பகுதி பதினேழு : புதியகாடு
[ 4 ]
சதசிருங்கம் நெருப்பில் மறைந்தபின்னர் அன்றிரவு முனிவர்கள் மலைச்சரிவில் கூடி அமர்ந்து எங்குசெல்வதென்று விவாதித்தனர். மலையிறங்கி கீழ்க்காடுகளுக்குச் செல்வதே சிறந்தது என்றுதான் பெரும்பாலானவர்கள் சொன்னார்கள். மூன்று கௌதமர்களும் கீழக்காட்டின் வெப்பம் தவச்செயல்களுக்கு ஒவ்வாதது என்றனர். மாண்டூக்யர் வடமேற்காகச் சென்று சுதுத்ரி மண்ணிறங்கும் இடத்திலுள்ள காடுகளுக்குச் செல்லலாம் என்றார். அவர்களால் முடிவெடுக்க இயலவில்லை.
குந்தி “முனிவர்களே, நிமித்தங்கள் வழியாக விண்ணக ஆற்றல்கள் நம்முடன் உரையாடுகின்றன என்று மூதாதையர் சொல்வதுண்டு. இன்று நம் கண்முன் இந்திரதனுஸை பார்த்தோம். வழிகாட்டும்படி இந்திரனிடம் கோருவோம்” என்றாள். மாண்டூக்யர் “ஆம், வேதமுதல்வனாகிய அவனே நம் தலைவன். அவனுக்கு இன்றைய அவியை அளிப்போம்” என்றார். பாறைமேல் வேள்விக்களம் அமைத்து எரிகுளத்தில் மலைச்சரிவில் அகழ்ந்தெடுத்த கிழங்குகளையும் கையில் எஞ்சியிருந்த தானியங்களையும் அவியாக்கி விண்ணவர்கோனை அழைத்து வேதமுழக்கம் எழுப்பி வணங்கினர்.
அன்றிரவு அவர்கள் தோலாடைகளைப் போர்த்திக்கொண்டு மலைச்சரிவின் பாறைகளில் உறங்கினர். அதிகாலையில் பீமன் உணவுகேட்டு அழுததைக் கேட்டு முதலில் கண்விழித்த அனகை அவர்களுக்கு சற்று அப்பால் கபிலநிறமான சிறிய மான்கள் இரண்டு மேய்ந்துகொண்டிருப்பதைக் கண்டாள். அவை அவளை திரும்பிப்பார்த்து காதுகளை விடைத்து உடலைச் சிலுப்பின. ஆண்மான் காதுகளை இருமுறை அசைத்தபின் கழுத்தை வளைத்து மெல்ல பர்ர் என்று ஓசை எழுப்பியது.
அனகை மெல்ல குந்தியை அழைத்தாள். ‘அரசி’ என்ற அவளுடைய குரலைக்கேட்டு மாண்டூக்யரும் விழித்தெழுந்தார். “தேவா!” என்று கூவியபடி கைகூப்பினார். அவரது வியப்பொலி அனைவரையும் எழுப்பியது. அவர்கள் அந்த மான்களை திகைப்புடன் நோக்கினர். அவர்கள் அனைவரும் விழித்தெழுந்து பார்த்தபோதுகூட அவை விலகி ஓடவில்லை. அவற்றுக்கு கொம்புகள் இருக்கவில்லை. காதுகள் கொம்புகளைப்போல நிமிர்ந்திருந்தன. நாய் அளவுக்கே உயரமிருந்தாலும் அவை விரைவாக ஓடக்கூடியவை என்பதை மெலிந்த கால்கள் காட்டின.
“லலிதமிருகங்கள்” என்றார் மாண்டூக்யர். “இவை மேலே மலையிடுக்குகளில் வாழ்பவை. அங்கே வடக்குமலைகளுக்கு நடுவே புஷ்பவதி என்னும் ஆற்றின் கரையில் புஷ்கலம் என்னும் மலர்வனம் ஒன்றுள்ளது என்று என் குருநாதர்களான முனிவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அங்கே செல்வதற்கான வழியைக் கண்டடைவது மிகக் கடினம். ஏனென்றால் இந்த மலைப்பகுதியில் நிலையான வழி என ஒன்றில்லை. அங்கே கார்காலத்தில் மழை இடைவெளியில்லாமல் பலநாட்கள் தொடர்ந்து பெய்யும். மலைச்சரிவுகள் இடிந்து சரிந்து வரும். காட்டாறுகள் வழிமாறும். புதிய ஓடைகள் ஒவ்வொருமுறையும் பிறக்கும். ஆகவே ஒவ்வொரு மழைக்காலத்துக்குப்பின்னரும் பாதைகள் முழுமையாகவே மாறிவிடும்.”
“இவை அங்கிருந்து வந்திருக்கின்றனவா?” என்று பாண்டு கேட்டான். “ஆம். இவை அங்குமட்டுமே வாழக்கூடியவை. அங்கிருந்து ஏன் இங்கே வந்தன என்று தெரியவில்லை”‘ என்றார் மாண்டூக்யர். “குருநாதரே, இவை நெடுந்தொலைவு நீரின்றி பயணம்செய்யக்கூடியவை அல்ல. ஆகவே இவை மட்டுமே அறிந்த ஒரு குறுக்குப்பாதை இங்கிருந்து புஷ்பவதிக்கு இருக்கவேண்டும்” என்றார் திரிதகௌதமர்.
“நாம் அங்கே செல்வோம்” என்று குந்தி சொன்னாள். “அதுதான் நாம் செல்லவேண்டிய இடம். எனக்கு உறுதியாகத் தெரிகிறது.” மாண்டூக்யர் “அது ஒரு மலர்ச்சமவெளி. அங்கே நாம் எப்படி வாழமுடியும் என்று தெரியவில்லை” என்றார். “உத்தமரே, நான் தனியாகவென்றாலும் அங்குதான் செல்லவிருக்கிறேன். இவை வந்ததே என்னை அழைத்துச்செல்வதற்காகத்தான். ஏனென்றால் என் மைந்தன் பிறக்கவிருக்கும் நிலம் அதுவே” என்றாள் குந்தி. அனைவரும் அவளைத் திரும்பி நோக்கினர். மாண்டூக்யர் “ஆம் அவ்வாறே ஆகுக!” என்றபின் “நாம் கிளம்புவோம். இந்த மான்களின் குளம்புத்தடங்கள் நம்மை வழிகாட்டி அழைத்துச்செல்லும்” என்றார்.
அவர்கள் மூட்டைகளைக் கட்டிக்கொண்டிருக்கும்போதே வெயில் எழுந்தது. மான்கள் துள்ளி புதர்களின் வழியாக ஓடி பாறைகளுக்கு அப்பால் மறைந்தன. அவர்கள் மான்களைத் தொடர்ந்து சென்றனர். “இந்த மான்கள் ஒற்றைக்குளம்பு கொண்டவை. ஆகவே மிக எளிதாக இவற்றின் தடத்தை அடையாளம் காணமுடியும்” என்றார் மாண்டூக்யர். மான்கள் பாறைகளைக் கடந்துசென்ற இடங்களில் அவற்றின் சிறுநீர் வீச்சமே அடையாளமாக இருந்தது.
அன்றுபகல் முழுக்க அவர்கள் மலைச்சரிவில் ஏறிக்கொண்டிருந்தனர். இரவில் மலைப்பாறை ஒன்றின் உச்சியில் தங்கினர். மறுநாள் காலை கண்விழித்தபோது அவர்களுக்கு சற்று மேலே வெண்பனிப்பரப்பு போல பஞ்சுமலர்கள் கொண்டு நின்ற சிறுநாணல்பரப்பில் அந்த இருமான்களும் மேய்ந்துகொண்டிருப்பதைக் கண்டனர். மறுநாள் மாலை அவர்கள் மலையிடுக்கு ஒன்றை அடைந்தனர். அதன் வழியாக மலையருவி ஒன்று வெண்ணிறமாக நுரைத்துக் கொப்பளித்து பேரோசையுடன் இறங்கிச் சென்றுகொண்டிருந்தது. அதன் நீர்த்துளிகள் புகையென எழுந்து அருகே இருந்த பாறைகளில் படிந்து அவற்றை செந்நிறமான பாசி படிந்தவையாக ஆக்கியிருந்தன. மான்கள் அந்த வழுக்கும்பாறைகளில் துள்ளி ஏறி பாறைகள் வழியாகவே மேலேறி அருவிக்குமேலே மறைந்தன.
“அதுதான் புஷ்பவதி” என்றார் மாண்டூக்யர். “நாம் எளிதில் அந்தப் பாறைகளில் ஏறிவிடமுடியாது. கால் நழுவியதென்றால் பேராழத்துக்குத்தான் செல்லவேண்டியிருக்கும்” என்றார். ஒரு பிரம்மசாரி முதலில் பாறைவிரிசல்களில் தொற்றி ஏறிச்சென்று மேலே ஒரு மலைப்பாறையில் இரு கயிறுகளைக் கட்டி இறக்கினான். ஒரு கயிற்றில் சிறிய கம்புகளைக் கட்டி அதை நூலேணியாக்கினர். இன்னொரு கயிற்றைப் பற்றிக்கொண்டு ஒவ்வொருவராக ஏறிச்சென்றனர். மலையருவிக்கு மேலே செங்குத்தாக நின்ற கரியபாறை தெரிந்தது. ஆனால் அதில் ஏறிச்செல்வதற்கான வழி ஒன்று வெடிப்பு போல தெரிந்தது.
“அந்த பாதை இந்த மழைக்காலத்தில் உருவானது” என்றார் மாண்டூக்யர். “அந்தப்பாறை பிளந்து விழுந்து அதிகநாள் ஆகவில்லை. அதன் பிளவுப்பக்கம் இன்னும் நிறம் மாறாமலிருக்கிறது.” அவர்கள் அந்தியில் அந்த பெரும்பாறைக்குமேல் ஏறிச்சென்றனர். அங்கே அவர்கள் தங்க இடமிருந்தது. பாறைக்கு அப்பால் வெண்திரைபோல பனிமூடியிருந்தது. அன்று அங்கேயே மலையருவி கொண்டுவந்து ஏற்றியிருந்த காய்ந்த மரங்களைப் பற்றவைத்து நெருப்பிட்டு அதையே வேள்விக்களமாக ஆக்கி அவியளித்து வேதம் ஓதியபின் வேள்விமீதத்தை உண்டனர்.
மறுநாள் காலையில் பீமனுக்கு உணவூட்ட அனகை எழுந்தபோது அவர்களைச் சுற்றி பனித்திரை மூடியிருந்ததைக் கண்டாள். அருகே படுத்திருப்பவர்களைக்கூட காணமுடியாதபடி அது கனத்திருந்தது. அவள் முந்தையநாள் புஷ்பவதியில் போட்டுவைத்திருந்த கயிற்றுவலையை இழுத்து எடுத்து அதில் சிக்கியிருந்த மீன்களை நெருப்பில் சுட்டு அந்தக்கூழை பீமனுக்கு ஊட்டிக்கொண்டிருந்தபோது காற்று வீசத்தொடங்கியது. சற்று நேரத்தில் பனித்திரை விலகி கீழிறங்கியது. அவள் தன்முன் பச்சைப்புல்வெளி ஒன்றைக் கண்டாள்.
அவள் குரலைக் கேட்டு அனைவரும் எழுந்து நின்று பார்த்தனர். வியப்பொலிகளுடன் கௌதமர்கள் கீழே இறங்கிச்சென்றனர். பனித்திரை விலக விலக அவர்கள் முன் செந்நிற மலர்கள் பூத்துச்செறிந்த குறும்புதர்கள் விரிந்த பெரும்புல்வெளி ஒன்று தெரிந்தது. காலையொளி எழுந்தபோது அதன் வண்ணங்கள் மேலும் ஒளிகொண்டன. அவர்கள் அதைநோக்கி இறங்கிச்சென்றனர். வழுக்கும் களிமண்ணில் கணுக்கால் வரை புதைந்து நடந்து செல்லச்செல்ல அம்மலர்வெளி பெருகிவந்து அவர்களைச் சூழ்ந்துகொண்டது.
இருபக்கமும் எழுந்த மலைகள் பனிமுடி சூடி வான்மேகங்களை அளைந்து நின்றன. மலைச்சரிவு செந்நிறத்தின் நூறு வண்ணமாறுபாடுகளினாலான துணிக்குவியல்போல இறங்கி வந்து பின்னர் பசுமை கொண்டது. பச்சையின் அலைகள் சரிந்து வந்து கீழே கல் அலைத்து நுரையெழுப்பி ஓடிய ஆற்றைச் சென்றடைந்தன. மலைகளின் இடுக்குகளிலெல்லாம் வெண்ணிறச்சால்வை போல அருவிகள் விழுந்துகொண்டிருந்தன. அவற்றுக்குக் கீழே குளிர்ந்த கரியபாறைகள் சாரலில் சிலிர்த்து அமைதியிலாழ்ந்திருந்தன. நீரின் ஒலியும் புதர்களில் காற்று சீவி ஓடும் ஒலியும் சிறியபறவைகளின் ஒலிகளும் சேர்ந்து அங்கே நிறைந்திருந்த பேரமைதியை உருவாக்கியிருந்தன.
அவர்கள் புல்வெளிவழியாகச் சென்றபோது அப்பால் மலைச்சரிவில் ஓர் இளம் பிரம்மசாரி மான்தோலாடையுடன் தோன்றினான். மலைமொழியில் யார் அவர்கள் என்று கேட்டான். மாண்டூக்யர் அதற்குப்பதில் சொன்னதும் அவன் செம்மொழியில் அவரை வணங்கி தனுர்வேதஞானியான சரத்வானின் தவநிலையத்துக்கு வருக என்று வரவேற்றான். அவர்கள் வியந்து பார்த்து நிற்க அவன் மலையருவி இறங்குவதுபோல சில கணங்களில் இறங்கி அவர்களை அணுகி வணங்கினான். அவனைத் தொடர்ந்து அவனுடைய நீர்ப்பிம்பம் போலவே இன்னொருவனும் இறங்கிவந்தான். “எங்கள் பெயர் கனகன், காஞ்சனன். நாங்கள் அஸ்வினிதேவர்களின் குலத்துதித்த மைத்ரேய முனிவரின் மைந்தர்கள். இங்கே சரத்வ முனிவரிடம் மாணவர்களாக தனுர்வேதம் பயில்கிறோம்” என்றனர். “எங்களுடன் வருக!”
சரத்வானின் தவச்சாலை மலையிடுக்கில் இருந்த நீண்ட பெரிய குகைக்குள் இருந்தது. குகை வாயிலில் ஓர் அருவி விழுந்துகொண்டிருந்தது. அதன் வலப்பக்கமாகச் சென்ற பாறைபடிக்கட்டுகள் வெண்பளிங்குஉருளைகள் போலிருந்தன. “இந்தப்பாறைகள் முழுக்க சுண்ணத்தாலும் பளிங்காலுமானவை” என்று காஞ்சனன் சொன்னான். “உள்ளே ஊறிவழிந்த நீரால் பல்லாயிரமாண்டுகளாக அரிக்கப்பட்டு இக்குகைகள் உருவாகியிருக்கின்றன. இந்த மலையில் மட்டும் தங்குவதற்கேற்றவை என பன்னிரண்டு பெருங்குகைகள் உள்ளன. விலங்குகள் தங்கும் நூற்றுக்கணக்கான குகைகள் உள்ளன.” கனகன் “மலைக்குமேல் ஏழு குகைகளில் மலைத் தெய்வங்களின் ஓவியங்கள் உள்ளன. அவை அணுகுவதற்கரியவை. மலையேறி வரும் பழங்குடிகள் அவற்றை வழிபடுகிறார்கள்” என்றான்.
அவர்கள் சென்ற முதல்குகை மாபெரும் மாளிகைமுகப்பு போலிருந்தது. உள்ளே ஒளிவருவதற்காக வெளியே வெவ்வேறு இடங்களில் சுண்ணப்பலகைகளை தீட்டி ஆடிகளாக்கி சரித்துவைத்திருந்தனர். நீண்ட சட்டங்களாக அந்த ஒளிக்கதிர்கள் குகையை கூறுபோட்டிருந்தன. அந்த ஒளியில் குகையின் உட்பகுதி சிற்பங்கள் நிறைந்த கோயிலொன்றின் உள்மண்டபம் போலத் தெரிந்தது. எந்த மானுட உருவங்களாகவும் மாறாத சிற்பங்கள். மத்தகங்கள், பிடரிகள் புடைத்த தசைகள், போர்வைபோர்த்தி நிற்கும் மக்கள்திரள்கள், உறைந்த அலைகள், திகைத்து நிற்கும் தூண்கள்… அவற்றை உருவங்களாக்கிக் கொள்ளமுயன்ற அகம் பிடிகிடைக்காது ஆழத்துக்கு வழுக்கும் கரம் என பரிதவித்தது.
“இது எங்கள் ஆசிரியரின் குகை. இங்குதான் பூசைகளும் வேள்விகளும் வகுப்புகளும் நிகழும். ஆசிரியர் தன் அறையில் இருக்கிறார். அழைத்துவருகிறேன்” என்றான் கனகன். அவன் சென்றபின் ஒவ்வொருவரும் அந்த வெண்சுண்ணச் சிற்பங்களையே விழிதிகைத்து பார்த்துக்கொண்டிருந்தனர். தொங்கும் கல்திரைச்சீலைகள். கல்லாடையின் மடிப்புகள். வெண்கல்தழல்கள். தொட எண்ணி தயங்கி உறைந்த கல்விரல் நுனிகள். சிறகுகள் கல்லாகிச் சிக்கிக்கொண்ட பெரும் பறவைகள். மத்தகம் மட்டுமே பிறந்து கல்லில் எஞ்சிவிட்ட யானைகள். திமில் சரிந்த ஒட்டகங்கள்… மேலிருந்து நூற்றுக்கணக்கான கூம்புகள் தொங்கின. “பெரும் வெண்பன்றி ஒன்றின் அடியில் நிற்பதுபோலிருக்கிறது. பல்லாயிரம் அகிடுகள்” என்றான் பாண்டு.
இல்லை. இவை கல்மேகங்கள். கல்புகை. கல்பனி. கல்வெள்ளம்! என்ன மூடத்தனம்? ஏன் அவற்றை உருவங்களாக்கிக் கொள்ளவேண்டும்? அவை ஐம்பெரும்பூதங்களும் தங்களுக்குள் முயங்கி உருவாக்கிக்கொண்டவை. ஆனால் அகம் அறிந்த உருவங்களையே உருவாக்கிக் கொள்கிறது. “அதோ ஒரு யானை…” என்றான் ஒரு பிரம்மசாரி. “அது மாபெரும் பன்றி…” அனைத்து விலங்குகளும் அங்கிருந்தன. ஒவ்வொன்றும் அவற்றின் வேறுவடிவங்களில் ஒளிந்திருந்தன. படைப்புதெய்வத்தால் சிறையிடப்பட்ட வடிவங்களை உதறி விடுதலைகொண்ட ஆன்மாக்கள் கல்லைக் கொண்டாடிக்கொண்டிருந்தன.
“சரத்வான் தனுர்வேதத்தின் முதல்ஞானிகளில் ஒருவர். அவரது தனுர்வேதசர்வஸ்வம்தான் வில்வித்தையின் முதற்பெரும்நூல் என்கிறார்கள். ஆனால் அவர் வில்வித்தையை போர்க்கலையாகக் கற்பிப்பதில்லை. அதை ஞானக்கலையாகவே எண்ணுகிறார்” என்றார் மாண்டூக்யர். “அவரைப்பற்றி கேட்டிருக்கிறேன். அவர் ஒரு புராணகதாபாத்திரம் என்றே எண்ணியிருந்தேன். அவர் அணுகமுடியாத மலைகளில் எங்கோ இருக்கிறார் என்பார்கள். தேர்ந்த வில்லாளிகள் அனைவரையும் சரத்வானின் மாணவர் என்னும் வழக்கம் உண்டு… அவரை நேரில் காணமுடியும் என்னும் நம்பிக்கையே எனக்கிருக்கவில்லை.”
சரத்வான் கனகனும் காஞ்சனனும் இருபக்கமும் வர வெளியே வந்தபோது அவர்கள் கைகூப்பினர். கரிய உடலில் நெருப்பு சுற்றிக்கொண்டதுபோல புலித்தோல் ஆடை அணிந்து ஒளிவிடும் செந்நிற வைரக்கல்லால் ஆன குண்டலங்கள் அசைய, கரியகுழல் தோளில் புரள, அவர் நாணேற்றிய வில் என நடந்துவந்தார். “மிக இளையவர்…” என்று பின்னால் ஒரு பிரம்மசாரி முணுமுணுத்தான். “முதியவர்தான், ஆனால் முதுமையை வென்றிருக்கிறார்” என இன்னொருவன் சொன்னான். குந்தி அவர் கண்களையே நோக்கிக்கொண்டிருந்தாள். அவை இரு கருவைரங்கள் போலிருந்தன. திரும்புகையில் அவற்றில் வான்நீலம் கலந்து மின்னியதுபோலிருந்தது.
மாண்டூக்யர் முகமன் கூறி வணங்குவதையும் மூன்று கௌதமர்களும் அவரை வணங்கி வாழ்த்துபெறுவதையும் அவள் கனவு என நோக்கிக்கொண்டிருந்தாள். பாண்டுவும் பிற மாணவர்களும் வணங்கினர். பாண்டு அவளை நோக்கி ஏதோ சொன்னான். அவள் திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். மாத்ரியின் கைகளைப்பற்றியபடி சென்று அவரை வணங்கினாள். சரத்வான் இரு மைந்தர்களையும் வாழ்த்தினார். சுருக்கமான சொற்களில் அவர்களை வரவேற்று அங்கு தங்கலாமென்று சொன்னார். அவள் அவரது ஆழமான குரலின் கார்வையை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தாள். அந்தக் கருவைர விழிகள் குரலாக மாறுமென்றால் அப்படித்தான் ஒலிக்கமுடியும்.
அவர்கள் தங்குவதற்கு குகைகள் அளிக்கப்பட்டன. பொருட்களுடன் அவர்கள் குகைகளுக்குள் சென்றபோது மாதிரி “இங்கு தங்குவதா?” என்றாள். குந்தி “ஆம், அரண்மனையில் இருந்து குடிலுக்கு என்றால் குடிலில் இருந்து குகைக்குத்தானே?” என்றாள். வெளியே இருந்த குளிருக்கு மாற்றாக குகை இளம் வெம்மையுடன் இருப்பதை குந்தி கண்டாள். “கோடைகாலத்தில் குகைக்குள் இதமான குளிர் இருக்கும் என்கிறார்கள் அரசி” என்றாள் அனகை. “இங்கே மைந்தனுக்கு ஊனுணவுக்கு குறையே இருக்காது. இங்கே மான்கள் முயல்களைப்போலப் பெருகியிருக்கின்றன.”
சேவகர்கள் பொருட்களை உள்ளே கொண்டுவைத்தனர். சரத்வான் கொடுத்தனுப்பிய நாணலால் ஆன படுக்கையும் கம்பிளிப்போர்வைகளும் மான்தோல் ஆடைகளும் காஞ்சனனாலும் கனகனாலும் கொண்டுவரப்பட்டன. அவர்கள் பொருட்களை ஒருக்க மெல்ல மெல்ல குகை ஒரு வசிப்பிடமாக ஆகியது. அனகை அமைத்த மஞ்சத்தில் குந்தி அமர்ந்துகொண்டாள். அப்பால் நால்வர் பீமனுக்கு உணவூட்டிக்கொண்டிருந்தனர். “அரசி, ஒன்று தெரிகிறது. எப்படி இடைவெளியே இல்லாமல் உணவுண்ணமுடியுமோ அப்படி உணவே உண்ணாமலும் நம் மைந்தனால் இருக்கமுடியும்” என்றாள் அனகை.
அன்று மாலை சரிவுப்பாறை ஒன்றின் விளிம்பில் இளவெயிலில் பாண்டு தருமனுடன் அமர்ந்திருந்தபோது குந்தி சென்று அருகே அமர்ந்தாள். “இந்த நதிக்கு ஏன் புஷ்பவதி என்று பெயர் தெரியுமா? இதன் கரையில் நான்கு புஷ்பவனங்கள் இருக்கின்றன. அதோ தெரியும் அந்த உயரமான பனிமலையை நந்ததேவி என்கிறார்கள். அதைச்சுற்றியிருக்கும் பன்னிரு பனிமலைச்சிகரங்களையும் பன்னிரு ஆதித்யர்களின் பீடங்கள் என்கிறார்கள். அவற்றின்மேல் முழுநிலவுநாட்களில் விண்ணவர் வந்திறங்குவதைக் காணமுடியும் என்று சரத்வான் சொன்னார். அதன் சாரலில் திப்ரஹிமம் என்னும் ஒரு பிரம்மாண்டமான பனியடுக்கு இருக்கிறது. அதன் நுனி உருகித்தான் இந்த ஆறு உருவாகிறது….”
“குளிர்காலத்தில் இந்த ஆறு உறைந்துவிடும் என்கிறார்கள்” என்றான் பாண்டு. “ஆனால் அப்போதுகூட குகைக்களுள் நீர் ஓடிக்கொண்டுதான் இருக்குமாம். ஆகவே இவர்களெல்லாம் இங்கேயே தங்கிவிடுவார்கள். குளிர்காலம் யோகத்திலமர்வதற்கு உரியது என்கிறார்கள். இப்பகுதிமுழுக்க இதேபோல பல மலர்வனங்கள் உள்ளன. மிக அருகே இருப்பது ஹேமகுண்டம். அது வசிஷ்டர் தவம்செய்த இடம். அங்கே அவரது குருமரபைச் சேர்ந்த நூறு முனிவர்கள் இருக்கிறார்கள்.” குந்தி அந்தியின் ஒளியில் நந்ததேவியின் பனிமுகடு பொன்னாவதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“பொன் மீது ஏன் மானுடனுக்கு இத்தனை பற்று என இப்போது தெரிகிறது. மகத்தானவை எல்லாம் பொன்னிறம் கொண்டவை” என்றான் பாண்டு. “நீயும் பொன்னுடல் கொண்டவள் போலிருக்கிறாய்.” குந்தி புன்னகையுடன் “நான் இங்குதான் என் மூன்றாவது மைந்தனைப் பெறவிருக்கிறேன். பரதகுலம் அந்தச் சிகரம் போன்றதென்றால் அது பொன்னாக ஆகும் கணம்தான் அவன். அவன் பெயர் எதுவாக இருந்தாலும் நான் அவனை பாரதன் என்றே அழைப்பேன்” என்றாள். பாண்டு “ஆம், அவன் வில்வித்தையில் நிகரற்றவனாக இருப்பான். கூரிய அம்புகளால் மண்ணில் அனைத்தையும் வெல்வான். விண்ணகத்தையும் அடைவான்” என்றான்.
மழைக்காலம் தொடங்கியபோது அவள் கருவுற்றாள். மழை முதலில் தென்மேற்கிலிருந்து மேகக்கூட்டங்களாக ஏறி வந்தது. ஒன்றையொன்று முட்டி மேலெழுப்பிய கருமேகங்கள் வானை நிறைத்தன. குந்தி அத்தனை அடர்த்தியான மேகங்களை அதற்கு முன்னர் பார்த்ததில்லை. மேகங்கள் இணைந்து ஒற்றைக் கருஞ்சுவராக ஆயின. கருமைக்குள் மின்னல்கள் வெட்டி அதிர்ந்து அணைந்தபோது மேகங்களின் வளைந்த விளிம்புகள் ஒளிவிட்டு மறைந்தன.
அனகை வந்து “அரசி, இங்கே மேகங்களைப் பார்க்கக்கூடாதென்கிறார்கள். மின்னல்கள் பேரொளி கொண்டிருக்கும் என்றும் கண்களைப் பறித்துவிடும் என்றும் சொன்னார்கள்” என்றாள். குந்தி சிலநாட்களாகவே தன்னை முற்றிலும் மறந்தவளாக, பித்துக்கும் பேதைமைக்கும் நடுவே எங்கோ அலைந்துகொண்டிருந்தாள். பெரும்பாலான நேரத்தை அவள் அந்தமலைப்பாறை உச்சியில்தான் கழித்தாள். அங்கிருந்து வடகிழக்கே நந்ததேவியையும் அதன் மேலாடை மடியில் சரிந்து விழுந்ததுபோல வெண்ணிற ஒளிவிட்டுக்கிடந்த திப்ரஹிமத்தையும் பார்க்கமுடிந்தது. தென்கிழக்கில் புஷ்பவதி பசுமைவெளியில் வெள்ளியோடை போல உருகிச் சென்றது. வடமேற்கே பனிமலையடுக்குகள் உறைந்த மேகங்களாக வானில் தங்கியிருந்தன.
“அங்கே மேகங்கள் வருவதை நான்தான் முதலில் பார்த்தேன். கரிய குழந்தை ஒன்று மெல்ல எட்டிப்பார்ப்பது போல மலைக்கு அப்பால் அது எழுந்துவந்தது” என்றாள் குந்தி. “இங்கேதான் மேகங்கள் வரும். அவை இந்திரனின் மைந்தர்கள். இந்திரன் தன் வஜ்ராயுதத்தை அவர்கள் விளையாடுவதற்காகக் கொடுத்துவிடுவான்.” அவளிருக்கும் நிலையில் அவளிடம் எதையும் பேசமுடியாதென்று அனகை அறிந்திருந்தாள். “அரசி குகைக்கு வாருங்கள். பெருமழை வரப்போகிறது” என்றாள். குந்தி அவளை காய்ச்சல் படிந்த விழிகளால் நோக்கி “ஆம், பெருமழை… மழைத்திரையை வஜ்ராயுதம் கிழித்துவிளையாடும்” என்றாள்.
ஒரு பெருமின்னலால் விழிகள் எரிந்து அணைந்தன. வானம் வெடித்ததுபோல எழுந்த இடியோசையால் காதுகள் முழுமையாக மறைந்தன. புலன்களற்ற ஒரு கணத்தில் அனகை தானிருப்பதையே அறியவில்லை. பின்பு “அரசி! அரசி!” என்று கூவினாள். அவள் குரலை அவள் காதுகளே கேட்கவில்லை. இன்னொரு சிறுமின்னலைக் கண்டபோதுதான் தன் விழிகள் மறையவில்லை என்பதை உணர்ந்தாள். முன்னால் தாவிச்சென்று குந்தியை பிடித்துக்கொண்டாள். நினைவிழந்துகிடந்த அவளைத் தூக்கி தன் குகைக்குக் கொண்டுவந்தாள்.
மருத்துவர் அவள் கருவுற்றிருப்பதைச் சொன்னார்கள். அவள் குகைக்கு வெளியே செல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று பாண்டு ஆணையிட்டான். அனகையும் சேடியரும் அவளை ஒவ்வொரு கணமும் கண்காணித்தனர். குகைக்கு காட்டுமரப்பட்டைகளாலான கதவுகள் போடப்பட்டன. அவள் அந்தக்கதவுகளுக்கு இப்பால் அமர்ந்து வெளியே இளநீலத்திரைச்சீலை போல அசைந்தபடி குன்றாமல் குறையாமல் நின்றிருந்த மழையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். மழைக்குள் மின்னல்கள் துடித்து துடித்து அதை வெண்நெருப்புத்தழல்களாக ஆக்கி அணைந்தன. இடியோசையில் மழைத்தாரைகள் நடுங்குவதுபோலத் தெரிந்தது.
இரண்டரை மாதம் தொடர்ந்து பெய்த மழைக்குப்பின் புஷ்பவதியின் சரிவு முழுக்க சேறும் சருகுக்குவைகளும் நிறைந்திருந்தன. இளவெயிலில் அவை மட்கி எழுப்பிய ஆவி குகைகளுக்குள் வந்து வீச்சத்துடன் நிறைந்தது. சிலநாட்களில் இளம்புல்தளிர்கள் மேலெழுந்தன. மேலும் சிலநாட்களில் அவை புதர்களாக அடர்ந்து மொட்டுவிட்டன. மென்மையான ஊதாநிறம் கொண்ட மலர்கள் நதிநீரின் ஓரத்திலும் செந்நிறமலர்கள் மலைச்சரிவிலும் செறிந்தன. ஆற்றின் இருகரைகளும் இரண்டு இதழ்களாக மாற புஷ்பவதி நடுவே வெண்ணிறப்புல்லி போல நீண்டு செல்ல அந்நிலமே ஒற்றைப்பெருமலர் போல ஆகியது. செந்நிறத்துக்குள் ஊதாநிறத்தீற்றல்கொண்ட முடிவில்லாத மலர்.
குந்தி அந்நாட்கள் முழுக்க மலர்கள் நடுவேதான் இருந்தாள். மலர்களையன்றி எதையுமே பார்க்காதவையாக அவள் கண்கள் மாறிவிட்டன என்று அனகை நினைத்தாள். அவளிடம் பேசியபோது அவள் விழிகள் தன்னை அடையாளம் காணவில்லை என்று கண்டு அவள் துணுக்குற்றாள். பாண்டுவையும் மைந்தர்களையும்கூட அவள் அடையாளம் காணவில்லை. அவளுடைய பேச்சுக்கள் எல்லாம் முற்றிலும் பொருளிழந்திருந்தன. பொருளற்றவையாக இருந்ததனாலேயே அவை கவிதைகள் போல ஒலித்தன. ‘இந்திரவீரியம் மலர்களையே உருவாக்குகிறது. மலர்கள்தான் காடுகளை உருவாக்குகின்றன’. ‘வானவில் பூத்திருக்கிறது… ஒவ்வொரு மலருக்கும் ஒரு வானவில்’ என்றாள். தனக்குத்தானே பேசிக்கொண்டவளாக மலர்கள் நடுவே இளவெயிலில் படுத்தாள். இரவில் அனகை அவளை மலர்வெளியில் எங்கிருந்தாவது தேடிக்கண்டடைந்து கொண்டுவந்தாள்.
கோடை முதிரத்தொடங்கியபோது மலர்கள் நிறம்மாறின. மெல்ல மலர்வெளி சுருங்கி நீரோட்டத்துக்கு அருகே மட்டும் எஞ்சியது. பின்னர் அந்த இறுதிவண்ணமும் மறைந்தது. புஷ்பவதியின் நீர் பெருகி வந்து கரைதொட்டு ஓட அருவிகளின் ஓசை இரவில் செவிகளை மோதுமளவு உரக்க ஒலித்தது. குந்தியின் வயிறு கனத்து கீழிறங்கியது. அவள் சொற்களை இழந்துகொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் அப்பகுதியில் இருந்த வெண்கல்பாறைகளில் ஒன்றுபோல ஆனாள்.
பனிக்காலம் குளிர்ந்த காற்றாக வரத்தொடங்கியது. வடக்கிலிருந்து வீசிய காற்றில் வெண்கற்பாறைகள் பனிக்கட்டிகள் போல குளிர்ந்திருந்தன. மதியத்திலும் உடலை புல்லரிக்கவைக்குமளவுக்கு குளிர் காற்றில் கரைந்து வீசியது. கண்கூசவைக்கும் வெயிலிலும் வெப்பமே இருக்கவில்லை. ஒருநாள் காலையில் அனகை குகைவாயிலில் மலைச்சரிவிலிருந்து ஊறிவழிந்த நீர் ஒளிமிக்க பளிங்குத்துளியாக நிற்பதைக் கண்டாள். அதைக் கையிலெடுத்துக்கொண்டுவந்து பிறருக்குக் காட்டினாள். “முதல்பனி” என்று பாண்டு சொன்னான். “இமாலயம் தன் செய்தியை அனுப்பியிருக்கிறது!”
காலையில் கண்விழித்து வெளியே பொறியில் மாட்டியிருக்கும் ஊன்மிருகத்தை எடுப்பதற்காகச் சென்ற அனகை மலைச்சரிவெங்கும் உப்புப்பரல் விரிந்ததுபோல பனி படர்ந்து ஒளிவிட்டுக் கிடப்பதைக் கண்டாள். அவள் ஓடிவந்து சொன்னபோது அனைவரும் கூச்சலிட்டபடி எழுந்து ஓடி வெளியே சென்று பனியைப் பார்த்தனர். வெண்நுரைபோல பார்வைக்குத் தோன்றினாலும் அள்ளுவதற்கு கடினமாக இருந்தது பொருக்குப்பனி. அவர்கள் அதை அள்ளி ஒருவரோடொருவர் வீசிக்கொண்டு கூவிச்சிரித்தனர்.
பாண்டு தன் மைந்தர்களை பனியில் இறக்கி விட்டு பனித்துகளை அள்ளி அவர்கள் மேல் வீசினான். குழந்தைகள் கூசி சிரித்துக்கொண்டு கையை வீசின. கனத்த வயிற்றுடன் குந்தி அவர்களின் விளையாடலை நோக்கி அமர்ந்திருந்தாள். மாத்ரி யுதிஷ்டிரனை தூக்கிக்கொண்டு கீழே பனிவெளியை நோக்கிச் சென்றாள். அவன் கையை நீட்டி பனியை சுட்டிக்காட்டி கால்களை உதைத்து எம்பி எம்பி குதித்தான்.
பாண்டு “இன்னொரு மைந்தனும் வரப்போகிறான் என்பதை என்ணினால் என்னுள்ளும் இதேபோல பனி பெய்கிறது பிருதை” என்றான். “அவன் வருகைக்காக காத்திருக்கிறேன். இங்கே தனிமை இருப்பதனால் காத்திருப்பது பெருந்துன்பமாக இருக்கிறது.” குந்தி புன்னகையுடன் “இன்னும் சிலநாட்கள்” என்றாள். “எனக்கு மைந்தர்கள் போதவில்லை. இன்னொரு மைந்தன். அவன் வந்தாலும் போதாது… மேலும் மைந்தர்கள் வேண்டும்… உனக்கு துர்வாசர் அளித்த மந்திரத்தை எத்தனைமுறை பயன்படுத்த முடியும்?”
“ஐந்துமுறை” என்று குந்தி சொன்னாள். “நான் நான்குமுறை அதை உச்சரித்துவிட்டேன்.” பாண்டு எழுந்து அவளருகே வந்து அவள் கைகளைப்பற்றிக்கொண்டான். “இன்னொரு மந்திரம் எஞ்சியிருக்கிறது. எனக்கு இன்னொரு மைந்தனைப்பெற்றுக்கொடு!” குந்தி “இல்லை. இன்னொரு மைந்தனை நான் பெறமாட்டேன் என்று சொல்லிக்கொண்டேன். மகப்பேறு என்னும் அனுபவத்தின் உச்சத்தை நான் அடைந்துவிட்டேன். இப்போது என்னுள் இருக்கும் மைந்தனைப் பெற்றதும் நான் முழுமையடைந்துவிடுவேன். பிறகு எவருக்கும் என் உதரத்தில் இடமில்லை.”
பாண்டு “நான் ஆசைப்பட்டுவிட்டேன் பிருதை… ஒரு மந்திரம் இருக்கையில் அதை ஏன் வீணாக்கவேண்டும்? அது ஒரு மைந்தன் இம்மண்ணில் வருவதற்கான வழி. அதை மூட உனக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்றான். அவள் நிமிர்ந்து அவனைப்பார்த்தாள். அப்பால் மாத்ரி உரக்கக்கூவியபடி ஓட யுதிஷ்டிரன் பனியை அள்ளியபடி துரத்துவது தெரிந்தது. மாத்ரி பனியில் கால்சிக்கி கீழே விழுந்து கூவிச்சிரித்தாள். அவளை நோக்கியபின் பாண்டு “அவள் என்னிடம் அவளுக்கு மைந்தர்கள் இல்லை என்பதைச் சொல்லி வருந்தினாள்” என்றான்.
குந்தி புன்னகையுடன் “அந்த மந்திரத்தை அவளுக்குச் சொல்கிறேன். அவள் தாயாகட்டும்” என்றாள். பாண்டு புன்னகைத்து “ஆம், அதுவே முறை. அவளுடைய வாழ்க்கையில் அப்படியேனும் ஒரு பொருள் பிறக்கட்டும்” என்றான்.
பனிசெறிந்தபடியே வந்தது. வெண்பனிப்போர்வை சென்று உடைந்து பளிங்குவாள்முனையாக மாறி நின்ற எல்லைக்கு அப்பால் கருநீலக் கோடாக புஷ்பவதி சென்றது. பனிப்பொருக்குகள் உடைந்து நீரில் விழுந்து பாறைகளில் முட்டிச்செல்லும் மெல்லிய ஒலியை இரவில் கேட்கமுடிந்தது. மலைச்சரிவில் வழுக்கி ஒன்றை ஒன்று முட்டி இறக்கி கீழே வந்த பனிப்பாறைப் படலங்கள் கீழே பனித்தளம் உருகியபோது உடைந்து பளிங்கொலியுடன் சரிந்து விழுந்து நீரில் மிதந்துசென்றன. குகைக்குள் எந்நேரமும் கணப்பு எரிந்துகொண்டிருந்தது. அந்தச்செவ்வொளி குகைவாயில் வழியாக வெளியே விரிந்த பனிப்படலத்தில் நெருப்புத்தழல்போல விழுந்துகிடந்தது.
நள்ளிரவில் ஒரு அழைப்பை உணர்ந்து குந்தி விழித்துக்கொண்டாள். அழைத்தது யார் என்று எழுந்து அமர்ந்து சுற்றுமுற்றும்பார்த்தாள். அனைவரும் கனத்த கம்பிளிப்போர்வைக்குள் முடங்கி தூங்கிக்கொண்டிருந்தனர். அவள் சிலகணங்கள் கழித்து போர்வையை எடுத்து போர்த்திச் சுற்றிக்கொண்டு வெளியே சென்றாள். கதவைத்திறந்து பனிவெளிக்குள் இறங்கினாள். தரையெங்கும் வெண்பனி விரிந்திருந்தாலும் காற்றில் பறந்து உதிர்ந்துகொண்டிருந்த பனித்துகள்கள் முழுமையாக நிலைத்திருந்தன. அதிதூய காற்றுவெளி அசைவில்லாது நின்றது. வானம் மேகமற்று விரிந்திருக்க மேற்குச்சரிவில் முழுநிலவு இளஞ்செந்நிற வட்டமாக நின்றிருந்தது. அதைச்சுற்றி வானத்தின் ஒளிவட்டம் விரிந்திருந்தது.
மறுநாள் முழுநிலவு என்று அவள் நினைவுகூர்ந்தாள். நிலவு மேற்கே அணைந்துவிட்டிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் விடிந்துவிடும். தன்னை அழைத்தது யார் என்று எண்ணிக்கொண்டாள். நிலவா? புன்னகையுடன் அந்தப்பாறையை அடைந்து அதன் மேல் அமர்ந்து போர்வையை நன்றாகச் சுற்றிக்கொண்டாள். தொடர்ந்து வீசிக்கொண்டிருந்த குளிர்காற்று முழுமையாகவே நின்றுவிட்டிருந்தது. இம்முறை பனிக்காலம் மேலும் நீண்டுவிட்டது என்று சொன்னார்கள். பனி முடிந்துவிட்டதென்று எண்ணிக்கொண்டாள். ஒருவேளை நாளை வெம்மையான சிவந்த சூரியன் எழக்கூடும். பனி உருகக்கூடும்.
கண்கள்தான் தெளிந்து வருகின்றனவா இல்லை ஒளி கூடுகிறதா என்று குந்தி வியந்துகொண்டாள். இல்லை ஒளி அதிகரிப்பது உண்மைதான். நிலவொளி ஒரு குறிப்பிட்டகோணத்தில் விழும்போது அங்கிருந்த பனிச்சரிவுகள் அதை முழுமையாக எதிரொளிக்கின்றன போலும். ஒளி மேலும் கூடியபோது அப்பகுதியே வெண்ணிறமான கண்கூசாத ஒளியலைகளாக மாறியது. ஒளியாலான மலைகள், ஒளியாலான சரிவுகள், ஒளியாலான வானம். தன் உடலும் அமர்ந்திருந்த பாறையும் எல்லாம் ஒளியாக இருப்பதை உணர்ந்தாள். ஒளியில் மிதந்து கிடப்பதைப்போல, ஒளியில் தன் உடல் கரைந்து மறைவதுபோல அறிந்தாள்.
பனிப்பொருக்கு நொறுங்கும் மெல்லிய ஒலியைக் கேட்டு அவள் திரும்பிப்பார்த்தாள். அவளுக்கு நேர்முன்னால் ஒளியே உடலாகத் திரண்டு வருவதுபோல ஒரு சிறிய வெண்ணிறச் சிறுத்தைப்புலி அவளை நோக்கி வந்தது. உடல் சிலிர்க்க அவள் அசையாமல் அமர்ந்திருந்தாள். அது கனவு என்று ஒருகணம் எண்ணினாள். உண்மை என மறுகணம் தெளிந்தாள். பாதிரிமலரின் பூமுட்கள் போல மெல்லிய வெண்முடி படர்ந்த உடலில் மயிற்பீலி விழிகள் என அசைந்த கரிய புள்ளிகள். உருண்ட முகத்துக்குமேல் இரு வெண்தாழை மடல்கள் போன்ற செவிகள். வெண்ணிற வைரம்போன்ற இரு கண்கள். சிவந்த நாக்கு மலரிதழ்போல வெளிவந்து மூக்கை நக்கி மீண்டது. அதன் சிலிர்த்த மீசையின் வெள்ளிக்கம்பிகளை அவள் மிக அருகே கண்டாள்.
மயங்கிக்கிடந்த குந்தியை காலையில் அனகைதான் கண்டடைந்தாள். அவளை குகைக்குள் கொண்டுவந்து படுக்கச்செய்து சூடான தோலாடையால் உடலைமூடி உள்ளே அனலிட்ட உலோகக்குடுவையை வைத்து வெம்மையூட்டினர். அவள் மலர்ந்த முகத்துடன் புன்னகைக்கும் உதடுகளுடன் இசைகேட்டு தன்னிலையழிந்தவள் போல, தெய்வசன்னிதியில் பித்துகொண்ட பக்தன்போல கிடந்தாள். பாண்டு மருத்துவச்சியை அழைத்து வந்தான். “ஆம், மைந்தன் வரப்போகிறான்” என்றாள் அவள்.
அது ஸ்ரீமுக ஃபால்குன மாதம். உத்தர நட்சத்திரம் என்று பாண்டு எண்ணிக்கொண்டான். குளிர்காலம் வந்தபின்னர் அன்றுதான் முதல்முறையாக சூரியன் கிழக்கு வானில் எழுந்தான். முதலில் மலைச்சிகரங்கள் சூடிய பனிமுடிகள் பொன்னொளி கொண்டன. பின்னர் புஷ்பவதியின் கரையிலும் மலைச்சரிவுகளிலும் பரவிய பனி பொற்சுடராக மாறியது. அந்தமலைச்சரிவே ஒரு பொன்னிறப்பாத்திரமாக மின்னுவதை குகைவாயிலில் நின்று பாண்டு கண்டான். தானம் கொள்ள விண்ணை நோக்கி வைக்கப்பட்ட பொற்கலம்.
நடுமதியத்தில் குந்தி மைந்தனை ஈன்றாள். குகை வாயிலில் நின்ற மாண்டூக்யர் அவனிடம் “பூர்வ ஃபால்குனமும் உத்தர ஃபால்குனமும் இணையும் வேளை. மாமனிதர்கள் பிறப்பதற்காகவே காலம் வைத்திருக்கும் வாழ்த்தப்பட்ட கணம்” என்றார். பாண்டு அப்போது வெளியே வியப்பொலிகள் எழுவதைக் கேட்டான். அவர்கள் வெளியே வந்து பார்த்தபோது குகைகளில் இருந்த அனைவருமே வந்து பாறைகள் மேல் நின்று கூச்சலிடுவதைக் கண்டனர். உச்சிவானில் திகழ்ந்த சூரியனுக்குக் கீழே அங்கிருந்த பன்னிரு பனிமலைச் சிகரங்களிலும் பன்னிரண்டு சூரியவடிவங்கள் தோன்றியிருந்தன.