இதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்

என்ன காரணத்துக்காக புராண இதிகாசங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மீண்டும் மீண்டும் மாற்றி எழுதப்படுகின்றன? இந்திய மொழிகளின் நவீன இலக்கியப் பரப்பில் மகாபாரதம் பலநூறு முறை மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது .கர்ணனின் கதையே இதில் மிக அதிகம். தமிழில் எம்.வி.வெங்கறாம் நித்ய கன்னி என்ற குறுநாவலில் மகாபாரதக்கதையை மறு ஆக்கம் செய்திருக்கிறார். ரகுநாதன், தி.ஜானகிராமன் போன்ற தமிழ்ப்படைப்பாளிகள் இதிகாசங்களை மறு ஆக்கம்செய்து கதைகளை உருவாக்கியிருக்கிறார்கள். புதுமைப்பித்தன் எழுதிய இதிகாச மறு ஆக்கமான சாப விமோசனம்தான் இந்தவகை எழுத்துக்கு தமிழில் முனுதாரணம் எனலாம்.

இதை மேலும் பின்னகர்த்தினால் பாரதியின் பாஞ்சாலி சபதத்துக்குச் சென்று சேரலாம். இந்திய மறுமலர்ச்சிக் கவிஞர்களான குவெம்பு, குமாரனாசான் போன்றவர்கள் இதிகாசங்களை மறுபுனைவு செய்துள்ளார்கள். இந்தப் பயணம் மேலும் பின்னகர்ந்தால் வில்லிபுத்துராரிலும் கம்பனிலும் சென்று சேரும். காளிதாசனும் இதிகாச மறு ஆக்கங்களை எழுதியவனே

 

இந்திய பிராந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்கள் ஆரம்பிப்பதே இந்திகாச மறு ஆக்கங்கள் மூலம்தான் என்று காணலாம். இந்தியாவின் நாட்டார் கலைகள் அனைத்திலும் இரு இதிகாசங்களும் ஆழமான பாதிப்பைச் செலுத்தியிருக்கின்றன. மகாபாரதம் இல்லையேல் தெருக்கூத்தோ கதகளியோ இல்லை. இவ்வாறு மீண்டும் மீண்டும் ஏன் இவை மறு ஆக்கம் செய்யப்படுகின்றன?

 

காரணம் நம் சமூகத்தின் விழுமியங்களை தீர்மானிப்பவையாக உள்ளவை புராண இதிகாசங்களே என்பதுதான். அவ்விழுமியங்களை மறுபரிசீலனை செய்ய மிகச் சிறந்த வழி புராண இதிகாசங்களை மறுபரிசீலனை செய்வதுதான். இரண்டாவதாக பற்பல நூற்றாண்டுப் பாரம்பரியம் உடைய, தொடர்ந்து செம்மை செய்யப்பட்ட ஒருபடிம உலகம் நமக்குக் கிடைக்கிறது. சமகால வாழ்விலிருந்து எடுக்கப்பட்ட எந்தப் படிமங்களை விடவும் இவை சமூக ஆழ்மனதைச் சென்று பாதிப்பவை. புதிய புதிய படிமங்களை உற்பத்தி செய்யும் தன்மை உடையவை.

 

அனைத்துக்கும் மேலாக ஒரு புராணப் படிமத்தை தன் கற்பனை வலிமைக்கு ஏற்ப விரிவு செய்துகொள்ளும் சுதந்திரமும் படைப்பாளிக்குக் கிடைக்கிறது. உதாரணமாக மகாபாரத பாஞ்சாலி பாரதியில் தாய் தெய்வச் சாயலுடன் , கிட்டத்தட்ட பாரத மாதாவாக, மாறுவதைக் காணலாம். வேறெந்த உருவகத்தைவிடவும் அதற்கு அபாரமான வலிமை கைவருகிறது.

 

மகாபாரதக் கதைக்கு மேலும் சிறப்புகள் உண்டு. அது இந்திய நாட்டார் மரபுடன் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. மூலமகாபாரதமேகூட உக்கிரமான நாட்டார்ப் பண்புகளை வெளிப்படுத்தும் பிரதிதான். அத்துடன் அது மிக ஆழமான விழுமிய மோதல்களின் களம். அது ஒரு மாபெரும் தொகுப்பு வடிவம். ஆகையால் அதில் உள்ள கூறுகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு விரிவாகப் பரிசீலனை செய்வதுதான் பொதுவாக இலக்கிய மரபில் காணப்படுகிறது.

 

ஆகவே எல்லா மறுபுனைவுகளும் மகாபாரதம் உருவாக்கியுள்ள அற்புதமான காவிய அமைதியை முதலில் உடைக்கின்றன. கதாபாத்திரங்களுக்குப் புதிய ஆளுமைகளையும், கதைச் சந்தர்ப்பங்களுக்குப் புதிய அர்த்தத் தளங்களையும் உருவாக்கிக்கொண்ட பிறகு மீண்டும் அந்தக் காவிய அமைதியை அடைய முயல்கின்றன. இதல் கணிசமான வெற்றியைப் பெற்ற பல படைப்புகள் இந்திய மொழிகளில் உண்டு. எம்.வி.வெங்கட்ராமின் ‘நித்யகன்னி’ ஓரு வெற்றி பெற்ற ஆக்கம்.

 

தமிழில் மொழியாக்கத்தில் கிடைக்கும் படைப்புகளில் எஸ்.எல்.பைரப்பாவின் பருவம், வி.ஸ.காண்டேகரின் யயாதி, ஐராவதிகார்வேயின் ஒரு யுகத்தின் முடிவு, எம்.டி.வாசுதேவன்நாயரின் ‘இரண்டாமிடம்’ , பி.கெ.பாலகிருஷ்ணனின் இனி நான் உறங்கலாமா போன்றவை முக்கியமான ஆக்கங்கள்.

தமிழில் மகாபாரதத்தை மறு ஆக்கம் செய்து வந்த படைப்புகளில் முதன்மையானது எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உபபாண்டவம்’. இவ்வகைபப்ட்ட இந்திய நாவல்களின் வரிசையிலும் பெருமிதத்துடன் வைக்கப்படவேண்டிய ஆக்கம் இது. மகாபாரதத்தை நவீனச் சூழலில் மறுபரிசீலனை செய்யும் தீவிரமான இலக்கிய ஆக்கம் என்ற வகையில் இது மிக முக்கியமான ஒர் இந்திய இலக்கியப் படைப்பாகும். இதில் அவர் அடைந்துள்ள வெற்றிகளும் தோல்விகளும் நம் சூழலுக்கு மிக முக்கியமானவை.

 

துரதிருஷ்டவசமாக இங்கு இப்படைப்பு குறித்து எழுதப்பட்ட விமரிசனங்களில் பெரும்பகுதி மகாபாரதத்துடன் அதை ஒப்பிடுதல் என்ற அளவிலேயே நின்றுவிட்டன. அத்துடன் மூலமகாபாரதத்தில் தனக்கு இருப்பதாக மதிப்புரையாளர் நம்பும் பயிற்சியை வெளிப்படுத்தும் முகாந்திரமாகவே அவை அமைந்தன. நாவல் என்ற வடிவத்தை நோக்கி நகர நமக்கு எத்தனை தூர மேலதிகப் பயிற்சி தேவைப்படுகிறது என்பதற்கான உதாரணம் இது.

 

முதலில் அற்பமான, அன்றாட வாழ்வு சார்ந்த புற யதார்த்தங்களை ‘அப்படியே’ பதிவு செய்வதிலேயே திருப்தி காண்கிற இலக்கியப் போக்கிலிருந்து விலகி இலக்கிய ஆக்கம் குறித்தான மகத்தான கனவுடன் ஆக்கப்பட்ட உண்மையான தீவிரமுயற்சி இப்படைப்பு. ஒரு நாவல் உருவாக்குவது ஒரு புனைவு வெளியைத்தான் என்ற நவீனப்பிரக்ஞை இதில் உள்ளது. இதனுடன் பலவகையிலும் ஒப்பிடத்தக்க நவீன இலக்கிய ஆக்கம் என இடாலோ கால்வினோவின் ‘புலப்படா நகரங்கள்’ நாவலைச் சொல்லலாம்.

 

இரண்டாவதாக மகாபாரதத்தின் செவ்வியல் கூறுகளும் நாட்டார்கூறுகளும் முயங்கும்  எல்லைக்கோடு வழியாகவே இந்த நாவல் நகர்கிறது. இதன் வழியாக நமது கலாச்சாரக் கட்டுமானத்தில் உள்ள ஆழமான முரண்பாட்டை எப்போதுமே நினைவுறுத்தியபடியே உள்ளது இது. குறிப்பாக நாவலின் தொடக்கத்தில் நாட்டார் கலைகளின் ஆக்கமான துரியோதனன் வழியாக ஆசிரியர் நகர்ந்து ‘முடிவுறா நதி’யில் செவ்வியல் மகாபாரத ஆசிரியனைச் சந்திக்கும் இடம் மிகவும் கவித்துவமான கற்பனை.

 

மூன்றாவதாக மகாபாரதக் கதையை அதன் அரசியல் போராட்டங்கள், தரிசன விரிவுகள், தத்துவப் போராட்டங்கள் ஆகியவற்றைத் தவிர்த்து மனிதர்களுக்கிடையேயான ரத்தமும் கண்ணீரும் தோய்ந்த சமராகவே இது பார்க்கிறது. அவ்வகையில் மொத்த மகாபாரதமே பற்பல தலைமுறைகளாக உதிரம் காயாத அரிவாள்கள் உலவும் மதுரை மாவட்டத்துக்கு வந்து சேர்ந்துவிட்டது. நாவலின் தொடக்கத்தில் உள்ள ‘சூல்’ பகுதி இவ்வகையில் முக்கியமானது. ஒவ்வொருவரும் யாரை வெறுக்க வேண்டும், கொல்லவேண்டும் என்று கருவிலேயே தீர்மானிக்கப்பட்டு விட்டது. அதை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மட்டுமே அவர்களுக்கு உள்ளது. வாழ்வின் இந்த அபத்தச் சரிவை ‘உபபாண்டவம்’ காட்டுகிறது என்பது முக்கியமானது.

 

நான்காவதாக இது மகாபாரதத்தின் உட்கூறுகளை நோக்கி கவனம் திருப்பாமல் அதன் தொகுப்புமுறையையே கவனத்திலெடுத்துக் கொள்கிறது. அதிலடங்கியுள்ள வரலாற்றுப் பிரக்ஞையை, தரிசனத்தைத் திருப்பிப்போட முயல்கிறது. மகாபாரதத்தின் முழுமையும் தரிசனமும் அதன் தொகுப்பு முறையில்தான் உள்ளது என்பதனால் இது மிக முக்கியமானது. ஆகவே இந்திய மகாபாரத மறு ஆக்கங்களில் இது முக்கியமான முயற்சி என்று எனக்குப் படுகிறது.

 

மகாபாரதத்தை இந்தியச் சூழலில் இதுவரை எழுதியவர்கள் அந்தக்கதையையும் கதைமாந்தர்களையும் புதிய மொழியில் புதிய யதார்த்தத்தில் மறு ஆக்கம் செய்து கண்முன் நிறுத்துவதையே செய்துவந்தார்கள். மேலே சொல்லபப்ட்ட அத்தனை நாவல்களும் அந்த வகையானவையே. ஒரு புதிய வழி என்றால் மகாபாரதத்தை நவீன அரசியலுக்கு அங்கச்சாயலுடன் பயன்படுத்தி எழுதும் முறையைச் சொல்லவேண்டும். அதற்குச் சிறந்த உதாரணம் கிருத்திகா எழுதிய புதியகோணங்கி போன்ற நாவல்கள். சஷி தரூரின்  தி கிரேட் இண்டியன் நாவல் அந்தவகையானதே.

 

ஆனால் மகாபாரதம் ஒரு மாபெரும் குறியீட்டு வெளி. அதன் ஒவ்வொரு கதையும் பலநூறு படிமங்களை அளிக்கும் விளைநிலம். இந்திய இலக்கிய சூழலில் மகாபாரதத்தின் குறியீடுகளை கவித்துவமாக விரித்தெடுத்து மேலே செல்வதற்கான முதல் முயற்சி என்பதே உபபாண்டவத்தின் முக்கியமான பெருமையாகும். மகாபாரதத்தை ஒட்டி எழுதப்பட்ட முதல் நவீன நாவல் இதுதான். இதன் வெற்றிகளும் சரிவுகளும் அது எடுத்துக்கொண்ட பாதை புத்தம்புதியது என்பதில் இருந்தே உருவாகின்றன.

 

மகாபாரதத்தை மறு ஆக்கம் செய்து எழுதப்பட்ட இந்திய நாவல்களின் முக்கியமான பொது அம்சம் என்னவென்றால் அவை மகாபாரதத்தின் மையத்தரிசனங்களைக் கணக்கில் கொள்ளாமல் அதன் அறவியல் ஒழுக்கவியல் பிரச்சினைகளையே பேசுபொருளாகக் கொண்டன என்பதே. புதுமைப்பித்தனின் சாபவிமோசனமும் சரி, எம்.வி.வெங்கட் ராமின் நித்ய கன்னியும் சரி ஒழுக்கப்பிரச்சினையைப் பெசுவனவே. மேலே குறிப்பிட்ட நாவல்களில் இரு ஆக்கங்கள் மட்டுமே விதிவிலக்கு. பைரப்பாவின் பருவம் மிகவிரிவான வாழ்க்கை சித்திரமாக மகாபாரதத்தை அமைப்பதன் வழியாக அதன் மெய்ஞானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்கிறது. பி.கெ.பாலகிருஷ்ணனின் இனி நான் உறங்கலாமா இருத்தலியல் நோக்கில் கர்ணனின் வாழ்க்கையை பேசுவதனூடாக மகாபாரதத்தின் தத்துவ தரிசனங்களை நோக்கி நகர்கிறது.

 

உபபாண்டவம் மகாபாரதத்தின் மெய்ஞான அடித்தளம் நோக்கிச் செல்கிறது என்பது இதன் முதன்மையான சிறப்பாகும். ஒழுக்கம் அறம் என்பதெல்லாம் பொருளற்றதாக ஆகும் பிரம்மாண்டமான விதியின் ஆட்டத்தை, தற்செயல்களின் வலையை, மறுபிறவிகளின் சிக்கலை வரைந்து காட்டுகிற இதிகாசம் மகாபாரதம். எந்த நெறியும் அங்கே முழுமுற்றானதல்ல. எந்த விழுமியமும் மாறாதது அல்ல. அந்த விரிவை தன் புனைவால் அள்ள முயன்றிருக்கிறது உபபாண்டவம் என்பதே அதன் முதல்பெரும் சாதனையாகும்.

 

உபபாண்டவம் பாண்டவர்களுடைய வாழ்க்கையை ஒரு நாட்டாரியல் தொன்மத்தில் இருந்து தொடங்கி முன்னெடுத்துச் செல்கிறது. மகாபாரதம் போலவே இதுவும் விதியின் கதைதான். ஆனால் விதி என்பது இங்கே பிரபஞ்சநியதியாக இல்லை. புனைவின் விதியாக உள்ளது. புனைவு மகாபாரதக் கதைமாந்தர்களை ஒருவரோடொருவர் பின்னி முயங்கசெய்கிறது. அவர்களின் வாழ்க்கையை பொருளுடையதும் பொருளற்றதுமாக ஆக்குகிறது. ஒருவகையில் மகாபாரதம் உருவாக்கும் அதே வெறுமையின் நிறைவை இந்நாவலும் அளிக்கிறது.

 

ஒரு மகத்தான நாவலுக்கான திட்டமாக ஆரம்பித்த இந்நாவல் அதன் இயல்பான சில பலவீனங்களால் சரிகிறது என்றே சொல்ல வேண்டும். இந்நாவலின் சாதனைகளுடன் சேர்த்தே அதன் சரிவுகளையும் நாம் சிந்தனை செய்தாகவேண்டும்.

 

முதலாவதாக இந்நாவல், குவியும் இருபுள்ளிகளான நாட்டார் மரபு செவ்வியல் மரபு இரண்டுக்கும் தொடர்பற்ற கற்பனாவாதப் பண்புள்ள மொழிநடையில்  எழுதப்பட்டுள்ளது. செவ்வியல், நாட்டார் மரபுகளில் எப்போதுமே ஊடாகும் அங்கத அம்சம் இதன் மூலம் நழுவிவிட்டிருக்கிறது. இந்நிலையில் இதன் தத்துவ விசாரங்கள், கவித்துவக் கூற்றுகள் மற்றும் நெகிழ்ச்சிகள் சற்று செயற்கையாக ஆகிவிட்டன. அதிலும் கதாபாத்திரங்கள் எல்லாமே  ஒரே மாதிரியான உருவக நடையில் பேசவதும், ஒரே மாதிரியான கருத்துக்கள் மீண்டும் மீண்டும் வருவதும் படிப்படியாக அலுப்பூட்டுகின்றன.

 

இந்நாவலில் உள்ள ராமகிருஷ்ணனின் உரைநடை மிகவும் கவனமற்றது. எழுவாயும் பயனிலையும் முரண்படுவது, ஒருமை பன்மை மயக்கம், புணர்ச்சிவிதிகள் மீறப்படுவது முதலியவை தரும் அசௌகரியம் சாதாரணமானதல்ல. இவை மீறப்பட முடியாத விதிகளா என்ற கேள்வி எழலாம். மொழி அகவயமாக எல்லை மீறிப் பாய்ந்து செல்லும்போது இலக்கணங்களை அது படைப்பூக்கத்துடன் மீறும். அது ஓர் அழகும்கூட. அது கவனமின்றியும் இயலாமையாலும் சிதைவது ஏற்கக்கூடிய விஷயமல்ல.

 

அதைவிடச் சிக்கலானது இந்த உரைநடையில் உள்ள படைப்பூக்கம் கைகூடாத தன்மை. படைப்பூக்கம் கைகூடிய மொழியில் அடிப்படையாக உள்ள உத்வேகம் அதன் எல்லா மாறுபட்ட கூறுகளையும் ஓர்அழகியல் ஒழுங்குடன் பிணைத்துக் காட்டும். இதில் அது நிகழவில்லை. மொழிபெயர்ப்புச்சாயல் கொண்ட நவீன மொழி, புராண உபன்யாச மொழி, சம்பந்தமே இல்லாமல் நெல்லை கிறித்தவ மொழி எல்லாம் பிணைந்து மிகச் செயற்கையான நடையை உண்டு பண்ணுகின்றன. அத்துடன் வேறு ஒரு நாவலின் வலுவான பாதிப்புடைய உருவக மொழியும் ஊடாடுகிறது.

 

பலநூறு பக்கங்கள் உடைய ஒருநாவலில் சித்திரிப்புகளில் மீள்தன்மை இருப்பது இயல்பே. ஆனால் ராமகிருஷ்ணன் மீண்டும் மீண்டும் ஒரே குரலில் மாறாத சொற்களில் சித்தரிக்கிறார். (எத்தனை அலைவுகள், மிதத்தல்கள்!) கடைசியாக அவரது சில சொல்லாட்சிகளைக் கூறவேண்டும். ‘கதாநிலவியல்’ ‘கதாஸ்த்ரீகள்’ போன்றவற்றை சமஸ்கிருதமாகவோ தமிழாகவோ கொள்ள முடியாது. மகாபாரதமேயானாலும் தேவையற்ற இடங்களில் கூட பொருத்தமோ அழகோ இல்லாமல் இறைக்கப்பட்டுள்ள ஏராளமான சமஸ்கிருதச் சொற்கள் சங்கடமேற்படுத்துகின்றன.

 

இரண்டாவதாக இதன் வடிவத்தில் ஏற்பட்டுள்ள சரிவைக் கூறவேண்டும். மகாபாரதத்தை மாற்றித் தொகுப்பதென்பது பகீரதச் சவால்தான். ஆயினும் இன்னமும் தீவிரமாக முன்னகர்ந்திருக்கலாம் என்று படுகிறது. ‘சூல்’ பகுதியில் விரிவான அடித்தளம் போடப்படுகிறது. அதன்மீது எழுப்பப்பட்ட கட்டிடமோ மிகவும் சிறிது. இத்தகைய கலவை வடிவத்தை நிலைநிறுத்தும் இணைப்புச்சரடு ஏதும் இந்நாவலில் இல்லை. ஆகவே உதிரிக்கூறுகளின் தொகுப்பாகவே நாவல் நின்றுவிடுகிறது. பின்னணியில் உள்ள மூலக்கதையின் ஞாபகமே இதை ஒற்றைப் படைப்பாக ஆக்குகிறது.

 

மூன்றாவதாக நாவல் முழுக்கத் தொடர்ந்துபோகும் தேடல் என்று எதுவும் இந்நாவலில் இல்லை. குறைந்த பட்சம் என்ன காரணத்துக்காக இந்த நாவல் எழுதப்பட்டதோ அந்தக் காரணம் தொடர்ந்து இயங்குவதன் தடயம் கூட இல்லை. பிறகு எஞ்சுவது ஒரு எளிய தொழில்நுட்பம் மட்டுமே. அது எவ்வாறு மூலக்கதைமீது தொழில்படுகிறது என்று புரிந்துவிட்ட பிறகு வாசகன் செய்வதற்கு ஏதுமில்லை. உதாரணமாக பாஞ்சாலியுடன் இருக்கும்போது பாண்டவர்கள் செருப்பைக் கழற்றி வாசலில் வைக்கிறார்கள் என்று ஒரு இடம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். உடனே ஆசிரியர் அந்தச் செருப்பை ஒரு உருவகம் (மெட்ட·பர்) ஆக்க முயல்வார். காண்டவ வனம் எரிதல், ஏகலைவனால் அம்புவிடப்பட்ட நாய் போன்றவை வலுவான உருவகங்களாக மாறுகின்றன. பல உருவகங்கள் மிகவும் எளிமையானவையாக உள்ளன.

 

இந்நாவலின் பிரச்சினைகளில் சில ஆசிரியரின் குறைபாடுகள். சில நம் கலாச்சாரத்தின் முரண்பாடுகளின் விளைவுகள். ஒரு நாவலின் வெற்றியையும் தோல்விகளையும் நாம் கலாச்சாரத்தின் புன்புலத்தில் வைத்தே பேசவேண்டும். நவீன இலக்கியப் பிரக்ஞை, செவ்விலக்கியம், நாட்டார் மரபு ஆகிய மூன்று அடிப்படைப் போக்குகளின் ஊடாட்டத்தின் பல தளங்களை வாசித்தறிய உதவக்கூடியது முக்கியமான இப்படைப்பு.

 

 

[சொல்புதிது இதழில் வெளிவந்த கட்டுரை ]

முந்தைய கட்டுரைஉயிர்மை வெளியீடாக ஜெயமோகனின் 10 நூல்கள்
அடுத்த கட்டுரைபடைப்புகள்,கடிதங்கள்