அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு!
வணக்கம்!
நான் உங்களின் எந்த நாவலையும் படிக்கவில்லை. ஆனால் இணையத்தில் உங்கள் படைப்புகளை படித்துவருகிறேன். பின் தொடரும் நிழல் நாவலின் இலக்கிய தன்மையைப்பற்றி திரு. கருணாகரமூர்த்தி எழுதிய மதிப்பீட்டை தற்போதுதான் படித்தேன்
(ஒரு பிறப்பு அங்கவீனமாக/விகாரமாகப் பிறப்பதற்கு விகாரத்தால் (Mutation) ஒழுங்கை/வடிவம் இழந்துவிட்ட நிறமூர்த்தங்களின் சேர்க்கை, முளையம் உருவாகியபின் ஏற்படும் விகாரங்கள்/அதிர்ச்சிகள், ஒவ்வாமையுண்டுபண்ணும் இரசாயனங்கள், கதிர்வீச்சுக்கள் எனப்பல புறச்சூழல்காரணிகளும் உண்டு. ஆதலால் ஒரு விகாரியை இன்னொரு விகாரியுடன் அணையவிடுவதால் மேலும் ஒரு விகாரம் பிறப்பதற்கான சந்தர்ப்பம் 25%தான். அதற்கு அடுத்த தலைமுறையில் அது மேலும் பாதியாகும். இந்த மரபியல் உண்மை நாவலில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஒரு விகாரமும் இன்னொரு விகாரமும் இயைந்தால் இன்னொருவிகாரந்தான் ஜனிக்குமென ஒரு பாமரப் போத்திவேலுவோ குமரேசனோ கருதலாம், ஜெயமோகன் அப்படி எடுத்துக்கொள்ளமுடியுமா? ஜெயமோகனின் படைப்பாளுமைக்கு முன்னால் இது சிறியதொரு கவனயீனப்பிசகு. ஆனாலும் சுட்டாமலிருக்க முடியவில்லை.)
மரபணுவியலைப்பற்றி தமிழில் எழுத எனக்குத்தெரியவில்லை. ஆகவே இப்பகுதி மட்டும் ஆங்கிலத்தில். தமிழ் கலைச்சொற்களைப்பற்றி நான் இன்னமும் தெரிதுகொள்ள வேண்டியிருக்கிறது ஆங்கிலத்தில் தொடர்வதற்கு மன்னிக்கவும் .
உடற்குறை பிறவியிலேயே வரக்கூடிய வாய்ப்பென்பது மரபணு உருமாற்றம் , ஒழுங்கற்ற மூளை வளார்ச்சிவளர்ச்சி, ரசாயனங்களின் ஒவ்வாமை, கதிரியக்கம் போன்றவற்றால் இவை நிகழ்கின்றன என்று கருணாகரமூர்த்தி சொல்கிறார். ஊனமுற்ற இருவர் உடலுறவு கொள்வதன் மூலம் அக்குறை திரும்ப நிகழ்வதற்கான வாய்ப்பு என்பது 25 சதம் மட்டுமே என்கிறார். அது அடுத்த தலைமுறையில் பாதியாகக் குறையும் என்றும் சொல்கிறார். ஆச்சரியம்தான். அவரது கருத்துக்களை பொருட்படுத்தவேண்டாம். அது பிழையானது
மரபணு உருமாற்றம் என்பது உயிர் வளர்ச்சியில் நிகழ்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உதாரணமாக அடினைன் [adenine] குவனைன் [guanine ] ஆக மாறுவது சைடோசைன் [cytosine] தையமைன்[ thiamine] ஆக மாறுவதும் திருப்பி மாறுவதும். அது பெருமளவுக்கு பாரம்பரியமான மாறுதலே. அது தன் மூல கச்சா வடிவுக்கு திரும்புவது வரை மீண்டும் மீண்டும் நிகழலாம். பார்வையின்மை கேள்வியின்மை பேச்சின்மை போன்ற குறைபாடுகள் தனிமனிதர்களில் உள்ள மரபணுச் சிக்கலினால் நிகழ்கின்றன. நெருக்கமான உறவுள்ளவர்கள் வழியாக உடலுறவு நிகழும்போது அது மீண்டும் நிகழ வாய்ப்பு மிக அதிகம். அதாவது இரு பெற்றோரும் அதே குறைபாட்டுடன் இருந்தார்கள் என்றால் அந்த குறைபாடு நீடிப்பதற்கான சாத்தியம் என்பது கிட்டத்தட்ட நூறுசதவீதம்
மரபணுவியல் ஆலோசனைகளில் பெற்றோர் இருவருக்குமே மரபணுச் சிக்கல் இருந்தால் அந்த மண உறவை தவிர்த்துவிடும்படி மிக கறாராகவே அறிவுறுத்தப்படுகிறது. நீரிழிவு இதயச் சிக்கல்கள் போன்றவற்றில் இன்னமும் கடுமையாக வலியுறுத்தப்படுகிறது. பாலுறவு வழியாக வரும் மரபணுச் சிக்கல் என்பது நிர்ணயிக்க முடியாதபடி இன்னமும் சிக்கலானது. எப்படி கருணாகரமூர்த்தி 25 சதவீத வாய்ப்புதான் என்று இறுதியான முடிவுக்கு வந்தார் என்பது ஆச்சரியமளிக்கிறது.
மரபணுக்குறை உள்ளவர்களை தேர்வுசெய்து இணைய செய்வதன் மூலம் உடற்குறைகளை நம்மால் முழுக்க முழுக்க நீடிக்கச் செய்ய முடியும். தயவ்செய்து genotypic assortative mating and genotypic assortative mating ஆகியவற்றைப்பற்றி கூகில் வழியாக வாசித்து பார்க்கவும்.
எனக்கு உங்கள் எழுத்து எனக்கு பிடிப்பதன் காரணத்தை ஏற்கனவே உங்களுக்கு கூறி இருக்கிறேன். உங்களின் நகைச்சுவை உணர்வு மற்றும் உயிரியியல் சார்ந்த அனுபவ அறிவு. நான் பல முறை வியந்திருக்கிறேன். நீங்கள் உங்கள் பகுதியில் வளரும் வாழை, லவங்க (Cinnamom) மற்றும் பலா வகைகளை பற்றி எழுதியதை படித்து இருக்கிறேன். எதற்கு கூறுகிறேன் என்றால், கருணாகரமூர்த்தி உங்களுக்கு கவனப்பிசகு என்று கூறி சில காரணங்களைகூறி இருந்தார்.
அதனால் உங்களின் தீர்மானம் மிகச்சரியானதே. இதை விவாதிப்பதற்கு மற்றும் எழுதுவதற்கு எனக்கு தகுதி இருக்கிறது, மரபியலை படித்தவன் மற்றும் ஆராய்ச்சியில் ஈடு பட்டுக்கொண்டிருப்பவன் என்ற வகையில். ஆனால் உங்கள் இலக்கிய ஆளுமையைப்பற்றி அல்ல. அதை படிக்கும் ஒரு வாசகன் அவ்வளவே. அதற்கு எந்த தகுதியும் எனக்கு இல்லை.
நன்றிகள்!
தண்டபாணி
அன்புள்ள தண்டா
உண்மையிலேயே அப்படிச் செய்வதைக் கண்டுதான் நான் எழுதினேன். வழக்கம்போல அதற்கு முன்னர் விஷயம் அறிந்தவர்களிடம் விசாரித்து அதன் சாத்தியங்களை உறுதிசெய்துகொண்டேன். கருப்புகுதலுக்குப் பின்னர் வரும் சில வளர்ச்சிக்குறைபாடுகளினால் உருவாகும் ஊனங்கள் தாய்தந்தை வழியாக கைமாறப்படுவது குறைவு. ஆனால் மரபணு ஊனங்கள் முழுமையாகவே கைமாறப்படும். அதிலும் சகோதர சாகோதரிகளை ,பெற்றோர் குழந்தைகளை இதற்காக பயன்படுத்தும்போது வாய்ப்பு மிகமிக அதிகம், அனேகமாக நூறு சதவீதம். மங்கலாய்டுகள் போன்ற குழந்தைகள் இப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன
நான் அப்போது நாவல் குறித்த விவாதம் இந்த திசை நோக்கி திரும்ப விரும்பவில்லை
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு..,
நலம் அறிய விருப்பம் சார் , “பரிணாமம்” குறுநாவலை வாசித்தேன். ஆரம்ப போக்கே ரொம்ப பிடித்தமாக சிறுவர்களுக்கு கதை சொல்வது மாதிரி ஒரு வசீகரத்தை ஏற்படுத்தி போகிறது . சிங்கியின் அந்த கதையை உண்மை யை நோக்கி இதில் வருபவர் (நீங்களா அது!!,கப்சா மோகன் என்று எல்லாம் குறிபிடப்பட்டுள்ளது ) மேற்கொள்ளும் முயற்சிகள் செயிலர் , பாதிரியார் இவர்களது புத்தகங்கள் (பக்கம் ,வருஷம் , பதிப்பகம் எல்லாம் போட்டு) அதில் குறிப்பிட பட்டுள்ள விவரணைகள் குறிப்பாக அரபிக்கடல் காற்று மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு ஓட்டையை ஏற்படுத்தி அதன் வழி பெருங்காற்று பயணிப்பது எல்லாம் ஒரு கணம் உண்மையிலேயே அந்த புத்தகங்கள் இருந்தாலும் இருக்கும் போல என்று தோன்ற வைத்து விடுகிறது.
‘மனித ஆமைகள் ,முதுகு செதில்களடைந்து குவிந்து எழுந்து நின்றது .நாலு திசைகளில் வளைந்திருந்த ஒரே அளவிலான கை கால்கள் ”
இம்மானுவேலை கற்பனை செய்து பார்த்தேன் ரொம்ப சுவாரசியாமாக ;; இதற்கு அறிவியல் ரீதியாக சொல்லப்படும் காரணங்கள், பழங்குடிகளின் மூதாதையார்கள் பற்றிய எண்ணங்கள் போன்றவை நான் ரொம்ப ரசித்த பகுதிகள்.இதில் ஒரு பிரயோகம் வரும் “காற்றால் ஆன நதி ” என்று, இந்த புனைகதையின் நடையிலும் அது ஒளிந்துள்ளது.செம விறுவிறுப்பு ; “பரிணாமம்’
மூலம் கற்பனைக்கு பெருந்தீனி கிடைத்த மாதிரி உணர்கிறேன்.
Regards
dineshnallasivam
அன்புள்ள தினேஷ்
பரிணாமம் ஒரு கற்பனைக் கதை. ஆனால் சில செவிவழிச்செய்திகளின் வேர் இருந்தது. முத்துக்குளிவயல் காட்டுக்குமேலே மனிதன் போக முடியாத ஒரு அடர்காடு இருப்பதாக ஒரு வதந்தி , தொன்மம், உண்டு. ஆச்சரியம் என்னவென்றால் சமீபத்தில் செயற்கைக்கோள் நிலவியலாராய்ச்சி நிபுணரான நண்பர் ஒரிசா பாலசுப்ரமணியம் இங்கே வந்தபோது உண்மையிலேயே அப்படி ஒரு அணுகமுடியாத காட்டை அங்கே கண்டுபிடித்திருப்பதாகவும் ஆராய்ச்சிகள் நடப்பதாகவும் சொன்னார். அனேகமாக மனிதர்கள் காலடி படாத காடாக இருக்கலாமாம்.
ஜெ
குட்டப்பனுக்கு மட்டும் வைரஸ் காய்ச்சல் வரவில்லையே, அதற்க்கு உங்கள் தர்கம் ஏன்ன?
சென்னைமேன் பாலா
சிலருக்கு வரும் சிலருக்கு வராது. ஏன் கிரிதரனுக்கும் டாக்டருக்கும் வரவில்லை. இரட்டையரில் ஒருவனுக்கு வரவில்லை ஒருவனுக்கு வந்தது…
கடவுள்தான் சொல்லவேண்டும்
ஜெ
மன்னிக்கவும்,என் மனதில் இருக்கும் கேள்வி சரியாக வெளிப்படவில்லை என்று எண்ணுகிறேன், குட்டப்பனுடைய பாத்திரம் என் மனதில் கேள்விகளை எழுப்பியபடி இருக்கிறது,குட்டப்பன் அந்த நொடி வாழ்க்கையை மட்டும் வாழ்ப்பவனாக எனக்கு புரிந்தது,அவனுக்கு எதுவுமே கவலை அளிப்பதாக தெரியவில்லை அடுத்தவன் மனைவியை எந்த உருத்தலும் இல்லாமல் அனுபவிப்பதுகூட அந்த எந்த உருத்தலும் இல்லாத வாழ்க்கை சாத்தியமா? மறுபடி மன்னிக்க.. இபொழுதும் என் கேள்வி சரியாக வெளிப்படவில்லை என்றே தோன்றுகிறது. குட்டப்பனுடைய பாத்திரம் பற்றி நீங்கள் உங்கள் மனதிம் சித்திரம் என்ன? உங்கள் நேரத்திற்கு நன்றி,
சென்னைமேன் பாலா
அன்புள்ள பாலா
கதாபாத்திரம் குறித்து ஆசிரியர் பேசக்கூடாது.
ஒரு காடு நம்மிடம் பேச முடியாது. ஆகவே அது ஒரு மனிதன் வழியாகப் பேசுகிறது. அதுவே குட்டப்பன்
ஜெ பாலா
ஜெயமோகனின் ஏழாம் உலகம் “பொ கருணாகர மூர்த்தி
ஏழாம் உலகம் பழைய கட்டுரைகள் சுட்டிகள்
http://www.jeyamohan.in/?p=1220
http://www.jeyamohan.in/?p=432
http://www.jeyamohan.in/?p=432
http://www.jeyamohan.in/?p=463