நான் பிரம்மசூத்திரத்தைப் பற்றி முதலில் கேள்விப்பட்டது பாரதியின் உரைநடையில். இடிப்பள்ளிக்கூடத்தில் பிரமராய வாத்தியாருடன் பாரதி பிரம்மசூத்திரம் சங்கர பாஷ்யத்தை வாசித்துக்கொண்டிருக்கும்போது அன்னிபெசண்ட் ஆதரவாளரான வேதவல்லி அம்மையார் வந்து அவர்களை நாடு பற்றி எரிகையில் வேதாந்தம் பேசும் கோழைகள் என்று வசைபாடி ஆண்களுக்கு திராணி இல்லாவிட்டால் வெள்ளைக்காரனிடம் பேசி சுதந்திரத்தைப் பெற பெண்கள் போகிறோம் என்றெல்லாம் எள்ளிநகையாடி, நாளிதழை மூஞ்சிமேல் தூக்கி வீசி செல்கிறாள்.
பாரதி தெரிந்துதான் அங்கே பிரம்மசூத்திரத்தை பேசுவதாக வைத்திருக்கிறார். ஏனென்றால் ‘முட்டவரும் காளையிடம் வேதாந்தம்பேசுவது’ போன்ற பழமொழிகள் அன்று இருந்தன. வேதாந்தம் என்ற சொல்லே வெட்டி விவாதம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது. ‘வீண்வேதாந்தம்’ என்ற சொல் இன்றும் உள்ளது.
இந்தியசிந்தனை மரபின் உச்சமான வேதாந்தம் அந்தவகையில் பார்க்கப்பட்டமைக்கான பல வரலாற்றுக்காரணங்கள் இருந்தன. ஒன்று, தொடர்ந்து ஐநூறு வருடங்களாக இந்தியா சந்தித்த படையெடுப்புகள், பண்பாட்டு அழிவுகள், பஞ்சங்கள் அனைத்தையும் எதிர்கொள்ள இந்தியாவுக்கு உதவியது வேதாந்தசிந்தனையும் விதிக்கொள்கையும்தான். வேதாந்தம் அறிவுத்தளத்திலும் விதிக்கொள்கை அன்றாட தளத்திலும்.
பிரபஞ்ச நிகழ்வும் அதன் துளியாகிய மானுடவாழ்க்கையும் கோடானுகோடி நிகழ்வுகளின் ஒட்டுமொத்தமாகப் பெருகிச்செல்லும் ஒரு ஓட்டம் என்றும் அது அறிவிற்கப்பாற்பட்ட ஒரு கனவு என்றும், அறிதற்கரிய உண்மையை நாம் நம் புலன்களாலும் அறிவாலும் நமக்குரிய வகையில் புரிந்துகொண்டு உருவாக்கிக்கொண்ட மாயை என்றும் அது சொன்னது. முதல்முழுமையான உண்மையை புரிந்துகொள்ளும்போதே அதன் ஒவ்வொரு கூறையும் உள்வாங்கிக்கொள்ள முடியும் என்று விளக்கியது.
ஆகவே கண்முன் காணும் துயரங்களெல்லாம் நாம் நம்மை அவற்றுடன் தொடர்புபடுத்திக்கொள்வதன் விளைவுகள் என வேதாந்தம் வாதிட்டது. அந்த தத்துவம் ஒருவகையில் நிலைபெற்ற மதியுடன் அன்றாட வாழ்க்கையை, கொந்தளிக்கும் புறவுலகை கடந்துசெல்ல உதவியது. விளைவுகளைப்பற்றிய பதற்றம் இல்லாமல் கடமையைச்செய்யவும் வழிகாட்டியது. ஆனால் இன்னொரு பக்கம் அது செயலின்மையாகவும் விளக்கப்பட்டது. ஒன்றும்செய்யாமல் சும்மா இருப்பதற்கான அறிவார்ந்த விளக்கமாக ஆகியது. வார்த்தைகளைப்பிடித்துக்கொண்டு வெட்டித்தர்க்கம் செய்ய பயன்பட்டது. ஆகவே வேதாந்தம் என்பது நடைமுறையில் சோம்பேறித்தர்க்கம் என ஆகியது.
ஆனால் புதிய இந்தியா விழித்தெழுந்தபோது அதை எழுப்பிய அறைகூவல் இந்தியசிந்தனையின் சாரமாகிய வேதாந்தம் வழியாகவே வந்தது. ராமகிருஷ்ணரும் விவேகானந்தரும் வேதாந்தத்தின் கனிந்த உச்சங்களே. நாராயணகுருவும் வேதாந்திதான். அய்யன் காளி வேதாந்திதான். இந்தியாவெங்கும் எழுந்த சமூக சீர்திருத்த இயக்கங்கள், சாதியொழிப்பு இயக்கங்கள் வேதாந்தத்தை நம்பியவையே. ஆம், செயலூக்கத்துக்கான அறைகூவலை அளித்தது வேதாந்தமே.
வேதாந்தத்துக்கான மூலநூல்கள் உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், கீதை என்று சொல்லப்படுகின்றன. கீதை பெரும்புகழ்பெற்றது. உபநிடதங்களில் முக்கியமானவை பரவலாக படிக்கப்படுகின்றன. பிரம்மசூத்திரம் பெரும்பாலும் வேதாந்திகள் மட்டுமே பயிலக்கூடிய நூல்.
அதன் வடிவமும் அத்தகையதே. அது ‘சூத்திர’ வடிவில் உள்ளது. அதாவது ஒரு சிந்தனையை விரிவாகவிவாதித்து ரத்தினச்சுருக்கமாக அதன் முடிவை மட்டும் முன்வைக்கும் வடிவம் அது. ஆகவே குருவின் உதவியுடன் விவாதித்து அறிவதற்கான முதல்நூலாகவே அதைக்கொள்ளமுடியும். ஆங்கிலத்தில் நவவேதாந்த மரபுகள் அனைத்துமே பிரம்மசூத்திரத்தை விளக்கமளித்து உரைகள் எழுதியுள்ளன. மலையாளத்தில் பிரம்மசூத்திரத்துக்கு நவீன உரைகள் பல உள்ளன. தமிழில் அனேகமாக நவீன நூல் ஏதும் இல்லை. அக்குறையை ஓரளவு தீர்க்கும் படைப்பு என அ.வெ.சுகவனேச்வரன் எழுதி கலைஞன் பதிப்பக வெளியீடாக வந்துள்ள பிரம்மசூத்திரம் மூலமும் உரையும் நூலைச் சொல்லலாம்.
பிரம்மசூத்திரம் வேதாந்த சூத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. பாதராயணர் இதை இயற்றினார் என்பது மரபு. அல்லது பாதராயண குருமரபின் ஆக்கம் என இதை எடுத்துக்கொள்ளலாம். மிகத்தொன்மையான நூல் இது என்பதற்கான ஆதாரங்கள் மொழியிலும் உட்குறிப்புகளிலும் உள்ளன. இது தொடர்ந்து செம்மைப்படுத்தப்பட்டிருக்கலாம். இந்நூல் 555 சூத்திர வரிகள் கொண்டது. இந்நூலுக்கு வேதாந்தத்தில் பிற்காலத்தில் எழுந்த கிளைகளை உருவாக்கிய அனைத்து தத்துவமேதைகளும் உரைகள் எழுதியிருக்கிறார்கள். சங்கரர், ராமானுஜர், மத்வர், வல்லபர், நிம்பார்க்கர் உரைகள் இன்றும் அந்தந்த ஞானமரபுகளால் பயிலப்படுகின்றன.
சுகவனேஸ்வரனின் இந்நூலின் முக்கியமான சிறப்பு அவர் இந்நூலைப் பயிலும் பொதுவாசகனை உத்தேசித்து எழுதியிருக்கும் நீண்ட தெளிவான முன்னுரை. வேதங்கள், உபநிடதங்கள், தரிசனங்கள் ஆகியவற்றை அவர் தெளிவாக வகுத்துச்சொல்கிறார். அந்த ஞானப்பின்னணியில் வைத்து பிரம்மசூத்திரம் என்றால் என்ன அதன் இடமென்ன என்று விளக்குகிறார். தொடர்ந்து பிரம்மம் பற்றிய வேதாந்தக் கருத்தை பிரம்மம், பிரம்மம் சகுணமா நிர்குணமா என்ற தலைப்புகளில் விவாதிக்கிறார்.
அதன்பின் சங்கரர், ராமானுஜர், மத்வர் மூவரும் முன்வைத்த வேதாந்த நோக்குகளையும் அவர்களின் உரைகளில் பிரம்மசூத்திரம் பேசப்பட்டிருக்கும் விதத்தையும் பற்றிய அறிமுகம் உள்ளது. இந்த முன்னுரைப்பகுதி இந்நூலை முழுமையாகப் புரிந்துகொள்ள மிகவும் உதவக்கூடியது. நேரடியான தெளிவான சமகாலமொழியில் எழுதப்பட்டிருக்கிறது இது.
உரையின் சிறப்பும் அதன் தெளிவான கறாரான நடைதான். பழைய வேதாந்திகளின் பிராமணக்கொச்சை கலந்த மணிப்பிரவாள நடை இல்லை. அதேசமயம் எளிமைப்படுத்துகிறேன் பேர்வழி என்று அசட்டுத்தனமாக பேசவுமில்லை. ஒரு நல்லாசிரியனுக்குரிய மொழிநடை. ‘அதாதோ பிரம்ம ஜிக்ஞாஸா’ என்ற முதல் சூத்திரத்தை விளக்கும்போது ‘அத: என்ற சொல் இங்கே இருப்பதனால் சில நிபந்தனைகளை பூர்த்திசெய்தபின்னரே பிரம்மத்தைப்பற்றிய விசாரணையைத் தொடங்கலாம் என்று விளக்குகிறார் சங்கரர்’ என்று எளிமையாக ஆரம்பிக்கிறது நூல்.
சுகவனேஸ்வரனின் நடை சென்ற ஐம்பதாண்டுகளில் உருவாகிவந்த நவீன உரைநடையை மிக நெருங்கியிருப்பதுதான் இந்நூலின் சிறப்பு என்று சொல்வேன். ‘புத்தியின் தொடர்பை ஏற்காவிட்டால் நிரந்தரமான அறிவுணர்ச்சியோ அறிவுணர்ச்சியின்மையோ ஏற்படும்‘ என்பதுபோன்ற வரிகள் இன்றையவாசகனுக்கு மிக நெருக்கமானவை.
வேதாந்த மூலநூல்களைக் கற்கும் ஆர்வம்கொண்ட வாசகர்கள், அதற்காக சற்று முயற்சி எடுத்துக்கொள்ளக்கூடியவர்களுக்கான நூல் இது. வேதாந்தத்தின் முழுமுதல் வினாவே ‘நாம் அறிவதெல்லாம் நம் அறிவின் சாத்தியங்களை மட்டும்தானே, அப்படியென்றால் அறியப்படுவதற்கு அப்பால் உள்ளது என்ன, அறிவாகி நம்மை அடைவது என்ன?’ என்பதுதான். அங்கிருந்து தொடங்குபவர்கள் வந்துசேருமிடம் வேதாந்தமே. எங்கே தொடங்கினாலும்.