கண்ணீரும் குருதியும் சொற்களும்..
கிறித்தவர்கள் சூழ்ந்த கிராமத்தில் பிறந்து வளார்ந்தவன் நான். மிகச்சிறு வயதிலேயே கிறித்தவ தேவாலயங்களுக்குச் செல்லவும் கிறித்தவ பிரார்த்தனைகளில் ஈடுபடவும் ஆரம்பித்துவிட்டேன். என் வாழ்க்கையின் மிக ஆதாரமான பாதிப்புகளில் ஒன்று பைபிள். நான் வாசிக்க ஆரம்பித்த ஆரம்பகால நூல்களில் அது ஒன்று. எங்கள் வீட்டில் இருந்த கரிய தோலட்டை போட்ட , பக்கவாட்டுத்தாள் மட்கிச்சுருண்ட பைபிளை இப்போதும் நினைவுகூர்கிறேன். அதில் ஓடிய பூச்சித்துளைகள் பழுப்புநிறக் கறைகள் என் அம்மா அடிக்கோடிட்ட வரிகள்.
என் வாழ்க்கையின் துயரம் நிறைந்த நாட்களில் கிறிஸ்துவின் சொற்களை அந்தரங்கத்தில் உணர்ந்திருக்கிறேன். கருணையை மட்டுமே செய்தியாகக் கொண்ட மாபெரும் ஞானகுருவாகவே நான் கிறிஸ்துவைக் காண்கிறேன். இந்த உணர்ச்சி மதங்களைக் கடந்த ஒன்று. என்னுடைய கிறிஸ்து மதங்களால் எனக்கு அளிக்கப்பட்டவர் அல்ல. மனம் கருணையால் நிறைந்திருக்கும் மிக இளம் வயதில் நேரடியாக சொற்களில் இருந்து இறங்கி என்னருகே வந்தவர். நான் தொட்டு அறிந்தவர்.
சிலவருடங்களுக்கு முன்னர் ஒரு நண்பர் சொன்னார். ‘கிறிஸ்துவை விட்டாலொழிய இந்துவாக இருக்க இயலாது என்று சொல்லப்பட்டால் என்ன செய்வாய்?’ என. நான் தயங்காமல் சொன்னேன் ‘இந்துமதத்தை விட்டு விடுவேன்’ என. அவர் அதிர்ச்சி அடைந்தார். நான் நம்பும் இந்துமதம் உலகின் மெய்ஞானத்தை எல்லாம் தன்னுள்ளே வாங்கி நிறைத்துக்கொள்ளும் ஒரு கடல்போன்றது. கிறிஸ்துவை விலக்க ஆணையிடும் இந்துமதம் இந்துமதமாக இருக்காது.
இன்று நாம் அறியும் கிறிஸ்து ஒருவரல்ல. குறைந்தபட்சம் மூன்று கிறிஸ்துக்கள் உள்ளனர். வரலாற்றுக் கிறிஸ்து யூதர்களின் வரலாற்று நூல்களில் இருந்து நமக்குத்தெரியவருபவர். ஆன்மீகக்கிறிஸ்து கிறிஸ்துவின் சொற்கள் வழியாக கடந்த இருபது நூற்றாண்டுகளில் மாபெரும் மதங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் திரட்டிக்கொண்ட ஓர் ஆளுமை. மதக்கிறிஸ்து கிறித்தவ திருச்சபையாலும் மதவாதிகளாலும் முன்வைக்கப்படுபவர்.
இந்த மூன்று கிறிஸ்துக்களையும் பிரித்தறியும் ஒருவரே சமநிலை கொண்ட ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியும். கிறிஸ்துவை உணரவும் முடியும். நான் கண்டுவரும் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை ஓர் இறைவடிவமாக மட்டுமே பார்ப்பவர்கள். லௌகீகமான தேவைகளை கோரினால் அளிக்கக்கூடிய கண்ணுக்குத்தெரியாத ஓர் இருப்பு மட்டும்தான் கிறிஸ்து அவர்களுக்கு. பைபிளின் வாசகங்கள் எல்லாமே அவர்களுக்கு வழிபாட்டு மந்திரங்கள் மட்டுமே.
பல்லாயிரம் முறை நான் தேவாலய வாசல்களில் நின்று ஜெபங்களை கேட்டிருக்கிறேன். எப்போதுமே அன்றாடவாழ்க்கையின் எளிய லாபங்களுக்கான மன்றாட்டு மட்டுமே. எனக்கு வேலையைக்கொடும் ஆண்டவரே, நோயைக் குணப்படுத்தும் ஆண்டவரே, பதவி உயர்வு வேண்டும் ஏசுவே… ஒருநாள் கூட ஆன்மீகமான ஒரு பிரார்த்தனை என் காதில் விழுந்ததில்லை. அவர்கள் உணரும் ஏசுவுக்கும் நான் சொல்லிக்கொண்டிருக்கும் ஏசுவுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.
இந்த அமைப்பு மனிதர்கள் தங்களுக்கு தங்கள் அமைப்பு இடும் கட்டளையை ஏற்று இரவுபகலாக பிற மதங்கள் மீது தாக்குதல் தொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். உங்களைச் சந்தித்ததுமே உங்களை மதமாற்றம் செய்ய முயலாத தீவிரக் கிறிஸ்தவர்களை பார்ப்பது அரிது. ஒருபோதும் தன்னுடைய ஆன்மீகப்பயணம் குறித்து அவர் ஐயப்படுவதில்லை. அதில் அவர் செல்லவேண்டிய தூரம் ஏதுமில்லை. அவர் நம்பி விட்டார், இனி அந்நம்பிக்கையை பிறருக்கு கொடுப்பதே அவரது ஆன்மீகம்.
நான் நம்பும் கிறிஸ்து அவரல்ல என்றால் அவர்கள் என்னை கிறிஸ்துவை தூஷிப்பவன் என்றே பொருள்கொள்வார்கள். அப்படி என்னிடம் சொன்னவர்கள் பலநூறுபேர் உண்டு. நான் நம்பும் கிறிஸ்து ஒரு மாபெரும் ஆன்மீக ஞானி. மண்ணில் மனிதனுக்குச் சாத்தியமான முழுமையை அடைந்தவர். அதை தன் பெருங்கருணையால் மனுக்குலத்துக்குச் சொல்லிவிட்டுச் சென்றவர். அவரது சொற்களில் இருந்து உருவான சபைகளுக்கு அவர் பொறுப்பல்ல. அவரது சொற்கள் ஆன்மீகமான தேடல் கொண்டவர்களுக்கு அவர்களின் அகத்தில் ஒளிரும் விளக்குகளாக என்றும் துணைவரக்கூடியவை.
நான் அந்த கிறிஸ்துவை தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி வழியாகவே என் ஆத்மாவில் கண்டுகொண்டேன். பின்னர் நித்ய சைதன்ய யதி வழியாக மீண்டும் கண்டுகொண்டேன். பின்னர் காந்தி வழியாக கண்டு கொண்டேன். உலகமெங்கும் ஆதிக்கத்தின் அடையாளமாக சென்றடைந்த கிறிஸ்துவிலேயே அந்த மீட்பின் கிறிஸ்துவும் உள்ளடங்கியிருக்கிறார் என்று படுகிறது. மெய்மையை தேடும் ஒருவன் தன் ஆன்மாவின் இயல்பாலேயே அவரை தனித்து எடுத்துவிட முடியும்.
இந்தக் கட்டுரைகள் கிறிஸ்துவைப் பற்றியும் கிறிஸ்தவம் பற்றியும் வெவ்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகள் மற்றும் எதிர்வினைகளின் தொகுப்பு. இவை கிறிஸ்துவ மெய்யியலிலோ அல்லது வரலாற்றிலோ முறையான வாசிப்பு இல்லாத ஆனால் ஆர்வத்தால் எப்போதும் அறிந்துகொண்டிருக்கிற ஒரு வாசகனின் பதிவுகள் மட்டுமே
கேரளத்தில் கிறிஸ்துவின் ஆன்மீகத்தை மட்டுமே வாழ்நாள் முழுக்க முன்வைத்தவர் ·பாதர் ஜோச·ப் புலிக்குந்நேல். அவரது சொற்கள் எண்பதுகளில் எனக்கு கிறிஸ்துவை மீண்டும் மீண்டும் அடையாளம் காட்டியிருக்கின்றன. இந்நூல் அவருக்குச் சமர்ப்பணம்
உயிர்மை வெளியீடாக ஜெயமோகனின் 10 நூல்கள்