சிறகு

சிறகு இணைய இதழில் இம்மாதத்தில் இரண்டு கட்டுரைகள் என்னை வெவ்வேறு காரணங்களுக்காகக் கவர்ந்தன. ஒன்று சித்திரைமாதத் திருவிழாக்கள் சோழர்காலத்தில் இருந்தே எப்படி கொண்டாடப்பட்டன, எவ்வாறு அவற்றுக்கான நிதியாதாரம் உருவாக்கப்பட்டது என்பது பற்றிய >தேமொழியின் கட்டுரை

கேரளத் திருவிழாக்களில் ஆடி,பங்குனிமாதத் திருவிழாக்கள் அங்கே வழிவழியாக நடந்தவை என்றும் சித்திரை [மீன] மாத திருவிழாக்கள் சோழர்கள் முந்நூறாண்டுகாலம் கேரளத்தை ஆண்டபோது உருவானவை என்றும் ஒரு கூற்று உண்டு. முதல்வகை திருவிழாக்கள் சடங்குகள் இரண்டாம்வகை திருவிழாக்கள் கொண்டாட்டங்கள். தமிழகத்தின் கோடைகாலத்தில் வயல்கள் அறுவடைமுடிந்து வேலைகள் இல்லாமலிருக்கும் காலத்தில் இவ்விழாக்கள் அமைந்திருக்கின்றன. மழை இல்லை என்பதனால் மக்கள் கூடுவதற்கும் தடையில்லை.

சோழர்காலத்து விழாக்களின் அடிப்படை இயல்பைச் சுட்டிக்காட்ட்டும் அம்சம் இது. ஒரு மதச்சடங்காக, குலவழக்கமாக அவர்கள் விழாக்களைக் காணவில்லை. திருவிழாக்கள் என்பவை பல்லாயிரம் மக்கள் ஒரே இடத்தில் கூடும் நிகழ்ச்சிகள் என்று எண்ணினார்கள். கூட்ட முயற்சிகள் எடுத்துக்கொண்டார்கள். மிகப்பெரிய தேர்விழாக்கள் அதற்காகவே ஒழுங்கமைக்கப்பட்டன. அதில் அனைத்துச் சமூகத்தினரும் பங்கெடுக்கும்படி முறைகள் வகுக்கப்பட்டன. ‘மண்டகப்படி’ என்ற அமைப்பு அவ்வாறு உருவானதுதான்.

இதன்வழியாக ஒருங்கிணைந்த ஒற்றைச் சமூகம் என்ற கட்டமைப்பை சோழர்கள் மெல்லமெல்ல உருவாக்கி நிலைநாட்டினார்கள். பல்வேறு குலங்களாக, கிராமங்களாகப் பிரிந்திருந்த மக்கள் ஒரே இடத்தில் கூடுவதென்பது ஒரு சமூகமாக தங்களைத் தாங்களே ‘கண்ணால்’ பார்க்கும் அனுபவத்தை அவர்களுக்கு வழங்கியது. அதன் சாதகவிளைவுகள் அளவற்றவை. இன்றும் தமிழ்ச்சமூகத்தை பெரும் விழாக்கள்தான் ஒருங்கிணைக்கின்றன

தமிழகத்தில் உருவான முதல்பேரரசு சோழர்களுடையது என்னும்போது அதற்கான தேவையை உணரமுடிகிறது. இந்த ஒருங்கிணைந்த சமூகமே சோழப்பேரரசின் அடித்தளம். இந்தியவரலாற்றில் குப்தர்காலம் இதேபோன்ற பெரும் திருவிழாக்களை உருவாக்கியது என வரலாற்றில் சொல்லப்படுகிறது திருவிழாக்கள் பெருமதங்களின் வெளிப்பாடுகளும் கூட. பெருமதங்கள் திருவிழாக்களை உருவாக்குகின்றன. திருவிழாக்கள் பெருமதங்களை வளர்க்கின்றன. ஒருங்கிணைந்த சமூகம் – பெருமதம் – திருவிழா – பேரரசு ஆகியவை ஒன்றின் நான்கு முகங்கள்.

இன்னொரு கட்டுரை மிகக்குறுகிய இடத்திலேயே மாட்டுக்குப் புல்வளர்ப்பதைப்பற்றிய சதுக்கப்பூதம் எழுதியது. அதற்கு இங்கே நகரங்களில் ஒரு சாத்தியம் இருப்பது தெரிகிறது. இங்கே அதிகநிலம் உள்ள கிராமப்புறங்களில் அது தேவையில்லை. ஆனால் கிராமப்புறங்களைவிட நெரிசலான புறநகர்களில்தான் இப்போது கால்நடைகள் அதிகம் வளர்க்கப்படுகின்றன. பாலின் தேவை நகரங்களில் மிக அதிகம். ஆகவே வணிகவாய்ப்பும் அதிகம் என்பதே காரணம். அவர்களுக்கு இது உதவலாம்.

முந்தைய கட்டுரைஇதிகாசமா ? புனைவா ?
அடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 74