மாட்டிறைச்சியும் மதமும்

வணக்கம் ஜெயமோகன்

நான் தங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். ஏற்கனவே ஒரு சிலமுறை கேள்வி கேட்டுள்ளேன். இந்து மதம்தொடர்பாக நீங்கள் விரிவாக எழுதியுள்ளதால் இதை இதை உங்களிடம் கேட்கிறேன்.ஏன் இந்து மதத்தில் பசுவுக்கு மட்டும் இவ்வளவு முக்கியதுவம்தரப்படுகிறது. என்னை பொருத்த வரை புழால் மறுத்தல் தன் அனுபவத்தின் மூலம்வரும் என்றால் மதிக்கதக்கதுதான். ஆடு மாடு போல தானே பசுவும். அதுவும்இவைகள் மாதிரி ஒரு உயிர் தானே.

ஆனால் மற்ற உயிர்களை விட நமது முன்னோர்கள்பசுவுக்கு மட்டும் இவ்வளவு முக்கியதுவம் கொடுப்பது ஏன்? அதுவம்மாட்டுக்கறி சாப்பிடுவோரை பெரிய பாவிகள் மாதிரி மற்றவர்கள் பார்ப்பதுமனசை உறுத்துகிறது. என்னமோ நம்ம எல்லாம் பெரிய புத்தர் மாதிரி. இதற்குபதிலை இணையத்தில் தேடினேன். ஒரு பக்கம் மாட்டு சாணம், மூத்திரத்திற்குகூட விஞ்ஞான விளக்கம் கொடுத்து அதை புனிதப்படுத்தும்ஆர்.எஸ்.எஸ்காரர்கள். இதே விளக்கத்தை மனிசனோட மூத்திரத்திற்கு கூடகொடுத்து விடலாம். இதற்கு உதவிக்கு மொராஜி தேசாய் அவர்களை அழைத்துக்கொள்ளலாம். மற்றொரு பக்கம் மாட்டுக்கறியின் மகிமையை விளக்கும்பெரியாரிஸ்டுகள் மற்றும் இஸ்‌லாமிய மதவெறியர்கள். என்னமோ மாட்டுக்கறிசாப்பிட்டால் நோய் நொ‌டியில்லாம் 100 வருடம் வாழலாம் என்பது போல. சகிக்கமுடியல.

நான் புரிந்து கொண்டது என்னவன்றால் ”ஒரு காலத்தில் யாகம் என்ற பெயரில்ஆயிரக்கணக்கான பசுக்களை பிராமணர்களே கொன்றிருக்கிறார்கள். அவர்கள்மாட்டுக்கறி சாப்பிட்ட குறிப்புகள் வேதங்களில் இருப்பதாகவும் திராவிடஇயக்க பதிப்புகளில் படித்த நியாபகம். (இது உண்மையா? எங்கோ படித்தது).அந்த சமயத்தில் தான் புத்தர் வந்தார் அவர் கொல்லாமையைவலியுருத்தினார்(எல்லா உயிர்களையும் தான்) அவர் காலத்தில் எந்த நியாயமானகாரணமும் இன்றி யாகம் என்ற பெயரில் மூட நம்பிகைகளால் கொல்லப்படும்பசுக்களுக்காக மட்டும் சிறிது கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து பேசினார்.புத்தர் மறைந்த பின் நாளடைவில் பௌத்தம் பலமைந்த போது பசுக்களின் மீதுபுனித பிம்பம் உண்டானது. அப்படியே கொஞ்ச கொஞ்சமாக வைதீக மதம் அதைஉள்வாங்கிக் கொண்டது. பௌத்தம் வீழ்ச்சிக்கு பின்னும் இது தொடர்கிறது.”

என்று நினைக்கிறேன். இது சரியா? வேறு ஏதாவது வரலாற்று ரீதியிலான காரணங்கள் அல்லது ஆன்மீக ரீதிலான காரணங்கள் இருக்கிறதா?

கடைசியாக மற்றொரு சந்தேகம் நம் நாட்டில் தலித்துகள் எல்லாம் முன்னால் பவுத்தர்கள் என்று நீங்கள் என்று நீங்கள்எழுதியதாக நினைவு. அயோத்தி தாசர் கூட இதை உறுதிபடுத்துறார்னுநினைக்கிறேன். ஆனால் தார்த்தத்தில் தலித்துகள் மாட்டுக்கறிசாப்பிவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். இது முரண்பாடாக தெரிகிறதே?இந்த பழக்கம் எப்படி வந்தது என்று கொஞ்சம் விளக்க முடியுமா?

நன்றி

அன்புடன்

கார்த்திகேயன் J

அன்புள்ள கார்த்திகேயன்,

இத்தகைய விஷயங்களைப் பற்றி நம் கருத்துக்களை உருவாக்குவதற்கு முன்பு முதலில் இவற்றை விரிவான வரலாற்றுப்பார்வையில் சரியான தரவுகளுடன் முன்வைக்கும் நூல்கள், ஆய்வுகள் உண்டா என்று பார்க்கவேண்டும். தமிழில் அதிகமும் சில்லறை அரசியல்சார்ந்த எளிய கருத்துக்கள்தான் எழுதப்பட்டுள்ளன. ஆனால் ஆங்கிலத்தில் வாசிக்கும் ஒருவர் மிகச்சிறந்த ஒரு வரலாற்றுச்சித்திரத்தை உருவாக்கிக்கொள்ளமுடியும்.

1. பண்டைக்காலத்தில் மக்கள்தொகை குறைவு. நிலம் அளவிறந்தது. நிலம் நிறைய இருக்குமென்றால் குறைவான மனித உழைப்பில் அதிகமான லாபம் சம்பாதிக்கும் தொழில் மேய்ச்சல். ஆஸ்திரேலியா போன்றநாடுகளில் இப்போதும் அப்படித்தான் உள்ளது.

ஆகவேதான் இந்தியா முழுக்க யாதவர்கள் அல்லது ஆயர்கள் முக்கியமான சாதியினராக உருவாகி வந்தனர். பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் பசு மந்தைகள் வளர்க்கப்பட்டன. ஆயிரம் மாட்டுக்கு ஒரு இடையனே போதும்.

பாலை பேணுவதற்குரிய தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் பசுவிலிருந்து கிடைக்கும் நெய், இறைச்சி, தோல் ஆகியவையே முக்கியமான வருமானங்களாக இருந்திருக்கும்.

ஆகவே பசு இறைச்சி அதிகமாக உண்ணபட்ட காலம் இது. யாக்ஞவல்கியர் போன்ற பிராமண ரிஷியே பசு இறைச்சியை புகழ்ந்து எழுதியிருக்கிறார். மாட்டின் தோல் பதனிடும் பகுதிகள் ஏராளமாக இருந்தன.சர்மாவதி என்னும் ஆற்றங்கரை தோல்பதனிடும் இடம் என மகாபாரதம் சொல்கிறது- இன்றைய சம்பல் ஆறு. மதுரா நகரம் நெய் வணிகத்தின் மையமாக விளங்கியது.

வேதகாலத்தில் எதை உண்டனரோ அதுவே அவிஸாக்கப்பட்டது. பல்லாயிரம் பசுக்கள் பலியிடப்பட்டது பெரு விருந்தும்கூடத்தான்.

மெர்வின் ஹாரீஸ்

2. காலப்போக்கில் மக்கள்தொகை பெருகி வளமான நிலங்கள் வேளாண்மைக்குள் வந்தபோது மேய்ப்பர்களின் ஆதிக்கம் குறைந்தது. ஆனாலும் அவர்கள் கங்கைகரையில் இருந்து சற்று வரண்ட நிலங்களுக்கு இடம்பெயர்ந்தனர்

விவசாயிகளைப் பொறுத்தவரை மாடு என்பது விவசாயத்தின் தோழன். ஆகவே உணர்வுரீதியாக அதனுடன் உறவுள்ளது. அத்துடன் இந்தியா என்பது அடிக்கடி பருவமழை பொய்க்கும் தன்மை கொண்டது. மாட்டை உண்ணும் வழக்கம் இருந்தால் கண்டிப்பாக அதைத்தான் பஞ்ச காலத்தில் முதலில் உண்பார்கள். மழைபெய்யும்போது மீண்டும் மாடுகள் தேவைப்படுகையில் மாடுகள் எஞ்சியிருக்காது.

ஆகவே எக்காரணம்கொண்டும் மாட்டை உண்ணக்கூடாது என்ற விதி விவசாயிகளிடம் உருவாகி வந்தது. மெல்ல அது எல்லா சமூகத்துக்கும் பரவியது.வரண்டநிலத்தில் மேய்த்த ஆயர்களும் அதை ஏற்றுக்கொண்டு விதியாக ஆக்கிக்கொண்டனர்

ஆனால் இறந்த மாடுகள் உண்ணப்பட்டன. தோல்தொழில் செய்தவர்கள் அதை உண்டனர். சமூகம் முழுக்க இருந்த தடை காரணமாக அவர்கள் இழிந்தவர்கள் என எண்ணப்பட்டனர்.

3 சமூகத்தடைகள் எவையும் மூடநம்பிக்கைகளாக உருவானவை அல்ல. அவற்றுக்கு தெளிவான பொருளியல் -சமூகவியல் நோக்கங்கள் இருக்கும். இல்லையேல் அவை நீடிக்காது. அந்நோக்கங்கள் முடிந்தபின்னரும் வெறும் நம்பிக்கையாக அவை நீடிக்கையிலேயே நாம் அவற்றை மூடநம்பிக்கைகள் என்கிறோம்

பாலைவனநாடுகளில், இஸ்லாம் மதத்தில் இதேபோல பன்றிகளை உண்பதற்கும் நாய்களை வளார்ப்பதற்கும் தடை உள்ளது. மதத்தின் தடை. காரணம் அவை மனிதன் உண்ணச்சாத்தியமான உணவை உண்பவை என்பதுதான். அவற்றை வளர்க்க அனுமதித்தால் எங்கோ எவரோ உண்ணவேண்டிய உணவை அவற்றுக்குக் கொடுப்பதாகவே ஆகும்

இவற்றை விரிவாக மெர்வின் ஹாரீஸ் என்னும் ஆய்வாளர் எழுதியிருக்கிறார். அது ‘பசுக்கள் பன்றிகள் போர்கள்’ என்ற பேரில் துகாராம் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. வாசியுங்கள்

4. இன்றும் புலால் உணவுக்கு எதிராக, குறிப்பாக மாட்டிறைச்சிக்கும் பன்றியிறைச்சிக்கும் எதிராக, சூழியல் சார்ந்த இதே போன்ற எதிர்ப்பு உருவாகி வந்துள்ளது . ஒரு பசுவின் இறைச்சியை அந்தப்பசு அது அந்நாள் வரை தின்ற புல்லை உருவாக்கத் தேவையான நிலம் மற்றும் நீரின் அடிப்படையில் நோக்கினால் பிரம்மாண்டமான இயற்கைவளம் செலவிடப்பட்டிருப்பதைக் காணலாம் என வாதிடுகிறார்கள். அதாவது ஒரு கிலோ இறைச்சி அதைவிட பலநூறு மடங்கு தானியத்தை உருவாக்கத் தேவையான நிலத்தையும் நீரையும் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. ஐரோப்பா உண்ணும் பன்றியும் பசுவும்தான் உலகில் உணவுப்பஞ்சம் நிலவ ஒரு காரணம் என்கிறார்கள்

5 சமீபகால ஆய்வுகள் பன்றியிறைச்சி மானுட உணவே அல்ல என்று கூறும் எல்லைவரை சென்றுள்ளன. பன்றியின் உடலில் உள்ள சில நுண்ணுயிரிகள் எந்த வெப்பத்திலும் அழிவதில்லை. அவை மனித உடலில் தங்கி வாழவும் மூளையை பாதிக்கவும் கூடியவை. பன்றியிறைச்சியை தவிர்க்கவேண்டுமென்ற கோரிக்கை ஐரோப்பிய நாடுகளில் உள்ளது.

6. சைவ உணவு சிறந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால் கடந்தகாலத்தில் பூமத்தியரேகை நாடுகள் தவிர வேறெங்கும் தரமான புரோட்டீனை தாவரங்களில் இருந்து உருவாக்கக்கூடிய நிலை இருக்கவில்லை. ஆகவே ஊனுணவு தவிர்க்கமுடியாததாக இருந்தது. ஊனுணவு மறுப்பை மாறாநெறியாக வைத்த சமணம் இந்தியாவுக்கு அப்பால் செல்லமுடியவில்லை. அதை கைவிட்ட பௌத்தம் பரவியது.

7 வரும்காலத்தில் மிகச்சிறந்த புரோட்டின் உணவுகள் செயற்கையாக உருவாக்கப்படும்போது கொஞ்சம்கொஞ்சமாக ஊனுணவு இல்லாமலாகும் என்று நினைக்கிறேன்

8. எந்தச்சமூகத்திலும் நிலமிழந்தும் அதிகாரமிழந்தும் ஒதுக்கப்படுபவர்கள் மற்றும் அச்சமூகத்திற்கு அகதிகளாகவோ அடிமைகளாகவோ வந்துசேர்பவர்கள் அச்சமூகம் இழிவென நினைக்கும் தொழிலையே செய்யும்படி ஆவார்கள். இழிந்த வாழ்க்கையை நோக்கி தள்ளவும்படுவார்கள். இந்திய சமூக்கம் துப்புரவு, தோல் தொழில் இரண்டையும் இழிவென எண்ணியது.

8. இந்த நம்பிக்கைகள் சென்றகாலத்தின் எச்சங்கள். இன்று அவை வெறும் மூடநம்பிக்கைகள் அவ்வளவுதான்

ஜெ

மெர்வின் ஹரிஸின் முன்னுரை

சுவர்களில்லா உலகம்

பண்பாட்டுமானுடவியல்

முந்தைய கட்டுரைபண்பாட்டு மானுடவியலும் தமிழகமும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 84