கவிமொழி

அன்புள்ள ஜெ,

பல கடிதங்கள் உங்களுக்கு எழுத வேண்டும் என்று நினனத்து எப்படியோ அதை செய்ய முடியாமல் போய்விட்டது. ஆனால் இந்த முறை எப்படியும் உங்களுக்கு இந்த கடிதத்தை அனுப்பி விடுவது என்றே எழுதுகிறேன். உங்கள் தளத்தில் கவிதையைப் பற்றி நிறையவே எழுதி இருக்கிறீர்கள, அதில் பலவற்றை நான் படித்திருக்கிறேன். அண்மையில் ‘எரிமருள் வேங்கை‘ படித்துவிட்டே இதை எழுதுகிறேன்.

கவிதை வாசிப்புக்காக தொடர்ந்து சிறிதளவேனும் முயற்சி எடுத்துக்கொண்டே வருகிறேன், இன்னும் ஒரு கவிதையைக் கூட முழுமையாக அடைந்துவிட்டதாக தெரியவில்லை. முன்பு கவிதையை வைத்துக் கொண்டு விடுகதைக்கு விடை தேடுவதை போல முயன்று கொண்டிருப்பேன். இப்போது அப்படி அல்லாமல் அந்த கவிதை தோற்றுவிக்கும் காட்சியை அப்படியே எடுத்து கொண்டு சிந்திக்க முயல்கிறேன், ஆனாலும் இதுவரை எந்த ஒரு குறிப்பிடத்தக்க அனுபவத்தையோ, உணர்வயோ அடைந்துவிடவில்லை. இசையை கேட்கும் போது ஒரு உன்னத அனுபவம் உண்டாகிறது. ஒரு புது, தனி உலகத்திற்கு சென்றுவிட்டது போல். சில நேரங்களில் நண்பர்களிடம் சொல்லி இருக்கிறேன், ‘பாட்டு கேட்டா சில நேரம் போதை வந்த மாதிரி இருக்கும்’ என்று. அப்படி ஒரு அனுபவத்தை ஏன் இசை உண்டாக்குகிறது என்று யோசித்தால் காரணம் தெரியாது. ஆனால் இசையை எப்படியோ ரசிக்க முடிகிறது. அந்த அளவிற்கு கவிதையும் நமக்கு ஒரு அனுபவத்தை கொடுக்குமா? தேவதேவனின் ஒரு கவிதை உங்கள் உடலை உலுக்கும் அளவிற்கு உணர்வை தந்தது என்றீர்கள், பிரமிளின் ஒரு கவிதையை பித்து பிடித்தது போல் சொல்லி கொண்டிருந்தேன் என்றீர்கள். அப்படி ஒரு அனுபவத்தை சிறிதளவேனும் அடைந்து விடவே முயற்சி செய்கிறேன்.

கவிதையை பேசும் போது நீங்கள் இரு முக்கியமான விஷயத்தை சொல்லுகிறீர்கள். 1.படிமம் 2. தனிமொழி. தனிமொழி, மீமொழி, Meta language எல்லாம் ஒன்று என்றே புரிந்து வைத்திருக்கிறேன். இந்த தனிமொழி நமக்கு ஒரு படிமத்தை உருவாக்கி தருவதற்காக மட்டும் தானா? அதாவது, தனிமொழி படிமத்தை அளிக்கிறது, அந்த படிமம் மூலம் வாசகனின் அகத்தில் கவிதை மேலும் விரிவடைகிறது. சரிதானே? கவிதையை புரிந்து கொள்ள அந்த தனிமொழி தெரிந்திருக்க வேண்டும் என்கிறீர்கள். அந்த தனிமொழி அந்த கவிதையின் அளவில் அந்த தருணத்தில் அதன் அர்த்ததை கொடுப்பது தானே? அது நிலையானது இல்லையல்லவா? தனிமொழி தெரிந்திருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லும் போது ஒவ்வோரு கவிதைக்கு ஏற்ப அதன் தனிமொழியை அர்த்தம் கொள்ளுதல், dynamic interpretation தானே? இல்லை அது நிலையானது என்றால் அதற்கு அகராதி போட்டு விடலாமல்லவா?

அடுத்து படிமம், கவிதையின் படிமத்தை அடையாளம் காண்பது ஓரளவுக்கு முடிகிறது. ஆனால் அந்த படிமத்தை வைத்து கொண்டு என்ன செயவது என்று குழப்ப நிலையிலேயே இருக்கிறேன். அந்த படிமத்தை வைத்து கேள்விகள் நமக்குள்ளேயே கேட்டு புரிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஒப்பிட்டு பார்த்து அர்த்தம் கொள்ள வேண்டுமா? இல்லை அந்த படிமத்தை திரும்ப திரும்ப உச்சரித்து பார்த்து பொருள் தேட வேண்டுமா? இல்லை அந்த படிமத்தை கண் முன்னே உருவகித்து ரசிக்க வேண்டுமா? தெளிவு இல்லை.

உங்களது ‘எரிமருள் வேங்கை’ கட்டுரையில் இப்படி சொல்கிறீர்கள்,
‘அது தீ போல தோன்றும், ஆனால் மலர்தான். அதைப்போல அந்த ஆண் நெருப்புதான். ஆனால் மலர் நெருப்பு. அவள் அதில் ஏறி அமர்ந்த மயில். இந்தப்பொருளேற்றம் நிகழ்ந்ததுமே ஒன்று உருவாகிறது. அதை நாம் படிமம் – பொயட்டிக் இமேஜ் என்கிறோம். ஆனைகேறாமலை என்பது வெறும் காட்சி. எரிமருள் வேங்கை என்பது அர்த்தம் ஏற்றப்பட்ட காட்சி. ஆகவே இது படிமம். படிமம் உருவானதுமே கவிதை பிறந்துவிட்டது.’

இதில் அந்த படிமத்தை இன்னொரு ஒரு பொருளுக்கு ஒப்பிட்டு அர்த்தம் செய்வது போல் தோன்றுகிறது, மலர் நெருப்பு – ஆண் நெருப்பு. ஆனால் அந்த அர்த்தமே படிமம் என்கிறீர்கள். அப்படியானால் இந்த படிமத்தை இன்னும் விரிக்கவேண்டுமா?

கவிதை ஒவ்வொருவரின் அந்தரங்க ரசனைக்குரியது என சொல்லி இருக்கிறீர்கள். எப்படி ரசிப்பது என்று ஒருவருக்கு கற்று தர முடியாது தான். எனக்கே கவிதையை ஒரு கலையாக அணுகாமல், தர்க்க அடிப்படையில் அணுகுகிறேனோ என்று தோன்றுகிறது. அதை குறைத்து கொள்ளவே முயல்கிறேன். நீங்கள் ஏற்கனவே இதை பற்றி எல்லாம் நிறையவே எழுதி இருக்கிறீர்கள். மேலே குறிப்பிட்ட விஷயங்களில் மேலும் கொஞ்சம் விளக்கமோ, உதாரணமோ கிடைத்தால் நான் தெளிவடைய உதவும்.

நேரமிருந்தால் பதில் எழுதுங்கள்.

நன்றி,
ஹரீஷ்

அன்புள்ள ஹரீஷ்,

கண்டிப்பாக கவிதை வாசிப்பு அகவயமானதுதான். ஆனால் அவ்வகவய அனுபவத்தை நிகழ்த்தும் மொழிவெளிப்பாடுகளை நாம் படிமம், கவியுருவகம், குறிப்புருவகம் என்றெல்லாம் அடையாளப்படுத்தியிருக்கிறோம், அவ்வளவுதான். பழைய கவிதையில் இவை அணிகள் எனப்பட்டன. உவமை, உருவகம், தற்குறிப்பேற்றம் போன்ற அணிகளை நாம் அறிந்திருப்போம்.

இலக்கியத்தின் அடிப்படை அணி அல்லது அழகியல் வழிமுறை என்பது உவமைதான். ஒன்றைச் சொல்ல இன்னொன்றுடன் உவமிப்பது என்பது பழங்குடிப்பாடல் முதல் நவீனக் கவிதை வரை உள்ள ஒன்று. அவ்வாறு ஒன்றை இன்னொன்றாக உவமித்த பின்னர் அந்த உவமிக்கப்பட்டதையே வளர்ந்த்துச்சொல்லி மேலே கொண்டுசென்றால் அது உருவகம்.

வீட்டைத்தாங்கும் தூண் போன்றவர் குடும்பத்தலைவர் – இது உவமை. அதன்பின் அந்தத் தூண் உறுதியானது, வீட்டின் அடித்தளத்தையும் கூரையையும் இணைப்பது, அதில்தான் நாங்கள் கொடிகளை கட்டுவோம் என்றெல்லாம் சொல்லி வளர்த்துக்கொண்டே செல்லலாம். இது உருவகம்.

இந்த மரபான அணிகளை எல்லாம் இன்று நவீனக்கவிதையிலும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பழைய முறையில் அல்ல. ஒட்டுமொத்தமாக படிமங்கள் என்று சொல்கிறார்கள். poetic images என்ற சொல்லின் தமிழ் வடிவம் அது.

சரியான பொருளில் படிமம் என்பது ‘வாசகனின் கற்பனையைத் தூண்டி அர்த்தங்களை நோக்கி கொண்டுசெல்லக்கூடிய, உணர்வுகளை உருவாக்கக்கூடிய, ஒரு சித்தரிப்பு’ அவ்வளவுதான். ‘அநத நெடுஞ்சாலையின் நடுவே நிமிர்ந்து நின்றது ஒரு புல்’ என்ற தேவதேவனின் வரி ஒரு படிமம். அது எதைக்குறிக்கிறது? வாகனங்கள் ஓடும் நெடுஞ்சாலை. அதில் முளைத்தெழும் ஒற்றைப்புல். அதன் பிடிவாதம். மென்மை. மீண்டுமீண்டு முளைக்கும் உயிர்த்துடிப்பு என பலவற்றை சுட்டுகிறது அது.

பழைய கவிதை ‘நெடுஞ்சாலையில் இளம்புல் மீண்டும் முளைப்பதுபோல எந்தச் சூழலிலும் வாழ்க்கை தளிர்க்கும்’ என்று நேரடியாக எழுதும். அது உவமை. அப்படி எழுதுவது அந்த அர்த்ததை குறுக்குகிறது. வாசகனின் கற்பனையை கட்டுப்படுத்துகிறது என்பதனால் நவீனக் கவிதை வெறும்படிமத்தை மட்டுமே முன்வைக்கிறது.

அந்தக்கற்பனை மூலம் நிகழும் ஆழத்து தொடர்புறுத்தலையே நான் தனிமொழி என்கிறேன். அது கவிதைவழியாகவே பழகிக்கொள்ளவேண்டிய மொழி. ஆனால் அதற்கு அகராதி போட முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு கவிதையிலும் அது புதியதாகப் பிறக்கும். அதை உருவாக்கும் மனநிலையைப் பழகிக்கொள்வதுதான் ஒரே வழி. ஆகவே கவிதை வாசியுங்கள், கவிதை வசப்படும்.

ஜெ

தேவதேவனின் படிமங்கள்

சிறுகதைகளும் படிமங்களும்

அடுத்தகட்ட வாசிப்பு

கவிதை சில விவாதங்கள்

சில கவியியல் சொற்கள்

முந்தைய கட்டுரைபொறியியல்- ஓர் ஆசிரியரின் கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 15