சு.வேணுகோபாலின் மண்-1

சு.வேணுகோபாலின் கதைகளைப்பற்றி எப்போதுமே இருவகையான அபிப்பிராயங்கள் நம் சூழலில் உலவுகின்றன. ஒன்று, அவர்மீது அபாரமன பிரேமை கொண்ட வாசகர்களின் தரப்பு. இன்னொன்று அவரது ஆக்கங்களை வாசிக்கவே முடியவில்லை என்று சொல்லும் தரப்பு. நம் சூழலில் எந்த ஒரு படைப்பாளிக்கும் இத்தகைய விசித்திரமான ஒரு எதிர்வினை இல்லை என்றே படுகிறது.

காரணம் சு.வேணுகோபால் கதைகள் வாசகனுக்கு ஆரம்பத்தில் ஒரு தத்தளிப்பை அளிக்கின்றன என்பதே. அவை சித்தரிப்பில் நேர்த்தியோ இலக்கோ இல்லாதவை. மனதில் அகப்படுபவற்றையெல்லாம் எழுதிக்கொண்டு செல்கிறார் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அத்துடன் அவரது மொழி மிக பலவீனம் கொண்டது. அவர் பயன்படுத்தும் பல சொற்கள் புனைவின் தேவை பற்றிய பிரக்ஞையில்லாமலே பயன்படுத்தப்படுபவை. மனதில் பட்டதை வெள்ளந்தியாகச் சொல்லிக்கொண்டே செல்லும் கிராமவாசி போலிருக்கிறார் சு.வேணுகோபால்.

 

மேலும் அவரது பெரும்பாலான கதைகள் வடிவநேர்த்தியுடன் சொல்லப்படாதவை. ஒரு வகை கட்டற்ற மன ஓட்டச் சித்தரிப்பு உடையவை அவரது ஆக்கங்கள். ஓர் இலக்கியப் படைப்பில் மன ஓட்டம் என்பது கட்டற்றது என்ற தோற்றம் அளிக்கும் கட்டுக்குள் கொணரப்பட்ட ஓட்டமாகவே இருக்கமுடியும். கட்டுப்படுத்துவது அப்புனைவின் வடிவத் தேவை. கட்டுப்படுத்தாத ஓட்டம் என்பது வாசகனை சோர்வுறச்செய்யும். புனைவெழுத்தாளனின் இலக்கை தோற்கடிக்கும். இக்காரணங்களால் சுவேணுகோபாலின் கதைகள் பொதுவாக வாசகனுக்கு செம்மையற்றவை அல்லது முதிர்ச்சியற்றவை என்ற எண்ணத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன.

 

ஆனால் இந்த சிக்கல்களைக் கடந்து அவரது புனைவுலகுக்குள் நுழையும் வாசகன் அவரது அபாரமான யதார்த்த உலகின் விரிவையும் நுட்பங்களையும் கண்டு அதில் ஆழ்ந்து போவான். அற்றது கதையுலகம் நேரடியான மனிதவாழ்க்கையால்  ஆனது.மனிதர்களின் உயிர்ப்போராட்டத்தின் வேகத்தையும் வலியையும் இத்தனை உக்கிரமாக நேரடியாகச் சொன்ன சமகாலத்துப் படைப்பாளி பிறிதெவரும் இல்லை என்றே சொல்லலாம். உப்பு கசியும் ஊயிர்நிலம்போன்றது அவரது புனைவுவெளி

மனிதமன இயக்கத்தில் உள்ள வக்கிரங்களைக் காண வேணுகோபாலால் எளிதில் முடிகிறது. இந்த முக்கியமான அம்சமே அவரை சமகால எழுத்தாளர்களிலிருந்து வேறுபடுத்துகிறது. வேணுகோபால் வெறுமே உத்திக்காகவோ, புதுமைக்காகவோ கதை சொல்வதில்லை. மனித மனசெயல்பாட்டின் புரிந்துகொள்ளமுடியாத ஆழமே அவருக்கு எப்போதுமே இலக்காக உள்ளது. மனிதமனத்தின் உச்சங்களைவிட சரிவுகளில்தான் அவரது கவனம் மேலும் குவிகிறது. சமகாலத்து தமிழ் வாழ்வின் பலஅவலக் கூறுகளை சதையைப் பிய்த்துப் போடுவதுபோன்ற மூர்க்கத்துடன் தன் கதைகளில் அவர் எடுத்து முன் வைத்திருக்கிறார். அவரது பண்படாத தன்மையைச் சுட்டிக்காட்டி அவரை நிராகரிப்பது எளிது. ஆனால் இந்தப் பண்படாத தன்மை அவருக்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது என்பதை கவனிக்கும் வாசகன் தமிழுக்கு அவர் மிக முக்கியமானவர் என்பதை உணர்வான்.

 

ஆரம்பகால கதைகளில் .வேணுகோபாலுக்கு சிறுகதை வடிவம் கைவராதது இயல்பே. காரணம் அவர் நிறையச் சொல்பவர். ஆகவே சிறுகதைக்கு தேவையான கட்டுக்கோப்பை, இலக்கு நோக்கிய நகர்வை அவரால் அடையமுடிவதில்லை. ஆனால் குறுநாவல்களில் அவர் போதிய சாவகாசத்துடன் இயங்கி மனிதஆழத்தில் உள்ள இருள்களை தொட்டுச்சென்று ஒருவிதமான முழுமைப் பார்வையை அடைந்து விடுகிறார். அவரது கூந்தப்பனை அவ்வகையில் ஒரு முக்கியமான கதை. காமத்தின் இயலாமை என்ற மானுடச் சிக்கலை இத்தனை தீவிரமாக வெளிப்படுத்திய கதைகள் குறைவே.

 

கூந்த்தப்பனையின் கதாநாயகன் காமத்தை உள்ளம் உணரும்போது உடல் திறக்காத சதீஷின் கதை. அவனுடைய தத்தளிப்பையும் தனிமையையும் சகஜமான ஒரு அன்றாடவழக்கு கதைகூறலாகச் சொல்கிறது இந்தக்கதை. சதீஷின் வாழ்க்கை சார்ந்த எல்லா விஷயங்களையும்  அள்ளி அள்ளி வைத்துச்செல்லும் கதை அவனுடைய பல்வேறு உள்ள நிலைகளை தொட்டுச் செல்கிறது.   ‘அவரை மீசை வைச்சுக்க சொல்லுங்க பாட்டி, அதான் அழகாயிருக்கு’ என்று காமமும் காதலுமாக அறிமுகமாகும் லதா, காமம் நிறைவேற முடியாமல் ‘சும்மா பொம்மை மாதிரி விளையாடுறீங்களா? ஆசையாயிருக்கு’ என்று கெஞ்சி, ‘கைவிட்டுராதீங்க சாமீ’ என்று ஒரு சராசரி மனைவியின் இடத்தில் தன்னைப் பொருத்திக்கொள்ள முனைந்து அவன் அவளை நண்பனுக்குக் கட்டிவைத்தவுடனே அவனது மனைவியாக ஆகி சதீஷை மூன்றாமவனாக உணரும் பரிணாமம் இயல்பாக கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.

 

சதீஷ் உணரும் அந்த அதிர்ச்சி மிகவும் நுட்பமானது. நண்பனுக்கு லதாவைக் கட்டிவைக்கும்போதும் சதீஷ் தன் மனதில் அவளை மனைவியாகவே எண்ணியிருக்கிறான். அவளை தோழியாக நடத்துகிறான். ஆனால் காமம் வழியாக அன்றி ஒருவன் பெண்ணை அணுகவே முடியாதென்ற உயிரியல் யதார்த்தத்தை அவள்  அவனுக்கு சுளீரென்று புரிய வைக்கிறாள். அவளைப்பொறுத்தவரை அவள் உடலுக்கு உரிமையானவனே உள்ளத்துக்கும் உரியவன், பிறன் அன்னியனே. அந்த அதிர்ச்சியால் சதீஷ் நிலைகுலைகிறான். அவன் வீட்டை விட்டு கிளம்பும் இdfடத்தில் கதை ஆரம்பிக்கிறது.

 

சதீஷ் தேடிச்செல்வது எதை? மிக லௌகீகமான தளத்தில் சாதாரணமாக நகரும் இந்தக்கதை அந்த தேடலை நேரிடையாக முன்வைப்பதில்லை, ஆனால் அது இக்கதையில் இருக்கிறது. சதீஷ் தேடுவது உறவுகளின் பின்னலாகவே முன்னகரும் மானுட வாழ்க்கையின் விரிவில் தன்னுடைய இடம் என்ன என்ற கேள்வியுடன்தான். எதை நம்பி அவன் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். எல்லா உயிர்களுக்கும் உடல் அளிக்கப்பட்டிருக்கிறது. பசியும் வாழும்விருப்பும் உள்ளது.  உடலையே தான் என எண்ணும் தன்னுணர்வும் உள்ளது. அந்த உடலின் முதல்நோக்கமாக இருப்பதே இன்னொரு உடலுடன் இணைந்து தன் தொடர்ச்சியைச் சாத்தியமாக்குவது. அப்படிச் செய்யாத உடல் அதன் அனைத்து நுட்பங்களும் பொருளிழந்துபோக வீண் சதைச்சுமையாக ஆகிவிடுகிறது

 

அந்தச்சுமையை கால்கள் உணர சதீஷ் நடந்துசெல்வதன் சித்திரங்களை தீவிரமாக அளிக்கிறது சு.வேணுகோபாலின் இக்கதை. ஊரைவிட்டு ஓடும் அவன் மனம் முழுக்க ஓடும் நினைவுகள், கண்களில்படும் காமம் மட்டுமேயான காட்சிகள் என சித்தரிப்பில் நுட்பம் கூடியிருக்கிறது. கதையின் முடிவில் உருவாகிவிடும் அழகான கவித்துவம் மூலம் இக்கதை தமிழின் சிறந்த கதைகளில் ஒன்றாக ஆகிறது.  அவன் காணும் கூந்தப்பனை விசித்திரமான ஒரு படிமம். பனைகளுக்கே ஆணும் பெண்ணும் தானாக ஆகி தனக்குத்தானே இனப்பெருக்கம் செய்துகொள்ளும் தன்மை உண்டு.  காரணம் மகரந்தம் பரவமுடியாத தனித்த பொட்டல்களில்கூட வரளும் மரங்கள் அவை. பனை மிக மிக தனிமையான மரம். கூடி நின்றாலும் தனிமையை இழக்காத மரம்.

 

அதிலும் கூந்தப்பனை இன்னமும் தனிமையானது. ஆணும் பெண்ணும் கலந்ததாகவே பெரும்பாலான மரங்கள் நிற்கும். அந்த தன்னிறைவின் திமிர் கூந்தப்பனையில் தெரியும். வரண்ட பொட்டலில்கூட சடைவிரித்து தழைத்தோங்கி திமிர்த்து நிற்கும் கூந்தப்பனை உயிரின் சுயம்புவான வல்லமையை வெளிப்படுத்தும் இருப்பு. அதைக்காணும் சதீஷில் என்ன நிகழ்கிறது என்பது இக்கதையில் மென்மையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து சதீஷ் கண்டடையும் அந்த ஊற்று அப்படிமத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்கிறது. உடலை மீறி மண்ணை மீறி எழும் அந்த ஊற்று மிக அழகிய படிமம். அந்த ஊற்றுக்காகவே அவன் உடல் மௌனம் கொண்டதோ என்று எண்ணச் செய்கிறது. இது சு.வேணுகோபாலின் சிறந்த ஆக்கமும் இக்கதைதான். இரு மையப்படிமங்களைக்கொண்டே கதையை முழுமைசெய்ய முடிந்திருக்கும் நுட்பம் வியக்கத்தக்கது.

 

‘அபாயச்சங்கு’ ஒப்பு நோக்க மேலும் முதிர்ச்சியற்ற நடையில் உள்ளது. ஆனால் இக்கதையிலும் வேணுகோபாலின் தனித்தன்மை மிக்க பார்வையில் காம உறவின் பல்வேறு உள்ளோட்டங்கள் இயல்பாக ஓடுகின்றன. வேலையில்லாத சுரேந்திரன் அக்காரணத்தால்யே அவனை விரும்பியிருந்த பெண்ணால் குரூரமாக கைவிடப்படுகிறான்.வேலையற்றவன் என அவனை  தீவிரமாக நிராகரிப்பதே அவள் அம்மா ரத்னமணிதான். அவள் திருமணமாகிச் சென்ற சிலநாட்களில் ரத்னமனிக்கும் சுரேந்திரனுக்கும் உறவு உருவாகிவிடுகிறது. சுரேந்திரனுக்கு  ரத்னமணியுடன் உருவாகும் உறவில் காமம் எவ்வளவு, சீண்டப்பட்ட தன்னகங்காரம் எவ்வளவு என்று வாசகன் ஊகிக்க முடியாதபடி சரளமாக கதை நகர்கிறது.

 

சுரேந்திரனுக்கு ரத்னமணியுடனான உறவு ஒரு பழிவாங்கல். ஆனால் அப்படி மட்டுமல்ல, அவனுடைய தனிமையில் கைவிடப்பட்ட அவமதிக்கப்பட்ட வாழ்க்கையில் காமம் ஒரு பெரிய இளைப்பாறலாகவும் உள்ளது. கள்ள உறவுகளில் கள்ளக்காதலியின் கணவன் காட்சிக்குள் வருவதில்லை என்றாலும் மிக மூக்கியமான ஓர் இருப்பாக எப்போதும் கூடவே வந்துகொண்டிருப்பான். ரத்னமணியின் ஓட்டுநர்பணிசெய்யும் கணவனை சுரேந்திரன் மீண்டும் மீண்டும் நினைத்துக்கொள்ளும் இடங்கள் இக்கதையில் மிக நுட்பமானவை. ரத்னமனியுடனான காதலில்கூட ஒரு வகை பசிதீர்க்கல் மட்டுமே உள்ளது. அவள் உடல் அவனுள் உருவாக்கும்  மனவிலகல் ஒவ்வொரு உறவுக்குப் பின்னரும் கசந்து எழுதவை அபாரமான நுட்பத்துடன் சுட்டிச்செல்கிறார் வேணுகோபால்.

 

உண்மையில் சுரேந்திரன் ரத்னமணியை அவன் பயன்படுத்துவதாக எண்ணிக்கொள்கிறான். ரத்னமணிதான் அவனைப் பயன்படுத்திக்கொள்கிறாள் என்பதை உறவுகளுக்குப் பின்னர் அவளிடம் கூடும் அழுத்தமான அலட்சியம் மூலம் சு. வேணுகோபால் ஏற்கனவே  வாசகனுக்குச் சொல்லிவிடுகிறார். ஆனால் ஆண்மையில் திமிரால் அதை சுரேந்திரன் உணர்வதில்லை.  அதை அவன் உணரும்போது சக்கையாக தன்னை அறிகிறான். பொருளியல் அடையாளம் இல்லாத காரணத்தால் ஆளுமையே இல்லாத குப்பையாக அவன் கிராமத்தில் வாழ்கிறான். ரத்னமணியை ‘வென்றதன்’ வழியாக அவன் தன்னை ஆண்மகனாக உணர்ந்தது மட்டுமே அவனுக்கு சுயத்தை அளித்திருந்தது. அது ஒரு தோல்வி என உணரும் கணம் அவன் வாழ்க்கை முடிந்து போகிறது. சுரேந்திரன் தற்கொலைசெய்துகொள்கிறான்.

 

கூந்தப்பனை நுண்மையான கவித்துவம் வழியாக காமத்தைச் சித்தரிக்கும் கதை என்றால் முழுக்க முழுக்க யதார்த்தம் வழியாக காமத்தை சித்தரிக்கும் இலக்கிய ஆக்கம் என்று அபாயச்சங்கை குறிப்பிட முடியும். இவ்விரு கதைகளையும் தமிழில் எழுதப்பட்ட ஆகச்சிறந்த காமச்சித்தரிப்புகளில் நம்மால் சேர்க்க முடியும். இக்கதைகளுக்கு முன்னுதாரணமான கதைகள் என்றால் ராஜேந்திர சோழன் எழுதிய கதைகள்தான். அப்பட்டமான யதார்த்தத்தைச் சொன்னபடி காமத்தின் நுண்ணிய அக இயக்கங்களுக்குள் சென்ற படைப்புகள் அவை.

 

அபாயச்சங்கு சமூகவியல் கோணத்திலும் ஆழமான ஆய்வுக்குரியது. சுரேந்திரனுக்கு ரத்னமனியுடன் உள்ள உறவு அவனுடைய மானசீக மாமியாருடனான உறவு.  எல்லா காலத்திலுமே இந்த உறவு சமூகத்தில் உள்நகர்வாக இருந்து வந்துள்ளது. நாட்டாரியலாய்வாளர் அ.கா.பெருமாளின் கட்டுரை ஒன்றில், தமிழக பாலியல் கதைகளில் மிகப் பெரும்பாலானவை மருமகன் மாமியார் உறவு குறித்தவை என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது இது ஒருவகை ஈடேற்றமும் ஆகலாம். மிகத் தன்னிச்சையாக வேணுகோபால் சொல்லிப்போகும் சித்தரிப்புகள் வழியாக நம் சமூகத்தின் பல ஆழம் மிக்க ஓட்டங்கள் பதிவாகின்றன என்பது அவரது கதைகள் மீள்வாசிப்புகளில் மேலும்மேலும் விரிவடையக்கூடியவை என்பதற்கான ஆதாரம்.

 

‘வேதாளம் ஒளிந்திருக்கும்.’..கதையில் தனக்கே உரிய முறையில் அந்தக் கணவன் மனைவி உறவின் உள்ளோட்டங்களைச் சொல்ல வேணுகோபாலால் முடிகிறது. ‘கண்ணிகள்’ விவசாயியின் வீழ்ச்சியைச் சொல்லும் கதை. ஆனால் இம்மாதிரி கதைகளை எழுதுபவர்கள் போடும் முற்போக்கு பாவனைகள் இல்லாமல்  தோற்கடிக்கப்பட்டவர்களை மதம் உள்பட அனைத்துமே கண்ணிகளாக மாறி விழுங்கமுயல்வதை அப்பட்டமாக சொல்கிறது.

 

வேணுகோபாலின் பலவீனம் அவரது இலக்கிய நோக்கு மனிதர்களைச் சொல்வதுடன் நின்றுவிடுவதே என்பதுதான். மேலான இலக்கியங்களை ஆக்கும் ஆழமான தேடல் இக்கதைகளின் வழியாக நம்மை அடைவதுமில்லை. இயல்பாக ஒருவரிடம் அது கூடாதபோது அது இல்லாமலிருப்பதே அழகும் கூட. முற்றிலும் சமகால வாழ்வுத்தளம் சார்ந்த பிரச்சினைத் தீர்வுகள் இவை. அவற்றை ஒருங்கிணைத்துக்கொண்டு சரித்திர ரீதியான அல்லது ஆழ்மனம் சார்ந்த ஒரு அகவயப்பார்வையை நோக்கி அவர் நகர்வதில்லை. கூந்தப்பனை தவிர பிற கதைகளில் கவித்துவத் திறப்புகளும் இல்லை. ஆனால் தன் நுட்பம்மிக்க வாழ்க்கைச் சித்தரிப்பு காரணமாகவே வேணுகோபால் சமகால இளம் தமிழ்ப் படைப்பாளிகளில் முக்கியமானவர் ஆகிறார்.

[ மேலும் ]

http://www.keetru.com/puthiyakaatru/feb06/venugopal.php

 

 

வெண்ணிலை சு வேணுகோபால் கதைகள் தமிழினி

கூந்தப்பனை சு வேணுகோபால் கதைகள் தமிழினி

முந்தைய கட்டுரைஇணையத்தில் விவாதம்…
அடுத்த கட்டுரைகண்ணதாசன், கடிதங்கள்