வெண்முரசு மகாபாரத நாவல்வரிசையின் இரண்டாவது நாவலான மழைப்பாடலை நேற்று [2-5-2014] முடித்தேன். ஒரே இரவில் அதிலிருந்து வெளிவரவும் முடிந்தது. அடுத்த நாவல் என்ன என்று எந்தச் சித்திரமும் நெஞ்சில் இல்லை. ஆனால் ஏதோ வரப்போகிறது என்ற எழுச்சி மட்டும் நீடித்தது. முதலில் தலைப்பு வேண்டும்.
சென்றமுறை இதே மனநிலையில் ரிக்வேதத்தைப் புரட்டியபோது மழைப்பாடல் கண்ணுக்குப்பட்டது. அதை முழுக்க வாசிக்கவில்லை. அந்தச் சொல்லே போதுமென்று பட்டது. மழைப்பாடல் என்று பெயரிட்டு தொடங்கிவிட்டேன். நாவலின் வடிவத்தை தொகுத்து ஒருமைப்படுத்தும் பெரும்படிமமாக அது மெல்ல மாறியதை உணர்ந்தேன். ஆகவே இம்முறையும் அதையே செய்தேன். கம்பராமாயணத்தை எடுத்து முதலில் விரிந்தபக்கத்தின் முதலில் கண்ணில்பட்ட வரியை வாசித்தேன்.
அண்ணற் பெரியோன், அடி வணங்கி அறிய உரைப்பான் அருந்ததியே
வண்ணக் கடலினிடைக் கிடந்த மணலின் பலரால் வானரத்தின்
எண்ணற்கு அரிய படைத் தலைவர் இராமற்கு அடியார் யான் அவர்தம்
பண்ணைக்கு ஒருவன் எனப் போந்தேன் ஏவல் கூவல் பணி செய்வேன்.
அதிலுள்ள வண்ணக்கடல் என்னும் சொற்சேர்க்கை நெஞ்சில் நின்றது. முடிவில்லாத வண்ணம் கொண்ட கடல். வண்ணத்தின் ஓயா அலைகள். இளமைக்கு அதைவிடச் சிறந்த சொல்லாட்சி வேறில்லை. இது இளமையின் கதை. அத்துடன் ‘இன்றென இருத்தி’ என அழியா இளமையை அண்ணலிடமிருந்து பெற்ற அனுமனின் கூற்று அது.
ஜூன் முதல்தேதி முதல் இணையத்தில் தொடர்ந்து வெளிவரும்.