சு.வேணுகோபாலின் மண் 2

சு.வேணுகோபாலின் புதியகதைகள் அடங்கிய பெருந்தொகுப்பான வெண்ணிலை தமிழில் வெளிவந்த மிக முக்கியமான சில சிறுகதைத்தொகுதிகளில் ஒன்று. ஒரு லௌகீக முதியவனுக்கே உரிய பார்வையைக் கொண்டவை இக்கதைகள் என இந்நூலின் அட்டைக்குறிப்பு மிகச்சரியாகவே இக்கதைகளை  அடையாளம் காட்டுகிறது. வேணுகோபாலின் ஆரம்பகாலக் கதைகளில் இருந்த வடிவசிதறல்கள் இல்லாமல் துல்லியமான யதார்த்தவாதச் சிறுகதைகளாக உள்ளன இவை.

 

தமிழில் பலவகையான வடிவச்சோதனைகள் நிகழும் இக்காலகட்டத்தில் எந்தவகையான சோதனைகளும் இல்லாமல் நேரடியான வாழ்க்கைச்சித்தரிப்பு காரணமாக, யதார்த்தத்தின் உக்கிரம் காரணமாக, அழுத்தமான கலைப்படைப்புகளாக ஆகும் பல கதைகள் கொண்ட இத்தொகுப்பு தமிழில் சமீபத்தில் எழுதப்பட்ட ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும். சிறந்த உதாரணம் ‘தீராக்குறை’ கனகச்சிதமான வடிவ அமைதி கொண்ட இக்கதை அதற்காக செயற்கையான எந்தச் செதுக்குதலையும் மேற்கொள்ளவில்லை. கைவிடப்பட்ட ஒரு கிராமத்துப்பாட்டியின் குரலாக சரளமாக ஒலித்துச் செல்கிறது இது

 

அட. யாரோ நிக்கிறாங்கனில்ல நெனச்சேன். வாடா ராசா இப்பிடி உக்காரு. நிழலாட்டமா தெரிஞ்சது. இப்ப ஆள் அடையாளம் முன்ன மாதிரி தெரியமாட்டேங்குது. நல்லா உக்காரு மகனே. சின்னத்தாயி! எந்தங்கச்சி பையன் சின்னத்தாயி. பெரியம்மாள பாக்கணும்னு இந்த வேணாதி வெய்யில்ல வந்திருக்கு. போனவருஷம் நான் ஆபரேசன் பண்ணுவதை கேள்விபட்டதும் இவந்தான மொத ஆளா ஓடிவந்தான். இப்பிப்பா இந்த மேங்காலும் ஊதிக்கிடுது. ஏ யப்பா மகனே. ஒரு வாயி சாப்புடுறயாடா கண்ணு? எங்க சாப்பிட்ட?

 

 

 

 

 

 

என்று பாட்டியின் குரல் மட்டுமே கதைக்குள் ஒலிக்கிறது. ஒவ்வொரு உரையாடல்துணுக்குக்கு அடியிலும் பாட்டி முன்னால் நிற்கும் கதைசொல்லியின் சங்கடம் மிக்க மௌனம் இருக்கிறது .அதுதான் இக்கதையின் மௌனப்பகுதி. இருவகையில் அந்த மௌனம் பொருள்படுகிறது. சமூகத்தின் நம்பமுடியாத குரூரத்தைக் கண்டதன் அதிர்ச்சி. இயற்கையின் பிரம்மாண்டமான குரூரம், வலிமையற்றது கைவிடப்பட்டு அழியத்தான் வேண்டும் என்ற யதார்த்தத்தை கண்டதன் பிரமிப்பு.  கதை முடிவில் பாசம் கௌரவம் அனைத்தையும் இழந்து அடிவயிற்றுப் பசியே நெருப்பாக எரிய அந்த அன்னையின் குரல் ஒலித்து முழயும்போது  பலதளங்களுக்கு நகரும் அந்த மௌனம் வாசகனிடமும் நிறைந்துவிடுகிறது

எம் மவன் வீட்டுக்குப் போயிட்டுப் போறாயா? ஏம்பா போறயா?எம் மவனப் பாத்துச் சொல்லுப்பா. ஒனக்கொரு புண்ணியமாகட்டும். மாசத்துக்கு ஆளுக்கு ஒரு நூறு ரூவா தரச் சொல்லுப்பா. இல்லையன்னா ஒரு வாயி கஞ்சி ஊத்தச் சொல்லுப்பா. அந்தா அந்தத் திண்ணையோரமா நின்னு வாங்கிட்டுப் போயிடுறேன்.

 



 

தன் ஆரம்பகாலக் கதைகளில் சு.வேணுகோபால் புறவயமான யதார்த்ததைச் சித்தரிக்கும்போது ஒருவகையான தாவித்தாவிச் செல்லலை கடைப்பிடிக்கிறார். இவற்றையெல்லாம் இவர் ஏன் சொல்கிறார் என்ற எண்ணம் வாசகனுக்கு வந்தபடியே இருக்கும். கதைமாந்தரின் புறச்செயல்பாடுகளை சாதாரணமாகச் சொல்லிக்கொண்டே போகும் அவரது கதைகள் தற்செயலாக கைபடுவதுபோல அக ஆழத்தின் நுண்ணிய நரம்புகளை தீண்டி விலகும். இத்தொகுப்பின் கதைகளில் வேணுகோபால் அழுத்தமான வடிவப்பிரக்ஞையுடன் தன்னுடைய இந்த இயல்பை கலை உத்தியாக ஆக்கியிருக்கிறார்

 

உதாரணமாக உயிர்ச்சுனை என்ற கதை. குழந்தை ஒன்றின் சாதாரணமான அன்றாடச்செயல்பாடுகள் வழியாகவே செல்கிறது இக்கதை.  அக்குழந்தை ஏன் இக்கதையில் வருகிறது என்பதற்கான நேரடி விளக்கம்  எங்குமே இல்லை. ஒருகாலத்தில் ஏரிகளை நிறையச்செய்து மண்ணில் நீர் ததும்பச்செய்து விவசாயம் செய்த குடும்பம். மின்சாரம் வந்து ஆழ்துளைக்கிணறுகள் உருவாகி மண்ணை ஒட்ட முலையுறிஞ்சி குருதியுறிஞ்சி காயவைத்துவிட்டிருக்கிறது நவீன காலகட்டம். மேலும் மேலும் மண்ணைத்துளைத்து செல்கிறார்கள். ஒருகட்டத்தில் மண்ணின் ஆழத்தில் இருந்து எரியும் வெம்மையுடன் ஆவிதான் ஏறி வருகிறது. ஆனாலும் வேறுவழியில்லை. வாழ்க்கை அந்த மண்ணுடன் கட்டிப்போடப்பட்டிருக்கிறது

 

ஆழ்துளைக்கிணறை மேலும் ஆழமாக்க முயலும்  அந்த குடும்பத்தின் ஒரு நாள்தான் இக்கதை. குடும்பமே அந்த குழாயில் வரும் நீரை நம்பித்தான் எதிர்கால வாழ்க்கையை  உத்தேசித்திருக்கிறது. கடைசிப்பைசாவையும் கொடுத்துத்தான் துளை போடுகிறார்கள். அநத நம்பிக்கை குரூரமாக சிதையும் இடத்தில் முடிகிறது கதை. கண்ணீருடன் விரக்தியுடன் கானல் பறக்கும் மண்ணைப்பார்க்கிறார்கள்.

 

 

அந்தக் கதைச்சித்தரிப்புக்குள் தான்  நிதீன் என்ற குழந்தை அதன் இயல்பான ஆவலுடன்  உலவுகிறது. குழாய்போடுவதும் சரி நீர் வராததும் சரி அதற்கு ஒருவகை விளையாட்டாகவே  இருக்கிறது. ஆனால் இந்த நிலத்தில் அவர்கள் கடைசிவரை உறிஞ்சி எடுப்பது நிதீனுக்கும் சொந்தமான நீர் என்று எண்ணினால் இந்தக்கதை சட்டென்று பல படிகளுக்குச் செல்கிறது. அவர்கள் துளைத்துச் செல்வது அந்த மண்ணில் மட்டுமல்ல அவனுடைய எதிர்காலத்திலும்கூடத்தான்!

 

எப்பிள்ள கல்யாணம் நின்னாலும் பரவாயில்ல. எம் பேரன்… கூகாளியம்மா இது நியாயமா? வாய்க்கால் தண்ணி வல்ல தாத்தான்னு சொன்னப்பயே என் நெஞ்சு வெடிச்சிருக்கணும். மாப்பிள்ளை வந்தா பணத்துக்கு என்ன பதில் சொல்றது. எம் பேரனுக்காக எந்த சாமியும் கண்ணத் தொறக்கலயே?’ வார்த்தைகள் தெளிவில்லாமல் குழறின. அவருக்கு குப்பென வேர்க்கத் தொடங்கியது. மூலைக்கு ஒருவராக சுருண்டு படுத்துக் கிடந்தனர்.

 

என்ற வரியில் நுட்பமாக இந்தக்கதையில் நிதீனின் இடத்தை அடையாளம் காட்டுகிறார் சு.வேணுகோபால் இருபெண்களில் ஒரு பெண்ணின் திருமணத்திற்கான பணத்தை எடுத்து இந்த ஆழ்துளையைப்போடுவது கணவனால் மகனுடன் பிறந்தவீட்டுக்கு அனுப்பபட்டிருக்கும் மூத்தமகளை திருப்பி அனுப்பி அவள் வாழ்க்கையை அமைப்பதற்காகத்தான். அந்த புள்ளி நோக்கித்தான் கதையை கொண்டு வருகிறார் ஆசிரியர். அதற்காகவே கதையை அக்குழந்தையில் இருந்து ஆரம்பிக்கிறார்.

 

வேணுகோபாலின் நடை எழுத்தாளனுடையதல்ல. விவசாயியினுடையது. தமிழின் முக்கியமான கலைஞனாக அவரை நிலைநாட்டுவதே இந்த அம்சம்தான். அவர் எப்போதுமே கதைக்களனை வருணிப்பதில்லை, ஒரு விவசாயி அளிக்கும் நேரடி அறிக்கையை அளிக்கிறார். அவர் அளிக்கும் தகவல்கள் எப்போதுமே விவசாயியால் கண்டடையப்படுபவை. ஒருமுறை பேருந்தில்செல்லும்போது ஒரு வரண்ட ஏரியைக் கடந்துசென்றோம். நாந் அந்த ஏரியின் வெடித்த சருமத்தை முதுமையின் சருமம் போல ஒரு மாபெரும் சிலந்தி வலைபோல எண்ணிக்கொண்டேன். அந்த வலைநடுவே ஒரு மாடுமேய்க்கும் பெண் மாட்டிக்கொண்டிருப்பவள் போல அமர்ந்திருந்தாள்.

 

ஆனால் என்னருகே அமர்ந்திருந்த விவசாயி தனக்குள்ளாக ‘எளவு முள்ளுமுல்லா காஞ்சு போச்சு” என்றார். அப்போதுதான் ஏரிக்கரை அருகே நின்ற கருவேலங்களும் காய்ந்திருப்பதைக் கண்டேன். நான் கண்டதைவிட பெரிய வரட்சியை அவர் கண்டிருக்கிறார் என உணர்ந்தேன். சுமார் நூறடி ஆழத்தில்கூட நீரில்லை என்பதை அந்த மரம் அவருக்குக் காட்டிவிட்டிருந்தது! இதுதான் எழுத்தாளனின் பார்வைக்கும் விவசாயியின் பார்வைக்கும் இடையே உள்ள வேறுபாடு.

 

 

வெயில் முகத்தில் உறைக்கத் தொடங்கியது. நிலச்சூடு ஏறுபொழுதிலேயே கிளம்பிவிட்டது. ஏகமாக காய்ந்து கிடக்கும் நிலம். தூரத்தில் எருமை மாட்டை யாரோ வெயிலில் ஓட்டிக் கொண்டு போகிறார். திரிவேணி ஒடை பயங்கர பள்ளத்தில் கிடந்தது. மணலே கிடையாது. வெள்ளைச் சட்டுப்பாறைதான் தெரிந்தது. அகன்று போகும் கிணறுபோல ஓடை. ஏழெட்டு வயதில் பிருந்தாவும் மீனாவும் ஓடையில் புதுவெள்ளம் போனால் துணிகளை அலச வந்ததுண்டு. ஓடையில் பத்துநாள் வெள்ளம் போனால் பதினோராவது நாள் கிணற்றில் கெத்துக்கெத்தென நீர் தளும்பும். இப்போது ஐந்து நாள் வெள்ளம் போனால் கூட கிணற்றுச் சுவரிலிருந்து ஒரு சொட்டு சொட்டுவதில்லை. டவுனுக்கு லாரிலாரியாக மணலை அள்ளிக் கொண்டு இங்கிருந்துதான் போனார்கள்.


இப்போது ஓடை இருபதடி பள்ளத்தில் கிடக்கிறது. ஊழிக்குச்சியைப் பிடித்து ஏசலான இறக்கத்தில் இறங்கினார். கண்ணப்பர் நாய் இறைக்கத் தொடங்கியது. நாக்கு நுனியில் எச்சிலின் மினுமினுப்பு தெரிந்தது…” என ஒருவகையான கறார் தன்மையுடன் நீள்கிறது வேனுகோபாலின் சித்தரிப்பு

 

வெண்ணிலை தொகுப்பின் முக்கியத்துவம் என்னவென்றால் அது சாதாரணமாக தமிழ் புனைகதைகள் தீண்டாத பல இடங்களை தொட்டுச்செல்கிறது என்பதே. தமிழ்ச்சிறுகதைகள் ஆசிரியனின் அகப்பயணங்களாக ஆகி பல ஆண்டுகளாகின்றன. புற யதார்த்தங்கள் மேல் நேரடியாக கலைஞனின் பார்வை படுவதே அபூர்வமென ஆகிவிட்டிருக்கிறது. புற யதார்த்தங்கள் கட்சிக்கொள்கைகள் மனிதாபிமான கோஷங்களாக மாறியே எழுத்தாளனை வந்தடைகின்றன. அவை கலையாக உருவாக்கம் பெறுவதில்லை. இதனால் தமிழகத்தின் எரியும் பிரச்சினைகள் தமிழ்ச்சிறுகதையில் இடம்பெறவே முடியாது என்ற நிலைமை இங்கே உள்ளது. அவை முற்போக்கு எழுத்தாளர்களின் பிரச்சாரத்துக்கான கச்சாப்பொருட்களாக ஆகிவிட்டிருக்கின்றன.

 

சு.வேணுகோபாலின் இக்கதைகள் அனைத்துமே முற்போக்கு இலக்கியத்தின் பேசுபொருட்களை எடுத்தாண்டிருப்பவை என்பதைக் காணலாம். ஆனால் இவை பிரச்சாரம் செய்வதில்லை. மிக உத்வேகமான கணங்களைக்கூட மிக சாதாரணமாகச் சொல்ல முனைகின்றன. எது  யதார்த்தமோ அதை ‘அப்படியே’ முன் வைக்கின்றன. இக்காரணத்தால் இவை அபாரமான நம்பகத்தன்மையுடன் உள்ளன. ஆகவே இவற்றின் வலிமை எந்த முற்போக்கு இலக்கியத்திலும் காண முடியாத ஒன்றாக உள்ளது.

 

வெண்ணிலை தொகுப்பின் பெரும்பாலான கதைகளின் பேசுபொருளை இருவகையாக பிரித்துவிடலாம். ஒன்று, சத்து உறிஞ்சப்பட்டு சக்கையாக ஆகி மனிதனைக் கைவிட்டு வரண்டு கிடக்கும் நிலம். காலாகாலமாக அதை நம்பி வாழ்ந்து வேறு போக்கிடமில்லாமல் அற்ற குளத்தின் கொட்டியும் ஆம்பலும்போல அதிலேயே கருகி அழியும் மனிதர்கள்.  இரண்டு, ஆண்களின் பொறுப்பின்மையாலும் மூர்க்கத்தாலும் வாழ்க்கையை சிறைப்படலாக ஆக்கிக்கொண்டிருக்கும் பெண்கள்.

 

சு.வேணுகோபால் தகவல்களின் அதிபன். விவசாய வாழ்க்கையைச் சார்ந்த தகவல்களை இந்த அளவுக்கு அள்ளி அள்ளி வைக்கும் ஒரு படைப்பாளி இன்றுவரை தமிழில் உருவானதில்லை. கலைச்சொற்கள் நுண் தகவல்கள் கச்சிதமான விவரிப்புகள்  என நாம் காணத்தவறும் வேளாண்மை வாழ்க்கையில் மிக விரிவான சித்திரம் தமிழின் நூறாண்டுக்கால நவீன இலக்கிய மரபில் முதல் முறையாகப் பதிவாகிறது இப்படைப்புகளில்.

 

அதே வீச்சுடன் ஒரு நடுத்தர வற்கத்து இல்லத்தரசியின் அடுக்களையையும் வேணுகோபாலால் சொல்லிவிட முடிகிறது என்பதே அவரை பெரும் கதைசொல்லியாக ஆக்குகிறது. புற உலகம் மீது இந்த அளவுக்கு அபாரமான கவனிப்புள்ள தமிழ்க்கதைசொல்லிகள் மிக அபூர்வம். தமிழில் இவ்விஷயத்தில் சு வேணுகோபாலுக்கு முன்னுதாரணமாகச் சொல்லத்தக்க படைப்பாளி என்று அசோகமித்திரனையே குறிப்பிட முடியும்

 

புற உலகங்களைச் சித்தரிக்கும் போது அதன் நுண்ணிய இடைவெளிகள் வழியாக அகத்திற்குள்ளும் நுழைகிறார் என்பதே வேணுகோபாலின் ஆக்கங்களை கலைப்படைப்பாக்குகிறது. எப்போதும் மானுடக்கீழ்¨மைகளை அசாதாரணமான கூர்மையுடன் கவனிக்கிறது அவரது படைப்புமனம். காம விருப்புகள் தங்களுக்கே உரிய தடங்களை உருவாக்கிக்கொள்வதை நுட்பமாக பிந்தொடர்கிறார். அதற்குஇணையாகவெ மனிதனுள் உள்ள அற்பத்தனத்தின் ஊற்றுமுகங்களையும் தேடிச்செல்கிறார்.

 

இவ்வியல்புகள் கொண்ட இக்கதைகள் எல்லா பக்கங்களிலும் நேரடியான வாழ்க்கை துடிக்கும் புனைவுப்பரப்பாக அமைந்துள்ளன. விதவிதமான மனிதர்கள். பெண்குழந்தையை களைய வேண்டிய சுமையாக கருதும் பண்பாடு கொண்ட சூழலில் ‘பொட்டைக்குட்டியா?’ என்று  களையப்பட்ட நாய்க்குட்டியுடன் தன்னையும் அடையாளம் கண்டுகொண்டு ஆழமான பதற்றத்தை அடைந்து ‘ சொல்லும்மா என்னைய எங்காவது தள்ளி விட்டுற மாட்டியே, சாகுந்தண்டியும் ஒன் கூடவே இருக்கேம்மா’ என்று கண்ணீருடன் அழும்  பெண்குழந்தை, வறுமையின் எரிச்சலில் கருணை வற்றிவிட்டிருக்கும் சூழலிலும் தெருவில் நிற்கும் பிச்சைக்காரனுக்கு சர்ச்சில் கொடுக்கப்பட்ட பிஸ்கட்டை கொடுக்கும் குழந்தை, ஏசு எப்போதும் மனிதனுடன் இருக்கிறார் என்பதற்கான நிரூபணமாக அதை எடுத்துக்கொள்ளும் அந்த ஆங்கிலம் பேசும் பிச்சைக்காரன் என வேணுகோபாலின் கதைமாந்தரின் முகங்கள் விரிந்தபடியே செல்கின்றன.

 

சாதாரணமாக அரசியல்சரிகளை கவனிக்கும் எழுத்தாளர்கள் எழுதத்தயங்கும் விஷயங்களைக்கூட துணிச்சலாக தொட்டுச்செல்பவை சு.வேணுகோபாலின் கதைகள்.  வரண்டுவிட்ட பூமியில் வேளாண்மையால் கைவிடப்பட்டு உதவிதேடி அலைந்து தொண்டு நிறுவனத்தை அணுகும்போது அவர்கள் அந்த நிராதரவான நிலையை பணயமாக வைத்து கிறித்தவ மதத்துக்கு மாறுபடி பேரம் பேசும் கதையை தமிழில் வேறு ஓர் எழுத்தாளர் எழுதுவாரா என்பதே ஐயம்தான். அப்பட்டமான சித்தரிப்பு மற்றும் நுண்ணிய தகவல்கள் மூலம் அந்தக்கதைக்கு முழுமையான வாசக நம்பிக்கையை உருவாக்குகிறார் வேணு. அந்த மதமாற்ற அமைப்பின் பேச்சும் பேரமும் துல்லியமான யதார்த்த்ததுடன் பதிவாக்கியிருக்கின்றன.

 

வேணுகோபாலின் இந்தத்தொகுப்பின் காமத்துக்குள் ஆழ்ந்து சென்றதன் காரணமாக மிக முக்கியமான ஆக்கங்களாக ஆன படைப்புகள் சில உள்ளன. காமச்செயல்பாடுகளின் விவரணைகள் அதிகமாக வந்துகொண்டிருக்கும் தமிழ்ச்சூழலில் காமத்தை உறவுகள் சார்ந்ததாக, உயிர்வாழ்தலின் சமர் சார்ந்ததாக சித்தரிக்கும் இக்கதைகள் மிகத் தீவிரமான மனபதிவை உருவாக்குகின்றன. ‘ உள்ளிருந்து உடற்றும் பசி’ எளிய வாசகனுக்கு ஆழமான அதிர்ச்சியை அளிக்கக்கூடியது. தாய்தந்தை அற்ற குடும்பத்தில் தங்கைகளுக்காக சொந்த வாழ்க்கையை துறந்து ஒவ்வொருவரையாக கரையேற்றுகிறான் அண்னன். ‘எங்கண்ணன் எனக்கு தெய்வம்டீ’ என தோழியின் தோளில் சாய்ந்து கண்ணீர் விடும் மூன்றாவது தங்கை திருமணமாகிச் செல்கிறாள். நாலாவது தங்கைக்கு குடும்பப்பொறுப்பு வந்துசேர்கிறது. ஒருநாள் இரவில் அண்ணனின் கை வந்து பாலியலுக்கு அழைக்கிறது. அதிர்ந்து மிரளும் அவளிடம் அவன் கேட்கிறான், அக்காக்கள் ஒண்ணுமே சொல்லித்தரலையா என்று

 

ஒழுக்க அதிர்ச்சிக்கு அப்பால் செல்லக்கூடிய வாசகன் அந்த வாழ்க்கையில் உள்ள பரிதாபகரமான யதார்த்ததை உணர்ந்து இன்னமும் பெரிய அதிர்ச்சிக்கு ஆளாவான்.  அந்த பெண்கள் அந்த உறவுக்கு கட்டாயப்படுத்தப்படவில்லை, அண்ணனின் தியாகத்திற்கான எளிய பதிலீடாக அதைச் செய்கிறார்கள். உணவளிப்பதுபோல.  அதன் வழியாகத்தான் அவர்கள் தங்களுக்கான வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள முடிகிறது. பிற வழிகள் எல்லாமே அடைக்கப்பட்டிருக்கின்றன. அந்த அண்ணன் மீதான கசப்பை விட்டு மீண்டு அவனைப்பார்த்தால் அவனுடைய வாழ்க்கையில் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அவலம் நெஞ்சை அறைகிறது. மலத்தை தின்ரே பசியாற வேண்டிய நிலை ஒருவனுக்கு வருமென்றால் அது எத்தனை கொடிய வாழ்க்கை.

 

அவன் கோருவது எந்த ஒரு மிருகமும் விரும்பும் எளிய வாழ்க்கை, உனவு காமம் . அது அவனுக்கு மறுக்கப்படுகிரது அல்லவா? வேணுகோபால் எந்த நியாயத்தையும் சொல்வதில்லை. அவர் ஓரு உலகை திறந்து காட்டி பேசாமல் நின்று விடுகிறார். ஆழமான அகக்கொந்தளிப்பு வழியாக நாமே கடந்து செல்ல வேண்டிய ஒரு கதை இது. நம் அற உணர்ச்சியை ஒழுக்க நெறிகளை நாமே அழுத்தமான மறுபரிசீலனைக்கு உள்ளாக்குவதன் வழியாகவே இக்கதையை நாம் தாண்டிச்செல்ல முடியும். அதன் உருவ அமைதியால் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அளிக்கப்பட்டிருக்கும் அற்புதமான குனச்சித்திர அமைதியால் தமிழில் எழுதப்பட்ட மகத்தான சிறுகதைகளில் ஒன்றாக ஆகும் ஆக்கம் இது

 

இன்னொரு கோணத்தில் காமத்தை அணுகும் கதை கொடிகொம்பு. குடிகாரனாக இருக்கும் கணவனின் இயலாமைக்கு முன்னால்  சுருங்கி கூசி போகும் வாணியின் கதை இது. எந்த ஒரு உதாரணமான தமிழ் மனைவியையும் போல அவளும் கணவனை திருத்த முயல்கிராள். சமூகத்திற்கு முன்னால் தன் இழிவு தெரியாமலிருக்க முயல்கிறாள். கடைசியில் குறைந்த பட்சம் தன் குடும்பத்திடமிருந்தாவது அதை மறைக்க முடியுமா என்று பார்க்கிறாள். ஒருகட்டத்தில் அவளுக்கு கணவன் என இருப்பவன் அந்த உதவாக்கரை குடிகாரன் என ஆகும்போது மிக இயல்பாக அவள் மனம் மாமனார் மீது செல்கிறது.

 

இந்த திசைமாற்றத்தை சஞ்சலங்கள் நியாயங்கள் ஏதுமில்லாமல் ஒரு தாவரத்தின் இயல்பான பயணம் போலவே சொல்லியிருக்கிறார் என்பதனால்தான் இக்கதை முக்கியமானதாக ஆகிரது. வாணிக்கு காமம் சார்ந்த ஏக்கம் இருந்தது என்று கதை எங்குமே சொல்லவில்லை. அவளுக்குத் தேவை என்ன என்று அவளுக்கே தெரியாது. கௌரவமான ஒரு குடும்பமா காமமா ஆணுடனான உரவா அரவணைப்பா? அவள் தேடிக்கொண்டே இருப்பதை அவளே அறிவதில்லை.

 

அவளுடைய காமம் அவளுக்கே தெரிய வரும் இடத்தை சு.வேணுகோபால் சொல்லியிருக்கும் விதம் இந்தக்கதையை அசாதாரணமான ஒரு நுண்மைக்குக் கொண்டுசெல்கிறது. மாமனார் பொன்னையா  ஆடும்போது அவரது தசைகளை கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கும் பக்கத்துவீட்டு கனகத்தின் கண்களை ஓரக்கண்ணால் பார்க்கிறாள் வாணி. அப்போது அவளுக்குள் மூண்டெழும் பொறாமையும் குரோதமும் தான் அவளுக்கு அவளுடைய காமத்தை அடையாளம் காட்டுகின்றன. மஞ்சள் நீர்த்தொட்டியில் கையை இட்டு அளைகிறாள். தன் மனதையே அளைவது போல. சட்டென்று முடிவெடுத்து அள்ளி அவர் மேல் எறிகிறாள். கதை உச்சம் கொண்டு முடிகிறது.

 

வெண்ணிலை தொகுதியின் இரு கதைகள் அவற்றின் கவித்துவத்தால் பிற கதைகளில் இருந்து தனித்து நிற்கின்றன.  நீளமான கதையாகிய புத்துயிர்ப்பு ஒருவகையில் வேணுகோபாலின் கூந்தப்பனை கதைக்கு சமானமானது. உச்சகட்டத்து கவித்துவத்தாலேயே தன்னை நிகழ்த்தும் இக்கதையே வேணுகோபாலின் ஆகச்சிறந்த படைப்பு. தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த இருபது கதைகளில் ஒன்றாகவும், புதிய தலைமுறையில் எழுதப்பட்ட ஆகச்சிறந்த ஐந்து கதைகளில் ஒன்றாகவும் இதை நான் கூறுவேன். என்னுடைய பரிந்துரையின் பேரில் இக்கதை கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

 

கைவிடப்பட்ட நிலத்தில் கடைசிக்குருதியால் போராடும் விவசாயியின் கதைதான் இது. இந்திய இலக்கியத்தில் பிரேம்சந்த் முதல் கி.ராஜநாராயணன் வரை இதிகாசச் சாயலுடன் சொல்லப்பட்ட விவசாயியின்  அவலம். மலையடிவாரத்தில் சாலிக்கருவேல மரங்கள் குடையை விரித்தபடி நின்றிருந்தன. சைக்கிளை விட்டிறங்கி இடதுபுறமாகச் செல்லும் பாதையில் உருட்டிக்கொண்டு சென்றான்.பொதைப்புல் சரிவு பொட்டலமாக இருந்தது.காய்ந்து சொடித்துப்போன புல்சுழிவைக்கூட ஒரிடத்திலும் காணமுடியவில்லை… என்று ஆரம்பிக்கிறது கதை. மாட்டுக்கு ஒரு கைப்பிடி புல்லுக்காக வெறித்துக்கிடக்கும் பொட்டலில் அலையும் வாழ்க்கை.

 

வறுமை உறவுகளிலும் ஈரத்தை வரளச்செய்கிறது. சொற்களும் சிந்தனைகளும்கூட வரள்கின்றன. எந்த திசையிலும் நிழல் இல்லாத பாலைநிலம் போல் இருக்கிரது காலம். மனைவி சாந்தா கருவுற்றிருக்கிறாள். அவளுக்கு உணவில்லை. கண்களில் பீளை தள்ளி கடையொட்டிக்கிடக்கும் மாடுகளின்  அவலத்தை தாங்க முடியாமல் இரவில் சொந்ந்த்தில் ஒருவரின் சோளக்காட்டுக்குள் புகுந்து கொஞ்சம் புல் திருடிவிடுகிரான்.  அவர் பிடித்து விடுகிறார். அந்த துயர கணங்களை பல்லில் ஆணிபடும் கூச்சத்தை உருவாக்குமளவுக்கு துல்லியமாகச் சித்தரிக்கிறார் வேணு.

 

ராமசாமிக்கவுண்டரும் மகனும் பேட்டரியோடு நின்றனர். சப்பு சப்பென்று இருவரும் மாறி மாறி அறைந்தனர். கட்டத்தூக்கிட்டு நடறா..உன்னை பஞ்சாயத்திலே வைச்சாத்தான் ஆகும்” ”மாமா இன்னைக்குத்தான் மாமா வந்தேன் ” ‘டே வெண்ண என்னைய ஒண்ணும் மாமான்னு நொட்டவேண்டாம். ரெண்டுமாசமா தாயோளி அர்த்த ராத்திரியிலே வந்துதானேடா திருடியிருக்கே?” காலைப்பிடித்துக் கெஞ்சும் அவனை இழுத்துச் செல்கிறார்கள். மறுநாள் பஞ்சாயத்துக்கு முன்னரே அவன் விஷம்குடித்துவிடுகிறான்.

 

கருவில் குழந்தையுடன் சாந்தா அவன் சடலம் முன்பு  அர்த்தமற்ற அலறலுடன் நிற்கிறாள். குறைமாதமாகப் பிறக்கிறது குழந்தை. வெயில் காட்டவேண்டும் என்கிறாள் மருத்துவச்சி. எந்த வெயில் உயிரை உறிஞ்சுகிறதோ அதிலேயே குழந்தையைக் காட்டுகிரார்கள். ‘பசலையின் கடைவாய் ஓரத்தில் எச்சிலில் சூரியன் ஒடுங்கி ஒளிர்ந்தான். சிசுவின் புன்முறுவலில் சூரியன் ஒடுங்கியது…

 

குழந்தை பஞ்சப்பரப்பை கிழித்துக்கொண்டு எதிர்நிற்பதுபோல கைகால்களை ஆட்டியது. அதனுடைய உதட்டோரச்சிரிப்பு கடவுளை கேலிசெய்வதுபோல் இருந்தது. குழந்தை தெய்வத்தின் தெய்வம்…”

 

குறைமாதமாக வந்து பலவீனமான புழுப்போல வெயில் ஏற்கும் அந்தக் குழந்தையை அந்த மாபெரும் நிர்க்கதியின் மாறாக கடவுளின் சக்திக்கு எதிரான அறைகூவலாக முன்வைக்கிறார் சு.வேணுகோபால். ”வான் பொழிய மண் செழிக்க வாழையடி வாழையென வந்ததடி குழந்தை’ என்று குரவையிட்டனர் பெண்கள் என முடிகிறது இந்த மகத்தான சிறுகதை. மானுடம் என்ற வெல்லமுடியாத உயிராற்றலைப் பற்றி பல்லாயிரம் வருடங்களாக நாடோடிக்கலைஞர்கள் காவிய கர்த்தர்கள் பேரிலக்கியவாதிகள் சொல்லி சொல்லி வந்துள்ளனர் . அவ்வரிசையில் தன்னையும் இணைத்துக்கொண்டு ஒளிவிடுகிறது நவீனத்தமிழின் உச்சங்களில் ஒன்றாகிய இப்படைப்பு.

 

வெண்ணிலை என்ற தலைப்புக்கதை அதன் நேரடியான உக்கிரத்தாலேயெ கவித்துவமான செறிவை அடைந்த ஆக்கம். ஜெராக்ஸ் கடையில் வேலைபார்க்கும் எளிய பெண். தந்தையை மருத்துவமனையில் சேர்ந்த்து அவர் இறந்து விட்டார். அம்மாவை அவர் அருகே அனுப்பிவிட்டு வந்து சாலையில் நிற்கிறாள். அவளுக்கு என யாருமே இல்லை. கையில் கொஞ்சம்கூடப் பணமில்லை. முற்றிலும் கைவிடப்பட்டவள்.  எங்கோ ஒருமுறை அவளைப் பார்த்திருக்கும் கதைசொல்லி இருமுறை அந்த இடத்தைக் கடந்துசெல்லும்போதும் அவள் அங்கேயே நிற்பதைக் கண்டு இறங்கி என்ன என்று கேட்கிறான். அவள் விஷயத்தைச் சொல்ல அந்தச் சடலத்தை  அடக்கம் செய்ய அவன் உதவுகிறான். நான் விசாரிக்கவில்லை என்றால் என்ன செய்திருப்பாய் என்று அவன் கேட்கப்போய் நிறுத்திக்கொள்ளலாம்

 

வெண்ணிலை என்றால் பரிபூரணமான கைவிடப்படுதல் என்று பொருள். உறவுகளை நண்பர்களை அமைப்புகளை முழுமையாக இழந்து மானுடத்தை மட்டுமே நம்பி அந்தச் சாலையில் அவள் நின்ற அந்த சிலமணி நேரங்கள்தான் வெண்ணிலை. ஆனால் அது முழுக்க கைவிடப்பட்ட நிலைதானா? மானுடம் அவளை கைவிடவில்லையே?

 

 

அந்த மானுடத்தின் குரலாக எப்போதுமே ஒலிப்பதனால்தான் சு.வேணுகோபால் கலைஞனாகிறார்.

 

கூந்தப்பனை சுவேணுகோபால் கதைகள். தமிழினி

வெண்ணிலை சுவேணுகோபால் கதைகள். தமிழினி

 

. http://www.keetru.com/puthiyakaatru/feb06/venugopal.php

http://www.keetru.com/puthiyakaatru/aug06/venugopal.php

முந்தைய கட்டுரைலோகிததாஸ் வாழ்க்கைக்குறிப்பு
அடுத்த கட்டுரைமேகமலை தாடிக்கொம்பு– கடிதங்கள்