பகுதி பதினெட்டு : மழைவேதம்
[ 2 ]
முதல்கதிர் எழுவதற்கு நெடுநேரம் முன்னரே மகாவைதிகரான காஸ்யபர் தன் ஏழு மாணவர்களுடன் சதசிருங்கத்துக்கு வந்துசேர்ந்தார். அவரது வருகையை முதலில் வழிகாட்டி வந்த சேவகன் சங்கு ஊதி அறிவித்ததுமே அதுவரை குடில்முற்றத்தில் இருந்த சோர்ந்த மனநிலை மாறியது. பூர்ணகலாபர் இயற்றிய சந்திரவம்ச மகாகாதையை இரு பிரம்மசாரிகள் அதுவரை மெல்லியகுரலில் ஓதிக்கொண்டிருந்தனர். பன்னிரண்டு படலங்களுக்குப் பின்னர்தான் புரூரவஊர்வசீயம் வந்தது. எட்டு படலங்களாக நீளும் பெரிய கதை. அதன்பின் ஆயுஷ் ஒரு படலத்தில் பாதியிடத்தை நிறைக்க நகுஷோபாக்யானம் மீண்டும் நீண்ட ஆறு படலங்களாக விரிந்தது. பின்னர் துஷ்யந்தனுக்கு பரதன் பிறந்த கதை பன்னிரு படலங்கள். அதன்பின் ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன் என பலமன்னர்கள் பெயர்களாக ஒலித்துச்செல்ல ஹஸ்தியின் கதை நடந்துகொண்டிருந்தபோதுதான் காஸ்யபரின் வருகை அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொருவருக்கும் கதையில் ஓர் அளவு அளிக்கப்பட்டிருக்கிறது என்று குந்தி எண்ணிக்கொண்டாள். ஒரே படலத்தில் நான்குபேர் வழக்கமான துதிகளுடன் குலவரிசைக்குறிப்புடன் வந்துசென்றனர். அத்தனைபேருக்கும் ஆரியவர்த்தத்தின் ஐம்பத்தைந்து மன்னர்களையும் வென்று தன் அரியணைக்கீழ் கட்டிப்போட்டான், அவன் வெண்கொற்றக்குடைக்கீழ் புலியும் வெள்ளாடும் ஒன்றாக நீர் அருந்தின, ரிஷிகளும் பிராமணர்களும் பேணப்பட்டனர், தேவர்கள் மகிழ்ந்தமையால் மாதம் மூன்றுமழை பொழிந்து மண்விளைந்தது, மக்கள் அறவழி நின்றமையால் அறநூல்களையே மறந்துவிட்டனர் என்பதுபோன்ற சிறப்பித்தல்கள்தான் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டன. ஆனால் உண்மையான ஒரு பெருவீரனையோ அறச்செல்வனையோ கண்டதும் கவிஞனின் மொழி துள்ளத் தொடங்குவதை அந்த சோர்ந்த வாசிப்பிலும் உணரமுடிந்தது. நதி மலைச்சரிவிலிறங்குவதுபோல அங்கே காவிய மொழி ஒளியும் ஓசையும் விரைவும் கொந்தளிப்பும் பெற்றது.
ஹஸ்தியைப்பற்றிய முதல் வரியிலேயே பன்றியை விழுங்கிய மலைப்பாம்புபோன்றவை அவன் கரங்கள் என்ற வரி அந்த மனநிலையிலும் குந்தியை புன்னகைசெய்ய வைத்தது. பழைமையான குலமுறைப்பாடல்களில் இருந்து எடுத்தாளப்பட்ட வரியாக இருக்கலாம். காட்டில் வேடர்கள் சொல்வதுபோன்ற எளிய உவமை. ஹஸ்தியைப்பற்றிய அனைத்து விவரிப்புகளும் அப்படித்தான் இருந்தன. மலையடுக்குகளை மேகம் என்று எண்ணி இந்திரன் மின்னலால் தாக்கியதுபோல அவனை எதிரிகள் தாக்கினர். மலைச்சரிவில் மழைக்கதிர்கள் இறங்குவதுபோல அவன்மேல் எதிரிகளின் அம்புகள் பொழிந்தன. ஒவ்வொரு போரிலும் குருதியில் மூழ்கி குருதியில் எழும் சூரியன் போல அவன் வெற்றியுடன் மீண்டுவந்தான்.
குந்தி தன் அருகே துயின்றுகொண்டிருந்த பீமனின் பெரிய தோள்களை கையால் வருடினாள். ஹஸ்தியின் தோள்களைவிட அவை பெரியவை என்று அப்போதே சூதர்கள் பாடத்தொடங்கிவிட்டிருந்தனர். அந்த குலமுறைக்காதையில் நாளை அவள் மைந்தர்கள் பெறப்போகும் இடமென்னவாக இருக்கும்? அதுவரை வந்த அத்தனை பெயர்களும் அவர்களின் கதைக்கான முன்னுரைக்குறிப்புகளாக மாறிவிடுமா என்ன? அவள் மனக்கிளர்ச்சி தாளாமல் தலைகுனிந்துகொண்டாள். அதை அவளால் காணமுடிவதுபோலிருந்தது. புரூரவஸ், நகுஷன், யயாதி, பரதன், ஹஸ்தி, குரு, பிரதீபன் எவரும் இம்மைந்தர்களுக்கு நிகரல்ல. விசித்திரவீரியனும் பாண்டுவும் அவர்கள் ஏறிவந்த படிக்கட்டுகள் மட்டுமே. அவள் தன்னருகே அமர்ந்திருந்த பார்த்தனை நோக்கினாள். ஒருகணம் கூட அவன் பார்வை தந்தையின் உடலில் இருந்து விலகவில்லை. அவன் உடல் தளரவோ அலுப்பொலிகள் எழவோ இல்லை.
தருமன் வந்து தலைகுனிந்து “அன்னையே, மகாவைதிகர் வந்துவிட்டார். சடங்குகளை முறைப்படி தொடங்குவதற்கு தங்கள் ஆணையை கோருகிறேன்” என்றான். “அவ்வாறே ஆகுக!” என்று குந்தி சொன்னாள். அவன் தலைவணங்கி விலகிச்சென்றான். குந்தி பெருமூச்சுவிட்டபடி அசைந்து அமர்ந்தாள். அனகை வந்து அவர்களை நோக்கிக் குனிந்து “அரசி, தாங்களும் இளையஅரசியும் எரிசெயலுக்கான ஆடைகள் அணியவேண்டுமென்று காஸ்யபரின் ஆணை” என்றாள். பாண்டுவின் உடலை எட்டு சேவகர்கள் அதை வைத்திருந்த மூங்கில்மேடையுடன் சேர்த்து எடுத்துக்கொண்டுசென்றார்கள். குந்தி மாத்ரியிடம் “வா” என்றாள். மாத்ரி எழுந்து தலைகுனிந்து நடந்தாள். குந்தி “மைந்தர்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களை நீராட்டி உணவூட்டி எரிசெயலுக்கு கொண்டுவாருங்கள்” என்றாள்.
குடிலுக்குள் நுழைந்ததும் மாத்ரி “அக்கா” என மெல்லிய குரலில் அழைத்தாள். குந்தியை அக்குரல் காரணமின்றி நடுங்கச்செய்தது. “நான் மணக்கோலம்பூண்டு எரிசெயலுக்குச் செல்ல வேண்டும்” என்றாள். குந்தியின் உடல் சிலிர்த்தது. பின்னால் நின்றிருந்த சேடியர் உடல்களிலும் ஓர் அசைவெழுந்து அணிகளும் உடைகளும் ஒலித்தன. குந்தி தன் உலர்ந்த உதடுகளை நாவால் ஈரப்படுத்தியபடி ஏதோ சொல்ல வாயெடுத்தாள். கண்களால் அவளை விலக்கி “நான் அவருடன் செல்வதே முறை. முன்பு நிமித்திகர் உடலில் வந்த கிந்தமர் சொன்ன வரிகளை இப்போது புரிந்துகொள்கிறேன். அவருடன் சென்று அவர் விண்நுழையும் வாயில்களை நான்தான் திறந்துகொடுக்கவேண்டும்” என்றாள் மாத்ரி.
“அவருடன் அரியணை அமர்ந்தவள் நான். அரசமுறைப்படி சிதையேறவேண்டியவளும் நானே” என்று குந்தி சொன்னாள். “அரசர் எங்கு சென்றாலும் தொடர்ந்து செல்லவேண்டும் என்ற உறுதியை எடுத்துக்கொண்டு அவர் கைகளைப்பற்றியவள் நான்.” ஆனால் மாத்ரி திடமான குரலில் “நீங்கள் இல்லையேல் நமது மைந்தர்கள் உரிய முறையில் வளரமுடியாது அக்கா. வரப்போகும் நாட்களில் அவர்களுக்குரிய அனைத்தையும் நீங்கள்தான் பெற்றுத்தரவேண்டும். அரசரும் நானும் ஆற்றவேண்டியவற்றையும் சேர்த்து ஆற்றும் வல்லமை உங்களுக்கு உண்டு. என்னுடைய மைந்தர்களை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன். அவர்கள் என்றும் தங்கள் தமையன்களுக்கு பிரியமானவர்களாக இருப்பார்கள். அன்னையில்லாததை அவர்கள் ஒருகணமும் உணரப்போவதுமில்லை” என்றாள்.
தன்னுடைய சொற்களனைத்தும் மாத்ரியிடம் வீணாகிவிடும் என்று குந்தி உணர்ந்தாள். “வேண்டாம் தங்கையே. அரசருடன் அரசியர் சிதையேறவேண்டுமென்று எந்த நெறிநூலும் வகுத்துரைக்கவில்லை. அது போரில் இறந்த அரசர்களின் மனைவியரின் வழக்கம் மட்டும்தான். நான் காஸ்யபரிடமே கேட்டுச்சொல்கிறேன்” என்று சொல்லி அனகையை நோக்கித்திரும்பினாள். மாத்ரி “அதை நானும் அறிவேன் அக்கா. நான் நூல்நெறி கருதி இம்முடிவை எடுக்கவில்லை” என்றாள். “உனக்கு பெருந்தோள்கொண்டவனாகிய தமையன் இருக்கிறான். இரு அழகிய மைந்தர்கள் இருக்கிறார்கள். நீ உன் விழிகளால் அவர்களின் வெற்றியையும் புகழையும் பார்க்கவேண்டுமென்று அவர்கள் விரும்புவார்கள்…” என்றாள் குந்தி.
“நான் என் முடிவை எடுத்துவிட்டேன் அக்கா. இவ்வுலகிலிருந்து செல்லும் ஒவ்வொருவரும் முடிக்கப்படாதவையும் அடையப்படாதவையுமான பல்லாயிரம் முனைகளை அப்படியே விட்டுவிட்டு அறுத்துக்கொண்டுதான் செல்கிறார்கள். எவர் சென்றாலும் வாழ்க்கை மாறிவிடுவதுமில்லை.” குந்தி அவளுடைய முகத்தையே நோக்கினாள். அவள் அதுவரை அறிந்த மாத்ரி அல்ல அங்கிருப்பது என்று தோன்றியது. உடலென்னும் உறைக்குள் மனிதர்கள் மெல்லமெல்ல மாறிவிடுவதை அவள் கண்டிருக்கிறாள். அப்போது அறியாத தெய்வமொன்று சன்னதம் கொண்டு வந்து நிற்பதைக் கண்டதுபோலிருந்தது.
அதை உணர்ந்ததுமே அவள் எடுத்திருக்கும் முடிவை முன்னோக்கிச்சென்று கண்முன் நிகழ்வாகக் கண்டுவிட்டது அவள் அகம். உடல் அதிர “இல்லை, நான் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. என் ஒப்புதல் ஒருபோதும் இதற்கில்லை” என்று கூவினாள். “அக்கா, உங்கள் ஒப்புதலின்றி நான் சிதையேறமுடியாது. ஆனால் நான் மேலும் உயிர்வாழமாட்டேன் என்று மட்டும் உணருங்கள்” என்றாள் மாத்ரி. அவள் குரல் உணர்ச்சியேதுமில்லாமல் ஓர் அறிவிப்புபோலவே ஒலித்தது.
“நீ சொல்வதென்ன என்று உணர்ந்துகொள் தங்கையே. நீ எனக்கு வாழ்க்கை முழுவதும் தீராத பெரும்பழியையும் துயரத்தையும் அளித்துவிட்டுச் செல்கிறாய்…” என்று சொன்னதுமே குந்தி அக்கணம் வரை தடுத்துவைத்திருந்த உணர்வுகளை மீறவிட்டாள். அவள் கைகளைப்பிடித்து தன் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு “மாத்ரி, நீ அரண்மனைக்கு வந்த நாட்களில் ஒருமுறை என் கைகளைப்பற்றிக்கொண்டு என்னிடம் அடைக்கலம் புகுவதாகச் சொன்னாய். அன்றுமுதல் இக்கணம் வரை நீ எனக்கு சபத்னி அல்ல, மகள். உன்னை நான் எப்படி அதற்கு அனுப்புவேன்? அதன்பின் நான் எப்படி வாழ்வேன்?” என்றபோது மேலும் பேசமுடியாமல் கண்ணீர் வழிந்தது. அவளை அப்படியே இழுத்து தன் உடலுடன் சேர்த்து இறுக அணைத்தாள். உடல்நடுங்க கைகள் பதற அவளை நெரித்தே கொன்றுவிடுவதுபோல இறுக்கி “மாட்டேன்… நீ என்னைவிட்டுச்செல்ல நான் ஒப்பமாட்டேன்” என்றாள்.
“அக்கா, நான் சொல்வதைக்கேளுங்கள்… நான் உங்களிடம் மட்டும் பேசவேண்டும்” என்றாள் மாத்ரி மூச்சடைக்க. குந்தி அவளை விட்டுவிட்டு விலகி அப்படியே பின்னகர்ந்து மஞ்சத்தில் அமர்ந்து தன் முகத்தை மூடிக்கொண்டாள். வெம்மையான கண்ணீர் தன் கைவிரல்களை மீறி வழிவதை அறிந்தாள். நெடுநாளைக்குப்பின் தன் கண்ணீரை தானே அறிவதை அவள் அகம் உணர்ந்தது. அந்தத் துயரிலும் அவளை அவளே கண்காணித்துக்கொண்டிருப்பதை அறிந்தபோது அவள் கண்ணீர் குறைந்தது. தன் மேலாடையால் முகத்தைத் துடைத்தாள்.
சேடியர் விலகியதும் மாத்ரி தரையில் அமர்ந்து அவளுடைய மடியில் தன் கைகளை வைத்து ஏறிட்டுப்பார்த்தாள். “அக்கா, அரசருடன் நான் சென்றேயாகவேண்டும். எனக்கு வேறுவழியே இல்லை” என்றாள். தெளிந்த விழிகளுடன் தடுமாறாத குரலில் “அவர் தன் காமத்தை முழுமைசெய்யவில்லை. நான் செல்லாமல் அவர் சென்றால் அவருக்கு நீத்தாருலகு இல்லை. வாழ்வுக்கும் மரணத்துக்கும் நடுவே இருக்கும் வெளியில் ஊழிக்காலம் வரை அவர் தவிக்கவேண்டும். அதை நான் எப்படி ஒப்புக்கொள்வேன்? இது என் கடமை…” என்றாள்.
குந்தி தன் நடுங்கும் கரங்களால் மார்பைப் பற்றிக்கொண்டு பொருளில்லாமல் பார்த்தாள். “நான் அவருடன் எரிந்த மறுகணமே அவரை என்னுடன் இணைய முடியாமல் தடுத்த இந்த இரு வீண்உடல்களையும் துறந்துவிடுவோம். அதன்பின் எங்களுக்குத் தடைகள் இல்லை. எங்களை வாழ்த்துங்கள் அக்கா.” குந்தி தன் கைகளை அவள் தலைமேல் வைத்தாள். கண்ணீர் வழிந்துகொண்டே இருக்க விம்மலுடன் ஏதோ சொல்லவந்தாள். “வாழ்த்துங்கள்” என்றாள் மாத்ரி. கம்மிய குரலில் “எனக்காகக் காத்திரு, நானும் வந்துவிடுகிறேன்” என்றாள் குந்தி. பின்னர் குனிந்து மாத்ரியை அள்ளி அணைத்துக்கொண்டாள்.
குந்தி நீராடி ஆடைகள் அணிந்து வந்தபோது குடில்முற்றத்தில் அனகையின் இடையில் புத்தாடை அணிந்த பார்த்தன் அமர்ந்திருந்தான். “இளவரசர் துயிலவேயில்லை அரசி. உணவும் உண்ண மறுத்துவிட்டார்” என்றாள் அனகை. அவனுடைய கரிய விழிகளை குந்தி நோக்கினாள். அவன் என்ன அறிகிறான்? அந்தச்சிறு உடலுக்குள் இந்திரன் வந்து அமர்ந்து எளிய மானுடரை நோக்கிக்கொண்டிருக்கிறானா என்ன? “மூத்தவர்கள் இருவரும் இந்திரத்யும்னத்திலேயே நீராடிவிடுவார்கள் என்றனர்” என்றாள் அனகை.
இருசேடியர் நடுவே மாத்ரி வருவதைக் கண்டதும் குந்தியின் நெஞ்சு அதிர்ந்து அந்த ஒலி காதில் கேட்பதுபோலிருந்தது. அவளால் ஒரு கணத்துக்குமேல் பார்க்கமுடியவில்லை. மாத்ரி மணப்பெண்போல பொன்னூல்பின்னல்களும் தொங்கல்களும் கொண்ட செம்பட்டாடை அணிந்து முழுதணிக்கோலத்தில் இருந்தாள். “நேரமாகிறதே” என்றபடி ஊடுவழியினூடாக குடில்முற்றத்துக்கு வந்த துவிதீய கௌதமர் அவளைக் கண்டதும் கண்கள் திகைத்து மாறிமாறிப்பார்த்தார். குந்தி அவரிடம் “செல்வோம்” என்றபின் “நாங்கள் வருவதை காஸ்யபருக்கு அறிவியுங்கள்” என்றாள்.
அவள் சொல்வதைப்புரிந்துகொண்ட துவிதீய கௌதமர் “ஆம் அரசி” என்றபின் திரும்பி பாதையின் வழியாக ஓடினார். நகுலனையும் சகதேவனையும் இரு சேடியர் கொண்டுவந்தனர். தூக்கத்தில் இருந்து எழுப்பி குளிப்பாட்டப்பட்டு அமுதூட்டப்பட்டமையால் இருவரும் துறுதுறுப்பாக கால்களை ஆட்டி புறங்கைகளை வாயால் சப்பமுயன்றபடி நான்குபக்கமும் எரிந்த பந்தங்களை திரும்பித் திரும்பி பார்த்தனர். மாத்ரி மைந்தர்களை திரும்பியே பார்க்கவில்லை. அவளை அடையாளம் கண்டுகொண்ட நகுலன் ‘ங்கா!’ என ஒலியெழுப்பினான். உடனே சகதேவனும் ‘ங்கா!’ என்றான். இருவரும் கால்களை சேடியர் விலாவில் உதைத்து கைகளை ஆட்டி குதிக்கத் தொடங்கினர்.
ஒற்றையடிப்பாதை வழியாக காஸ்யபரின் இரு மாணவர்கள் ஓடிவந்தனர். அவர்கள் மூச்சுவாங்க முற்றத்துக்கு வந்து நின்று மாத்ரியைப் பார்த்தனர். “அரசி… சடங்குகள்” என்று ஒருவன் நாக்குழறிச் சொன்னான். “சொல்” என்றாள் குந்தி. “மங்கல இசையும் மலரும் தீபமும் தேவை” என்றான் அவன் தலைகுனிந்து. சேடி ஒருத்தி முன்னால் வந்து “சொல்லுங்கள் வைதிகரே” என்றாள். அவர்கள் இருவரும் மாத்ரியைப் பார்ப்பதைத் தவிர்த்தனர். “தசமங்கலங்களும் தேவை” என்று இன்னொருவன் மெல்லியகுரலில் சொன்னான்.
சற்றுநேரத்தில் காஸ்யபரின் வேறு இரு மாணவர்கள் வந்தனர். சேவகர்கள் அவர்களின் ஆணைக்கேற்ப முன்னும்பின்னும் ஓடினர். கருக்கிருட்டு திரைபோல சூழ்ந்திருக்க பந்த ஒளிக்கு அப்பால் உலகமே இல்லை என்று தோன்றியது. “கிளம்பலாம் அரசி” என்றான் ஒருவன். குந்தி தலையசைத்தாள். அங்கே நின்றிருந்த அத்தனை பேரும் மெல்லிய பெருமூச்சுடன் தங்கள் உடல்களை அசைத்த ஒலி கேட்டது. அதைக்கேட்ட நகுலன் ‘ங்கா!’ என உரக்கக் கூவி குதிரையில் விரைபவன் போல கால்களை அசைக்க சகதேவனும் அதையே செய்தான். மாத்ரியின் உடைகளின் ஒளி குழந்தைகளை கவர்கிறது என்று குந்தி எண்ணிக்கொண்டாள்.
ஐந்து சேவகர்கள் பந்தங்களை ஏந்தியபடி வழிகாட்டிச் செல்ல மூன்று பிரம்மசாரிகள் நிறைகுடத்து நீரை தர்ப்பையால் தொட்டு தெளித்து வேதத்தை ஓதியபடி முதலில் சென்றனர். சங்கும் கொம்பும் முழவும் கிணையும் குழலும் யாழும் இசைத்தபடி பிரம்மசாரிகள் அறுவர் தொடர்ந்து சென்றனர். தாலங்களில் பொன், வெள்ளி, மணி, பட்டு, விளக்கு, அரிசி, கனி, மலர், தாம்பூலம், திலகம் என்னும் பத்து மங்கலங்களை ஏந்தியபடி மூன்று சேடியர் சென்றனர். சேடிகள் தரையில் விரித்த மரவுரிமேல் கால்களைத் தூக்கி வைத்து மாத்ரி நடந்தாள். அவளுக்குப்பின்னால் இரு சேடியர் அந்த மரவுரியை எடுத்து மீண்டும் முன்பக்கம் கொண்டுசென்றனர்.
மாத்ரிக்குப்பின் கவரி ஏந்திய சேடிகள் செல்ல குந்தியும் பார்த்தனை ஏந்திய அனகையும் பின்னால் நடந்தனர். அவர்களுக்குப் பின்னால் சேடியர் நகுலனையும் சகதேவனையும் கொண்டுவந்தனர். அந்த ஊர்வலம் சதசிருங்கத்தின் முனிவர்குடில்களைக் கடந்து இந்திரத்யும்னத்தின் ஓரமாகச் சென்றது. தொலைவிலேயே பந்தங்களின் செவ்வொளியில் சிதைகூட்டப்பட்டிருந்த இடத்தை குந்தி கண்டாள். அருகே சென்றபோது அங்கே வேள்வி நடந்துகொண்டிருப்பதைக் காணமுடிந்தது.
ஆழமான குழியில் சந்தனம்,தேவதாரு ஆகிய வாசமரங்களும், அரசு, ஆல், வன்னி ஆகிய நிழல்மரங்களும் பலா, மா, அத்தி ஆகிய பழமரங்களும் செண்பகத்தின் மலர்மரமும் விறகாக அடுக்கப்பட்ட சிதை இடையளவு பெரிய மேடையாக இருந்தது. அதன்மேல் பாண்டுவின் உடல் படுக்கவைக்கப்பட்டிருந்தது. அவன் பொன்னூல் பின்னிய செம்பட்டாலான அரச ஆடை அணிந்திருந்தான். தலையில் பொன்னிறச்செண்பக மலர்களால் செய்யபபட்ட மணிமுடியும் வலக்கையில் மலர்க்கிளையால் ஆன செங்கோலும் வைத்திருந்தான். அவன் பாதங்கள் மலர்களால் மூடப்பட்டிருந்தன.
சிதைக்கு வலப்பக்கம் ஏரியின் நீர்க்கரையில் எரிகுளம் அமைக்கப்பட்டு நான்கு பக்கமும் காஸ்யபர் தலைமையில் வைதிகர் அமர்ந்து மறைநெருப்பை எழுப்பி வேதம் ஓதிக்கொண்டிருந்தனர். மன்னர்களை விண்ணகம் சேர்க்கும் அஸ்வமேதாக்னி சேவல்கொண்டை போல சிறிதாக எழுந்து சேவல் வாலென விரிந்து படபடத்துக்கொண்டிருந்தது. அதர்வவேத மந்திரம் குட்டிக்குதிரைகளின் கனைப்பொலி போல எழுந்து நெருப்புடன் சேர்ந்து நடமிட்டது.
மாத்ரியை மாண்டூக்யர் வந்து அழைத்துச்சென்று தர்ப்பைப்புல் விரிப்பில் எரிமுன் அமரச்செய்தார். அவளுடைய இருபக்கங்களிலும் பீமனும் தருமனும் அமர்ந்தனர். பின் பக்கம் குந்தி நகுலனையும் சகதேவனையும் தன் மடியில் வைத்துக்கொண்டாள். அனகையின் அருகே பார்த்தன் அமர்ந்தான். வேள்வித்தீயில் அவர்கள் ஒவ்வொருவரும் மும்முறை நெய்யூற்றி மந்திரங்களைச் சொன்னார்கள். நெய்யை உண்டு எழுந்த அஸ்வமேதாக்னி அவர்களின் தலைக்குமேல் எழுந்து காற்றில் சிதறிப்பரந்து இருளில் மறைந்துகொண்டிருந்தது.
“சந்திரவம்சத்து அரசனே, உன்னை வணங்குகிறோம். புரூரவஸின் குருதி நீ. யயாதியின் உயிர் நீ. ஹஸ்தியின் அரியணையில் நீ அமர்ந்தாய். குருவின் மணிமுடியை நீ சூடினாய். விசித்திரவீரியன் உனது கையின் நீரால் விண்ணகமேகினான். உன்னுடைய மனைவியரும் மைந்தர்களுமாகிய நாங்கள் இதோ உன்னை விண்ணகமேற்றுகிறோம். மங்காப் புகழுடையவனே! பாண்டுவே, உன் ஆன்மா நிறைவுறுவதாக! இதோ உனக்குப்பிரியமான அனைத்தும் உன்னுடன் வருகின்றன. உன் வாழ்த்துக்களை மட்டும் இப்புவியில் உன் மைந்தருக்கும் குடிமக்களுக்கும் விட்டுச்செல்!”
“ஒளிமிக்கவனே, உன் நினைவுகள் மண்ணில் என்றும் வாழும். உன் சொற்கள் வீரியமிக்க விதைகளாக முளைக்கும். உனது வம்சம் அருகுபோல வேரோடி ஆல்போலத் தழைத்தெழும். உனது புகழ்பாடும் சூதர்கள் ஆதிசேடனின் நாவை பெறுவார்கள். பாரதவர்ஷத்தைச் சூழ்ந்து கடல் போல அவர்கள் ஓயாது முழங்குவார்கள். உனது ஆன்மா நிறைவடைவதாக!”
“விடுதலைபெற்றவனே, உன்னை விண்ணகத்தில் உன் மூதாதையர் மகிழ்வுடன் வந்து எதிர்கொள்ளட்டும். உன் தந்தை விசித்திரவீரியனின் மடியில் சென்று அமர்ந்துகொள். உன் தாதன் சந்தனுவை அணைத்துக்கொள். உன் பெருந்தாதை பிரதீபனை மகிழ்வுறச்செய். அன்புடையவனே, உன் மூதாதையர் எல்லாம் உன்னை தழுவித்தழுவி மகிழட்டும். அறச்செல்வனே, உன் வருகையால் தேவர்கள் மகிழட்டும். ஆம் அவ்வாறே ஆகுக!”
“மூத்தமைந்தன் எரியூட்டுவது மரபு. அரசகுலப்பெண்டிர் அன்றி பிறர் மயானமேக நூல்நெறியில்லை” என்றார் காஸ்யபர். அனகையும் சேடியரும் மைந்தர்களை சேவகர்களிடம் அளித்துவிட்டு விலகிச்சென்றனர். காஸ்யபர் தருமனின் கைகளில் தர்ப்பையால் பவித்ரம் அணிவித்தார். “இளவரசே, சிதையில் ஐந்து உணவுகளையும் அஸ்வமேதாக்னிக்கு அளித்து வணங்குங்கள்” என்றார். சிதையை மூன்று முறை சுற்றிவந்து பொன்னாலான நாணயங்களையும் நெய்யையும் எள்ளையும் தயிரையும் அரிசியையும் மும்முறை அள்ளி சிதையின் காலடியில் வைத்து தருமன் வணங்கினான். மலர் அள்ளியிட்டு வணங்கியபின் கைகூப்பி நின்றான். பீமன் அதைச் செய்தபின் தருமன் அருகே வந்து தமையனின் இடையில் தொங்கிய கச்சைநுனியைப் பற்றியபடி நின்றுகொண்டான். குந்தி வணங்கியபின் மூன்று குழந்தைகளையும் வணங்கச்செய்தனர்.
மாத்ரி எழுந்ததும் தருமன் “சேவகர்களே, தம்பியரை அழைத்துச்செல்லுங்கள்” என்றான். ஒவ்வொருவரும் அந்த எண்ணம் அவர்களுக்கு வராததைப்பற்றித்தான் அக்கணம் எண்ணினார்கள். சேவகன் ஒருவன் நகுலனையும் சகதேவனையும் மாத்ரியிடம் கொண்டுசென்று காட்டினான். அவள் இருகுழந்தைகளையும் புன்னகையுடன் நோக்கியபின் ஒரேசமயம் வாங்கி மார்புடன் அணைத்துக்கொண்டாள். இருவர் கன்னங்களிலும் முத்தமிட்டபின் திரும்பக்கொடுத்தவள் மெல்லிய விம்மல் ஓசையுடன் மீண்டும் இன்னொருமுறை வாங்கி இறுக அணைத்து முத்தமிட்டு கொடுத்து கொண்டுசெல்லும்படி கையசைத்தாள்.
சேவகர்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு பீமனை அழைத்துக்கொண்டு சென்றபோது அவன் திரும்பித்திரும்பிப் பார்த்து ஏதோ கேட்டபடியே சென்றான். மாத்ரி சுற்றிவந்து வணங்கியபோது அங்கிருந்த அனைவரும் கைகள் கூப்பி வேள்விமேடையில் எரியும் அஸ்வமேதாக்னியையே நோக்கிக்கொண்டிருந்தனர். காஸ்யபரின் மாணவர்கள் அதற்கு நெய்யூற்றிக்கொண்டிருந்தனர். “அக்னியே, உனக்கு ஐந்துவகை உணவுகளை அளிக்கிறோம். இந்தப் பொன் உனக்கு உணவாகட்டும். இது எங்கள் கனவு. இந்த நெய் உனக்கு உணவாகட்டும். இது எங்கள் குருதி. இந்த எள் உனக்கு உணவாகட்டும். இது எங்கள் கண்ணீர். இந்தத் தயிர் உனக்கு உணவாகட்டும். இது எங்கள் விந்து. இந்த அரிசி உனக்கு உணவாகட்டும். இது எங்கள் அன்னம்.”
மாத்ரி சுற்றிவந்து மலரிட்டு வணங்கி கைகளைக்கூப்பியபடி விலகி நின்றாள். பாண்டுவின் உடல் மென்மையான பட்டை விறகுகளால் மூடப்பட்டது. அதன்மேல் நெய் முழுக்காட்டப்பட்டது. காஸ்யபரின் ஆணைப்படி தருமன் வந்து வணங்கி ஒரு புதுமண்கலத்தில் அள்ளப்பட்ட அஸ்வமேதாக்னியை வாங்கிக்கொண்டான். காஸ்யபர் அவனை கைபிடித்து அழைத்துச்சென்றார். தீக்கலத்தில் இருந்து முதல் கரண்டியை அள்ளி பாண்டுவின் நெஞ்சில் வைத்தான். நெய்யில் பற்றிக்கொண்ட நெருப்பு சிவந்து பின் நீலநிறம் கொண்டு காற்றிலெழுந்தது. பாண்டுவின் வயிற்றிலும் காலடியிலும் நெருப்பு வைத்தபின் தருமன் விலகி கைகுவித்து நின்றான்.
“ஏழு வேள்விநெருப்புகளே, கேளுங்கள். மூலாதார நெருப்பே, காமத்தை விட்டு விடு. ஓம் அவ்வாறே ஆகுக! சுவாதிஷ்டானத்தில் இருந்து பசி அகன்றுசெல்லட்டும். ஓம் அவ்வாறே ஆகுக! மணிபூரகம் பிராணனை மறக்கட்டும். ஓம் அவ்வாறே ஆகுக! அநாகதம் உணர்வுகளை விட்டுவிடட்டும். ஓம் அவ்வாறே ஆகுக! ஆக்ஞையே, எண்ணங்களை அழித்துக்கொள். ஓம் அவ்வாறே ஆகுக! சகஸ்ரமே, இருத்தலுணர்வை விட்டு மேலெழுந்துசெல். ஓம் அவ்வாறே ஆகுக!” காஸ்யபரும் சீடர்களும் சிதையில் நெய்யை ஊற்றியபடி சொன்ன மந்திர ஓசை எங்கோ தொலைதூரத்துக் காற்றொலி என ஒலித்துக்கொண்டிருந்தது.
குந்தி தன் நெஞ்சுக்குள் மூச்சு செறிந்திருப்பதாக உணர்ந்தாள். எத்தனை நெடுமூச்சுகள் விட்டாலும் அதை அவளால் கரைக்கமுடியவில்லை. அங்கிருந்து சென்றுவிடவேண்டும் என்றும் அங்கே நிகழ்பவற்றை எல்லாம் கனவென மறந்துவிடவேண்டும் என்றும் விரும்பினாள். அவள் பார்வை மாத்ரியைத் தீண்டி துடித்து விலகியது. மாத்ரி ஏற்கெனவே ஒரு தெய்வச்சிலையாக ஆகிவிட்டிருந்தாள். மீண்டும் விழிகளைத் திருப்பி அவள் தருமனைப் பார்த்தாள். அவன் கண்கள் சிதையையே பார்த்துக்கொண்டிருந்தன.
அந்தவிழிகளில் இருந்த துயரையும் தனிமையையும் எந்த விழிகளிலும் அவள் கண்டதில்லை. இனி வாழ்நாளில் எப்போதும் அவன் அந்தத் தனிமையிலிருந்து மீளப்போவதில்லை என்று அப்போது அவள் அறிந்தாள். அங்கிருக்கும் அனைவரிலும் பாண்டு ஒரு பழைய நினைவாக மட்டுமே எஞ்சுவான். அவளுக்குள்ளும் அப்படித்தான். வரலாற்றில் அவனுடைய இடமே அதுதான். தருமனுக்கு மட்டும்தான் அவன் ஒவ்வொருநாளும் துணையிருக்கும் உணர்வு. வாழ்நாளெல்லாம் கூடவரும் துயரம். ஓடிச்சென்று அவனை அள்ளி மார்போடணைக்கவேண்டும் என்று அவளுக்குள் பொங்கிவந்தது. ஆனால் அவளால் அந்தப் பெருந்துயரை தீண்டக்கூட முடியாதென்று பட்டது. ஒருவேளை மண்ணில் எவரும் அதை முழுமையாக அறியவும் முடியாது.
“அக்னியே, இங்கு வருக. இந்த உடலை மண்ணுக்கு சமைத்து அளிப்பாயாக. இந்த ஆன்மாவை விண்ணுக்கு எடுத்துச்செல்வாயாக. விண்ணில் ஆற்றலாகவும் மண்ணில் வெப்பமாகவும் நீரில் ஒளியாகவும் உயிர்களில் பசியாகவும் நிறைந்திருப்பவன் நீ. உன்னுடைய குடிமக்கள் நாங்கள். எங்கள் புனிதமான அவி இந்தப் பேரரசன். இவனை ஏற்றுக்கொள்வாயாக. ஓம் அவ்வாறே ஆகுக!”
தீயின் தழல்கள் எழுந்து ஓசையிட்டு படபடத்தன. கீழே அடுக்கப்பட்டிருந்த விறகுகள் செந்நிறப்பளிங்குகள் போல மாறி சுடர்ந்தன. தீயின் ஒலி அத்தனை அச்சமூட்டுவதாக இருக்குமென்பதை அவள் அப்போதுதான் உணர்ந்தாள். அவள் உடலை அதிரச்செய்தபடி சங்குகளும் கொம்புகளும் பறைகளும் முழவுகளும் சேர்ந்து ஒலித்தன. “எரிபுகும் பத்தினியை வணங்குவோம்! சதி அன்னை வாழ்க!” என்னும் வாழ்த்தொலிகள் அவளைச்சூழ்ந்து எழுந்தன. மாத்ரி திடமான காலடிகளுடன் கைகூப்பி நடந்து சென்று நெருப்பை அணுகி இயல்பாக உள்ளே நுழைந்தாள்.