‘பண்படுதல்’ பண்பாட்டு விவாதங்கள்

பண்படும் தருணங்கள்…

கல்ச்சர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பண்பாடு என்ற சொல்லை உருவாக்கியவர் எவரெனத்தெரியவில்லை. ரசிகமணி டி.கெ.சிதம்பரநாத முதலியார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நவீன அர்த்தத்தில் அது பொருந்தாத ஒன்று. ஆகவேதான் ஆயுதப்பண்பாடு வன்முறைப்பண்பாடு என்றெல்லாம் பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. ஆனால் என் நோக்கில் அச்சொல்லாட்சியில் உள்ள நுட்பமான நம்பிக்கைநோக்கு மிகமிக உவப்பானதாக உள்ளது. மானுட இனம் மேலும் மேலும் பண்பட்டபடித்தான் வருகிறது என நான் நம்புகிறேன்.

கடந்த நூறாண்டுகளில் மனிதகுலத்தில் உருவாகிவந்த கருத்துக்களை வைத்தே இந்த நம்பிக்கையை நான் உருவாக்கிக் கொள்கிறேன். மானுடர் அனைவரும் சமம் என்றும் அனைவருக்கும் வாழ்க்கையை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கான உரிமை உண்டு என்றும் இன்றைய உலகம் ஒத்துக்கொண்டிருக்கிறது. அது சாத்தியமாகியிருக்கிறதா என்பது வேறு கேள்வி. ஆனால் அது ஒரு இயல்பான கருத்தாக ஆவதற்கே மானுடம் பலநூறாண்டுகள் போராடவேண்டியிருந்தது . ஒரு கருத்து ஒத்துக்கொள்ளப்பட்டதென்றால் அதைநோக்கித்தான் மானுடவரலாறு செல்லும். அதை எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாது.
தனிமனிதன் தன் ஆன்மீக விடுதலை நோக்கி தன் அத்தரங்கத்தை ஆதாரமாக்கி முன்செல்வதும் ஒவ்வொரு மனிதனும் நன் நுகர்வை தானே கட்டுப்படுத்திக் கொள்வதும் இன்று மிகையான  இலட்சியங்களாக தெரியலாம். ஆனால் அவை நோக்கியே இன்றைய உலகளாவிய கருத்தியல் விவாதங்கள் சென்றுகொண்டிருக்கின்றன என்று நினைக்கிறேன்.

எந்த எழுத்தாளனும் ஒரு பண்பாட்டு விவாதத்தையே நடத்திக்கொண்டிருக்கிறான். புனைகதைகள் வழியாக அவன் செய்வதை சில சமயம் நேரடியாகச் செய்ய நேர்கிறது. இந்த கட்டுரைகளில் பெரும்பாலானவை விவாதங்களாக முன்வைக்கப்பட்டவை. விரிவான அளவில் எதிர்வினைகளை பெற்றவை. நாம் வாழும் பண்பாட்டுச் சூழலின் பல தளங்களைப்பற்றியவை இவை.

இவற்றுக்கு நீங்கள் என்ன விளக்கம் வைத்திருக்கிறீர்கள் , இவற்றை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள் என்பதே இந்த கட்டுரைகள் எழுப்பும் வினாவாகும். அதைச்சார்ந்தே இந்நூலுக்குள் நீங்கள் மேலும் செல்ல முடியும். ஏனென்றால் பண்பாடு என்பது எந்நிலையிலும் ஒரு விவாதமாகவே உள்ளது. ஒருபோதும் உறுதிப்பட்டுவிட்ட அமைப்பாக அது இருப்பதில்லை. முரண்பட்டு விவாதிக்கப்படும் தரப்புகளின் முரணியக்கம் மூலம் எப்போதும் வளர்ந்து உருமாறிக்கொண்டிருப்பது அது. ஒரு காடு போல…

இந்நூலை மறைந்த மலையாள இலக்கியவாதியும் பண்பாட்டு ஆய்வாளரும் என் ஆசிரியருமான பி.கெ.பாலகிருஷ்ணன் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்

உயிர்மை வெளியீடாக ஜெயமோகனின் 10 நூல்கள்

முந்தைய கட்டுரைதிருச்சி சிறை
அடுத்த கட்டுரைசு.வேணுகோபால், கடிதங்கள்