‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 91

பகுதி பதினெட்டு : மழைவேதம்

[ 3 ]

கங்கையின் நீர் மேலேறி கரைமேட்டில் வேர் செறிந்துநின்ற மரங்களைத் தழுவி ஓடிக்கொண்டிருந்தது. சாலையில் வரும்போதே நீரின் குளிரை உணரமுடிந்தது. மரங்களுக்கு அப்பால் அலையடித்த நீரின் ஒளியில் அடிமரங்கள் புகைக்கு அப்பால் தெரிபவை போல விளிம்புகள் அதிர நின்றாடின. கங்கைக்கரைக்கு தேர் வந்து நின்றதும் விதுரன் இறங்கி அவனைக்காத்து நின்ற முதிய வைதிகரிடம் “நீர் மிகவும் மேலே வந்துவிட்டது” என்றான். “ஆம், கோடைநீளும்தோறும் நீர் பெருகும்… அங்கே இமயத்தின் பனிமுடிகள் உருகிக்கொண்டிருக்கின்றன” என்று அவர் சொன்னார். புன்னகைசெய்தபடி “நேற்று ஒரு சூதன் பாடினான். கைலாயநாதனாகிய பெருமான்கூட வெம்மைதாளாமல் தன் சடைமுடிக்கற்றைகளை அவிழ்த்துப்போட்டு ஆற்றிக்கொள்கிறான் என்று” என்றார்.

வைதிகர் சடங்குக்கான பொருட்களை எடுத்து வைப்பதைப் பார்த்துக்கொண்டு விதுரன் தன் அணியாடைகளைக் கழற்றி ஒற்றையாடையை அணிந்துகொண்டான். அவனுடைய அணுக்கச்சேவகன் ஆடைகளையும் அணிகளையும் வாங்கி தேரிலேயே வைத்தான். நதிக்கரைச்சோலைகளில் பறவைகள் பெருங்கூச்சலுடன் பூசலிட்டுக்கொண்டிருந்தன. அவன் திரும்பிப்பார்ப்பதைக் கண்டு “அவை இப்போதெல்லாம் ஆற்றின் மேல் பறப்பதேயில்லை. சோலைக்குள்ளேயே அவற்றுக்கான உணவு கிடைத்துவிடுகிறது. கரையானைத் தின்றே உயிர்வாழ்கின்றன” என்றார் அவர்.

“கோடை நான்குமாதங்களுக்கும்மேல் நீண்டுவிட்டது. மழையின் சாயல்களே விண்ணில் இல்லை” என்றான் விதுரன். “ஆம். இது ஆறாண்டு அல்லவா? இறையருளை நாடவேண்டியதுதான். கங்கை பெருகிவரும்வரை மனிதருக்கு உணவுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால் மண்ணில் புழுவும் பூச்சியும் வாழவேண்டும்” என்று சொல்லி பெரிய தாலத்தில் எள்ளையும் அரிசியையும் நெய்யையும் மலரையும் காய்களையும் கனிகளையும் எடுத்து வைத்தார் வைதிகர்.

நூற்றியிருபதாண்டுகளுக்கொருமுறை ஆரியவர்த்தத்தில் பஞ்சம் வரும் என்பது நிமித்திகர் கணக்கு. ஆறாண்டுகளுக்கொருமுறை கோடை எல்லைமீறும். ஆறின் மடங்குகளில் அது பெருகிச்செல்லும் என்பார்கள். ஆறாண்டுகளுக்கு முன்பு கோடை வளர்ந்து நீண்டு சென்று பெருமழையில் முடிந்ததையும் புராணகங்கை பெருகிவந்து நகரை மூழ்கடித்ததையும் விதுரன் எண்ணிக்கொண்டான்.

“மீண்டும் அந்தப் பெருமழையும் வெள்ளமும் வரக்கூடுமா?” என்று கேட்டான். வைதிகர் சிரித்து “பிந்திய மழை சேர்ந்துபெய்யும் என்பது கணக்கு. ஆனால் அந்த மழை இங்குதான் பெய்யவேண்டுமென்பதில்லை. எப்போதும் இப்பக்கமாக வரும் மழை முன்பொருமுறை ஆறாண்டுக்கோடையில் கூர்ஜரத்தைத் தாண்டி வடமேற்காகச்சென்று வடகாந்தாரத்தையும் பால்ஹிகநாட்டையும் முழுக்காட்டியது. பாலைவனமே மழையால் அழிந்தது என்றார்கள்” என்றார். மெல்ல தனக்குத்தானே சிரித்தபடி “பாவம் ஒட்டகங்கள். அவற்றுக்கு சளி பிடித்திருக்கும்” என்றார். மூப்பு காரணமாக எதையுமே எளியவேடிக்கையாக எடுத்துக்கொண்டு தனக்குள்ளேயே மகிழ்ந்துகொண்டிருப்பவர் அவர் என்று விதுரன் எண்ணினான்.

விதுரன் காலையில் இருந்தே சோர்வை உணர்ந்துகொண்டிருந்தான். அஸ்தினபுரி கோடைவெம்மையில் எரியத்தொடங்கி நான்குமாதங்களாகின்றன. இரவு முதிர்வது வரை மேற்கிலிருந்து வெங்காற்று வீசிக்கொண்டிருக்கும். நள்ளிரவுக்குப்பின்னர்தான் புராணகங்கையில் இருந்து மெல்லிய குளிர்காற்று வரத்தொடங்கும். அதிகாலையில் கண்விழிக்கும்போதே வெப்பம் ஏறி உடல் வியர்வையில் நனைந்திருக்கும். எழுந்ததுமே காவியச்சுவடியை நோக்கி கை நீட்டும் வழக்கம்கொண்டிருந்த அவன் அரண்மனையின் பின்கட்டில் இருந்த சிறுகுளத்தில் நீராடி வந்துதான் ஏட்டுப்பீடத்தின் முன் அமர்வான். ஓரிரு செய்யுட்களை வாசிப்பதற்குள்ளாகவே சாளரம் வழியாக வெண்ணெருப்பு போல வெயில் பீரிட்டு வந்து அறைக்குள் நிற்கத் தொடங்கிவிடும். காகங்கள் வாய்திறந்து பதைக்கும் நாக்குகளுடன் மரங்களுக்குள் சென்று அமர்ந்துவிடும்.

அஸ்தினபுரியில் இலைகள் அசைந்தே நெடுநாட்களாகிவிட்டன என்று சுருதை சொன்னாள். “மதுராபுரியில் இப்படியொரு வெப்பத்தை நான் அறிந்ததேயில்லை” என்றாள். “மதுராபுரி ஆற்றங்கரையில் உள்ளது. யமுனையில் நீர்வற்றுவதில்லை. கோடைகாலத்தில் பனியுருகிய நீருடன் அது குளிர்ப்பெருக்காக வருகிறது” என்று சொல்லி சுவடிகளை மூடிக்கட்டியபடி விதுரன் எழுந்து “நான் அரண்மனைக்குக் கிளம்புகிறேன்” என்றான். சுருதை சற்றே முகம் வாடி “தாங்கள் இங்கே இருப்பதேயில்லை. மைந்தர்களை தொட்டே பலநாட்களாகின்றன” என்றாள்.

விதுரன் “சிலதருணங்களில் யானையை பாகன் சுமப்பான் என்று ஒரு பழமொழி உண்டு” என்றான். அஸ்தினபுரியின் அரசுச்சுமையை முழுக்கவே அவன்தான் ஏற்றிருந்தான். பீஷ்ம பிதாமகர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. பேரரசிக்கு ஆட்சியைப்பற்றிய நினைவுகளே மறைந்துவிட்டன. யமுனைக்கரையின் எளிய மீனவ மூதாட்டியாக அமர்ந்திருந்தாள். திருதராஷ்டிரனுக்கு இசையன்றி ஈடுபாடில்லை. சகுனி தன் மருகர்களை பயிற்றுவிப்பதன்றி ஏதுமறியாமல் இருந்தான்.

“கங்கை தன் வழியை தானே கண்டுகொள்கிறது. அதை எவரும் ஆட்சிசெய்வதில்லை” என்று சுருதை சொன்னாள். அவன் புன்னகைசெய்தபடி “குடும்பத்தலைவிகளுக்குத் தேவையான வரிகளை எல்லாம் மதுராபுரியிலிருந்தே கற்றுவந்திருக்கிறாய்” என்றான். அவள் சிரித்தாள். அவன் “மைந்தர்கள் எங்கே?” என்றான். “இரவு அவர்கள் நெடுநேரம் துயில்வதில்லை. ஆகவே விடிந்தபின் எழுவதுமில்லை” என்றாள் சுருதை.

மைந்தர்கள் பிறந்ததிலிருந்து சுருதை அரண்மனையின் மேற்கே இருந்த அறையில்தான் துயின்றாள். அங்கே உயரமற்ற மஞ்சத்தில் சுபோத்யன் கருக்குழந்தைபோல சிற்றாடையுடன் சுருண்டு துயின்றுகொண்டிருந்தான். அவனுடைய மெல்லிய உடலில் விலாவெலும்புகள் வரிவரியாகத் தெரிந்தன. விளையாடத்தொடங்கும் குழந்தை விரைவாக தன் மழலைக்கொழுப்பை இழக்கத் தொடங்குகிறது. சிறுபண்டி வற்றுகிறது. புறங்கைகளில் நரம்புகள் தெரியத்தொடங்குகின்றன. கழுத்தெலும்புகள் எழுகின்றன. பற்கள் விழுந்து முளைக்கும்போது கன்னக்கதுப்பு மாறுகிறது. கண்முன் குழந்தை மைந்தனாக ஆகும் மாற்றம். முதல்குழந்தையின் அந்த மாற்றம் பெற்றோருக்கு ஒரு இழப்புணர்வையே உருவாக்குகிறது.

சுசரிதனுக்கு ஒருவயதாகவில்லை. அவன் இருகைகளையும் விரித்து கால்களை அகற்றி மல்லாந்து படுத்திருந்தான். சந்தனக்குழம்பில் குமிழி போல சிறிய அழகிய பண்டியில் தொப்புள் தெரிந்தது. உள்ளங்கால் மலரிதழின் வெண்மையுடன் இருக்க விரல்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருந்தன. வாயிலிருந்து எச்சில் வழிந்த தடம் உலர்ந்திருந்தது. விதுரன் குழந்தையின் காலின் அடியில் மெல்ல வருடி வயிற்றில் முத்தமிட்டான். சுசரிதன் துயிலிலேயே புன்னகை செய்து உடலைக் குறுக்கியபின் திரும்பிப்படுத்தான். சுபோத்யனின் தலைமுடியை மெல்ல வருடியபின் விதுரன் கண்களால் மனைவியிடம் விடைபெற்று வெளியே நடந்தான்.

“காலை தொடங்குவதற்குள்ளாகவே நாளின் நீளத்தை உணரத்தொடங்கிவிடுகிறோம்” என்றார் வைதிகர். விதுரனின் களைப்பைக் கண்டு புன்னகைசெய்தபடி “நான் இதுவரை பன்னிரண்டு ஆறாண்டுக்கோடைகளைக் கண்டுவிட்டேன். என் வயதைவைத்துப்பார்த்தால் வரப்போகும் நூற்றியிருபதாண்டுப்பஞ்சத்தைக் காணாமல் சென்றுவிடுவேன்” என்றார். விதுரன் கைகளை சோம்பலுடன் வீசியபடி “வெப்பம் காரணமாக இரவில் துயில்நீப்பதனால் விழிகள் சோர்ந்திருக்கின்றன” என்றான். புராணகங்கைக்குள் இருக்கும் கோடைகால மாளிகையில் தங்கலாம். அங்குதான் திருதராஷ்டிரன் இரவுறங்குகிறான். அங்கே மண்ணுக்குள் நீரோடுவதனால் குளிர் இருக்கிறது. மரங்களும் செறிந்திருக்கின்றன. ஆனால் அவன் தன் மாளிகையில் இரவு இருந்தாகவேண்டும் என்று எண்ணினான்.

மூன்றுமாதங்களுக்கு முன்னர்தான் அவன் அன்னை சிவை மறைந்தாள். மிக எளிய இறப்பு, பறவைகள் இறப்பதைப்போல. அதிகாலையில் எப்போதும் அவளுடைய வடக்கு உப்பரிகையில் உடலைச்சுருட்டி அமர்ந்து வெளியே பார்த்துக்கொண்டிருக்கும் நிலையிலேயே அவளை சுருதையும் அவனும் கண்டுவந்தார்கள். சுருதை சென்று அவளைத் தொட்டு எழுப்பி நீராட்டறைக்குக் கொண்டுசெல்வாள். ஆடையணிகள் அணிந்தபின் அவள் அரசியருக்குரிய காலைபூசனைகளுக்காக மங்கலத்தாசியரும் தாம்பூலச்சேடியரும் சூதரும் சூழ சென்று வருவாள். அன்று வழக்கம்போல சுருதை சென்று அவளைத் தொட்டதுமே தெரிந்துவிட்டது. அவள் விழிகள் திறந்து வெளியே நோக்குபவைபோலத்தான் இருந்தன.

விசித்திரவீரியனின் பார்ஷவி என்னும் நிலையில் அவளுக்குரிய சடங்குகள் அரண்மனையிலும் பின்னர் கங்கையிலும் முறைப்படி நடந்தன. அவள் இறப்பு எவருக்கும் எந்தத் துயரையும் அளிக்கவில்லை. சுருதை மட்டுமே அவளுக்காக கண்ணீர் விட்டாள். சத்யவதி “அவளுக்கு இறப்பைத்தவிர வேறு விடுதலை இல்லை” என்று மட்டும் சொல்லி பெருமூச்சுடன் “சோமரே, அனைத்தும் முறைப்படி நடக்கட்டும். வைதிகர்களுக்கும் சூதர்களுக்கும் பரிசுகள் குறையாமல் வழங்குங்கள். குடிகள் மூன்றுநாட்கள் துயராடட்டும். அரண்மனையில் ஏழுநாட்கள் கொடிகள் இறங்கியிருக்கட்டும்” என்றாள்.

அது ஒரு சூதகுலத்து பார்ஷவிக்கு ஒருபோதும் அளிக்கப்படாத மதிப்பு. ஆனால் அதை சத்யவதி சொல்லிக் கேட்டபோது விதுரன் கூசினான். தன் பார்வையை மஞ்சத்தில் உறைந்துகிடந்த சடலத்தை நோக்கித் திருப்பிக்கொண்டான். மெலிந்து ஒடுங்கிய முகம். கன்னங்களும் கண்களும் குழிந்திருந்தமையால் அவள் மூக்கு பெரியதாகப்புடைத்துத் தெரிந்தது. கூந்தல் பாதிநரைத்து உமிச்சாம்பல் போல காதுகளை மூடியிருந்தது. இருகைகளும் மார்பின் மேல் கோத்து வைக்கப்பட்டிருந்தன. மெலிந்திருந்தமையால் விரலில் மூங்கில்போல முட்டுகள் பெரியதாகத் தெரிந்தன.

கங்கை நீரில் இறங்கி நின்று வைதிகர் நீர்ச்சடங்குகளைச் செய்துகொண்டிருந்தபோது அவன் அவளைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தான். அவளுக்கு கங்கையில் நீர்க்கடன் அளிக்கையில் மட்டும்தான் அவளைப்பற்றி எண்ணிக்கொள்கிறோம் என்று நினைத்தான். அவனை ஈன்ற அன்னை. ஆனால் ஒருகட்டத்திலும் அந்த அன்பை அவன் அவள்மேல் அறிந்ததில்லை. அது பிழை என உணர்ந்து அதற்காக அவன் முயன்றதுண்டு. அவள் மறைந்தபின் அவளைப்பற்றி நெகிழ்வுடனும் குற்றவுணர்ச்சியுடனும் எண்ணமுயன்றதுண்டு. ஆனாலும் அவள் எவரோவாகவே இருந்தாள். நெருங்காத ஒருவரை நேசிக்கமுடியாத மானுடமனத்தின் எல்லையைப்பற்றி எண்ணிக்கொண்டான். ஒரு தொழுவத்தில் கட்டப்பட்டதனால் மட்டும் ஒன்றையொன்று நேசிக்கும் பசுக்கள் போன்றவர்கள்தானா மனிதர்களும்?

அவளை நினைக்குபோதெல்லாம் அந்த வடக்கு உப்பரிகையில் அவள் சுருண்டு அமர்ந்திருக்கும் காட்சிதான் நினைவுக்கு வந்தது. அவள் ஏங்கிக்கொண்டிருப்பது வெளியே செல்லத்தான் என முதலில் அவன் நினைத்தான். நினைத்த இடங்களுக்குச் செல்லும் வாழ்க்கை கொண்டிருந்த எளிய சூதப்பெண் அவள். அரசியின் முறைமைகளை தளைகளாக அணிந்துகொண்டவள். அவளை ஒவ்வொருநாளும் அவள் விரும்பும் வெளியிடங்களுக்குக் கொண்டுசெல்லும்படி அவன் சேடியருக்கு ஆணையிட்டான். ஆனால் அவள் வெளியே செல்லவிரும்பவில்லை. அவள் செல்லும் வழக்கமான வழிகளை விட்டு சற்று விலகினால்கூட பதறி உடல்நடுங்கினாள். அவள் ஒவ்வொருநாளும் பார்த்துக்கொண்டிருந்த வடக்குச்சாலைக்குச் சென்றபோதுகூட அதை அவளால் அடையாளம் காணமுடியவில்லை.

நீர்க்கடன் முடிந்து வைதிகருக்கு காணிக்கை கொடுத்து வணங்கி அவன் மீண்டும் தேரிலேறிக்கொண்டான். இன்னும் சில நீர்க்கடன்கள். அதன்பின் மாதம்தோறும் நினைவுகூர்வதுகூட இல்லாமலாகிவிடும். வருடந்தோறும் கொடுக்கும் நீர்க்கடனும் மெல்லமெல்ல கடமையாக மாறி பொருளிழந்துவிடும். அவனை எவரும் சிவேயன் என அழைக்கப்போவதில்லை. சுருதையின் சொற்களில் ஒருவேளை இன்னும் சில ஆண்டுகாலம் அவள் வாழலாம். மைந்தர்கள் அச்சொற்களாக அவளை நினைவுகூரலாம்.

அவன் கருவூலச்சுவடிகளை முழுமையாக வாசித்து ஆணைகளை சுருக்கமாக ஓலைநாயகங்களுக்குச் சொல்லிவிட்டு பேரரசியின் அரண்மனைக்குச் சென்றான். ஒவ்வொருநாளும் முன்மதியத்தில் அவன் அவளை சந்திக்கும் நேரம் அமைந்திருந்தது. சத்யவதியின் அரண்மனைக்கு முன்னால் ஒரு பல்லக்கு நின்றிருந்தது. நிமித்திகர்களோ கணிகர்களோதான் என அவன் புன்னகையுடன் எண்ணிக்கொண்டான். அவர்களைத்தவிர எவரையுமே சத்யவதி சந்திக்காமலாகி பல்லாண்டுகளாகிவிட்டன. தன் சிறுமைந்தர்களின் பிறவிநூல்களை அவள் மீண்டும் மீண்டும் கணித்துக்கொண்டிருந்தாள். “அவருடைய ஆமாடப்பெட்டிக்குள் ஆயிரம் பிறவிநூல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மைந்தனுக்கும் இருபது வெவ்வேறு பிறவிநூல்கள் உள்ளன. அவற்றைப் பார்த்தால் பிரம்மனே திகைத்து தான் படைத்தவர்கள் மொத்தம் எத்தனை என்று மறந்துவிடுவார்” என்று சியாமை ஒருமுறை சிரித்துக்கொண்டே சொன்னாள்.

மீண்டும் மீண்டும் அவள் எளிய நம்பிக்கைகளை நாடிக்கொண்டிருக்கிறாள் என்று விதுரன் அறிந்தான். நிமித்திகர் சொல்லும் சிறிய அவப்பயன் கூட அவளை பதறச்செய்தது. உடனே இன்னொரு நிமித்திகரை வரச்சொல்லி இன்னொருமுறை பிறவிப்பயன் கேட்கத் தொடங்குவாள். விதுரன் நிமித்திகர்கள் அனைவரிடமும் உறுதியான ஆணைகளை பிறப்பித்தான். அனைத்து நிமித்தங்களும் நலன்பயப்பதாகவே சொல்லப்படவேண்டும் என்று. முதல்நிலை நிமித்திகர் அவளைப்பார்ப்பதையே தவிர்க்கத் தொடங்கினர். ஆகவே எளிய நாடோடி நிமித்திகர்களை பொய்யான புகழுடன் அவனே அவளிடம் அனுப்பிக்கொண்டிருந்தான். அதற்குப்பயனிருந்தது. நாள்செல்லச்செல்ல அவள் முகம் தெளிந்து வந்தது. அவள் நிறைவும் உவகையும் கொண்டவளாக ஆனாள்.

“தெரியுமா? வேசரதேசத்து நிமித்திகரே சொல்லிவிட்டார். என் சிறுமைந்தர்கள் ரகுகுலத்து ராமனின் தம்பியர் போல இணைந்து அஸ்தினபுரியை ஆள்வார்கள் என்கிறார். அவர்தான் பாரதவர்ஷத்திலேயே பெரிய நிமித்திகராம். அவர்தான் மகதத்தில் பிருகத்ரதனின் மைந்தன் ஜராசந்தனே ஆட்சியமைப்பான் என்று கணித்துச் சொன்னவராம். அப்படியே நடந்ததா இல்லையா? இதோபார் அஸ்தினபுரியை பாரதவர்ஷத்தின் தலைநகரமாக அவர்கள் மாற்றுவார்கள் என்று எழுதியே கொடுத்திருக்கிறார்” என்று சொல்லி பரபரப்பாக சுவடிகளை எடுத்து விரித்துக்காட்டும் அவளுடைய மலர்ந்த முகத்தைப்பார்க்கையில் விதுரன் உள்ளூர ஒரு திகைப்பையே உணர்ந்தான். அவள் கற்றவை வென்றவை அனைத்தையும் இழந்து பேதைமையையே அழகாக அணிந்த வெறும் அன்னை என அவன் முன் நின்றிருப்பாள். அத்தனை படிகளும் பீடங்களும் இப்படி ஒரு எளிய மூதன்னையாக ஆகி பிறரால் பரிவுடனும் இளநகையுடனும் குனிந்து நோக்கப்படுவதற்காகத்தான் என்றால் படைப்பை நடத்தும் அது மனிதர்களைக்கொண்டு ஒரு கேலிநாடகத்தைத்தான் ஆடிக்கொண்டிருக்கிறதா என்ன?

உள்ளே நிமித்திகர் ராசிக்களத்தில் சோழிகளைப் பரப்பிவைத்து பயன்நோக்கிக்கொண்டிருந்தார். விதுரன் அருகே பீடத்தில் அமர்ந்துகொண்டான். சத்யவதி “சற்றுமுன்னர்தான் விசாலர் என் முதல் சிறுமைந்தனைப்பற்றிய பயனைச் சொன்னார். துரியோதனனைச் சுற்றி பரமபுருஷனின் சங்கும் சக்கரமும் காவல் நிற்கிறதாம். அவனுக்கு எதிரிகளே இல்லையாம்” என்றாள். “இப்போது அவரிடம் இந்தக்கோடையைப்பற்றி பார்க்கச் சொல்லியிருக்கிறேன். இரவிலும் வெம்மை தாளவில்லை. ஆறாண்டுக்கோடை என்றாலும் நான் இந்த அளவுக்குப் பார்த்ததில்லை. மழை வரும் நாளை கணித்து சொல்லச்சொன்னேன்.” சென்ற சில ஆண்டுகளாகத்தான் அவள் காலநிலை பற்றி குறைகளைச் சொல்லத் தொடங்கியிருந்தாள். வெயிலையும் குளிரையும் அவள் அறியத்தொடங்குவதே இப்போதுதான்.

நிமித்திகர் நிமிர்ந்து “பேரரசி, மழை இன்னும் கடலில் கருக்கொள்ளவில்லை” என்றார். “மண்ணில் விழும் ஒவ்வொரு மழைத்துளியும் ஓர் உயிரின் வேண்டுதலுக்கிணங்கவே விழுகிறது என்கின்றன நூல்கள். நாம் வேண்டிக்கொள்ளாமல் மழை வருவதில்லை. மண்ணிலுள்ள மானுடரும் மிருகங்களும் பூச்சிகளும் புழுக்களும் செடிகொடிகளும் கல்லும் மண்ணும் மழைக்காக வேண்டிக்கொள்ளவேண்டும்.” சத்யவதி “ஆம், அதை நானும் அறிவேன்” என்றாள். “மழைவேள்வி ஒன்றை செய்யவேண்டும். நாம் தாகம் கொண்டிருக்கிறோம் என்றும் வெம்மை கொண்டிருக்கிறோம் என்றும் வருணனுக்கும் இந்திரனுக்கும் சொல்லவேண்டும்.”

“மழைவேள்விக்கு ஆவன செய் விதுரா… உடனே, அடுத்த நன்னாளிலேயே” என்றாள் சத்யவதி. விதுரன் தலை வணங்கினான். “அதிராத்ர அக்னிசாயனத்துக்குரிய வைதிகர்களை வரச்சொல். தவளைகளை நமக்காக விண்ணை நோக்கி இறைஞ்சவைக்கும் வேள்வி அது. கங்கைக்கரையின் கோடானுகோடி தவளைகளின் நாவில் வேதம் எழும்போது விண்ணோர் இரங்கியாகவேண்டும்” என்றாள். நிமித்திகர் “ஒவ்வொரு கொடுவேனிலும் மேலும் அதிகமான தவளைமுட்டைகளை விரியச்செய்கின்றன. தவளைகளை மேலும்மேலும் பெருகச் செய்கின்றன. தவளைக்குரல் எழும் நாட்டிடம் வருணனும் இந்திரனும் கனிவுடனிருக்கிறார்கள்” என்றார்.

நிமித்திகர்கள் சென்றபின்னர் விதுரன் முந்தையநாளின் நிகழ்ச்சிகளையும் அரசாணைகளையும் சுருக்கமாகச் சொன்னான். அது வேள்விமந்திரம் சொல்வதுபோல ஒரு சடங்குதான் என்று அவனுக்குத்தோன்றும். அவள் விழிகள் எதையுமே உள்வாங்குவதில்லை. அவன் சொல்லிமுடித்ததும் அவள் மிக எளிய வினாக்களைக் கேட்பாள். அவன் அதற்கு ஒற்றைவரி விடைகளைச் சொல்வான். அவள் நிறைவடைந்து விடுவாள். “தேவவிரதனைப்பற்றி ஏதாவது தெரிந்ததா?” என்று அவள் கேட்டாள். விதுரன் “இல்லை அன்னையே. அவர் இம்முறை திருவிடத்துக்கும் அப்பால் தமிழ்நிலத்துக்குச் சென்றிருக்கக்கூடும்” என்றான்.

சத்யவதி பெருமூச்சுவிட்டு “அவனுக்கு ஓர் உடலும் ஒரு வாழ்க்கையும் போதவில்லை” என்றபின் புன்னகைத்து “ஓர் உடலிலும் ஒரு வாழ்க்கையிலும் எஞ்சியவற்றை என்ன செய்வதென்று தெரியாமல் நான் இருக்கிறேன்” என்றாள். அவளிடம் பேசப்படும் அனைத்தும் அவளுக்கு தன் முதுமையைத்தான் நினைவூட்டுகிறது என்று அவன் எண்ணிக்கொண்டான். அவள் முகம் மலரவேண்டுமென்றால் இனிய இறந்தகால நினைவொன்று மீண்டுவரவேண்டும். எதிர்காலத்தில் அவள் அஞ்சுவதற்கும் ஐயம்கொள்வதற்குமானவை மட்டுமே இருந்தன.

விதுரன் மீண்டும் அமைச்சுமாளிகைக்குச் சென்று சற்று ஓய்வெடுப்பதற்காக மஞ்சத்தில் படுத்தபோது உளவுச்சேவகன் வந்து வாசலில் நின்றான். முதன்மையான செய்தி ஏதும் இல்லாமல் அவன் ஓய்வுநேரத்தில் வருவதில்லை என்று அறிந்திருந்த விதுரன் முதல்கணம் எண்ணியது பீஷ்மபிதாமகரின் இறப்பைப் பற்றித்தான். “என்ன?” என்று அவன் கேட்டதும் சேவகன் பறவைகொண்டுவந்த ஓலையை நீட்டியபடி “மாமன்னர் பாண்டு” என்றான்.

தலைமேல் அடிவிழுந்தது போல அரைக்கணம் செயலற்றுவிட்டு பின் உடல் பதற எழுந்து அந்த ஒலையை வாங்கி வாசித்தான். முதல்முறை சொற்கள் பொருளாக மாறவில்லை. மூன்றாம் முறை அஞ்சிய பறவை மீண்டும் கிளையில் அமர்வதுபோல அவன் அகம் அச்சொற்களில் அமைந்தது. மீண்டும் மீண்டும் அவ்வரிகளை வாசித்துக்கொண்டிருந்தான்.

“மூன்று பருந்துகள் தொடர்ந்து செய்தியைக் கொண்டுவந்தன. ஒரே செய்தியின் மூன்று பிரதிகள்” என்றான் சேவகன். விதுரன் தன் சால்வையைப் போட்டுக்கொண்டு வெளியே வந்து பீடத்தில் அமர்ந்துகொண்டு “அமைச்சர்களை வரச்சொல்” என்றான். கண்களை மூடி நெற்றிப்பொட்டை அழுத்தியபடி சற்றுநேரம் அமர்ந்திருந்தான். இந்தத் தருணத்துக்கு அப்பால் இனி என்ன நிகழும் என்று எண்ணாமலிருப்பதே இதைக் கையாள்வதற்கான சிறந்த வழி. ஆம், அதைத்தான் செய்யவேண்டும். இப்போது செய்யவேண்டியவற்றை மட்டுமே யோசிக்கவேண்டும். ஆனால் எண்ணம் முன்னோக்கித்தான் பாய்ந்து சென்றுகொண்டிருந்தது. நடக்கவிருப்பவை, நடக்கக்கூடுபவை. எதிர்காலம். எதிர்காலம் என ஒன்று உண்டா என்ன? நம் பதற்றங்களைத்தான் எதிர்காலம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோமா?

சோமரும் லிகிதரும் விப்ரரும் வந்தனர். பேரமைச்சர் யக்ஞசர்மர் நடமாடமுடியாதவராக படுக்கையில் இருந்தார். அவரது மூத்தமைந்தர் சௌனகர் இளைய அமைச்சராக சேர்ந்திருந்தார். “சோமரே, தாங்களே நேரில்சென்று பேரரசியிடம் செய்தியை அறிவியுங்கள். லிகிதரே தாங்கள் மூத்த அரசியிடம் செய்தியைச் சொல்லுங்கள். நான் தமையனாருக்கு அறிவிக்கிறேன். விப்ரர் சகுனியிடம் செய்தியறிவிக்கவேண்டும். சௌனகர் வைதிகருக்கும் படைகளுக்கும் நகர்மக்களுக்கும் அறிவிக்கட்டும்” என்றான் விதுரன். அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

“படைத்தலைவர்கள் நகரை எட்டு பகுதிகளாகப் பிரிக்கவேண்டும். எட்டுப்பகுதிகளும் தனித்தனியாக படைகளால் காக்கப்படட்டும். மக்கள் ஓரிடத்தில் அதிகமாகக் கூடி நெரிசல் எழாமல் அது தடுக்கும். அனைத்து ஒருக்கங்களும் முடிந்தபின்னர்தான் செய்தி முறையாக முரசறையப்படவேண்டும். பாரதவர்ஷத்தின் அனைத்து மன்னர்களுக்கும் பேரரசியின் செய்தி இன்றிரவே தூதர்கள் வழியாக அனுப்பப்படவேண்டும். அவற்றில் கடைபிடிக்கப்படும் முறைமைகள் வழுவாதிருக்கவேண்டும். அதற்கு தீர்க்கவியோமரும் வைராடரும் பொறுப்பேற்றுக்கொள்ளட்டும்.”

சௌனகர் “இளையஅரசியிடம் யார் தெரிவிப்பது?” என்றார். விதுரன் அவரை பொருள்நிகழாத விழிகளால் சிலகணங்கள் நோக்கிவிட்டு நீர்ப்பிம்பம் போல கலைந்து, “எவர் சென்று சொன்னாலும் என்ன நிகழுமென்று சொல்லமுடியாது அமைச்சரே. என்னால் எம்முடிவையும் எடுக்கமுடியவில்லை. இச்செய்தியை தமையனார் எப்படி எதிர்கொள்வாரென்றே என்னால் உய்த்துணர முடியவில்லை. அவரை அணுகி இச்செய்தியைச் சொல்ல என்னால் மட்டுமே முடியும் என்பதனால்தான் நானே செல்கிறேன்” என்றான்.

சௌனகர் “இளையபிராட்டியாரிடம் செய்தியைச் சொல்ல உகந்தவர் பேரரசிதான்” என்றார். அதைக்கேட்டதுமே விதுரன் வியப்புடன் அதைவிடச்சிறந்த வழி இருக்கமுடியாதென்று உணர்ந்தான். யக்ஞசர்மரை அறுபதாண்டுகாலம் பேரமைச்சராக நீடிக்கச்செய்த நடைமுறைவிவேகம் மைந்தரிலும் நீடிக்கிறது என எண்ணிக்கொண்டான். சௌனகரின் இளமைநிறைந்த விழிகளை நோக்கி “ஆம், அமைச்சரே. அதுவே ஒரே வழி. பேரரசி முதலில் செய்தியை அறிந்துகொள்ளட்டும். அவர்கள் சற்று மீண்டதும் அவர்களே சென்று இளையஅரசியிடம் செய்தியைச் சொல்லட்டும்” என்றான்.

அவர்கள் கிளம்பியபின்னரும் அவன் அப்படியே சற்று நேரம் அமர்ந்திருந்தான். திருதராஷ்டிரனைக் கண்டு அச்செய்தியைச் சொல்வது எப்படி என்று சிந்திக்கத் தொடங்கியதுமே அகம் திகைத்து விலகி வேறு சிறிய நிகழ்ச்சிகளை நோக்கிச் சென்றது. அங்கே இந்நேரம் பாண்டுவின் சிதைமேல் நெருப்பு ஏறியிருக்கும். அவனுடைய கூன் விழுந்த வெண்ணிறமான சிறிய உடல் அவன் கண்முன் எழுந்ததும் துயரம் அலைவெள்ளம்போல எழுந்து அறைந்து அகத்தின் அனைத்து இடங்களையும் நடுங்கச்செய்தது. உடனே எண்ணங்களை விலக்கிக் கொண்டான். குந்தி இந்நேரம் அணிகளையும் மங்கலங்களையும் களைந்திருப்பாள். ஒருவேளை எரியேறியிருப்பாள். மீண்டும் ஓர் அதிர்வுடன் எண்ணத்தை விலக்கிக்கொண்டான்.

அமர்ந்திருக்கும் தோறும் எண்ணங்கள் திசைகெட்டு பாய்கின்றன. கால் எடுத்துவைத்து விரைந்து நடப்பது ஒன்றே அவற்றை சீராக்கி முன்னோக்கி மட்டுமே செலுத்த முடியும். நடக்கும்போது கால்களின் தாளம் எப்படியோ சித்தத்துக்கும் வந்துவிடுகிறது. அவன் இடைநாழி வழியாகச் சென்றான். சொற்களை ஒழுங்குசெய்யவேண்டும். மிகச்சரியான சொற்களில் சொல்லவேண்டும். எப்படி சொல்லப்படமுடியுமோ அப்படி. ஆனால் அதைத்தான் திரும்பத்திரும்ப எண்ண முடிந்ததே ஒழிய ஒரு சொல்லைக்கூட எடுத்துவைக்க முடியவில்லை.

புஷ்பகோஷ்டத்தை தாண்டிவிட்டிருப்பதை உணர்ந்தான். மீண்டும் திரும்பநடந்தான். துரியோதனனின் பிறப்பை ஒட்டி திருதராஷ்டிரனுக்கும் அவனுக்கும் இடையே ஒரு விலகல் நிகழ்ந்தது. திருதராஷ்டிரன் முன்னாலிருந்து எழுந்துசென்ற அவன் எட்டுநாட்கள் புஷ்பகோஷ்டம் பக்கமே செல்லவில்லை. அதன்பின் விப்ரன் வந்து “உடனே வந்து சந்திக்கும்படி மூத்தவரின் ஆணை” என்றான். ஒருகணம் விதுரன் அஞ்சினான். பின்னர் அதுவும் நல்லதற்கே என்று தோன்றியது. முதல்நாள் அவன் கசப்புடன் திருதராஷ்டிரன் அரண்மனைக்குச் செல்லாமலிருந்தான். மறுநாள் அந்தக் கசப்பு மேலும் வளர்ந்தது. அடுத்தநாள் அக்கசப்பை அவனால் நினைவுகூரத்தான் முடிந்தது. மேலுமொருநாள் தாண்டியபோது அது பழையநினைவாக ஆகிவிட்டிருந்தது.

ஆனால் மூன்றுநாட்களின் விலகலைக் கடந்து மீண்டும் தமையன் முன் சென்று நிற்க அவனுடைய ஆணவம் தயங்கியது. நாளை நாளை என அது ஒத்திப்போட்டது. நாட்கள் செல்லச்செல்ல அந்த நாட்களின் இடைவெளியே அதை அரியசெயலாக ஆக்கியது. எட்டுநாட்களுக்குப்பின் அவன் தமையனை அத்தனைநாள் சந்திக்காமலிருந்தது மிகப்பெரிய நிகழ்வாக ஆகிவிட்டிருந்தது. அதற்கான விளக்கத்தை அவனால் உருவாக்கிக்கொள்ளமுடியவில்லை. மீண்டும் அவனை சந்திக்கவே முடியாதென்று தோன்றியது. இருபத்தைந்தாண்டுகாலமாக அம்பிகையும் அம்பாலிகையும் அப்படித்தான் ஒருவரை ஒருவர் சந்திக்காதவர்களாக ஆகியிருப்பார்கள் என நினைத்துக்கொண்டான்.

திருதராஷ்டிரனின் அழைப்பு ஒரு வலுவான உடனடிக்காரணமாக அமைந்தது. அது அனைத்து இக்கட்டுகளையும் முடித்துவிட்டது. அவன் புஷ்பகோஷ்டத்துக்குச் சென்று தமையன் முன் நின்றான். அவர் வசைபாடினாலும் அடித்தாலும் அமைதியாகப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று எண்ணிக்கொண்டான். ஆனால் திருதராஷ்டிரன் அவனைக் கேட்டதும் இரு கைகளை விரித்து “இளையவனே” என்றான். விதுரன் உடைந்து அழுதபடி அந்த விரிந்த கைகளுக்குள் தன்னை ஒப்புக்கொடுத்தான். அவனைத் தன் மார்புடன் அணைத்தபடி திருதராஷ்டிரன் “தம்பி, நீ கற்றவன், ஞானி. நான் விழியிழந்த பேதை. என் உணர்ச்சிகளை நீ அறியவேண்டாமா? என் அறிவின்மைகளை நீ மன்னிக்கவேண்டாமா?” என்றான். “மூத்தவரே, உங்கள் பாதங்களில் ஆயிரம் முறை விழுந்து ஒவ்வொரு சொல்லுக்கும் மன்னிப்பு கோருகிறேன். மானுட உணர்ச்சிகளை அறியாத வெற்று நூலறிஞன் நான்” என்று அவன் உடைந்து அழுதான்.

புஷ்பகோஷ்டத்தின் வாயிலை அடைந்தபோது விதுரன் தன்னுள் சொல்வதற்கென ஒரு சொல்கூட இல்லை என்பதை உணர்ந்தான். மறுகணமே ஒரு இறப்பைச் சொல்ல எதற்கு அத்தனை நுண்சொற்கள் என்று தோன்றியது. இறப்பு மிகமிக இயல்பாக நிகழ்கிறது. மண்ணில் இருக்கும் அனைத்து உணர்ச்சிகளுக்கும் அளவையறிதல்களுக்கும் அப்பால் அது உள்ளது. அதைச்சொல்லும் எச்சொல்லும் சிறுத்துப்பொருளிழந்தே நிற்கும். அல்லது அதைச்சொல்லும் எச்சொல்லையும் அதுவே பெரும்பொருள் கொண்டதாக ஆக்கிவிடும். எப்படி அது நிகழ்கிறதோ அப்படி அது தெரிவிக்கப்படுவதே முறையானது.

அவன் வாயிலில் நின்ற அணுக்கச்சேவகனாகிய விப்ரனிடம் உள்ளே சென்று தமையனிடம் அவரது இளையவரின் இறப்பைத் தெரிவிக்கச் சொன்னான். ”ஆடி மாதம், பரணிநாள், பின்மதியத்தில். நரம்புகளில் ஏற்பட்ட நோயால் உயிர்பிரிந்திருக்கிறது.”  விப்ரன் தலைதாழ்த்திவிட்டு உள்ளே சென்றான். அவனிடம் சிறு வியப்புக்கு அப்பால் எந்தத் தயக்கமும் இல்லை என்பதை விதுரன் கண்டான். ஏனென்றால் அவன் சொல்லும் செய்திக்கும் அவனுக்கும் உறவில்லை. அதுவரை தான் உணர்ந்த கொந்தளிப்புக்கான காரணம் தான் பாண்டுவின் தம்பி என்பதுதான். சாவு என்பது ஒன்றே. தன் சாவு, தன்னைச்சார்ந்தவர்களின் சாவு. பிறசாவுகளெல்லாமே வெறும் செய்திகள் மட்டுமே.

அவன் அங்கே நிற்கவே விழைந்தான். ஆனால் அவனையறியாமலேயே விப்ரனைத் தொடர்ந்துசென்றான். உள்ளே திருதராஷ்டிரன் ஒரு பீடத்தில் அமர்ந்து மடியில் ஒரு மகரயாழை வைத்துக்கொண்டு மெல்ல தட்டிக்கொண்டிருந்தான். முகத்தில் யாழில் மட்டுமே குவிந்த சித்தத்தின் கூர்மை தெரிந்தது. விப்ரனின் காலடியைக் கேட்டதும் முகம் தூக்கி “விப்ரா மூடா? சஞ்சயன் எங்கே? அவனை வரச்சொல்” என்றான். விப்ரன் “அரசே, பெரிய செய்தி ஒன்றைச் சொல்லும்படி ஆணையிடப்பட்டிருக்கிறேன்” என்றான். “என்ன செய்தி” என்று கேட்ட திருதராஷ்டிரன் முகம் மாறி “பிதாமகர் நலமல்லவா?” என்றான்.

விப்ரன் “அவர் நலம் அரசே. இச்செய்தி தங்கள் இளையவரைப் பற்றியது. மனிதர்களுக்கெல்லாம் உரிய இறுதியை அரசர்களுக்குரிய முறையில் அவர் அடைந்தார்” என்றான் விப்ரன். விதுரன் அச்சொற்களைக் கேட்டு திகைத்தான். மிகமிகச் சரியான சொற்கள். அவன் சொல்லவில்லை அதை, இறப்பு அச்சொற்களை அதுவே உருவாக்கிக்கொண்டிருக்கிறது. திருதராஷ்டிரன் தன் இருகைகளையும் மேலே தூக்கி “எப்போது?” என்றான். “ஆடி மாதம், பரணிநாள், பின்மதியத்தில். நரம்புச்சிக்கலால் இறப்பு நிகழ்ந்தது.” திருதராஷ்டிரன் “விதுரன் எங்கே?” என்றான். விதுரன் “அரசே, இங்கிருக்கிறேன்” என்றான்.

மறுகணம் இரு கைகளையும் தூக்கியபடி பேரலறலுடன் திருதராஷ்டிரன் அவனை நோக்கி ஓடிவந்தான். “தம்பி, என் இளையவன் நம்மைவிட்டுச் சென்றுவிட்டான்! அவன் உடலைக்கூட நாம் பார்க்கமுடியாது” என்று கூவியபடி வந்து ஒரு பீடத்தில் முட்டிக்கொண்டான். அடுத்தகணம் சினத்துடன் அந்தப்பீடத்தைத் தூக்கி பேரொலியுடன் வீசினான். அருகே இருந்த தூணை ஓங்கி அறைந்தான். தூணின் மீதிருந்த உத்தரங்களுடன் அரண்மனைக் கட்டடத்தின் மேல்தட்டே குலுங்கி அதிர்ந்தது. “பாண்டு! என் தம்பி! பாண்டு” என்று கூவியபடி அவன் வெறிகொண்டு இருகைகளாலும் தன் மார்பில் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டான். கண்ணீர் வழிய விம்மியபடி அறைந்தபடியே இருந்தான். ‘பாண்டு! பாண்டு! பாண்டு!’ என்ற ஒற்றைச்சொல்லாக அவன் சித்தம் திகைத்துவிட்டது என்று பட்டது.

விதுரன் அந்தக் காட்சியை நோக்கியபடி அசைவில்லாமல் நின்றான். விப்ரன் விலகிச்சென்று கதவோரம் நின்றான். திருதராஷ்டிரன் தீ பட்ட யானைபோல அலறியபடி பெரிய கரங்களைச் சுழற்றி சுற்றிவந்தான். கைகளுக்குப்பட்ட சுவரிலும் தூணிலும் ஓங்கி அறைந்தான். கால்களில் முட்டியவற்றை எடுத்து வீசினான். மார்பிலும் தலையிலும் அவற்றை உடைத்து திறக்கமுயல்பவன் போல ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டு கூவினான். அந்த பயங்கரக் காட்சிதான் மிக இயல்பான துயரம் என்று விதுரன் எண்ணிக்கொண்டான். செய்யவேண்டியது அதுதான். அப்படி அழமுயன்றால் துயரங்களை எளிதில் கடந்துவிடலாம்.

அவன் தன்னை அழைப்பான் என்று சற்றுநேரம் விதுரன் காத்திருந்தான். பின்பு தெரிந்தது அந்தத் துயரில் வேறு எவருக்கும் இடமில்லை என்று. அதைப்பார்த்துக்கொண்டு கைகளைக் கட்டியபடி நின்றிருந்தவன் தன் மார்பு கண்ணீரால் நனைந்திருப்பதை உணர்ந்தான். அந்தக் கொந்தளிப்பை தன் அகமும் அதே உச்சத்தில் நடித்துக்கொண்டிருப்பதை அறிந்தான். அதன் வழியாக அவனும் மெல்லமெல்ல அகம் ஒழிந்து விடுபட்டுக்கொண்டிருந்தான்.

திருதராஷ்டிரன் தன் தலையில் கையை வைத்தபடி அப்படியே பின்னால் சாய்ந்து தரையில் அமர்ந்து அழுதான். விதுரன் திரும்பி விப்ரனை நோக்கி கைகாட்டிவிட்டு அருகே சென்று திருதராஷ்டிரன் தோள்களைப் பற்றி “அரசே வருக!” என்று அழைத்தான். திருதராஷ்டிரன் குழந்தைபோல அந்த அழைப்புக்கு இணங்கி அழுதுகொண்டே வந்தான். அவனை அருகிலிருந்த ஓய்வறைக்கு இட்டுச்சென்று மஞ்சத்தில் படுக்கச்செய்தான். தன் பெரிய உடலை குறுக்கிக்கொண்டு கருக்குழந்தைபோல கைகளை தொழுவதுபோல் மார்பின் மீது வைத்தபடி திருதராஷ்டிரன் ஒருக்களித்து படுத்தான். “பாண்டு… என் தம்பி! பாண்டு” என்று அடைத்த குரலில் அரற்றிக்கொண்டிருந்தான்.

வெண்கலதீச்சட்டியுடன் விப்ரன் அறைக்குள் வந்தான். அகிபீனாவின் மணத்தை விதுரன் உணர்ந்தான். தலையசைத்துவிட்டு மெல்ல வெளியே நடந்தான். அகிபீனா என்ன செய்கிறது? சித்தத்தை அழிக்கிறது. விழிக்கும்போது அந்தத் துயர் அங்குதான் இருக்கும். ஆனால் அது அந்த நதியின் அலைகளில் ஒழுகி சற்று அப்பால் தள்ளிச்சென்றிருக்கும். அப்பால்சென்றதுமே அது சிறியதாக ஆகிவிடுகிறது. அயலாக ஆகிவிடுகிறது.

சேவகன் வந்து பணிந்து இன்னொரு ஓலையை நீட்டினான். அதில் இன்னும் சற்று விரிவாக பாண்டுவின் எரியேறல் சடங்குகளைப்பற்றி சொல்லப்பட்டிருந்தது. மாத்ரி சிதையேறியதை வாசித்ததும் அவன் அவள் முகத்தை நினைவில் தேடினான். சற்று பருத்த வெண்ணிறமான பெண். நுரைபோலச் சுருண்ட கூந்தல். அதற்கப்பால் முகமென ஏதும் தெளிவாக எழவில்லை. ஓரிரு சடங்குகளுக்கு அப்பால் அவளை அவன் நேரில் பார்த்ததேயில்லை. இன்னும் சிலநாட்களில் அப்படி ஒரு பெயர் மட்டும் அரசகுலத்து வரலாற்றில் இருக்கும். அவள் முகம் அவளுடைய மைந்தர்களுக்கும் நினைவிலிருக்காது. மறைவது இத்தனை எளிதா என்ன? இப்படி மறைவதுதான் சரியானதா?

இறப்பின் கணத்தில் உருவாகும் எண்ண ஓட்டங்கள் எல்லாமே இறப்பை எளிதாக்கிக் கொள்வதற்காகத்தான். பெரிய உணவை சிறு துண்டுகளாக ஆக்கிக்கொள்வதுபோல அந்தப்பேரனுபவத்தை கூறு போட்டுக்கொள்வதற்காகத்தான். அதற்குமேல் அவற்றுக்குப் பொருளே இல்லை. அவை சிந்தனைகளே அல்ல. வெறும் எண்ண அலைகள். அவன் தன் அமைச்சகத்துக்குச் சென்று அமர்ந்துகொண்டதும் ஓலைநாயகங்கள் மன்னர்களுக்கு அனுப்பவேண்டிய ஓலைகளைக் கொண்டு வந்து காட்டினார்கள். அவற்றை வாசிக்கக் கேட்டு ஒப்புதலளித்து அனுப்பினான். மொழியாக ஆகும்தோறும் அனுபவம் அயலாகிச் சென்று கையாள எளிதாவதை உணர்ந்தான். ஒன்றேபோன்ற சொற்கள் அதை மேலும் நுட்பமாகச் செய்தன. ‘அஸ்தினபுரியின் அரசரும் குருகுலத் தோன்றலும் சந்திரமரபின் மணியும் விசித்திரவீரிய மாமன்னரின் அறப்புதல்வருமான மாமன்னர் பாண்டு…’

சோமர் வந்து அவனை மெல்ல வணங்கிவிட்டு பீடத்தில் அமர்ந்துகொண்டார். அவர் சொல்வதற்காக அவன் காத்திருந்தான். “பேரரசி செய்தியை முழுமையாகக் கூட கேட்கவில்லை” என்றார் சோமர். “அலறி நெஞ்சை அறைந்தபடி மயங்கி விழுந்துவிட்டார். அவரது அணுக்கச்சேடி சரியானநேரத்தில் பிடித்துக்கொள்ளவில்லை என்றால் வலுவான காயம்பட்டிருக்கும்.” விதுரன் பெருமூச்சுவிட்டான். அதை அவன் எதிர்பார்த்திருந்தான். அவன் சொல்லப்போவதை எதிர்பார்த்திருந்த சோமர் அதை அவன் சொல்லாததனால் அவரே தொடர்ந்தார். “பேரரசியா அது என்று திகைத்துவிட்டேன். எப்போதும் அவர் உணர்ச்சிகளை வெளிக்காட்டியதில்லை. பேரரசர் சந்தனு மறைந்தபோதும் சரி, தன் இரு மைந்தர்களும் மறைந்தபோதும் சரி, ஒரு துளி விழிநீர் சிந்தியதில்லை.”

விதுரன் தலையசைத்துவிட்டு பேசாமலிருந்தான். “மானுட உணர்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர் என்று சூதர்கள் பாடுகிறார்கள். அத்ரிகை என்னும் அப்சரஸின் வயிற்றில் உதித்தமையால் அவருக்கு நமது துயர்களும் கவலைகளும் அச்சங்களும் அறவே இல்லை என்கிறார்கள். இன்று அவரைப் பார்த்திருந்தால் எளிய வேளாண்குடி மூதன்னை என்றே எண்ணியிருப்பார்கள். அவர் மீதான அச்சமும் மதிப்பும் விலக அவருக்காக கண்ணீர் சிந்தியிருப்பார்கள்” சோமர் சொன்னார். பின் குரலைத் தாழ்த்தி “இளைய அரசிக்கு இதுவரை செய்தி அறிவிக்கப்படவில்லை. பேரரசியால் அது இயலாது” என்றார்.

“மூத்தஅரசிக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டதா?” என்றான் விதுரன். “ஆம், லிகிதர் சென்று காந்தாரத்து இளையஅரசி சத்யசேனையிடம் செய்தியைச் சொல்லியிருக்கிறார். அவர்களே மூத்த அரசிக்குத் தெரிவிப்பதாகச் சொன்னார்கள்.” விதுரன் பெருமூச்சுடன் எழுந்து சால்வையைச் சுற்றிக்கொண்டான். “இளைய அரசியிடம் தாங்களே சொல்லலாமென்று தோன்றுகிறது அமைச்சரே” என்றார் சோமர். “யார் அறிவித்தாலும் ஒன்றுதான் சோமரே. அரசமுறைமைக்காகவே நானே செல்கிறேன். அவரது அணுக்கச்சேடி சாரிகையிடம் சொல்லலாம் என்றுதான் படுகிறது” என்றபின் வெளியே நடந்தான்.

அம்பாலிகையின் அரண்மனைப்பகுதிக்கு அவன் வந்து ஆறுவருடங்கள் தாண்டிவிட்டன என்று உணர்ந்தான். பாண்டுசென்றபின் அரண்மனையின் இடப்பக்க நீட்சியான சித்திரகோஷ்டம் முழுமையாகவே கைவிடப்பட்டிருந்தது. பணியாட்களால் அது தூய்மையாக பேணப்படுவது தெரிந்தது. ஆனால் அனைத்து ஓவியச்சீலைகளும் மங்கலாகி நிறமிழந்திருந்தன. சுவர்ச்சித்திரங்கள் சாளரச்சீலைகள் அனைத்துமே பழையதாக இருந்தன. ஆனால் அது மட்டுமல்ல, அங்கே அதைவிட மையமான ஏதோ ஓர் இன்மை திகழ்ந்தது. அது மானுடர் வாழுமிடம் போலத் தெரியவில்லை.

அம்பாலிகையை தான் கண்டு ஆறுவருடங்களுக்குமேல் ஆகிறது என்று எண்ணிக்கொண்டான். பாண்டு சென்ற அன்று அச்செய்தியை அறிந்து அலறி மூர்சையாகி விழுந்த அவளை ஆதுரசாலைக்கு அனுப்ப அவனே வந்திருந்தான். அதன்பின் அவள் தன் அரண்மனையைவிட்டு எங்கும் தென்படவில்லை. அரண்மனையின் அன்றாட குலதெய்வப்பூசனைகளுக்கும் மாதம்தோறும் நிகழும் கொற்றவை வழிபாட்டுக்கும் பிறசடங்குகள் எதற்கும் அவள் வரவில்லை. அவள் வராதது முதலில் சிலநாட்கள் ஒரு செய்தியாக இருந்தது. பின் அது ஒரு வழக்கமாக ஆகியது. பின்னர் அவள் முழுமையாகவே மறக்கப்பட்டாள்.

சித்திரகோஷ்ட வாயிலில் சாரிகை அவனைக்கண்டதும் அருகே வந்தாள். அவளை சற்றுநேரம் கழித்துதான் விதுரன் அடையாளம் கண்டான். மெலிந்து ஒடுங்கிய முகமும் வைக்கோல்சாம்பல் பூத்ததுபோல நரைத்த தலைமுடியும் மங்கலாகிய விழிகளுமாக அவள் நோயுற்று இறக்கப்போகிறவள் போலிருந்தாள். “அமைச்சருக்கு வணக்கம்” என மிகத் தாழ்ந்த குரலில் சொன்னாள். குரலை மேலெழுப்பவே அவளுடைய உயிரால் இயலவில்லை என்பதுபோல. அவளிடம் செய்தியைச் சொல்லியனுப்பவியலாது என்று விதுரன் எண்ணினான். “இளையஅரசி நலமாக இருக்கிறார்கள் அல்லவா?”

ஓவியம்: ஷண்முகவேல்  [பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

சாரிகை “ஆம் அமைச்சரே” என்றாள். “சித்திரசாலையில் இருக்கிறார்களா?” என்றான். அக்கேள்வியின் பொருளின்மையை அவனே உணர்ந்திருந்தான். “அவர்கள் சித்திரசாலைக்குச் செல்வதேயில்லை” என்று சாரிகை சொன்னாள். “வலப்பக்க அறையில் தன் பாவைகளுடன் இருக்கிறார்கள்.” விதுரன் அவளை நோக்கி “பாவைகளுடனா?” என்றான். “ஆம். அவர்கள் மீண்டும் சிலவருடங்களாக பாவைகளுடன்தான் விளையாடுகிறார்கள். பாவைகளுடன் மட்டுமே பேசுகிறார்கள்.”

விதுரன் உள்ளே சென்றபோது தன் உள்ளத்தை எடைமிக்க ஒன்றாக உணர்ந்தான். சாரிகை அவனை பக்கத்து அறைக்கு இட்டுச்சென்றாள். அறைக்கதவு சற்றே திறந்திருந்தது. அவன் தயங்கி நின்றான். சாரிகை “அழைக்கவா?” என்றாள். அவன் வேண்டாம் என்று சொன்னபின்னர் “ஆதுரசாலைக்குச் சென்று வைத்தியரை வரச்சொல். அகிபீனாவுடன் வரவேண்டும் என்று சொல்” என்றான். சாரிகை விளங்கிக் கொண்டதை அவள் விழிகள் காட்டின. தலைவணங்கி அவள் விலகிச்சென்றாள்.

விதுரன் கதவை மிகமெல்லத் திறந்து உள்ளே நோக்கினான். மறுபக்க சாளரத்தின் ஒளியில் அறைக்குள் நிலத்தில் அமர்ந்து அம்பாலிகை ஏதோ செய்வதைக் கண்டான். அவள் முன் பெரிய மரப்பெட்டி திறந்திருந்தது. அதிலிருந்து எடுக்கப்பட்ட பலவகையான பாவைகள் அவளைச்சுற்றி கிடந்தன. அவள் ஒரு பாவையின் மீது கம்பி ஒன்றால் மெல்லச் சுரண்டிக்கொண்டிருந்தாள். முழுமனமும் அதில் கூர்ந்திருந்தமையால் உதடுகள் கூம்பியிருந்தன.

அவளும் சாரிகை போலவே முதுமையும் சோர்வும் கொண்டிருந்தாள். நரைத்த வறுங்கூந்தல் தோளில் சரிந்து கிடந்தது. உடல் சிறுமி அளவுக்கு மெலிந்து ஒடுங்கியிருந்தது. கன்னங்களில் எலும்புகள் புடைத்து கண்கள் குழிவிழுந்து வாயைச்சுற்றி சுருக்கங்கள் அடர்ந்து அவள் ஆண்டுகளை பலமடங்கு விரைவாகக் கடந்து சென்றுவிட்டவள் போலிருந்தாள். மெல்லியகுரலில் தனக்குத்தானே என ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள்.

அவன் திரும்பிவிடலாமென்று எண்ணி மெல்ல காலடி எடுத்து வைத்தபோது கதவில் தோள்கள் முட்டி ஒலிக்க “அம்பாலிகை! இளையவளே!” என்று கூவியபடி, அவிழ்ந்த கூந்தலும், கண்ணீர் வழியும் முகமும், கலைந்து பறந்த ஆடையுமாக அம்பிகை உள்ளே ஓடிவந்தாள். அவன் நிற்பதை அவள் காணவில்லை என்பதுபோல கூடத்தில் நின்று நான்குபக்கமும் நோக்கித் திகைத்தபின் அறைக்குள் அம்பாலிகை இருப்பதைப் பார்த்து “அம்பாலிகை! இளையவளே!” என்று இரு கைகளையும் விரித்து கூவியபடி அவனைக் கடந்து உள்ளே புகுந்தாள்.

திகைத்து எழுந்த அம்பாலிகையை பாய்ந்து அள்ளி தன் நெஞ்சோடு இறுகச்சேர்த்துக்கொண்டு உடைந்த குரலில் “நம் மைந்தன் இறந்துவிட்டான் இளையவளே. பாண்டு மறைந்துவிட்டான்…” என்று கூவினாள். “நான் இருக்கிறேன். இளையவளே, உன்னுடன் நான் இருக்கிறேன்…” விதுரன் கதவை மெதுவாக மூடிவிட்டு விலகிச்சென்று வெளியேறினான். அமைச்சகம் நெடுந்தொலைவில் இருப்பதாகத் தோன்றியது. அத்தனை தொலைவுக்கு தன்னால் நடக்கமுடியுமா என்று அஞ்சியவன் போல தூண் ஒன்றைப்பற்றியபடி அவன் நின்றுவிட்டான்.

அன்று அந்தியில் அவனை அம்பிகை அழைப்பதாக சாரிகை வந்து சொன்னாள். அவன் அவளுடன் அம்பாலிகையின் சித்திரகோஷ்டத்துக்குச் சென்றான். அம்பாலிகையின் மஞ்சஅறைக்கே செல்லும்படி சாரிகை சொன்னாள். உள்ளே மஞ்சத்தில் அம்பாலிகை வெறித்த விழிகளுடன் மார்பில் கைகளைக்கோத்துக்கொண்டு படுத்திருந்தாள். கண்ணீர் ஊறி காதுகளை நோக்கிச் சொட்டிக்கொண்டிருந்தது. அருகே அனைத்து வண்ணங்களையும் இழந்தவள் போல அம்பிகை அமர்ந்திருந்தாள்.

“விதுரா, நாளை விடிவதற்கு முன் நானும் என் தங்கையும் இந்நகர் நீங்கிச் செல்கிறோம். நாங்கள் திரும்பப்போவதில்லை. எங்கள் வனம்புகுதலுக்குரிய அனைத்தையும் ஒருங்குசெய்” என்றாள் அம்பிகை. விதுரன் ஏதோ சொல்ல வாயெடுத்தாலும் சொற்களைக் கண்டடையவில்லை. “இந்த நகருக்கு இருபத்தாறாண்டுகளுக்கு முன்னர் வந்தபோது நான் இவளுக்கு அன்னையாக இருந்தேன். இவள் கையில் புதிய வெண்மலருடன் குழந்தைபோல இந்நகருக்குள் நுழைந்தாள்” என்றாள் அம்பிகை. உதடுகள் துடிக்க கழுத்தில் தசைகள் அசைய தன் குரலின் இடறலை கட்டுப்படுத்திக்கொண்டாள். “அதன்பின் எங்களுக்குள் ஏதேதோ பேய்கள் புகுந்து கொண்டன. என்னென்னவோ ஆட்டங்களை ஆடினோம். எல்லாம் வெறும் கனவு…”

அம்பாலிகையின் மெலிந்த கைகளைப் பற்றி தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு அம்பிகை சொன்னாள். “இப்போது எல்லாம் விலகிவிட்டன. இதோ இப்போது எஞ்சுவதுதான் உண்மை. இவளுக்கு நானும் எனக்கு இவளும் மட்டுமே இருக்கிறோம். மீதியெல்லாம் வெறும் மாயை.” அம்பாலிகை எழுந்து தன் தமக்கையின் மடியில் முகம் புதைத்துக்கொண்டாள். அவள் தலையை வருடியபடி அம்பிகை சொன்னாள் “போதுமடி… எங்கோ ஒரு காட்டில் நாமிருவரும் காசியில் வாழ்ந்த அந்த நாட்களை மீண்டும் வாழ முயல்வோம். அங்கேயே எவருமறியாமல் மடிவோம்…”

முந்தைய கட்டுரைஅறிதலை அறியும் அறிவு
அடுத்த கட்டுரைமாமிச உணவு – ஒரு கடிதம்