‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 87

பகுதி பதினேழு : புதியகாடு

[ 6 ]

மீண்டும் சதசிருங்கத்திற்கு திரும்பும்போது மாத்ரி கருநிறைந்திருந்தாள். குந்தியின் கைககளைப்பிடித்தபடி பீமன் நடந்து வந்தான். மூன்று வயதே ஆகியிருந்தாலும் அவன் குந்தியின் இடையளவுக்கு வளர்ந்திருந்தான். ஏழுமாதத்திலேயே அவன் எழுந்து நடக்கவும் மலைப்பாறைகளில் தொற்றி ஏறவும் தொடங்கியதைக்கண்டு மாண்டூக்யர் “சூதர்களிடம் பிரம்மன் விளையாடுகிறான். அவர்களுக்கு தங்கள் சொல்லினால் பிரம்மனுடன் போட்டியிடுவதாக ஓர் எண்ணம். இத்தகைய ஒருவனை அவர்கள் மக்கள் நம்பும்படி எப்படி பாடப்போகிறார்கள் என்று அவன் மண்ணை நோக்கி புன்னகைசெய்கிறான்” என்றார். பெரிய பாறைக்கற்களைத் தூக்கி மலைச்சரிவில் வீசி எம்பிக்குதித்து கூச்சலிட்டு விளையாடிக்கொண்டிருந்த பீமனைநோக்கி குந்தி புன்னகைசெய்தாள்.

ஒவ்வொருநாளும் அவன் வல்லமை ஏறி ஏறி வந்தது. பகலெல்லாம் புஷ்பவதியின் கரையிலும் மலைச்சரிவிலும் மான்களைத் துரத்தியபடி ஓடி அலைந்தான். மலைச்சரிவுப்பாறைகளில் ஏறி உச்சியில் நின்றுகொண்டு அப்பால் தெரிந்த நந்ததேவியையும் பன்னிருதம்பியரையும் பார்த்து நின்றான். மலையிலும் காட்டிலும் அவனுக்கு வகைவகையான உணவுகள் கிடைத்துக்கொண்டிருந்தன. காய்கனிகள், கிழங்குகள், மான்கள், காட்டுப்பன்றிகள், உச்சிமலைக்குடைவுகளில் கனிந்து தொங்கிய மலைத்தேன்கூடுகள். அவன் வாய்க்குள் நாக்கு எரிகுளத்துத் தழல் போல எப்போதும் சுழன்றாடிக்கொண்டிருந்தது.

சதசிருங்கத்துக்கு திரும்புவதைப்பற்றி குந்திதான் சொன்னாள். “அவனுக்குரிய முடிவில்லாத உணவு அங்குதான் உள்ளது. குளிர்காலத்தில் இங்கே மிருகங்கள் வாழ்வதில்லை” என்றாள். மாண்டூக்யர் அதை ஒப்புக்கொண்டார். “சதசிருங்கம் மீண்டும் முளைத்தெழுந்திருக்கும். காட்டுத்தீ காட்டைஅழிப்பதில்லை. தூய்மைசெய்கிறது” என்றார். வேனிற்காலம் முடிந்து குளிர்காற்று வீசத்தொடங்கியதும் அவர்கள் திரும்பினர். மலையிறங்குவதில் தேர்ந்த பிரம்மசாரிகளுக்கு நிகராகவே பீமனும் சென்றான். அனகை “இளவரசே… சமரா, இளவரசை பார்த்துக்கொள்” என்று கூவினாள். குந்தி புன்னகையுடன் “அவனால் ஆகாதது ஏதுமில்லை அனகை” என்றாள்.

வலத்தோளில் தருமனையும் இடத்தோளில் பார்த்தனையும் சுமந்தபடி முன்னால் சென்ற பாண்டு திரும்பி மூச்சிரைக்க நிறை வயிற்றுடன் தன்னுடன் வந்த மாத்ரியை நோக்கி “பிரம்மனைப்போல இன்னுமிரு தோள்கள் எனக்கிருக்கவேண்டுமென விழைகிறேன். வருபவர்களை எங்கே ஏந்துவதென்றுதான் எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றான்.

மாத்ரி முகம் சிவந்து உதடுகளைக் கடித்தபடி “என் மைந்தர்களை பீமன் ஏந்திக்கொள்வான்” என்றாள். பாண்டு “நான் மைந்தர்களைப்பெறுவதே சுமப்பதற்காகத்தான். இன்னும் நூறு பிள்ளைகளைப் பெற்றுக்கொடு. என் நெஞ்சிலும் மடியிலும் இடமுண்டு. கீழே மலையடிவாரத்தில் கனிசுமந்து நின்ற ஒரு தாய்ப்பலாவைப் பார்த்தேன். அதைப்போல மைந்தர்களைச் சுமந்து கனத்து நிற்பதே என் வீடுபேறு” என்றான்.

“அங்கே உங்கள் தமையனார் நூறு மைந்தரைப்பெறப்போகிறார் என்கிறார்கள்” என்றாள் மாத்ரி சிரித்துக்கொண்டு. “ஆம், சொன்னார்கள். காந்தாரத்து அரசி மூன்றாவதும் கருவுற்றிருக்கிறார்களாம். இம்முறை அது பெண் என்கிறார்கள் மருத்துவர்கள்.” சிரித்தபடி “எனக்கு மைந்தர்கள் போதவில்லை. ஆனால் பெண்கள் இல்லை என்ற எண்ணம் கூடவே எழுகிறது. தமையனார் நல்லூழ் கொண்டவர். கனிசுமந்து கிளை ஒடிவதைப்போல மரம் பிறந்ததற்கு பொருள் வேறென்ன உள்ளது?” என்றான் பாண்டு.

“அஸ்தினபுரிக்கு திரும்பிச் செல்லவேண்டுமென்ற எண்ணம் இருக்கிறதா?” என்று மாத்ரி கேட்டாள். “அன்னையைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது தனிமையில் வருகிறது. மைந்தர் பிறந்த செய்திகளைக் கேட்டபின்னர் தமையனை அவரது மடிநிறைத்திருக்கும் மைந்தர்களுடன் பார்க்கவேண்டும் போலிருக்கிறது. மூத்தவனாகிய சுயோதனன் என் தமையனைப்போலவே பேருடலுடன் இருக்கிறான் என்றார்கள். அவனைமட்டுமாவது ஒருமுறை எடுத்து என் மார்பில் வைத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன்” பாண்டு சொன்னான்.

“ஆனால் இனி நகர்நுழைவதில்லை என்ற எண்ணத்துடன்தான் நான் அஸ்தினபுரியின் அரண்மனையைத் துறந்தேன். என் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதே சதசிருங்கத்திற்கு வந்தபின்னர்தான் தொடங்கியது. இங்கு என் மைந்தர்கள் வெறும் பாண்டவர்கள். நான் மகிழும் குழந்தைகள். அங்கே அவர்கள் அரியணைக்குரியவர்கள். அரசியலின் சதுரங்கக் காய்கள். காமகுரோதமோகங்களால் அலைக்கழிக்கப்படும் சருகுகள். நான் ஒருபோதும் இவர்களை அங்கே கொண்டுசெல்லப்போவதில்லை” என்றான்.

மாத்ரி பெருமூச்சுவிட்டாள். அவள் குந்தியின் அகத்தை அணுகியறிந்திருந்தாள். பார்த்தன் பிறந்ததுமே அவள் மாறிவிட்டாள். மைந்தர்களை கருக்கொண்டதும் அவளில் கூடிய தனிமையும் கனவும் ஐயங்களும் துயரும் விலகி அவள் முன்பு அறிந்திருந்த நிமிர்வுகொண்ட அரசமகள் மீண்டுவந்தாள். அவள் குரலில் பேரியாழின் கார்வையும் கண்களில் வாள்நுனியின் ஒளியும் குடியேறின. அவளுடைய ஒவ்வொரு சொல்லும் வெட்டி பட்டைதீட்டப்பட்ட வைரங்கள் போல முழுமையும் ஒளியும் கொண்டிருந்தன.

பார்த்தனின் புகழைப்பாடிய அந்த சிறுகாவியத்தைக் கேட்டுக்கொண்டிருந்தபோது அவள் அகம் பொங்கி கண்ணீர் விட்டாள். ஆனால் அவள் திரும்பிப்பார்த்தபோது குந்தி சிலைபோன்ற முகத்துடன் கைகூப்பி அமர்ந்திருப்பதையே கண்டாள். இந்திரனின் மைந்தன்! அது உண்மையாக இருக்குமா என்ன என்று எண்ணிக்கொண்டாள். அது கவிஞர்கள் சொல்லும் அழகுரை அன்றி வேறென்ன? ஆனால் அந்த மைந்தனைப்பார்க்கையில் அவள் நெஞ்சுக்குள் இறுகிப்படர்ந்திருந்த ஒன்று உடைந்தது. அவனை எடுத்து முலைகளுடன் சேர்த்துக்கொண்டால் அவன் வாய்தளும்ப அமுதூட்டமுடியும் என்று தோன்றியது.

ஆயிரம் வான்விற்கள் அவனுக்காக மண்ணிறங்கி வந்தபோது அவள் உறுதிகொண்டாள், அவன் இந்திரமைந்தனேதான் என.ஆனால் அவர்களுக்குத்தான் அது அற்புதமாக இருந்தது, பர்ஜன்யபதத்தில் அது நிகழக்கூடுவதுதான் என்றார்கள். “நிகழ்ந்திருக்கிறதா?” என்றுதான் பாண்டு கேட்டான். அவர்கள் “இது வானவிற்களின் சமவெளி என்றே அழைக்கப்படுகிறது” என்றார்கள். “இதற்குமுன் இத்தனை வானவிற்கள் வந்திருக்கின்றனவா?” என்று பாண்டு மீண்டும் கேட்டான். அவர்கள் புன்னகைசெய்தனர். மாத்ரி அவன் தோள்களைப்பிடித்தாள்.

அவர்கள் சென்றதும் மாத்ரி சினத்துடன் “யாரிடம் வாதிடுகிறீர்கள்?” என்றாள். குரல் ததும்ப “இவன் என் மைந்தன். இந்திரனின் அறப்புதல்வன். அவனுக்காக இறங்கிவந்த விண்ணகவிற்களை நாம் பார்த்தோம். அதற்கு நமக்கு யார் சான்றுரைக்கவேண்டும்?” என்று சீறினாள். பாண்டு “ஆம், யாரும் சொல்லவேண்டியதில்லை. பாரதவர்ஷமே சொல்லப்போகிறது” என்றான். “வேள்விநெருப்பின் செவ்வொளியில் அவனைப்பார்த்தபோது கருவறைக்குள் அமர்ந்திருக்கும் தெய்வமுகம் என்றே எண்ணினேன் மாத்ரி!”

“அவனை மார்புடன் அணைத்துக்கொள்ளும்போது எனக்கும் முலைகளூறுமென்று தோன்றுகிறது” என்று சொன்னபோது அவள் குரல் தழைந்தது. பொங்கி வந்து கண்களை முட்டிய அழுகையை அடக்குபவள் போல அவள் தலைகுனிந்தாள். பாண்டு அவளை சிலகணங்கள் நோக்கியபின் “நான் பிருதையிடம் உன்னைப்பற்றிச் சொல்லியிருக்கிறேன். நீ எனக்கு ஒரு மைந்தனைப்பெற்றுக்கொடு” என்றான். அவள் கழுத்தும் கன்னங்களும் சிலிர்த்துக்கொண்டன. அவன் அவள் தோள்களைத் தொட்டு “விண்ணேறியபின் உன் மைந்தனின் நீரையும் அன்னத்தையும் நான் பெறவேண்டுமல்லவா?” என்றான்.

அவள் முகத்தைப்பொத்தியபடி அழத்தொடங்கினாள். “மாத்ரி” என்று பாண்டு கூப்பிட்டபோது திரும்பிப்பாராமல் ஓடி குகைக்குள் புகுந்துகொண்டு அதன் இருண்ட மூலையொன்றில் அமர்ந்து முழங்கால்களில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். அவளை பெயர்சொல்லி அனகையும் குந்தியும் தேடியபோது உடலை மேலும் குறுக்கிக்கொண்டாள்.

குந்தி அவளருகே வந்து அமர்ந்தபோதும் அவள் முகத்தை தூக்கவில்லை. குந்தி அவள் முழங்கால்களில் கையை வைத்தபோது பனிக்கட்டி தொட்டது போல அவள் அதிர்ந்தாள். “இது தெய்வங்களுக்கு இனிதான செயல் மாத்ரி” என்று குந்தி சொன்னாள். “வேள்விக்களம் நான்குவகை என்பார்கள். மேற்குதிசை நோக்கியது கார்ஹபத்தியம். கிழக்குநோக்கி அமைந்தால் அது ஆகவனீயம். தெற்குநோக்கி என்றால் அது தட்சிணம். உயிர்களின் கருவறை நான்காவது வேள்விக்களம். அது வடக்குநோக்கியது. அங்கே இருக்கும் நெருப்பு வைஸ்வாநரன். அதற்கு அவியாவது மானுடனின் உயிர் என்பார்கள்.”

அவள் தோள்களை மெல்லப்பற்றி தன் மடியில் சரித்துக்கொண்டாள் குந்தி. “இச்சொற்களெல்லாம் இன்று உனக்குப் பொருளற்றவையாக இருக்கும். உன்னுள் ஓர் உயிர் குடியேறியதும் அனைத்தும் மும்மடங்கு பொருள்கொண்டவையாக ஆகிவிடும்.” அவள் மடியில் முகம் புதைத்தபடி “எனக்குத்தெரியவில்லை அக்கா… ஆனால் இந்த மைந்தர்களுடன் எனது மைந்தன் ஒருவன் விளையாடுவானென்றால் அதைவிட என் வாழ்க்கையை முழுமைப்படுத்தும் பிறிதொன்றில்லை என்று உணர்கிறேன்” என்றாள்.

குந்தி மாத்ரியின் தலையைத் தொட்டு கையை இறக்கி காதோர மயிர்ச்சுருளை மெல்லச்சுழற்றினாள்.கனிந்த குரலில் “இருளுக்குள் சொல்லவேண்டிய மந்திரம் இது. அதை நான் இருபத்தொரு முறை உனக்குச் சொல்வேன். நீ அதை நூற்றெட்டு முறை உருவிட்டு ஆன்மாவில் ஏற்றிக்கொள். மந்திரம் உன் வயமாயிற்று என்றால் உன்னால் பார்வையிலேயே மானுடரையும் அனைத்து உயிர்களையும் உன்னை நோக்கி இழுக்க முடியும்” என்றாள்.

அன்றிரவு அவள் துயிலாமல் வெளியே மழை பெய்வதை கேட்டுக்கொண்டிருந்தாள். நீரின் ஒலியில் ஒரு தாளமிருப்பதைப்போலத் தோன்றியது. அந்தத் தாளத்தை ஏற்றுக்கொண்டு அப்பால் காற்று பாறைகளில் அறைந்து அலைத்து மேலெழுந்து தழுவிச்சென்றுகொண்டிருந்தது. அவள் அந்தத் தாளத்தில் தன்னுள் மந்திரத்தை ஓடவிட்டாள். குகைக்கு உள்ளே கணப்பின் செந்நிறச்சுவாலையின் ஒளி. தழலாடிய விறகு அவ்வப்போது வெடித்தது. ஒரு சொல் பிறப்பதுபோல.

ஒரு சொல்! நெருப்பின் சொல். என்ன சொல்கிறது நெருப்பு? தன்னுடலுக்குள் நெருப்பு புகுந்துகொண்டதை அறிந்தாள். கைகால்கள் வெம்மைகொண்டன. சிறிதுநேரத்தில் வெப்புநோய் என உடல் தகித்தது. போர்வையை வீசிவிட்டு எழுந்தாள். வெளியே நிறைந்திருந்த கனத்த குளிரில் செவிமடல்களும் நாசிமுனையும் இமைகளும்தான் குளிர்ந்தன. உடலின் வெம்மை அப்படியே இருந்தது.

எழுந்து குகைக்கு வெளியே சென்றாள். வெளியே பரந்திருந்த இளம்பனிமூட்டம் தன் உடல்வெம்மையால் உருகிவிடுமென்று எண்ணினாள். பனிப்பொருக்கில் வெறும்கால்களை எடுத்து வைத்தபோது வேறெங்கோ அந்தக்குளிர் சென்றது. குகைக்குள் கணப்புபோல அவளுக்குள் எரிந்தது அந்த வெம்மை. நெருப்பில் வெடிக்கும் சொற்கள். மூச்சு போல, தன்னுணர்வு போல அந்த மந்திரம் அவளுக்குள் இருந்தது. எட்டுவார்த்தைகள். பொருளில்லாத எட்டு உச்சரிப்புகள். அவை நெருப்பாலானவை. அவற்றின்மேல் பொருள் அமரமுடியாது.

வெளியே மென்மழை விரிந்த இருள்வெளியில் விரைவான ஒரு தாளத்தை அவள் கேட்டாள். குளம்படியோசை போல. அவள் கைகளை இறுக்கியபடி நடுங்கும் உதடுகளால் அச்சொற்களை சொல்லிக்கொண்டு மேலும் இறங்கி கீழே சென்றாள். வெண்பனிப்பரப்பில் இரு குதிரைகளின் குளம்புச்சுவடுகளைக் கண்டாள். சிலகணங்கள் நோக்கி நின்றபின் அந்தத் தடம் வழியாக ஓடினாள். அப்பால் இரு வெண்புரவிகள் பிடரி சிலிர்க்க ஒன்றையொன்று முட்டிவிளையாடிக்கொண்டிருந்தன. அணிகளும் தளைகளுமில்லாத காட்டுப்புரவிகள். இரண்டும் உடன்பிறந்த ஆண்புரவிகள்.

அப்போது பிறந்தவைபோலிருந்தன அவை. அரைநிலவொளியில் அவற்றின் வெண்ணிற உடல்கள் மின்னிக்கொண்டிருந்தன. உடல்வெம்மையால் அவற்றின்மேல் பொழிந்த பனியுருகி அவற்றின் துள்ளலில் துளிகளாகச் சிதறிக்கொண்டிருந்தது. கழுத்தை ஒன்றுடன் ஒன்று அறைந்துகொண்டும் முகத்தை உரசிக்கொண்டும் குளம்புகள் பறக்க பாய்ந்து சுழன்றும் பனிச்சரிவில் பிடரிமயிர் பறக்க விரைந்தோடியும் அவை விளையாடின. அவை ஓசையே எழுப்பவில்லை என்பதை மாத்ரி அறிந்தாள். அவை அங்கே நிற்கின்றனவா இல்லை நிலவொளி பனியில் உருவாக்கும் வெண்மை அளிக்கும் விழிமயக்கா என எண்ணிக்கொண்டாள்.

தன்னுள் ஓடும் மந்திரத்தை அவள் உணர்ந்ததும் அவள் ஒரு புரவியை நோக்கி அதை அருகே அழைத்தாள். பின்னால் திரும்பி நின்றிருந்த அதன் உடலில் அவள் பார்வை பட்ட தொடைச்சதை விதிர்த்தது. அது துள்ளுவதை நிறுத்தி அசையாமல் நின்று சிறிய செவிகளை பின்னுக்குத்தள்ளி ஒலிகூர்ந்தது. பின்பு நீண்ட மூச்சொலியுடன் முன்னங்காலால் மண்ணைத் தட்டியது. மீண்டும் மூச்சுவிட்டு பிடரிமயிர்கற்றையை குலைத்தது. கழுத்தைத் திருப்பி அவளை நோக்கியது.

வெண்ணிறமான இமைமயிர் சரிந்து பாதி மறைத்த அதன் விழிகளை அவளால் பார்க்கமுடிந்தது. குதிரை மெல்ல கனைத்தபின் அவளை நோக்கி வந்தது. அதைத் தொடர்ந்து அதன் உடன்பிறந்ததும் வாலைச்சுழற்றியபடி வந்தது. இரு குதிரைகளும் அவளருகே வந்து தலைதாழ்த்தின. முதல்குதிரை மூச்சு சீற பிடரிமயிர் உலைய தலையை ஆட்டியது. அவள் அதன் நீண்ட மெல்லிய முகத்தைத் தொட்டு கைகளால் வருடினாள். அது தலையைச் சரித்து கனத்த நாக்கை நீட்டி அவள் கைகளை நக்கியது. இரண்டாவது குதிரை தலையை நீட்டி நாக்கால் அவளைத் தொடமுயன்றது. அப்போதுதான் அவள் அவர்களைப்பார்த்தாள்.

ஓவியம்: ஷண்முகவேல் [பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

மறுநாள் காலை அவள் அதை குந்தியிடம் சொன்னபோது அவள் “அவர்கள் அஸ்வினிதேவர்கள்” என்றாள். “நீ அஸ்வினிதேவர்களின் மைந்தர்களைப் பெறுவாய்!” மாத்ரி சோர்வுடனும் நிறைவுடனும் மஞ்சத்தில் படுத்தபடி “நான் அவை என் கனவுக்குள் நிகழ்ந்தவை என்றே எண்ணுகிறேன்” என்றாள். குந்தி “அஸ்வினி தேவர்கள் இரட்டையர்கள்…” என்றாள். “ஆம், அவர்கள் ஒருவரின் வெண்ணிழல் மற்றவர் என என்னைப் பின்தொடர்ந்துவந்தனர்” என்றாள் மாத்ரி. “அவர்கள் மானுடனின் இருபெரும் ஞானத்தை அறிந்தவர்களாக அமையட்டும். ஒருவன் விண்மீன்களை வாசித்து அறியட்டும். ஒருவன் மிருகங்களின் கண்மீன்களின் பொருளறியட்டும்” என்றாள் குந்தி.

சதசிருங்கத்தை அவர்கள் முன்மதியத்தில்தான் சென்றடைந்தனர். பாறையுச்சியில் நின்று பார்த்தபோது அங்கே ஒரு காட்டுநெருப்பு எரிந்தமைக்கான தடயமே இல்லாமல் பசுமைபொலிந்திருந்தது. நின்றிருந்தவையும் காட்டில் விழுந்திருந்தவையுமான முதுமரங்கள் அனைத்தும் மறைந்துவிட்டிருந்தன. எங்கும் புதுமரங்கள் முளைத்து இடுப்பளவும் தோளளவும் வந்து கிளைகள் விரித்து இலைதழைத்து நிற்க, சூழ்ந்து செறிந்திருந்த பசுமையை உள்வாங்கியபடி இந்திரத்யும்னம் அலையடித்தது. அதில் வெண்ணிறமான அன்னங்கள் ஏரியின் நூறு விழிகள் போல அவ்வப்போது சிறகடித்தபடி மிதந்தன.

“காட்டுநெருப்பால் தூய்மைப்படுத்தப்பட்ட இடம் வேள்விச்சாலை அமைப்பதற்கு ஏற்றது” என்றார் மாண்டூக்யர். “அங்கே சிறந்த காற்று வீசும் என்று மூதாதையர் சொல்வதுண்டு. முன்பும் பலநூறுமுறை சதசிருங்கம் நெருப்பில் நீராடி மீண்டிருக்கிறது” அவர்கள் மலைச்சரிவில் இறங்கி இந்திரத்யும்னத்தின் கரை வழியாக ஹம்ஸகூடம் நோக்கிச் சென்றார்கள்.

ஹம்சகூடத்தில் குடில்களை அமைப்பதற்கான இடங்களை மூன்று கௌதமர்களும் சேர்ந்து தேர்வுசெய்தனர். காற்றுவரும் வழி தேர்ந்து அங்கே உயரமான பாறைமீதேறி நின்று வெண்சுண்ணப்பொடியை விரையும் காற்றில் வீசினர். அது சென்று அமைந்த விதம் நோக்கி வேள்விச்சாலைக்கான இடங்களைக் குறித்தனர். கார்ஹபத்யமும், ஆகவனீயமும், தட்சிணமும் எரியும் மூன்று குடில்களும் மூன்று எரிகுளங்களுமே அமைந்த மையக்குடிலும் அமையும் இடம் வகுக்கப்பட்டதும் அதையொட்டி பிற குடில்களுக்கான இடங்கள் வகுக்கப்பட்டன.

மையக்குடிலுக்கு வலப்பக்கம் மாண்டூக்யரும் மூன்று கௌதமர்களும் தங்கும் குடில்கள் அமைந்தன. இடப்பக்கம் வித்யாசாலை அமைந்தது. இந்திரத்யும்னத்தின் கரையோரமாக முனிவர்களின் குடிலும் அதைச்சுற்றி மாணவர்களின் குடில்களும் கட்டப்பட்டன. அப்பால் தெற்கே பாண்டு தன் குடிலுக்கான இடத்தை வகுத்தான். வட்டமான மையக்குடிலுக்கு சுற்றும் சேவகர்களும் சேடியர்களும் தங்கும் குடில்கள். நடுவே பெரிய முற்றம். அங்கே நாவல் மரமொன்று புதிய இலைகளுடன் எழுந்துவந்திருந்தது. “நாவல்மரம் நன்று. அதில் எப்போதும் பறவைகளிருக்கும்” என்றான் பாண்டு.

குடிலமைக்க இடம் தேடும்போதுதான் மாத்ரி கண்டாள். அங்கே நின்றிருந்த காட்டுமரங்களின் அடித்தூர்கள் மண்ணுக்குள் இருப்பதை. அவற்றிலுருந்து ஒன்றுக்கு நான்காக மரக்கன்றுகள் கைவீசி எழுந்து நின்றன. காற்றுவீசியபோது வெயிலேற்று நின்ற இலைத்தளிர்களிலிருந்து இனிய வாசனை எழுந்தது. “காடு பன்னிரண்டு ஆண்டுக்கொருமுறை நெருப்பால் நீராடிக்கொள்கிறது” என்றார் மாண்டூக்யர். “யுகத்துக்கு ஒருமுறை மானுடம் குருதியால் நீராடிக்கொள்ளும்.”

மாத்ரி பெருமூச்சுடன் அவரை நிமிர்ந்து பார்த்தாள். வயிற்றில் கரு நிகழ்ந்தபின்னர் அவள் போரைப்பற்றிய பேச்சையே அஞ்சினாள். ஆனால் மீண்டும் மீண்டும் அச்சொற்களே காதில் விழுந்துகொண்டிருந்தன. பிறப்பு ஏன் உடனடியாக இறப்பைப்பற்றிய பேச்சை கொண்டுவருகிறது என அவள் வியந்துகொண்டாள். புகழுடன் இறப்பதற்காகவே பிறப்பு நிகழ்கிறதென்பது ஷத்ரியர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. வேளாண்மக்களும் ஆயர்களும் அப்படி நினைக்கிறார்களா என்ன?

சதசிருங்கத்துக்கு வந்தபின்னர் பார்த்தன் பிறந்தசெய்தியை குந்தி சிவதன் என்னும் பிரம்மசாரி வழியாக அஸ்தினபுரிக்கு சொல்லியனுப்பினாள். மூன்றுமாதம் கழித்து அவன் திரும்பிவந்து அஸ்தினபுரியின் செய்திகளைச் சொன்னான். முதல் மைந்தனை காந்தாரி துரியோதனன் என்று அழைப்பதனால் அஸ்தினபுரியும் அவ்வாறே அழைக்கிறது என்றான். குந்தி புன்னகையுடன் “காந்தாரத்தில் அவன் அன்னையின் மொழிப்பயிற்சி அவ்வளவுதான். துரியோதனன் என்றால் தீய போர்க்கருவிகள்கொண்டவன் என்றும் பொருளுண்டு… மக்கள் அப்பெயரை விரும்புவார்கள்” என்றாள்.

மாத்ரி அங்கே அமரப்பிடிக்காமல் மெல்ல எழமுயன்றாள். குந்தி திரும்பி நோக்கியதைக்கண்டு மீண்டும் அமர்ந்துகொண்டாள். “மூன்று வயதிலேயே அன்னையின் இடையளவுக்கு வளர்ந்திருக்கும் மைந்தன் இப்போதே கதாயுதத்தை கையில் எடுத்து சுழற்ற முயல்கிறான். அவனுக்கு மாமன் சகுனிதான் படைக்கலப்பயிற்சி அளிக்கிறார். மைந்தன் இரவும் பகலும் மாமனுடனேயே இருக்கிறான்” என்றான் சிவதன்.

“காந்தாரி அவனுக்கு இளையவன் ஒருவனைப் பெற்றாள். அவனுக்கு அவளே துச்சாதனன் என்று பெயரிட்டாள். மீறமுடியாத ஆணைகள் கொண்டவன். அவன் தன் தமையனுக்கு நிழலாக எப்போதுமிருக்கிறான். மூன்றாவது குழந்தை பெண்ணாகவே பிறக்குமென்பது மருத்துவர்களின் கூற்று. அதற்கு துச்சளை என்று பெயரிடப்போவதாக அரண்மனையில் சொல்லிக்கொண்டார்கள்” என்றான்.

இளம்காந்தாரிகளனைவருமே இருமுறை குழந்தைபெற்றுவிட்டார்கள் என்றான் சிவதன். நூறுமைந்தர்களால் குருகுலம் பொலியவேண்டுமென காந்தாரி ஆணையிட்டிருப்பதாகவும் அதை அவள் தங்கையர் அனைவரும் ஏற்றுக்கொண்டு மைந்தரைப்பெற்றுக்கொண்டிருப்பதாகவும் அஸ்தினபுரியின் சூதர்கள் பாடியலைந்தனர். “அம்மைந்தர்கள் அனைவரின் பிறப்பும் தீமைநிறைந்த தருணங்களிலேயே நிகழ்ந்துகொண்டிருப்பதாக சொல்கிறார்கள் நகர் மக்கள். எங்கும் அவர்களைப்பற்றிய கதைகள்தான் நிறைந்துள்ளன அரசி!”

“அஸ்தினபுரியின் நகர்மன்றில் ஒரு சூதன் இக்கதையை சொல்லக்கேட்டேன்” என்றான் சிவதன். “பிரம்மனின் மைந்தனாகிய கசியப பிரஜாபதிக்கு முனி என்னும் துணைவியில் பதினாறு மைந்தர்கள் பிறந்தனர். பீமன், உக்ரன், சுபர்ணன், வருணன், திருதன், கோபதி, சுவர்ச்சஸ், சத்யவாக், அர்க்கபர்ணன், பிரருதன், விஸ்ருதன், சித்ரரதன், காலிசிரஸ், பர்ஜன்யன், நாரதன் என்னும் அந்த மைந்தர்களில் இறுதிமைந்தனே கலி. பிறந்த ஒவ்வொரு மைந்தனுக்கும் கசியபபிரஜாபதி ஒரு வரமளித்தார். கடைசி மைந்தனிடம் வரம் என்ன வேண்டும் என்று கேட்டார். அகந்தைமிக்க அவன் எனக்குப் பின் நான் செய்வதேதும் தொடரலாகாது என்றான்.”

‘அவ்வண்ணமே ஆகுக என்றார்’ பிரஜாபதியான தந்தை. ‘உன் அகந்தையால் நீ கோரியதை முழுமையாக அடைவாய். நன்மைதருவதேதும் முளைத்து வளர்ந்து தழைக்கும் என்பதே எந்தை பிரம்மனின் நெறி. தீமையோ தன்னைத் தானே உண்ணும். முழுமுதல் தீமையோ தன்னை முழுதுண்டு தானுமழியும். எஞ்சுவதேதும் இன்றி மறைவது அதுவேயாகும். நீ அதுவாகக் கடவாய்’ என்றார். ‘தங்கள் அருள்’ என்றான் மைந்தன். ‘யுகங்கள் புரளட்டும். தீமை முதிர்ந்து முற்றழிவுக்கான தருணம் கனியட்டும். நீ இப்புடவியை கையில் எடுத்துக்கொள்வாய். உன் விளையாட்டால் அதை அழித்து உன்னையும் அழித்துக்கொள்வாய்’ என்று கசியப பிரஜாபதி சொன்னார்.

“கலிதேவனே துரியோதனனாக பிறந்தான் என்று அந்த சூதர் பாடக்கேட்டேன் அரசி. கலியின் மார்புக்கவசமான கிலம் என்பது துச்சாதனனாகியது. மற்ற உடன்பிறந்தவர்களும் அவர்களின் ஆயுதங்களுமே நூற்றுவராக பிறந்துகொண்டிருக்கிறார்கள் என்றனர் சூதர். துவாபரயுகம் மழைக்காலம்போல சாரலாகி வெளுத்து முடிவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. கலியுகம் மண்ணில் இறங்கிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள்” சிவதன் சொன்னான்.

“அவ்வண்ணம் பாடும் சூதர்களை ஒற்றர்கள் தேடிக்கண்டுபிடித்து சிறையெடுத்துக்கொண்டுசெல்கிறார்கள் அரசி. அவர்களை காந்தார இளவரசர் எவருமறியாமல் கொன்றுவிடுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் ஒவ்வொருநாளும் சூதர்கள் பாடும் பாடல்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன. இன்று அவற்றை எளிய சுமைவணிகர்களும் கன்றுமேய்க்கும் ஆயர்களும் மேழிபூட்டும் வேளிர்களும் கூட பாடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் சிவதன்.

அவன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே மாத்ரி அங்கிருந்து எழுந்து வெளியே சென்று நடுங்கிக்கொண்டிருந்தாள். தொண்டை வறண்டு நெஞ்சு பதைத்துக்கொண்டிருந்தது. அவள் தன் வயிற்றை தொட்டுப்பார்த்துக்கொண்டாள். உள்ளே இரு மைந்தர்கள் இருப்பதை மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். குந்தி சொன்னதுபோல அவர்கள் அஸ்வினி தேவர்கள்தானா? தேவமைந்தர்கள் என்றால் அவர்களை எந்தப் படைக்கலமும் கொல்லப்போவதில்லை. தங்கள் விதியை தாங்கள்தான் முடிவெடுக்கப்போகிறார்கள். ஆனால் அது வெறும் சொற்கள் அல்லவா? கருவில் உதித்து யோனியில் பிறந்து மண்ணில் வாழ்பவர்களுக்கெல்லாம் மரணம் என்பது ஒன்றுதானே?

அவள் தனிமையில் அழுதுகொண்டு நின்றாள். அவள் அங்கே வந்தபோதிருந்த சதசிருங்கத்தின் வனம் அங்கில்லை. கனவோ என அது மறைந்துபோய்விட்டது. புத்தம்புதிய காடு உருவாகி கண்முன் இளவெயிலில் அலையடித்துக்கொண்டு நின்றது. அவற்றின் அடியில் சென்றகாடு புதைந்து கிடந்தது. நினைவுகள்போல. புராணங்கள் போல. அது மீண்டும் மீண்டும் முளைத்துக்கொண்டிருந்தது. அவள் நிமிர்ந்து நூறுபனிமலைகளைப் பார்த்தாள். அவை நெருப்பில் அழிவதில்லை. காற்றில் இடம்பெயர்வதில்லை. காலத்தில் கரைவதில்லை. அவற்றின் முடிவற்ற காலத்துக்கு முன் சதசிருங்கத்தின் காடுகள் வெறும் நிழலாட்டங்கள். எண்ண எண்ண நெகிழ்ந்து மார்பில் கண்ணீர் வழிய அவள் அழுதுகொண்டிருந்தாள்.

அவளுடைய அழுகையைக் கண்டதுமே அனகை உய்த்துணர்ந்துகொண்டாள். அவளை அழைத்துச்சென்று குடிலில் மான்தோலில் படுக்கச்செய்தாள். சற்று நேரத்திலேயே மாத்ரிக்கு வலி தோன்றியது. சாளரத்துக்கு அப்பால் எழுந்த கீற்று நிலவை நோக்கியபடி அவள் கண்ணீர்விட்டபடி கிடந்தாள். மறுநாள் மதியம்வரை விட்டுவிட்டு சிறுவலி நீடித்தது. நடுப்பகல் சந்திக்கால வேள்விச்சடங்குகள் முடிந்து பிரம்மசாரிகள் கிளம்பும்போது அனகை வெளியே வந்து சங்கொலி எழுப்பினாள். அவர்கள் கைகளைத் தூக்கி ‘நீள்வாழ்வு பொலிக’ என வாழ்த்தினர். மீண்டும் அவள் வெளியே வந்து சங்கொலி எழுப்பியபோது சிரித்தபடி ‘இரட்டை வாழ்நாள் பெறுக’ என்று வாழ்த்தினர்.

வெளியே குடில்முற்றத்தில் தன் மைந்தர்களுடன் அமர்ந்திருந்த பாண்டுவை அணுகி அக்கார உருளையை அளித்து புன்னகையுடன் குந்தி சொன்னாள் “அரசே, இதோ உங்களுக்கு இரண்டு மைந்தர்கள் பிறந்திருக்கிறார்கள். ஐந்து பாண்டவர்களும் உங்கள் தோள்களை நிறைக்கப்போகிறார்கள்.” பாண்டு எழுந்து நின்று நிலவையும் நூறுமலைமுடிகளையும் நோக்கி கைகூப்பினான். “‘பாவஃபால்குன மாதம். நடுமதியம். அஸ்வினி நட்சத்திரம்” என்றாள் அனகை.

முந்தைய கட்டுரைஉளி படு கல் – ராஜகோபாலன்
அடுத்த கட்டுரைகனவுநிலம்