சைவசித்தாந்தம் ஒரு விவாதம்

[ நகைச்சுவை ]

காசிரங்கா காட்டில் நடந்த புகழ்பெற்ற இந்து தத்துவ மரபு – ஒரு விவாதம் அப்படி புகழ்பெறும் என்று எவரும் எண்ணியிருக்கவில்லை. எண்ணியிருந்தால் அதில் பங்குபெறும் தத்துவத் தரப்புகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகி அதன் மூலம் அரசு நிர்வாகமும், அவற்றின் பிரதிநிதிகள் தேர்வுக்கு நிகழும் உக்கிரமான போட்டிகளால் சட்டம் ஒழுங்கும் தேசிய அளவில் ஸ்தம்பித்திருக்கக் கூடும். எற்கனவே டெல்லியில் செம்மொழி கருத்தரங்கு ,சித்தமருத்துவர் சங்ககருத்தரங்கு இரண்டிலும் பங்கெடுத்து அந்த விலாசம் பல ஆவணப்பதிவுகலில் இருந்தமையால வசமாகச் சென்று மீண்ட தச்சநல்லூர் சங்கரநயினார் பிள்ளை அதில் பங்குபெற்றவர்களில் இருவரைத்தவிர பிறர் அனைவருமே சொல்லிக் கொண்டதுபோல தன் தரப்பு அனைத்து பிற தரப்புக¨ளையும் தோற்கடித்து வெற்றிகொண்டதாக அறிவித்துக் கொண்டார். சொல்லாதவர்களில் ஒருவர் மனநலமருத்துமவனையில் இருந்த சாங்கிய சிந்தனையாளரான பிரதீஷ் பட்டாச்சாரியா. வேதஞானி கஸ்யப கோத்திரம் ஹரிராம்ஜீ தீனதயாள்ஜீ மகாராஜை பொறுத்தவரை அதை உலகமே சொல்லியது. அவருக்கு சீடர்கள்தான் உலகம், உலகமே சீடர்கள்.

தச்சநல்லூர் சங்கரநயினார் பிள்ளைக்கே அதன் முக்கியத்துவம் தெரியவில்லையாதலால் அவர் திரும்பும் வழியில் சென்னையில் ஈஞ்சம்பாக்கத்தில் இருந்த தன் மகள் ஆவுடையம்மை வீட்டில் பத்துநாள் நின்று விருந்தாடி, ‘சிலந்தி’ ‘குருவி’ என இரு படங்களும் மார்த்துவிட்டு  மெதுவாகக் கிளம்பி நெல்லை எக்ஸ்பிரஸில் திருநெல்வேலிக்குச் சென்றார். அதற்கு அடுத்தவாரம் திருநெல்வேலி சுத்தசைவ ஆதிவெள்ளாளர் நலச்சங்கச் செயலாளர் காந்திமதிநாதன் சங்கத்தின் அடுத்த பெரும்போராட்டத்திற்கான துண்டுபிரசுரம் மற்றும் ரசீதுபுத்தகத்துடன் வீட்டுக்குவந்தார். மாங்காய் தொக்கு தொட்டுக்கொண்டு தேங்காய்தோசை தின்றபடி சங்கத்தின் இரட்டைக்கோரிக்கைகளை முன்வைத்தார். திராவிடசாதிகளில் மூத்ததும் முந்தியதுமான திருநெல்வேலி சைவப்பிள்ளைமாரை தமிழகத்தின் தலைச்சான்றோரக செம்மொழி உயராய்வு மையம் [இதை என்ன காரணத்தினாலோ செம்மொழி உராய்வு மையம் என்றே காந்திமதிநாதன் எண்ணிவிட்டிருந்தார்] அங்கீகரிக்க வேண்டும். அவர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

”இன்னுமொண்ணு திங்கியாடே காந்தி?”என்று கேட்ட கோமதிஆச்சி பேச்சுவாக்கில் ”அதுபின்ன அப்டித்தானே…என்ன சொல்லுதே? …இப்பம் இவிஹ அஸாமுல காட்டுக்குள்ள போயி சைவசித்தாந்தம் தான் ஒலகத்திலெயே ஒசத்தீண்ணு காட்டி அத அங்க உள்ள பிராமணனுஹகள்லாம் சம்மதிச்சு ஒரு நல்ல சமக்காளமும் குடுத்து அனுப்பியிருங்காஹ…இங்க ஆரு கேக்கா?” என்று சொன்னாள். உட்குறிப்பை புரிந்துகொண்ட காந்திமதிநாதன் விரல்களை ஒவ்வொன்றாக நக்கியபடி ”…கேள்விப்பட்டேன் ஆச்சி. நம்ம சூனாகானாவவுஹ சொல்லிட்டிருந்தாஹ….என்ன எடமாக்கும் அது?” ”எடமா? எடம்ணு கேட்டேண்ணா…இண்ணா இங்க நிக்குலே…வரமாட்டேங்குது…என்னமோ கால்செரங்குண்ணுல்லா சொன்னாஹ?” என்றாள்.

”சமுக்காளம் இல்லட்டி சவத்து மூதி…அது சால்வைல்லா? சவத்துக்கு சொல்லியும் மாளல்லியே”என்று பகக்த்து அறையில் சாய்வுநாற்காலியில் படுத்திருந்து கடுப்பான பிள்ளைவாள் ”அது ஒண்ணும் இல்லடே காந்தி , சுத்த சத்து சுயம்புவா இல்லியாண்ணு ஒரு கேள்விய எடுத்துப் போட்டேன்… கண்ணக் கண்ண முளிக்கானுஹ.. …செரிடேன்னு ஒரு அரமணிநேரம் மெய்கண்ட சாத்திரத்த தொட்டுக்கிட்டு எடுத்துச் சொன்னேன்…பயக்க ஒருமாதிரி ஆயிட்டானுஹ..அவனுக எங்க கண்டானுக, சுத்ததத்துவமும் அவன் அம்மைக்க தாலியும் ஹெஹெஹெ…” என்று சிரித்தார்.

”அதைச் சொல்லணுமா? அதுக்கு தாம்ரர்ணி தண்ணிகுடிக்கணும்ணு எளுதியிருக்கே…”என்று மையமாகச் சொல்லிக் கொண்டு கிளம்பிய காந்திமதிநாதன் அந்தமாத சங்கமலரிலேயே ஆவேசமான ஒரு நெடுங்கட்டுரையை தீட்டிவிட்டிருந்தார். அஸாமுக்குச் சென்று அங்கெ உலகத்தின் தலைசிறந்த தத்துவ அறிஞர்கள்நடுவே சைவசித்தாந்தமே உலகின் தலைமைக்கொள்கை என்பதை நிலைநாட்டி திரும்பிய தச்சநல்லூர் சங்கர நயினார் பிள்ளை சங்கத்தின் முன்னாள்செயற்குழு உறுப்பினர் என்பதையும் சுட்டிக் காட்டி சைவத்துக்கும் தமிழுக்கும் எதிரான சக்திகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு அடுத்தவாரம் ‘நெல்லை துணிக்கடல்’ உரிமையாளர் சுப்ரமணியபிள்ளை ஒரு செவ்வாய்கிழமை கடைவிடுமுறை நாள் கால பத்துமணி சுமாருக்கு தன் நண்பர்கள் ஏழுபேருடன் அம்பாசிடர் கார்களில் வந்திறங்கி பிள்ளைவாள் வீட்டு திண்ணையில் நின்றார். பிள்ளைவாள் பாய்ந்துவந்து சுப்ரமணியபிள்ளையைக் கண்டதும் மேல்துண்டை முந்தானையாகப் போட்டுக் கொண்டு ”வாங்கோ வாங்கோ”என்றார்.

சுப்ரமணியபிள்ளையும் தோழர்களும் நாற்காலிகளில் அமர்ந்து கொழுமையான காபி குடித்து முகமனும் பேசி முடித்ததும் ”அய்யாவவுஹ எந்திரிக்கணும்”என்று கேட்டுக் கொண்டு எழுந்திருந்த பிள்ளைவாளின் கைகளில் ஒரு பெரிய தாம்பாளத்தில் வெற்றிலைபாக்குபழங்களுடன் நூறுரூபாய் கட்டு ஒன்றும் வைத்து அப்படியே நீட்டினார். ”அய்யாவவுஹ செய்தது ரொம்ப பெரிய காரியம்… சேரன் செங்குட்டுவன் இமய மலையில போயி சிலலிங்கத்துக்கு கல்லு கொண்டாந்தது மாதிரி இப்ப சைவத்தோட புகழ அங்க போயி நெலைநாட்டிப்புட்டீஹ…எங்க மரியாதையா ஏதோ கொஞ்சம்…”என்று இழுத்தார் சுப்ரமணியபிள்ளை. உணர்ச்சிவசப்பட்ட பிள்ளைவாள் ”நமச்சிவாயம்! நமச்சிவாயம்!”என்று ஓலமிட கூடவந்திருந்தவர்களும் ஆறெழுத்தை ஏற்று முழங்கினர்.

சுப்ரமணியம்பிள்ளை அவரது சொந்தக் கல்யாணமண்டபத்தில் மாதத்தில் இரண்டாவது செவ்வாய்கிழமையன்று ‘தென்பொருநைத் தென்றல்’ என்ற பேரில்  ஒரு சைவசித்தாந்த ஆய்வு மன்றம் நடத்திவந்தார். அதில் பிள்ளைவாளை கூப்பிட்டு கௌரவிக்கவிருப்பதாக சொல்லி உத்தரவு வாங்கிச் சென்றார். போகும்போது ஒருவர் சுப்ரமணியபிள்ளையை பணிந்து வணங்கி ”…இல்ல மாமா… செங்குட்டுவன் கல்லு கொண்டாந்தது கண்ணகி செலைக்குல்லா?”என்றார். ”அப்பிடியா? சிலலிங்கத்துக்குண்ணுல்லா சொல்லிக் கேள்விப்பட்டேன்?” என்ற சுப்ரமணியபிள்ளை ”என்ன பெரியப்பா, நீங்க என்ன சொல்லுதீஹ?”என்றார். சுப்ரமணியபிள்ளையின் கணக்குப்பிள்ளையுமான ‘சைவநெறிக்காவலர்’ பிச்சையா பிள்ளை ”..சிவலிங்கத்துக்குத்தான் கொண்டாந்தான்…கண்ணகிக்குண்ணும் சிலர் சொல்லுகதுண்டு. மனுச நாக்குல்லா?” என்றார். 

விஷயம் உடனடியாகப் பற்றிக் கொண்டுவிட்டது. மறுநாளே பிள்ளைவாளை தேடி நூற்றாண்டு பழக்கமுள்ள அகத்தியர்கழகத்தின் செயலாளர் நாறும்பூநாதன் வந்து திண்னையில் அமர்ந்து  வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார் ”என்ன நெனச்சுட்டு வந்திருதேண்ணு சொன்னிஹ? ஒரு வார்த்தை எங்கிட்ட கேட்டிருக்கலாமுல்லா? அவன் யாரு? எண்ணைக்கு அவன் சைவப்பிள்ளையா ஆனான்? வே, அவன் பணகுடிப்பக்கம் துணிமூட்டை சொமந்து வித்தவன்லா? நாலு கோமணத்தை வித்து சில்லறையச் சேத்துப்புட்டாண்ணா கொலம் வந்திருமா? ஏ, அவன் அம்மைக்க மூத்தவள நாஞ்சிநாட்டு வெள்ளாளன்லா கெட்டியிருக்கான்? சாதிவெள்ளாளன் சைவசித்தாந்தம் பேசினா இவனும் பேசிருவானா? நாட்டில ஒரு மொறை கெடயாதா?இதுக்கு நீரும் எடம் கொடுக்கேரா?” என்றார்.

”நான் எங்க எடம் கொடுத்தேன் நாவன்னா? இவிகள்லா தாம்பாளத்த பாத்ததும் வேட்டிய காலில இடுக்கிட்டு ரெண்டு கையையும் நீட்டினாஹ?”என்றாள் ஆச்சி. ”வச்சு சாத்திப்போடுவேன்.. செறுக்கிவிள்ளா, நீயில்லாட்டி அவனுகளுக்கு வெள்ளிடம்ளரிலே காப்பிய கொண்டாந்து வச்சே?” ”அது நான் கண்டனா யாருக்கு என்ன வளிசுத்தம்ணுட்டு? காப்பி குடுத்தா நாங்க களுவி கமத்துதோம்..பெறவென்ன?” ”செரி செரி இதுக்காக நீங்க சண்டைபிடிக்க வேண்டாம்…நாங்க ஒரு நல்ல பாராட்டுகூட்டம் நடத்துதோம்…வந்திருங்க” என்றார் நாறும்பூ நாதன். ”பின்ன வராம? வே, நீரு நம்ம மாப்பிள்ளைல்லா…வந்திருதேன்”என்ற பிள்ளைவாள் அவர் போனபின் ”…சாதியும் வளிசுத்தமும் இவன் பேசுதான்..ஏட்டி உனக்கு தெரியாதா, இவனுக்க அக்காளையில்லா மதுரையில குடுத்திருக்கு…என்னமோ துளுவனோ என்னெளவோ சொன்னானுக?”என்றார் ”அது பின்ன இவன் லெச்சணம் தெரியாதா?”என்று ஆச்சி சொல்லிவிட்டாள்.

தொடர்ந்து மொத்தம் இருபத்தெட்டு அமைப்புகள் கிட்டத்தட்ட ஒரே நாளில் பிள்ளைவாளுக்கு பாராட்டுக்கூட்டம் நடத்த முன்வந்தன. தாமிரவருணிக்கரையில் அமையாத அமைப்புகள் உடனடியாக களையப்பட்ட பிறகும் ஒன்பது அமைப்புகள் எஞ்சின. திருவாவடுதுறை ஆதீன வித்வான் சண்முகம்பிள்ளை தலைமையில் சன்னிதி தெரு நூலகக் கட்டிடத்தில் கூடிய சமாதானக்குழு சைவத்தின் ஒற்றுமையைக் கருதி ஒன்பது அமைப்புகளும் ஒன்றாகச் சேர்ந்து பாராட்டுகூட்டத்தை நடத்துவதாக முடிவெடுத்தது. அதை ஒரு சைவ சித்தாந்த  கருத்தரங்காகவே நடத்திவிடலாமென்று ஏற்பாடு செய்யப்பட்டது.

செவ்வாய்கிழமை கடைவிடுமுறைநாளில் சுப்ரமணியபிள்ளையின் கல்யாண மண்டபத்தில் கருத்தரங்கு தொடங்கியது. வழக்கப்படி உள்ளூர் ஒதுவார் பிரமநாயகம்பிள்ளை தன் கட்டைக்குரலில் ஏராளமான கனைப்புகளுடன் நட்டபாடை என்ற தூய தமிழ்ப்பண்ணில்

”கட்டேலேநீ றேகனீ அப்பமோ டவல்பொரீ
கப்பிய கரிமுக நடிப்பே நீ…”

என்று கடவுள்வாழ்த்தைப் பாடி விழாவை தொடங்கிவைத்தார். சித்தாந்த சிரோமணி இலஞ்சி மாணிக்கவாசகம்பிள்ளை தலைமை வகித்து தச்சநல்லூர் சங்கர நயினார் பிள்ளைக்கு சால்வை மலர்மாலை அணிவித்து நான்கே சொற்களில் பாராட்டிவிட்டு தத்துவச்சிக்கல்களுக்கு சடுதியாய் வந்துசேர்ந்தார். மூன்று மையப்பெரும் வினாக்கள். அவற்றுக்குப் பதில் கிடைக்காமல் சைவம் தழைப்பது எளிதல்ல. ஆன்றோர் கூடிய இச்சபையில் உடனடியாக இதை விவாதித்து முழு உண்மை கண்டு மனம்தெளிந்தாகவேண்டியது இன்றைய அவசர, அவசிய,உடனடிக் கடமையாகும் என்று சொல்லி அமைந்தார். அவையாவன. வேதமா ஆகமமா எது முதன்மையானது ? சைவம் தமிழர்கொள்கையாகின் மூலந்நூல்கள் எங்ஙனம் வடமொழியிலமைந்தன? சித்தாந்தமா வேதாந்தமா எது மூத்தது?

அவையில் எழுந்தருளியிருந்த சைவக்குருமணி ஸ்ரீலஸ்ரீ காசிவாசி வடவை ஆதீனகர்த்தர் மீனாட்சிசுந்தர பண்டார மகாசன்னிதானம் அவர்கள் சற்றே ஏப்பம் விட்டு அருகே இருந்த ஸ்ரீவிசாலா செங்கல்சூளை உரிமையாளர் உமையொருபாகம்பிள்ளையிடம் ”நல்லா சொல்லிட்டான் மாணிக்கம்…இவன் அப்பன் கந்தையா நாப்பத்தியெட்டிலே இதே திண்ணவேலியிலே நடந்த முப்பத்தாறாம் சித்தாந்தமாநாட்டிலே இதே மூணு பிரச்சினையக் கெளப்பி அதகளம் பண்ணிப்பிட்டான்ல?”என்றபோது அவர் ”அது பின்னே இல்லியா? இந்த மூணும் நம்ம சைவசித்தாந்தத்துக்கு ஆதிநாள் முதல் பேசுததுக்குண்டான அடிபடைப்பிரச்சினைகள்லா?”என்றார். ” ஆம் ஐயா, சைவத்தோட சிறப்பே அலைகடலென ஓயாது அடிக்கும் இந்த ஐயங்கள் அல்லவா?”என்றார் இந்துக்கல்லூரி தமிழாசிரியர்  ‘தமிழேரி ‘ வள்ளிநாயகம் பிள்ளை- மாணாக்கர் நடுவே காட்டேரி.

முதல்வினாவுக்கு மேடைப்பேச்சாளர் அழ.குழ.கருப்பையா கலகலப்பாக பதில்சொல்ல அரங்கு களைகட்டியது. எது முதன்மை என்றுகேட்டால் ஐயமின்றி வேதமே முதன்மை என்போம். வீட்டில் ஐயாவே முதன்மை என்பதுபோல். ஊருலகமும் நூல்நெறியும் சொல்வது அவ்வாறுதானே?. ஆனால் ஆச்சியும் ஆகமமும்தான் அடிப்படைச்சக்திகள் என நாம் ஒவ்வொருவரும் அறியோமா என்ன?

‘கருப்பையா நீ செந்தமிழ்க் கருப்பையா?’ என்று சிலேடையில் சாத்தியபடி பேசத்தொடங்கிய ‘சைவமுரசு’ தணிகாசலம்பிள்ளை அடுத்த வினாவுக்கு பதில் சொன்னார். ‘சைவத்தைப் பற்றி சைவர் பேசினாரென்றால் அதற்கென்ன பொருள்? எதிரே சைவமறுப்பாளன் ஒருவன் வந்து நின்றிருக்கிறான் என்றுதானே? அவனது புன்மொழியின் பொருளறுத்து அவனைக் கழுவேற்றுவதற்கன்றி வெறெதன்பொருட்டாவது சைவர் சைவசித்தாந்தம் பற்றி பேசுவாரா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். கேட்பவனுக்குப் புரியாமல் எங்ஙனம் பேசலாகும்? ஆகவே தான் நம் சைவ முதனூல்கள் வடமொழியிலமைந்தன. நந்தமிழையும் நற்சைவத்தையும் இகழ்வோர் வடமொழியினரன்றி வேறெவர்?” பலத்த கைதட்டலுடன் சைவமுரசு ஓய்ந்தது.

சித்தாந்தமே வேதாந்ததுக்கு அன்னை என்று சொல்லவந்த கொக்கிரகுளம் சுப்பையாபிள்ளை குமரிக்கண்டதுக்குச் சென்று தமிழ்க்குரங்கு லெமூர் என்ற மிருகம் ஆகியவற்றைப்பற்றி விளக்கி பாவாணர் மரபை ஒட்டி சொற்பிளப்புக்குள் வழிதவறி வேதம் அவேதம் சுவேதம் என்ற சிக்கல்கலுக்குள் மாட்டி சித்தாந்தம் அசித்தாந்தம் என்ற இருமையை கண்டடைந்து மேலே செல்ல முடியாமல் திடீரென உடைந்த எட்டு கட்டையில்  ‘மனமெனும் தோணி பற்றி மதியெனும் கோலையூன்றி’ நொண்ட ஆரம்பித்தபோது வழக்கம்போல மைக் அணைக்கப்பட்டது.

பின்னர் பேசிய கருங்குளம் சிவகுருநாதன் சுருக்கமாக குமரிக்கண்டத்தில் மனிதன் பிறந்தான் என்ற பரிணாமக் கொள்கைக்கு திருநெல்வேலி சைவர்களே வாழும் ஆதாரம் என்றும் மதுரைப்பக்கத்து பிறமலைக் கள்ளர்களிடம் வெள்ளைக்காரன் குரோமொசோம் எடுத்து சோதனை செய்ததுபோல பிள்ளைமாரிடம் சோதனைசெய்தால் உண்மை வெளிவாகும் என்றும் அறைகூவினார். ”இங்கேகூடியிருக்கும் எண்ணில்லாத வேளாண் சமூகத்தினர் ஜீன் அளிக்க தயாராகவே உள்ளனர் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆருயிர் அண்னாச்சி சுப்ரமணிய பிள்ளை அளிக்கமாட்டரா?. விழாநாயகர்  தச்சநல்லூர் சங்கரநயினார் பிள்ளையண்ணன் அளிக்கமாட்டாரா?’சைவமுரசு’ தணிகாசலம்பிள்ளை அளிக்கமாட்டரா? ஏன், மூதறிஞர் கொக்கிரகுளம் சுப்பையா அவர்கள் அளிக்க மாட்டார்களா?” என்று பேச கூட்டம் சிரிக்க, கொக்கிரகுளத்தார் நாணி ”வே நம்மை விடும்வே…நமக்கு வயசாச்சுல்லா?”என்றார்.

பிறகு வழக்கம்போல பசுபதிபாசம். பதி என்றால் பதிவது என்ற புது விளக்கத்தை சைவப்பேழை பழனியப்பன் சொன்னதும் விவாதம் பற்றிக் கொண்டது. அடியார் நெஞ்சில் பதிவது எதுவோ அது பதி.  அவரது சம்பந்தி ‘சைவநிலா’ குமாரசாமி எழுந்து ”அப்படியானால் அடியவர்  வயலில் மேய்வதுதான் பசுவா?” என்று வினவ அவருடன் வந்த சொந்தக்காரர்கள் சிரிக்க ,’லே, நீ எண்ணைக்குலே மயிராண்டி சைவத்தைக் காண ஆரம்பிச்சே? ஏல, பாசம்ணா என்னாண்ணு கேட்டப்ப எம்ஜியார் நடிச்ச படம்னு சொன்னவந்தானலே நீ ?”என்று சைவப்பேழை கத்த ”எவம்ல அது எம்ஜியாரச் சொன்னவன்? அடிலே அவனை”என்று இவர்கள் எகிற சண்டை கொழுந்து விட்டது.

உடனே சைவக்குருமணி ஸ்ரீலஸ்ரீ காசிவாசி வடவை ஆதீனகர்த்தர் மீனாட்சிசுந்தர பண்டார மகாசன்னிதானம் அவர்கள் பலத்த ஏப்பம் விட்டு மணிக்குரலில் ”உலகெலாமுணர்ந் தோதற் கரியவன். நிலவு லாவிய நீர்ம்மலி வேணியன்!” என்று எடுக்க படிப்படியாக அமைதி உருவாகியது. பண்டார சன்னிதி ”பசு பாசத்தால் பதியைவிட்டு விலக்கப்பட்டிருக்கிறது. பாசமறுத்து பதியை அடைகையில் பரமானந்தமாகிய பால் சொரிகிறது. பசுவின் நான்கு காம்புகள் நான்கு பூதங்கள் என்றறிக. பசுவை பாசத்தாலாட்டி பின் தன் கழல் சேர்த்து உய்விப்பது அலகிலா ஆடலுள்ளான் அகம் நிறைக் கருணையே ஆமென்றறிக” என்று மூன்றரை மணிநேரம் விரிவாக உரையாற்றி முடித்தபின் அரங்கில் சண்டைக்கு குரலெழுக்கும் தெம்பு எவருக்குமிருக்கவில்லை.

”சன்னிதானம்ணாக்க சும்மாவா? ஆதீனத்த சோழராஜா நிறுவி இண்ணைக்கு ஆயிரம் வருசம் ஆகுதுல்லா? அண்ணைக்குமுதல் இண்ணைக்குவரை ஒரே அருளுரைதான். அம்மியிம்மி அங்கயிங்க மாறிப்போகணுமே? எங்க?” என்றார் ‘சைவமுரசு’ தணிகாசலம்பிள்ளை. ”சொல்லணுமா?நானும் அறுபது வருசமா கேட்டிட்டுல்லா இருக்கேன்? அது மாறணுமானா பொதிகைமலை வடக்க போகணும்” என்றார் கொக்கிரகுளம் சுப்பையா.

மேலே பேசவந்த ‘சிவப்பிழம்பு’ தென்காசி குத்தாலம்பிள்ளை விவாதத்தை தீவிரமாக திசைதிருப்பினார். பாசம் என்பது கயிறென பொருள்படும். பாசமோ மும்மலம். ஆகவே பாசத்தை மூன்று புரிகள் கொண்ட கயிறென உணர்ந்தனர் ஆன்றோர். அதுவே முப்புரி நூலாம். அதையணிந்தவர் ஆதிசைவர்களாகிய நாமே. சைவ கோயில்களைக் கைப்பற்றிய பார்ப்பனர் முப்புரி நூலையும் தங்களுடையதென கொண்டனர். இதுவே தென்பொதிகை அகத்தியர் வழிவந்த தொல்குடி தன் பெருமை கெட்டு வடநாட்டு லாலாக்களெல்லாம் தெருத்தெருவாய் கடைதிறந்து அல்வா கொடுக்கும் இழிநிலை அடையக் காரணமாகும்.

பின்னர் நடந்த உற்சாகமான விவாதம் மாலையாகியதும் ஒரு மையப்புள்ளியில் உச்சம் கொண்டது. ஒட்டுமொத்தப் பார்ப்பனர்களையும் கழுவேற்றுவதா இல்லை தூக்கிலிட்டாலே போதுமா? ”என்ன இருந்தாலும் கழு நமக்கு சாத்திர சம்மதம் உள்ளதாக்கும்” என்றார் பார்வையாளராக வந்திருந்த தென்தாமரைக்குளம் கோலப்ப பிள்ளை. ”சீ எவம்லே அவன்? சைவத்தப்பத்தி நாஞ்சிநாட்டான் வாயத்தெறக்கிறது? நாங்க குமரிக்கண்டத்திலேருந்து வாய வச்சிருக்கிறது பின்ன சும்மா புட்டமுது திங்கவாலே? வாய முடு”என்றார் கொக்கிரகுளம் சுப்பையாபிள்ளை. ”போறபோக்கப்பாத்தா துளுவனும் சோழியனும் தொண்டையனும் கொங்கனும் எல்லாம் வந்து சைவத்தப்பத்தி நம்மகிட்ட தர்க்கம்பண்ண ஆரம்பிச்சிருவான்போல இருக்கே?” என்று  ‘சைவமுரசு’ தணிகாசலம்பிள்ளை மனம் உடைந்து சொன்னார். ஆகவே தூக்கு போதும் என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. 

இதன் நடுவே பழனி சித்தவைத்தியர் சிவமுருகன் நைச்சியமாக மூதறிஞர் கொக்கிரகுளம் சுப்பையா அவர்களை நண்ணி ”வயசாச்சுண்ணு யாரு சொன்னாஹ? ஆச்சி சொன்னாஹண்ணாக்க லேஹியம் இருக்கு”என்றார். ‘வாழும்சைவம்’ இதழாசிரியார் வீரவாகுப்பிள்ளை பேசிக் கொண்டிருந்தபோது முன்னரே வீடு சென்று சிரமபரிஹாரம் செய்து வேறு உடை மாற்றிவந்த சுப்ரமணியபிள்ளை தன் கணக்குப்பிள்ளை ‘சைவநெறிக்காவலர்’ பிச்சையா பிள்ளையிடம் ”பசுபதீண்ணாக்க, இந்த வெயில் படத்தில நடிச்சானே அந்தப் பய தானே?” என்று விசாரித்தறிந்துகொண்டார்.

விழாவில் பேசியே ஆகவேண்டும் என்று எழுத்தாளர் பண்முதல்வனை பத்துபேர் சூழ்ந்து வற்புறுத்தவே அவர் வெட்கி மறுத்தபடியே எழுந்து மேடையேறி ”நான் இங்கே பேசவரவில்லை. பெரியவர்களை பார்க்கத்தான் வந்தேன்… தச்சநல்லூர்மாமா,ஆழ்வார்க்குறிச்சி ஆயான் எல்லாம் என் மனதுக்கு எவ்வளவு இனியவர்கள். வேப்பம்பூ உதிர்ந்து கிடக்கும் முற்றங்களில் அவர்களுடன் அமர்ந்து எறும்புகள் ஊர்வதைப் பார்த்த நாட்களை மறக்க முடியுமா? உள்ளங்கைக்குள் பொத்தி வைத்த மகிழம்பூவின் மணம் சாயங்காலம் டிபனுக்கு தொட்டுக்கொள்ளும் புதினாச்சட்டினியுடன் கலப்பதை எப்படி நினைக்காமலிருக்க முடியும்?”என்று பேசி விட்டு அமர்ந்தார்.

மூத்த விமரிசகர் அ.க.அருணந்தி அவர்களை விழா ஆரம்பம் முதலே பலர் பலவகையிலும் தடுத்து நிறுத்தியிருந்தாரக்ள். அவர்கள் அசந்திருந்த தருணத்தில் அவர் பாய்ந்து மேடையேறி உடனடியாக இந்த அவையில் சைவத்துக்கான ஆறு கோட்பாடுகளை வகுத்தாக வேண்டும் என்று சொல்லி எழுதிக் கொண்டுவந்திருந்த உரையை படிக்க ஆரம்பித்தார். அந்த நெடிய உரையின் சுருக்கம், சைவம், மார்க்ஸியம்,தலித்தியம், தமிழியம், பெண்ணியம்,பெரியாரியம்,அண்ணாயியம்,ஸ்டாலினியம் ஆகியவற்றை மிதமான வெப்பத்தில் கலக்கினால் ஒன்றாக ஆக்க முடியும் என்பதும், அது மிக உறுதியானது என்பதுமாகும்.

”வயசானாலும் விடமாட்டாருபோல”என்று இளம்கவிஞர் அண்டசித்தன் அருகே இருந்த முற்போக்கு விமரிசகர் செந்தழலோனிடம் சொல்ல அவர் ”அதுபின்ன ஆளு எம்வியில்லா?அவனுக அசந்தா ஆனைமுதுகுக்கே பட்டா வாங்கிப்போடுவானுக” என்றார்.”எம்விண்ணாக்க?” என்று அண்டசித்தன் கேட்டகேள்வியிருந்தே அவர் ஆள் வேறு என்று புரிந்துகொண்ட செந்தழலோன் மையமாகச் சிரித்து பாசம் எப்படி மாயையில் இருந்து பிறக்கிறது என்பதை ஒரு பேராசிரியர் வரைபடத்துடன் விளக்கியதை கவனிக்க ஆரம்பித்தபிறகுதான் மோட்டார்வெயிட்டிங் என்ற விரிவாக்கம் அண்டசித்தன் அகத்தெ உதித்தது.

உள்ளூர் பிள்ளைவாள்கள் அனைவரும் பேசி முடித்து ஒருவழியாக இரவு ஒன்பதுமணி வாக்கில் கருத்தரங்கு நிறைவுக்கு வந்தது.சித்தாந்த சிரோமணி இலஞ்சி மாணிக்கவாசகம்பிள்ளை தன் தலைமைநிறைவுரையில் மும்மலங்களை விரிவாக எடுத்துரைத்தார். அவை ஆணவம் கன்மம் மாயை. நானே சைவ சித்தாந்தி என்றும் நானே சைவத்தின் புகழை பரப்பினேன் என்றும் என்ணிக் கொள்வதே ஆணவமலம் என்க. கன்ம மலம் என்பது பிரார்த்தம் சஞ்சிதம் ஆகாமியம் என்று மூவகை. முன்வினை நிகழ்வினை வருவினை என தமிழ். முன்னர் கற்ற பிழைகள். இப்போது சொல்லும் பிழைகள், பித்தம் தலைக்கேறி இனி சொல்லப்போகும் பிழைகள் என நாம் அன்றாடம் இழைக்கும் பிழைகளும் மூவகை.அவையே கன்மமலம் என்க என்று சொல்லி அவர் விழாநாயகனை நோக்கி புன்முறுவல் பூத்தபோது அவையும் மென்சிரிப்பால் ரீங்காரம் இட்டது

மாயையைப்பற்றி சொல்லவே வேண்டாம் என சித்தாந்த சிரோமணி இலஞ்சி மாணிக்கவாசகம்பிள்ளை மீண்டும் விளக்கினார். கேட்பதையெல்லாம் நம்புவதும் நம்புவதையெல்லாம் சொல்வதுமாக நாம் வாழும் இந்த உலகமே ஒரு மாயை அல்லவா? அந்த மாயையை நாம் அனுதினமும் கண்டு கொண்டிருக்கிறொம்.ஏன் இந்தமேடையே ஒரு மாபெரும் மாயை அல்லவா? நாடகீயமாக நிறுத்தி அவையை சிம்ம பார்வை பார்த்தபின் சித்தாந்த சிரோமணி இலஞ்சி மாணிக்கவாசகம்பிள்ளை அவர்கள் தச்சநல்லூர் சங்கர நயினார் பிள்ளை அவர்கள் மேன்மேலும் புகழ்பெற்று உலகெலாம் உணர்ந்தோதர்கரியவன் புகழை உலகெங்கும் பரப்ப அவனே அருள்புரியட்டும் என்று சொல்லி முடித்தார்.

அதன்பின் முதலில் சைவக்குருமணி ஸ்ரீலஸ்ரீ காசிவாசி வடவை ஆதீனகர்த்தர் மீனாட்சிசுந்தர பண்டார மகாசன்னிதானம் அவர்கள் காலில் விழுந்தவர்களுக்கெல்லாம் விபூதிவழங்கி விடைகொண்டனர். விபூதி தீர்ந்த பின் அவர் விபூதி படிந்த வெறும் கையை வழங்கியது விட்டும் விடாத மாயையின் வன்மையைக் காட்டுவதாக இருந்தது என்று இலஞ்சி மாணிக்கவாசகம்பிள்ளை சொன்னார்.அதன்பின் ஒவ்வொருவராக தச்சநல்லூர் சங்கர நயினார் பிள்ளை அவர்களிடம் சொல்லிக்கொள்கையில் அவரது கூப்பிய கரங்களுக்குள் பத்து இருபது ரூபாய் தாள்களை செருகி அவரை ”என்ன இது? ஹெஹெஹெ”என்று சிரிக்க வைத்து ”இருக்கட்டும் மாமா ஹெஹெஹெ” என்று தானும் சிரித்து கிளம்பினர். ஆச்சி உடனே அவற்றை மஞ்சள்பைக்குள் வாங்கிவைத்துக் கொண்டாள். 

நாறும்பூநாதன், காந்திமதிநாதன் இருவரிடமும் நன்றி சொல்லிவிட்டு மலர்மாலை மற்றும் சால்வைகளுடன் ஆட்டோவில் ஏறும்போது தெரு இருட்டில் யாரோ ”தச்சநல்லூரான் இண்ணைக்கு நல்லா அறுவடை செஞ்சுட்டான் வே…..நாலாயிரம் தேறும்ணு கேள்வி…” என்று சொல்வது பிள்ளைவாள் காதில் விழுந்தது. ”கட்டேல போக” என்றாள் ஆச்சி.

இந்திய இலக்கியம் ஒரு விவாதம்

இந்து தத்துவ மரபு – ஒரு விவாதம்

மேலைத்தத்துவம் ஓரு விவாதம்

முந்தைய கட்டுரைபருவமழை:ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைவிளிம்புக்கும் கீழே சில குரல்கள்