பருவமழை:ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்:

உங்களது பருவமழைப்பயணம்-மழையில்லாமல் படித்தேன்.

ஒன்று காட்சிகளை சொற்களாக ஆக்கும் நம் இயல்பு. ‘எவ்வளவு அழகாக இருக்கிறது’, ‘மகத்தான காட்சி’ இவ்வாறெல்லாம் அகத்தே சொல்லிக்கொள்வது. [இதை சப்தாகரண விருத்தி என்கிறது மரபு] இன்னொன்று காட்சிகளை முன்காட்சிகளுடன் அல்லது முன் நினைவுகளுடன் இணைத்துக் கொள்ளுதல். ‘

மனதின் இந்த இரண்டு செயல்பாடுகளை, குறிப்பாக இயற்கையின் முன் நான் கவனித்திருக்கிருக்கிறேன். இதைப் பற்றி படித்ததில்லை. ஆனால் நான் இவைகளை மனிதன் இயற்கையின் ஒரு கூறாக உணரமுடியாதவாறு மனம் ஏற்படுத்துகிற தடை என்ற அளவிலும், அதேசமயத்தில் இதுமனதின் ஆதார இயல்பு அல்லது இருப்புக்கான வேர் என்ற அளவிலும் புரிந்துகொள்வதால், மனதைக்கொல்லும் பயிற்சிகளில் இயற்கையின் முன் இருப்பதை நான் முக்கியமானதாகக் கருதுகிறேன். நானே இது குறித்த ஒரு பயிற்சி முறையை உருவாக்கிக்கொண்டேன். இது பெரிதும் பெளத்த முறைகளில் ஒன்றான சாட்சியாய் இருத்தல் தான். மனம் இப்படியான இந்த இரண்டு வழிகளில் கிளைக்கும் போது நான் இயற்கையின் பெருவியப்பில் அல்லது பேருருவில் சார்ந்து நின்று மனதை கட்டுப்படுத்தமால் மனதின் கிளைத்தலை சாட்சியாய் இருந்து பார்பதுதான் அது. கட்டுப்படுத்துவதும், முறைப்படுத்துவதும், கண்டிப்பதும் கூட மனதின் செயல்பாடுகளில் ஒன்றாகி அதை வலுப்படுத்தும் நிலைக்கே செல்லும் என்பதால் சாட்சியய் இருத்தல் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மனம் மெல்ல மெல்ல நசிந்து, கெஞ்சுவதை பார்க்கமுடியும். சாட்சியமாகுதல் முழுமையாகுந்தோறும், மனம் சக்தியற்று, செயலற்று இயற்கையின் பெருஞ்சுழலுக்குள் அழிந்து போவதைக் காணலாம். இதை வெற்றி என்று கூட சொல்லமுடியாது. எரியிறதை பிடுங்கினா கொதிக்கிறது அடங்குவது போலத்தான். இதைச் செய்வதற்கு எனக்கு இயற்கைச் சூழல் பெரிய அளவில் உதவுகிறது.

இந்தப்பதிவு எந்தவிதமான விமர்சனத்தையோ, அல்லது உங்கள் மேல் எழும் ஒருவிதமான பரிதாபத்தையோ தராமல் வாசிக்க இடமளித்திருந்தது. பொதுவாக சில பதிவுகள் குறிப்பிட்ட சில அணுகுமுறைகள் மேல் உங்களுக்கும் இருக்கும் பற்றையும்/ வெறுப்பையும், எதையும் வார்த்தைப்படுத்துவதில் இருக்கும் அளவு கடந்த ஆர்வத்தையும் சொல்லியவாறே இருக்கும். அவை எனக்கு ஆயாசத்தையும், வெறுப்பையும் தந்து பின் ஒருவிதமான பரிதாபத்தில் முடியும். இது எனது புரிதல்/ அனுபவம். இது இந்தக் கடிதத்தில் முக்கியமானதல்ல. இதை எழுத பலமுறை நினைத்து அதனால் இருவருக்கும் பலனில்லை என்ற காரணத்தால் எழுதாமற்போனது. ஒவ்வொருவரையும் அவரவர் தேவைகளே அவர்களை தீர்மானிக்கின்றபடியால், உங்களது தேவைகளை (சிலவற்றையாவது எ.கா: ஒரு எழுத்தாளாராய் இருப்பது) நீங்களே வெளிப்படுத்தி இருப்பதாலும் இதை என்னால் ஒருவாறு புரிந்துகொள்ள முடிகிறது.

சமீபத்தில் அப்படி எரிச்சலூட்டிய பதிவொன்று. மலேசிய இந்திய இயக்கத்தைப்பற்றியது. அதன் போராட்ட வழிமுறைகளை பாராட்டுகிறபோது அவற்றில் தமிழ் (திராவிட) வெறுப்புணர்வு கலந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கைப்படுத்துமிடத்து அதில் தொனித்த வெறுப்பைக் குறிப்பிடலாம். அந்த இயக்கத்தின் மேல் குறிப்பாக இன்றைய திராவிட இயக்கம் எதற்கும் ஈடுபாடில்லை/ அக்கறையுமில்லை. டத்தொ சாமிவேலு எதிரணியில் இருந்தது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் அந்த இயக்கதில் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தது, இந்தியாவின் இந்து இயக்கங்கள் தான். மலேசியத் தலைவர்கள் இங்கு வந்து இந்து இயக்கங்களில் பயிற்சி/ வழிகாட்டுதலை சிலவ்ருடங்களுக்கு முன் பெற்றதாகக் கூடப்படித்தேன்; எவ்வளவு சரியென்று தெரியவில்லை. வலைப்பதிவில் இதைப் பற்றிய விவாதங்களை எழுப்பியவர்கள் இந்துத்துவ சார்புடையவர்களே. நியாயமாக உங்கள் எச்சரிக்கை இதில் இந்துத்துவ இயக்கங்கள் பங்கேற்பதால் ஏற்படுவதைக்குறித்து இருந்திருக்க வேண்டும். குறித்து இருந்திருக்கவேண்டும். என்ன செய்வது அதை நீங்கள் எழுதியுள்ளீர்கள் :)

***

உங்களது தேர்வு குறித்த பதிவொன்றை வாசித்தபின்னும் எழுதும் மனநிலையை அடைந்து எழுதத்துவங்கி பின் நிறுத்திவிட்டேன். அதுவும் மனதைத் தொடுவதாகவும், நெகிழ்ச்சியை அளிப்பதாகவும் இருந்து. சில துளி கண்ணீர்த்துளிகள் வெளிப்படுத்தியது என்பதும் உண்மை. உங்கள் மகனுக்கு என் அன்பு. உங்களது மனநிலையையும், அவஸ்த்தையையும் உணரக்கூடியதாக இருந்தது. உங்கள் மகன் அவர் விரும்பிய துறையில் (எனக்கும் பிடித்த துறை அது) வர வாழ்த்துகள்.

அன்புடன்

தங்கமணி

பி.கு: இதை வெளியிட வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் உங்கள் விருப்பமே இறுதியானது. நன்றி!

8888888888888

திரு தங்கமணி,

உங்கள் கடிதம் கண்டேன். முன்பு ஒருமுறை நாம் விவாதித்துள்ள நினைவு. உங்கள் அரசியலநிலைபாடுகளை இணையத்தில் கண்டுவருபவன் என்ற முறையில் ஒவ்வொன்றிலும் அரசியல் சார்ந்த மன உருவகங்களுக்கு அப்பால் போகமுடியாத உங்கள் இயல்பு எனக்கு வருத்தம் அளித்தது – பரிதாபம் அளிக்கவில்லை. அந்த இடத்தில் எல்லாம் என்னை நான் வைத்துக் கொள்வதில்லை.

என்.மலேசியாகட்டுரை யாரை நோக்கி எழுதப்பட்டுள்ளது என்பதை அதைப்படிப்பவர்கள் இயல்பாகவே உணர முடியும்

‘சாட்சியாக இருப்பது’ என்றெல்லாம் வெறும் சொற்களை முன்வைப்பது எளிது. அதை பயின்றுபார்க்கும்போது உருவாகும் நடைமுறைச் சிக்கல்களைப் பற்றியே நான் எழுதினேன். தியானம் அல்லது அதைப்போன்ற எதையும் சிலநாள் பயின்று பார்ப்பவர்கள் இதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். எந்த தியானமுறையும் சொல்வது ஒன்றுதான், மனதை ஒருமுகப்படுத்துவது என்பதே மனதை வெறுமொரு சாட்சியாக மாற்றும்பொருட்டே. அனைத்திலும் ஈடுபடும் போத மனதை அப்படி முன்னே வராமல் அடங்கும் பொருட்டே ஏதாவது ஒன்றில் குவிக்க முயல்கிறார்கள்.

மனத்தின் அடிபப்டை இயல்பே ‘ஈடுபடுவது’தான் . ‘மனம்’ அல்ல ‘மனொவிகாரம்’தான். ‘சித்தம்’ அல்ல ‘சித்த விருத்தி’ தான். இம்மாதிரி முயற்சிகள் எதுவுமே மனதின் அடிபப்டை இயல்புக்கு எதிரான  தாவல்களே. ஆகவேமனதை வலுக்கட்டாயமாக அடக்க எவராலும் முடியாது, அதை திசைதிருப்பி திசைதிருப்பி அமைதியடையச்செய்யும் கலையையே தியானம் என்கிறார்கள். இதற்கெல்லாம் நெடுநாள் மரபும் அனுபவ வழிமுறைகளும் உள்ளன

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைகாய்கறி அரசியல்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைசைவசித்தாந்தம் ஒரு விவாதம்