கூடுமானவரை உடல்நிலை குறித்தெல்லாம் எழுதுவதில்லை என்பது என் கொள்கை. மேலும் எனக்கு உடல்நிலையில் எந்த சிக்கலும் இல்லை. மிகைச்சர்க்கரை, ரத்தஅழுத்தம், கொழுப்பு எதுவுமில்லை. ஆனால் வெண்முரசு எழுத ஆரம்பித்தபின்னர் முதுகுவலி ஒரு பிரச்சினையாக உள்ளது.
முதுகெலும்பின் கீழ்ப்பகுதியில் உள்ள இயற்கையான வளைவு முதுகெலும்பு நிமிர்ந்து நின்று எடைதாங்குவதற்கு அவசியமானது. அதிகநேரம் தொடர்ச்சியாக அமர்வதன் வழியாக அந்த வளைவு நிமிர்ந்தே இருந்து அதில் அதிக அழுத்தம் ஏற்படுவதாகச் சொல்கிறார்கள். அது முதுகுவலியைக் கொண்டுவருகிறது.
மேலும் நாமெல்லாம் சரியாக அமர்வதை இளமையிலேயே கற்றுக்கொண்டவர்களல்ல. சிறுவயதுமுதல் ஏதோசிலவகை கோணல்களுடன்தான் அமர்கிறோம். அதுவே நம் பழக்கமாக ஆகிவிடுகிறது.
நான் சற்று தளர்வான உடலுடன், சற்று முதுகை வளைத்து அமரும் வழக்கம் கொண்டவன். என் புகைப்படங்களில் அதைக்காணலாம். [சுஜாதாவும் அதேபாணியில்தான் அமர்வார். அவருக்கும் முதுகுவலி இருந்தது] இந்தக்கோணலும் தொடர்ந்து அதிகநேரம் அமர்ந்திருக்கையில் வலியைக் கொண்டுவருகிறது.
பழைய குருகுலமுறையிலும் மேற்கத்திய ஜிம்னேஷியக் கல்வியிலும் ஆயுதக்கலை கட்டாயமாக இருந்தது. அதன் முதல்பாடமே சரியாக அமர்வதுதான். முன்பு பள்ளிகளில் கொஞ்சமேனும் உடற்கல்வி இருந்தது. இன்றைய தனியார்பள்ளிகளில் அதெல்லாமே ஒப்புக்குத்தான். உச்சகட்ட மனப்பாடப்பயிற்சியில் அதற்கெல்லாம் நேரமில்லை. விளைவாக இளைஞர்களே முதுகுவலியில் அவதிப்படுவதாகச் சொன்னார் என் வைத்தியர்.
நான் வீட்டில் இருக்கும்போது வெண்முரசு ஒருநாளைக்கு இரண்டு அத்தியாயங்கள் எழுதியாகவேண்டும். சிலசமயம் மூன்று. அப்போதுதான் என் பிற பணிகளுக்கும் பயணங்களுக்கும் நேரமிருக்கும். நிறைய வாசித்து தொடர்ந்து தகவல்களை சரிபார்த்து, ஒவ்வொரு வரியிலும் கூர்ந்து எழுதுவதனால் ஒரு அத்தியாயம் எழுதிமுடிக்க நான்கு மணிநேரம் ஆகிறது. ஆக ஒருநாளைக்கு எட்டு ஒன்பது மணிநேரம் தொடர்ந்து எழுதுகிறேன். இதுவே முதுகுவலிக்குக் காரணம்.
பாதி எழுத்தை இப்போது நின்றுகொண்டு எழுதுகிறேன். சில பயிற்சிகள், சற்று எண்ணை வெந்நீர் ஒத்தடம். சமாளிக்கக்கூடிய நிலைதான். தொடர்சிகிழ்ச்சை எடுத்துக்கொள்வது ‘உடம்பைப் பார்த்துக்கொள்வது’ எல்லாம் என்னால் முடியாதகாரியம். நான் பார்த்துக்கொள்வதற்கு என் உடம்பை விட முக்கியமான விஷயங்கள் பல உள்ளன.
இந்நிலையில் என்னுடைய முக்கியமான சிக்கலே அசௌகரியமான பயணங்கள்தான். கூடுமானவரை அவற்றைத் தவிர்க்கிறேன். ஆனால் நண்பர்கள் அதைப்புரிந்துகொள்வதில்லை. தொடர்ந்து இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள அழைக்கிறார்கள். வற்புறுத்துகிறார்கள். நெருக்கமானவர்களோ நான் பெருமதிப்பு கொண்டிருப்பவர்களோ சொல்லும்போது தட்டமுடிவதில்லை.
வசதியான ரயில்பயணம் அல்லாத ஒப்பேற்றல் பயணங்கள் எனக்கு பெரும் சிக்கலை அளிக்கின்றன. ஒரு நாள் பயணம் மூன்றுநாள் முதுகுவலியை அளித்துவிடுகிறது. குறிப்பாக நம்முடைய பேருந்துகளில் பயணம்செய்வது மேலும் மேலும் கடினமாக உள்ளது. ரயிலில் அமர்ந்து பயணம்செய்வது அதைவிடக்கடினம். குறுகியபயணங்களைக்கூட நான் ரயிலில் படுக்கை பதிவுசெய்துதான் செய்யவேண்டியிருக்கிறது.
வசதியற்ற பயணம் உருவாக்கும் அலுப்பு நாட்கணக்கில் எழுத்துப்பணியை தேங்கச்செய்கிறது. வெண்முரசு போன்ற ஒரு நாவலை எழுதும் முறையைச் சொன்னால் நான் சொல்லவருவது புரியும். மகாபாரதத்தின் கதை அனைவருக்கும் தெரிந்ததுதான். நான் பலமுறை அதை வாசித்தவன். ஒருகதைத்தருணத்தை தொடங்கும்போது எழுதிச்செல்லும் நகர்வில் ஒரு சிறிய வாசல் திறக்கும். ஒரு கதாபாத்திரத்தின் மனம், ஒரு தருணத்தின் உட்சிக்கல், ஒரு குறியீட்டின் கவித்துவம் தெரியவரும். உடனே மனம் முன்னால் பாயும். அந்தப்புள்ளியில் இருந்து அந்த அத்தியாயம் தானாகவே வளர்ந்து முழுமை அடையும்.
நாவலின் சிற்ப அமைப்புக்குள் ஒவ்வொரு அத்தியாயமும் சரியான தொடக்கம் வளர்ச்சி முடிவுடன் வடிவமுழுமை கொண்டிருக்கவேண்டும். அந்த வடிவமுழுமை எழுதும்போது அந்த வேகத்தில் தன்னியல்பாக வந்தாகவேண்டும். சொல்லப்போனால் எழுதத் தொடங்கியதும் அந்த அத்தியாயம் தானாக ‘நிகழ’வேண்டும். சற்றேனும் களைப்பிருந்தால், வலி இருந்தால், சலிப்பிருந்தால் அது நிகழ்வதில்லை. எந்நிலையிலும் கட்டுரை எழுதலாம், கதையை சென்றடையமுடியாது. ஒருபயணம் முடிந்துவந்தால் மறுநாள் அனேகமாக வெண்முரசில் ஒன்றும் நிகழாது.
இந்நிலையில் நான் இலக்கியக்கூட்டங்களுக்கு வருவதென்பது நான் என்ன செய்யவேண்டுமோ அதை செய்யாமலிருப்பதே. அதை நண்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும். உண்மைதான், சினிமாசார்ந்த பயணங்களை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன். அவை மிக வசதியான பயணங்கள். நான் கோருவதை அடையமுடியும். உடனே எழும் வினா அப்படி வசதியான பயணமாக ஏற்பாடுசெய்கிறோம், வாருங்கள் என்பதுதான். தமிழ்நாட்டில் அது நடக்காது. சினிமாப்பிரபலம் அல்லாத ஒரு எழுத்தாளருக்கு தமிழகத்தில் அப்படி வசதியான பயணமோ தங்குமிடமோ எவரேனும் எங்கேனும் ஏற்பாடுசெய்து நான் அறிந்ததே இல்லை. தவறாகச் சொல்லவில்லை, இலக்கியக்கூட்டங்களின் ‘பட்ஜெட்’ அந்த அளவுக்கே இருக்கும்.
சிலவருடங்களுக்குமுன் மாயவரத்தில் ஓர் இலக்கியவிழாவுக்கு அழைப்பு. அந்த நிறுவனமே என்மேல் மதிப்புவைத்திருந்த ஒரு நண்பருக்குரியது. மிகவும் உரிமை எடுத்துக்கொண்டு வற்புறுத்தி அழைத்திருந்தார். எனக்கு பயணச்சீட்டு அனுப்பியிருந்தனர். நெல்லையில் இருந்து முன்பதிவுசெய்யப்படாத ரயிலில் சென்றுவருவதற்கான இரு பயணச்சீட்டுகள் – மொத்தம் இருநூறு ரூபாய்க்குள். அந்த இருக்கையில் என்னால் பயணம் செய்ய முடியாது என நண்பரிடம் சொன்னேன். ‘டிக்கெட் போடச்சொன்னேன். போட்டவங்க சொதப்பிட்டாங்க’ என்றார்.
ஆனால் அந்த நிர்வாகி கூப்பிட்டு ‘மொத்த நிகள்ச்சிக்கே ரெண்டாயிரம் ரூபாதான் சார் பட்ஜெட். நான் என்ன பண்றது?’ என்று புலம்பினார். ‘உங்க காலேஜ்ல எல்லா நிகழ்ச்சிக்கும் இதே பட்ஜெட்தானா?’ என்றேன். ‘இல்லசார். வைரமுத்து வந்திருந்தப்ப ஒருலச்சம் செலவாச்சு. அது பெரிய நிகள்ச்சி சார்’ என்றார். ‘இறையன்பு வந்தப்ப?’ என்றேன். ‘அதுக்கும் அதே மாதிரி ஆச்சு…அவரு ஐயேயெஸ்ல?’ நான் அந்நிகழ்ச்சிக்குச் செல்லவில்லை. இந்த யதார்த்தம் நம் கண்முன் உள்ளது.
விதிவிலக்கு விஷ்ணுபுரம் இலக்கியவட்ட நிகழ்ச்சிகள். நாங்கள் இந்தியாவில் சாத்தியமான மிக உயர்தர பயணவசதியை, தங்கும்வசதியைத்தான் எங்கள் விருந்தினர்களுக்கு அளிக்கிறோம். அதில் சிறப்புக் கவனமும் எடுத்துக்கொள்கிறோம். சென்றமுறை இந்திரா பார்த்தசாரதியை அழைத்தபோது அவர் ‘உள்ளம் விரும்புகிறது, இலக்கியக்கூட்டங்களை உடல் தாங்காது’ என்றார். எத்தனை நீண்ட அனுபவம் என்று சிரித்துக்கொண்டேன்.
‘சார், நீங்கள் கிளம்புவது முதல் விமானத்தில் அழைத்துவந்து முதல்தர விடுதியில் தங்க வைத்து திரும்பக்கொண்டுவிடுவது வரை நாங்கள் பொறுப்பேற்கிறோம். உங்களுடன் எங்கள் நண்பர் ஒருவரும் கிளம்புவதில் இருந்து திரும்பி வீடுசேர்வது வரை இருப்பார் என்றேன். நண்பர் சிறில் அலெக்ஸ் இந்திரா பார்த்தசாரதியை திரும்ப அவரது மகள்வீட்டில் ஒப்படைத்த பின் கூப்பிட்டு ‘Done!’ என்றார்.
ஆக, முடிந்தவரை சுற்றிவளைத்து நாசூக்காகச் சொல்வது இவ்வளவுதான். இலக்கியக்கூட்டங்களின் முக்கியத்துவம் எனக்குத் தெரியும். அவற்றை நடத்துபவர்களின் ஆர்வமும் தெரியும். நண்பர்களைச் சந்திக்கவும் பேசவும் எனக்கு ஆர்வமும் உண்டு. ஆனால் நான் இலக்கியக்கூட்டங்களுக்காகப் பயணம் செய்வது என்னை எழுதவிடாம்ல் ஆக்குகிறது. ஆகவே நண்பர்கள் இதையே என் விண்ணப்பமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.