கல்விக் களைகள்

இன்று காலை [12-5-2014] தினத்தந்தியில் ஒரு செய்தியை வாசித்தேன். பின்னணி இதுதான். தமிழகத்தில குமரிமாவட்டத்துக்கும் நெல்லைக்கும் கல்வியில் முதன்மையான இடம் இருந்த ஒரு காலகட்டம் இருந்தது. சென்ற பலவருடங்களாக அதில் சீரான சரிவு உள்ளது. அதற்கு முதன்மைக்காரணமாக இருப்பது புகழ்பெற்ற கிறித்தவக் கல்விநிறுவனங்களின் தரவீழ்ச்சி. உள்ளரசியல், ஆசிரியர் நியமன ஊழல் ஆகியவற்றால் அவை சீரழிந்துகொண்டிருக்கின்றன.

இன்னொரு பக்கம் இங்குள்ள வீரியம்மிக்க தொழிற்சங்க அரசியலின் பாதுகாப்பு காரணமாகவும் உபதொழில்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் காரணமாகவும் நம்பமுடியாத அளவுக்கு பணவரவுள்ள டியூஷன் கொள்ளை காரணமாகவும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனேகமாக எதையுமே கற்பிப்பதில்லை என்பது. [விதிவிலக்காக மிகுந்த அர்ப்பண உணர்வுடன் செயல்படும் பல பள்ளி ஆசிரியர்களையும் நான் நன்கறிவேன். அவர்களின் சேவை பற்றிய மதிப்பை பலமுறை பதிவும் செய்திருக்கிறேன்]

குமரிமாவட்டத்தில் அரசுக்கல்வியின் தரத்தை மேம்படுத்த தொடர்ச்சியாக சில உண்மையான முயற்சிகளை ஆட்சியர் நாகராஜன் மற்று முதன்மைக்கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்துவருகிறார்கள். ஆசிரியர்களை கடுமையாகக் கண்காணித்து முழுமையாக வகுப்புக்கு வரச்செய்வதுதான் முதல் பணியாக எடுத்துக்கொள்ளப்பட்டது. குமரிமாவட்ட மாணவர்கள் இயல்பாகவே படிக்கும் மனநிலை கொண்டவர்கள். குடும்பச்சூழல்களும் படிப்புக்கு சாதகமானவை.

கன்யாகுமரி முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன்

அம்முயற்சிக்கான விளைவுகளும் ஓரளவு கைகூடியது. 2011-12 ஆம் வருடத்தில் மாநில அளவில் பத்தாம் வகுப்புத்தேர்வில் ஐந்தாவது இடத்திலிருந்த குமரிமாவட்டம் 2012-13 ஆம் வருடத்தில் முதலிடத்தை பிடிக்க முடிந்தது. பிளஸ் டூ தேர்வில் 2011-12 ஆம் ஆண்டு 13 ஆவது இடத்தில் இருந்த குமரிமாவட்டம் 2012-13 ஆம் வருடத்தில் ஆறாவது இடத்தைப்பிடித்தது. இன்றைய சூழலில் அதிகாரிகள் இப்படி தனிப்பட்ட முயற்சிகளை எடுத்துக்கொண்டு பொதுநலம் கருதி செயல்படுவது மிகமிக அபூர்வம். சென்ற வருடம் இதைப்பற்றிய பாராட்டுக்கள் இங்கே நிலவியதைக் கேட்டேன். அரசுப்பள்ளிகளில் சேர்க்கும் ஆர்வமும் ஓரளவு உருவாகியது.

ஆனால் இந்த வருடம் தொடக்கம்முதல் ‘அதிகாரிகளின் கொடுங்கோன்மை’க்கு எதிரான ஆசிரியர் சங்கங்களின் முழக்கங்கள் எழத் தொடங்கின. துண்டுப்பிரசுரங்களும் சுவரொட்டிகளும் கண்ணுக்குப்பட்டன. விளைவு இந்தத் தேர்வுமுடிவுகளில் வந்தது. பிளஸ்டூ தேர்வில் குமரிமாவட்டம் ஆறாவது இடத்திலேயே இருந்தது. மாவட்டம் முழுக்க கல்வியதிகாரிகள் தனிக்கவனம் எடுத்துக்கொண்டு நடத்திய சிறப்பு வகுப்புகள், தனிப்பயிற்சிகள் எவையும் பயன் தரவில்லை.

என்ன காரணமென்று நோக்கி பணியில் கவனமில்லாமலிருந்த மூன்று தலைமை ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறையாகப் பணியாற்றாத இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லீலாவதி பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். படந்தாலுமூடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணதாஸ், பளுகல் தலைமை ஆசிரியர் சசிதரன் ஆகியோர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள். தொடர்ந்து விடுப்பில் இருந்தும் வகுப்புகளை முறையாக நடத்தாமலும் இருந்த 12 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

இதற்கு எதிர்வினையாற்றிய தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலப்பொருளாளர் வள்ளிவேலு இந்த நடவடிக்கையைக் கண்டித்து அரசுக்கு எச்சரிkகை விடுத்துள்ளார். அவரது அறச்சீற்றம் இரு அடிப்படைகளில். ஒன்று இப்படி ஒரு நடவடிக்கை பிற மாவட்டங்களில் நடக்கவில்லை. இரண்டு இப்படி நடவடிக்கை எடுக்க மாநில அரசின் கல்வித்துறை ஆணையிடவில்லை. ஆகவே உடனடியாக நடவடிக்கைகளை திரும்பப்பெறாவிட்டால் போராடுவார்கள்!

 

 

அடுத்தநாள் [14- 5-௨014] மாவட்டக் கல்வியலுவலரை முற்றுகையிடும் போராட்டம் நடந்திருக்கிறது. மாவட்ட கல்வியலுவலர் மீது ‘கடுமையான நடவடிக்கை’ தேவை என்று ஆட்சியரிடம் மனுவும் கொடுக்கப்பட்டிருக்கிறதுஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பு ஆசிரியர் கழகம், தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த நிர்வாகிகள் அமைச்சர் பச்சைமாலை நாகர்கோவிலில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து முறையிட்டனர் என்கிறது செய்தி.

அரசுப்பணியின் சீரழிவுகளுக்கு முக்கியமான காரணமே அங்கே பொறுப்பேற்பதென்பதே இல்லை என்பதுதான். ஒரு பொறியாளர் மிகச்சிறப்பானது என பரிந்துரைத்த பாலம் இடிந்துவிழுந்தால் அந்தப் பொறியாளர் அதில் பொறுப்பேற்கவேண்டியதில்லை. சாலைகள் ஆறே வாரத்தில் மழையில் கரைந்துபோனால் மழையைத்தவிர எந்த சக்திக்கும் அதில் பொறுப்பில்லை. அரசின் முக்கியமான கோப்புகளே காணாமலாகின்றன, எவரும் பொறுப்பல்ல.

அரசு செயல்படும் விதத்தில் இந்த பொறுப்பேற்காத தன்மை மெல்லமெல்ல உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்று அத்தனை செயல்பாடுகளுக்கும் கூட்டுப்பொறுப்பு இருக்கும். ஒரு அதிகாரி கையெழுத்திடுவதென்றால் பத்துபேர் அதில் பரிந்துரை, வழிப்படுத்தல், நெறிப்படுத்தல் கையெழுத்துக்கள் போட்டிருப்பார்கள். கூட்டுப்பொறுப்பு என்பதற்கு எவருக்கும் அதில் தனிப்பொறுப்பில்லை என்றே நடைமுறையில் பொருள். பெரிய அளவில் ஊடகங்கள் மூலம் சிக்கல் எழுமென்றால் [கும்பகோணம் பள்ளி விபத்து போல] கடைசிநிலையில் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர் ஒப்புக்கு தண்டிக்கப்பட்டு, சிலநாட்களில் அந்தத் தண்டனையும் ரத்துசெய்யப்படும்.

இன்னொன்று ஊழியர்சங்கங்கள். அவை ஊழியர்களுக்கான வழக்கறிஞர்கள் சபைகள்தான். ஊழியர்களின் பிழைகளை அவர்களிடம் பேசவே முடியாது. அவர்களால் ஊழியர்களை கட்டுப்படுத்தவும் வழிநடத்தவும் முடியாது. தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்திடம் அதன் ஊழியர்களின் பணிப்பிழைகளை அல்லது பொறுப்பின்மைகளைப்பற்றி சொல்லமுடியுமா? அது எங்கள் வேலை இல்லை என்பார்கள். ஆனால் அந்த ஊழியர்கள் எளியமுறையில் தண்டிக்கப்பட்டால், ஏன் எச்சரிக்கப்பட்டால்கூட போராடக்கிளம்பி வருவார்கள். பணிகளை உறையச்செய்வார்கள்.

ஊழியர்கள் அளிக்கும் மாதாந்தர கப்பம் என்பது இச்சேவைக்கான கூலிதான். சங்கத்தலைவர்கள் ஒருவகை குற்றவியல் வழக்கறிஞர்கள் மட்டுமே. சங்கத்துக்கு வலுவான அரசியல்பின்னணியும் இருக்குமென்பதனால் அதிகாரிகள் அதை அஞ்சுவார்கள். பல சங்கங்கள் ‘புரட்சிகரமானவை’யும் கூட!

மிக அபூர்வமாகவே தமிழகத்தில் ஏதேனும் பிழைகளுக்காக அரசூழியர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். பணிக்குப் பொறுப்பேற்கும்படி கோரப்படுகிறார்கள். அந்நடவடிக்கைகள் உடனடியாக சங்கங்களால் தோற்கடிக்கப்படுகின்றன. ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை ஊழியர்களின் பொறுப்பற்ற செயலால் நோயாளிகள் பாதிக்கப்படும்போதெல்லாம் உடனடியாக இரண்டு விஷயங்கள் நிகழும். ‘அப்பாவி’ ஊழியர்களை பழிவாங்காதே என சங்கம் கொடிபிடிக்கும். மிகச்சிலநாட்களிலேயே ‘மக்கள் விரோத அதிகாரிகளை வேலைநீக்கம் செய்’ என இன்னொரு போராட்டத்தை அச்சங்கங்களை உள்ளிட்ட கட்சிகள் முன்னெடுக்கும்.

பள்ளி ஆசிரியர்களில் பலர் எப்படிச் செயல்படுகிறார்கள் என நான் அறிவேன். என் மகன் எஸ்.எல்.பி பள்ளியில் பிளஸ் டூ படிக்கையில் வீட்டில் வந்து கண்ணீர்விடுவான். ‘எனக்கு டியூஷன் இருக்கு அப்பா. ஆனா எங்கூட படிக்கிற பையங்க காலையிலயும் சாயங்காலமும் கூலிவேலைக்கு போயிட்டு பள்ளிக்கு வாறவங்க. எங்கிட்ட டியூஷனுக்கு வா சொல்லித்தாறேன். இங்க சொல்லித்தரமுடியாது. எங்க வேணுமானாலும் போயிச் சொல்லுன்னு முதல் நாளே பாதி டீச்சர்ஸ் கிளாஸிலே சொல்லிட்டாங்க. பையங்க அழுறாங்க. டேய் கொஞ்சம் மத்தியான்னம் சொல்லிக்குடுடா. எப்டியாவது பிளஸ்டூ பாஸாயிடுறேண்டா. இல்லேன்னா லைஃபே இல்லடான்னு கெஞ்சறாங்க. எனக்கே பெரிசா ஒண்ணும் தெரியாதுப்பா. என்ன செய்றது?’ என்பான்.

ஈரோட்டுப்பக்கம் பழங்குடியினருக்கான உண்டு-உறைவிடப்பள்ளிகளில் பெரும்பாலும் ஆசிரியர்கள் செல்வதே இல்லை என்பதை அங்கே பயணம்செய்யும்போது நண்பர்களுடன் சென்று பார்த்திருக்கிறேன். ஈரோட்டிலேயே இருந்துகொண்டு மாதம் ஒருமுறை சென்று வருவார்கள். சத்துணவு சமைப்பவர்கள்தான் ஆசிரியர்பணியும் செய்கிறார்கள். [விதிவிலக்காக ஒருவரை பார்த்தேன். தன் சம்பளத்தையும் மாணவர்களுக்காக செலவழிப்பவர்] பள்ளிக்கு வராத ஆசிரியை ‘எப்டி சார் வரமுடியும்? எனக்கு ஹஸ்பெண்ட் குழந்தைகள்லாம் இருக்குல்ல? என் கடமையை நான் செய்யவேண்டாமா?’ என்று கண்ணீர் மல்க கேட்டதாகச் சொன்னார்கள்.

[தமிழகக் கல்வித்துறையில் உள்ள ஆசிரியைகளில் சற்றேனும் பாடம் நடத்துபவர்கள் அரை சதவீதம் இருந்தாலே ஆச்சரியம். திருமணமாகி குழந்தை பெற்றதுமே வேலையை ஒப்பேற்றிவிட்டு வீடுதிரும்புதல், முடிந்தவரை விடுப்பு எடுத்தல்தான் அவர்களின் வழிமுறையாக இருக்கிறது. சமூகம் என்ற ஒன்று இருக்கும் தகவலே அவர்களுக்குத் தெரியாது என்னும்போது என்ன சமூகப்பொறுப்பு? மேலும் அடிப்படை அறவுணர்ச்சி கொண்ட படித்த பெண்கள் இங்கே வைரங்களுக்குச் சமம். எங்காவது தோண்டித்தான் எடுக்கவேண்டும். தனக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் கோயில்சொத்தை கொள்ளையடிக்கவும் தயங்காத குடும்பவிளக்குகளே பெரும்பான்மை. இதை பலநூறு முறை நேரில் கண்டு திகைத்திருக்கிறேன்]

இச்சூழலில் மிக அபூர்வமாக நடக்கும் ஒரு செயல் அதிகாரிகள் பொறுப்பேற்றுக்கொள்வது. அதற்கு எதிராக இருப்பவர்கள் ‘ஒருங்குதிரண்ட உழைப்பாளி வர்க்கமான’ ஊழியர்கள். அவர்களுக்கு ஆயிரம் நியாயங்கள் இருக்கலாம். அவர்கள் ஊழியர்களுக்கு ‘சேவை’ ஆற்றவில்லை என்றால் அவர்கள் வேறுபக்கம் சென்றுவிடுவார்கள். ஆனால் அந்த கூலிச்சேவையை மக்கள் நலன் கருதி செய்வதாகச் சொல்வதைத்தான் தாங்கமுடியவில்லை.

இவ்வருடம் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு ஒன்றை அரசு நிகழ்த்தியது. இந்தியாவின் தலைநகரம் எது? ஒன்றும் பத்தும் கூட்டினால் என்ன விடை வரும்?– தரத்திலான வினாக்கள். சாலையில் மூட்டைதூக்குபவர்கள் எழுதினால் முக்கால்வாசிப்பேர் ஜெயிப்பார்கள். ஆனால் ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் படுதோல்வி அடைந்தனர். தேர்வின் தரத்தைக் குறைக்கவேண்டும் என்று போராடி தரம் மேலும் அடிமட்டத்துக்கு குறைக்கப்பட்டது. இந்தியாவின் தலைநகரம் டெல்லி அல்லவா – அளவுக்கு.

அதிலும் பாதிப்பேர் தோல்வி. மேலும் தரத்தைக் குறைக்க நீதிமன்றம் சென்றனர். தரமே இல்லாமல் தேர்வு நடந்து அவர்கள் எல்லாரும் வென்றனர். பணி உறுதியும் பெற்றனர். பதிலே எழுதவேண்டாம் தாளை அரைமணிநேரம் முறைத்துப்பார்த்தாலே போதும் என்ற அளவுக்கு தரம் குறைக்கப்பட்டிருக்குமென ஊகிக்கலாம்.

இவர்கள் கடைசியாக எதையாவது எழுத்துக்கூட்டி வாசித்ததே வேலை கிடைத்த அன்றுதான் என நினைக்கிறேன். தினத்தந்தியைக்கூட நம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் வாசிக்க முடியவில்லை என்கிறார்கள் இத்துறையில் சேவை செய்பவர்கள். ஈவிரக்கமில்லாமல் இந்தக்கும்பலை வேலைநீக்கம் செய்துவிட்டு தகுதியுடையவர்களை வேலைக்கு எடுத்திருக்கவேண்டும். இன்று இவர்களின் ஊதியம் கணிப்பொறி நிபுணர் ஒருவர் வாங்கும் தொடக்கச்சம்பளத்துக்கு நிகர். தகுதியானவர்கள் வரிசைகட்டி நின்றிருப்பார்கள்.

ஆனால் செய்யவில்லை. காரணம், ஒன்று முக்கால்வாசிப்பேர் அரசியல்வாதிக்கு லஞ்சம்கொடுத்து பணிக்குச்சேர்ந்தவர்கள். இரண்டு, இதனால் எதிர்காலம் பாழாகிறவர்கள் பணம்கட்டி தனியார் பள்ளியில் படிக்கமுடியாத ஏழைக்குழந்தைகள்தான். அறிவுஜீவிகள் அதைப்பற்றி பேசவேண்டிய தேவை இல்லை.

[தினமணி நாளிதழ் இன்று இதைப்பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது]


கன்யாகுமரி முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் செய்தி

பழைய கட்டுரைகள்

தேர்வு

ஒரு சாவு

கொட்டடிகள் வேதபாடசாலைகள்

பேராசிரியர்கள் குறித்த விவாதம்

கல்வி இன்னொரு கடிதம்

கல்வி கடைசியாக

ஓர் ஆசிரியரின் கடிதம்

இந்தப்பெற்றோர்கள் கல்விபுராண்ம்

வயதடைதல்

அறிவியல்கல்வியும் கலைக்கல்வியும்

முந்தைய கட்டுரைவேலை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 82