பகுதி பதினேழு : புதிய காடு
[ 2 ]
சில நாட்கள் பாண்டு எங்கிருக்கிறோம் என்றறியாதவன் போலிருந்தான். தோளில் விழிமலர்ந்து அமர்ந்திருந்த தருமனுடன் காட்டுக்குள் அலைந்தான். காட்டுமரநிழலில் படுத்துக்கிடக்கும் மைந்தனையும் தந்தையையும் அனகையும் சேடிப்பெண்களும் மீண்டும் மீண்டும் தேடிக்கண்டுபிடித்து அழைத்து வந்தனர்.
காட்டில் ஒவ்வொரு முறை அவர்கள் காலடியோசை கேட்கும்போதும் பாண்டு திகைத்து உடலதிர்ந்தான். சேடிகளை சிவந்த விழிகளால் நோக்கி மைந்தனை அள்ளி எடுத்து அணைத்துக்கொண்டான். அவன் ஹம்ஸகூடத்து தவச்சாலையில் உள்ள அனைவரையுமே எதிரிகளாக எண்ணுவதாகத் தோன்றியது. அவர்கள் பெருந்தீங்குடன் தன்னை நோக்கி வருகிறார்கள் என்பதுபோல. விழித்திருந்தால் அவன் அவர்களின் காலடியோசையிலேயே எழுந்து உள்காட்டுக்கு விலகிச்சென்றுவிடுவான்.
இரவு முழுக்க பாண்டு முற்றத்தில் மரப்பட்டை படுக்கையில் மரவுரியைப் போர்த்தியபடி அமர்ந்தே செலவிட்டான். வாயிலைத்திறந்து பார்த்தபோதெல்லாம் அவன் அமர்ந்தே இருப்பதை அனகை காண்பாள். அவனுக்குமேல் ஹம்ஸகூடத்தின் இருண்ட வானம் விண்மீன்கள் செறிந்து விரிந்திருக்கும். காட்டுக்குள் இருந்து எழும் விலங்கொலிகள் காற்றிலேறிச் சூழ்ந்து பறக்கும். விடிந்ததுமே அவன் உள்ளே வந்து தருமன் அருகே நிற்பான். அவள் அவனுக்கு உணவூட்டியதுமே கையில் எடுத்துக்கொண்டு காட்டுக்குள் செல்வான்.
அஸ்தினபுரியில் காந்தாரிக்கு மைந்தன் பிறந்திருக்கும் செய்தி ஐந்தாம்நாள் பறவைச்செய்தியாக வந்தது. அச்செய்தியை அனகைதான் முதலில் வாசித்தாள். விடிகாலையின் இருளில் முற்றத்தில் அமர்ந்திருந்த பாண்டுவிடம் சென்று “அரசே… தங்கள் தமையனுக்கு மைந்தன் பிறந்திருக்கிறான்” என்று ஓலையை நீட்டினாள். பாண்டு அதைவாங்கி வாசித்துவிட்டு ஏதும் விளங்காத பார்வையுடன் திரும்பத்தந்துவிட்டு திரும்பிக்கொண்டான்.
அவள் சிலகணங்கள் நின்றுவிட்டு திரும்பி குடிலுக்குள் சென்று அச்செய்தியை குந்தியிடம் சொன்னாள். குந்தி தலையை மெல்ல அசைத்துவிட்டு “மதங்ககர்ப்பமேதான்… இருபதுமாதம் கருவுக்குள் வாழ்ந்திருக்கிறான்” என்றாள். அப்போது பாண்டு மகிழ்வுடன் கூவியபடி குடிலுக்குள் புகுந்து “பிருதை, என் தமையனுக்கும் மைந்தன் பிறந்திருக்கிறான். இதே நாள் அக்னிசர அஸ்வினி மாதம், கிருஷ்ண நவமி. அதிகாலை ஆயில்ய நட்சத்திரம்” என்று கூவினான். குந்தி “காலையிலா?” என்றாள். “ஆம், அதிகாலையில். என் மைந்தனுக்கு அவன் எட்டு நாழிகை மூத்தவன்.”
குந்தி ” அது நாகராஜனாகிய வாசுகி பிறந்த நாள்” என்றாள். “ஆம், வலிமையின் நாள். தோல்வியே அறியாத முழுமையின் நாள் அது” என்றான் பாண்டு. “அவன் அஸ்தினபுரியின் சக்ரவர்த்தி… அவன் பிறக்கவேண்டிய நேரம் அதுதான்.” பாண்டு முழுமையாகவே மாறிவிட்டிருந்தான். அவன் குரலையே ஐந்துநாட்களுக்குப்பின்னர்தான் கேட்கிறோம் என குந்தி எண்ணிக்கொண்டாள்.
அவன் “நான் இங்கே தேன் வைத்திருந்தேன். எங்கே? இன்று முனிவர்களனைவரையும் வணங்கி தேன் கொடுக்கப்போகிறேன்” என்றான். அனகை உள்ளே சென்று தேன் நிறைத்து மெழுகால் மூடி தொங்கவிடப்பட்டிருந்த மூங்கில்களுடன் வந்தாள். அவன் அந்தக்குடுவைகளை வாங்கி தூக்கிப்பார்த்து உரக்கச்சிரித்தபடி “உள்ளே தேனை நிறைத்துக்கொண்டு அமைதியாக இருளில் தவம்செய்தல்… அற்புதமான வாழ்க்கைதான் இவற்றுக்கு. இல்லையா?” என்றான்.
“நலமான பேறா?” என்று குந்தி மெல்லக் கேட்டாள். “செய்தி சுருக்கமாகவே வந்துள்ளது. தூதன் நேரில் வந்தால்தான் முழுமையாக அறியமுடியும். தாயும் மகவும் நலமாக உள்ளனர்” என்று அனகை சொன்னாள். “ஆம்… குழந்தை மற்ற குழந்தைகளைவிட நான்கு மடங்கு பெரியதாக உள்ளது என்கிறது செய்தி. நான்கு மடங்கு என்றால்… என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை… அச்சொற்களை என்னால் காட்சியாக விரிக்க முடியவில்லை” என்று பாண்டு சொன்னான்.
நிலைகொள்ளாமல் குடிலுக்குள் சுற்றிவந்தான். “என் தமையனைப்பார்க்கவேண்டும் போலிருக்கிறது. மகிழ்ச்சியைத் தாளமுடியாமல் அவர் கைகளை அறைந்துகொள்வார். விதுரா மூடா என்று கூச்சலிட்டுக்கொண்டிருப்பார். நான் அருகே சென்றால் கனத்த பெருங்கைகளால் என்னை அணைத்துக்கொள்வார்… மகிழ்ச்சியால் சிரிப்பதும் துயரத்தால் அழுவதும் கோபத்தால் கூவுவதும் அவரில் இயல்பாக நிகழ்ந்துகொண்டிருக்கும். பருவநிலைகளுக்கேற்ப அக்கணமே மாறிக்கொண்டிருக்கும் ஏரி போன்றவர் அவர்.”
குந்தி அவனுடைய மலர்ந்த முகத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் திரும்பியதும் “நம் மைந்தன் எப்படி இருக்கிறான்?” என்றாள். அவள் நெஞ்சை உணர்ந்தவன் போல “நான் கவலையில் என்னை இழந்துவிட்டிருந்தேன் பிருதை… இச்செய்தியால் அனைத்தும் ஒளிபெற்றுவிட்டன. என் இளையமைந்தன் வாழ்கிறானா இல்லையா என்றே இனி நான் எண்ணப்போவதில்லை. என் தமையனுக்கு மாவீரன் மைந்தனாகப் பிறந்திருக்கிறான். அதுபோதும். என் மைந்தனின் உடலையும் சேர்த்து அவனுக்கு மூதாதையர் அளிப்பார்களென்றால் அவ்வாறே ஆகட்டும்…” என்றான்.
குளித்துவிட்டு ஈர உடையுடன் குடிலுக்குள் வந்த மாத்ரியை நோக்கி பாண்டு சொன்னான் “மாத்ரி, இதோ அஸ்தினபுரிக்கு அரசன் பிறந்திருக்கிறான். பாரதவர்ஷமே அவன் காலடியில் பணியும் என்று நிமித்திகர் சொல்கிறார்களாம். என் மைந்தர்கள் இருவரும் அவன் இருபக்கங்களிலும் நின்று அவன் அரியணையை தாங்குவார்கள். அவன் யாகக்குதிரையை தெற்கும் மேற்கும் நடத்திச்செல்வார்கள்… இதோ செய்திவந்திருக்கிறது!” குந்தியின் விழிகளை மாத்ரியின் விழிகள் தொட்டுச்சென்றன.
“அஸ்தினபுரியின் வேந்தனின் பிறப்பை இங்கே நாம் கொண்டாடவேண்டும். அவனுக்காக இங்கே பூதவேள்விகளை செய்யவேண்டும். என் மைந்தனின் ஜாதகர்மங்களுடன் அதையும் சேர்த்தே செய்வோம்” என்றான். முனிவர்கள் அனைவருக்கும் செய்தியறிவித்துவிட்டு வருகிறேன்” என்று பாண்டு வெளியே சென்றான். அங்கே சேடியின் கையில் இருந்து கைநீட்டித் தாவிய தருமனை வாங்கி மார்போடணைத்துக்கொண்டு முத்தமிட்டான். உரக்க நகைத்தபடி தோளிலேற்றிக்கொண்ட மைந்தனுடன் முற்றத்தைக் கடந்து ஓடினான்.
“அப்படி இருக்குமோ மாத்ரி?” என்றாள் குந்தி. மாத்ரி புரியாமல் “என்ன?” என்றாள். “அந்த மைந்தன் என் குழந்தையின் குருதியை எடுத்துக்கொண்டுவிட்டானோ?” மாத்ரி திகைப்புடன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள். “என் அகம் நிலையழிந்து தவிக்கிறது. காந்தாரத்தினர் தீச்செய்வினைகளில் வல்லவர்கள் என்று சொல்லி அறிந்திருக்கிறேன்” என்றாள். மாத்ரி “அக்கா, தங்கள் மனம் இப்படியெல்லாம் செல்லும் என்பதை என்னால் நம்பமுடியவில்லை” என்றாள்.
“என் குருதி வழியாக நான் என்னும் ஆணவம் முழுக்க சென்றுவிட்டது. இப்போது வெறும் அச்சங்களும் ஐயங்களும்தான் எஞ்சியிருக்கின்றன. பெருவல்லமைகளின் கருணைக்காகக் காத்து வெறும் சருகு போல இங்கே படுத்திருக்கிறேன்” என்றபடி குந்தி கண்களை மூடிக்கொண்டாள். அவள் கண்களின் முனையில் கண்ணீர் துளிர்த்து வழிந்தது. தொண்டை அசைந்தது. “அங்கே எண்ணைப்பாத்திரத்தில் கிடக்கும் என் மைந்தனை நான் எண்ணிக்கொள்வதேயில்லை. நினைவு சென்று தொட்டாலே என் அகம் அஞ்சி பின்வாங்கிவிடுகிறது.”
அஹிபீனா புகையிலேயே அவளை பெரும்பாலும் வைத்திருந்தனர். இருபுதல்வர்களுக்கும் ஜாதகர்மங்கள் நிகழ்ந்தபோது அவள் படுக்கை விட்டு எழமுடியாதவளாகவே கிடந்தாள். ஏழுநாட்கள் சதசிருங்கத்தின் முனிவர்கள் வேள்விகள் ஆற்றினர். வேள்விச்சாம்பலையும் அவிமிச்சத்தையும் தூதனிடம் கொடுத்து அஸ்தினபுரிக்கு அனுப்பினர். அஸ்தினபுரியில் இருந்து ஒற்றனான சுசித்ரன் வந்து காந்தாரமைந்தன் பிறந்ததைப்பற்றிய செய்திகளைச் சொன்னான். அவற்றை மயக்கத்தில் இருந்த குந்தி கேட்கவில்லை.
ஒவ்வொருநாளும் காந்தார மைந்தனின் பிறப்பு பற்றிய கதைகள் அச்சம்தருவனவாக மாறிக்கொண்டே இருந்தன. ஒற்றன் சதசிருங்கம் வந்துசேர்வதற்குள் அவனுக்குள்ளேயே அச்செய்தி மேலும் கருமை கொண்டது. அவன் சொல்லச்சொல்ல அதைக்கேட்டிருந்த மாத்ரி அச்சத்துடன் எழுந்து அனகையின் பின்னால் சென்று நின்றுகொண்டாள். “கார்த்தவீரியார்ஜுனனைப்போல அம்மைந்தன் பன்னிரு கைகளுடன் பிறந்ததாக பாடும் சூதர்கதைகளும் உள்ளன அரசே” என்றான் சுசித்ரன்.
மைந்தனைப்பற்றிய எந்த தீயகதையையும் எவரும் பாடலாகாது என்று சகுனி ஆணையிட்டிருப்பதாக சுசித்ரன் சொன்னான். “முச்சந்திகளிலெல்லாம் காந்தார ஒற்றர்கள் காவல் நிற்கிறார்கள். சூதர்கள் பாடுவதை உளவறிகிறார்கள். பாடும் சூதர்கள் பலர் காணாமலாகிவிட்டனர் என்கிறார்கள். ஆனால் சூதர்களின் வாயை மூடும் வல்லமை காந்தாரத்து வாளுக்கில்லை. சூதர்கள் காற்றுபோல.”
“அம்புபட்டு குகைக்குள் ஒடுங்கியிருக்கும் சிம்மம் போலிருக்கிறார் சௌபாலர் என்கிறார்கள் அரசே” என்றான் சுசித்ரன். “தன் காயங்களில் வழியும் குருதியை நக்கும் சிம்மம் அந்தச் சுவையில் ஈடுபட்டுவிடும். அதை நக்கி நக்கி பெரியதாக்கும். அந்த வலியில் அது கர்ஜிக்கும். பின் அவ்வலியையே சுவையென எண்ணும். தன்னையே உண்டபடி அந்தகுகையிருளுக்குள் அது தனித்திருக்கும்.”
“அம்புபட்ட சிம்மம் குரூரமானது என்கிறார்கள். சிம்மம் வேறெந்த மிருகத்தையும்போல கொலையின்பத்துக்கென கொல்லாது. பசிக்குத்தான் கொல்லும். ஆனால் தன்குருதியை உண்டு சுவையறிந்த பின்பு அது கொலைவிளையாடலில் இறங்கும். அஸ்தினபுரியில் இன்று அனைவராலும் அஞ்சப்படுபவராக இருப்பவர் சௌபாலரே. மைந்தன்பிறந்த நாள் முதல் அவர் அங்குதானிருக்கிறார். மைந்தனின் நாமகரணச்சடங்கு இன்றுவரை பாரதவர்ஷம் கண்டவற்றிலேயே மிகப்பெரிதாகக் கொண்டாடப்படுமென்று சொல்கிறார்கள்.”
பாண்டு பெருமூச்சுடன் “ஆம். அங்கே நிகழ்ந்துகொண்டிருப்பது அரசியல். உண்மையில் சதுரங்கத்தில் ஒரு வல்லமைவாய்ந்த காய் வந்திருப்பதைத்தான் கொண்டாடுகிறார்கள். அவர்கள் மைந்தன் பிறந்த மகிழ்வை அறிந்திருக்கமாட்டார்கள். அவனைப் பெற்ற அன்னையாவது அவனை முகம் சேர்த்து கருவறைத்தெய்வங்களின் வாசனையை அறிந்திருப்பாளா என்பது ஐயமே” என்றபின் “இத்தருணத்தில் இச்செய்திகள் எவையும் பிருதை அறியவேண்டியதில்லை” என்றான்.
ஆனால் எங்கோ குந்தி அறிந்துகொண்டிருந்தாள். முன்னிரவில் தன் கனவுகளின் ஆழத்தில் இருந்து உந்தி மேலெழுந்து வந்து இருளில் கண்விழித்து “அனகை அனகை” என்று அழைத்தாள். அனகை அகல் விளக்குடன் வந்து குனிந்ததும் “நீர்” என்றாள். நீரை மார்பில் சிந்தியபடி அருந்தியபின் உடலை உலுக்கிக்கொண்டு “ஒரு கனவு… கொடுங்கனவு” என்றாள். “என்னைப்பிடி. நான் என் மைந்தனை உடனே பார்க்கவேண்டும்.”
“அரசி, இந்நேரத்திலா?” என்றாள் அனகை. “ஆம், என்னைப்பிடி. நான் அவனைப்பார்க்காமல் இனி துயில முடியாது” என்று குந்தி எழுந்துவிட்டாள். அனகை அவளை பிடித்துக்கொண்டதும் வலுவிழந்த கால்களில் சற்றுநேரம் நின்றபின் “செல்வோம்” என்றாள். முற்றத்தின் குளிரில் இறங்கியதும் அவளுடைய மெலிந்த உடல் நடுங்கியது. அனகை கனத்த மரவுரியால் அவளைப் போர்த்தினாள். சிறுகுழந்தை போல கால்களை எடுத்துவைத்து நடந்தபடி “என்ன ஒரு கனவு!” என்றாள்.
அனகை ஒன்றும் சொல்லவில்லை. “நான் ஒரு பெரிய அரக்கக் குழந்தையைப் பார்த்தேன். கரியநிறம் கொண்டது. வல்லமை வாய்ந்த கைகால்கள்… மிகப்பெரிய குழந்தை. பிறந்து ஒருமாதமாகியிருக்கும். ஆனால் அது நடந்தது. அதன் வாய்க்குள் வெண்ணிறப்பற்கள் இருந்தன. அதைச்சூழ்ந்து காகங்கள் பறந்துகொண்டிருந்தன.” அனகை பிடியை நழுவவிட குந்தி விழப்போனாள். “பிடித்துக்கொள்” என்றாள் குந்தி. “சரி அரசி” என்றாள் அனகை.
“என் மைந்தன் ஒரு சிறிய இலையில் படுத்திருக்கிறான். தரையில் அல்ல. அந்த இலை ஒரு மரத்தில் நின்று ஆடியது. அதில் என் மைந்தன் ஒரு புழு போல ஒட்டி மெல்ல நெளிந்துகொண்டிருந்தான். அந்த அரக்கக் குழந்தை வந்து என் மைந்தனை குனிந்து நோக்கியது. கைகளை நீட்டி தொடப்போனது. மீண்டும் மீண்டும் கைகளை நீட்டிக்கொண்டே இருந்தது. அவனை அது நசுக்கிக் கொல்லப்போகிறது என்று எண்ணி நான் திகைத்தேன். உடனே விழிப்பு கொண்டேன்” என்றாள் குந்தி. “ஆனால் விழித்தபின் ஒன்றை உணர்ந்தேன். என் குழந்தை விழிகளைத் திறந்து அந்த அரக்கக்குழந்தையை அச்சமேயின்றி பார்த்துக்கொண்டிருந்தது.”
ஆதுரசாலைக்குள் இரு மருத்துவச்சிகள் இருந்தனர். அவர்கள் குந்தியைக் கண்டதும் எழுந்து வந்து வணங்கினர். “என் மகன் எப்படி இருக்கிறான்?” என்றாள் குந்தி. “கருவறையின் சுஷுப்தியையே இங்கும் உருவாக்கியிருக்கிறோம் அரசி” என்றாள் மருத்துவச்சி. “குரங்குகளின் பாலை திரியில் தொட்டு அளிக்கிறோம். குடல் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறது. மூச்சுக்கோளங்களும் சற்று விரிந்திருப்பதனால் இப்போது மூச்சுவாங்குவது குறைந்திருக்கிறது.”
குந்தி குனிந்து சுடர்கள் சூழ்ந்த எண்ணைக்குள் கிடந்த குழந்தையைப் பார்த்தாள். எண்ணையில் நெருப்பின் செம்மை தெரிய அது கனலில் கிடப்பதுபோலத் தெரிந்தது. அவள் மெல்ல குனிந்து “விருகோதரா” என்றாள். திரும்பி “என் குரல் அவனுக்குக் கேட்குமா?” என்றாள். “ஆம் அரசி… கேட்கும்” என்றாள் மருத்துவச்சி. “விருகோதரா… மாருதி…” என அழைத்தாள் குந்தி. “எழு… எழுந்திரு கண்ணே!”
அவள் கண்கள் கலங்கிவிட்டன. அழுகையை அடக்கிக்கொண்டாள். அனகை அவள் தோள்களைத் தொட்டு “அரசி” என்றாள். “நான் அவனைத் தொடலாமா?” என்றாள் குந்தி. மருத்துவச்சி “தொடலாம் அரசி. ஆனால் தொடுகையை மைந்தன் அறிய வாய்ப்பில்லை” என்றாள். உதடுகளை இறுக்கியபடி குந்தி மெல்ல குனிந்து குழந்தையின் தலையைத் தொட்டாள். குழந்தை திடுக்கிட்டு உடலைச் சுருக்கிக்கொண்டது. அதன் முகம் சற்றே விரிந்தபோது அது புன்னகைபுரிவதுபோலிருந்தது.
“அவன் அறிகிறான்… அவனால் என் கைகளை உணரமுடிகிறது” என்று அடைத்த குரலில் குந்தி சொன்னாள். உவகையால் சிலிர்த்த உடலுடன் “அவன் அறிகிறான். ஐயமே இல்லை” என்றாள். மருத்துவச்சி ஒன்றும் சொல்லவில்லை. “விருகோதரா… மாருதி… எழுந்திரு… உன் தமையன் உனக்காகக் காத்திருக்கிறான். உன் களங்கள் உன்னை எதிர்பார்த்திருக்கின்றன… மாருதி, விருகோதரா…” அவள் அவனுடைய செவியில் சொன்னாள். வௌவாலின் செவிகள் போன்று மிகச்சிறியதாக இருந்தன அவை. அவன் கேட்கிறான் என்ற எண்ணம் அனகைக்கும் வந்தது. அவன் இமைகளுக்குள் கண்கள் அசைந்துகொண்டிருந்தன.
அனகையின் குரல் அலைகளின் அடியிலிருந்து வண்ணக்கரைசலாக எழுந்து ஒன்று திரண்டு வந்து தொடும்படி நின்றது. ‘அரசி! அரசி!’ குந்தி கையை நீட்டி அதை தொட அது அதிர்ந்து உடைந்தது. குந்தி சிவந்த விழிகளுடன் பார்த்தபோது “அரசி, பலாஹாஸ்வ முனிவரை முறைப்படி வரவேற்கவேண்டும் என்று அரசர் ஆணையிட்டிருக்கிறார். தங்களால் நிற்கமுடியுமா?” என்றாள்.
குந்தி “நான் நலமாகவே இருக்கிறேன். வெந்நீரில் நீராடினால் மட்டும்போதும்” என்றாள். மாத்ரி “வெந்நீரை நான் எடுத்துவைத்துவிட்டேன் அக்கா” என்றாள். குந்தி கைநீட்ட மாத்ரியும் அனகையும் பற்றிக்கொண்டனர். மாத்ரி “தங்கள் கரங்கள் குளிர்ந்திருக்கின்றன அக்கா” என்றாள். “குருதி என்பது திரவ வடிவ நெருப்பு… அது எஞ்சியிருக்கிறது. அன்னம் அதற்கு விறகு… எழுப்பிவிடலாம்” என்று அப்பால் நின்ற மருத்துவச்சி சொன்னாள்.
ஆதுரசாலையின் வாயிலில் பாண்டுவும் குந்தியும் மாத்ரியும் காத்து நின்றனர். குந்தி தன் கால்கள் குளிர்ந்து தளர்ந்திருப்பதை உணர்ந்து மூங்கில் தூணில் சாய்ந்துகொண்டாள். மாத்ரி அவளிடம் விழிகளால் என்ன என்று கேட்டபோது ஏதுமில்லை என்று பதில்சொன்னாள். பாண்டு கைகளில் முனிவரை வாழ்த்துவதற்கான வெண் மந்தார மலருடன் நின்றிருந்தான். ஆதுரசாலை வாயிலில் மருத்துவச்சிகள் நின்றனர். வலப்பக்கம் சற்றுதள்ளி குரங்குகளை அடைத்துப்போட்ட கூண்டு இருந்தது. மூங்கில்களைப்பற்றியபடி அவை கூண்டுக்குள் கால்மடித்து அமர்ந்திருந்தன. அவற்றின் வயிற்றில் ஒட்டிய குட்டிகள் வட்டக் கண்களை இமைத்து இமைத்து சுழற்றியபடி அவர்களை நோக்கின.
மூன்று கௌதமர்களும் மாண்டூக்யரும் தொடர பலாஹாஸ்வர் நடந்துவந்தார். கரடித்தோலால் ஆன மேலாடையை பெரிய உடலுக்குக் குறுக்காக அணிந்திருந்தார். கரியும் நெருப்பும் போலத்தெரிந்தது அவர் உடல். பனிமலைகளில் உலவியதனால் அவரது முகம் உலர்ந்த செம்மண்சேறுபோல சுருக்கங்கள் அடர்ந்திருந்தது. உரத்த குரலில் பேசியபடியே வந்தவர் அவர்களைக் கண்டதும் நின்றார். பின்னர் முகம் மலர்ந்து அங்கே நின்றபடியே தன் கைகளைத் தூக்கி வாழ்த்தினார்.
அவர் அருகே வந்ததும் பாண்டு அவரை கால்தொட்டு வணங்கினான். “அனைத்து நலங்களும் சூழ்க!” என்று அவனை அவர் வாழ்த்தினார். குந்தியையும் மாத்ரியையும் “மைந்தருடன் பொலிக!” என்று வாழ்த்தியபின் “நாம் மைந்தனைப் பார்ப்போமே” என்றார். பாண்டு “மைந்தன் இங்குதான் இருக்கிறான் தவசீலரே” என்றான். “இங்கா? இது ஆதுரசாலை போலிருக்கிறதே?” என்றார் பலாஹாஸ்வர். மாண்டூக்யர் “மைந்தன் ஆறுமாதத்திலேயே பிறந்துவிட்டிருக்கிறான். இன்னும் உடல்வளரவில்லை” என்றார்.
பலாஹாஸ்வர் புருவங்கள் முடிச்சிட அவர்களைப் பார்த்தார். பின்னர் கனத்தகாலடிகளுடன் ஆதுரசாலைக்குள் சென்றார். அங்கிருந்த மருத்துவச்சிகள் அவரைக் கண்டதும் எழுந்து வணங்கி விலகி நின்றனர். “இளவரசர் எங்கே?” என்றார் பலாஹாஸ்வர். முதியமருத்துவச்சி நடுங்கும் கைகளால் ஐந்து நெய்விளக்குகள் நடுவே இருந்த அகன்ற மண்சட்டிக்குள் பச்சைநிறமான தைலத்தில் கிடந்த குழந்தையை சுட்டிக்காட்டினாள். குழந்தையின் தலை மட்டும் தைலத்துக்கு வெளியே ஒரு மெல்லிய துணிச்சுருளால் தூக்கி வைக்கப்பட்டிருந்தது. தைலத்துக்குள் பாதிமிதந்தபடி ஒருக்களித்துக் கிடந்த சிறிய உடல் தைலத்தின் பச்சை மெழுக்கு படிந்து ஒரு களிம்பேறிய செப்புப்பாவை போலிருந்தது.
பலாஹாஸ்வர் குனிந்து குழந்தையைப் பார்த்தார். அவர் பின்னால் வந்து நின்ற குந்தியும் அப்போதுதான் அத்தனை தெளிவாக அதைப்பார்த்தாள். அதற்கு உயிர் இருப்பதுபோலவே தெரியவில்லை. ஆனால் வீங்கியதுபோலத் தெரிந்த கண்ணிமைகளுக்குள் மட்டும் அசைவு துடித்துக்கொண்டிருந்தது. பலாஹாஸ்வர் குழந்தையை அதன் கால்களைப்பிடித்து தூக்கி எடுத்தார். அதன் உடலில் இருந்து எண்ணை சொட்டியது. அது அழவோ அசையவோ இல்லை. அதன் மூடியஇமைகளும் கத்தியால் கிழிக்கப்பட்டது போன்ற உதடுகளும் மட்டும் துடித்தன. அவர் அதை இருமுறை உதறினார்.
“தவசீலரே…” என மாண்டூக்யர் ஏதோ சொல்லவந்தார். “இவனை கருவறையின் சுஷுப்தியிலேயே வைத்திருக்க முயல்கிறார்கள் இவர்கள். மனிதனை வளர்ப்பது கருவறை நீரல்ல, நீருள் வாழும் நெருப்பு. இந்த தைலத்தில் நெருப்பு இல்லை. நெருப்பு இருப்பது இச்சிறிய உடலுக்குள்தான். அந்த வைஸ்வாநரன் கண்விழிக்கட்டும்… இப்புடவியை உண்ணும் ஹிரண்யகர்ப்பனாக அவன் ஆகட்டும்…” என்றபடி அவர் அதை வெளியே கொண்டுவந்து மாலையின் வெயிலில் மண்தரையில் போட்டார். அது கீழே விழுந்த வௌவால்குஞ்சு போல ஓசையில்லாமல் சிவந்த வாயைத் திறந்து திறந்து மூடியது.
குந்தி தன் ஒவ்வொரு தசையையும் இறுக்கிக்கொண்டாள். மாத்ரி “அக்கா!” என்றாள். குழந்தை கரைக்குவந்து மூச்சுவாங்கி மெல்ல துடித்து இறக்கும் மீன்போல வாய்திறந்து தவித்தது. அதன் கைகளும் கால்களும் குழைந்து அசைந்தன. உடல்முழுக்க இறுதித்துடிப்பு போல ஒரு வலிப்பு வந்தது.
மாத்ரி “அக்கா” என்றாள். பின்னர் குழந்தையை நோக்கி ஓடினாள். பலாஹாஸ்வர் “நில்” என்றார். “எவரும் அதைத் தொடவேண்டியதில்லை. அதன் நெருப்பு இப்போதுதான் கண்விழித்தெழுகிறது” என்றார். குழந்தை தன் கால்களை மண்ணில் உரசியது. முட்டியாகப் பிடிக்கப்பட்ட கைகள் விரைத்து நடுங்கின. எண்ணைப்பூச்சு வழிந்தபோது அது நீரில் பிடுங்கி எடுத்த கிழங்கு போல உரிந்த வெண்தோலுடன் தெரிந்தது.
அப்பால் கூண்டிலடைபட்டிருந்த குரங்குகள் எம்பி எம்பிக்குதித்து கூச்சலிட்டன. மூங்கில்கள் வழியாக கைகளை நீட்டி விரல்களை அசைத்தன. பலாஹாஸ்வர் “அவை எதற்காக?” என்றார். “குழந்தையின் உதரத்துக்கு குரங்குகளின் மெல்லிய பால் மட்டுமே செரிக்கும்” என்றாள் மருத்துவச்சி. “அவற்றைத் திறந்துவிடு” என்றார். அவள் தயங்க அவர் “ம்” என உறுமினார். அவள் ஓடிச்சென்று குரங்குகளின் கூண்டுகளை ஒவ்வொன்றாக திறந்துவிட்டாள். குரங்குகள் கூச்சலுடன் குட்டிகளை அணைத்தபடி பாய்ந்து மரங்களில் ஏறிக்கொண்டன. குட்டிகள் அன்னையரின் வயிற்றை இறுக அணைத்துக்கொண்டு வௌவால்கள்போல ஒலியெழுப்பின.
ஒரு பெரிய குரங்கு வயிற்றில் குட்டியுடன் மேலே கிளைவழியாக வந்து குழந்தைக்கு மேலே அமர்ந்துகொண்டது. நுனிக்கிளைக்கு வந்து அதை உடலால் உலுக்கியபடி ஊஹ் ஊஹ் ஊஹ் என ஒலியெழுப்பி துள்ளியது. அவர்களை ஒவ்வொருவராக கூர்ந்து நோக்கியபின் மெல்ல கீழிறங்கி கிளைநுனியில் ஒரு கைபற்றி தொங்கி ஆடியபடி குழந்தையைப் பார்த்தது. அதன் வால் காற்றில் வளைந்து நெளிந்தது. ஓசையே இல்லாமல் மண்ணில் குதித்து அடியில் கவ்வித் தொங்கிய குட்டியுடன் நான்குகால்களில் மெல்ல நடந்து குழந்தையை அணுகி அருகே நின்று மீண்டும் அவர்களை ஐயத்துடன் பார்த்தது.
அதன் குட்டி பிடியை விட்டுவிட்டு இறங்கி அவர்களை நோக்கித் திரும்பி அமர்ந்து கண்களைக் கொட்டியது. அதன் சிறிய செவிகள் ஒலிகூர்ந்து மடிந்து அசைய கைகளால் தொடையைச் சொறிந்தபடி மெல்ல அவர்களை நோக்கி வந்து தயங்கி வாய் திறந்து சிறிய வெண்பற்களைக் காட்டியது. அதன் சிறிய மெல்லிய வால் மண்ணில் நெளிந்து அசைந்தது.
அன்னைக் குரங்கு ஐயத்துடன் மிகமெல்ல முன்காலைத் தூக்கிவைத்து சென்று குழந்தையை அணுகியது. வண்டு முரள்வதுபோல மெல்லிய ஒலியில் குழந்தை அழுவதைக் கேட்டு குந்தி மெய்சிலிர்த்தாள். குரங்கு தன் முன்னங்காலால் குழந்தையைத் தட்டி தள்ளியது. குழந்தை இருகைகளையும் கால்களையும் இறுக்கமாக அசைத்தபடி உடலே சிவந்து பழுக்க மேலும் உரக்க அழுதது. பூனைக்குட்டியின் அழுகை போல அது ஒலித்தது. குரங்கு குழந்தையை மேலும் இருமுறை புரட்டியபின் ஒற்றைக்கையால் தூக்கி தன்னுடலுடன் சேர்த்துக்கொண்டது.
முன்தலைமயிர் துருத்தி நிற்க மென்சாம்பல் நிறமாகச் சிலிர்த்த முடிபரவிய உடலுடன் அவர்களைப் பார்த்து அமர்ந்திருந்த குட்டி மெல்ல தன் சிறிய கால்களை எடுத்து வைத்து மேலும் அருகே வரமுயன்றது. அதன் வால் மனக்கிளர்ச்சியால் மேலெழுந்து நுனி நெளிந்தது. அதற்குள் அதன் தாய் குழந்தையைத் தூக்கியபடி ஓடிச்சென்று அடிமரத்தை தழுவிப்பற்றி தொற்றி மேலேறக்கண்டு விரைந்தோடி தாயின் வாலைத் தானும் பற்றிக்கொண்டு மேலேறிச்சென்றது.
பாண்டு “முனிவரே” என்றான். “குழந்தையின் வாயில் தன் பாலின் வாசனை இருப்பது அதற்குத்தெரியும்” என்றார் பலாஹாஸ்வர். “அது பார்த்துக்கொள்ளும். அன்னை என்பது ஓர் உடலல்ல. உலகுபுரக்கும் கருணைதான். அக்குரங்கைத் தொடர்ந்து ஓசையில்லாமல் செல்லுங்கள்… அது மைந்தனை மண்ணில் விடும்போது எடுத்துவாருங்கள்.”
சேவகர்கள் பின்னால் ஓடினார்கள். மரங்களின் அடியில் சத்தம்போடாமல் பரவியபடி அண்ணாந்து பார்த்தனர். மாத்ரி நிற்கமுடியாமல் மெல்ல பின்னகர்ந்து ஆதுரசாலையின் படிகளில் அமர்ந்துகொண்டாள். அவள் அழுதுகொண்டிருப்பதை திரும்பிப்பார்த்தபின் குந்தி நிலைத்த விழிகளுடன் மரங்களை நோக்கியபடி அமர்ந்திருந்தாள். “அவை மைந்தனை கீழே விட்டுவிடும். அவனை தங்களால் கொண்டுசெல்லமுடியாதென்று அவற்றுக்குத்தெரியும்” என்றார் பலாஹாஸ்வர்.
ஒருநாழிகைக்குப்பின் குழந்தையுடன் சேவகர்கள் திரும்பிவந்தனர். அவர்களுடன் சென்ற மாண்டூக்யர் “அவை மைந்தனை ஒரு பாறைமேல் விட்டுவிட்டன உத்தமரே” என்றார். “மைந்தனுக்கு எட்டு குரங்குகள் மாறிமாறிப் பாலூட்டியிருக்கின்றன.” அவரது கையில் இருந்து உடலெங்கும் எண்ணையில் மண்ணும் தூசியும் படிந்திருந்த குழந்தையை பலாஹாஸ்வர் தன் கையில் வாங்கினார். குழந்தை கைகால்களை உதைத்துக்கொண்டு வாய் திறந்து அழுதது. “அதன் உடலில் அக்னிதேவன் எழுந்துவிட்டான். இனி இந்த உலகையே உண்டாலும் அவன் பசி அடங்கப்போவதில்லை” என்று பலாஹாஸ்வர் உரக்கச்சிரித்தபடி சொன்னார்.
பாண்டு கைகூப்பினான். “அவன் சொல்வதென்ன என்று தெரிகிறதா? தன் கைகால்களால், அழுகையால் அவன் சொல்வது ஒன்றே. நான் வளரவேண்டும். நான் உலகை உண்ணவேண்டும். முடிவிலாது வளர்ந்து மேலெழவேண்டும். அதுவே அன்னத்திற்கு அக்னியின் ஆணை.” அவனை தன் முகத்தருகே தூக்கி உரத்தகுரலில் “நீ பெரியவன், பீமாகாரன். ஆகவே உனக்கு நான் பீமசேனன் என்று பெயரிடுகிறேன்” என்றார்.
மாண்டூக்யர் “சந்திரகுலத்துத் தோன்றலும் விசித்திரவீரியனின் பெயரனும் துவிதீய பாண்டவனுமாகிய இவன் இனி பீமசேனன் என்றே அழைக்கப்படுவான்” என்றார். மூன்று கௌதமர்களும் ‘ஓம் ஓம் ஓம்’ என்று முழங்கினர். மாத்ரி எழுந்து நடுங்கும் கரங்களால் குந்தியின் தோள்களைப் பற்றிக்கொண்டாள். அவள் கைகளின் ஈரத்தை குந்தி உணர்ந்தாள்.
குழந்தையை நீட்டியபடி பலாஹாஸ்வர் சொன்னார் “இவனுக்கு எதைக்கொடுக்கமுடியுமோ அதையெல்லாம் கொடுங்கள். வெயிலிலும் மழையிலும் போடுங்கள். நீரிலும் பாறையில் விட்டுவிடுங்கள். இவனுக்கு இனி இம்மண்ணில் தடைகளேதுமில்லை.” மாத்ரி குழந்தையை முன்னால் சென்று வாங்கி தன் முலைகளுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு அவளையறியாமலேயே விம்மி அழுதாள்.
குடிலுக்கு செல்லும்போது குழந்தை கைகால்களை உதைத்து அழுதது. “மீண்டும் பசி எடுத்திருக்கிறது அவனுக்கு” என்றாள் அனகை. “நான் சற்று பசும்பால் கொடுத்துப்பார்க்கலாமா அரசி?” குந்தி “அவனுக்கு எதையும் கொடுக்கலாம் என்று முனிவர் சொன்னாரல்லவா?” என்றாள். மாத்ரி குழந்தையை அவளிடம் தந்தாள். அனகை குழந்தையுடன் ஓடி குடிலுக்குள் சென்றாள்.
“நான் அஞ்சிவிட்டேன் அக்கா” என்றாள் மாத்ரி. “என்னால் அங்கே நிற்கவே முடியவில்லை… குழந்தை இறந்திருந்தால் என்னாலும் வாழ்ந்திருக்கமுடியாது.” குந்தி புன்னகையுடன் “அவன் இறக்கமாட்டான். அதை நான் உறுதியாகவே அறிவேன்” என்றாள். “அவன் கருவிலிருந்த நாளெல்லாம் என் அகம் வன்மத்தால் கொதித்துக்கொண்டிருந்தது. என் உக்கிரம் வெளியே நிகழ்ந்திருந்தால் மலைப்பாறைகளை உடைத்து சிதறடித்திருக்கும். மரங்களை பிய்த்து வீசியிருக்கும். ஆகவே அவன் எப்படிப்பிறப்பான் என்பதை அறிய விரும்பினேன். அதை நானன்றி எவரும் அறியலாகாதென்று எண்ணினேன். ஆகவே அவன் பிறந்த சரியான நேரத்தை நான் எவரிடமும் சொல்லவில்லை. பன்னிரு கணிகை நேரம் தாமதித்தே சொன்னேன். அதைக்கொண்டே அவனுடைய பிறவிநூலை கணித்திருக்கிறார்கள்.”
பிரமித்துப்பார்த்த மாத்ரியிடம் குந்தி சொன்னாள் “இன்று காலை அஸ்தினபுரியில் இருந்து வந்த நிமித்திகரான சுகுணரிடம் அவனுடைய சரியான பிறவிநேரத்தைச் சொல்லி குறியுரைக்கச் சொன்னேன். சுகுணர் அவன் யார் என்று சொன்னார்” என்றாள் குந்தி. “அவன் குலாந்தகன் என்றார் அவர். அவனுடைய இலக்கினங்கள் தெளிவாக அதைச் சொல்கின்றன. குருகுலத்தின் காலன் அவன். தன் கைகளால் அவன் தன்குலத்துச் சோதரர்களைக் கொல்வான்.” மாத்ரி அஞ்சி நின்றுவிட்டாள். “அவன் இருக்கும் வரை கௌரவர் தருமனை வென்று அரியணை அமரமுடியாது” என்று குந்தி சொல்லி மெல்ல புன்னகை செய்தாள்.