்த கதை தந்த துயரத்தில்/அதிர்வில்/இன்னும் சொல்ல தெரியாத காரணங்களால் புத்தகத்தை மூடி வைத்து வெறுமனே பார்த்துகொண்டிருப்பேன். இந்த கதையில் மனவெழுச்சி எழுப்பும் எல்லா மனிதர்களிடமும் ஆதாராமான நீதி இருந்தது. இப்படியான மனிதர்கள் அருகி வருகிறார்கள் என்பதே நிதர்சனம் என்று நினைக்கிறேன்.

குறிப்பாக வணங்கான், நூறு நாற்காலிகள் கதைகளில் சாதீயத்தின் பெயரால் மனிதர்களை சாக்கடை பெருச்சாளிகளாக பாவித்து கல்லெறியும் மனித கூட்டத்தின் அடக்குமுறையை மீறி கிளம்பிவரும் தனபால்களை இன்றும் சாதியத்தின் பெயரால் அடக்கி வரும் ‘அவன் கோட்டால வந்தவன்’ போன்ற வாசகங்களை வெகு இயல்பாக புழங்கிகொண்டிருக்கிறோம். இந்த கதைகளையெல்லாம் படித்துவிட்டு சக மனிதர்களை பார்க்கும்போது சோர்வுதான் எஞ்சுகிறது

நன்றி.
சிக்கந்தர்

அன்புள்ள சிக்கந்தர்,

நன்றி.

பொதுவாக நம்டைய சமூகம் பற்றிய மனப்பதிவுகள் ஏதாவது ஒருசில புள்ளிகளில் தொடங்கி நம் முயற்சியின்றியே உருவாகி தன் பாட்டுக்கு இருந்துகொண்டிருக்கக் கூடியவை. அவற்றை நாம் மறுபரிசீலனை செய்வதே இல்லை. இலக்கியத்தின் பணி அவற்றில் ஒரு அதிர்ச்சியை உருவாக்குவதே. இலக்கியம் அளிக்கும் நிலைகுலைவு என்பது அதுதான்.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 59
அடுத்த கட்டுரைஇமயச்சாரல் – 1