குழந்தைகளும் குருதியும்

அன்புள்ள ஜெ

வெண்முரசு வாசித்துக்கொண்டிருக்கிறேன். 12 வகையான மைந்தர்களைப்பற்றிய அந்த வரையறை மெய்சிலிர்க்க வைத்தது. கிட்டத்தட்ட எல்லாவகையான கருவுறுதல்களையும் அங்கீகரித்திருக்கிறார்கள். எல்லாவகையான தத்து எடுப்பதையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். மிகப்பெரிய ஆச்சரியம். Bastard என்ற சொல்லுக்கே இடமில்லை.

எல்லா குழந்தைக்கும் தாய் இருப்பதுபோலவே தந்தையும் இருக்கிறான். எல்லா குழந்தைக்கும் மூதாதையர் இருக்கிறார்கள். எவ்வளவு பரந்த மனம் கொண்ட ஒரு சமூகமாக இருந்திருக்கிறது. எவ்வளவு விரிந்த பார்வைகொண்டவர்கள் இந்த வரையறைகளை எல்லாம் உருவாக்கி அளித்திருக்கிறார்கள்.

எனக்கு ஒரு நண்பர். அவருக்கு பிள்ளைகள் இல்லை. தத்து எடுக்கலாமென்று எண்ணினார். ஆனால் அவரது வீட்டுக்காரர்களுக்குச் சம்மதமில்லை. வேறு ரத்தத்தில் பெண் எடுக்கக்கூடாது என்றார்கள். ஒரு மதகுருவிடம் போய் கேட்டார்கள். தத்து எடுப்பது சொந்தத்தில்தான் செய்யவேண்டும், வேறு இடத்தில்செய்ய சாஸ்திர அனுமதி கிடையாது என்று சொல்லிவிட்டார். தத்து எடுத்தபிள்ளை முழுமையாக சொந்தப்பிள்ளை ஆகாது என்றும் சொன்னார்.

அவர்கள், நான் எவ்வளவோ சொல்லியும் அப்படியே விட்டுவிட்டார்கள். அவர் எந்த சாஸ்திரத்தைச் சொன்னார் என்றே தெரியவில்லை. இதை வாசித்தபோது நம் மக்களுக்கு மதநூல்களில் உண்மையான அறிவு இல்லாததுதான் சோதிடர்களையும் மதகுருக்களையும் நம்பி வீணாகப்போக காரணம் என்று தெரிந்தது.

பிரபாகர்

அன்புள்ள பிரபாகர்,

அந்த மதகுரு சொன்னது வெறும் அறியாமை, அத்துடன் சாதிவெறி. அவருக்கும் இந்துநூல்களுக்கும் அடிப்படை சம்பந்தமே இல்லை. வெறும் வயிற்றுப்பிழைப்புவேடம் அது. வேறென்ன சொல்ல. எந்த அடிப்படை நீதிக்கும் மகாபாரதம் மட்டுமே போதும் என்பதே நான் அறிந்தது – சரியாக வாசித்தால்.

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்,

படிக்கும் போது பரபரவென தாண்டி முடித்து, மீண்டும் படித்து, அட என்று சில இடங்களில் நின்று, பத்தாமல் மீண்டும் ஆரம்பித்து…பயமாய் இருக்கிறது. படிக்க தெரியாமல் இத்தனை வருடம் சென்று விட்டோமோ இல்லை குடிகாரன் மாதிரி எழுத்துக்கு அடிமை ஆகி விட்டேனோ?

இலக்கியம் என்பது நீர் விளையாட்டு போல..ஊறி ஊறி திளைத்து தெளிந்து வந்து திரும்பி பார்க்கையில் நீர் பற்றிய ஒரு ஞானம் கூடி நிற்கும்…கோடை முன் பூத்து குலுங்கும் வேம்பின் கீழ் நிற்பதுதான் எனக்கு எழுத்துகள். வாசமும் குளிர்ச்சியும் சற்று உள்ளே சென்று வருடி விட, மறு நாள் தொடங்கும் வாழ்வின் சூடு ஓட்டம்.

உங்கள் வாழ்வின் மிக பெரிய இயக்க வட்டம் ஆரம்பித்து உள்ளது. வெண்முரசு. “உடம்பைப் பார்த்துக்கொள்வது எல்லாம் என்னால் முடியாதகாரியம்” என்பது எல்லாம் வெறும் எழுத்துகள்…சுனாமி நேரங்களில் உங்கள் எழுத்துகளில் கூட இதே மாதிரி வரிகள் உண்டு…உடம்பை மனம் இழுத்து செல்லும் வரை தான் எல்லாம் செய்ய முடியும்..உடம்பு ஸ்தம்பித்து “என்னை விட்டு விடு” எனும் போது மனம் வெறும் அம்பு மட்டும் தான்…..இக்காரியம் செய்ய உடம்பின் மிக பெரிய உதவி இனி வரும் வருடங்களில் தேவை. பார்த்து கொள்ளுங்கள்.

மற்றபடி வெண்முரசு பற்றி எழுத புதிதாய் வார்த்தைகள் தெரியவில்லை.

குதிரை வால் வலையில் கூந்தல் முடிந்து கொண்ட சகுனி தகவல் முதல், மன்னனின் விழா அமைப்புகள் வரை தகவல்கள் உச்சம்..மனிதர்கள் முகம் பார்க்க மனம் ஓய்வதில்லை எனும் உங்கள் வரிகள் ஞாபகம் வருகிறது. தனி மனிதர்களின் psycho analysis OR biography போல செல்கிறது. விரிசல் வளர்வது மிக தெளிவு… அதை யாரும் ஒன்றும் செய்ய முடியாமல் இருப்பது தான் வாழ்வின் விந்தை. க்ளைமாக்ஸ் தெரிந்த டைரக்டர் போல் இறுதியை நோக்கி காலம் தள்ளுவதை பார்த்து வைக்கிறது இந்த பாகம்.

பிரச்சனையின் ஆரம்ப சுழிகள் வளர ஆரம்பிப்பது, எல்லாம் யோசித்து செய்தாலும் கூடாமல் வரும் குறை, அழுத்தம் பெற்று சேர்ந்து பெரிதாகி வருவது, உள்ளங்களின் கொந்தளிப்புகள் உணர்வுகளின் அழைககழிப்புகள் போர் என்கிற நமக்கு தெரிந்து விட்ட அழிவு நோக்கி இழுத்து செல்லும் எதுவோ ஒன்று மனத்தை தவிக்க வைக்கிறது

உணர்சிகளின் தூள்கள் அதிகம் இல்லாமல் “மேடை நிறைந்துகொண்டிருக்கிறது” மெதுவாக ……படிப்பது கண்களும் மனமும் அல்ல. பின் இருக்கும் ஏதோ ஒன்று.

நெகிழ்வுடன்,
லிங்கராஜ்

அன்புள்ள லிங்கராஜ்

இலக்கியம் உணர்ச்சிகரமானது, நாம் நவீனத்துவ இலக்கியத்தின் ஒரு கட்டத்தில் இலக்கியம் உணர்ச்சிகளுக்கு எதிரானது என்று புரிந்துகொண்டுவிட்டோம். உணர்ச்சிகளை தொடாமலேயே எழுதியிருக்கிறார் என்பதை ஒரு பாராட்டாகவே பயின்றுவிட்டோம். நவீனத்துவத்திற்கு முந்தைய பெரும்படைப்புக்கள் உணர்ச்சிகரமானவை. பின்நவீனத்துவத்திலும் சப்ளைம், உணர்ச்சிகரம் முக்கியமான இடம் வகிப்பதுதான்.

எந்த உணர்ச்சி என்பது முக்கியமானது, உயர்ந்த இலட்சியங்களும் விழுமியங்களும் வெளிப்படும் இடங்கள் அளிக்கும் உணர்ச்சிகரமே செவ்வியலக்கியங்களுக்குரியது. அத்தகைய உணர்ச்சிகள் மனிதர்களையும் நிகழ்வுகளையும் உச்சத்துக்கு கொண்டுசென்று உருவாக்கப்பட்டிருக்கும். கம்பராமாயணம் அத்தகைய உணர்ச்சிநிலைகளால் ஆனது.

மனித உணர்ச்சிகள் நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்துவது நல்ல இலக்கியங்களின் இயல்பான சித்தரிப்பு. நுட்பம், ஆழம் ஆகியவை வெளிப்படும் உணர்ச்சிகள். மனிதனைப்பற்றி, வாழ்வுபற்றி முன்பறியாதன வெளிப்படும் இடங்கள் அவை. எந்த அளவுக்கு குறிப்புணர்த்தும்படி, மேலும் விரியும்படி உள்ளனவோ அந்த அளவுக்கு அவை கலையாகின்றன.

மெல்லுணர்ச்சிகளையும் மிகைநாடகத்தையும் இலக்கியம் பொருட்படுத்துவதில்லை. நாமறிந்த உணர்ச்சிகள் நாமறிந்ததுபோலவே வெளிப்பட்டு நம்மை நெகிழவைப்பது செண்டிமெண்ட் என்னும் மெல்லுணர்ச்சி. நாமறிந்த உணர்ச்சிகளை செயற்கையாக உச்சம்கொண்டுசெல்வது மிகைநாடகம், மெலோடிராமா. வேறுபாடுகளை நல்ல வாசகன் உணரமுடியும்.

வெண்முரசு முதலிரு உணர்வுநிலைகளின் கலவை.

ஜெ  

May 12, 2014/மறுபிரசுரம்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா-2020
அடுத்த கட்டுரைஉலகுக்குப் புறங்காட்டல்- கடிதங்கள்