சிலமாதங்களுக்கு முன் ஒரு நண்பர் வீட்டுக்குவந்திருந்தார். இலக்கியவாசிப்பு உள்ளவர். கேரள அரசுத்துறை ஊழியர். மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் அதிதீவிர உறுப்பினர். தமிழிலக்கிய உலகம்பற்றி ஒரு குத்துமதிப்பான புரிதல்தான். கருத்துக்கள் சற்றே மையம் விலகிச் சென்று விழும். எல்லா தளங்களிலும் அவருக்கே உரித்தான ஒரு புரிதல் உண்டு. பேச்சுவாக்கில் நான் தலித்இலக்கியம் என்று ஏதோ சொன்னேன். அவர் சட்டென்று அதைப்பிடித்துக் கொண்டார். தலித் என்றாலே ஒரு ஆதிக்கமோசடிச் சொல், தலித்துக்கள் எல்லாரும் வன்முறையாளர்கள், அவர்கள் எழுதுவதெல்லாம் மானுடமறுப்பு என்று ஆவேசமாக வாதிட்டார். அவரது ஆவேசத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அவர் கிறித்தவர் என்பதனால் நாடாராக இருப்பாரோ என்று எண்ணினேன். குமரிமாவட்ட நாடார்கள் அளவுக்கு ஆவேசமான சாதிவெறி கொண்டவர்களைப் பார்ப்பது கஷ்டம். சாதிப்பற்று மற்றும் ஒற்றுமை மூலம்தான் சென்ற காலங்களின் தாழ்வுநிலையில் இருந்து அவர்கள் போராடி மேலே எழுந்தார்கள். எங்கும் தங்களவர்களைக் கண்டுகொண்டு ஒன்றுபடவும், ஒருவரை ஒருவர் கைதூக்கி விடவும், அவ்வுணர்வு கைகொடுத்தது. ஆனால் இன்று அவர்கள் மிக முன்னேறிய, செல்வாக்குமிக்க சாதியாக ஆனபின்னரும் அந்த சாதிவேகம் அப்படியே நீடிக்கிறது.
உண்மையில் உயர்சாதியினருடன் ஒப்பிடும்போது நாடார்கள் சமநிலைக்கோ அவர்களை விட மேல்நிலைக்கோ சென்று நடைமுறையில் சமாதானமாகிவிட்டார்கள். அவர்களை விட தாழ்நிலையில் உள்ள தலித்துக்கள் மேல் தீவிரமான வன்முறையைச் செலுத்துகிறார்கள். நாடார்களுக்குரிய சி.எஸ்.ஐ [சர்ச் ஆ·ப் சவுத் இண்டியா] திருச்சபையிலிருந்து தலித்துக்களை அனேகமாக வெளியேற்றிவிட்டிருக்கிறார்கள். குமரிமாவட்டத்தில் ஒருவரை என்ன சர்ச் என்று கேட்டு சாதியைச் சொல்லிவிடமுடியும். [நாடார்- சி.எஸ்.ஐ சபை, பரதவர்- கத்தோலிக்க திருச்சபை, சாம்பவர்- லுத்தரன் மிஷன், புலையர்- ரட்சணியசேனை] அலுவலகங்கள், கல்விநிறுவனங்களில் தலித்-நாடார் சண்டைதான் பெரும்பாலும் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும்.
ஆனால் நண்பர் திடீரென்று நாடார்களையும் தாக்க ஆரம்பித்தார். என் குழப்பம் அதிகரித்தது. பொதுவாக இந்தச் சாதிப்போர்களில் வேடிக்கையான நடுநிலைமை ஒன்று எனக்கு கைகூடிவிடும். நான் என் சாதியில் திருமணம் செய்யவில்லை, சாதி உறவுகளும் இல்லை. நண்பர் திருமாவளவன், கிருஷ்ணசாமி, ரவிக்குமார் எல்லாரையும் வசைபாடி சம்பந்தமில்லாமல் காலச்சுவடையும் திட்டி மெல்ல சமனமடைந்தார். ”எல்லாவனும் ·ப்ராடுப் பயக்கசார். எங்க சாதிக்காக நான் போராடுதேண்ணு சொல்லு. என்ன மயித்துக்கு தீண்டாமைன்னு சொல்லுதே? நீ தீண்டாமைய விட்டாச்சா? இல்ல, கேக்கேன்..”என்று கண்முன் இல்லாத பலரிடம் கேட்டார்.
அவர்சென்றபின் வேதசகாயகுமாரிடம் கேட்டேன், இவர் இப்படிச் சொல்கிறாரே என்று. ”அவர் அடிவயித்திலேருந்து சொல்லுதார்…அவரு காட்டுநாயக்கருல்லா?” என்றார். ”அப்படியா?”என்றேன். நாயக்கர் ஆட்சியின்போது குமரிமாவட்டத்தில் குடியேறிய காட்டுநாயக்கர்கள்தான் இங்கே சுத்திகரிப்புவேலையையும் செய்கிறார்கள். குமரிமாவட்ட சாதிகளில் ஆகக்கடைசி இடத்திலிருப்பவர்கள். அவர்களை பிறசாதியினர் அனைவருமே தீண்டத்தகாதவர்களாகவே நடத்துகிறார்கள். நடைமுறையில் அவர்கள் அதிகம் புழங்குவது பிற தலித் சாதியினரிடம் என்பதனால் இவர்கள் அவர்களிடமிருந்தே அதிகபட்ச சாதிய ஒதுக்குதலை அனுபவிக்கிறார்கள். ஐம்பதுகளில் கம்யூனிஸ்டுக்கட்சி அவர்களிடம் அரசியல் பணியை தொடங்கியது. அதை சுந்தர ராமசாமி ஒரு புளியமரத்தின் கதையில் பதிவுசெய்திருக்கிறார். ஆனால் அது தொழிற்சங்கம் என்ற நிலையை விட்டு மேலெழவில்லை.
அந்த நண்பர் கேரள அரசு அலுவலகத்தில் கடைநிலை ஊழியர் என்றார் வேதசகாயகுமார். ஆனால் குமஸ்தா என்றே சொல்லிக் கொள்வார். அவரது விருப்பு வெறுப்புகள் எல்லாமே வேகமானவை. ”இந்த விசயத்தை கெவுனிச்சிருக்கியளா? எல்லா ஆபீஸிலயும் எஸ்டி எஸ்டி ·பெடரேஷன் உண்டு.ஆனா அதில சக்கிலியர்களும் காணிக்காரர்களும் காட்டுநாயக்கர்களும் அதிகமா இருக்க மாட்டாங்க. அவங்க சிபிஎம் யூனியனிலதான் இருப்பாங்க. காரணம் அவங்கள சமானமா நடத்த மத்த தலித்துக்கள் ரெடியாட்டு இருக்கிறதில்ல…” அதை நானும் கவனித்திருக்கிறேன். தமிழக தலித் இயக்கம் என்பது இங்கே எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் பறையர், தேவேந்திரகுல வேளாளர் என்ர இரு சாதிகளின் இயக்கமே. நேற்றுவரை அவர்களிடம் அதிகாரம் இருக்கவில்லை. இன்று அந்த அதிகாரம் சற்றே கைவரும்போது அந்த அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள அவர்கள் தயாராக இல்லை.
”சாதீண்ணு பேசினாலே அதன் அடிப்படையான மன அமைப்பும் உள்ள வந்திருது.அதனால சாதிக்குள்ள நிண்ணு சாதிய எதுக்கிறதுன்னு சொல்றமாதிரி ஹம்பக் வேற ஒண்ணுமே இல்ல. என் சாதிய நான் எப்டி டி·பைன் பண்ணுறேன்? நான் மத்தவங்களிலே இருந்து வேற, அவன விட உயர்ந்தவன், இவனை விட கீழ இருக்கேன்னுதானே? நம்ம தலித் சிந்தனையாளர்களில உச்சம்ணா அது அயோத்திதாசர்தான். அவரு ஒரு பெரிய ஜீனியஸ்னு நெனைக்கேன்…ஆனா அவரும் இதைத்தானே சொல்லுதார்? பறையர்கள் உசந்தசாதிதான்னு அவர் வாதாடுறப்ப குறவன் சக்கிலியன்லாம் ஓணானைத்திங்கிறாங்க பறையர்கள் அப்டி திங்கிறதில்லைங்கிறார். அவங்க குளிக்கமாட்டாங்க ஆனா பறையர்கள் ரொம்ப சுத்தமா இருப்பாங்கங்கிறார்…உணவு, உடல்சுத்தம் ரெண்டும்தான் பிராமணன் சாதிபிரிப்புக்குச் சொல்ற அளவுகோல். அதைத்தானே இவரும் சொல்லுதார்?”
நுட்பமான தந்திரத்துடன் தலித் உரிமை என்ற குரலுடன் தமிழ்தேசியம் என்ற குரல் கலக்கப்படுவது தலித்துக்களில் முற்றிலும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் அருந்ததியர் போன்றவர்களை விலக்கிவைப்பதற்கே என்று அன்று நண்பர் உக்கிரமான குரலில் வாதாடினார். வாய்ச்சொல் உபச்சாரங்கள் தாண்டி உண்மையான அதிகாரப் பங்கிடல் என்று வரும்போது தலித் சாதிகளின் அதிகார இச்சையே வெளிபப்டும் என்றார். அச்சிலும் மேடையிலும் கடந்த கால்நூற்றாண்டாக தலித் உரிமைக்குரல் கொடுத்த பலரும் இப்போது அருந்ததியரை கைகழுவ அழகிய வாதங்களுடன் வருவதை நாம் காண்கிறோம்.
அருந்ததியருக்காக காலம்பிந்தியாயினும் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சி குரல்கொடுத்திருப்பது மிக மிக வரவேற்கத்தக்கது. மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சி ஏன் குரல் கொடுக்கவேண்டும்? மிக எளிய விடைதான். அருந்ததியர்கள் பெரும்பாலும் அந்தக் கட்சியில்தான் உள்ளனர்.நடைமுறையில் அருந்ததியர் ,காட்டுநாயக்கர் போன்ற மக்களைப்பற்றி பேசும் உரிமை இப்போது இரு தரப்பினருக்கே உள்ளது. ஒன்று, மார்க்ஸிய கம்யூனிஸ்டுக்கட்சி. இரண்டு கிறித்தவ மிஷனரிகள். அவர்களை மதித்து அவர்களுக்காக ஏதேனும் செய்ய முன்வந்தவர்கள் அவர்களே.
மார்க்கு எழுதி தூய சவேரியார் கல்லூரி பாளையங்கோட்டை வெளியீடாக வந்துள்ள ‘அருந்ததியர் வாழும் முறை’ அவர்களைப்பற்றி அறிய மிக உதவியான நூல். நரிக்குறவர்களைப்பற்றி முனைவர் பத்மாவதி எழுதி தமிழினி வெளியீடாக வந்துள்ள ‘நரிக்குறவர் இனவரைவியல்’ ஒரு குறிப்பிடத்தக்க நூல். பிற சாதியினரைப்பற்றி இன்னமும் அடிப்படை தகவல்கள்கூட திரட்டப்படவில்லை.
நம் சூழலில் சாதி சார்ந்த ஒரு வெளிப்படையான விவாதத்துக்குள் செல்வது மிகமிக சிரமமானது. அதில் உறையும் அதிகாரம் காரணமாக தீவிரமான வன்முறையுடன் மட்டுமே அந்த விவாதம் நிகழ்த்தப்படுகிறது. இங்குள்ள முக்கியமான உத்தி என்பது பிறரை சாதியவாதி என்று முத்திரை குத்துவதன் வழியாக தன் சாதிவெறியை ஒளித்துக்கொள்வது. இதன் மூலம் அச்சிலும் மேடையிலும் உக்கிரமான சாதி ஒழிப்புக்குரல்கள் முழங்கிக் கொண்டே இருக்கையில் தனிவாழ்வில் சாதிவெறி அதன் உக்கிரத்துக்குச் செல்லும் ஒருநிலை இங்கே உருவாகிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பிறரை சாதிவெறியன் எனக் குற்றம்சாட்டி எழுதியவர்களில் அனேகமாக அனைவருமே தங்கள் சாதியின் மேடைகளில் கூசாமல் ஏறியமர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைக் காணலாம்.
ஒருவன் தன் சொந்த வாழ்வில் எந்த அளவுக்கு சாதியிலிருந்து வெளியே வருகிறான், எந்த அளவுக்கு தன்னை விமரிசனபூர்வமாக பார்த்துக்கொள்கிறான் என்பதே நேர்மையான அளவுகோலாக அமையும் என்பதே நான் கண்டது. எல்லா இடங்களிலிருந்தும் எழும் வெற்றுக்குரல்கள் உண்மையைப் பேசாதே கோஷம் மட்டும் போடு என்று கூவிக்கொண்டிருக்கின்றன. அவற்றை மீறி சிலவற்றை பேசியகவேண்டிய நேரம் இது.
விசை இதழில் அருந்ததியர் உள் ஒதுக்கீடும் தலித் கட்சிகளும்: எம். அசோகன் கட்டுரையை வாசிக்கும்போது இதையெல்லாம் எண்ணிக் கொண்டேன். அது வெளிப்படையான கறாரான ஒரு கட்டுரை.