சங்கரம்

ஜெயமோகன் அவர்களுக்கு,

சங்கரர், ராமானுஜர் இருவருமே இந்தத் தீய அபிசார மந்திரங்களால் தங்கள் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டனர் என்பதை அவர்களது வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஸ்ரீ சங்கரரிடம் வாதில் தோற்ற அபிநவ குப்தன், அவர் மீது தீவினையை ஏவி விட்டான். அதனால் பலத்த பாதிப்புக்குள்ளானார் ஸ்ரீ சங்கரர். பின்னர் திருச்செந்தூர் வந்து முருகப்பெருமானை வணங்கி, ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் பாடி தன் நோய் நீங்கப் பெற்றார். என ஒரு இணையதளத்தில் வாசித்தேன். இது உண்மையா?

சுப்ரமணியம்.எஸ்

அன்புள்ள சுப்ரமணியம்,

ஆதிசங்கரரின் வரலாறு என சொல்லப்படும் கதைகளுக்கும் அவர் சொன்ன அத்வைதத்துக்கும் எத்தனை தூரம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள இதைவிடச்சிறந்த உதாரணம் இருக்கமுடியாது. ‘அகம் பிரம்மாஸ்மி’ [நானே இறை] என்றும் ‘தத்வமஸி’ [அது நீயே] என்றும் வாதிட்டவர் ‘கோவிந்தனை பாடு மூடநெஞ்சே’ என்று பஜகோவிந்தம் பாடினார் என்று நேர் தலைகீழாக காட்டும் கதைகளின் நோக்கம் மிகத்தெளிவு. அவை அத்வைத நிராகரிப்பு மட்டுமே. சங்கரரை தெய்வமாக்கிவிட்டு அவர் சொன்ன அனைத்தையும் குப்பைக்கூடையில் போடும் முயற்சி.

ஆனால் சங்கரர் சைவர்கள் வைணவர்கள் சாக்தர்கள் மூன்று சாராருக்குமே ‘உண்டு செரித்து உடலாக’ ஆக்கிக்கொள்ளவேண்டிய ஆளுமையாக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. சுப்ரமணிய புஜங்கமும், பஜகோவிந்தமும், சௌந்தரிய லஹரியும் ஒரே சமயம் அவரைக்கொண்டு பாடவைக்கவேண்டியிருந்திருக்கிறது

கடைசியாக ஒன்று. அபிநவ குப்தர் ‘ஏவி விட்டான்’ என்று சொல்லப்படவேண்டிய ‘அசுரன்’ அல்ல. ‘பக்தர்க’ளுக்கு அது புரியாது. அபிநவகுப்தரும் முக்கியமான வேதாந்த அறிஞர். சங்கரருக்கும் அவருக்கும் நிகழ்ந்தது மிக நுட்பமான அறிவுப்போர். சொத்துச்சண்டை அல்ல.

ஜெ

அன்புள்ள ஜெ,

சங்கரப்புரட்சி என்ற கட்டுரை வாசித்தேன். ஆணித்தரமான கருத்துக்கள். அவற்றைச் சொல்லியிருக்கும் விதமும் குழப்பமில்லாமல் செல்கிறது. சொல்லிச்சொல்லித் தேறிவிட்டீர்கள்போல. சரசரவென்று ஒட்டுமொத்த இந்திய வரலாற்றையுமே சொல்லிமுடிக்க உங்களால் முடிகிறது

நீங்கள் சொல்லும்போதுதான் வரலாற்றை கற்ற எனக்கே இந்தியாவின் மிகப்பெரிய பேரரசுகள் எல்லாமே சூத்திர ஜாதிகளால் உருவாக்கப்பட்டவை அல்லவா என்ற எண்ணம் உறைத்தது. ஏழாம் நூற்றாண்டுக்குப்பின் உருவான யாதவப்பேரரசுகள், அவற்றில் இருந்து உருவான ராஷ்டிரகூடர்கள், பிறகு உருவான மராட்டியர்கள், நாயக்கர்கள், சந்தால் பேரரசுகள் எல்லாமே சூத்திரர்களுக்குரியவை. அப்படியென்றால் இந்தியவரலாறு என்பதே பிராமணிய சக்திகளின் வரலாறு என்று எப்படி திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டது? ஆச்சரியம்தான்.

இந்த பெரிய சூத்திரப்பேரரசுகள் இந்து புராணங்களில் என்ன விளைவுகளை மாற்றங்களை உருவாக்கின என்று பார்க்கவேண்டியிருக்கிறது. கிருஷ்ணன் என்ற கதாபாத்திரம் யாதவர்களால் எப்படி வளர்க்கப்பட்டது என்று பார்க்கவேண்டியிருக்கிறது. நல்ல தொடக்கம்

நன்றி

பாலகிருஷ்ணன்

அன்புள்ள பாலகிருஷ்ணன்

சுவீரா ஜெயஸ்வாலின் வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு நல்ல தொடக்கம் என நினைக்கிறேன். ஆனால் செல்லவேண்டிய திசை இன்னும் மிக அதிகம். ஒட்டுமொத்த இந்தியவரலாறே ‘உயர்’ சாதிகள்’ ‘தாழ்ந்த சாதிகளை’ நிரந்தரமாக ஒடுக்கியதுதான் என்றும் அதற்குரிய கருவி இந்துமதம் என்றும் சொல்லப்படும் ஒற்றைவரிகள் இங்கே வெறும் மதக்காழ்ப்புடன் உருவாக்கப்பட்டவை. உள்நோக்கம் கொண்டவை. வேறெந்த அரசியல் வரலாற்றையும்போலவே இந்தியவரலாறும் அனைத்து மக்கள்குழுக்களும் ஒன்றுடன் ஒன்று நிகழ்த்திய அரசியலதிகாரத்துக்கான போர் மட்டுமே. வெற்றிதோல்விகள் மட்டுமே

ஜெ

அன்புள்ள ஜெ

ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுவிட்டீர்கள். சைவ வைணவ சாக்த மதங்கள் உருவான பின்னர் அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரே மதமாக ஆக்கியது வேதாந்தம்தான். வேதாந்தத்தை மறுபிறப்பு எடுக்கவைத்தவர் சங்கரர். இங்கே ஹரிஹரன், சங்கரநாராயணன் போன்ற பெயர்கள் உருவாக காரணமும் சங்கரர்தான். இந்தியாவில் மாபெரும் மதமோதல்கள் உருவாகாமல் தடுத்தவரும் அவர்தான்

சிவராமன் ,

அன்புள்ள சிவராமன், இது ஓர் ஆராய்ச்சிக்கட்டுரை அல்ல. ஏற்கனவே நிகழ்ந்து முடிந்து பெருநூல்களாக நமக்கு வாசிக்கக்கிடைக்கும் ஆய்வுகளை நோக்கி வாசகனை திருப்பும் ஒரு குறிப்பு, அவ்வளவுதான். நீங்கள் சொன்னது உட்பட பல தளங்கள் இந்த ஆய்வுகளில் உண்டு.

உதாரணமாக, இந்தியாவில் பௌதமதத்திற்குப்பின் உருவான மறுமலர்ச்சி வைணவ மதங்களே அடித்தள- சூத்திர – மக்களை திரட்டி வல்லரசுகளை உருவாக்கச்செய்தன. [விசிஷ்டாத்வைதம், துவைதம், புஷ்டிமார்க்கம் முதலியவை] யாதவர்கள் நாயக்கர்கள் உட்பட பெரும்பாலானவர்கள் வைணவர்கள். ஆனால் அந்த நவீன வைணவங்கள் அனைத்தும் சங்கரரின் அத்வைதத்தின் வளர்ச்சிநிலைகளாக, மறுப்பாகவும் நீட்சியாகவும் உருவாகிவந்தவையே என்கிறார்கள்.ஆய்வாளர்கள் செய்யவேண்டிய பெரும்பணி அது.

ஜெ

ஜெ,

Adi Sankaracharya wrote a number of Vedantic works for imparting knowledge of the Self and the Universal Spirit. He also composed a number of hymns to foster Bhakti in the hearts of men. One of these hymns is the famous Bhajagovindam.

If Shri Adi Sankara himself who drank the ocean of Jnana (இங்கிருந்துதான், தோசையை “தோசா” என்றும், வடையை “வடா” என்றும் அழைக்கும் தமிழாங்கிலப் பாரம்பரியம் முகிழ்த்தது என்பது என், காப்புரிமை பெற்ற, தனிப்பெரும் கண்டுபிடிப்பு) as easily as one picks water from the palm of one’s hand, sang in his later years hymns to develop devotion, it is enough to show that Jnana and Bhakti are one and the same.

அப்டீன்னு மூதறிஞர் குரல்ல கேட்டுட்டு, அதுக்கப்பறம் நவீன நந்தனார் எம்.எஸ். குரலில் பஜகோவிந்தம் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்து, இறங்கி இந்து படித்து, ஃபில்டர் காப்பி குடித்துக் கடன் கழித்து அலுவலகம் செல்லும் எம் போன்ற சைவப் பூச்சிகளின் வயிறு கலங்குகிறதே.. இதையும் ஒரிஜினல் சங்கரர் எழுதவில்லையா? இனி கோவிலுக்குப் போய் சங்கரர் சிலை முன்னால் நின்னால், “நீர் எத்தனாம் சங்கரர்” என்றுதானே மனம் கேட்கும். சாமி கும்பிட முடியாது. கெடுத்திட்டீரே ஐயா..

சங்கரர் புரட்சிக்காரர் என்னும் எழவயும் இந்த இடது சாரி ஆய்வாளப் புண்ணாக்குகள்தாம் கண்டுபிடிக்க வேண்டுமா? அது சரி, இ.எம்.எஸ் மேலேயிருந்து இன்னும் புத்தகங்கள் எளுதிக் கொண்டிருப்பதாக ஒரு பீதியூட்டும் மந்த மணம் பரவி வருகிறதே – அது உண்மையா? (எனில், ஒரு தாயத்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்)

போகட்டும் – எங்கும் நிறைந்திருக்கும் இந்த இடதுசாரிக் கட்டுவிரியன் குட்டிகளை என்ன செய்யலாம்?? பேசாமல், ஜனமேஜயன் நடத்தியது போன்ற ஒரு யாகத்தை நடத்தி, ஒட்டு மொத்தமாய் போட்டுத் தள்ள வேண்டியதுதான்.

பாலா

அன்புள்ள பாலா,

முதல்சங்கரருக்கு ஓம் எனும் மந்திரம், நடு சங்கரருக்கு தேங்காய் ,கடைசி சங்கரருக்கு காணிக்கைச் சில்லறை என்று வகுத்துக்கொள்ளவேண்டியதுதான். கடைசி சங்கரர் இளங்குளத்து மனைக்கல் சங்கரர் என்றும் ஒரு பாடபேதம் உண்டு

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 76
அடுத்த கட்டுரைபாலையின் மலர்மரம்