மழைப்பாடலின் சமநிலை

அன்புள்ள ஜெ

மழைப்பாடலை ஒவ்வொருநாளும் இருமுறை கூர்ந்து வாசித்துவருகிறேன்.முதற்கனலையும் இப்படித்தான் வாசித்தேன். ஒவ்வொருநாளும் இரவில் ஒருமுறை வாசித்துவிட்டு தூங்குவேன். காலையில் அந்த நினைப்பு இருந்துகொண்டே இருக்கும். அதையொட்டி மனம் சென்றுகொண்டிருக்கும். மதியம் இன்னொரு முறை வாசிப்பேன். முதல் வாசிப்பில் அதில் இருக்கும் கனவும் ஒரு சில உணர்ச்சிகரமான இடங்களும்தான் மனதில் பதியும். இரண்டாவது வாசிப்பில்தான் நுட்பங்கள் தெரியும்.

பலவகையான நுட்பங்கள். வர்ணனைகளில் இருக்கும் நுட்பங்களை இதை வாசித்த அனைவருமே சொல்கிறார்கள். இத்தனை பக்கங்கள் தாண்டியும் வர்ணனைகளும் உவமைகளும் திரும்பவராமலேயே இருப்பதைப்பற்றி வியப்புகொள்ள ஏதுமில்லை. அதைத்தான் கிரியேட்டிவிட்டி என்கிறோம். மோப்பம் பிடித்தபடி வரக்கூடிய யானையின் துதிக்கை முனை ஒரு சிறிய வாய்போல இருந்தது என்ற வரியை குழந்தையாக இருந்துகொண்டுதான் கற்பனை செய்திருக்கமுடியும். வளமான ஒரு குழந்தைப்பருவத்தில் இருந்துதான் உண்மையான கவித்துவம் பிறக்கிறது என்று நினைக்கிறேன்.

இந்த நுட்பத்தை கனவுத்தன்மை உடையது என்று சொல்லுவேன். அல்லது குழந்தைத்தனமானது என்று சொல்லலாம். இன்னொருவகை நுட்பம் மிக முதிர்ச்சியானது. கவனமாக வாசித்தால்மட்டுமே கிடைக்கக்கூடியது மனசின் விளையாட்டுக்கள், அரசியல்விளையாட்டுக்கள், விதியின் விளையாட்டு போன்றவற்றை சுட்டிக்காட்டிக்கொண்டே செல்கிறது. கொஞ்சம் கவனமில்லாமல் வாசித்தால்கூட முக்கியமான வரிகளை இழந்துவிடுவோம் என்று தோன்றும்.

என்னுடைய வாசிப்பில் நான் முதல்முறையில் சகுனி தருமனைக் கொல்லச் சதிசெய்கிறான், அதை குந்தி கண்டுபிடித்தாள் என்ற நுட்பமான இடத்தை கவனைக்காமல் விட்டுவிட்டு பிறகு விதுரனும் சகுனியும் பேசிக்கொள்ளும் இடத்தில்தான் கண்டுபிடித்தேன். திறனற்ற ஒற்றர்களைப்பற்றிய இடம் மிகவும் பூடகமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. விதுரனின் குந்திமீதுள்ள காதல் அப்படி சொல்லப்படாமலேயே சென்றுகொண்டிருக்கிறது. அது வரும் காலத்தில் என்னென்ன விளைவுகளை உருவாக்குமென்று ஊகிக்க முடிகிறது.

இதுவரை வந்த நல்ல வரிகளை குறித்துவைக்க நினைத்தேன். மொத்த நாவலையே குறித்துவைக்கவேண்டும் என்று தோன்றியதனால் விட்டுவிட்டேன். கனவும் யதார்த்தமும் இப்படித்தான் பின்னிப்பின்னி வருகிறது. தருமனின் பிறப்பு அப்பட்டமான யதார்த்தம். ஒரு வரிகூட மிகையோ கனவோ கிடையாது. கிளினிக்கல் ரியாலிட்டி என்று சொல்லலாம். ஆனால் துரியோதனின் பிறக்கு நேர்மாறாக பயங்கரமான கொடுங்கனவு. இரண்டும் இரண்டு திசையிலுமிருந்து வந்து சந்தித்துச்செல்கின்றன.

அதேமாதிரி குந்திக்கும் பாண்டுவுக்கும் சகுனிக்கும் காந்தாரிக்கும் ஒரேமாதிரியான நியாயங்களை சரிசமமாகச் சொல்லிக்கொண்டு செல்வதும் அற்புதமாக இருக்கிறது. ஆகவே கதை ஒரு முள்முனையிலேயே செல்கிறது.

வாழ்த்துக்கள் ஜெ

சண்முகம்

நன்றி சண்முகம் அன்புள்ள சண்முகம்,

மழைப்பாடலின் கட்டமைப்பு யதார்த்தம் சார்ந்தது. பெரும்பாலும் இருத்தல்சார்ந்த பதற்றங்களாலும் அதைச்சார்ந்த உளவியல்சிக்கல்களாலும் ஆனது. மிகச்சிறிய அகச்சிக்கல்கள் மாபெரும் புறச்சிக்கல்களாக ஆகும் யதார்த்ததைச் சித்தரிப்பது. ஆனால் மகாபாரதத்தில் எப்போதுமிருக்கும் மிகைகற்பனை அம்சம் அதில் ஊடாடிச்செல்கிறது. ஏனென்றால் அந்த மிகைக்கற்பனையில்தான் தொன்மங்களும், படிமங்களும் உள்ளன. அவைதான் கதையை காலாதீதமான தத்துவதரிசனங்களுடன் பிணைக்கின்றன. ஒரு யதார்த்தக்கதை அவற்றின்மூலம் பிரபஞ்சத்தன்மையை அடைகிறது. மிகைகற்பனை என்பது இலக்கியத்தின் மிகமிக முக்கியமான உத்தி. தொன்மையானது. நவீன இலக்கியத்தில் மறுகண்டுபிடிப்புசெய்யப்பட்டது.

முதற்கனல் அந்தக் கதைக்குரிய உக்கிரமான கட்டமைப்புடன் இருந்தமையால் அதன் மிகைக்கற்பனைகள் இயல்பாக அதனுடன் ஒத்திசைந்தன. மழைப்பாடலின் யதார்த்த அடித்தளம் மிகைக்கற்பனையை அன்னியமாக ஆக்கக்கூடியது. ஆகவேதான் இதிலுள்ள மிகைக்கற்பனைகள் அவை நிகழும்போது மட்டுமே மிகைக்கற்பனையாக காட்டப்பட்டிருக்கும். சித்தரிப்பே அவற்றை மிகைக்கற்பனையாக ஆக்கும். இன்னொரு பக்கம் அவை யதார்த்ததுக்குள் நிற்கக்கூடியவையாக விளக்கப்பட்டிருக்கும். அல்லது அப்படி விளக்கத்தக்க மிகைக்கற்பனைக்கு மட்டுமே இந்தக்கட்டமைப்புக்குள் இடமிருக்கும். இந்நாவலில் யதார்த்தமும் மிகைக்கற்பனையும் கலக்கும் விதம் இது.

மகாபாரதத்தையே கூர்ந்து வாசித்தால் அந்த யதார்த்தவிளக்கத்துக்கு அதில் இடமிருப்பதைக் காணலாம். பத்துகாந்தார இளவரசியருக்குமாக நூறு பிள்ளைகள் பிறந்தன என்று சொல்லி பத்துபேரின் பெயரையும் மகாபாரதம்தான் அளிக்கிறது. காந்தாரி வயிற்றை கல்லால் அடித்து தசைப்பிண்டம் பிறந்து அது குழந்தையாக ஆன கதையையும் மகாபாரதம் அடுத்த அத்தியாயத்திலேயே அளிக்கிறது. இந்நாவல் முதல் விளக்கத்தை எடுத்துக்கொள்கிறது

அப்படி விளக்கப்பட முடியாத மிகைக்கற்பனை என நான் எழுதும்போது நினைத்தது துரியோதனன் பிறப்பு. ஆனால் வாசித்தநண்பர்கள் அது முழுக்கமுழுக்க சாத்தியமானதே என்று சான்றுகளைக் காட்டினர். 14 மாதம் வரை கரு நீண்டிருக்கும் மருத்துவப்பதிவுகள் உள்ளன. மிகப்பெரிய குழந்தைகள் பற்றிய நூற்றுக்கணக்கான ஆவணங்கள் உள்ளன. 12 கிலோ எடையுள்ள குழந்தை அதிகபட்ச பதிவு. குழந்தைகள் பல்லுடன் பிறப்பதும் அபூர்வமல்ல. அது Natal teeth எனப்படுகிறது. சொல்லப்போனால் உண்மையான செய்திகளைப்பார்த்து பிரமித்துவிட்டேன், அவை கற்பனையை வெல்கின்றன.

காந்தாரி இன்றைய பட்டான் வம்சத்தைச்சேர்ந்தவள். அவர்கள் மிகப்பெரிய உடல்கொண்டவர்கள். அவளுக்கு கொஞ்சம் அபூர்வமான இயல்புகள் கொண்ட ஒரு பிள்ளை பிறக்க பீதியடைந்து அதை ஒரு தொன்மமாக மாற்றிக்கொண்டுவிட்டார்கள் என்று ஒரு மருத்துவ நண்பர் சொன்னார். எல்லா மிகைக் கற்பனைகளுக்குள்ளும் வாழ்க்கையின் விசித்திரம் இருந்துகொண்டிருக்கிறது.

அதைப்போல நன்மைதீமைகளின் சமநிலை. அதை நாம் முடிவாகச் சொல்லிவிடவே முடிவதில்லை. சிகண்டி கீழை ஆசிய நாடுகளில் ஒரு முக்கியமான தெய்வ. ஸ்ரீகண்டி என வழிபடுகிறார்கள். கேரளத்தில் உள்ள துரியோதனன் சகுனி ஆலயங்களைப்பற்றி நண்பர் ஒருவர் சுட்டி அனுப்பியிருந்தார்

துரியோதனன் ஆலயம்

இந்த கத்திமுனை நடைதான் மகாபாரதத்தை கிளாஸிக் ஆக மாற்றுகிறது.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 80
அடுத்த கட்டுரைசமூகம் என்பது நாலுபேர்