அன்புள்ள ஜெயமோகன்,
சு வேணுகோபால் என்றபெயரை அவ்வப்போது கேள்விப்பட்டு வந்திருந்தாலும் நான் அவரது எந்த ஆக்கத்தையும் இதுகாறும் வாசிக்க நேரிட்டதில்லை. ஒருமுறை புத்தகக் கண்காட்சியில் தமிழினி மையத்திற்குச் சென்றபோது அவரது சிறுகதைத்தொகுதி ஒன்றை வாங்கும்படி அந்த பதிப்பாளர் என்னை கேட்டுக்கொண்டார். அவ்வாறு கேட்டுக்கொள்வது சரியல்ல என்று எண்ணியமையால் நான் வாங்கவில்லை. அந்த பதிப்பாளருக்கு வேண்டிய அல்லது அவரே எழுதும் நூல்களை மட்டுமே பொதுவாக அங்கனம் வருந்தி விற்பது வழக்கம். அவை தரமானவையாக இருப்பதுமில்லை.
ஆனால் இப்போது தங்கள் கட்டுரையை வாசிக்கையில் ஆச்சரியமும் வருத்தமும் உருவாகிறது. சு.வேணுகோபால் தமிழின் முக்கியமான எழுத்தாளர் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அவரது பல கதைகள் தமிழில் எழுதப்பட்ட சிறந்த கதைகளின்பாற்படும் என்கிறீர்கள். அப்படியானால் கவனிக்கப்படாது போன ஒரு நல்லநூல் வாசகர் கவனத்திற்கு வரவேண்டுமென்றே அப்பதிப்பாளர் முயன்றிருக்கிறார். அது போற்றத்தக்க ஒரு பண்பே. வருந்துகிறேன்.
சு.வேணு§கோபாலின் நூல்களை வாசிப்பதாக இருக்கிறேன் என்பதை தெரியப்படுத்துகிறேன்
வழுதி
அன்புள்ள வழுதி அவர்களுக்கு
சு வேணுகோபால் முக்கியமான எழுத்தாளர் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர் கவனிக்கப்படாது போனமைக்கு இரு காரணங்கள். ஒன்று அவர் கதைகள் நாவல் மட்டுமே எழுதியிருக்கிறார். கட்டுரைகள் போன்ற சமகால விஷயங்கள்மூலம் கவனம் ஈர்க்கவில்லை. இரண்டு அவரது கச்சாவான மொழிநடை காரணமாக சாதாரண வாசகர் உள்ளே நுழைவதற்கு சிறு தடை உள்ளது உள்ளே நுழைந்தால் அது ஒரு முக்கியமான படைப்புலகமே
ஜெ
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு
சு.வேணுகோபால் கதைகள் குறித்த தங்களின் பதிவை வாசித்து நெகிழ்ந்தேன்.
தொண்ணூறுகளின் இறுதியில் வெளிவந்த அவருடைய நுண்வெளி கிரகணங்கள் நாவலை வாசித்தபோது நாவல் குறித்த மதிப்புரை அல்லது விமர்சனங்களை சிறுபத்திரிகைகளில் தேடினேன். தி.சு. நடராஜன் நிகழில் எழுதியிருந்ததைத்தவிர வேறு எதையும் குறிப்பிடும்படியாக காணமுடியவில்லை. ஒரு முக்கிய படைப்பாளி போதிய அளவிற்கு கவனப்படுத்தப்படாமல் விடப்பட்டது வருத்தம் அளித்தது.
சமீபத்தில் மதுரையில் நடந்த இலக்கிய சந்திப்பு ஒன்றில் ஒரு வாசகனாக கலந்துகொண்டபோது சு.வேணுகோபால் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது அவருடைய வெண்ணிலை சிறுகதைத் தொகுப்பு மற்றும் திசையெல்லாம் நெருஞ்சி குறு நாவல் தொகுப்பு ஆகியவற்றைப் பற்றி அவர் குறிப்பிட்டபோது அவற்றை நான் வாசித்திருக்கவில்லை. அதன் பின்னர் அவற்றை தேடிப்பிடித்து வாசித்துவிட்டேன். படித்து முடித்தவுடனே, உடனடியாக அக்கதைகள் குறித்தும் அவற்றின் நுட்பஙகள் குறித்தும் அக்கதைகளைப் படித்த யாருடனாவது பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற பேராவல் எழுந்தது. அது சாத்தியமாகாத அவஸ்தையிலிருந்த எனக்கு தங்களின் பதிவு ஒரு வடிகாலாகவே இருந்தது. கதைகளைப் படித்தபோது எனக்கு தோன்றியவற்றை பிரதியெடுத்தது போலிருந்தது. திசையெல்லாம் நெருஞ்சி குறு நாவல் தொகுப்பு குறித்தும் நீங்கள் எழுதவேண்டும்.
முக்கிய படைப்புகளை இனம் கண்டு அவற்றை சிறப்பாக அறிமுகம் செய்யும் தங்களின் பணி போற்றுதலுக்குரியது.
அன்புடன்
ராஜகாந்தன்
அன்புள்ள ராஜகாந்தன்,
உங்கள் கடிதம்.
சு.வேணுகோபாலின் வாசகர்கள் பல வகையிலும் சிதறிக்கிடக்கிறார்கள். ஆனால் புத்தகக் கண்காட்சியில் அவரை தேடிக்கேட்டு வாங்கும் வாசகர் பலரை நான் கண்டிருக்கிறேன். பொதுவாக சமூக-பண்பாட்டு விமரிசகனின் பணியையும் ஆறறக்கூடிய, அல்லது இதழியலுக்கு தீனிபோடக்கூடிய எழுத்தாளர்களுக்கே வாசகர் அதிகம்.
ஜெ