கண்ணதாசன் கவிதைகள் பற்றிய உங்கள் சிறு ஆய்வு படித்தேன். ஒவ்வொன்றையும் நீங்கள் சொல்லும் போது ஆமாம் போடக் கூடியவாறு
மிக அழகாக தர்க்கரீதியாக சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் கட்டுரையின் மொழி நடையும் கருத்துச் செறிவும் வாசகர்களை உங்களின் எழுத்துடன் கட்டிப் போட்டுவிடும் திறன் வாய்ந்தவை, நல்லதொரு வாசிப்பு அனுபவம் தந்தததற்கு மிக்க நன்றி
அன்புடன்
ஸ்ரீரஞ்சனி
அன்புள்ள ஸ்ரீரஞ்சனி
நன்றி. கண்ணதாசனை வேறு எதற்காகவும் அல்லாமல் அவரது மொழியாட்சிக்காகவே வாசிப்பது என் வழக்கம். ஏதேனும் ஒரு தருணத்தில் கண்ணதாசனைப்பற்றி விரிவாக எழுதவேண்டும் என எண்ணியிருக்கிறேன்
ஜெ
ஜெ..
கண்ணதாசனில் புதுமை இல்லையென்பது உண்மை. ஆனால் ஒரு மாபெரும் பண்பாட்டின் நூலிழையாக அவர் பாடல்கள் ஓடுவது அழகு.
மாதங்களில் அவள் மார்கழி – ஒரு கணம் கண்ணனை நினைவுறுத்திச் செல்கிறது..
மாதவப் பெரியாழ்வார்; மன்னவர் குலத்தாழ்வார் – ஒரு கணம் ஆழ்வார்களின் சரித்திரத்தை நினைவுறுத்துகிறது.
முற்றிலும் ஒத்துக் கொள்ளக் கூடிய மதிப்பீடு.
உள்ளமெலா மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே நீ சிரிக்காயோ –
அழகெல்லாம் முருகனேங்கற மாதிரி..
பாலா
அன்புள்ள பாலா
கண்ணதாசனின் சினிமாப்பாடல்களில் அவரது மனத்தின் இசைத்தன்மையும் அவரது மொழியாளுக்மையும் மட்டுமே தெரிகின்றன. அபூர்வமாகவே உயர்கவித்துவம் தெரிகிறது. ஆனால் அவரது கவிதைகளில் தெரியும் கண்ணதாசன் இன்னமும் ஆழமான மரபுவழிப்பட்ட கவிஞர்
ஜெ
திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
கண்ணதாசன் பற்றிய உங்கள் கருத்து நன்றே. திரை உலகம் கண்ணதாசனை நிறைய ஆக்கிரமித்து விட்டதோ என்றே தோன்றுகிறது. மிகுந்த பிரயாசைப்பட்டே அவர் இந்த அளவேனும் திரைப் பாடல்களில் கவிதையை கொண்டு வந்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். ஒருவேளை அவர் திரை துறைக்கு வராமல் அல்லது மிக தேர்ந்த முயற்சிகளையே செய்திருந்தால், அல்லது இன்னும் கொஞ்சம் வாழ்ந்திருந்தால் வேறொரு பரிணாமம் அல்லது மிகு வீச்சுடைய கவிஞரை பார்த்திருக்கக்கூடுமோ என்று தோன்றுகிறது. ஆனால் கவிதை என்கிற அனுபவத்தை மிகச்சமானியனுக்கும் கொண்டு சேர்த்ததில் அவர் பங்கு நிறையவே இருக்கிறது.
அன்புடன்
ரமேஷ் கல்யாண்
அன்புள்ள ரமேஷ்
திரைத்துறைக்கு வந்தமையால்தான் கண்ணதாசன் அவரது உச்சங்களாஇ நோக்கிச் செல்ல முடிந்தது. அவரை வீழ்த்தியது அவருள் இருந்த செட்டியார்தான். ஜெயகாந்தனின் சுயசரிதையில் கண்ணதாசனைப்பற்றி வருகிறது. எப்போதுமே கண்ணதாசன் பலவகையான வணிக உத்திகளைப் பற்றியே எண்ணிக்கொண்டிருப்பார் என்றும் அதைப்பற்றி மட்டுமே பேசுவார் என்றும் ஜெயகாந்தன் சொல்கிறார். அவர் சொந்தபப்டம் எடுத்ததும் சில வணிக முயற்சிகளில் ஈடுபட்டதும்தான் அவரை சிக்கல்களுக்குக் கொண்டுபோயின. ஏனென்றால் அவர் நினைத்துக் கொண்டிருந்தது போல அவர் செட்டியார் அல்ல கவிஞர்
ஜெ
ஜெயமோகன் அவர்களுக்கு,
கவிஞர் கண்ணதாசன் பற்றிய கட்டுரை அருமை.வேறொன்றும் சொல்வதற்கு இல்லை.
இதை பற்றிய விவாதங்கள் வந்தால் மேலும் படிப்பேன்.
நன்றி.
அன்புள்ள
உத்தம நாராயணன் .ப.
கோவை.
அன்புள்ள உத்தம்
நன்றி. கவிஞர்களைப்பற்றி எத்தனை தூரம் பேசினாலும் தகுதியே
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்
உங்கள் கண்ணதாசன் பற்றிய கருத்துக்களை இப்போது வாசித்தேன். கண்ணதாசன் பாரதியைப்போல புதிய கவிமொழியை உருவாக்காமல் மரபின் தொடர்ச்சியாக அமைந்தார் என்று நீங்கள் சொல்வதைப்பற்றி நான் அதிகமாக ஒன்றும் சொல்வதற்கில்லை. என்னைப்போன்ற ஒரு சாதாரணரை விட நீங்கள் அதிகம் கவனித்திருப்பீர்கள். அதேபோல கண்ணதாசனே ஆகபெப்ரிய புகழை அடைந்தவர் என்பதைப்பற்றியும் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. வைரமுத்து கண்ணதாசன் அளவுக்கே விரும்பப்பட்ட வெறுக்கபப்ட்ட விவாதிக்கபப்ட்ட அதிக அங்கீகாரங்களை அடைந்த பாடலாசிரியர் என்பதே என் எண்ணம்.
ஆனால் நீங்கள் கண்ணாதாசனை பிரமிளுடன் ஒப்பிட்டு பிரமிளின் கவிதைகளில் உள்ள புதுமையம்சத்தை எடுத்துச்சொல்லியிருப்பது பொருத்தமானதென படவில்லை. பாரதி பிரமிள் போன்றவர்கள் தாங்கள் நினைப்பதையெல்லாம் எழுதும் சுதந்திரம் கொண்டவர்கள். அவர்களின் மொழித்திறனோ படைப்புத்திறனோ அமட்டுமே அவர்களுக்கு எல்லை வகுக்க முடியும். மாறாக கண்ணதாசன் வைரமுத்து போன்றவரக்ள் அந்த படத்தின் தேவைக்குள் நின்றபடியே எழுத முடியும். அவர்களின் கவிதைகளின் உள்ளடக்கம் பிறரால் தீர்மானிக்கப்படுவது. அவர்கள் அந்தபபடலை பாடிநடிக்கும் நடிகர்களுக்கு ஏற்ப அவற்றை அமைக்க வேண்டியிருக்கும். அது அந்தப்பாடலின் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும்
அத்துடன் அந்த படத்திஜ் இயக்குநர் [பலசமயம் தயாரிப்பாளர்] அந்த பாடலை அங்கீகரிக்க வேண்டும். இசையமைபபளாரின் இசைமெட்டு பாடலின் வடிவத்தை தீர்மானிக்கும். இவ்வாறாக ஒரு தூய கவிஞரின் படைப்பை பாடலாசிரியரின் படைப்புகளுடன் ஒப்பிடுவது நியாயமற்றது. ஒரு நாடக எழுத்தாளர் திரைக்கதை ஆசிரியர் கட்டுரையாசிரியர் விமரிசகர் ஆகியோர் முற்றிலும் வெவ்வேறானவர்கள். அவர்களின் எழுத்துக்களை ஒருவரோடொருவர் ஒப்பிடுவதென்பது நாயை பசுவுடனும் கோழியுடனும் ஒப்பிடுவது போன்றது. அவையெல்லாமே வளார்ர்பு உயிர்கள். ஆனால் வெவ்வேறானவை. [நான் குரசோவாவின் உவகையை கையாள்கிறேன்]
ஆகவே பாடலாசிரியர்களை கவிஞர்களுடன் ஒப்பிடலாகாதென்பது என் எளிய கருத்து
அன்புடன்
சிவா
அன்புள்ள சிவா,
இரு பிழைகள். ஒன்று நீங்கள் கண்ணதாசனை வெறும் பாடலாசிரியராக மட்டுமே எண்ணியிருப்பது. இரண்டு என்னுடைய கட்டுரையில் நான் அவரை பாடலாசிரியராக எடுத்துக்கொண்டிருக்கிறேன் என எண்ணிக்கொண்டது.
என் கட்டுரையில் அவரை அவர் எழுதிய கவிதைகளை வைத்தே மதிப்பிட்டிருக்கிறேன். பாடலாசிரியராக அல்ல. அக்கட்டுரையை கொஞ்சம் கவனித்து வாசித்தால் அது புரியும். ஒன்று, கண்ணதாசனின் யாப்பு குறித்த தகவல்கள். அவர் திரைப்பாடல்களில் யாப்பை கையாண்டவரல்ல. கவிதைகளிலேயே யாப்பை பயன்படுத்தியிருக்கிறார்.
இரண்டாவதாக அவரில் குமரகுருபரரின் செல்வாக்கு குறித்த குறிப்பு. அந்தச்செல்வாக்கு சினிமாப்பாடல்களில் உள்ளதல்ல ‘சிறுகூடற்பட்டியெனும் சிறுநகரை ஆள்கின்ற செல்வமலையரசி உமையே’ போன்ற போன்ற வரிகளில் உள்ளது அந்தச் செல்வாக்கு.
என்னுடைய கட்டுரை ஒரு கடிதம் ஆதலாம் இது வாசகர்களுக்கு தெரிந்திருக்கும் என்ற ஊகத்தில் எழுதப்பட்டுவிட்டது என்பது பிழைதான்
கண்ணதாசனின் சினிமாப்பாடல்களை விட கவிதைகளே அளவிலும் தரத்திலும் அதிகம். அவரது மாங்கனி போன்ற குறுங்காவியங்கள் அழகிய ஆக்கங்கள்.
மற்றபடி பாடலாசிரியர் கவிஞர் இலக்கிய விமரிசகர் என்ற எல்லைகளை எப்போதும் வரையறுத்துக்கோன்டே நான் எழுதுகிறேன் என்றே நினைக்கிறேன்
ஜெ
நமது பக்திப்பாடல் மரபு– ஒரு வரலாற்று நோக்கு