‘ஆரம்பிச்சாச்சு சார்’ என்றார் .’தவக்களைங்கள அள்ளி தராசுத்தட்டுல போடுறமாதிரித்தான்னு வச்சுக்கிடுங்க. ஆனா வேற வழி இல்ல. இப்டியே விட்டா இவ்ளோ பெரிய விஷயம் இப்டியே அழிஞ்சுகூட போய்டும். அதான் படாப்பாடுபட்டு தொடங்கியாச்சு’
அவரையே எனக்கு அதிகம் பழக்கமில்லை. ஏதோ இலக்கியக்கூட்டத்தில் பார்த்தேனா? இல்லை சரவணபவனில் எனக்கு பின்னால் நின்று வேகமாகச் சாப்பிடும்படி என்னை ஊக்குவித்த முகமா? ‘நீங்க?’ என்றேன்.
அவர் ஏமாற்றத்துடன் ‘என்னையத் தெரியலியா சார்? நான்தான் கிரௌஞ்சன்’ என்றார்.
‘சார்?’ என்றேன்
‘கிரௌஞ்சன் சார்…எழுத்தாளர்’
‘எழுத்தாளரேவா?’
‘ஒருமாதிரி சொல்லிக்கலாம் சார்’
‘ஓகோ…சாரி சார் நான்லாம் அதிகமா குமுதம் விகடன் படிக்கிறதில்ல’
‘சேச்சே, அந்த கமர்ஷியல் குப்பைல்லல்லாம் யார்ங்க எழுதுவா? நான்லாம் சீண்டறதே இல்ல’
‘இல்லீங்க…நானெல்லாம் சாதாரண மிடில்கிளாஸ்.இந்த புரட்சிப்பத்திரிகைல்லாம் வாசிச்சா கெட்ட சொப்பனமா வருதுன்னு…’
‘அவன்லாம் ஃபேக்கு சார்…எங்கிட்ட கேளுங்க புட்டுப்புட்டு வைக்கிறேன்’
‘அப்ப…’
‘நான்லாம் லிட்டில் மேகஸீன்ல ஒண்டி எழுதறது. ஆனா இப்ப எழுதறதில்லை’
‘ஏன்?’ என்றேன்
‘நான்லாம் முன்னாளெழுத்தாளர் சார்’
‘ஓ’ என்றேன் புரியாமல் ‘அதாவதூ….’
‘அப்டி ஒரு தனீ குரூப்பு இருக்கு சார். இன்னிக்குத் தமிழிலக்கியத்தில ஆக்டிவா இருக்கிறவங்க நாங்கதான்.சொல்லப்போனா எழுத்தாளர்களும் நாங்களும் ஒண்ணுக்கு நாப்பத்திமூணூங்கிற விகிதத்தில இருக்கோம்’
‘ஓகோ’ என்றேன்.’அதாவதூ…எழுதறத நிப்பாட்டினவங்கதான் முன்னாளெழுத்தாளர்ங்களா?’
‘சேச்சே..நிப்பட்டணும்னு இல்ல சார்’
‘எழுதிட்டிருந்தாலுமா?’
‘அதெப்டி? எழுதறவங்கள்லாம் எழுத்தாளனுங்கள்ல?’என்றார் ‘நாங்க முன்னாளெழுத்தாளர் சார்’
‘புரியல சார்’
‘அதாவது சார், எழுதத் தொடங்காட்டிக்கூட முன்னாளெழுத்தாளர் ஆயிடலாம்’
‘அதெப்டீங்க?’
‘இதுல பலவகை இருக்குசார்.இப்ப என்னைய எடுத்துக்கிட்டீங்கன்னாக்க நான் 1986ல ஆகஸ்டு பத்தாம் தேதி வந்த கலாவாணிங்கிற சிறுபத்திரிகையிலே ‘ஊர்ந்து செல்லும் எறும்பு சேர்ந்து செல்லும் பாதை’ன்னு ஒரு கவிதைய எழுதினேன்’
‘தலைப்பு நல்லாருக்கு’
‘தலைப்பு கெடையாதுசார். நவீனக்கவிதைக்கு எதுக்கு தலைப்பு?’
‘அப்ப?’
‘நான் சொன்னதுதான் கவிதை. ஒம்போது வரியா மடிச்சு மடிச்சு எழுதியிருப்பேன்’
‘ஆறுவார்த்தைதானே இருக்கு’
‘எறும்புங்கிற வார்த்தைய நாலா ஒடிச்சு எழுதியிருப்பேன். பாத்தா எறும்பு ஊருற மாதிரியே இருக்கும்’
‘அதான் முதல் கவிதைங்களா?’
‘ஆமாங்க. அதுக்குமேலே கவித எழுதல’
‘கதைக்கு வந்திட்டீங்களா?’
‘இல்லீங்க. அப்ப என் வைஃபுக்கு காலில சிரங்கு மாதிரி ஒண்ணு வந்திச்சு. அதுக்கு டிரிட்டுமெண்டு எடுக்கிறது அது இதுன்னு அப்டியே லைஃப் போச்சு. அப்றம் மூத்தபொண்ணு பொறந்திட்டுது. அது என்னடான்னா கணக்கில வீக்கு. அப்றம் ரெண்டாவது புள்ள. அதுக்கு இங்கிலீஷ் வராது. என்னத்த சொல்ல,அப்டியே லைஃப் போய்டுச்சு சார்.நடுவில லோன்போட்டு வீடு கட்டினேன்.பிரமோஷன் ஆச்சு. கொஞ்சம் அப்டி இப்டி பைசா வரப்ப்போக இருந்ததனால நாலு பிளாட்டு வாங்கிப்போட்டேன்…நடுவில எங்கிட்டு எழுதறது?’
‘பாவம்தான்’
‘என்னைய மாதிரி ஏகப்பட்டபேரு இருக்காங்க சார். மூத்தவள கெட்டிக்குடுத்து அனுப்பியாச்சு. எளையவன் வேலைக்குப்போறான். சரி, ஒழியுதேன்னு வந்து பாத்தா இண்டர்நெட்டுங்கிறான். எலக்கியங்கிறான். எவனெவனோ வந்து தலகாணியா எழுதறானுக. சீனியருக்கு மதிப்பே இல்லாமப்போச்சு’
‘அப்டீங்களா?’
‘எம்பத்தாறுக்குப்பொறவு எலக்கியம் செத்துப்போச்சு சார்!’
‘ஓகோ’
‘அதான் எறங்கிட்டேன். மொதல்ல நானே எளுநூறு ரூவாய எறக்கி சுரோணிதம்னு ஒரு சிறுபத்திரிகையை ஆரம்பிச்சுட்டேன். அதில இந்த புதுடிரெண்டெயெல்லாம் போட்டு கிளிகிளின்னு கிளிச்சு நாலு கட்டுரைய போட்டு சாத்தினேன்.என்னோட கவிதைய படிக்காதவனையும் பாராட்டாதவனையும் நாறடிச்சிட்டேன்ல’
‘பிறவு?’
‘தமிழ்ச்சூழலோட விதி. லிட்டில் மாகஸீன் எவன் படிக்கான்? அதனால நேரா நானும் இண்டெர்நெட்டுக்கே போய்ட்டேன். ஃபேஸ்புக்ல ஒரு பேஜ் ஆரம்பிச்சாச்சு. எலக்கியம்னா அது சிறுபத்திரிகையில மட்டும்தான் இருக்கும்னு அதில இதுவரைக்கும் நாநூத்திச் சொச்சம் ஸ்டேட்டஸ் போட்டாச்சு. மூவாயிரத்துச் சொச்சம் செல்ஃபி வேற போட்டிருக்கேன்’
‘அது எதுக்குங்க?’
’நமக்கு வெளம்பரமே புடிக்காது சார். எதுக்கு மத்தவன் எடுக்கற போட்டோவ போடணும், சொல்லுங்க… ஃபேஸ்புக்கில நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு சார். நெறையபேர் லைக் பண்றாங்க’
‘சரிதான்’
‘ஏன்னா சின்னப்பசங்க நெறையபேரு பருவம், சிவப்புநாடா, சரோஜாதேவிதான் சிறுபத்திரிகைன்னு நெனைக்கிறான்… நானும் அப்டியே உட்டுடறது…நமக்கு பசங்க ஜமாதானே சார் தேவை?’
‘பின்ன?’
‘முன்னாளெளுத்தாளர்னா ஒரு மதிப்பு இருக்கணும்னு சகட்டுமேனிக்கு எல்லா எளுத்தாளரையும் வெய்யணும்னு தெரிஞ்சுபோச்சு சார். இன்னிக்கு எவன்லாம் எழுதறானோ அவன்லாம் எளுதவேகூடாது, எளுதுறவரைக்கும் விடமாட்டேன்ங்கிறதுதான் பாலிசி’
‘விமர்சனம் எளுதுவீங்களோ? அது நல்லதுதானே? முன்னாடி க.நா.சு கூட…’
‘இது வேறமாதிரிசார். விமர்சனம்லாம் எளுதினா ஃபாலோயர்ஸ் வரமாட்டானுக. இதெல்லாம் – த்தா -ம்மாளங்கிற மாதிரி ஒரு தனிமொழியில எழுதுறது. மெட்டாலேங்குவேஜுனு இத லத்தீனமேரிக்காவில தொரைங்க சொல்றாங்க. சும்மா ஜிகிர்ரா இருக்கும்…’
‘ஓ’என்றேன் ‘எனக்கு அதெல்லாம் கேட்டாலே கொஞ்சம் பயம் சார்’
‘அந்தப்பயம் இருந்தாத்தான் வேலைக்காகும் சார். அதை படிக்கிறதுக்குன்னு நல்ல கூட்டம் வந்திட்டிருக்கும்’என்றார். ‘பிரதோஷம், துவாதசி, செவ்வா சனி கெழமைகளில கூட்டம் அம்மும்’
‘சரி, நீங்க என்ன எளுதினீங்கன்னு கேக்கமாட்டாங்களா?’
‘எவன் கேப்பான்? வந்தோமா படிச்சோமா லைக்கு போட்டமா போனோமான்னு இருப்பான் சார். நான் என்னோட மொத்த படைப்புலகத்தையும் அப்டியே என் கூகிள் அக்கவுண்ட்டுக்கு புரஃபைலாவே வச்சிருக்கேன். அதை இதுவரை எவனுமே படிச்சதில்லேன்னா பாத்துக்கிடுங்க’
‘படைப்புலகம்னாக்க?’
‘அதான் அந்தக்கவிதை…நான் அதொண்டித்தான் எழுதியிருக்கேன்…சொன்னேன்ல?’
‘அப்ப சரி’
‘சுரோணிதம் கிரௌஞ்சன்னா இலக்கியத்தில ஒரு எடம் இருக்கு சார்…’
‘அப்டீங்களா?’
‘எலக்கியம்னாக்க அந்த எம்பத்தாறு ஆகஸ்டு கலைவாணி இதழ்தானே?’
‘அபப சரிங்க’
‘எவனுமே படிக்கிறதில்லை சார். நான்லாம் எம்பதஞ்சு எம்பத்தாறில எவ்ளோவ் படிச்சிருக்கேன். கணையாளி மூணு இஷ்யூ தீபம் ரெண்டு இஷ்யூ….அப்றம் அசோகமித்திரன் கதை மூணு…சுந்தர ராமசாமியோட வாள்வும் வசந்தமும் கதையக்கூட ஓரளவு படிச்சிருக்கேன்ன்னா பாத்துக்கிடுங்க…இப்ப இவனுகள்லாம் சும்மா டப்பா’
‘ஆமாங்க’
‘ஆனா எல்லாரையும் திட்டுறதனால நம்மளையும் எளுத்தாளன்தான்னு ஒத்துக்கிட்டானுக…அப்பதான் கண்டுபுடிச்சேன். எல்லா முன்னாளெழுத்தாளார்களும் ஃபேஸ்புக்கிலதான் இருக்காங்க. அங்க இங்க செதறிக்கெடக்கிறாங்க’
‘எல்லாருமே எழுதாதவங்களா?’
‘ஆமாங்க. ஒரு புக்கு போட்டவரு,ஒரு கவித எளுதினவரு,எளுத நினைச்சவரு, நினைச்சவர தெரிஞ்சவரு, அவருக்கு வாங்கி ஊத்தினவருன்னு பலவாக்கில இருக்காங்க. எல்லாருமே இப்ப எளுதுறவங்கள கடுமையா விமர்சனம் பண்ணிட்டுக்காங்க. இதில சேலம் நாமக்கண்ணுன்னு ஒருத்தர் புள்ளையார் சுழி மட்டும்தான் போட்டிருக்கார். எம்பத்தேளு வயசாவுது. அவருதான் சீனியர்.அவருகூட இப்ப எளுதியிருந்தாரே. எளுத்தாளனுக்கு மரியாத இல்லாத நாடு உருப்படாதுன்னுட்டு’
‘நான் ஃபேஸ்புக்லாம் வாசிக்கிறதில்லீங்க’
‘அப்டீங்களா? ஏகப்பட்ட எளுத்து இருக்குங்க. இப்ப ஜாஸ்தி எளுதறதே முன்னாளெளுத்தாளருங்கதான். தெனம் பத்து கட்டுரை எளுதறவங்ககூட இருக்காங்க’
‘அப்ப அவங்க எப்டிங்க முன்னாளெழுத்தாளர் ஆகமுடியும்?’
‘இன்னாளெளுத்தாளர்லாம் எளுதவே கூடாதுன்னுதானே நாங்கள்லாம் எளுதறோம்’
‘அப்டி என்னதான் எழுதுவீங்க?’
‘வையறதுதான்… எதையும் எப்டியும் வையலாம்ங்க. இப்ப முன்னாள்கவிஞர் குஞ்சரகேசரி ஒரு எளுத்தாளரோட கட்டுரையில பங்சுவேசன் அம்புட்டும் தப்புன்னு சொல்லி கிளிகிளின்னு கிளிச்சுட்டார். அப்றம் பாத்தா கம்யூட்டர் முன்னாடி ஒக்காந்து பொடிபோட்டு தும்மிட்டு கட்டுரைய படிச்சிருக்கார். இவரு கமா புள்ஸ்டாப்புன்னு நினைச்சது அம்பிடும் ஸ்கிரீன்ல விளுந்த மூக்குப்ப்பொடிப்புள்ளிங்க….விடுவாரா? அவரோட கட்டுரை வாசிச்சா தும்மலு வருதுன்னு அடுத்த கட்டுரைய எளுதிட்டாருல்ல?’
‘இப்ப நீங்க இருவத்தஞ்சு வருசமா ஒண்ணும் தெரிஞ்சுக்கல. உங்களுக்கு இன்னிக்குள்ள எலக்கியம் ஒண்ணும் புரியாதே’
‘ஏன் புரிஞ்சுகிடணும்? எம்பத்தாறில நான்லாம் எளுதின எலக்கியம் இருக்கே? நீங்க அத வந்து புரிஞ்சுகிடுங்க…ஆறாயிரம் பேருக்கு என் படைப்புலகத்த எஸ்.எம்.எஸ் பண்ணினேன். எவனும் வாசிக்கல. எலக்கியத்துக்கான மரியாத அந்த லெச்சணத்தில இருக்கு. நாயிங்கள விடமுடியாது. ரெண்டுல ஒண்ணு பாத்திருவோம்’
நான் பெருமூச்சுவிட்டேன்
‘அதான் இப்டி எல்லாரையும் ஒண்ணாச்சேக்கலாம்னு முடிவுசெஞ்சுதான் முன்னாளெழுத்தாளார் டாட் காம்னு ஒண்ணு ஆரம்பிச்சிருக்கு. இதில எல்லா முன்னாளெழுத்தாளருங்களும் ஒண்ணாச்சேர்ந்து எலக்கியத்த வளக்கப்போறம்… நெறையபேரு இருக்கம்…. எல்லாருக்கும் நல்லா வெய்ய வருது…’
‘அப்டீங்களா?’
‘ஆமா. அம்புடுபேரும் சேந்தா தமிழ்நாடே அலறணும். தாளி, இனிமே எவனும் எதுவும் எளுதப்பிடாது.தப்புதப்பாவா எளுதுறீங்க? எங்க படைப்புலகத்தில ஒரு தப்பு உண்டா? இப்ப நம்ம கச்சேரிச்சாமி கவித எளுதியிருக்கார். பதிமூணு கவித. அவருக்கு ஒரு அங்கீகாரம் உண்டா?’
‘நல்ல கவிதைங்களா?’
‘நல்ல கவிதைதான்… அதேமாதிரி பிரமிள் முன்னாடியே எளுதினார்னா பிரமிளையும் சேத்துப் பாராட்டு….அவர எப்டி விடலாம்? இல்ல கேக்கிறேன்’
‘ஓகோ’
‘எம்பத்தாறிலேயே எளுதியாச்சுல்ல? அப்ப எலக்கியம் இருந்த காலம்ல? அவனவன் எளுவதிலேயே எளுதிட்டிருக்கான்…இப்ப எதுக்கு இந்த டாட்காம்னா திட்டுற வெறியில நாங்க முன்னாளெளுத்தாளார் ஒருத்தர ஒருத்தர் வைய ஆரம்பிச்சிரக்கூடாதுல்ல…அதான்’
‘நல்ல விஷயம்தாங்க…நான் கொஞ்சம் அவசரமா—‘ என்று கிளம்பினேன்.
‘எதுக்கு பாக்கவந்தேன்னா நீங்க நல்ல எனர்ஜெட்டிக்கா எளுதறீங்க. எதுக்கு உளைப்பை வீணடிக்கணும்? முன்னாளெளுத்தாளரா வந்து எங்ககூட சேந்துட்டு மிச்ச பேத்த வையலாமே..நெறைய லைக்கு விளும். ஃபேஸ்புக்கில லைக்குக்கு காசு குடுக்கிற ஐடியா கூட இருக்காம். அப்ப ராயல்ட்டி கூட வரும்’
‘இல்ல சார்..நான்லாம்’
‘முன்னாளெழுத்தாளர் ஆகிறதுதான் சார் ஈஸி… எழுத்தாளரா இருக்கிறது கஷ்டம்ங்க…திட்டுவாங்கணும்ல?’
‘முன்னாளெழுத்தாளர திட்டமாட்டாங்களா?’
‘எதவச்சு திட்டுவான்? நாங்கதான் ஒண்ணும் எழுதலியே….ஹெஹெஹெஹெ…வெய்யறத வச்சு திட்டுனா அதவச்சே மறுக்கா வைவோம்ல? ஹெஹெஹெ’
‘அதுசரி’ என்றேன்
‘பொதுவா நம்மாளுங்க நல்லமனசுக்காரனுக. முன்னாளெழுத்தாளன்னாலே பரிதாபப்படுவாங்க. பாவம் அவருக்கு அங்கீகாரமே இல்லேன்னு சொல்லிடுவானுக…என் படைப்புலகத்த படிக்காதவன்லாம் பரிதாபமா உச்சு உச்சூன்னு சொல்றான்னா பாத்துக்கிடுங்க… அன்னிக்கு புத்தகக் கண்காட்சியில என்னையப்பார்த்த நாலஞ்சுபேரு அப்டியே கண்ணால தண்ணி விடுறான்…அதுக்குன்னே ஜிப்பாவ போட்டுட்டு கையில பழைய கலைவாணி எதழோட கெளம்பிடுறது…’ என்றார் ‘வந்திருங்க. வீயாரெஸ் குடுத்திட்டீங்கள்ல?’
‘ஆமா சார்’
‘அல்ஸர், சுகர் ,பிரசர் இருக்கா?’
‘இல்லீங்க’
‘வேணுமெ’ என்று கவலையுடன் ‘அப்ப என்ன இருக்கு?’ என்றார்
‘இப்பல்லாம் லேசா முதுகுவலி…’
‘போரும்…தாராளமா போரும்…வந்திருங்க. நான் சொல்றேன். நீங்க முன்னாளெழுத்தாளர். அந்தக்காலத்திலேன்னு சொல்லி கண்ணச்சொருகிக்க உங்களுக்கு ரைட் இருக்கு. அம்புட்டுப்பேரையும் கிளி கிளீன்னு சும்மா பச்சக்கிளியா கிளிச்சிரலாம்… ஒரு அட்மிசன் போட்ரலாங்களா?’ என்று ஃபைலை திறந்தார்.
‘பாக்கிறேன்’என்றேன் ‘ஒருவார்த்தை பொஞ்சாதி புள்ளைங்ககிட்ட சொல்லிட்டு வந்திடறேன்…’ என்றேன்
‘அது நியாயம்…இந்தாங்க கார்டு வச்சுகிடுங்க’ என்று நீட்டி ‘எலக்கியம்லாம் இப்ப எவன் சார் எளுதறான். 1986 ஆக்ஸ்ட் பத்தாம்தேதி கலாவாணியோட எல்லாம் முடிஞ்சுபோச்சு’ என்று பெருமூச்சுவிட்டபின்’வாறேன்’ என்றார்
மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Jul 12, 2014