பருவமழைப்பயணம்-மழையில்லாமல்

இந்தவருடமும் எங்கள் பருவமழைப் பயணம் நடத்திவிட வேண்டுமென்று ஈரோடு வழக்கறிஞர் கிருஷ்ணன் சொன்னார். ஆனால் பருவ மழையைத்தான் காணவில்லை. வழக்கமாக ஜூன்மாதம் தொடக்கத்திலேயே தென்மெற்குப் பருவக்காற்று கேரளாவிலும் தேனி தென்காசி கன்யாகுமரி மாவட்டங்களிலும் மழையை அளிக்க ஆரம்பித்துவிடும். கேரளத்திலும் குமரியிலும் பெருமழை கொட்டும். பெரும்பாலான மலையாளிகளின் நினைவில் மழையும் பள்ளிக்கூடமும் இணைந்திருக்கும். காரணம் மழையில் நனைந்தபடித்தான் முதன் முதலாக பள்ளிக்கூடம் சென்றிருப்பார்கள். பள்ளி திறக்கும்போதெல்லாம் மழை. இம்முறை ஜூன் மாதம் ஓரிரு மழையுடன் அப்படியே பருவமழை பொய்த்தது. குற்றாலம் சாரல்பருவம் தொடங்கவேயில்லை. ஐந்தருவியில் கூட மழை இல்லை. எங்களூரில் அவ்வப்போது சிறிய மழை, எப்போதும் குளிர்காற்று. மழையை எதிர்பார்த்து பயணம் ஒத்திப்போடப்பட்டது.

ஜூலையில் கண்டிப்பாக மழை இருக்கும் என்றார்கள். ஆகவே ஜூலை நான்கு என்று தேதியை உறுதிசெய்தோம். ஆனால் விசாரித்தபோது எங்கும் மழை இல்லை. எங்கே செல்வது என்று குழப்பம். கெ.பி.வினோத்தின் மனைவி கடுப்பாகி பம்பாய்க்கு போங்கள், அங்கேதான் மழைபெய்கிறது என்று சொன்னதாக தகவல். நான், பேசாமல் மெர்காராவுக்குச் செல்வோம், மழை இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் மேகமாவது இருக்கும் என்றேன்.திட்டமிடாமலேயே நான் மூன்றாம்தேதி கோவை விரைவு வண்டியில் கிளம்பி ஈரோடு சென்றேன். ஈரோட்டில் நண்பர் விஜயராகவன் வீட்டில் தங்கினேன். காலையில் கிளம்பி அரச்சலூர் சென்று அங்கே ஒரு மலைக்கோயிலின் படிகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

மதியம் கிருஷ்ணன் ஒரு நாளிதழில் பீர்மேடு குமுளியில் மழைபெய்து பம்பை நதியில் வெள்ளம் என்ற செய்தியைப் பார்த்தார். உடனே பீர்மேட்டுக்கு கிளம்பிவிடுவோம் என்று முடிவாயிற்று.மாலை ஐந்து மணிக்கு வழக்கம்போல மாருதி ஆம்னி வண்டியில் நான், கிருஷ்ணன், கெ.பி.வினோத், சிவா, வழக்கறிஞர் செந்தில் ஆகியோர் கிளம்பினோம். இரவெல்லாம் தத்துவம் அரசியல் என்று பேசியபடியே சென்றோம். கம்பம் தாண்டியபின்னும் எங்கும் மழையோ சாரலோ இல்லை. காட்டுக்குள் காற்று ஓடும் ஒலியைக் கேட்டால்கூட ‘ஆகா, மழை!’ என்று எதிர்பார்த்து பரவசம் கொண்டு கூவிக் கொண்டிருந்தார் கிருஷ்ணன்.

பின்னிரவு இரண்டு மணிக்கு எங்கள் வழக்கமான முகாமான பீர்மேடு கிருஷ்ணசுவாமி கோயிலுக்குச் சொந்தமான விடுதிக்குச் சென்று சேர்ந்தோம். கேரள ஆலயங்களில் பெரும்பாலானவற்றில் முன்பு மன்னரோ அரச குலமோ வந்து தங்குவதற்காக நல்ல விடுதிகளைக் கட்டியிருக்கிறார்கள். இப்போது அவற்றை குறைந்தவாடகைக்குக் கொடுக்கிறார்கள். மிகச்சிறந்த பராமரிப்பும் நல்ல உபசரிப்பும் உள்ள விடுதிகள் அவை. கேட்டபோது இரண்டுநாள் முன்புவரை சிறிய மழை இருந்ததாகவும் இப்போது அதுவும் இல்லை என்றும் சொன்னார்கள். இந்தபருவமழை முற்றாக பொய்த்துவிட்டது.

சற்றே தூங்கிவிட்டு காலையில் எழுந்து அருகே உள்ள ஆற்றங்கரை வழியாக நடக்கச் சென்றோம். கிருஷ்ணன் அர்விந்த் எழுதிய குறிப்புகளை முன்வைத்து கென் வில்பர் மற்றும் சிந்தனைகளின் ஒருங்கிணைப்பு பற்றி கேட்க தொடர்ச்சியாக உரையாடியபடியே சென்றோம்.
சிறிய சிறிய மழைகளினால் பசுமையும் ஈரமும் இருந்தமையால் பீர்மேட்டுக்குரிய அட்டைகள் உயிர்கொண்டிருந்தன. ஆனால் சென்றதடவை போல படைபடையாக வந்து தொத்திக் கொள்ளவில்லை. ஆற்றங்கரைவழியாக சென்று ஆற்றின் சில்லிட்ட நீரில் குளிக்கலாமா என்று தயங்கி நின்றோம். வழக்கமாக சிவா எந்த நீரைக் கண்டாலும் சட்டையைக் கழற்றிவிடுவார். அவர் குளிப்பதைக் கண்டு படிப்படியாக மற்றவர்களும் குளித்தோம்.

திரும்பிவந்து பரோட்டா கடலைக்கறி சாப்பிட்ட பின் என்ன செய்வதென யோசித்தோம். கெபி என்று அழைக்கப்படும் புல்மேடு தேக்கடி அருகே உள்ளது. மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதி. அங்கே ஒருமுறை கிருஷ்ணனும் கும்பலும் சென்றிருக்கிறார்கள். ஆகவே இம்முறையும் அங்கு போக முயலலாம் என்று சொல்லி அதற்கு அனுமதிபெற தேக்கடிக்கே கிளம்பினோம். சென்றமுறை வந்தபோது அந்த சாலையெங்கும் பெரிய பெரிய அருவிகள் நேரடியாக தார்பரப்பின்மீது கொட்டிக் கொண்டிருந்தன. மலைகள் முழுக்க அருவிகள் வெள்ளித்தூண்களாக பளபளத்தன. இம்முறை வெறும் ஈரப்பசுமை இளவெயிலில் பளபளத்தது. கரியபாறைகளில் நீர் வழியும் வெள்ளிதுகில்கள் ஒளிவிட்டன.

தேக்கடியில் சுற்றுலாப்பயணிகள் அனேகமாக எவரும் இல்லை. காட்டிலாகா அலுவலகத்தில் அனுமதிகொடுக்க வேண்டிய அதிகாரிகள் எவருமே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். திரும்பி பீர்மேட்டுக்கே செல்ல ஆரம்பித்தோம். வரும்வழியில் ஒரு டீக்கடையில் மதியம் சாப்பிட்டபோது அங்கிருந்த ஒருவரிடம் இங்கே நல்ல இடம் ஏதாவது இருக்கிறதா என்று சிவா கேட்டார். பொதுவாக இப்படி கேட்பது அபாயகரமானது. மலைவாசிகள் ஏதாவது பெரிய கட்டிடத்தைத்தான் சொல்வார்கள். இயற்கை அழகு என்ற எண்ணமே அவர்கள் மனதில் இருக்காது. ஆனால் இந்த மனிதர் வேறுபட்டவர். பருந்துப்பாறைக்குப் போங்கள் என்று சொல்லி வழியும் காட்டினார்.

கான்கிரீட் சாலை போடப்பட்ட பருந்துப்பாறை அப்பகுதியின் மலை உச்சி. மலை ஏற ஏற பெரும் புல்வெளிகளும் புல்மேடுகளும் வர ஆரம்பித்தன. அவலாஞ்சிபோன்ற புல்லலைவெளி. மேகம் தவழும் புல்மலைகளுக்கு மேல் சென்று சேர்ந்தோம். வண்டியை நிறுத்திவிட்டு நீர் ஊறி ஊறி வழிந்த புல்பரப்பு வழியாக இறங்கி கீழே ஓடிய ஒரு காட்டாற்றுக் கரைக்குச் சென்று சேர்ந்தோம். அட்டைகள் அதிகமிருந்ததனால் குளிக்கவில்லை. மேகங்கள் மலையை மூடும்போது பெரும் மழை வரப்போகிறதென தோன்றும். ஆனால் மேகம் அப்படியே சிறு துளிகளுடன் கடந்துசென்று உடனே இளவெயில் வந்துவிடும். ஈரத்துடன் பச்சைநிற  அகல்களில் கண்ணாடிச் சுடர் போல இலைகள் எரியும்.

அந்தி இருள்வதுவரை பருந்துப்பாறையிலேயே இருந்தோம். அனேகமாக வேறு யாரும் இல்லை. இருட்டப்போகும்போது சில வண்டிகள் வந்தன. சொந்தமாக வாகனம் இல்லாமல் அங்கே செல்லமுடியாது. அப்படி வருபவர்களில் இளைஞர்கள் பெரும்பாலும் ஒருவகை குற்றகரமான மூர்க்கத்துடன் இருக்கிறார்கள். பெரும்பாலும் மூக்குமுட்ட குடித்துவிட்டு ஆட்டம்போடுகிறார்கள். கூச்சலிடுதல் கத்திஒருவரை ஒருவர் பிடித்துத்தள்ளி நடனமிடுதல் குப்பைகளை அள்ளி வீசுதல் ஆகியவையே அவர்கள் அந்த இடத்தை ‘என்ஜாய்’ செய்யும் முறைகள். அதைவிட மதுக்குப்பிகளை ஓங்கி மலைச்சரிவிலும் பாறைகளிலும் வீசி உடைத்து போடுதல். இப்பகுதிகளில் மிக அபாயகரமான விஷயமே இதுதான். வினோதின் காலை, செருப்பை மீறி, ஒரு கண்ணாடிச் சில்லு நன்றாக அறுத்துவிட்டது.  செந்தில் அங்கெல்லாம் சிதறிக்கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்து குப்பைத்தொட்டியில்போட்டார்.

புத்தமொஉதிய கார் ஒன்றில் நான்கு தமிழ்இளைஞர்கள் முழுப்போதையில் உரக்க ஆரன் அடித்தபடி புல்மேடுகளில் மிக அபாயகரமாக வண்டியை ஏற்றி கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். சில இடங்களில் நிறுத்தி நடனமாடினார்கள். அவர்களை விட்டு விலகி வெகுதூரம் தள்ளிச் சென்றுவிட்டோம்.

இப்படி கேவலமாக நுகர்வதில் தமிழர் மலையாளிகள் என்ற பேதம் இல்லை. ஆனால் தமிழர்களில் பொதுவாக இயற்கைமுன் வியந்துநிற்கும் மனநிலை ஓரளவுக்கு உள்ளது. ஆனால் இப்படிப்பட்ட எந்த இடத்திலும் நான் இன்றுவரை இயற்கையை ரசிக்கும் ஒரு மலையாளி இளைஞனை கண்டதே இல்லை. மலையாளிகளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. மலையாளிகளில் இருவகையினர்தான். ஆடம்பரமான கார் உயர்தர உடைகளில் வந்து காரை நிறுத்திவிட்டு ஸ்டீரியோவை அலறவிட்டபடி குடிப்பவர்கள். கார்களில் அப்பிக்கொண்டுவந்து குடித்துவிட்டு எடுத்ததற்கெல்லாம் சேர்ந்து ஊளையிட்டு ஆபாசமாக நடந்துகொள்பவர்கள்.

இரவு திரும்பி ஒன்பதுமணிக்கே தூங்கிவிட்டு மறுநாள் அதிகாலையில் எழுந்து வாகைமண் சென்றோம். விடியும்போது அங்கெ இருந்தோம். வாகைமண் புல்மேடு என்பது பலநூறு கிலோமீட்டர் பரப்புள்ள பசும்வெளி. அதுவே கேரளத்தின் உச்சி என்பார்கள். அங்கிருந்து செங்குத்தாக மலை இறக்கம் உள்ளது.ஆகவே ராணுவத்தினரின் கிளைடர் பயிற்சி அங்கேதான் நடக்கும். சென்றமுறை இங்கே வந்தபோது மழை கொட்டிக் கொண்டிருந்தது. ஆகவே புல்வெளிக்குள் அதிகதூரம் செல்ல முடியவில்லை. இப்போது புல்வெளியில் வெகுதூரம் சென்று மலைச்சரிவில் புல்லைப்பிடித்தபடி ஆழத்தில் இறங்கி மலைவிளிம்பு வரை போய் அமர்ந்திருந்தோம்.

இயற்கையில் ஈடுபடுவதென்பது இசை கேட்பதுபோலத்தான். அது எளிய விஷயம் அல்ல, அதற்கு ஒரு மனப்பயிற்சி தேவை. பெரும்பாலானவர்கள் இசை கேட்கும்போது முதல்சில வரிகளை கேட்டு ஆகா என்பார்கள். உடனே கவனம் வேறு வேறு விஷயங்களில் சிதறிச் சென்றுவிடும். இயற்கையழகின்முன் செல்லும்போதும் உடனே ஒரு பரவசம் வரும். சில கணங்களில் மனம் பொறுமையிழந்து அலைபாயும். மனம் ஏதேதோ சில்லறை நினைப்புகளில் அலையும். உண்மையில் அந்த முதல் சில கணங்கள் மட்டுமே நாம் இசை அல்லது இயற்கையை அறிகிறோம்.

எமர்சனின் இயற்கை என்ற கட்டுரையை நான் மொழியாக்கம் செய்திருக்கிறேன் [தமிழினி வெளியீடு] அதில் இதைப்பற்றி எமர்சன் விரிவாகவே பேசுகிறார். இயறகை முன் நம் அகங்காரம் அழிகிறது, ஆனால் சிலகணங்களிலேயே அது முன்னைவிட தீவிரமாக எழுந்துவிடுகிறது. இயற்கையில் இருக்க நித்ய சைதன்ய யதி ஒரு வழிமுறையைச் சொல்லி தந்தார். அதை நான் என் நண்பர்களிடம் சொல்லி அவர்களும் அதை மிகவும் விரும்பினார்கள். ஒரு மனப்பயிற்சிதான். ஒன்று மிக அழகான ஒரு இடத்தில் வசதியாக அகர்ந்து கொள்ளவேண்டும். இருபது நிமிடங்கள் எவரும் எதுவும் பேசக்கூடாது. கண்களால் பார்வையின் ஒரு எல்லை முதல் மறு எல்லைவரை உள்ள காட்சியை அணுவணுவாக பார்க்க வேண்டும். பரபரவென்று தலையை திருப்பி பார்க்கவோ பார்வையை அலையவிடவோ கூடாது. ஒரு புள்ளியை ஐந்து நிமிடம் வரை கூர்ந்து நோக்க வேண்டும்.

எளிதாக தோன்றலாம்.செய்துநோக்கினால் இது எத்தனை கஷ்டமென்று தெரியும். தியானம் கலைவதுபோலவே மனம் வேறு எண்ணங்களை நோக்கி கலைந்துசெல்லும். அதை மீண்டும் மீண்டும் இழுத்து அக்காட்சியிலேயே நிலைநாட்ட வேண்டும். அதன் நுண்மையான தகவல்களையெல்லாம் மனதுக்குள் கொண்டுவர முயலவேண்டும். வழுக்கி வழுக்கிச் செல்லும் பிரக்ஞையை நிலை நிறுத்துவது எளிய செயல் அல்ல. அதற்கு தடையாக இருப்பவை இரண்டு. ஒன்று காட்சிகளை சொற்களாக ஆக்கும் நம் இயல்பு. ‘எவ்வளவு அழகாக இருக்கிறது’, ‘மகத்தான காட்சி’ இவ்வாறெல்லாம் அகத்தே சொல்லிக்கொள்வது. [இதை சப்தாகரண விருத்தி என்கிறது மரபு] இன்னொன்று காட்சிகளை முன்காட்சிகளுடன் அல்லது முன் நினைவுகளுடன் இணைத்துக் கொள்ளுதல். ‘இதேபோன்ற இடம் ஊட்டியில் இருக்கிறது’, ‘இதைப்பார்த்தால் நாராயண் மிகவும் மகிழ்வானே’ இவ்வாறு ஒப்பிடுதல், இன்னொரு நினைவுக்குச் செல்லுதல். [ததாகரணவிருத்தி] இவ்விரண்டையும் முடிந்தவரை நீக்கி தொடர்ந்து அக்காட்சியை மட்டுமே கண்களிலும் கருத்திலும் நிறுத்த முயல்வதுதான் பயிற்சி.

இவ்வாறு ஓர் இயற்கைச்சூழலில் இருந்தவர்கள் அவ்வனுபவத்தை மறக்க முடியாது. திரும்பிவந்தபின் மெல்ல மெல்ல பயணத்தின் காட்சிகள் கலைந்து சிலச்சில துணுக்குகளாக நினைவில் எஞ்சும்போது இந்த இருபது நிமிடம் மட்டும் அப்படியே நினைவில் கனவுபோல தங்கி அழியாமலிருப்பதைக் காணலாம். இருமுறை வாகமண் புல்பரப்பில் அப்படி இருபது நிமிட விழித்தியானத்தைச் செய்தோம்.

வாகமண்ணில் மதியம் சாப்பிட்டுவிட்டு அருகே இருந்த குரிசுமலைக்குச் சென்றோம். கிறித்தவர்களின் புனித தலம். அங்கே குன்றின்மீது சிலைகளை நிறுவியிருக்கிறார்கள். அங்கிருந்தபோது இருமுறை மழைவரும்போல இருண்டு ஏமாற்றியது. எங்கள் இரண்டுநாள் பயணம் முடியப்போகிறது, மழையைக் காணாமலெயே என்று எண்ணியபோது கீழே இருந்து அலையலையாக மேகம் ஏறிவத்து மழை கொட்ட ஆரம்பித்தது. மழைச்சட்டையை போட்டுக் கொண்டு கொட்டும் நீர்த்தாரைகளின் வழியாக மூன்று கிலோமீட்டர் நடந்து இறங்கினோம்.

அன்று மாலையே கிளம்பி பின்னிரவில் ஈரோடு வந்தோம்.வரும் அவ்ழியில் வண்டிப்பெரியாற் அருகே ஒரு பெட் ரோல் பங்கில் அந்த காரைக் கண்டோம். குடித்துவிட்டு ஓட்டிய பையன்கள் அதை பக்கவாட்டில் சரித்து விட்டிருக்கிறார்கள். ஒருபக்கமே நொறுங்கி வண்டி கலகலத்துவிட்டிருந்தது. பையன்களுக்கு நல்ல அடி என்றார்கள். நான் அப்பேச்சுகளில் கவனித்த ஒரு விஷயம், பேசிய எவருக்குமே அவர்கள் மேல் அனுதாபம் இல்லை என்பது. குடித்துவிட்டு ஓட்டியவர்கள் சாகட்டுமே என்ற பாவனை, நல்லவேளை வேறு ஆட்கள் மேல் மோதவில்லை என்றார் ஒருவர். அவரும் குடிப்பவராக இருக்கக் கூடும். ஆனாலும் நம் சமூகத்தில் குடிமேல் அபப்டி ஒரு கசப்பு இருக்கிறது. இந்த மனநிலை புரியவில்லை

ஈரோடு வரும்போது பெரிய குளத்தில் நின்றோம். ஒரு குடிகாரர் வந்து மலையாளத்தில் அவர் ஒரு மலையாள ஆசிரியர் என்றும் இப்போது நோயுற்று அனாதையாக இருப்பதாகவும் சாப்பிட பணம் தரும்படியும் சொன்னார். கிருஷ்ணன் பணம்தரமுடியாது போ என்று தமிழில் சொன்னதும் ஆங்கிலம் என அவர் நினைத்த ஒரு மொழியில் சரமாரியாக பேசி ‘நான் என் கல்வியை விற்க மாட்டேன். என்னிடம் பணம் இல்லை கல்வி இருக்கிறது’ என்றார். தமிழர்களுக்கு வேறு மலையாளிகளுக்கு வேறு என்று உத்தி கைவசம் வைத்திருக்கிறார்!. அவரிடம் ஏற்கனவே ஒரு டிபன் பொட்டலம் இருந்தது. அதைக் கவனித்தபோது ”டிபன் யாருக்கு வேண்டும்? நான் கேட்பது பணம். எனக்கு மருந்து வாங்க பணம் வேண்டும்”என்றார்

நான் ”பணம் இல்லை போய்யா” என்றேன். ”நீ பேசாதே. நீ வேலைக்காரன். அவர் முதலாளி,அவர் சொல்லட்டும்”என்று என் மண்டையை தட்டினார். கிருஷ்ணன் பெர்முடாஸ் அணிந்திருந்ததுதான் காரணம் என நான் ஊகித்தேன். கிருஷ்ணன் ”போய்யா”என்றதும் விலகி நின்று கொஞ்ச நேரம் வசைபாடினார். ஈரோட்டுக்கு வந்துசேரும்போது இரண்டரை மணி

மறுநாள் காலையில் எழுந்து நண்பர்களுடன் காவேரியில் தடுப்பணை கட்டப்பட்டுள்ள கரணம்பாளையத்துக்குச் சென்றேன். அருகே இருந்த தோப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். கிருஷ்ணன் அப்போதுதான் ‘வில் துரந்தி’ன் ஸ்டோரி ஆ·ப் ·பிலாசபி படித்துக் கொண்டிருந்தார். அதைப்பற்றிய ஐயங்கள் விவாதங்கள். துராந்த் தத்துவம் பற்றி கொடுக்கும் விளக்கமும் கருத்தும் மிகச் சாதாரணமாகவும் அற்பமாகவும் இருப்பதாக கிருஷ்ணன் கருதினார்.

காவேரியில் நீர் பெருகிச் சென்றுகொண்டிருந்தது. தடுப்பணை மேல் நீர் பெருகி நுரை எழ வளைந்துவிழும் காட்சி அற்புதமாக இருந்தது. அருகிலேயே ஒரு திறந்தவெளிப் பரிசல் தொழிலகம். கூட்டம்கூட்டமாக மக்கள் பெரிய பாத்திரங்களில் கூட்டாஞ்சோறுடன் பரிசலில் எறி மறுகரைக்குச் சென்று கொண்டிருந்தார்கள். குலதெய்வ வழிபாடு போல. அங்கேயே ஒரு ஓட்டலில் சாப்பிட்டோம். மீன்குழம்பு மட்டும்தான். நன்னீர் மீன். கடல்மீனிலிருந்து வித்தியாசமான சுவை கொண்டது.முதலில் சப்பென்ன்று கொழகொழவென்று இருக்கும்.கடல்மீனும் வாசனையும் இருக்காது. சற்றே தின்றபின் சுவையாக மாறும்.

மாலை வழக்கம்போல பத்து நண்பர்கள் சேர்ந்து அருகே உள்ள வள்ளிபுரத்தான்பாளையம் கிராமத்துக்குச் சென்றோம். அங்கே கரும்புவயல்களுக்கு நடுவே நடந்தபடி பாரதிபற்றி பேசிக் கொண்டு ரயில்நிலையம் சென்று அமர்ந்திருந்தோம். இரவு எங்கள் வழக்கமான டீக்கடையில் இட்லி தோசை சாப்பிட்டுவிட்டு திரும்பினோம். பத்துமணிக்கு நாகர்கோயிலுக்கு ரயில். ரயில்நிலையத்துக்கும் நண்பர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். இன்னொரு பயணம் பற்றி பேசிக்கொண்டு கிளம்பினேன்.

அவலாஞ்சி

சென்னையில்….

திருவாரூர் பயணம்– அரசுப் பேருந்து

பயணம்

மூன்று சிறுத்தைகளும் ஒரு புலியும்

முந்தைய கட்டுரைவசைப்புரட்சி
அடுத்த கட்டுரைகாய்கறி அரசியல்:கடிதங்கள்