பகுதி பதினேழு : புதிய காடு
[ 3 ]
குந்திதான் முதலில் பார்த்தாள். கீழே மலையடிவாரத்தில் சிறிய வெண்ணிறக் காளான் ஒன்று பூத்துநிற்பதுபோல புகை தெரிந்தது. “அது புகைதானே?” என்று அவள் மாத்ரியிடம் கேட்டாள். “புகைபோலத்தெரியவில்லை அக்கா. மலையிலிருந்து கொட்டும் புழுதி காற்றில் எழுவதுபோலிருக்கிறது” என்றாள். குந்தி அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். “இல்லை, அது மெல்ல விரிகிறது. அது தீயேதான்” என்றாள். “தீ என்றால் வாசனை வருமல்லவா?” என்றாள் மாத்ரி. “வாசனை வராத அளவுக்கு அது கீழே இருக்கிறது” என்று குந்தி சொன்னாள்.
மெல்ல புகை மேலெழுந்து நீரில் கரையும் பால்போல பிரிந்தது. வெண்ணிற இறகு போல அதன் பிசிர்கள் காற்றில் எழுந்து விலகிச்சென்றன. “ஆம், நெருப்புதான். கோடையில் காட்டுநெருப்பு எழுமென்று சொன்னார்கள். ஆனால் சதசிருங்கத்தில் இதுவரை பார்த்ததில்லை” என்றாள் மாத்ரி. குந்தி “அங்கே ஓடைக்கரையில் தர்ப்பைப்புல் அடர்ந்திருக்கும். இங்கிருந்து அங்கே சென்றுதான் தர்ப்பை கொண்டுவருகிறார்கள் பிரம்மசாரிகள். கோடையில் அவை காய்ந்து உரசிக்கொள்ளும்போது தீப்பற்றிக்கொள்கின்றன” என்றாள் .
“தர்ப்பைக்குள் அக்னிதேவன் குடியிருக்கிறான் என்கிறார்கள்” என்றாள் மாத்ரி. “எல்லா செடிகளிலும் மரங்களிலும் அக்னி குடியிருக்கிறான். இதோ இந்தப் பாறையிலும் கூட” என்றபின் குந்தி எழுந்தாள். “அரசர் எங்கே?” மாத்ரி புன்னகைசெய்து “அவரது தலைக்குமேல் இன்னொரு தலை முளைத்திருக்கிறது. அந்த இரு தலைகளும் உரையாடிக்கொண்டே இருக்கின்றன. நடுவே வேறெவருக்கும் இடமில்லை” என்றாள்.
அப்பால் குடிலில் அனகையின் குரல் கேட்டது. யாரோ சேடியை அவள் கூவி அழைத்துக்கொண்டிருந்தாள். மாத்ரி புன்னகையுடன் “அனகையின் முழுநாளும் ஒரேசெயலுக்கு செலவாகிவிடுகிறது அக்கா” என்றாள். குந்தி புன்னகைசெய்தாள். பீமனுக்கு உணவூட்ட ஆறுபேர் கொண்ட சேடியர்குழு ஒன்றை அஸ்தினபுரியிலிருந்து குந்தி வரவழைத்திருந்தாள். அவனுடைய பெரும்பசி தொடக்கத்தில் அனைவருக்கும் அச்சமூட்டுவதாக இருந்தது. உணவு செரிக்காமல் குடல் இறுகி குழந்தை மாண்டுவிடும் என்று மருத்துவச்சியர் அஞ்சினர். ஆனால் சிலநாட்களுக்குள்ளாகவே தெரிந்துவிட்டது. அவனுடைய வயிற்றில் வடவைத்தீ குடியிருக்கிறது என்று.
அவன் விழித்திருக்கும் நேரமெல்லாம் உணவுண்டபடியே இருந்தான். அவன் உண்ணும் வேகத்துக்கு இரு சேடியர் இருபக்கமும் நின்று மாறி மாறி ஊட்ட வேண்டியிருந்தது. இருவர் இருபக்கமும் நின்று தாலங்களில் உணவை அள்ளிவைக்கவேண்டும். இருவர் அடுமனையில் பணியாற்றவேண்டும். அனகை புன்னகையுடன் “வேள்வித்தீயை கார்மிகர் பேணுவதுபோல தோன்றுகிறது அரசி” என்றாள். உண்மையில் அவள் ஒரு வேள்வியில் இருக்கும் வைதிகனின் தீவிரத்துடன் எப்போதுமிருந்தாள். இரவில் துயிலும்போதும் அவனுக்கு உணவூட்டுவதைப்பற்றியே கனவுகண்டாள். உணவூட்டவில்லையே என்ற அச்சத்துடன் திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். அவள் எப்போது விழித்துக்கொண்டாலும் சிறிய அசைவிலேயே கண்விழித்து எழும் பீமன் தன் கைகளை தரையில் அறைந்து கால்களை காற்றில் உதைத்து உணவுக்காக குரலெழுப்பி அழுதான்.
முதல் எட்டுநாட்கள் அவனைத்தேடி குரங்குகளே வந்து அமுதூட்டின. அவனை ஈச்சம்பாயில் முற்றத்தில் படுக்கவைத்தபோது அன்னைக் குரங்குகள் கிளைகளின் வழியாக இறங்கி வந்து அவனை அள்ளி எடுத்துக்கொண்டு சென்றபின் காட்டில் எங்காவது விட்டுவிட்டு மரங்களில் அமர்ந்து எம்பி எம்பிக்குதித்து குரலெழுப்பின. வீரர்கள் சென்று அவனைத் தூக்கிவந்தனர். மந்திப்பால் அவன் குடலை விரியச்செய்தது. அவன் தோலின் சுருக்கங்கள் விரிந்தன. அவன் விழிகள் திறந்து ஒளியை பார்க்கத்தொடங்கின.
நாலைந்து நாட்களிலேயே அவனுக்கு மந்திப்பால் போதாமலாகியது. ஆதுரசாலை மருத்துவர்கள் பசும்பால் கொடுக்கத்தொடங்கினர். ஒவ்வொருநாளும் அவன் அருந்தும் பாலின் அளவு இருமடங்காகியது. “அதிகமாக பால் கொடுக்கவேண்டியதில்லை” என்று மருத்துவச்சி சொன்னபோது “அவன் உதரம் நிறைவதுவரை கொடுங்கள். ஒன்றும் ஆகாது” என்று குந்தி சொன்னாள். வெண்சங்கு துளை வழியாக பால் அருந்தியவன் நான்காவதுநாளில் நேரடியாக கிண்ணத்திலிருந்து அருந்தினான். அவன் பாலருந்தும் ஒலி குடத்தில் நீர் விடுவதுபோல ஒலிக்கிறது என்றாள் மாத்ரி.
பத்துநாட்களுக்குள் பாலைக் காய்ச்சி சுண்டவைத்து கொடுக்கத்தொடங்கினர். மருத்துவச்சி “நான் இன்றுவரை இவ்வளவு உணவருந்தும் ஒரு குழந்தையைப் பார்த்ததில்லை. என் மருத்துவ அறிவே பொருளிழந்துபோய்விட்டது” என்றாள். குந்தி அனகையிடம் “இனி அவனுக்கு மருத்துவச்சிகள் தேவையில்லை. அவனுக்கு எந்த உணவையும் முதலில் சற்று கொடுத்துப்பாருங்கள். உணவு செரித்ததென்றால் முழுவயிற்றுக்கும் கொடுங்கள்” என்றாள். அனகை “மைந்தனின் வயிறு நிறைவதாகவே தெரியவில்லை அரசி” என்றாள். “ஆம், அவன் விருகோதரன்…” என்றாள் குந்தி புன்னகையுடன்.
சிலநாட்களில் அனகையே அவன் வயிற்றை புரிந்துகொண்டாள். ஒருமாதத்தில் அவன் தேனும்தினைமாவும் பாலுடன் சேர்த்து செய்த கஞ்சியை அருந்தத் தொடங்கினான். இருபதாவது நாளில் கூழாக்கிய முயலிறைச்சியை உண்டான். பின்னர் மானிறைச்சியை வேகவைத்து அரைத்து ஊட்டத்தொடங்கினர். உணவுக்கேற்ப அவன் எடையும் கூடிக்கூடி வந்தது. ஒவ்வொருநாளும் அவன் மேலும் எடைகொண்டிருப்பதாக அனகை நினைத்தாள். மூன்று மாதங்களுக்குள் அவனை பெண்கள் எவரும் தூக்கமுடியாதென்ற நிலைவந்தது. மேலும் ஒரு மாதம் கடந்த பின் அவனை எவருமே தூக்கமுடியவில்லை.
அவன் தோள்களிலும் தொடைகளிலும் மென்தசைகள் மடிப்புமடிப்பாக திரண்டன. தோல் பளபளப்பான வெண்ணிறம் கொண்டது. கைகால்கள் நீண்டு நகங்கள் உறுதியாகி ஆறு மாதத்தில் அவன் பத்துமடங்கு எடைகொண்டவனாக ஆனான். அவனை நீராட்டுவதற்கு குடிலுக்குப்பின்னால் ஓடிய சிற்றோடைக்கு இருசேடியர் துணையுடன் அனகை கொண்டுசென்றாள். தினமும் மும்முறை நீரோடையில் அவனை இறக்கி படுக்கச்செய்து அவனுடைய மென்மையான தசைமடிப்புகளுக்குள் படிந்திருக்கும் உணவின் மிச்சங்களைக் கழுவினாள். அவனுக்கு நீர் பிடித்திருந்தது. சிலநாட்களுக்குள்ளாகவே அவன் நீரில் தாவமுயன்றான். கைகளால் நீரோட்டத்தை அறைந்தான். மயில் அகவுவதுபோல உவகை ஒலி எழுப்பினான்.
“தன் எடையை அவன் எப்போதும் அறிந்துகொண்டிருக்கிறான். நீரிலிறங்குகையில் அதிலிருந்து அவனுக்கு விடுதலை கிடைக்கிறது போலும்” என்றான் பாண்டு. குந்தி பீமனை நீராட்டிக்கொண்டிருந்தாள். கரையில் நின்றிருந்த பாண்டுவின் தோளில் மெலிந்த மார்பும் பெரிய தலையில் மலர்ந்த கருவிழிகளுமாக யுதிஷ்டிரன் அமர்ந்திருந்தான். “நான் மூத்தவனை அதிகமாக தூக்கியலைந்துவிட்டேன் பிருதை. ஆகவேதான் என்னால் தூக்கவே முடியாத மைந்தனை எனக்களித்திருக்கின்றனர் மூதாதையர்” என்றான் பாண்டு. “யானையின் மத்தகத்தை கையால் அறைந்து நிறுத்திய மாமன்னர் ஹஸ்தி இப்படித்தான் இருந்திருப்பார்.”
பீமன் நீரில் எம்பி எம்பி விழுந்து ‘ஆ ஆ’ என குரலெழுப்பினான். “ஆறுமாதக்குழந்தையா இது?” என்றான் பாண்டு. யுதிஷ்டிரனை கீழே இறக்கிவிட்டு அவனும் ஓடையில் இறங்கி பீமனைத் தூக்கினான். “நீரில் மட்டுமே இவனை நான் தூக்கமுடிகிறது…” என்று சொல்லி சிரித்துக்கொண்டே அவன் நீர் மேல் குழந்தையை மிதக்கவிட்டு கைகளால் பற்றிக்கொண்டான். “பிருதை, இவன் கைகள் இப்போதே என்கைகளின் பாதியளவுக்கு இருக்கின்றன. முழுமையாக வளரும்போது இவன் எப்படி இருப்பான்? என்னை கைக்குழந்தைபோல தோளில் தூக்கிவைத்துக்கொள்வானா?”
குந்தி புன்னகைசெய்தாள். பாண்டுவின் முகம் மங்கியது. “ஆனால் இவன் வளர்வதைப்பார்க்க நான் இருக்கமாட்டேன்” என்றான். “என்ன பேச்சு இது? சமீபகாலமாக இப்பேச்சு சற்று கூடி வருகிறதே” என்று குந்தி கடிந்துகொண்டாள். “ஆம், அதை நான் உணர்கிறேன். ஏனென்றால் என்னால் இந்த மைந்தர்களை குழவிகளாக மட்டுமே எண்ண முடிகிறது. சற்று வளர்ந்தவர்களாக எண்ண முயன்றால் சேற்றுப்பள்ளத்தை அஞ்சிய யானைபோல என் அகம் திகைத்து பின்னடைந்து நின்றுவிடுகிறது” என்றான்.
குந்தி பேச்சை மாற்றும்பொருட்டு “மைந்தனை கரையேற்றுங்கள்… அவனுக்கு மீண்டும் பசிக்கத் தொடங்கிவிட்டது” என்றாள். “மூன்றுமாதத்தில் இவ்வளவு மாமிசம் உண்ணும் குழந்தையைப் பற்றி அறிந்தால் பாரதவர்ஷத்தின் மருத்துவர்கள் அனைவரும் இங்கே வந்துவிடுவார்கள்” என்ற பாண்டு கரையேறி குழந்தையைத் தூக்கினான். “அவனைத் துவட்டவேண்டும்” என்று சொல்லி குந்தி அருகே இருந்த பஞ்சாடையை எடுத்துக்கொண்டாள். அனகை அப்பால் வந்து நின்றாள். அவள் பீமனை உணவூட்ட விரும்புகிறாள் என்று பாண்டு தெரிந்துகொண்டான்.
பாண்டு “தூக்கமுடியுமா என்றுதான் பார்க்கிறேனே” என்று சொல்லி குழந்தையை மூச்சுப்பிடித்து மேலே தூக்கிவிட்டான். உடனே “பிடி பிடி பிருதை. என் இடுப்பு” என்று கூவினான். அவள் பாய்ந்து பீமனை வாங்கிக்கொள்ள பாண்டு இடுப்பைப்பற்றியபடி ‘ஆ’ என்று அலறிக்கொண்டு நீரிலேயே அமர்ந்தான். குழந்தையின் எடையைத் தாளாமல் குந்தி முன்னால் காலடிவைத்து தடுமாற அவளுடைய ஆடை காலில் சிக்கிக்கொண்டது. அவள் நிலையழிய குழந்தை கையிலிருந்து தரையில் ஓடைக்கரையின் மென்பாறையில் விழுந்தது. அழுதபடி புரண்டு நீரில் சரிய பாண்டு எழுந்து அதைப்பற்றிக்கொண்டான்.
குந்தி திகைப்புடன் அந்த செம்மண்பாறையைப்பார்த்தாள். அது உடைந்து நீரில் விழுந்து செந்நிறமாகக் கரைந்துகொண்டிருந்தது. அச்சத்துடன் “குழந்தை… குழந்தைக்கு அடிபடவில்லையே” என்றான் பாண்டு. குழந்தையை நீருக்குமேல் தூக்கியபடி, குந்தி அந்த உடைந்த பாறையைச் சுட்டிக்காட்டினாள். பாண்டு ஒருகணம் திகைத்தபின் உரக்கச் சிரித்தான். “சரிதான் சூதர்களின் கதைகளில் ஒன்று இதோ பிறந்திருக்கிறது. கருங்கல்பாறையை உடைத்த குழந்தை!” என்றான். அனகை ஓடிவந்து பீமனைப்பற்றிக்கொண்டாள்.
குடில்முன் பாண்டு யுதிஷ்டிரனுடன் மரப்பட்டை மஞ்சத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். தன் அகத்தில் ஓடுவதை அப்படியே தொடர்ந்து மைந்தனிடம் சொல்லிக்கொண்டிருப்பது அவன் வழக்கம். “நான் செய்யும் இந்தக் கூடை உனக்குத்தான். நீ கூடைநிறைய பொன்னை வைத்துக்கொள். ஏனென்றால் நீ அரசன். அதன்பின் கூடை நிறைய மைந்தர்களை வைத்துக்கொள்வாய். வயதானபின்னர் கூடையிலே பூக்களை வைத்துக்கொள்வாய். பூக்களைக்கொண்டு தெய்வங்களை கனியவைப்பாய். தெய்வங்கள் உன்னை நோக்கி புன்னகைசெய்யும்… என்ன பார்க்கிறாய்?” என்று அவன் மொழி ஓடிக்கொண்டே இருக்கும்.
மெலிந்த குழந்தை கால்மடித்து அமர்ந்து கைகளில் இருந்த கனி ஒன்றை வாயில் வைத்து உரசிக்கொண்டிருந்தது. அதன் கண்கள் தந்தை சொல்லும் சொற்களனைத்தையும் வாங்கிக்கொண்டிருப்பதுபோலத் தெரிந்தது. “யாகத்தீ வேதமந்திரத்தைக் கேட்கும் என்பார்கள். நீ நான் சொல்வதைக் கேட்கிறாய். இடியோசை சொல்வது யானைக்குப் புரியும் என்பார்கள். உனக்கு நான் சொல்வது புரிகிறது. நீ எனக்குள் இருந்துகொண்டிருக்கிறாய். இன்னும் சிலநாட்கள் கழித்து உனக்குள் நான் இருந்துகொண்டிருப்பேன்” என்றான் பாண்டு. ஈச்சை ஓலையால் ஆன கூடை ஒன்றை முடைந்துகொண்டிருந்த அவன் கைகள் நிலைத்தன. அவன் நிமிர்ந்து மனைவியரை நோக்கி “எங்கிருந்தீர்கள்?” என்றான்.
மாத்ரி ஓடி பாண்டுவின் அருகே சென்று “அங்கே கீழே காட்டுத்தீ எரிகிறது. அக்கா பார்த்தாள். அதன்பின் நானும் பார்த்தேன்” என்றாள். “காட்டுத்தீயா? அது ஓடைக்கரை நெருப்பு… ஓடைச்சதுப்புக்கு அப்பால் அது வராது” என்றான் பாண்டு. “நாம் அங்கே சென்று அதைப்பார்த்தாலென்ன?” என்றாள் மாத்ரி. “காட்டுத்தீயை சென்று பார்ப்பதா? உளறுகிறாயா என்ன?” என்றான் பாண்டு. “நான் காட்டுத்தீயை பார்த்ததே இல்லை… நான் பார்த்தாகவேண்டும்… நீங்கள் வரவில்லை என்றால் நான் தனியாகச் செல்கிறேன்” என்று மாத்ரி சிணுங்கியபடி சொன்னாள்.
“நான் மைந்தனை விட்டுவிட்டு வரமுடியாது” என்றான் பாண்டு. அவள் கண்ணீருடன் “சரி, நானே சென்று பார்க்கிறேன்” என்றாள். பாண்டு குந்தியை நோக்கி சிரித்துவிட்டு “சரி, நான் அழைத்துச்செல்கிறேன். அருகே செல்லமுடியாது. தொலைவில் பாறைமேல் நின்று பார்த்துவிட்டுத் திரும்பிவிடவேண்டும்” என்றான். “தருமனையும் எடுத்துச்செல்வோமே. தொலைவில்தானே நிற்கப்போகிறோம்?” என்றாள் மாத்ரி. அவன் “சரி கிளம்பு” என்றபடி தருமனை தோளில் எடுத்துக்கொண்டான். “அக்கா நான் காட்டுத்தீயைப்பார்த்துவிட்டு வருகிறேன்” என்று மாத்ரி சிரித்துக்கொண்டே துள்ளினாள். “நான் இதுவரை பார்த்ததே இல்லை.”
அவர்கள் சென்றபின் குந்தி குடிலுக்குள் சென்றாள். அங்கே பீமனுக்கு சேடிகள் உணவூட்டிக்கொண்டிருந்தனர். அவன் உண்பதை அவள் அகன்று நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் பொறுமையிழந்து கைகளை தரையில் அறைந்தான். கால்களை வேகமாக உதைத்துக்கொண்டான். ஒரு வாய் உணவுக்கும் அடுத்ததற்கும் இடையே உறுமுவதுபோல ஒலியெழுப்பினான். சேடிகளின் கை வாயைநோக்கி நீள்வதற்குள் அவன் வாய் அதை நோக்கிச் சென்றது. அத்தனை பெரும்பசி இருந்தால் உணவு எப்படிப்பட்ட அமுதமாக இருக்கும் என்று அவள் எண்ணிக்கொண்டாள். அவனுக்கு சுவையளிக்காத உணவென்று ஏதும் உலகில் இருக்கமுடியாது.
அவள் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும்போது வெளியே மாத்ரியின் குரல் கேட்டது. “அக்கா… அந்தக்காட்டுத்தீ இப்போது நம் காட்டை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. ஆம், நானே பார்த்தேன். சிவந்த கொடிகள் அசைவதுபோல தழல் ஆடுகிறது” என்று சொன்னபடி அவள் உள்ளே வந்தாள். அவள் உவகையும் கிளர்ச்சியும் கொண்டிருக்கிறாள் என்று தோன்றியது. “செந்நிறமா பொன்னிறமா என்று சொல்லமுடியாது அக்கா. காட்டுமரம் பூத்திருப்பதுபோல முதலில் தோன்றியது. நெருப்பேதான்… அது வெடித்து வெடித்து எழும் ஒலியை கேட்க முடிந்தது.”
பாண்டு உள்ளே வந்து “காட்டுத்தீ இவ்வழி வருமென்றுதான் நினைக்கிறேன். நாம் இங்கிருந்து விலகி பாறைகளை நோக்கிச் சென்றுவிடுவதே நல்லது” என்றான். “இது பச்சைவனம் அல்லவா?” என்றாள் குந்தி. “ஆம், ஆனால் காட்டுநெருப்பு பச்சைமரத்தையும் உண்ணும்… நான் கௌதமர்களிடம் சொல்லிவிட்டு வருகிறேன்.” அவன் தருமனை தூக்கியபடியே சென்றான். “அவனை ஏன் கொண்டுசெல்கிறீர்கள்? அவன் இங்கே நிற்கட்டும்” என்றாள் குந்தி. “இருக்கட்டும்… நான் ஒழிந்த தோள்களுடன் இருக்கையில் மிகவும் தனிமையாக உணர்கிறேன்” என்று சொல்லி சிரித்தபடி அவன் சென்றான்.
சற்றுநேரத்தில் புகையின் வாசனை எழத்தொடங்கியது. அனகை வந்து “நம் தானியங்களை மண்ணுக்கு அடியில் பானைகளில் புதைத்திருப்பதனால் அவை ஒன்றும் ஆகாது அரசி. பிற உடைமைகளை எல்லாம் கொண்டு செல்லவேண்டும்… காற்று இப்பக்கமாக வீசுவதைப்பார்த்தால் காட்டுத்தீ வருவதற்கு வாய்ப்புண்டு” என்றாள். இருசேடியர் சேர்ந்து ஒரு மூங்கில் தட்டில் பீமனைத் தூக்கிக் கொண்டனர். “நீங்கள் செல்லுங்கள் அரசி நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றாள் அனகை.
தருமனுடன் பாண்டு திரும்பிவந்தான். “காட்டுத்தீ தெற்கிலிருந்து வடக்குநோக்கிச் செல்கிறது. மேற்கே இருக்கும் கஜபிருஷ்டம் என்னும் பாறைக்குமேல் ஏறிக்கொள்ளலாம் என்று மாண்டூக்யர் சொல்கிறார். அதைச்சுற்றி வெறும்பாறைகள் மட்டுமே உள்ளன. அங்கே நெருப்பு அணுகமுடியாது… வாருங்கள்!” கஜபிருஷ்ட மலை எட்டு பாறைகள் சூழ நடுவே பின்னால்திரும்பிய யானைபோல கன்னங்கருமையாக வழவழப்பாக நின்றிருந்தது. அதன் மேல் ஏறிச்செல்ல அதிலிருந்து உடைந்து விழுந்த பாறைகளினாலான அடுக்கு இருந்தது.
மூச்சிரைக்க மேலேறும்போதே குந்தி கீழிருந்து காட்டுத்தீ வருவதைப் பார்த்தாள். செக்கச்சிவந்த வில் ஒன்று மண்ணில் கிடப்பதுபோலத் தோன்றியது. வில் அகன்று விரிந்தபடியே அணுகியது. பாண்டு “சிவந்த கொடிகளுடன் ஒரு பெரிய படை அணுகுவதுபோலிருக்கிறது. அர்த்தசந்திர வியூகம்” என்றான். மாண்டூக்யர் “மேலே சென்றுவிடுவோம்” என்றார். அவர்கள் பாறையின் மேல் ஏறிநின்றனர். கீழிருந்து புகை காற்றால் அள்ளிச் சுருட்டப்பட்டு அவர்களை நோக்கி வந்தது. பச்சைத்தழை எரியும் வாசனை அதில் நிறைந்திருந்தது.
அவர்கள் மேலே அமர்ந்துகொண்டு குளிர்வியர்வையுடன் மூச்சுவாங்கியபடி கீழே பார்த்தனர். கீழிருந்து சேடியரும் சேவகரும் பிரம்மசாரிகளும் பொருட்களை மேலே கொண்டுவந்துகொண்டிருந்தனர். குந்தி நெருப்பையே பார்த்துக்கொண்டிருந்தாள். பொன்னிறமான நரிக்கூட்டம் புதர்களை ஊடுருவி காட்டுக்குள் வளையம் அமைத்துச் செல்வதுபோல. அதன் சிவப்பு மாலையின் ஒளி மங்கும்தோறும் அதிகரித்து வந்தது. கங்குகள் வெடித்துச் சிதறின. பற்றி எரிந்த மரங்கள் நெருப்பையே மலர்களாகவும் இலைகளாகவும் கொண்டு சுடர்விட்டன. பாறைகளைச் சூழ்ந்து நெருப்பு அலையடிக்க கரியதெப்பம் போல அவை மிதந்தன.
புகைக்கு அப்பால் தெரிந்தவை நீர்ப்பிம்பம் போல நெளிந்தன. தழல்கற்றைகள் திரவம்போல அலையடித்தன. நெருப்பின் உறுமல் ஓசை மெல்ல கேட்கத்தொடங்கியது. கணம் கணமாக அது வலுத்துவந்தது. அவ்வொலி காற்றின் ஓலம் போலவோ நீரின் அறைதலோசை போலவோ இருக்கவில்லை. மேகக்குவைகளுக்கு அப்பால் தொலைதூரத்தில் இடியோசை எதிரொலிப்பதுபோல ஒலித்தது.
அருகே நெருங்கியபோதுதான் நெருப்பு வரும் விரைவும் அதன் அளவும் அவளுக்குப்புரிந்தது. முதலில் மிகமெல்ல ஒவ்வொன்றாகப் பற்றி உண்டபடி தொற்றித்தொற்றி ஏறிவருவதுபோலத் தெரிந்த தழல்கள் பெருவெள்ளம் போல பொங்கி மரங்கள் மேல் பொழிந்து அவற்றை அணைத்து உள்ளிழுத்துக்கொண்டு முன்னேறிச்சென்றன. உயரமான தேவதாரு மரங்கள்கூட அந்தப்பெருக்கில் அக்கணமே மூழ்கி மறைந்தன. அந்தக் கொப்பளிப்பில் இருந்து கங்குகள் வெடித்து எரிவிண்மீன்கள் போல வானிலெழுந்து புகையாகி விழுந்தன.
குடில்களை நெருப்பு நெருங்கியபோது மாத்ரி அஞ்சி குந்தியின் கைகளைப்பற்றிக் கொண்டாள். “இவ்வளவு கொடுமையானது என்று நான் எண்ணவில்லை அக்கா” என்றாள். “இங்கே வராது” என்றாள் குந்தி. மாண்டூக்யர் “வராது என்று இப்போது முடிவாகச் சொல்லிவிடமுடியாது அரசி. கீழிருந்து நெருப்பு இங்கே அணுக முடியாது. ஆனால் அத்திசையில் மேலேறிச்சென்று மலைச்சரிவை எரித்துவிட்டதென்றால் அங்கிருந்து தழல் இறங்கி இங்கே வரமுடியும்… நம்மை தழல் அணுக முடியாது. ஆனால் அத்தனை பெரிய வெம்மையை நம்மால் தாளமுடியாது. புகை நம் மூச்சையும் அணைத்துவிடும்” என்றார்.
மாத்ரி குந்தியிடம் நன்றாக ஒட்டிக்கொண்டாள். அவள் உடல் நடுங்கத் தொடங்கியது. “மலைமேல் நெருப்பு ஏறிச்செல்லமுடியாது என்று எண்ணினேன். ஆனால் இத்தனை பெரிய நெருப்புக்கு நெடுந்தூரம் செல்லும் வல்லமை உண்டு” என்றார் மாண்டூக்யர். நெருப்பு மேலெழுந்தபோது அச்சத்தை அதன் அழகு மறைத்தது. “உருகிய பொன்னின் பெருவெள்ளம்” என்றார் துவிதீய கௌதமர். “அனைத்தும் உண்ணப்படுகின்றன. உண்ணப்பட்டவை அனைத்தும் பொன்னாகின்றன!” என்று திரித கௌதமர் சொன்னார்.
குந்தி அப்போதுதான் அந்த உணர்வை அடைந்தாள். அதுவரை அவள் கண்டு அறிந்த எவற்றுடனெல்லாமோ அதை உவமித்துக்கொண்டிருந்தாள். அது வேறு. அது உடலற்ற பசி ஒன்றின் நாக்கு. உண்ணும்போது மட்டுமே வெளிப்பட்டு பசியடங்கியதும் மறையும் ஒற்றைப்பெருநாக்கு அது. ஆம். அங்கிருந்த அனைத்து விழிகளிலும் நெருப்பு சுடர்விட்டுக்கொண்டிருந்தது. அத்தனைபேருக்குள்ளிருந்தும் அது வெளியே எழுந்து வந்து நோக்கி நிற்பதுபோலத் தெரிந்தது. அவள் குனிந்து பீமனைப்பார்த்தாள். சிறிய கண்களுக்குள் நெருப்பு இரு செம்புள்ளிகளாக தழலிட அவன் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
நெருப்பு அவர்களின் குடிசைகளை ஒரேபாய்ச்சலில் கடந்துசென்றது. இந்திரத்யும்னத்தைச் சுற்றியிருந்த அனைத்து மரங்களும் தழல்களாக எழுந்தன. நீரில் அந்தத் தழல்கள் பிரதிபலிக்க நீரும் நெருப்பாகியது. மேலே அந்திவானம் சிவந்து நெருப்பு முகில்களிலும் பற்றிக்கொண்டதுபோலத் தோன்றியது. நெருப்பின் அலைகள் மலைச்சரிவில் அறைந்து நுரைத்து எழுவதுபோல மேலேறுவதை குந்தி கண்டாள். “மேலே செல்கிறது. இங்கும் வருமென்றே நினைக்கிறேன்…” என்றான் பாண்டு.
கிழக்குவானில் இடியோசை கேட்டது. முதலில் அது நெருப்பின் ஒலி போலத் தோன்றியது. மீண்டும் ஒலித்தபோது அது இடி என்று தெரிந்தது. மாண்டூக்யர் “ஆம், மழைதான். அது இங்குள்ள இயற்கையின் ஓர் ஆடல். புகை மேலெழுமென்றால் உடனே மழை கனத்துவிடும்” என்றார். மேலே வெண்ணிற நூறு மலைமுடிகளுக்கு அப்பாலிருந்து மேகங்கள் கரும்பாறைகள் ஓசையில்லாமல் நழுவி நழுவி உருண்டு வருவதுபோலத் தெரிந்தன. மேகங்களுக்கு நடுவே அவற்றின் புன்னகை போல மின்னல்கள் வெட்டி மறைந்தன. இடியோசை வலுத்தபடியே வந்தது.
கிழக்கில் இருந்து மழை வருவதை குந்தி கண்டாள். வெண்ணிறமான மேகப்படலம் மலைகளை மூடியபடி இறங்குவதுபோலிருந்தது. மேலும் நெருங்கியபோது வானம் சற்று உருகி கீழிறங்கி மண்ணைத் தொட்டிருப்பதுபோலத் தெரிந்தது. மேலும் நெருங்கியபோது வெண்ணிறமான பட்டுத்திரைச்சீலையின் நெளிவு. பின் சரசரவென்று மழைத்துளிகள் நிலத்தை அறைந்து தெறிக்க கரும்பாறையின் வளைந்த முகடுகளில் நீர்த்துளிகள் துள்ளிக்குதித்துச் சிதற மழை அவர்களை குளிர்ந்து மூடியது. அனைவரும் கைகளை உடலுடன் சேர்த்துக்கொண்டு கூச்சலிட்டுச் சிரித்தனர்.
அப்பால் நெருப்பின் அலை மெல்ல அணைந்து புகைஎழுந்தது. மழை புகையையும் அறைந்து மண்ணில் வீழ்த்தியது. நெருப்பில் சிவந்திருந்த நிலம் முழுக்க கருகிய பரப்பாகியது. அங்கே ஓடைகளில் கரிய நீர் சேர்ந்து ஓடத்தொடங்கியது. மழைக்குள்ளும் பெரிய மரங்கள் மட்டும் புகைவிட்டுக்கொண்டு நின்றன. மழை வந்ததுபோலவே நின்றது. மேகக்குவைகள் கரைந்து வானம் வெளிறியது. மேற்கிலிலுந்து ஒளி வானவிதானத்தில் ஊறிப்பரவியது. அப்பால் விண்ணுலகுகளில் எழுந்த ஒளியை வடிகட்டி கசியவைத்த சவ்வுப்பரப்பாக வானம் தோன்றியது.
கிழக்கிலிருந்து வீசியகாற்று மழையில் எஞ்சிய நீர்த்துளிகளை அள்ளிக்கொண்டு சென்றது. சற்று நேரத்திலேயே காதோரம் கூந்தல் காய்ந்து பறக்கத்தொடங்கியதை குந்தி உணர்ந்தாள். காற்று வீச வீச மழையின் நினைவுகள் கூட விலகிச்சென்றன. மேற்கின் கடைசி ஒளியில் கிழக்கே வான்விளிம்பில் ஒரு பெரிய மழைவில் தோன்றியது. மாத்ரி “இந்திரதனுஸ்” என்றாள். அனைவரும் திரும்பி அதை நோக்கினர். முனிவர்கள் கைகூப்பி வேதத்தைக் கூவி இந்திரனைத் துதித்தனர்.
குந்தி மெல்ல பாண்டுவின் தோளைத் தொட்டாள். அவன் தோளில் இருந்த தருமனுடன் திரும்பி புன்னகை செய்தான். “இந்திரனின் மைந்தன் ஒருவன் வேண்டும் எனக்கு” என அவள் மெல்லியகுரலில் சொன்னாள். அருகே சேடியர் கையில் இருந்த பீமனின் தலையை வருடி “இந்தக்காட்டுத்தீயை அவனே கட்டுப்படுத்த முடியும்” என்றாள். பாண்டு அவள் கைகளைப் பற்றிக்கொண்டு அகஎழுச்சியுடன் புன்னகை செய்தான்.