பகுதி பதினேழு : புதியகாடு
[ 7 ]
இருக்குமிடத்தை முழுமையாக நிறைக்க குழந்தைகளால் மட்டும் எப்படி முடிகிறது என்று மாத்ரி வியப்புடன் எண்ணிக்கொண்டாள். ஐந்து மைந்தர்களும் இணைந்து சதசிருங்கத்தின் ஹம்ஸகூடத் தவச்சோலையை முற்றிலுமாக நிறைத்துவிட்டனர். அவர்களன்றி அங்கே மானுடரே இல்லை என்று தோன்றியது. முற்றத்திலும் வேள்விச்சாலையிலும் குறுங்காட்டிலும் எங்குசென்றாலும் பாண்டு தன் உடலில் குழந்தைகளை ஏந்தியிருந்தான். அவனை குஞ்சுகளை உடலில் ஏந்திய வெண்சிலந்தி என்றழைத்தனர். மாண்டூக்யர் ‘ஜாலிகரே’ என்றழைக்கும்போது பாண்டு புன்னகையுடன் ‘ஆம் முனிவரே!’ என்றான்.
ஈச்சைநாரால் அவன் ஒரு தொட்டில் செய்திருந்தான். அதை முன்னும்பின்னும் தொங்கவிட்டு அவற்றில் நகுலனையும் சகதேவனையும் வைத்துக்கொண்டான். அவனுடலில் இருக்கையில் அவர்கள் பசித்தாலும் அழுவதில்லை என்பதை மாத்ரி கவனித்தாள். இருவரும் ஒன்றுபோலவே இடது கையின் மணிக்கட்டை வளைத்து வாய்க்குள் செலுத்தமுயன்றபடி பெரிய கண்களை உருட்டி உருட்டி திரும்பிப்பார்த்தபடி அமர்ந்திருப்பார்கள். பாண்டு தன் இரு தோள்களில் யுதிஷ்டிரனையும் அர்ஜுனனையும் ஏற்றிக்கொண்டான்.
“என்ன இது? நான்குபேரையும் சுமக்கவேண்டுமா?” என்று மாத்ரி கேட்டபோது “ஐவரையும் சுமக்கத்தான் என்ணுகிறேன். இரண்டாவது பாண்டவனைச் சுமக்கவேண்டுமென்றால் நான் யானையாகப் பிறந்திருக்கவேண்டும்” என்றான் பாண்டு. “இது எங்குமில்லாத வழக்கம். ஆண்கள் இப்படி மைந்தர்களைச் சுமப்பதில்லை. இதை சேடியர்கூட கேலி செய்கிறார்கள்” என்றாள் அவள். “ஆம், கேலிதான் செய்கிறார்கள். ஆனால் என்னை நான் பிறந்த நாளில் இருந்தே எதற்கெல்லாமோ கேலிசெய்கிறார்கள். இனி நான் என் மைந்தர்களைச் சுமந்ததற்காக மட்டுமே கேலி செய்யப்படுவேன். நான் தேடிய வீடுபேறு இதுதான்” என்றான் பாண்டு.
உணர்ச்சிகள் விரைவுகொண்டு முகம் சிவக்க அவன் சொன்னான் “தெய்வங்கள் குனிந்து பார்க்கட்டும். யாரிவன் இரவும் பகலும் மைந்தர்களைச் சுமந்தலைபவன் என்று அவர்கள் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்வார்கள். பிரம்மனிடம் என் தேவனாகிய சுப்ரமணியன் சொல்வான். உன்னுடைய படைப்பின் குறை அவன் உடலை முளைக்காத விதையாக ஆக்கியது. கேள் மூடா, மானுடர் உடலால் வாழ்வதில்லை. மண்ணில்வாழ்வது ஆன்மாதான். அகத்தில் பிள்ளைப்பெரும்பாசத்தை நிறைத்துக்கொண்டவனுக்கு உலகமெங்கும் பிள்ளைகள்தான். மிருகங்களின் குட்டிகள் போதும் அவனுக்கு. பாவைக்குழந்தைகள் போதும். ஏன் உருளைக்கற்கள் இருந்தால்கூட போதும்…” உடனே உணர்வுகள் திசைமாற சிரித்துக்கொண்டு பாண்டு கூவினான் “பிரம்மனின் தலையில் என் இறைவன் மீண்டும் குட்டுவைக்கும் தருணம் அது.”
மாத்ரி சிரித்தாள். அவன் சற்று அகநிலையழிந்துபோய்விட்டான் என்று சதசிருங்கத்து முனிவர்கள் சிலர் சொல்வதை அரைக்கணம் அவள் நினைவுகூர்ந்தாள். அவன் வேள்விகளுக்கும் பூசனைகளுக்கும் செல்வது முற்றிலும் நின்றுவிட்டது. நாளும் விடிகாலையில் எழுந்ததுமே மைந்தரைக் குளிப்பாட்டி உணவூட்டி அணிசெய்யத்தொடங்குவான். பின்னர் அவர்களை தன் உடலில் ஏற்றிக்கொள்வான். “தெய்வங்கள் மானுடனில் ஆவேசிப்பதுபோல என் மைந்தர்கள் என்னில் ஏறிக்கொள்கிறார்கள். தெய்வங்களைச் சுமப்பவன் எதற்கு வேள்வி செய்யவேண்டும்? இந்த மண்ணிலேயே அவனுடைய தேவர்கள் இறங்கி வந்தமர்ந்து பசித்து சிறுவாய்திறந்து அவன் கையிலிருந்தே அன்னத்தை ஏற்கையில் விண்ணில் எவருக்கு அவன் அவியளிக்கவேண்டும்?” என்றான்.
அவனுடைய கண்களில் எழுந்த பேருவகையை அவள் திகைப்புடன் நோக்கினாள். “இதோ இதோ என உலகுக்கே காட்டவேண்டும்போலிருக்கிறது என்னுள் எழும் பேரன்பை. இவர்கள் என் மைந்தர்கள். இவர்கள் பாண்டவர்கள். என் உடல், என் அகம், என் ஆன்மா. நானே இவர்கள். இவர்களிருக்கும் வரை நான் அழிவதில்லை. இவர்களின் குருதிமுளைத்தெழும் தலைமுறைகள் தோறும் நான் வாழ்வேன்” அவன் குரல் இடறியது. கண்ணீர் ஊறி விழிகள் மறைந்தன. “எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இவர்களைப் பார்த்துத் தீரவில்லை. முத்தமிட்டுத் தீரவில்லை. கொஞ்சித்தீரவில்லை. என்னால் செய்யக்கூடுவதொன்றே. இவர்களை என்னுடலாக ஆக்கிக்கொள்ளுதல். இருக்கும் கணம் முழுக்க இவர்களும் நானும் ஒன்றாக இருத்தல்…”
கனிந்த நாகப்பழம் போலிருந்த அர்ஜுனனை தோளிலிருந்து சுழற்றி எடுத்து மார்போடு அணைத்து இறுக்கி வெறிகொண்டு முத்தமிட்டான். மூச்சிரைக்க “இப்படி ஆரத்தழுவுகையில் இந்தப்பாழும் உடல் அல்லவா இவர்களுக்கும் எனக்குமான தடை என்று தோன்றுகிறது. ஆன்மா மட்டுமேயான இருப்பாக நான் இருந்திருந்தால் மேகங்கள் மேகங்களைத் தழுவிக்கரைதல் போல இவர்களை என்னுள் இழுத்துக்கொண்டிருப்பேன்.”
அந்தப்பித்தை அவளால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. “நீ இதை உணரவில்லையா? பிள்ளையைப் பார்க்கையில் இதோ நான் இதோ நான் என உன் மனம் பொங்கி எழுவதில்லையா?” என்று அவன் கேட்டான். “இல்லை. கருவுற்றிருக்கையில் எனக்குள் வெளியே இருந்து ஏதோ குடியேறியிருக்கிறது என்னும் எண்ணம் முதலில் இருந்தது. பின்பு அது சற்று அசைந்தால்கூட கலைந்துவிடும் என்ற அச்சம் இருந்தது. சுடரை கைகளால் பற்றி கொண்டுசெல்வதுபோல அந்த உயிரை என்னுள் கொண்டுசெல்கிறேன் என்று நினைப்பேன். அது வெறும் உயிர்தான். உடல் அல்ல. ஒரு அந்தரங்க எண்ணம் போல. பகிரமுடியாத ஒரு நினைவு போல. அவ்வளவுதான்” என்றாள் மாத்ரி.
“பின்னர் ஒருநாள் நான் என்னுள் இன்னொரு மனிதர் இருப்பதை உணர்ந்தேன். முதன்முதலாக என்னுள் அசைவை உணர்ந்தபோது. அசைவு நிகழும் கணம் முதலில் நெஞ்சைக்கவ்வியது அச்சம்தான். பின்னர் திகைப்பு. நான் நினைக்காத ஓர் அசைவு. என் எண்ணங்களால் கட்டுப்படுத்தப்படாத அசைவு அது. அதாவது என்னுள் இன்னொருவரின் எண்ணமும் செயல்படுகிறது. நான் இரண்டாக ஆகிவிட்டேன் என்றறிந்தபோது முதற்கணம் உருவானது ஒவ்வாமைதான். நான் ஆட்கொள்ளப்பட்டிருப்பதுபோல. வெல்லப்பட்டுவிட்டதுபோல. என் உடல் கையகப்படுத்தப்பட்டுவிட்டதுபோல” சொல்லச்சொல்ல அவ்வறிதலை அவளே தெளிவாகக் கண்டாள்.
“அந்த ஒவ்வாமையை நாட்கள் செல்லச்செல்லத்தான் கடந்தேன். என்னுள் இருந்து அசையும் அதுவும் நானே என உணரத்தொடங்கினேன். நான் அதற்காக உண்கிறேன். அதற்காக நானே மூச்சுவிடுகிறேன். என் வழியாக அது நடக்கிறது, பார்க்கிறது, சுவைக்கிறது, மகிழ்கிறது. நான் பெருகியிருப்பதுபோல. மழைக்கால நீர்வந்து ஏரிகள் வீங்குவதுபோல நான் வளர்ந்துகொண்டிருக்கிறேன். மரங்களில் கனிகள் நிறைந்து அவை கிளைதொய்வதுபோல நான் நிறைந்துகொண்டிருக்கிறேன். அந்த எண்ணம் பெருகப்பெருக அந்தக் கரு என்னுள் எப்போதும் இருந்துகொண்டிருக்குமென்று எண்ணத்தலைப்பட்டேன்.”
“என்னுள் இரு மைந்தர்கள் இருக்கிறாகள் என்று மருத்துவர் சொல்லியிருந்தபோதிலும் ஒருபோதும் என்னால் அப்படி உணரமுடிந்ததில்லை. அவர்களை ஒற்றை உடலாக, ஒரே ஆன்மாவாக, என் உடலின் பெருக்காக மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தேன்” என்று மாத்ரி சொன்னாள். “முதல் குழந்தை என் உடல்விட்டிறங்கியதும் நான் ஏந்திய மிக அரியதொன்றை இழந்துவிட்டதாக உணர்ந்தேன். இன்னொரு குழந்தை உள்ளே இருக்கிறது என மருத்துவச்சி சொன்னதும் ஒரு கணம் என்னுள் உவகை எழுந்தது. ஆம் அது எனக்கு, அதை நான் வைத்துக்கொள்வேன் என எண்ணிக்கொண்டேன். பின் அந்த மூடத்தனத்தை உணர்ந்து தலையை அசைத்தேன். என்னுள் இருந்து இறங்கி அவர்கள் மண்ணில் கிடப்பதைக் கண்டபோது முதலில் எழுந்தது ஏமாற்றம்தான். நான் வெறும் பீடம். அதிலிருந்த தெய்வங்கள் எழுந்துசென்றுவிட்டன. நான் ஒழிந்துவிட்டேன். கோடைகால ஏரிபோல வற்றிவிட்டேன். மீண்டும் எளிய பெண்ணாக ஆகிவிட்டேன். குனிந்து அக்குழந்தைகளைப் பார்த்தபோது என் ஏக்கம் பெருகியது. மாவுபடிந்து சிவந்து நெளிந்த ஈரமான இரு தசைத்துண்டுகள். வெட்டி வீசப்பட்டவை போல அவை நெளிந்தன.”
அவள் முகம் சிவந்து கண்களில் ஈரம்படிந்து கிளர்ச்சிகொண்டிருந்தாள். “முலையூட்டுவதற்காக குழந்தைகளை என்னருகே கிடத்தினர். என் இருமுலைக்கண்களிலும் அவர்களின் சிறிய உதடுகள் கவ்விக்கொண்டன. அவை அத்தனை இறுகப்பற்றுமென நான் எண்ணியிருக்கவில்லை. கண்களைக்கூட திறக்காத இரு சிறு குருதிமொட்டுகள். அவை கவ்வி உறிஞ்சியபோது அவற்றுக்குள் நிறைந்திருந்த விசையை உணர்ந்தேன். என் முழுக்குருதியையும் அவை உறிஞ்சிவிடுமென்று பட்டது. அந்த வல்லமை எது? உயிரின் விழைவு. வைஸ்வாநரன். மண்ணிலுள்ள விதைகளை உடைத்துத் திறந்து விண் நோக்கி எழுப்பும் பேராற்றல் அது என்று படித்திருந்ததை நினைவுகூர்ந்தேன்!”
“அவர்களின் சிறுமென்மயிர்தலையை கையால் வருடியபோது பிரபஞ்சங்களை நிறைத்துள்ள முழுமுதல்முடிவிலியைத் தீண்டியதுபோல ஒருநாள் உணர்ந்தேன். மனம் எழுந்து பொங்க அவர்களைப்பார்த்து கண்பூத்து படுத்திருந்தேன். பால்குடிப்பதையே மறந்து அவர்கள் மெல்லக் கண்ணயர்ந்தபோது சிறிய வாய்களின் ஓரத்தில் நுரைத்து எஞ்சியிருந்த பாலை என் சுட்டுவிரலால் மெல்லத்துடைத்தேன். அப்போது அவை மிகமிக மெல்லியவை என்று பட்டன. நீர்க்குமிழிகள்போல. மலரின் அல்லிகள் போல. என் அன்புக்காக ஏங்கி என் கருணையை நம்பி என்னருகே படுத்திருக்கின்றனர். இவர்களுக்கு நானே காவல். நானே இவர்களைப் பெற்றுப் புரப்பவள். நானின்றி இவர்களில்லை.”
“அந்த மனஎழுச்சியில் நானே அந்தப் பேராற்றலாக என்னை உணர்ந்தேன். பிரபஞ்சங்களை அள்ளி முலைகொடுக்கும் முதற்பேரன்னை. யா தேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா என்று எத்தனை முறை பாடியிருப்பேன். அன்று அச்சொற்களை ஆழத்தில் உணர்ந்தேன். என் உடல் சிலிர்த்து நடுங்கியது. என் தலையுச்சி திறந்து வானமாக வெடித்துவிட்டதைப்போல என் கால்கள் முடிவிலியில் துழாவுவதைப்போல எங்குமில்லாமல் எங்குமிருப்பவளாக உணர்ந்தேன். அன்று அவர்களை நோக்கியபடி நெடுநேரம் கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தேன்.”
பாண்டு பெருமூச்சுவிட்டான். அவன் கண்கள் பொங்குவதை அவள் பார்த்தாள். மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான். பலமுறை பேசமுற்படுபவன் போல தொண்டையை கனைத்தான். பின்பு, “என் உடலை இன்றுதான் நன்றியுடன் எண்ணிக்கொள்கிறேன். இதில் நான் உணரும் வலிமையின்மை என்பது என்னுள் நிறைந்த பெண்மைதான். இன்னும் சில மைந்தர்கள் இருந்தால் இன்னும் சற்று நான் கனிந்தால் என் உடலில் முலைகள் திறந்துகொள்ளும் என்று தோன்றுகிறது. பெண்ணுக்கு மைந்தர்கள் அளிக்கும் பேரின்பத்தில் சில துளிகளை எனக்கும் அளிப்பது இந்த வெளிறிமெலிந்த எளிய உடல்தான்…” என்றான்
மாத்ரி நகைத்தபடி “ஆனால் அதெல்லாமே பேற்றுகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நரம்புத்தளர்வினால் உருவாகும் எண்ணங்கள்தான் என்று அனகை சொன்னாள். பிறகு ஒருபோதும் அவர்கள் சென்றடைய முடியாத எண்ணங்களெல்லாம் வருமாம். மைந்தர்கள் முலையுண்ணத்தொடங்கிய சிலநாட்களிலேயே அவை மறைந்துவிடும். பின்னர் எஞ்சுவதெல்லாம் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் அச்சம் மட்டும்தான்” என்றாள். பாண்டுவும் அந்த மனஎழுச்சியிலிருந்து சிரிப்பின் வழியாக இறங்கிவந்தான். “பீமனைப்போன்ற மைந்தனைப்பெற்றால் எதையும் அஞ்சவேண்டியதில்லை. அவனை மட்டும் அஞ்சினால்போதும்.”
மாத்ரி உரக்கச்சிரித்தபோது நகுலன் திரும்பிப்பார்த்து கைகளை வீசி எம்பி அவளிடம் வர முயன்றான். கண்களை இடுக்கி வாய் திறந்து அவன் சிரிப்பதைக் கண்டு அவள் சிரித்துக்கொண்டு அவனை நோக்கி கைகொட்டி வாயைக் குவித்து ஒலிஎழுப்பி விளையாடினாள். அவன் கைகளை வீசி கால்களை காற்றில் உதைத்து எம்பி எம்பி குதித்தான். பாண்டுவின் தோளில் இருந்த பார்த்தன் புன்னகையுடன் அதைப்பார்த்துக்கொண்டிருந்தான். “இவன் விழிகள் மட்டுமே கொண்ட மைந்தனாக இருக்கிறான்” என்றாள் மாத்ரி பார்த்தனுடைய கருவிழிகளைப்பார்த்து. “எத்தனை கூரிய விழிகள். இரு கருவைரங்கள் போல… ஒரு குழந்தைக்கு இத்தனை கூரிய விழிகளை நான் கண்டதேயில்லை.”
“விழிகளால் அவன் இவ்வுலகை அள்ளிச்சுருட்டி எடுத்துக்கொண்டிருக்கிறான்” என்றான் பாண்டு. “விண்ணில் பறக்கும் பருந்தின் நிழலை ஒரு குவளை நீரில் கண்டு மேலே விழிதூக்கிப்பார்க்கிறான் என்று சொன்னால் நீ நம்பமாட்டாய்.” மாத்ரி சிரித்துக்கொண்டு “சிறந்த சேர்க்கை. ஒருவன் சொல்லாலும் ஒருவன் விழியாலும் ஒருவன் நாக்காலும் உலகை அறிந்துகொண்டிருக்கிறார்கள்” என்றாள். பாண்டு “ஆம், பீமன் அனைத்தையும் தின்பதற்குத்தான் முயல்கிறான்” என்றபடி அப்பால் ஆற்றங்கரையில் கூரிய கழி ஒன்றால் குத்தி மீன்களைப்பிடிக்க முயன்றுகொண்டிருந்த பீமனைப் பார்த்து சொன்னான். “அவன் யார் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அவனும் நானே. என் ஆற்றலற்ற உடலில் அடைபட்டு திணறியபடி உலகை உண்ணத்துடித்த விழைவே அவனாகப் பிறந்திருக்கிறது.”
மாத்ரி “அவன் இல்லாத இடமே இல்லை” என்றாள். தனித்து அமர்ந்து அவனை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கையில் புற்றின் வாயிலிருந்து எறும்புகள் கிளம்புவதுபோல அவன் அவ்வுடலில் இருந்து நூறு ஆயிரமாக பெருகி அப்பகுதியை நிறைப்பதுபோலத் தோன்றியது. மரங்களில் குடில்களில் புதர்களுக்குள் ஓடைக்கரைகளில் பாறையுச்சிகளில் எங்கும் இருந்துகொண்டிருந்தான். அவன் எங்கும் இருக்கலாம் என்பதனாலேயே எங்கும் இருந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது.
குழந்தைகள் வருவதற்கு முன் ஒவ்வொருநாளும் சதசிருங்கத்தில் கேட்டுக்கொண்டிருந்த ஒலி ‘ஆம் ஆம் ஆம்’ என்பது. அவர்கள் வந்தபின் ‘வேண்டாம்! கூடாது! போகாதே! செய்யாதே’. மாத்ரி அந்நினைப்பாலேயே மலர்ந்து தனிமையில் இருந்து வாய்விட்டுச் சிரித்துவிட்டாள். அனகை ‘இளவரசே வேண்டாம்’ என்ற ஒலியாகவே மாறிவிட்டிருந்தாள். பீமனைப்போன்ற ஒருமைந்தனை வளர்க்கும் செவிலித்தாய் இப்பிரபஞ்சம் எத்தனை எல்லைமீறல்களால் சமைக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் ஒவ்வொரு கணமும் அறிவாள்.
வல்லமை ஒன்றே உடலாகக் கொண்டு வந்த அவனால் செய்யக்கூடாதது என ஏதுமில்லை. பாறைகளை ஒன்றுடனொன்று மோதி உடைக்கலாம். மலைச்சரிவில் பெரும்பாறைகளை உருட்டிவிடலாம். சிறியமரங்களைப் பிடுங்கி வேர்ப்படர்வு மேலே இருக்கும்படி தலைகீழாக நட்டுவைக்கலாம். இருகுதிரைகளின் பிடரியையும் ஒரே சமயம்பிடித்தபடி ஓடவைத்து நடுவே காற்றில் மிதந்து செல்லலாம். காட்டெருமையின் வாலைப்பிடித்து இழுத்து அதனுடன் காட்டுக்குள் ஓடலாம். வேள்விக்கு வைத்திருக்கும் நெய்க்குடத்தை எடுத்து முற்றிலும் குடித்துவிடலாம். மலைப்பாம்பை எடுத்து உடலில் சுற்றிக்கொள்ளலாம். அரசநாகத்தை சுருட்டிக் கையிலெடுத்துக்கொண்டுவந்து வீட்டின் கலத்துக்குள் ஒளித்துவைக்கலாம். துயின்றுகொண்டிருக்கும் சேவகனைத் தூக்கிச்சென்று உச்சிப்பாறை விளிம்பில் படுக்கச்செய்யலாம்.
ஒவ்வொரு முறையும் அனகை திகிலடைந்து மயிர்சிலிர்க்க ‘அய்யய்யோ இளவரசே என்ன இது? அய்யோ!’ என்று கூவுவாள். கண்ணீர் மல்க ‘தெய்வங்களே! தெய்வங்களே’ என்று அரற்றியபடி தளர்ந்து மண்ணில் அமர்ந்துகொள்வாள். பின் குளிர்ந்த கண்ணீரை துடைத்தபடி சிரிப்பாள். புயல் நுழைவதுபோல குடிலுக்குள் ஓடிவந்து அனகையை அப்படியேதூக்கி பலமுறை சுழற்றி ஓரமாக அமரச்செய்துவிட்டு கலத்துடன் உணவை எடுத்துக்கொண்டு வெளியே சென்று முற்றத்தில் அமர்ந்து உண்ணத்தொடங்குவான். உண்ட கலத்தைத் தூக்கி குடிலின் கூரைமேல் வீசிவிட்டு கைகளை இலைகளில் துடைத்துவிட்டு மீளும் புயல்போல மறைவான்.
புழுதியும் அழுக்கும் சருகுகளும் படிந்த உடலும் தலைமுடியுமாக அவன் காட்டுமிருகம்போலிருந்தான். புதர்களில் வெறும்கைகளாலும் பற்களாலும் வேட்டையாடினான். இரவில் கையில் பந்தத்துடன் குறுங்காட்டுக்குள் நுழையும் அனகை ‘இளவரசே! இளவரசே’ என்று கூவி அவனைக் கண்டுபிடித்து கைகூப்பி மன்றாடி அழைத்துவருவாள். ஓடையில் அமரச்செய்து நீராட்டி தலைதுவட்டி தன்னுடன் படுக்கச்செய்வாள். நள்ளிரவில் பசித்ததும் அவன் மெல்ல எழுந்து இருளில் நடந்து காட்டுக்குள் சென்றுவிடுவான். அனிச்சையாக அவள் கைகள் அவனிருந்த இடத்தில் படிந்து திடுக்கிட்டு அதிர கண்விழித்து ‘இளவரசே’ என்று கூவுவாள். பந்தத்தைக் கொளுத்தியபடி காட்டுக்குள் செல்வாள். பாண்டு புரண்டுபடுக்கும்போது காட்டுக்குள் பந்தச்சுடர் சுழல்வதைக் கண்டு புன்னகை செய்வான்.
நான்கு வயதில் அவன் அனகையின் தோள்கள் அளவுக்கு உயரம் கொண்டவனாகவும் அவளைவிட எடைகொண்டவனாகவும் இருந்தான். அவனுடைய வளர்ச்சியைப்பற்றி எவரும் கருத்து சொல்வதை அனகை விரும்புவதில்லை. குந்தியே சொன்னால்கூட சினந்து முகம் சிவக்க உரத்தகுரலில் “அத்தனை பெரிய உடலா என்ன? மற்றவர்களை விட சற்று வளர்ச்சி அதிகம்… சென்ற மூன்றுமாதங்களாக உணவு மிகவும் குறைந்துவிட்டது. வளர்ச்சியும் இல்லை” என்பாள். உடனே கண்ணேறுகழிக்க மூன்றுவகை காரங்களைக் கலந்து எரியும் அடுப்பில் போடுவாள்.
சேடியரும் சேவகரும் தும்மல்வராமலிருக்க மூக்கை பிடித்துக்கொள்வார்கள். அவள் காரத்தைக் கையிலெடுக்கையிலேயே நீரை அள்ளி கையில் வைத்திருக்கும் சமையற்காரிகள் மூக்கை அதைக்கொண்டு நனைப்பார்கள். அதையும் மீறி தும்முபவர்களை நோக்கி “எரிவிழியால் மைந்தனைப்பார்த்துவிட்டாயா? உன் கண் என்றுதான் நினைத்தேன்… மைந்தன் உணவுண்ண வந்து இரண்டுநாட்களாகின்றன” என்று வசைபாடுவாள். குந்தியே மைந்தனை தீநோக்கிடுவதாக அனகை ஐயம் கொண்டிருந்தமையால் பீமனை குந்தியின் முன் வராமலேயே அவள் பார்த்துக்கொண்டாள்.
மைந்தர்களை முற்றிலுமாக பிறரிடம் அளித்துவிட்டு குந்தி தன் உலகில் தனித்திருந்தாள். அவள் என்னசெய்கிறாளென்பதே மாத்ரிக்குப் புரியவில்லை. தனித்திருந்து சிந்திப்பவற்றை குந்தி மந்தண எழுத்தில் ஓலைகளில் எழுதி சுருட்டி மூங்கில் குழாய்களுக்குள் அடைத்து ஒரு மரப்பெட்டிக்குள் பூட்டிவைத்தாள். ஒவ்வொருநாளும் பழைய ஓலைகளை எடுத்து வாசித்து குறிப்புகளை எடுத்தபின் அவற்றை தீயிலிட்டு அழித்தாள். “என்ன செய்கிறீர்கள் அக்கா?” என்று ஒருமுறை அவள் கேட்டபோது குந்தி புன்னகை செய்து “வருங்காலத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்” என்றாள். மாத்ரி திகைப்புடன் மேலே பேசாமல் பார்த்தாள். ஒரு புன்னகையுடன் குந்தி மீண்டும் ஓலைகளில் ஆழ்ந்தாள்.
அஸ்தினபுரியிலிருந்து பறவைச்செய்திகள் வாரம் ஒருமுறை வந்தன. ஒற்றர்கள் மாதம் ஒருமுறை வந்தனர். காந்தார இளவரசியருக்கு மைந்தர்கள் தொடர்ந்து பிறந்துகொண்டே இருக்கும் செய்திகளைத்தான் அவர்கள் ஒவ்வொரு முறையும் சொன்னார்கள். “அவர்களின் கருவறைகளை அவர்களின் அச்சமும் வஞ்சமும் எடுத்துக்கொண்டுவிட்டன. நான்குபேர் இருமுறை இரட்டையரைப் பெற்றிருக்கிறார்கள்” என்று குந்தி ஒருமுறை மாத்ரியிடம் சொன்னாள். “ஒவ்வொரு குழந்தையும் ஒன்றில் இருந்து இன்னொன்றை பிரதிசெய்தது போலிருக்கிறது என்கிறார்கள்.”
குந்தியின் கண்களும் தோற்றமும் முழுமையாகவே மாறின. தன்னைச்சுற்றியிருக்கும் எதையும் அறியாதவளாக ஆனாள். அவள் காடுகளுக்குள் சமித்துகளும் கிழங்குகளும் சேர்ப்பதற்காகச் செல்வதில்லை. வேள்விச்செயல்களுக்கு வந்தமர்வதில்லை. முனிவர்கள் எவரிடமும் உரையாடுவதில்லை. அவர்களுக்குமேல் தலைதூக்கி நிற்கும் பனிமலைமுகடுகளில் ஒன்றாக அவள் ஆனதுபோல மாத்ரி நினைத்தாள். அவர்கள் மத்தியில்தான் இருக்கிறாள், ஒவ்வொரு கணமும் கண்ணில்படுகிறாள். ஆனால் அவர்களுடன் இல்லை. அவர்களனைவருமே அவளை மெல்ல மறக்கவும் தொடங்கிவிட்டனர். பாண்டு குந்தியிடம் பேசியே மாதங்களாயிற்று என்றான். அனகை மட்டுமே அவளிடம் சில சொற்களேனும் பேசிக்கொண்டிருந்தாள்.
பாரதவர்ஷத்தின் அத்தனைநாடுகளிலிருந்தும் அவளுக்கு செய்திகள் வந்தன. மகதத்தைப்பற்றியும் காசியைப்பற்றியும் கலிங்கத்தைப்பற்றியும் அவளிடம் ஒற்றர்கள் செய்திகளைச் சொல்லும்போது இமைகள் அசையாமல் கேட்டுக்கொண்டாள். ஒருசில கூரியசொற்களில் பதில் சொன்னாள். மீறமுடியாத ஆணைகளை பிறப்பித்தாள். காட்டில் மலைப்பாறையில் அமர்ந்து செய்திகளைக் கேட்கும்போது அரண்மனையில் தேவயானியின் சிம்மாசனத்தில் வெண்குடைக்கீழ் மணிமுடிசூடி அமர்ந்திருப்பவள் போலிருந்தாள்.
ஆகவே பாண்டு மாத்ரியிடம் மேலும் நெருங்கினான். அவனுடைய உலகின் அன்றாடச் சிறுநிகழ்வுகளை அவனால் அவளிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ளமுடிந்தது. ஒவ்வொருநாளும் அவனுக்குச் சொல்ல ஏராளமாக இருந்தன. கூண்டிலிருந்து தவறிவிழுந்த கிளிக்குஞ்சை மரக்கிளையில் ஏறி மேலே கொண்டுசென்று வைத்ததை. ஏரிமீது மிதந்த மலர் ஒன்றை கரையில் நின்று காட்டுக்கொடியின் கொக்கியை வீசிப் பிடித்து இழுத்துப் பறித்து தருமனுக்குக் கொடுத்ததை, மான்கூட்டத்தின் காலடிகளைத் தொடர்ந்துசென்று காட்டுக்குள் பதுங்கியிருந்த சிம்மத்தைக் கண்டதை…
அன்று அவன் அவளிடம் மூச்சிரைக்க வந்து “நான் இன்று ஒரு பறவைக்கூடைக் கண்டேன்” என்றான். “கைவிடப்பட்ட கூடு அது. பெருமரம் ஒன்றின் மீது மைந்தனுக்காக பறவைக்குஞ்சு ஒன்றை பிடிக்கும்பொருட்டு ஏறினேன். அங்கே அந்த பறவைக்கூட்டைப் பார்த்தேன். அது சிலநாட்களுக்கு முன் ஒரு பறவை குஞ்சுபொரித்து கைவிட்டுச்சென்ற கூடு. அதைநான் உனக்குக் காட்டவேண்டும்…” என்றான்.
உளஎழுச்சியால் அவன் சொற்கள் சிதைந்தன. “அது என்னபறவை என்று உடனே கண்டுகொண்டேன். அது சாதகப்பறவை. இந்தக்காட்டில் அத்தனைபெரிய பறவை அதுதான். நீ அதைப்பார்த்திருப்பாய். அதன் சிறகுகள் பெரிய சாமரம்போலிருக்கும். பறக்கும்போது அந்தச்சிறகுகளின் ஒலி முறத்தைச்சுழற்றுவதுபோல ஒலிக்கும். செம்மஞ்சள் நிறமான கழுத்தும் கரிய சிறகுகளும் கொண்டது. குட்டியானையின் தந்தம்போல நீண்டபெரிய அலகுகளும் குருதித்துளிபோன்ற கண்களும் கொண்டது….” மாத்ரி “ஆம், அதன் குரலை பலமுறை கேட்டிருக்கிறேன். ஒருமுறைதான் பார்த்தேன்” என்றாள்.
“அதன்குரல் வலுவானது. அதர்வவேதம் சாதகப்பறவையின் குரலையே சந்தமாகக் கொண்டுள்ளது என்கிறார்கள் முனிவர்கள்…” என்று பாண்டு அவள் கைகளைப்பிடித்தான். “வா அதை காட்டுகிறேன்.” மாத்ரி “இந்த வேளையிலா? மைந்தர்கள் உணவு அருந்தவில்லை” என்றாள். “அவர்கள் இங்கிருக்கட்டும். நாம் சென்று அதைப்பார்த்துவருவோம்… நான் அதை உனக்குக் காட்டியே ஆகவேண்டும்” என்று அவன் அவள் கைகளைப்பற்றி இழுத்தான். அவள் அனகையிடம் மைந்தர்களை அளித்துவிட்டு அவனுடன் காட்டுக்குள் சென்றாள்.
குறுங்காட்டுக்கு அப்பால் இந்திரத்யும்னத்தின் நடுவே இருந்த சிறிய மேட்டில் அடர்ந்து ஓங்கிய மரங்கள் இருந்தன. “அதை சாதக த்வீபம் என்றே சொல்கிறார்கள். அங்கே செல்வதற்கு ஏரிக்கு அப்பால் ஒரு பாதை உள்ளது. நாணல்கள் அடர்ந்த பாதை” என்று பாண்டு அவளை அழைத்துச்சென்றான். மதியம் அடங்கி மாலைவெயில் காய்ந்த எண்ணையின் நிறத்தில் முறுகிவந்துகொண்டிருந்தது. “சாதகப்பறவையை கவிஞர்கள் சிறப்பித்துப் பாடியிருக்கிறார்கள். பராசரரின் புராணசம்ஹிதையில் இந்திராவதி என்னும் ஆற்றிலிருந்த ஆற்றிடைக்குறையில் வாழ்ந்துவந்த கௌரன் சுப்ரை என்னும் இரு சாதகப்பறவைகளைப்பற்றிய கதை உள்ளது” என்றான்.
“சாதகப்பறவைகள் பெருங்காதல்கொண்டவை. பெண்பறவை மரப்பொந்தில் முட்டைகளைப்போட்டுக்கொண்டு உள்ளேயே அமர்ந்துவிடும். தந்தை தன் வாயிலிருந்து வரும் பசையால் அந்த மரப்பொந்தைமூடும். சிறிய துளைவழியாக உணவை உள்ளே கொண்டு ஊட்டும். குஞ்சுகள் விரிந்து வெளிவந்து பறக்கத்தொடங்குவது வரை அன்னையும் குஞ்சுகளும் தந்தையால் பேணப்படும்” என்றான் பாண்டு. அந்த மரத்தடியை அடைந்து நின்றான். பேச்சினாலும் விரைவினாலும் அவன் மூச்சுவாங்கிக்கொண்டிருந்தான். “இந்த மரத்தின்மீதுதான்…” என்றபடி ஏறத்தொடங்கினான்.
மாத்ரி கீழேயே நின்றாள். “மேலே வா… எளிமையாக ஏறிவிடலாம். மரத்தின் பொருக்குகளில் கால்களை வை. கொடியைப்பற்றிக்கொள்” என்று அவன் கையை நீட்டினான். சற்று தயங்கியபின் அவளும் ஏறிக்கொண்டாள். அவன் அவளைப் பிடித்து கிளைக்கவையின் மேலேற்றி அந்தப்பொந்துக்குக் கூட்டிச்சென்றான். சற்று பெரிய பொந்துக்குள் சுட்டிக்காட்டி “பார்த்தாயா, நான் காட்டவிரும்பியது இதைத்தான்” என்றான். அவள் திகைத்து “என்ன அது? முட்டைகளா?” என்றாள். “இல்லை வெள்ளெலும்புகள். இங்கே முட்டையிட்ட அந்த சாதகப்பறவையின் எலும்புகள் அவை. சாதகப்பறவைக்கு மட்டும்தான் இத்தனைபெரிய எலும்புகள் உண்டு.”
மாத்ரி உதடுகளை கடித்துக்கொண்டு கூர்ந்து பார்த்தாள். “அந்த தந்தைப்பறவை திரும்பி வந்திருக்காது. காட்டுத்தீயில் அகப்பட்டிருக்கலாம். வேட்டைக்காரனின் அம்பு பட்டிருக்கலாம். அது உணவுகொண்டுவரவில்லை என்றால் அன்னையும் மைந்தர்களும் பசித்து இறப்பதே ஒரே வழி.” மாத்ரி “ஆம்… அந்தக்குஞ்சுகள் முட்டையை விட்டு வெளியே வந்ததுமே இறந்திருக்கும்” என்றாள். “நன்றாகப்பார். இதோ இரண்டு முட்டையோடுகள் கிடக்கின்றன. இரண்டு முட்டைகள் விரிந்து குஞ்சுகள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் இங்கே கிடக்கும் எலும்புகளில் குஞ்சுகளின் எலும்புகள் இல்லை.”
அவன் சொல்லவருவதென்ன என்று அவளுக்குப் புரியவில்லை. “பராசரரின் புராணசம்ஹிதையில் உள்ள கதையிலும் இதுவேதான் நிகழ்கிறது. அந்த அன்னை தன் மைந்தர்களிடம் தன் உடலை சிறிது சிறிதாக உண்டு சிறகுகளை வளர்த்துக்கொண்டு பறந்துசெல்லும்படி சொல்கிறது. ஐந்து பறவைகளும் அன்னையை எச்சமில்லாமல் உண்டன. சிறகுகள் முளைத்ததும் அவை பறந்துசென்றன. ஒரே ஒருபறவை மட்டும் திரும்பி அன்னையைத் தேடிவந்தது. அன்னையின் அன்பின் நறுமணம் அந்தக்கூடில் எஞ்சியிருப்பதை அறிந்தது” என்றான் பாண்டு.
அவனுடைய பளபளக்கும் கண்களை அவள் பார்த்திருந்தாள். “இங்கே இந்தக் குஞ்சுகள் செய்ததும் அதைத்தான். அவை அன்னையை உணவாகக் கொண்டிருக்கின்றன. அதுதான் உயிரின் விதி. அந்தக்குஞ்சுகளின் உடலில் அன்னை பளபளக்கும் சிறகுகளாகவும் கூரிய விழிகளாகவும் வலிமைவாய்ந்த அலகுகளாகவும் மாறியிருப்பாள். அவள் தன்னை அமுதமாக்கிக்கொண்டாள்.” அவன் உடல்நடுங்கிக்கொண்டிருப்பதை அவள் கண்டாள். அவளுக்கு பொருள்புரியாத அச்சம் ஒன்று மேலெழுந்தது. அவனை அழைத்துச்சென்றுவிடவேண்டும் என்று நினைத்தாள்.
“மாத்ரி, மனிதர்களுக்கு இறையாற்றல்கள் அளித்திருக்கும் வாய்ப்பு ஒன்றுள்ளது. இறப்பை தேர்ந்தெடுப்பது. இறப்பின் வழியாக அழிவின்மையை அடையமுடியும் என்று அறியாத மானுடரே இங்கில்லை. ஒவ்வொருவரும் அகத்தே காணும் கனவு அதுதான். ஆனால் இந்த எளிய உடலை, இது அளிக்கும் இருப்புணர்வை, இதன் உறவுவலையை விடமுடியாமல் தளைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒளியை நோக்கியே ஒவ்வொரு அகமும் திரும்பியிருக்கிறது. கனவுகண்டு ஏங்கியபடி கண்ணீர் விட்டபடி மெதுவாக இருளை நோக்கிச் செல்கிறது. மீளமுடியாத இருள். எல்லையற்ற இருள்வெளி.”
அவன் உடல் விதிர்த்தது. “என் நினைவறிந்தநாள் முதல் அந்த இருளை நான் கண்டுகொண்டேன். ஆகவேதான் ஒவ்வொருநாளும் நான் ஒளியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். ஒளியை அன்றி இந்த மண்ணில் எதையும் நான் ஒருபொருட்டாக எண்ணியதில்லை.” மாத்ரி “விரைவிலேயே இரவு வந்துவிடும் அரசே. மைந்தர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள். நாம் கிளம்புவோம்” என்றாள்.
காட்டின் வழியாக அவர்கள் நடக்கும்போது பாண்டு தனக்குள் மிகவிரைவாக உரையாடிக்கொண்டிருப்பவன் போல தோன்றினான். அவன் கைவிரல்நுனிகள் அசைந்தன. முகத்தில் உணர்ச்சிகள் மாறிமாறி நிகழ்ந்தன. அவன் வழிவிலகிச் செல்கிறான் என்று அவளுக்குத் தோன்றியதும் “அரசே, எங்கே செல்கிறீர்கள்?” என்றாள். “அது என்ன நறுமணம்?” என்று பாண்டு கேட்டான். “செண்பகமலர்கள்… அங்கே செண்பகமரங்கள் பூத்திருக்கலாம்” என்று மாத்ரி சொன்னாள். பாண்டு “ஆம்… செண்பகம்… இரவில் வடக்கிலிருந்து காற்று வீசினால் செண்பகம் மணக்கிறது. இங்கே எங்கோ செண்பகக்காடு இருக்கிறது” என்றான்.
வெயிலில் சற்று வாடிய இலைகள் வளைந்து தொய்ந்திருந்தன. பச்சைத்தண்டுகள் களைத்தவை போல குழைந்து காற்றிலாடின. “இங்கேதான்… அணுகும்தோறும் பித்துகொள்ளச்செய்கிறது செண்பகமணம்” என்றான் பாண்டு. வெயில் நிறம் மாறிக்கொண்டே இருந்தது. நிழல்களின் அடர்த்தி குறைந்தது. காட்டுக்குள் நீண்டுகிடந்த ஒளிக்குழல்கள் மேலும்மேலும் சரிந்து மஞ்சள்நிறம் கொண்டன. அவை விழுந்து உருவாக்கிய பொன்னிறவட்டங்கள் மங்கலாயின. பறவைக்குரல்கள் ஒலிமாறுபட்டன. அவை கலைந்து உரக்க ஒலிப்பதுபோலத் தோன்றியது.
இலைப்பரப்புகளின் மேல் மஞ்சள் பளபளத்து வழிந்தது. மண் பொன்னிறமாகச் சுடர்விட பொற்துகள்களாக மின்னிய கூழாங்கற்களின் அருகே நிழல்கள் விரல்தொட்டு இழுத்ததுபோன்ற நீண்ட கறைகளாக விழுந்துகிடந்தன. வாகைமரம் ஒன்று சூடி நின்ற நெற்றுகளெல்லாம் பொற்குண்டலங்களாக மாறின. மாத்ரி பதைப்புடன் “அரசே, நாம் திரும்பிவிடுவோம்… நெடுந்தூரம் வந்துவிட்டோம்” என்றாள். பாண்டு “அந்த வாசனை… அதைக் காணாமல் திரும்பினால் நான் பித்துமுதிர்ந்து மீளமுடியாதவனாவேன்” என்றான்.
அது யட்சர்களின் நறுமணமாக இருக்குமோ என்று மாத்ரி ஐயுற்றாள். அவர்கள் நறுமணம் வழியாகவே மனிதர்களைக் கவர்ந்து தங்கள் இடத்துக்கு வரவழைப்பார்கள் என்று அறிந்திருந்தாள். அங்கே சென்றவர்களின் உடலில் கூடி அவர்கள் மானுடக்காமத்தை அறிவார்கள். யட்சர்கள் ஏறிக்கொண்ட உள்ளங்கள் பின்பு மண்ணுலகுக்கு மீள்வதில்லை. “அரசே, நாம் திரும்பி விடுவோம்” என அவள் அச்சத்துடன் சொன்னாள். ஆனால் அவன் அவளை கேட்டதாகவே தெரியவில்லை. அவன் முகம் பெருங்களிப்புடன் மலர்ந்திருந்தது. அவள் அவன் கைகளைப்பற்றினாள். அவை வெப்பத்துடன் நடுங்கிக்கொண்டிருந்தன.
காட்டின் தழைப்படர்ப்புக்கு அப்பால் ஒளி தெரிந்தது. அங்கே ஒரு பெரிய நீர்நிலை இருப்பதுபோல. இந்திரத்யும்னத்தின் ஏதோ நீட்சி என்றுதான் அவள் முதலில் எண்ணினாள். பாண்டு புதர்களை விலக்கி விலக்கி நீர்ப்பாசிக்குள் செல்லும் மீன் போல சென்றுகொண்டிருந்தான். புதர்களுக்கு வெளியே வந்தபோது அவள் கண்டது ஒரு மலைச்சரிவை. நீண்டு சரிந்திறங்கி ஆழத்தில் வெள்ளிச்சரிகை போல சென்றுகொண்டிருந்த சிற்றாறொன்றைச் சென்றடைந்த அச்சமவெளி முழுக்க செண்பக மரங்கள் பூத்து நின்றிருந்தன.
குட்டிமானின் செவிபோன்ற இலைகளும் மலைப்பாம்பு போன்ற கிளைகளும் கொண்ட செண்பக மரங்கள் முழுக்க மலர்கள் அடர்ந்திருந்தன. மலர்ந்த விழிகள் போன்ற நீல செண்பக மலர்கள். பொற்சங்கு போன்ற மஞ்சள் செண்பகங்கள். புன்னகைக்கும் சிவந்த செண்பகங்கள். காற்று சுழன்று மேலேறி வந்தபோது குளிர்ந்த நீர் போல மூச்சடைக்கச்செய்யும் செண்பக மணம் அவளைச்சூழ்ந்துகொண்டது. அது நறுமணமா என்றே ஐயமாக இருந்தது. நாசியும் தொண்டையும் அந்த மணத்தால் கசந்தன. தலைசுழல்வதுபோலிருந்தது. குமட்டலெடுப்பதுபோலிருந்தது.
சற்றுநேரத்தில் அந்த மணத்தில் அங்கே மிதந்துகிடப்பதுபோல உணர்ந்தாள். உள்ளும் புறமும் அந்த மணம்தான் இருந்தது. மரங்களும் செடிகளும் பாறைகளும் தொலைதூரத்து பனிமலைமுகடுகளும் அனைத்தும் அதில் மிதந்து அலைந்தன. எண்ணங்களை செயலிழக்கச்செய்து ஆன்மாவை நிறைத்து விம்மச்செய்தது அது. பாண்டு திரும்பி அவளைப்பார்த்தான். அவன் விழிகளை அவள் புத்தம்புதியனவாக கண்டாள். அவன் அவள் கரங்களைப்பற்றிக்கொண்டான். “இறப்பதென்றால் இங்கே இறக்கவேண்டும்” என்று அவன் சொன்னான்.
அவன் தன்னை இழுத்து அணைத்துக்கொள்வதை அவள் உணர்ந்தாள். தாகமா பதற்றமா என்றறியாத ஒன்று அவளுக்குள் தவித்தது. அவனுடைய நடுங்கும் உதடுகளின் முத்தங்களையும் அவனுடைய உடலின் வெம்மையான அதிர்வையும் அவள் அறிந்தாள். “ஆம், சாவு என்றால் அது இத்தனை நறுமணம்கொண்டதாக இருக்கவேண்டும்” என்று அவன் சொன்னான். அச்சத்துடன் அவனைப் பிடித்து விலக்குவதற்காக அவள் அவன் மார்பைப்பிடித்து உந்தினாள். அது அவன் பிடியை மேலும் இறுக்கியது. “இதுதான்… இந்தக்கணம்தான்” என அவன் பொருளில்லாமல் ஏதோ சொன்னான்.
அக்கணம் அவள் தன்னுள் எழுந்த துடிப்பை உணர்ந்தாள். அவனை அள்ளிப்பற்றி தன்னுள் அடக்கி கரைத்துக்கொள்ளவேண்டும் என்று. அவனை ஐந்து உடல்களாகக் கிழித்து ஐந்து முகங்களாக ஆக்கி ஐந்தையும் தின்று உள்நிறைத்துக்கொள்ளவேண்டும் என்று. திரவவடிவமாக மாறி அந்தச்சமவெளியை நிறைக்கவேண்டும் என்று. மேலே விரிந்த வானையும் வெளியையும் நிரப்பி தான் மட்டுமேயாகி நின்றிருக்கவேண்டும் என்று.