யுவகிருஷ்ணா, அதிஷா இருவரின் இணையதளங்களை நான் அவ்வப்போது வாசிப்பதுண்டு. பழைய குமுதம் இதழ்களுக்கு [எஸ்.ஏ.பி, ரா.கி.ரங்கராஜன் காலகட்டத்தில்] இருந்த ஒரு விட்டேற்றியான, கொஞ்சம் விடலைத்தனமாக நகைச்சுவை அவற்றில் அவ்வப்போது வெளிப்பட்டு புன்னகைசெய்ய வைக்கும். பிடிவாதமாக தன் பிரக்ஞையை முச்சந்தியிலேயே நிறுத்திக்கொள்வது ஒரு வணிக எழுத்தாளனுக்குரிய மிகப்பெரிய பலம். அவ்வியல்பு இருவருக்கும் இருக்கிறது.
தமிழ் சினிமாவில் எனக்குத்தெரிந்து நா.முத்துக்குமார் அளவுக்கு உலக இலக்கியமும் தமிழிலக்கியமும் வாசிக்கக்கூடிய சிலரே இருக்கிறார்கள். ஆனால் முத்துக்குமார் கடுமையாக முயன்று தன் மூளையின் ஒரு பகுதியை முச்சந்தியின் விடலைத்தனமான உலகில், அவர் எப்போதோ விட்டுவிட்டுவந்த நடுத்தரவர்க்க இளைஞர்களின் டீக்கடை அரட்டைக்குள் நீடிக்கச்செய்வதைக் கண்டிருக்கிறேன். அவரது வெற்றியின் ரகசியம் அது.
யுவகிருஷ்ணாவின் இணையதளத்தில் ஒரு பதிவு. புரட்சி படும் பாடு . சுவாரசியமான கட்டுரை. பகடிதான் செய்திருக்கிறார். ஆதிசங்கரர் ஒரு புரட்சியாளர் என ஒரு தோழர் பேசுவதைக் குறிப்பிட்டு ‘மார்க்ஸ், லெனின், மாவோ படங்களையடுத்து ஆதிசங்கரரின் படத்தையும் சேர்த்து அச்சிட்டு தொலைக்கவேண்டுமோ என்று புரட்சிகரத் தோழர்கள் பகீர் ஆகிக்கொண்டிருந்த நிலை’ என்கிறார்.
பொத்தாம்பொதுவாக யோசித்துக்கொண்டேன். முதலில் நினைவு வந்த விஷயம் சங்கரரை இந்திய சமூகத்தின் முக்கியமான கிளர்ச்சியாளர், மாற்றத்துக்காகப் பேசியவர் என சுட்டிக்காட்டியவர் இந்திய தத்துவசிந்தனையை விரிவாக ஆராய்ந்த மார்க்ஸிய அறிஞரான கெ.தாமோதரன். பின்னர் அவ்வழியை மேலும் விரிவாக்கி இ.எம்.எஸ் சங்கரன் நம்பூதிரிப்பாடு விரிவாக எழுதியிருக்கிறார். ஆரம்பகட்ட மாற்றுவிவாதங்கள் எல்லாம் முடிந்து பொதுவாக அந்தத் தரப்பு ஏற்றுக்கொள்ளபட்டுவிட்டது
புரட்சிகரம் என்பதை இடதுசாரிக்கருத்துக்களின் அடிப்படையில் அரசுக்கு எதிராக ஆயுதக்கலாட்டா செய்வது என்ற ஒற்றைவரியில் வகுத்துக்கொள்ளாமல் விரிந்த வரலாற்று நோக்கில் ஆராய்வதன் விளைவே அந்த பார்வை. அது மார்க்ஸிய நோக்கின் தொடர்ந்த பரிணாம வளர்ச்சியாகும்.
மானுடவரலாறு என்பது தொடர்ச்சியான புரட்சிகள் வழியாகவே வளர்ந்து வந்திருக்கிறது என்றும் ஒவ்வொரு பெரும்புரட்சியாளனும் மானுட சமூகத்தின் சிந்தனையிலும், மானுட சமூக அமைப்பிலும் அடிப்படையான மாற்றத்தை உருவாக்குகிறான் என்றும் இ.எம்.எஸ் சொல்கிறார். நாம் இன்று காணும் மானுடநாகரீகம் என்பது அவ்வாறு மெல்லமெல்ல உருத்திரண்டு வந்ததே என்று அவர் விளக்குகிறார்.
எந்தப்புரட்சியாளனையும் அவன் நிகழ்ந்த காலகட்டத்தின் வரலாற்றுச்சூழல், பண்பாட்டுச்சூழல் ஆகியவற்றை வைத்தே மதிப்பிடவேண்டும். அவனுடைய சிந்தனையின் அடிப்படைப்பங்களிப்பு என்ன என்பதைக்கொண்டே அவனை புரிந்துகொள்ளவேண்டும் என்கிறார் இம்.எம்.எஸ். அதனடிப்படையில் அவர் சங்கரரை ஒரு புரட்சியாளராகவே எண்ணுகிறார்
இ.எம்.எஸ் முதலிய மார்க்ஸிய அறிஞர்கள் சொல்வனவற்றை இவ்வாறு தொகுத்துச் சொல்ல்லாம்.
சங்கரரின் காலகட்டத்தில் பௌத்தமும் சமணமும் அவற்றின் அதன் சீரழிவை எட்டியிருந்ன. பிராமண, ஷத்ரிய மேலாதிக்கத்துக்கு எதிராக வைசியர்களின் எழுச்சியாக நிகழ்ந்த பௌத்த ச்மண மதங்கள் அரசர்களின் மதங்களாக ஆயின. வைசியர்களை ஆதிக்கத்துக்குக் கொண்டுவந்தன. ஒருகட்டத்தில் செல்வச்செழிப்பும் ஊழலும் மிகுந்து அவை மக்களிடமிருந்து அன்னியமாயின. வஜ்ராயனம் போன்ற ரகசியச்சடங்குகளும் காமக்கொண்டாட்டங்களும் மிகுந்த தாந்த்ரீக பௌத்தமதக்கிளைகள் செல்வாக்கு பெற்றன.
அச்சூழலில் உருவான சங்கரர் ஊழலில் மிதந்த பௌத்த -சமண மதங்களின் மேலாதிக்கத்தை எதிர்த்து ஒரு சமூகமாற்றத்துக்கு வித்திட்டார். அடுத்தகட்டத்து மக்களான சூத்திரர்களின் எழுச்சி சங்கரரின் சிந்தனையில் இருந்தே தோன்றியது. சூத்திரர்களின் மேலாதிக்கம் சைவத்திலும் வைணவத்திலும் உருவான பக்திஇயக்கம் வழியாகவே உருவானது. அதற்கு அடித்தளமிட்டது சங்கரரின் சிந்தனைகளே
சங்கரரின் காலகட்டத்தில் இந்துமதம் என்பது வைதிகமதமாகவே இருந்தது. வேள்விச்சடங்குகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் உடைய மதம் அது. பிராமணர்கள் அதன் தலைமைப்பொறுப்பில் இருந்தனர். இந்தியாவெங்கும் இருந்த பல்லாயிரக்கணக்கான பழங்குடித்தெய்வங்களும் வழிபாட்டுமுறைகளும் இந்துமதத்தின் அடித்தட்டில்தான் புழங்கின. மன்னர்கள் வைதிகமதத்தையே ஆதரித்தனர்.
சங்கரர் இந்துமதத்தை முழுமையாகவே மாற்றியமைத்தார். இந்துமதத்தில் இரு பெரும்பிரிவுகள் உண்டு. ஒன்று வேள்விகள் மற்றும் பூசைகள் ஆகியவற்றால் ஆன சடங்குகளின் அடுக்கு. இன்னொன்று உயர்தத்துவத்தால் ஆன அடுக்கு. வேதங்களிலேயே இந்த இரு அடுக்குகளும் உண்டு. முதல் அடுக்கு கர்மகாண்டம் என்றும் இரண்டாம் அடுக்கு ஞானகாண்டம் என்றும் அழைக்கப்பட்டது. மக்கள் மத்தியில் இருந்தது கர்மகாண்டம் மட்டுமே. ஞானம் குருகுலங்களிலும் துறவிகளிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்தது
சங்கரரின் பெரும்பங்களிப்பு என்பது பொதுத்தளத்திற்கு வந்து அங்கே கர்மகாண்டத்தை முழுமையாக நிராகரித்ததுதான். வேள்விச்சடங்குகளை அவர் முழுமையாகவே மறுத்தார். பூசைகள் பலிகள் போன்றவற்றை தூக்கி வீசும்படி அறைகூவினார். இந்துமதம் என்பது வேதங்களின் ஞானகாண்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்று அவர் வாதிட்டார். தூய அறிவே ஆன்மீகம் என்றும் நம்பிக்கையும் வழிபாடுகளும் சடங்குகளும் அல்ல என்றும் சொன்னார்
சாதாரணமான பார்வையில் சங்கரர் இறைமறுப்பாளர். அன்றைய எந்த இறைவனையும் ஏற்றுக்கொண்டவரல்ல. அவர் இறை என்று சொன்னது அறிதல்களாக நம்மை வந்தடையும் அனைத்துமாகி நிற்கக்கூடிய பிரபஞ்சம் தழுவிய ஒன்றை மட்டுமே. அதை வெளியே அறியவேண்டியதில்லை. இங்கு எல்லாம் இருக்கும் அனைத்தும் அதுவே அதுவே நான். ஆகவே என்னை நான் உணர்வதே இறையனுபவம்.
இறை என்பது வழிபடப்படவேண்டிய சக்தி அல்ல. மண்டியிட்டு மன்றாடவேண்டிய அரசனும் அல்ல. ஒவ்வொருவரும் தன்னுள் தான் என உணரக்கூடிய முதல்முழுமை மட்டுமே அது. தன்னை இறையென உணர்வதே இறையனுபவத்தின் உச்சம். அதையே அவர் பிரம்மம் என்கிறார். மற்ற அனைத்து இறைவடிவங்களையும் மனமயக்கங்கள் என்றே சொல்கிறார். அந்த மனமயக்கங்களை முன்வைக்கக்கூடிய மதங்களை நிராகரிக்கிறார்
இது எத்தனை பெரிய புரட்சி, எவ்வளவு பெரிய மீறல் என்பதை எவரும் உணரமுடியும்.அதற்காகவே சங்கரர் வைதிகர்களால் பழிவாங்கப்பட்டார் என்று தொன்மக் கதைகள் உள்ளன. அவரது அன்னையை சிதையேற்றக்கூட வைதிகர் வரவில்லை. அவரே தன்னந்தனியாக அதைச்செய்தார் என்கின்றன கதைகள். அவரை பலமுறை கொல்லமுயன்றதாகவும் அவர் தப்பியதாகவும் கதைகள் உள்ளன.
இந்திய சிந்தனைமரபை மேலோட்டமாக எழுதுபவர்கள் சங்கரர் பௌத்தர்களிடம் வாதிட்டவர் என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இந்திய ஞான்நூல்களை கொஞ்சமேனும் வாசிப்பவர்கள் சங்கரர் பிற இந்து மதப்பிரிவினரால்தான் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் என்பதை காண்பார்கள். சங்கரர் மறைந்து ஆயிரம் வருடங்களாகியும் கூட வைதிகர்கள் சங்கரரை மிகமிகக் கடுமையாக மறுத்து வசைபாடுவது நீடித்தது.
சங்கரர் இந்துமதத்தை பௌத்த தர்க்கங்களைக்கொண்டு அழிக்கவந்தவர் என்றும் ‘மாறுவேடமிட்ட பௌத்தர்’ [பிரச்சன்ன பௌத்தர்] என்று வசைபாடப்பட்டார்.’நீச சங்கரன்’ என்றே ஒவ்வொரு முறையும் குறிப்பிடும் மதமரபுகள் இன்றும் உள்ளன.
சங்கரர் இந்துஞானமரபில் உள்ள தூய அறிவை மட்டும் முன்வைக்கும் நூல்களை விரிவான புதுவிளக்கங்கள் வழியாக பரவலாக எடுத்துச்சென்றார். விளைவாக பிரம்மம் என்னும் கருதுகோள் வலுவாக நிறுவப்பட்டது. பிரம்மம் என்றால் ஒரு தத்துவ உருவகம் மட்டும்தான். இந்த பிரபஞ்சமாக நம்மைச்சூழ்ந்திருப்பது பிரம்மமே. இங்குள்ள அனைத்தும் அதன் வடிவங்களே. நாமும் பிரம்மமே.
இந்த பிரம்மம் என்னும் கருதுகோள் நடைமுறையில் வைதிகவேள்விகளுக்கு எதிரான பெரும் ஆற்றலாக மாறியது. அனைத்து பழங்குடித் தெய்வங்களையும் அது பிரம்மத்தின் வடிவங்களாக காணத்தொடங்கியது. சிவன் விஷ்ணு சக்தி போன்ற தெய்வங்களை பிரம்மத்தின் கணக்கூடிய தோற்றங்களாக விளக்கியது. அப்படியென்றால் அனைத்து சிறியதெய்வங்களும் அந்தப்பெரிய தெய்வங்களின் வடிவங்கள்தானே என்ற வாதம் உருவாகியது. விளைவாக சைவம் வைணவம் சாக்தம் ஆகிய மதங்கள் அனைத்து சிறுதெய்வங்களையும் உள்ளே இழுத்துக்கொண்டு பெரிய மதங்களாக வளர்ந்தன.
இப்படி மூன்று மதங்களும் வளர்ந்ததே பக்தி இயக்கத்தை உருவாக்கியது. தமிழகத்தில் உருவாகி வட இந்தியா முழுக்க பரவிய பக்தி இயக்கம் என்பது முழுக்கமுழுக்க சூத்திர ஜாதிகளின் எழுச்சியினால் ஆனது. தங்கள் தெய்வங்கள் ஒருங்கிணைக்கப்பட்டபோது சிறிய சூத்திரஜாதிகள் ஒற்றைபெரும்சாதிகளாக ஒருங்கிணைந்தன. இது சூத்திரர்கள் நிலவுடைமை கொள்ளவும் பேரரசுகள் அமைக்கவும் வழிவகுத்தது. தென்னகத்தில் பத்தாம்நூற்றாண்டுக்குப்பின் உருவான பெரும் பேரரசுகள் அனைத்துமே பக்தி இயக்கத்தால் எழுச்சி பெற்ற சூத்திரர்களால் உருவாக்கப்பட்டவைதான். கடைசியாக உருவான நாயக்கர் பேரரசும், மராட்டியப் பேரரசும் உட்பட.
இவற்றுக்கான தொடக்கம் சங்கரர்தான். அவர் வேள்விமதத்தை வென்று தத்துவமதத்தை முன்வைத்ததுதான். அதுவே அவரது பெரும் சாதனை. அத்துடன் சங்கரர் முன்வைத்த அத்வைத வேதாந்தம் என்பது அடிப்படையில் சமத்துவத்தைப் பேசுவது. கல் மண் புழு பூச்சி மானுடர் அனைத்துமே பிரம்மம்தான் என்றால் பிறவியில் உயர்வேது தாழ்வேது?
சங்கரர் பற்றிய ஒரு மிகப்பிற்காலத்துக் கதை அதைச் சொல்கிறது. தன் எதிரே வந்த ஒரு சண்டாளனை தள்ளிப்போ என்று சங்கரர் சொன்னாராம். ‘எது தள்ளிப்போகவேண்டும்? ஆன்மாவா பிரம்மமா?’ என்று அவன் கேட்டபோது அவர் அனைத்தும் பிரம்மமே என்ற ஞானத்தை அடைந்தாராம். [அந்த சண்டாளனே சிவபெருமான் தான் என்பது அடுத்தகட்ட உரை]
பின்னாளில் இந்தியா நவீன யுகத்தை எதிர்கொண்டபோது இந்தியஞானமரபின் பின்னணியில் இருந்து சாதி பேதங்களுக்கு எதிராக, மூடப்பழக்கவழக்கங்களுக்கு எதிராக, மனிதாபிமானமற்ற சடங்குகளுக்கு எதிராக கிளர்ந்து எழுந்துவந்த ஆரம்பகட்ட புரட்சியாளர்கள் ஏறத்தாழ அனைவருமே சங்காரை பின்பற்றிய அத்வைதிகள்தான். ராமகிருஷ்ண பரமஹம்ஸர், சுவாமி விவேகானந்தர், நாராயணகுரு போன்ற பல உதாரணங்களை இந்தியா முழுதிலும் இருந்து கொடுக்கமுடியும்.
ஆரம்பகட்ட தலித் போராளி அமைப்புகள் பல அத்வைதசபைகள்தான். அத்வைதானந்த சபை என்னும் அமைப்புதான் அய்யன்காளியை உருவாக்கியது. அயோத்திதாசர் சென்னை அத்வைத சபையுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். அத்வைதத்தின் புரட்சிகரத்துக்கு அதுவே சான்று.
எந்தப்புரட்சியாளனும் காலப்போக்கில் விளக்கங்கள் வழியாகவே திரிபுபடுவான். வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் அவனுடைய பங்களிப்பு திட்டவட்டமாக இருக்கையிலேயே அவனுடைய சிந்தனைகளின் அடிப்படையானது உரைகள் மூலம்படிப்படியாக மாற்றப்படும். சங்கரரின் நூல்களில் எல்லாம் சம்பந்தமில்லாத இடைச்செருகல்கள் உள்ளன.இருநூறாண்டுகளுக்குள் மார்க்ஸியத்துக்கு என்ன ஆயிற்று என நாம் அறிவோம். சங்கரர் வாழ்ந்தது 1200 வருடம் முன்பு
சங்கரர் மீதான திரிபுகளில் முக்கியமானது அவரை பக்தராகவும் சடங்குகளைச் செய்பவராகவும் திரித்ததுதான். தூய அறிவை கறாரான தர்க்கத்துடன் முன்வைக்கும் அவர் அழகின் உன்மத்தம் ததும்பும் ‘சௌந்தரிய லகரி’யை எழுதினார் என்று வரலாறு எழுதப்பட்டது. தன் நூல்களில் உலகியல் நோக்கங்களுக்காக செய்யப்படும் வேள்விகளை மிகமிகக் கடுமையாக நிராகரிக்கும் ஆதிசங்கரர் பொன்மழையை பெய்யவைக்க ‘கனகதாரா ஸ்தோத்திரம்’ எழுதினார் என்று சொல்லப்பட்டது. ஏன் அத்வைதத்தையே நிராகரிக்கும் ‘பஜகோவிந்தம்’ பாடலே அவர் எழுதியது என்கிறார்கள்.
இந்நூல்களின் மொழிநடையே அவை மிகப்பிற்காலத்தையவை என்று காட்டுகின்றன. அதாவது நம்மாழ்வார் பாரதியார் பாடல்களை பாடினார் என்பதுபோல. அவை வேறு சங்கரர்களால் எழுதப்பட்டவையாக இருக்கலாம். அதேபோல சங்கர மடங்களுக்கும் ஆதிசங்கரருக்கும் வரலாற்றுத்தொடர்பு ஏதும் இருந்திருக்க நியாயமில்லை. சங்கரரின் காலம் ஏழாம் நூற்றாண்டு அல்லது அதற்கும் முன் என்னும்போது அன்றிலிருந்தே இன்றுள்ள சங்கர மடங்கள் உள்ளன என்பதற்கு அவையே சொல்லும் ஆதாரமில்லாத வரலாறன்றி ஆதாரம் ஏதுமில்லை.
நான்கு சங்கரமடங்கள் [சிருங்கேரி, பதரி, பூரி,துவாரகை] மிகப்பிற்காலத்தில் சைவமும் வைணவமும் பெருமதங்களாக வளர்ந்தபின்பு, பெருங்கோயில்கள் எழுப்பப்பட்டபோது, ஆலயநிர்வாகத்துக்கென மன்னர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகள். சங்கரர் பெயருக்கிருந்த மதிப்பு காரணமாகவே அவை சங்கரரால் உருவாக்கப்பட்டவை என்று சொல்லிக்கொண்டன. அல்லது வேறு சங்கரர்கள் இருந்திருக்கலாம். தூய ஞானமார்க்கமான அத்வைதத்தை முன்வைத்த சங்கரர் ஆலயநிர்வாக அமைப்புகளை உருவாக்கினார், சடங்குகளை வரையறுத்தார் என்று நம்புவதுபோல மடமை இருக்கமுடியாது.
இந்தியாவின் அனைத்து மடங்களும் ஆலயநிர்வாக அமைப்புகள் மட்டுமே. சொல்லப்போனால் ஆலயச்சடங்குகளைச் செய்யும் சாதியினருக்கு மட்டும் உரிய குருபீடங்கள் அவை. ஆலயவழிபாட்டுச் சடங்குகள் மரபுமீறாமல் நிகழும்படி பார்த்துக்கொள்வதும், ஆலயச் சொத்துக்களை நிர்வகிப்பதும் அவற்றின் கடமைகள். மடாதிபதிகள் என்பவர்கள் அக்கடமைகளை செய்யும் நிர்வாகிகளும், ஆலயபூசகர்களுக்கான சடங்குசார் குருநாதர்களும் மட்டும்தான். அன்றும் இன்றும் அவர்கள் அதையே செய்கிறார்கள். அத்வைதம் என்னும் தூயஞானத்துக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை.
இந்தியாவில் சங்கரர் பேரில் தொடர்ந்து புராணங்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருந்திருக்கின்றன. சங்கரர் இந்தியாவின் சக்திபீடங்களை ஸ்தாபித்தார் என்கிறார்கள். இவை தவிர ஏராளமான கோயில்களில் யந்திரங்கள் சங்கரரால் நிறுவப்பட்டவை எனப்படுகின்றன. உதாரணம் கொடுங்கல்லூர் கோயில். கேரள நம்பூதிரிகளின் சாதியநெறிகளை வகுத்துச்சொல்லும் சங்கரஸ்மிருதி சங்கரரால் எழுதப்பட்டது என்கிறாரக்ள்.
இந்தத் தொன்மங்களெல்லாம் இன்று ஆய்வாளர்களால் முற்றாகவே உடைக்கப்பட்டுவிட்டன. குறிப்பாக இடதுசாரி ஆய்வாளர்களால். சங்கரர் ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர். அவர் தூய அறிவை மட்டுமே இறையாக முன்வைத்த அத்வைதி. அவரது நூல்கள் வேதாந்தம் என்னும் ஞானகாண்டத்தை மட்டுமே இந்துமரபின் சாராம்சமாக முன்வைப்பவை. அவர் சடங்குமதத்துக்கும் வேள்விமரபுக்கும் முழுமையான எதிரி.
சங்கரர் வைதிக மரபை எதிர்த்து பிரம்மம் என்னும் தத்துவக்கடவுள் கோட்பாட்டை முன்வைத்ததன் வழியாக இந்துமதத்தின் பன்முகத்தன்மையை மீண்டும் நிறுவினார். இந்தியாவின் பலநூறு நாட்டார், பழங்குடித் தெய்வங்களை மையமரபுக்குள் கொண்டுவந்து அதன்மூலம் பக்தி இயக்கம் உருவாக வழிகோலினார். அதன் மூலம் இந்திய அரசியலில், பண்பாட்டில், சமூகவியலில் அடித்தள மக்களின் ஒரு பேரெழுச்சிக்கு வழிவகுத்தார்.
ஆம், அவர் புரட்சியாளர்தான்.ஆனால் மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோருக்குச் சமமாக அவரை வைக்கவேண்டாம். இன்னும் 1100 வருடம் கழித்து மார்க்ஸும் எங்கல்ஸும் என்னவாக நினைவுகூரப்படுவார்கள் என்று பார்ப்போம். அதன்பின் தீர்மானிப்போம்