சிட்டி, ந.சிதம்பரசுப்ரமணியம் நினைவு

மணிக்கொடி எழுத்தாளர்களான சிட்டி, ந.சிதம்பர சுப்ரமணியம் ஆகியோரின் நினைவுநாள் கூட்டம் வரும் மே பத்தாம் தேதி 10-5-2014 சனிக்கிழமை ஒய்.ஐ.எம்.ஏ குளிர்சாதன அரங்கம், மயிலாப்பூர், சென்னையில் நிகழவிருக்கிறது. நேரம் மாலை 5 30 மணி சிட்டி அவர்களின் மைந்தர் எஸ்.வேணுகோபாலன், சிதம்பரசுப்ரமணியனின் மைந்தர்கள் சி.நடேசன மற்றும் சி.சுந்தரம் ஆகியோருடன் எழுத்தாளர் கெ.ஆர்.நரசையா, கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், திருமதி நீலமணி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

*****

ந.சிதம்பர
சுப்ரமணியம்

ந.சிதம்பரசுப்ரமணியம் மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவர். மணிக்கொடியில் சிறுகதைகள் எழுதி கவனிக்கப்பட்டவர். தென்னக இசையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் தமிழ்நாவலான இதயநாதம் இவரது முக்கியமான ஆக்கம். மகாவைத்யநாதசிவனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது இது என்று சொல்லப்படுகிறது.

இந்நாவல் இன்றைய வாசிப்பில் இசையை இலட்சியவாதமாகக் காட்டும் ஒரு தன்விருப்புப் படைப்பு என்று தோன்றலாம். ஆனால் அன்றைய சூழலில் இசைக்கு தமிழ்ச்சூழலில் அத்தகைய இலட்சியவாத நிறம் இல்லை. அது பக்தி-கேளிக்கை என இரு கோணத்திலேயே பார்க்கப்பட்டது. இசையை இலட்சியவாதத்துடன் இணைப்பது என்பது ஐரோப்பிய மறுமலர்ச்சியின்போது உருவானது. கலைஞனின் கலையீடுபாடு ஒருவகை இலட்சியவேட்கை என்றும் அவனுடைய ஆளுமைச்சரிவுகள் எல்லாம் அந்தத் தேடலாலும் தத்தளிப்பாலும் உருவானவை என்றும் ஐரோப்பிய நவீனத்துவம் முன்வைத்தது. மொசார்த் அதன் ஒளிமிக்க முகமாக எழுந்துவந்தார்.

இசைக்கலைஞனை இலட்சியபிம்பமாக முன்வைக்கும் ழீன் கிறிஸ்தோஃப் [ரொமெய்ன் ரோலந்து] அக்காலத்தில் இந்தியாவில் மிக விரும்பப்பட்ட நாவல். ரோலந்துக்கு இந்தியாமேலும் காந்திமீதும் இருந்த பற்றும் அவர் இங்கே அறியப்பட்டமைக்கான காரணம். அன்றைய இலக்கியத்தில் பெரும் இலட்சிய அலையை உருவாக்கியவை ரொமெய்ன் ரோலந்தின் ழீன் கிறிஸ்தோஃப், விக்டர் ஹ்யூகோவின் லெ மிஸரபில்ஸ் போன்ற படைப்புகள். அவற்றில் ழீன் கிறிஸ்தோஃப் இந்தியா முழுக்க கலையை ஒருவகை இலட்சியவாதமாகக் காட்டும் படைப்புகளை உருவாக்கியது. தமிழில் அந்த அலையின் முதல் துளி என இதயநாதத்தைச் சொல்லலாம். மோகமுள் அதன் உச்சம்.

காந்திய இயக்க நாவலான மண்ணில்தெரியுது வானம் ஒருகாலகட்டத்தை சித்தரிக்கக்கூடிய குறிப்பிடத்தக்க படைப்பு. அக்காலகட்டத்தின் அலைக்கழிப்புகளையும் நம்பிக்கைகளையும் அந்நாவலில் காணமுடிகிறது.

சிட்டி
சிட்டி

சிட்டி என்ற பேரில் எழுதிய பெ.கோ.சுந்தரராஜன் மணிக்கொடியில் அங்கதக்கதைகள் பலவற்றை எழுதியிருந்தாலும் முதன்மையாக இலக்கிய வரலாற்றாசிரியராகவே கருதபப்டுகிறார். இலங்கையைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் அவர்களுடன் இணைந்து சிட்டி எழுதிய தமிழ்நாவல் நூறாண்டுவளர்ச்சி, தமிழ்ச்சிறுகதை வரலாறு ஆகிய நூல்கள் முக்கியமானவை. சிட்டி முக்கியமான பயணக்கட்டுரையாளரும்கூட. தி.ஜானகிராமனுடன் இணைந்து எழுதிய நடந்தாய்வாழி காவேரி குறிப்பிடத்தக்க நூல்.

என்க்குப்பிடித்த கதை சசாங்கனின் ஆவி ந.சிதம்பர சுப்ரமணியன் பாவண்ணனின் கட்டுரை

உஷாதீபன் இதயநாதம் பற்றி

ஆர்வி ந.சிதம்பரசுப்ரமணியம் பற்றி

முந்தைய கட்டுரைசங்கரப் புரட்சி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 75