வடகிழக்கும் பர்மாவும்

கன்னி நிலம் வாசித்துக்கொண்டு இருக்கிறேன், உங்கள் தளத்தில் இந்த நாவல் பற்றி எதாவது எழுதி இருக்கிறீர்களா? பார்த்ததாக நினைவில் இல்லை. நாவல் பற்றிய உரையில் ‘ரொமாண்டிக் மனநிலையில் எழுதியது’ என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.

உண்மையில் பர்மா, மணிப்பூரிகளுக்கு ஆயுதம் கொடுத்து உதவி வந்து இருக்கிறதா? பெரும்பாலும் நம் ஊடகங்கள் (தமிழ் இயக்கம் சார்ந்த இணையங்கள்) நமது இராணுவம் அப்பாவிகளை சீரழிப்பதாக குறை கூறி வருகிறார்களே!

-ஹாரூன்

வடகிழக்கு இந்தியா
வடகிழக்கு இந்தியா

அன்புள்ள ஹாரூன்,

நான் பிரிவினைவாதம் இருந்த நாட்களில் மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து சென்றிருக்கிறேன். அங்கு சில இதழாளர்களின் தொடர்பு உண்டு. பலமுக்கியமானவர்களிடம் தனிப்பட்டமுறையில் பேசியிருக்கிறேன். என் கருத்துக்கள் அவற்றின் அடிப்படையிலானவை. இக்கட்டுரையில் சாதாரணமாகக் கிடைக்கும் நேரடித்தகவல்களை மட்டும் கொண்டு என்ன நடக்கிறது என்று ஒரு எளிய வரைபடத்தை அளிக்கிறேன்.

வடகிழக்கின் அனைத்துப் பிரிவினை இயக்கங்களும் பர்மாவை முதன்மையாகவும் அன்றைய வங்கதேசத்தை அடுத்தபடியாகவும் தளமாகக்கொண்டு வெளிப்படையாகவே செயல்பட்டவைதான். அவற்றுக்கு பர்மிய ராணுவச் சர்வாதிகார அரசு ஆயுதமும் பணமும் கொடுத்து ஊக்குவித்தது. இணையத்தில் சாதாரணமாக அவற்றின் அதிகாரபூர்வ வரலாற்றைப் பார்த்தாலே தெரியும் செய்திகள் இவை.

அரைநூற்றாண்டுக்காலம் பல கட்டங்களிலாக வடகிழக்குப்பகுதிகளை எந்தவிதமான வளர்ச்சியும் இல்லாமல் தேக்கநிலையில் வைத்திருந்தவை இந்தப் பிரிவினை இயக்கங்கள். அவற்றின் உருவாக்கம், அவற்றின் இனவாதக் கொள்கைகள், அவற்றுக்கிடையே உள்ள போர்கள் பற்றியெல்லாம் நேர்மையுடன் எழுதப்பட்ட எழுத்துக்கள் அனேகமாக இல்லை. ஆனால் நேர்மாறாக இந்தியஅரசையும் ராணுவத்தையும் சற்றும் மனசாட்சியில்லாமல் கீழ்த்தரமாகச் சித்தரித்து எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான பக்கங்களை இங்கே நாம் வாசிக்கமுடியும்.

அதற்கான காரணங்கள் பல. முதலில் இந்தப் பிரிவினை இயக்கங்களுக்கு அடித்தளமாக அமைபவை அப்பகுதியில் செயல்படும் வெவ்வேறு அரசுசாரா தன்னார்வ நிறுவனங்களும் பலவகை கிறித்தவ மதஅமைப்புகளும். சென்ற காலங்களில் இந்திய அரசு அவற்றில் பலவற்றின் மேல் வெளிபப்டையாக சர்வதேச அரங்குகளில் குற்றம்சாட்டியிருக்கிறது. பலவற்றை தடைசெய்யவும் பல அன்னியநாட்டினரை நாடுகடத்தவும் செய்திருக்கிறது. ஆனால் முறையான முழுமையான நடவடிக்கையை இந்தியாவால் எடுக்கமுடியாது. காரணம் அந்த அமைப்புகள் அமெரிககா மற்றும் ஐரோப்பியநாடுகளின் ஆதரவு கொண்டவை. அங்குள்ள கிறித்தவ சமூகம் அவற்றை சேவை அமைப்புகளாக எண்ணுகிறது. அப்படி நம்பவைக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பா அமெரிக்காவை மீறி இந்தியா போன்ற பலவீனமான தேசம் எதையும் செய்யமுடியாது.

இந்தத் தன்னார்வ-மத அமைப்புகளின் நோக்கம் தெளிவானது. அவை மதப்போர்வையில் செயல்படும் அரசியல் அமைப்புகள் மட்டுமே. வடகிழக்கில் ஒரு கிறித்தவதேசத்தை உருவாக்கிவிடமுடியுமென்ற நம்பிக்கை ஐரோப்பிய ஆதிக்க சக்திகளிடம் எண்பதுகளில் சர்வதேசசூழ்நிலை மாறுவது வரை இருந்தது. ஆகவே மதப்போர்வையில் இவை உருவாக்கப்பட்டன. உலகமெங்கும் அத்தகைய முயற்சிகள் அன்று நடந்தன. அவற்றில் கோசோவா முயற்சி 1999-இல் வெற்றிபெற்றது. கோசாவோவில் இருந்த பெரும்பாலும் அனைத்து மசூதிகளும் ஒரே வருடத்தில் அழிக்கப்பட்டு கோசோவோ ஐரோப்பிய ஆசியுடன் ‘மக்கள் குடியரசாக’ மலர்ந்தது.

நைஜீரியாவை கூறுபோட்டு கிறித்தவ நாடான பயாஃப்ராவை உருவாக்குவதற்குச் செய்யப்பட்ட முயற்சிகள் 1967-70-இல் நடந்த உள்நாட்டுப்போர்மூலம் முடிவுக்கு வந்தன. ஆனால் சமீபகாலமாக பயாஃப்ரா குடியரசை மீண்டும் உருவாக்குவதற்கான முயற்சிகள் சூடுபிடித்துள்ளன. பயாஃப்ரா போராட்டத்தில் இஸ்லாமியர்களால் கிறித்தவர்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளை மிகைப்படுத்தி எழுதப்பட்ட போலிநாவலான சிமொண்டா அடிச்சியின் Half of a Yellow Sun-ஐ அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஒரு பெரும் செவ்வியலாக்கமாக கொண்டாடி உலகு முன் வைத்தது ஒரு தொடக்கம். அது ஒரு பெரிய அரசியல் சதியின் ஆரம்பம் என இன்றைய நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. [அதை அந்நாவல் கொண்டாடப்படும்போதே நான் சுட்டிக்காட்டி எழுதியிருந்தேன் – இன்னும் சில வருடங்களில் பயாஃப்ரா கோரிக்கை மீண்டும் எழும் என்று]

இந்தியாவெங்கும் உள்ள தன்னார்வக்குழுவினர் வடகிழக்குப்பிரச்சினையை அவர்களுக்குரிய வகையில் முழுமையாகவே திரித்து அப்பட்டமான இந்திய எதிர்ப்புப்பிரச்சாரமாகவே முன்னெடுக்கிறார்கள். அவர்களால் விலைக்குவாங்கப்பட்டவர்கள் அதை ஊடகங்களில் முன்வைக்கிறார்கள். மிகச்சில அசடுகள் இந்தப்பிரச்சாரங்களை அப்படியே நம்பி திருப்பிச் சொல்கிறார்கள்.

தங்களை இடதுசாரிகள் என்றும் புரட்சியாளர்கள் என்றும் நம்ப விரும்பும் சிலர் அப்பிரச்சாரத்தில் இணைந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு அது ஒரு பிம்பத்தை அளிக்கிறது. கடைசியாக இந்தியாவிலுள்ள பிற பிரிவினைப்போக்காளர்கள் அதை வழிமொழிகிறார்கள் – இவ்வாறு திரண்டுவந்துள்ள ஒற்றைப்படையான பிரச்சாரகோஷங்களை மட்டுமே நாம் வடகிழக்கைப்பற்றிய அறிதல்களாகக் கொண்டிருக்கிறோம். மிக எளியமுறையில்கூட நாம் தகவல்களை சரிபார்ப்பதில்லை. உண்மையைப்பற்றிய அக்கறை எவரிடமும் இல்லை. நம் பிம்பங்களும் அரசியல்சரிகளுமே நமக்கு முக்கியம்.

வடகிழக்குப் போராட்டத்தைப்பற்றி விரிவாக எழுத இப்போது அவகாசம் இல்லை. அதில் தெளிவாக நாம் அறியவேண்டியவை இரண்டு. ஒன்று, அப்போராட்டங்கள் எந்த வகையான முற்போக்கான ஜனநாயக எண்ணங்களின் அடிப்படையிலும் எழுந்தவை அல்ல. மிகப்பழைமையான இனவாத நோக்கு கொண்டவை. பழங்குடிகளின் இனக்குழு சார்ந்த விரோதங்களே அவற்றை இயக்குகின்றன. அவ்வியக்கங்கள் ஒவ்வொன்றும் இந்திய அரசைவிட எதிரியாக எண்ணுவது அவர்கள் அருகே வாழும் பிற இனக்குழுக்களைத்தான். அவர்கள் ஒருவரை ஒருவர் சென்றகாலத்தில் கொன்றொழித்துள்ளனர். மாறி மாறி பல்லாயிரக்கணக்கில் அடித்துத் துரத்தியிருக்கின்றனர் .

ஒவ்வொரு குழு போட்டிருக்கும் தங்கள் தேசத்துக்கான வரைபடத்திலும் பிற குழுக்களின் நிலங்களும் அடங்கும். ஒரு தகவலுக்காக போடோக்கள் போட்டிருக்கும் போடோலேண்ட் மற்றும் நாகாக்களின் நாகாலேண்டின் பகுதிகளை மட்டும் சோதனையிட்டுப் பாருங்கள். சென்றகாலங்களில் இவர்களை ஒன்றாகச்சேர்த்து ஒரு கிறித்தவநாட்டை உருவாக்கிவிடலாமென கனவுகண்ட தன்னார்வக்குழு – மதமாற்றக்குழுக்கள் அந்நம்பிக்கைகளை இழந்தமைக்குக் காரணம் இந்த இனப்பூசல்தான்.

இவர்களின் போராட்டத்தை காங்கோ, கென்யா முதலிய ஆப்ரிக்க நாடுகளில் நிகழும் இனக்குழுப்போர்களுடன் மட்டுமே ஒப்பிட முடியும். அவை சுதந்திரப்போராட்டங்களோ உரிமைப்போர்களோ அல்ல. என் நிலத்தில் என் இனம் மட்டுமே வாழ அனுமதிப்பேன் என்ற பழங்குடிவெறி மட்டுமே அது.

இதோ இன்றுகூட ‘சுதந்திரப்போராளிகளான’ போடோக்கள் சக பழங்குடிகளை கைக்குழந்தைகளுடன் சேர்த்து சுட்டுத்தள்ளிய செய்திகள் வந்துள்ளன. இதுதான் அங்கு தொடர்ந்து நடந்து வருகிறது. தாங்கள் உரிமைகொண்டாடும் நிலங்களில் இருந்து பிற இனத்தவரை மிரட்டி துரத்துவதே நோக்கம். இங்கே ஓர் அரசு என்னசெய்யவேண்டும்? அங்குள்ள சிறுபான்மை இனத்தவரை பாதுகாக்கவேண்டும். அங்குள்ள வன்முறைக்குழுக்களை ஒடுக்கவேண்டும். அவர்களின் ஆதரவாளார்களை அடக்கவேண்டும். அதைச்செய்யும் இந்திய ராணுவத்தைத்தான் இங்கே இருந்துகொண்டு கூலிப்படைக்கும்பல் ஆதிக்க ராணுவம் என்று முத்திரைகுத்திக்கொண்டிருக்கிறது.

இந்த இனக்குழுப்பூசல்கள் தொடங்கியதுமே இதில் பர்மாவும் வங்கமும் குளிர்காயத் தொடங்கின. இந்திய அரசை பலவகையிலும் நிர்பந்தம் செய்து பலவகை பொருளியல் லாபங்களை அடைய ஐரோப்பாவும் அமெரிக்காவும் இவற்றைப் பயன்படுத்திக்கொண்டன. விளைவாக இங்கே வாழ்க்கை தேங்கியது. தீவிரவாத அச்சுறுத்தல் முதலில் சாலைப்போக்குவரத்தை அழிக்கிறது. பின்னர் சந்தைகளை அழிக்கிறது. கடைசியாக முதலீடே நிகழாத நிலையை உருவாக்குகிறது.

இன்று இந்தியாமுழுக்க ஓட்டல்களில் பணியாற்றும் மணிப்பூர் இளைஞர்கள் தீவிரவாதம் உருவாக்கிய பொருளியல் அழிவின் பலிகள்தான். அவர்கள் எவரிடமாவது கொஞ்சநேரம் பேசினால் அவர்களின் ஊரில் சென்ற ஐம்பதாண்டுகளில் என்ன நடந்தது என்று எளிதில் தெரிந்துகொள்ளலாம்.

இன்று வடகிழக்குத் தீவிரவாதம் பெருமளவுக்கு இல்லாமலாகிவிட்டது. எண்பதுகளில் நடந்த போடோ-நாகா கலவரங்களுக்குப்பின் ஒரு கிறித்தவநாடு உருவாகுமென்ற நம்பிக்கையை ஐரோப்பிய நிதியுதவி அமைப்புகள் இழந்தன. ஐரோப்பாவே பெரும் நிதிச்சிக்கலை நோக்கிச் சென்றது. ராஜீவ்காந்தி அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள உண்மையான முயற்சிகளை எடுத்தார். லால்டெங்கா போன்றவர்களை பர்மாவிலிருந்து வரவழைத்து பேச்சுவார்த்தைகள் மூலம் ஜனநாயகப்பாதைக்குக் கொண்டுவந்தார்.

அத்துடன் வெட்கக்கேடான ஒன்றையும் இந்திய அரசு செய்தது. இந்திய அரசு அதுவரை பர்மாவின் அனைத்து ஜனநாயக மக்கள் போராட்டங்களையும் ஆதரித்துவந்தது. ஒரேநாளில் அங்குள்ள சர்வாதிகார அரசை ஆதரிக்கத் தொடங்கியது. உலகிலேயே மிகமோசமான சர்வாதிகார அரசின் பிரதிநிதிகளுடன் இந்தியா கைகுலுக்கி நட்பு பாராட்டியது. அது நரசிம்மராவின் கொள்கை என்று அழைக்கப்படுகிறது.

பதிலுக்கு 2002 முதல் அவர்கள் தங்கள் நிலத்தில் இருந்த தீவிரவாதக்குழுக்களை கைதுசெய்தனர். 2004-இல் பர்மிய ராணுவம் தங்கள் நிலத்தில் தங்களால் பேணிவளர்க்கப்பட்ட அனைத்து இந்தியப்பிரிவினைவாத – தீவிரவாத முகாம்கள் மீதும் குண்டுமழை பொழிந்து அழித்தது. வலிமையுடன் இருந்த உல்ஃபா போன்ற பல குழுக்கள் அதில் முழுமையாகவே அழிந்தன. அத்துடன் வடகிழக்கில் அமைதி திரும்பத் தொடங்கியது.

இன்று அங்கே மெதுவாக பொருளியல் வளர்ச்சி உருவாகி வருகிறது. முதலில் அங்குள்ள இளைஞர்கள் இந்தியா முழுக்க சென்று பணியாற்றத்தொடங்கியதன் விளைவாக அவ்வளர்ச்சி பிறந்தது. அந்தப்பணம் மெல்ல முதலீடுகளாக ஆவதன் வழியாக கண்கூடான மாற்றம் தென்படுகிறது.

சென்ற சிலநாட்களுக்கு முன் வந்த செய்தி ஒன்று மிகமிக முக்கியமானது. பிரதமர் மன்மோகன் சிங் வடகிழக்குப்பகுதிகளுக்கான ரயில்வே திட்டத்தை திறந்துவைத்திருக்கிறார். 2014 ஏப்ரல் 7-ஆம் தேதி அருணாச்சலபிரதேசத்தின் இடாநகருக்கு முதல் பயணியர் ரயில் பத்து பயணிகளுடன் சென்று சேர்ந்திருக்கிறது. சிலவருடங்களில் அனைத்து வடகிழக்கு மாநிலங்களுக்கும் ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று தெரிகிறது. வடகிழக்கின் பொருளியல் முழுமையாகவே மாறவிருக்கிறது.

வடகிழக்கின் அரசியல் முழுக்க முழுக்க பர்மாவுடனான உறவைச் சார்ந்துதான் உள்ளது. இப்போது அங்கே பர்மிய ராணுவ ஆட்சியின் ஆதரவுடன் முஸ்லீம்களுக்கு எதிரான பழங்குடிகளின் கலவரங்கள் நடக்கின்றன அவர்களில் பலர் இந்தியாவுக்குள் அகதிகளாக வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் நிலை பர்மிய அரசுக்கு ஆதரவானதாகவே உள்ளது. அகதிகள் வரும் செய்தியைக்கூட பதிவுசெய்யாமல் பார்த்துக்கொள்கிறார்கள். வடகிழக்கை மீண்டும் பணயம் வைக்க இந்தியா விரும்பவில்லை. நடந்தது ஒரு ஆதிக்கப்போர். போலிஅறிவுஜீவிகள் அதன் கூலிப்படைகள். மக்கள் வழக்கம்போல பிணைக்கைதிகள்.

ஜெ

சுட்டிகள்

பர்மா இந்தியப்பிரிவினை வாதிகளை தாக்கியது பிபிசி செய்தி

அருணாச்சலபிரதேசத்துக்கு ரயில்

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் 1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் 2

முந்தைய கட்டுரைவெள்ளையானை – ஒரு விமர்சனம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 70