பக்தியும் சங்கரரும்

அன்புள்ள ஜெ,

சங்கரரை வரலாற்றுச் சூழலில் பொருத்தி, அவர் செய்த மாபெரும் புரட்சியை விளக்கியிருக்கிறீர்கள். அருமையான கட்டுரை.

அதில் உள்ள ஒரு கருத்தாக்கம் குறித்து மட்டும் மாற்றுப் பார்வையை முன்வைக்க விரும்புகிறேன்.

// தூய அறிவை கறாரான தர்க்கத்துடன் முன்வைக்கும் அவர் அழகின் உன்மத்தம் ததும்பும் ‘சௌந்தரிய லகரி’யை எழுதினார் என்று வரலாறு எழுதப்பட்டது. //

முன்பு இதுவே எனது கருத்துமாக இருந்தது. ஆனால், நடராஜ குரு இதை முழுதுமாக மறுக்கிறார். அவர் சௌந்தரியலரிக்கு ஒரு பேருரை எழுதியிருக்கிறார் என்பது நீங்கள் அறிந்ததே. The Upsurging billow of beauty: Saundaryalahari of Sankaracharya – English translation and commentary by Nataraja Guru. இந்த நூலின் விரிவான முன்னுரையில், அத்வைத வேதாந்தியான சங்கரர் இந்த நூலை எழுதியிருக்கவே முடியாது என்பதற்காகக் கூறப்படும் வாதங்கள் அனைத்தையும் தொகுத்து, அதற்குப் பதிலளிக்கிறார்.

நடராஜ குரு

முழுமை நோக்கான (Absolutism) அத்வைத தரிசனம் அழகு என்னும் விழுமியம் (A “value” called Beatuy) வாயிலாக வெளிப்படும் கவிதைகளே சௌந்தரிய லகரியின் சுலோகங்கள் என்று நடராஜ குரு விளக்குகிறார். உபநிஷதங்களின் அழகியல், காளிதாசனின் கவிதை, லலிதா சகஸ்ரநாமம், சௌந்தரிய லகரி, சாக்த தாந்திரீகத்தின் தத்துவ அடித்தளம் என்று ஒரு இதற்கு ஒரு நீண்ட மரபு இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். சங்கரரின் பாஷ்யங்கள் எதிர்த்தரப்பை (பூர்வ பட்சம்) மறுத்துரைப்பதற்காக எழுதப் பட்டவை, விவேக சூடாமணி, சௌந்தரியலகரி போன்ற நூல்கள் தான் முன்வைக்கும் சித்தாந்தத்தை கவித்துவமாக வெளிப்படுத்தும் முகமாக அவர் இயற்றியவை. இந்த இரண்டு வகை நூல்களுக்கும் உள்ள மொழி வேறுபாட்டுக்குக் காரணம் இதுவே என்றும் அவர் கூறுகிறார். அறிவியல், கலை, தத்துவம் என்ற மூன்று துறைகளின் இணைவை முன்வைத்தவர் நடராஜ குரு. சௌந்தரிய லகரி இதற்கான ஒரு மாபெரும் சாத்தியமாக அவருக்குத் தோன்றியிருக்கக் கூடும் என்றும் ஊகிக்க இடமிருக்கிறது.

நூற்றுக்கணக்கான ஸ்தோத்திரங்களும், சாதாரணமான பக்திப் பாடல் வகையிலான துதிகளும் “சங்கரர் இயற்றியவை” என்ற முத்திரையுடன் இப்போது பிரபலமாக உள்ளன. இவற்றை அவர் எழுதியிருக்க வாய்ப்பு இல்லை. பிற்காலத்தில் இயற்றப் பட்டு, மதிப்புக்காக அவர் பெயருடன் இவை இணைக்கப் பட்டிருக்கலாம். ஆனால், தத்துவக் குறீயீடுகள் ஆழமாக உள்ள சௌந்தரிய லகரி, சிவானந்த லகரி, மோகமுத்கரம் எனப் படும் பஜ கோவிந்தம், தட்சிணாமூர்த்தி அஷ்டகம், மனிஷா பஞ்சகம், கோவிந்தாஷ்டகம் போன்ற மிகச் சிலவற்றை சங்கரரே எழுதியிருக்கக் கூடும் என்று கருத இடம் உள்ளது. இதுவே எனது தற்போதைய முடிபு.

மிகக் கூர்மையான தர்க்க அறிவும், கலை சார்ந்த அழகியல் நோக்கும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல என்பதையும் இதன் மூலம் நடராக குரு சொல்லவருவதாக எனக்குத் தோன்றுகிறது. நான் மேற்குறிப்பிட்ட முன்னுரையிலிருந்து ஒரு மேற்கோள் –

“Sankara, as a great dialectical revaluator of the Hindu spirituality of his time, could easily be imagined to have attempted a final revaluation of the same body of spiritual wisdom which he proposed to clothe in a special kind of non-verbose language. As a result, there were two texts from his pen, the twin complementary works named Saundarya Lahari and Sivananda Lahari, respectively. The former presupposes a negative ascending dialectical perspective, while the latter presupposes the same Absolute Value when viewed from a more positive position in terms of a descending dialectic. The final content of both remains the same, although the starting postulates might seem diametrically opposed to each other.

Beauty, especially when it is colourful and full of significant lights and lines, lends itself to be considered the most tangible content of the otherwise empty or merely mathematical notion called “the Absolute.” Truth and value thus are made to fulfil the same function: to give full tangible content to the Absolute. In short, metalinguistically stated Advaita coincides here with what is protolinguistically understood.”

அன்புடன்,
ஜடாயு

அன்புள்ள ஜடாயு,

நன்றி.

நீங்கள் சொல்வது உண்மை. நானே நடராஜகுரு சௌந்தரிய லஹரிக்கு எழுதிய முன்னுரையை மொழியாக்கம் செய்திருக்கிறேன், சொல்புதிதில். நடராஜ குரு மேற்குறிப்பிட்ட நூல்கள் அத்வைதத்தின் மறைஞானப்பிரதிகள் [ Esoteric Texts] என நினைக்கிறார். அந்த வகையில் அவற்றை சங்கரர் எழுதியிருக்கக்கூடுமென வாதிடுகிறார். பக்தர்கள் சொல்வதுபோல ‘அவரும் கடசீல பக்திக்குத்தான் வந்து சேர்ந்தார்’ என்ற கோணத்தில் அல்ல. அத்வைதமே பக்தியையும் சடங்கையும் ஏற்றுக்கொண்டதுதான் என்ற கோணத்திலும் அல்ல.

ஆனால் நடராஜகுருவின் மாணவர்களிலேயே நடராஜகுருவின் இப்பார்வையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் உண்டு. நான் நடராஜ குரு அந்நூல்களின் சாராம்சத்தை மட்டுமே கொண்டு அம்முடிவுகளுக்கு வருகிறார், அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றே நினைக்கிறேன்.

மேற்குறிப்பிட்ட பக்தி நூல்கள் அத்வைதம் வலுப்பெற்று ஒரு பேரியக்கமாக ஆனபின்னர் உருவானவை. ஆகவே அவற்றில் அத்வைதத்தின் சாரம் வெளிப்படுகிறது – மிக அழகிய முறையில் மறைபொருளாக. அவ்வாறு அத்வைத சாரம் அழகியலாக நிகழ்வதனாலேயே அந்நூல்களை அத்வைதிகளில் ஒரு சாரார் சங்கரருடையதென ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால் அத்வைதம் மையத் தத்துவமாக ஆனபின்னர் அவ்வாறு பக்திக்குள் அத்வைத தரிசனம் நிகழ்வது மிக இயல்பானதேயாகும். பின்னர் எழுதப்பட்ட அனைத்து முதன்மையான பக்திப்பாடல்களையும் அத்வைதமாக விரித்துரைக்க முடியும். பாரதியின் கண்ணன்பாடல்கள் வரை.

அவ்வெளிப்பாடு அவற்றை அத்வைதத்துக்குள் கொண்டுசெல்ல உதவுவதில்லை என்பதே உண்மை. அவற்றை நடராஜ குரு கையாளும் விதமே அதற்குச் சான்று. அவர் சௌந்தரிய லஹரியை ஒரு அத்வைத அழகனுபவமாக ஆக்கவே விரிவாக உரையெழுதுகிறார். அதை ஒரு பக்திநூலாக அல்லாமல் மாற்றுகிறார். அவ்வாறு பக்திநீக்கம் செய்யப்பட்டே இவற்றை அத்வைதத்துக்குள் கொண்டுசெல்லமுடியும்.

அதாவது அவை அத்வைதத்தின் வீச்சுள்ள பக்தி நூல்களே ஒழிய பக்திக்கு இடம் கொடுத்த அத்வைத நூல்கள் அல்ல என்பதே உண்மை. அந்நூல்கள் அளிக்கும் உணர்வுநிலை என்பது அத்வைதத்துக்கு முரணானதே.

காலடி சங்கர ஸ்தூபம்

இந்த விவாதத்தை ஆன்மீக அனுபவம் சார்ந்த விவாதங்களுக்குள் கொண்டுசெல்லாமல் தூய வரலாற்று நோக்கில் பார்த்தால் இரு விஷயங்களை நம்மால் தவிர்க்கவே முடியாதென்பதைக் காணலாம்.

1. படைப்புகளை நாம் காலவரையறை செய்வது முழுக்கமுழுக்க மொழிநடையைக் கொண்டே. கம்பராமாயணத்தின் மொழிநடை கொண்ட ஒரு படைப்பை சங்க இலக்கியம் என்று நாம் சொல்லமாட்டோம். கம்பன் தன் ஞானத்தால் காலம் கடந்து வந்துவிட்டான் என்னும் வாதங்களுக்கெல்லாம் வரலாற்றாய்வில் இடமில்லை.

சங்கரர் பேரில் உள்ள நூல்களில் மூன்று காலகட்டத்தைச் சேர்ந்தவை உள்ளன என்கிறார்கள் ஆய்வாளர்கள். சங்கரரரால் இயற்றப்பட்டவை என ஐயம்திரிபறச் சொல்லப்படுபவையும் குருமரபாக நீடிப்பவையுமான பெரும் பாஷ்யங்கள் [உரைநூல்கள்] மற்றும் தத்துவநூலான விவேகசூடாமணி ஆகியவை ஒரு மொழிநடையில் உள்ளன. அவை காளிதாசன், ஃபாசன் காலகட்டத்தைச்சேர்ந்தவை

அவருடைய தோத்திரப்பாடல்கள் முற்றிலும் வேறுபட்ட மொழிநடையில், மிகப்பிற்காலத்தைச்சேர்ந்தவையாக உள்ளன. அதாவது 500 வருடம் பிந்தைய நடையில். அவற்றில் சௌந்தரிய லகரி காலத்தில் மூத்தது சுப்ரமணிய புஜங்கம் போன்றவை மிகமிகப்பிற்காலத்தையவை.

2. சங்கரர் கர்ம காண்டத்தை முழுமையாக நிராகரித்து ஞான காண்டத்தை அதி தீவிரமாக முன்வைத்தார். அதன்பொருட்டே அவர் ஐநூறு வருடங்களாக கடுமையாக க்ண்டிக்கப்பட்டார். அவரே பக்தியையும் வேள்விகளையும் ஏற்றுக்கொண்டு தோத்திரங்களை இயற்றியிருந்தால் அப்படி கண்டிக்கப்பட்டிருக்கவேண்டிய தேவையே இல்லை.

பிற்கால வேதாந்தங்களில் முதன்மையானவையான விசிஷ்டாத்வைதம், துவைதம் போன்றவை சங்கரரை எதிர்த்து கடுமையாக கண்டித்து எழுந்து வந்தமைக்குக் காரணம் அத்வைதம் பக்திக்கு எதிரானது என்பதே. சங்கரர் காலம் கழித்து ஐநூறு வருடம் கழித்து அதற்காகவே ராமானுஜரால் கடுமையாக மறுக்கப்படுகிறார். அக்காரணத்தாலேயே விசிஷ்டாத்வைதம் பிறந்தது. சங்கரரே சௌந்தரிய லகரியும் பஜகோவிந்தமும் இயற்றியிருந்தால் ராமானுஜர் எதற்கு எதிர்க்கவேண்டும்?

உண்மையில் ஞானத்தையும் பக்தியும் இணைத்தது என்பது இந்து தத்துவத்திற்கு ராமானுஜர் அளித்த கொடை. அதுவரை இந்திய மரபில் இருந்துவந்த தீரா மோதலை அவர் தன் ஞானத்தாலும் உயர்கவித்துவத்தாலும் முடிவுக்குக் கொண்டுவந்தார். அந்த இணைவுக்கான உணர்ச்சிகரமான அடித்தளம் ஆழ்வார் பாடல்களால் முன்னரே அமைந்துவிட்டிருந்தது.

அந்த இணைவு தத்துவத்தில் நிகழ்ந்தபின்னர்தான் சங்கரரை ‘மென்மையாக்கி’ தோத்திரங்கள் அவர் பெயரில் எழுதப்பட்டன. அவை சங்கரரின் மூலத்தரிசனத்துடன் முரண்பட்டு, மொழியால் வேறுபட்டு நிற்கின்றன. பின்னர் சங்கரரை கோயில் கட்டியவர், சாமிபிரதிஷ்டை செய்தவர், யந்திரங்கள் நிறுவியவர், செய்வினை பீடைக்காகவும் வயிற்றுவலிக்காகவும் கோயில்கோயிலாக அலைந்து கதறி அழுதவர் என்றெல்லாம் சித்தரித்து புராணங்கள் உருவாக்கப்பட்டன

சங்கரர்கள் பலர் இருந்திருக்கலாம். ‘ஆதி’சங்கரர் தத்துவமேதை, அத்வைத ஞானி. பின்னாளில் வந்தவர்கள் ஒருவேளை அவரது குருமரபில் இருந்தே கிளைத்தவர்களாக இருக்கலாம். ஞானகர்ம சமுச்சயம் நிகழ்ந்தபின் அவர்கள் பக்தியை நோக்கித் திரும்பியிருக்கலாம்.

அல்லது இன்னும் வரலாற்று நோக்கில் பார்த்தால் சங்கரருக்குப்பின்னர்தான் மாபெரும் பக்தி இயக்க எழுச்சி நிகழ்ந்தது. சூத்திரர்களின் பேரரசுகள் உருவாயின. பெரும் கோயில்கள் கட்டப்பட்டன. அக்கோயில்களை நிர்வகிக்கும் அமைப்புகள் உருவானபோது சங்கரரின் குருமரபினருக்கு அப்பொறுப்புகள் அளிக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் பக்தியை நோக்கி வர அது வழிவகுத்திருக்கலாம். சங்கர மடங்களின் தோற்றம் அவ்வாறு நிகழ்ந்திருக்கலாம்.

நாராயண குரு

இவ்வாறு பக்திப்பாடல்களை நோக்கி சங்கரரைக் கொண்டுவருவதன் உச்சபட்ச விளைவு என்னவென்றால் விபூதிப்பூச்சு இல்லாத சங்கரரின் ஒரு சிலையோ படமோ இன்றில்லை என்பதுதான். அத்வைத வேதாந்தம் என்பது சைவ வைணவ சாக்த மதங்களுக்குள் நிற்கக்கூடியது அல்ல. அனைத்திலும் அத்வைதவேதாந்தத்தின் பங்களிப்புண்டு. வேதாந்தநூல்கள் அனைத்துக்கும் பொதுவானவை. சங்கரர் சைவர் என்று சொல்லும்போது அத்வைதம் மிகமிகக்கீழே இழுக்கப்படுகிறது. குறுக்கப்படுகிறது.

நடராஜகுரு சொல்லும் முக்கியமான உதாரணம், நாராயணகுரு. அவர் தூய அத்வைதிதான். ஆனால் சாரதாஷ்டகம், காளிநாடகம் போன்ற உணர்ச்சிகரமான பக்திப்பாடல்களையும் எழுதியிருக்கிறார். அவை பக்தியை அத்வைதநிலையில் விளக்கக்கூடியவை. ரமணர் போன்ற அத்வைதிகளும் பக்திப்பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

ஆனால் நாராயணகுருவுக்கும் ரமணருக்கும் சங்கரரில் இருந்து ஆயிரத்து இருநூறு வருட வரலாற்றுத் தொலைவுண்டு. ஞானபக்தி சமன்வயம் நிகழ்ந்தபின் எழுநூறாண்டுக்காலம் கடந்து அவர்கள் வந்தார்கள். ஆதிசங்கரர் அந்த இணைவு இந்திய சிந்தனையில் நிகழ்வதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவர். அந்த வேறுபாடடை உக்கிரமாக முன்வைத்தவர் .

இவ்விவாதங்களை நான் நித்யசைதன்ய யதியிடம் சொல்லியிருக்கிறேன். அவர் அதை ஏற்றுக்கொண்டதில்லை, மறுத்ததும் இல்லை. ‘சங்கரரின் இறுகிய அத்வைத கான்கிரீட்டுக்கு கொஞ்சம் அழகியல் உடைவு தேவைப்பட்டது. அதுதான் சௌந்தரிய லஹரி. நம்மூர் அத்வைதிகளுக்கும் கொஞ்சம் அது தேவை. ஆகவே சௌந்தரிய லஹரி இருக்கட்டும். இல்லையென்றால் இவர்களை வைத்து கல்லுடைக்கமட்டுமே முடியும்’ என்று புன்னகையுடன் சொன்னார்.

‘அது சரிதான். ஆனால் அதைக் காரணம் காட்டி சங்கரருக்கு சர்க்கரைப்பாயசம் நைவேத்யம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்’ என்று நான் சொன்னேன். நாராயணகுருவுக்கும் வர்க்கலையில் சர்க்கரைப்பாயசம்தான்.

ஜெ


தூய அத்வைதம்

சங்கரமதம் அத்வைதம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 78
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 79